பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

வெனிலா பாலாஜி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

8 thoughts on “படக்கவிதைப் போட்டி – 180

 1. அழகி

  நிலவு அன்ன ஒளி முகம்
  கண்ணுக்கினிய கண்ணழகு
  அன்பை வெளிப்படுத்தும் பவளவாய்
  உழைப்பை உயிரெனக் கொண்ட அழகுடம்பு
  அவள் போடும் சோற்றில் அடங்கும்
  இத்தனையும்
  அவள் சிாிப்பில்
  உயிா் வாழும் நானும்
  உழவும்.

 2. தள்ளாத வயதினிலும்
  தளராது வாஞ்சையுடன்
  செந்நெல் களனிதனில்
  சேற்றுழவு தான்செய்யும் – நாட்டின்
  பஞ்சம் பசி போக்கி
  பார் போற்ற வாழவைக்கும்
  செயல் வீரன் என்சாமி
  விவசாயி
  என் படியளக்கும் சாமி
  பசி என்று சோராமல் -அவர்
  பாத்திருந்து பசியாற்ற
  போகின்றேன் , என் பசி மறந்து.

 3. மாற்றங்கள் தேவையே நமக்கது
  முன்னேற்றமாக அமையும் போது
  கடந்தவிட்ட கற்காலம் இனி இல்லை
  நெஞ்சம் அஞ்சும் நெகிழியின் காலம்

  அத்தனை மாற்றத்தையும் ஏற்றும்
  தொலையவில்லை நம் தொன்மங்கள்
  எத்தனையோ ‘லஞ்ச் பாக்ஸ்’ வந்தாலும்
  தூக்குச் சட்டியை அழிக்க இயலாது

  வேண்டியதில்லை விவாதங்கள்
  வேண்டியதில்லை பட்டி மன்றம்.-
  கலாச்சாரம் காலூன்றி நிற்பது நிச்சியம்
  காணாமல் போகாது நம் கிராமமும்
  கண்ணம்மாக்கள் இருக்கும் வரை

 4. மண் தாங்கும் உடம்போடு
  மனம் தாங்கும் உயிரோடு
  மானம் காத்த மண்ணுக்கும்
  உள்ளம் கவா்ந்த மனிதனுக்கும்
  அன்பெனும் உயிா் கலந்து
  பண்பெனும் பாசம் கலந்து
  தலைமேல் பக்குவமாய்
  செய்துவைத்த உணவு
  பாிமாற ஆளுண்டு
  பசியாற மனமுண்டு
  உழைத்து வாழ மண்ணுண்டு
  உலகம் அமையும்
  உழுதுண்டு.

 5. என்ன செய்ய
  இந்த வயதிலும்
  உயிர் கொடுப்பவளாய்
  உண்டி கொடுப்பவள் நானே
  தள்ளாத வயதில்
  தாயான என்னை மறந்தும்
  சேர்த்துவிடாதே
  முதியோர் இல்லத்தில்
  நசுங்கிப் போனாலும்
  பாத்திரம் பத்திரமாய்த்தான்
  இருக்கிறது……ஆனால்
  இந்த மனிதர்கள்
  முதுமைஅடைந்தால் மட்டும்
  தாயையும் தந்தையையும்
  தம் இல்லத்தில் இடமின்றி
  தள்ளலாமோ முதியோர் இல்லத்தில்
  தாங்காதடா மகனே…..
  இந்த வெயிலிலும்
  தலைச்சுமையோடு
  தட்டேந்தி உனக்காக
  இந்த வெயிலில் வருகிறேன் நானே.

  கவிஞர் “இளவல்” ஹரிஹரன், மதுரை

 6. குழப்பமே…

  கழனியில் உழுதிடும் கணவனுக்கே
  கஞ்சி கொண்டு செல்கின்றாள்,
  அழகிய கிராம வாழ்வினிலே
  அங்க மான அழகிதுவே,
  பழகிய பண்புள வாழ்வைவிட்டு
  பட்டணம் தேடிப் போனதாலே
  குழப்பம் மட்டும் நிலவிடுதே
  காணீர் குடும்ப வாழ்வினிலே…!

  செண்பக ஜெகதீசன்…

 7. ஊருக்கே படியளக்கும் உழவனுக்கு
  பசி தீர்க்க ஒய்யாரமா வந்தவளே
  நீ நடக்கும் நடையக் கண்டு என்
  மனசு தவிக்குதடி திருவிழா கரகத்துக்கு
  தினந்தோறும் ஒத்திகையா மேல்நாட்டு
  மோகமுந்தான் உன்மேல வந்து
  ஒட்டிகிச்சா வாய்க்காலில் தண்ணி
  இருக்க வாட்டர்கேனு நமக்கெதுக்கு
  கரிசக்காட்டு பூமியெல்லாம் களையெடுக்க
  ஏங்குதடி கஞ்சியத்தான் சீக்கிரமா
  கரைச்சு தாடி களஞ்சியமே…

 8. உழைக்கும் தெய்வம்..!
  =================

  சொந்தமாய் உழைக்கும் அம்மா
  ……….சுகமெனத் தன்னில் கண்டாள்..!
  பந்தமும் வேண்டும் என்றால்
  ……….பற்றுடன் உறவு கொள்வாள்..!
  எந்தவொ ருசுகமும் இல்லா
  ……….எளிமையாய் வாழ்வு கொண்டு..!
  வந்ததை எதிர்கொள் என்றே
  ……….வழிசொலும் வல்ல வள்தான்..!

  உழைப்புதான் உயர்வு என்ற
  ……….உன்னதக் கொள்கை கொண்டு..!
  பிழைப்பையே பெரிதாய் வைத்து
  ……….பிரியமுடன் கொடுப்பாள் அன்பை..!
  பிழையிலா வாழ்வு கொண்டு
  ……….பிறர்க்குத விசெய்து வாழ்வாள்..!
  மழைத்துளி போலே சிந்தும்
  ……….மனதிலே அவள்நல் எண்ணம்..!

  அன்னையும் தெய்வம் என்றே
  ……….அனைவரும் உணர வேண்டும்..!
  தன்னையே அளித்துக் காத்து
  ……….தன்பிள்ளை வளரக் காண்பாள்..!
  என்றும் மாற்று இல்லை
  ……….எப்பவும் அவளே அன்னை..!
  அன்னையின் பாதம் தொட்டு
  ……….அடிதொழ எண்ணம் கொள்வீர்..!

  =================================
  அறுசீர் விருத்தம் = விளம்=மா=தேமா
  =================================

Leave a Reply

Your email address will not be published.