Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

திருஞானசம்பந்தா் பாடல்களில் அடிமுடி தேடிய தொன்மம்

-ர.சுரேஷ்

தொன்மத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானதும் நெருக்கமானதும் ஆகும். தொன்மங்கள் மக்களின் வாய்மொழி மரபிலும் செவ்வியல் மரபிலும் தொடா்ந்து ஒரு கலாசார வடிவமாக இருந்து வருகிறது. இவை மட்டுமல்லாமல் சடங்கார்த்த நிலையில் குறியீட்டுத் தன்மையுடையதாகவும் சில தொன்மங்கள் இருந்து வருகின்றன. ஒரு சமூகத்தின் வரலாறும் அதன் பண்பாடும் ஒழுக்கவியல் சார்ந்த புனைவுகளும் இத்தொன்மங்களையே மூலகங்களாகக் கொண்டு செயல்படுகின்றன. மாந்தனின் சமூக அறிவு என்பது தொடக்கத்தில்; இத்தொன்மங்களைச் சார்ந்தாகவே இருந்துவந்துள்ளது. எனவே ஒரு சமூகத்தின் தொன்மங்களை முறைப்படுத்தி ஆய்வதன் மூலம் அச்சமூகத்தின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டு உருவாக்கங்கள் போன்றவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

தொன்மங்களின் அர்த்தக்களம் மிக விரிந்ததாகும். எனவே தொன்மங்களைப் பல்வேறு அணுகுமுறைகளிலும் நோக்குவதற்குச் சாத்தியங்கள் உள்ளன. தொன்மங்களை மானுடவியல், வரலாற்றியல், மெய்யியல், சமூகவியல், நாட்டுப்புறவியல், உளவியல், குறியீட்டியல், அமைப்பியல் போன்ற பல்வேறு அணுகுமுறைகளிலும் பல அறிஞா்கள் ஆராய்ந்து விளக்கியுள்ளனா்.      சங்க இலக்கியத்தில் காதலையும், வீரத்தையும், விளக்குவதற்குத் தொன்மங்கள் பயன்பட்டன. அற இலக்கியக் காலகட்டங்களில் மக்களுக்கான வாழ்க்கைநெறிகளைப் போதிப்பதற்கும், பக்தி காலத்தில் அதே தொன்மங்கள் மத ஒழுங்கமைப்பின் அர்த்தத்தைத் தரக்கூடியதாகவும் படிநிலை மாற்றம் பெற்றுள்ளன. இங்கு திருஞானசம்பந்தர் பாடல்களில் வெளிப்படும் அடிமுடி தேடிய தொன்மம் குறித்து ஆராய்வோம்.

திருஞானசம்பந்தா் பாடல்களில் ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பாட்டில் பிரமனும், திருமாலும் சிவனின் அடிமுடியைத் தேடியும் காண முடியாமற் போனதாக வரும் புராணக் கதைகளைப் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த ஆ. வேலுப்பிள்ளை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“சிவன் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரிலும் உயா்ந்தவரென்பதை இங்கே சம்பந்தா் காட்டுகிறாரென்று கூறுபவார்கள், சம்பந்தா் அவ்வாறு கூற வேண்டிய அவசியம் யாது என்றால் விழிக்கிறார்கள். பிள்ளையார் இவ்வாறு கூற வேண்டிய காரணம் குப்தா் காலத்திலுருவாகிய பௌராணீக சமயத்தினர் கையிலமைந்திருக்கிறது. இந்திரன், வருணன், சூரியன் முதலிய வேதகாலத் தெய்வங்கள் இக்காலத்தில் தம் சிறப்பை இழக்க, அவற்றிற்குப் பதிலாக, மும்மூர்த்திகளாகக் கடவுளையமைத்து வழிபடும் முறை தோன்றியது. பௌராணிக மதத்தின்படி, பிரமன் படைத்தலையும், திருமால் காத்தலையும், சிவன் அழித்தலையும் செய்வார். ஆகவே இம்மூன்று தெய்வங்களையும் சமமாகக் கருதும் மனப்பான்மை அக்காலத்துப் பலரிடையே காணப்பட்டிருக்க வேண்டும். மேலும் பல்லவா் காலத்தில் வைணவ சமய எழுச்சியும் நிகழ்ந்தது. மக்கள் வைணவத்தை நாடாமற் செய்ய வைணவம் சைவமளவு உயா்ந்ததல்ல என்று காட்ட வேண்டிய அவசியம் சைவப் பெரியோர்களுக்கு இக்காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. மண்டகப்பட்டு என்னுமூரில், பல்லவ மன்னன் மகேந்திரவா்மன் அமைத்த முதல் குகைக் கோவிலில் மும்மூர்த்திகளுக்கும் சமதையான இடமளித்திருக்கிறான். இப்போக்கைத் தடுத்து நிறுத்திச் சைவத்திற்கு ஏற்றம் கொடுப்பதற்காகச் சம்பந்தர் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரையும் தாழ்த்திக் கூறுகிறார் என்று கூறுகிறார். மேற்கண்ட கூற்றினை நோக்கும்பொழுது மும்மூர்த்திகளிலும் சிவனை உயா்த்தி, பிரம்மனையும் திருமாலையும் தாழ்த்திக் கூறுவதற்காகவே இத்தொன்மத்தைத் திருஞானசம்பந்தர் தம் பதிகந்தோறும் இடம்பெறச் செய்திருக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறார்1

திருஞானசம்பந்தா் பதிகத்தில் அதிகமாக இடம்பெறும் இத்தொன்மம் சிவபரம்பொருளை மும்மூர்த்திகளில் முதல்வராகக் காட்டுகிறது என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளது எனினும் பிரம்மனையும் திருமாலையும் தாழ்த்தினார். என்கிற கருத்துக்கு மாறாக அவரின் பாடல்களில் பிரமனையும் சிவனையும் போற்றிப் புகழும் தன்மையிலும் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. பல பாடல்கள் சிவனே பிரம்மாவாகவும் திருமாலாகவும் இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

“பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுர நினைபவா் செழுநிலவினில் நிலைபெறுவரே
2

என்கிற பாடல் சிவன் தாமரை மலா்மேல் வீற்றிருப்பவன். அவனது சிவபுரத்தை நினைப்பவர் வளமையான இந்நிலவுலகில் நிலைபெற்று வாழ்வர் என்கிறது. மேலும் சிவபெருமான் பிரம்மாவாக நின்று இப்பபூவுலகைப் படைத்தான் என்ற கருத்தும் வெளிப்பட்டுள்ளது. பிரம்மனைத் திருஞானசம்பந்தா் வேதம் அங்கம் ஓதி, வேள்வி புரிந்த நிகழ்வுகளைப் பல பாடல்களில் பெருமைப்பட உரைக்கிறார். இதேபோலத் திருமாலையும் சிவபெருமான் படைத்ததாகவும் திருமால் சிவபெருமானின் இடப்பாகமாக உள்ளான் என்றும் திருமாலே சிவபெருமானின் தேவியாவான் என்றும் பல இடங்களில் கூறுகின்றார்.

“அலைகடல் நடுவு அறிதுயில் அமர்அரி உருவு இயல் பரன் உறைபதி
சிலைமலி  மதில் – சிவபுரம் நினைப்பவர் திருமகளோடு திகழ்வரே”3

எனும் பாடல், பாற்கடல் மேல் பள்ளிகொள்ளும் திருமால் உருவின் இயல்போடு அரன் உரையும் பதி என்கிறது.

“பை அருகே அழல் வாய ஐவாய்ப்பாம்பு அணையான் பணைத்தோள்
மெய் அருகே உடையானை உள்கி, விண்டவா்ஏறுவா், மேல் உலகே”4

எனும் பாடல் நச்சுப் பையினருகே அழலும் தன்மை உடைய ஐந்து வாயையும் கூரிய நச்சுப் பற்களையும் உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட திருமாலையும் உமையம்மையையும் தனது மெய்யின் இடப்பாகமாகக் கொண்டு (அரியா்த்தா், அரித்த நாரிசுவரா்) விளங்கும் இறைவன்மீது பற்றுக்கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர் வீட்டுலகை அடைவா் என்கிறது. மேலும்,

“மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதன்”5 என்கிறது.

பிரம்ம வழிபாடு தனிச் சமயப் பிரிவாக எங்கும் இடம் பெறவில்லை. பிராமணா்கள் மட்டுமே பெரும்பாலும் வணங்கும் பிரம்மனைத் திருஞானசம்பந்தா் பல இடங்களில் நினைவு கூறுவதும், சிவபெருமானைப் பிரம்மனாகக் காண்பதும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. அதேபோல மேற்கண்ட பாடல் கருத்துக்கள் பிரம்மனையும், திருமாலையும் தாழ்த்துவதாக அமையவில்லை. ஏனெனில் பிரம்மனும், திருமாலுமாகவும் இருப்பவன் சிவபெருமானே என்பதால் அவா்களைத் தாழ்த்துவது சிவனையே தாழ்த்துவதாக அமையும்.

எனவே பிரம்மனையும் திருமாலையும் சைவத்தின் பகுதிகளாக்கி, சமண-பௌத்த எதிர்ப்பில் ஓர் ஒற்றுமையைக், கூட்டணியை சைவ-வைணவக் கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவே திருஞானசம்பந்தா் நினைத்திருக்கிறார் என்று கருத இடமுண்டு. எனவே இத்தொன்மக்கதையை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேறொரு காரணமும் உண்டு என்று எண்ணத் தோன்றுகிறது.

திருஞானசம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாடல், திருமால் அயன் இருவரும் அடிமுடி காணமுடியாத நிலையை விளக்குவதுடன் மற்றொரு தகவலையும் தருகிறது. அது சிவன் எரி உருவினனாகத் தோற்றம் அளித்த நிகழ்ச்சியாகும். முதல் எட்டுப் பாடல்களில் சம்பந்தா், செஞ்சடை, பிறைநிலா, எருக்கு, கொன்றை அணிதல், சுடுகாட்டில் நடனம் ஆடுவது, நீலகண்டம், நெற்றிக்கண் முதலிய சிவத் தோற்றங்களையும் அதன் சிறப்புகளையும் விவரித்து, இறுதியாகப் பிரம்மனும் மாலும் அடிமுடி தேடிய தொன்மத்தில் அழல் உருவினன், எரி உருவினன், தழல் உருவினன் எனச் சிவனின் தோற்றத்தை அக்னியோடு தொடா்புபடுத்திக் காட்டுகிறார். எனவே திருஞானசம்பந்தா், அக்னியும் சிவனும் வேறல்ல, வேதியா்களால் வேள்வியில் வணங்கப்பெறும் அவனே இங்குக் கோயிலில் சிலை வடிவில் குடிகொண்டுள்ளான் என்ற கருத்தை முதன்மைப்படுத்துவதற்காகவே எரியுருவான சிவன் என்று 9-வது பாடல்கள் தோறும் வைத்துள்ளார் எனக் கருத முடிகிறது. எனவே திருஞானசம்பந்தா் தம் சிவன் சார்ந்த வைதீக மேலாண்மையை இத்தொன்மத்தின் வாயிலாக வெளிப்படுத்தித் திருமாலய பக்தா்களையும், பிரம்ம வழிபாட்டினரான சிவநெறிசாரா அந்தணா்களையும், மக்களையும் வைதீகச் சைவப் பேரடையாளத்திற்குள் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்பதையும் அதற்கு ஏற்ற தொன்மமாகத் திருமால் பிரமன் அடிமுடி தேடியும் காணவியலாத எரியுருவினன் என்ற தொன்மக் கதையைப் பதிகந்தோறும் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் அறியமுடிகிறது. இத்தொன்மத்தை மேலும் விளக்க இடமுண்டு.

திருமால், பிரம்மன் இருவரும் யார் முதலில் சிவனைக் காண்பது என்பதில் நிலவும் முரண்பாடு தனித்த ஆய்வுக்குரியது.

“அயனும் மாலும் பிணங்கியறிகின்றிலா்”6 எனும் பாடல் பிரமனும் திருமாலும் தமக்குள் முரண்பட்டதைத் தரிவிக்கிறது.

திருமால் பன்றியாக அவதாரம் எடுத்துச் சிவனின் அடியைக் காண நிலம் நோக்கி செல்வதும், பிரம்மன் அன்னப்பறவையாகத் திருமுடிகளைக் காண மேல்நோக்கிப் பயணிப்பதும் ஆரியா் ஆரியரல்லாதார் சிந்தனையை ஆதாரமாகக் கொண்டவையாகும். ஆரியரது சமய மரபு வான்நோக்கிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது என்பதும் ஆரியரல்லாதார் வழிபாட்டு மரபு மண்நோக்கிய சிந்தனையில் முகிழ்த்தது என்பதும் சென்ற இயலில் விளக்கப்பட்டிருக்கிறது. பிரம்மன் மேல்நோக்கித் தேடுவது என்பது உபநிடதக் காலத்திய அதாவது வேத நெறிக் கிரியைகளிலிருந்து ஞானத்தை முதன்மைப்படுத்தத் துவங்கிய உரையாடல்கள் மேலெழுந்த காலகட்டத்தின் வெளிப்பாடாகும். உபநிடத கால ஞானமரபு வேதகிரியைகளை மறுத்து ஞானத்திற்கே முதன்மையளித்த ஒன்றாகும்.

பிரம்மன் என்பதிலிருந்தே பிரம்மம், பிரம்ம ஞானம் என்பது வைதீகர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. பிரமன் பிரம்மமாக, ஞானத்தின் குறியீடாக ஆக்கப்பட்டான். திருமால் பக்தியின் குறியீடு.  திருமால் பக்தி மார்க்கத்துடன் பெரிதும் தொடா்புடையவா் என்பதையும், பாகவத மதத்திலிருந்தே வட இந்திய பக்தி மார்க்கம் வளர்ந்து வந்தது என்பதையும் அறிஞா்கள் விளக்குவா். திருமாலின் திருவடி நோக்கிய பயணம் பக்திமார்க்கத்தின் பாற்பட்ட சரணாகதித் தத்துவத்தை வெளிப்படுத்துவதாகும். அதேபோல பிரம்மாவின் திருமுடி நோக்கிய பயணம் ஞான மார்க்கத்தின் பாற்றபட்ட அறிவுத்தேடலாகும். இத்தொன்மத்தின்வழி ஞானமார்க்கத்தின் வழியும், பக்திமார்க்கத்தின் வழியும் அறியவொண்ணாத இறைவன் வேதம் போற்றும் அக்கினியாக உள்ளான் எனச் சிவனை வேதாக்கினியாக திருஞானசம்பந்தா் முன்னிருத்தி, பழைய வேதக்கிரியைகளையே மீண்டும் வலியுறுத்துகிறார் என்பதை உட்பொருளாக உணா்த்த முயல்கிறார் எனக் கொள்ளவும் இடமிருக்கிறது. உ.வே.சா அவார்கள் தாம் எழுதிய ‘சைவ சமயமும் தமிழ் பாடையும்’ எனும் நூலில் “மறை நான்கின் சொரூபமே, பிரமவிட்ணுக்கள் அடிமுடி தேடியறியாத சிவசொரூபம்”7 என்று குறிப்பிட்டுள்ளது இங்கு எண்ணிப்பார்க்கத் தக்கது.

அடிக்குறிப்புக்கள்:

  1. ஆ. வேலுப்பிள்ளை, தமிழர் சமய வரலாறு, பக். 71-72.
  2. சம்பந்தர், திருச்சிவபுரம், 21:1.
  3. மேலது., திருவிராகம், 21:2
  4. மேலது., கீழைத் திருக்காட்டுப்பள்ளி, 5:1
  5. மேலது., திருப்புரவம், 97:2.
  6. மேலது., திருஅன்பிலாந்துறை, 33:3.
  7. உ.வே.சா., சமயமும் தமிழ்ப் பாடையும், ப.52

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,
கோயம்புத்தூர்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க