-முனைவர் நா.பிரபு

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

எழுத்தாளர் விந்தன் அவர்கள் திரையுலக மேதைகளான எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் எம்.ஆர். இராதா ஆகியோரின் கலைப்பயண வரலாறுகளை நூலாக்கியுள்ளார். பாகவதரின் மறைவுக்குப் பின்னர் அவரது வரலாறு குறித்த தேவையான தகவல்களின் அடிப்படையில் ‘எம்.கே.டி. பாகவதர் கதை’ என்னும் நூலும் எம்.ஆர்.இராதா வாழும்போதே அவரிடம் நிகழ்த்திய உரையாடலின் மூலமாக உருவாக்கிய ‘நடிகவேள் எம்.ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்’ என்னும் நூலும் என இரண்டு நூல்களை வெவ்வேறு அடிப்படைகளில் உருவாக்கியுள்ளார்.

பாகவதர் செவ்வியல் இசைப்பாடகராக, நாடக நடிகராக திரைப்படக் கலைஞராகப் புகழின் உச்சிக்குச் சென்றவர். இவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்டது. இந்தச் சாதனை இதற்கு முன்பும் பின்பும் நடந்ததில்லை. நல்ல உடலழகும் குரல் வளமும் பெற்றிருந்ததன் காரணமாகத் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் இவர் புகழ் பரவியிருந்தது. மலையாள மொழியிலும் இவர் குறித்த நூல்கள் வெளிவந்துள்ளன.

எம்.ஆர்.இராதா அவர்கள் நாடகக் கலைஞராக அறிமுகமாகி திரைத்துறையில் கலகக்காரராக வலம் வந்தவர். திராவிட இயக்க உருவாக்கத்தின் கலைப்பின்னணியாகச் செயல்பட்டவர். எம்.ஆர். இராதாவின் வாழ்க்கையை அவரது சொந்தக் குரலிலேயே பதிவுசெய்துள்ளார். அவர் குறித்த அறிமுகமே இப்படித்தான் தொடங்குகின்றது.

சக பத்திரிக்கையாளர் ஒருவர், “உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன்” என்கிறார் வினயத்துடன்.

“என் மனைவியை எதுக்கு கூப்பிடறது? நான் மட்டும் பார்க்கத்தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லை!” என்று இராதா ‘பட்’டென்று பதிலளிக்கிறார்.

சிறைச்சாலை அனுபவங்கள் என்று இவரது நூலுக்குத் தலைப்பினை வைத்துள்ளார் விந்தன் என்ற போதிலும் சிறைச்சாலைக்கு வெளியில் நிகழ்ந்த அவரது கலையுலக வாழ்க்கை குறித்தே இந்நூலில் மிகுதியும் உரையாடப்பட்டுள்ளது.

இவ்விருவரது வாழ்முறையும் கலைப்பயணமும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. பாகவதர் தன்வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை ஆழமான இறை நம்பிக்கையுடன் வாழ்ந்தவர். நடிப்பிலுங்கூட அதற்கு எதிராகச் செயல்பட மறுத்தவர். அன்று திராவிடக்கட்சியின் வளர்ச்சியில் தீவிரமாக இயங்கிய அண்ணாதுரை இவருக்காக நாடகம் எழுதி நடிக்கக் கேட்டபொழுதும் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்தவர். ஆனாலும் அனைத்து அரசியல் இயக்கத்தவர்களுடன் நட்புமுறையில் பழகியவர்.

நாடக வரலாற்றையும் சினிமா வரலாற்றையும் மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை இவ்விரு நூல்களும் முன்வைக்கின்றன. தமிழ் நாடகத்தின் தந்தை என்று சங்கரதாஸ் சுவாமிகளையும், பம்பல் சம்பந்த முதலியாரையும் குறிப்பிடும் வழக்கம் நாடக வரலாறுகளில் தொடர்கிறது. அவர்களின் பங்களிப்பினை மறுக்க இயலாதென்றாலும், இத்தகைய வரலாற்று கட்டுமானங்கள் பிற கலைஞர்களை நிராகரிக்க அல்லது மறக்கச் செய்துவிடுகிறது. இதிலிருந்து கலைஞர்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. ஜகந்நாத அய்யரின் நாடகக் கம்பெனியில் இருந்த ராதாவின் அனுபவங்களைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கும் போது, சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி விந்தன் கேட்கிறார். அதற்கு,

“சங்கரதாஸ் சுவாமிகள் வருவார்; இருப்பார். குடித்துவிட்டு ஆடினால் ‘இது நமக்குப் பிடிக்காது; நீ போய்விட்டு வா!’ என்று அய்யர் அவரை வெளியே அனுப்பிவிடுவார்.”

“அவரை இன்று சிலர் நாடக உலகத் தந்தை என்று சொல்கிறார்களே?”

அதை நான் ஒப்புக்கொள்ளமட்டேன். அவர் நல்ல நாடகாசிரியர்; பாடலாசிரியர். எழுத ஆரம்பித்தால் தங்குதடையில்லாமல் எழுதுவார்….. அதெல்லாம் சரி. ஆனா இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்ட புராண இதிகாச நாடகங்களுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர நாடக உலகத்துக்கு ஒரு நாளும் தந்தையாயிருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர் ஜகந்நாதய்யராகத்தான் இருக்க முடியும். ஏன்னா இன்னிக்கு இருக்கிற அத்தனை கலைஞர்களும் அவருடைய வழி வழியா வந்த கலைஞர்களே. இதை யாராலும் மறுக்க முடியாது” (நடிகவேள் எம்.ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், ப:22) என எம்.ஆர்.ராதா கூறியதாகப் பதிவுசெய்துள்ளார்.

இதே போன்று பாகவதர் வரலாற்றில் கதை-வசனம் எழுதுவதில் சிறந்து விளங்கிய இளங்கோவன் குறித்து எழுதும்போது,

“இவர் உண்மையிலேயே அந்தத் துறைக்கு வேண்டிய தகுதியும் திறமையும் உடையவர். அத்துடன் இப்போது யாரோ வசனத்தில் ‘புரட்சி’ செய்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்களே, அந்தப் புரட்சியைக் கண்ணகி படத்தின் மூலம் எப்போதோ மெளனமாகச் செய்துவிட்டு, இன்றும் அதை வெளியே சொல்லாமல் மெளனமாக இருந்துகொண்டிருப்பவர். (எம்.கே.டி. பாகவதர் கதை, ப. 178) எனவும் எழுதியுள்ளார். இவ்விரு ஆளுமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளது உள்ளபடியேயும், எவருக்கும் அஞ்சாமலும் விந்தன் அவர்கள் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குட்டிக் கதைகள்

‘விந்தன் குட்டிக் கதைகள்’ என்னும் தொகுப்பில் விந்தன் எழுதிய குட்டிக் கதைகள், மகிழம்பூ ஆகிய இரு நூல்கள் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ளன.

பிற உயிரினங்களிலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டக்கூடியது ஆறாம் அறிவான பகுத்தறிவு என்று சொல்கிறோம். ஆனால் அந்தப் பகுத்தறிவால்தான் மனித சமூகத்தில் தன் தேவையை மீறிய ஆசை, அதன் காரணமாகப் பிறரை ஏய்த்துப் பிழைத்தல், சமூக ஏற்றத் தாழ்வுகள் முதலானவை உருவாயின. எனவேதான் சிங்கத்துக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடலில் மனிதனின் ஆறாவது அறிவான பகுத்தறிவு மனிதனுக்கு வழங்கப்பட்ட சாபம் என்று கடவுளை விந்தன் கூற வைக்கிறார்.

‘ஆறாவது’ என்னும் கதையில் சிங்கத்துக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடல் பின்வருமாறு தொடர்கிறது.

“எங்களுக்கில்லாத பகுத்தறிவை நீங்கள் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத்தான் அவன் ‘ஆறாவது அறிவு’ என்கிறான்!” என்றது சிங்கம்.

“நாசமாய்ப் போச்சு; அவனுக்கு நான் கொடுத்த சாபமல்லவா அது?”

“சாபமா!”

“சந்தேகமென்ன? எதையும் அறிய முயல்வதும், அறிந்தாலும் அதை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் நான் அவனுக்குக் கொடுத்த சாபம்தான்” என்றார் கடவுள் (விந்தன், ப. 13)

விந்தன் கூறுவது எவ்வளவு உண்மை. இனிப்பு சாப்பிடுவது தனக்குக் கேடு விளைவிக்கும் என்பது ஒரு சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும்; குடிப்பது உடல் நலத்திற்குக் கேடானது என்று குடிகாரர்களுக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அறிந்ததை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் பகுத்தறிவுடைய மனிதனுக்கு நடக்கின்றதே!

மாடுகளைச் சந்தையில் பிறருக்கு விற்பதும், அவ்வாறு விற்கப்பட்ட மாடுகள் பழைய உரிமையாளரின் வீடு தேடி வருவதும் இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வுதான். பணத்திற்காகப் பாசத்தை மறக்கும் மனித இனத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்ட ‘மாடும் மனிதனும்’ என்னும் கதையின் மூலமாக விந்தன் இந்நிகழ்வைப் பயன்படுத்துகிறார்.

‘ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகத் தன்னை விற்றவனைத் தேடிக்கொண்டு வந்தது மாடு. வாங்கினவனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை; “இனிமேல் இங்கு வருவாயா, இனிமேல் இங்கு வருவாயா, இனிமேல் இங்கு வருவாயா?” என்று அதை ‘வாங்கு வாங்கு’ என்று வாங்கிவிட்டான்.

வீறிட்டலறிய மாட்டை நோக்கி அதனுடன் வசித்த ஆடு கேட்டது:

“விற்றவன் உன்னை அன்றே மறந்துவிட்டது போல நீயும் அவனை மறந்துவிட்டிருந்தால் இந்தக் கதிக்கு ஆளாகி இருக்கமாட்டாயல்லவா?”

கண்ணீரும் கம்பலையுமாக மாடு சொல்லிற்று:

“அது எப்படி முடியும்? நான் மனிதனாகப் பிறக்காமல் மாடாக அல்லவா பிறந்துவிட்டேன்?”

தன்னிடம் பாசமுடன் வளர்ந்த ஓர் உயிரை விட வெறும் காகிதமான பணம் மனிதனுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் மாட்டுக்கு எத்தனை அடி வாங்கினாலும் தன்னை வளர்த்தவர் மீதான பாசமே பெரிதெனக் காட்டுகிறார்.

இரவில் வீட்டுக்குக் கடைசியாக வந்த வீட்டுக்காரர் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்கிறார். இதைப் பார்த்த ஜன்னல் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறது. ஏன் என்று கதவு கேட்க, மனிதனைக் காற்றில் வாழவைத்ததற்காக. இல்லையென்றால் உன்னைச் சாத்திவிட்டுச் சென்றதுபோல் என்னையும் சாத்திவிட்டுச் சென்றிருப்பார் அல்லவா? என்று ஜன்னல் சொன்னது.

இதைக் கேட்டதும் “அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்?” என்ற அலுப்பும் சலிப்புமாக ஆரம்பித்த கதவு, திடீரென்று தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, “உன்னிடம் நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்றது ஜன்னலிடம்.

“சொல்லு?” என்றது ஜன்னல்.

“இப்போதெல்லாம் மனிதன் தன்னைப்போல் மனிதனை நம்புவதில்லை; என்னைப்போன்ற கதவைத் தான் நம்புகிறான்!” என்றது கதவு. இவ்வாறு மனிதச் சமூகம் தன் சக மனிதனை நம்பாமல் உயிரற்றப் பொருட்களான கதவு, ஜன்னல், பூட்டை நம்பும் நிலைக்கு வந்ததனை ‘கதவும் மனிதனும்’ என்னும் கதையில் விந்தன் ஏளனத்துடன் பதிவு செய்கிறார்.

எளியவரிடம் மட்டுமே தம் வீரத்தைக் காட்டி, வலியவரிடம் வளைந்து குழையும் பெரும்பான்மையான மனிதர்களின் மனநிலையை விந்தன் அவர்கள் ‘வீரம்’ என்னும் கதையில் கட்டைவண்டி, மகிழ்வுந்து (கார்), ரயில் ஆகியவற்றைக் கொண்டு சித்தரிக்கிறார். மெதுவாக அசைந்து சென்றுகொண்டிருக்கிறது ஒரு மாட்டுவண்டி. அதன் பின்னால் வந்த மகிழ்வுந்து ஒன்று “ஏய், சனியனே! ஒதுங்கிப் போ! என்று மிரட்டி விரட்டிற்று.

“மரியாதைக் குறைவாகப் பேசாதே! என்ன இருந்தாலும் உனக்கு நான் மூத்தவன் என்பதை மறந்து விடாதே!” என்றது மாட்டுவண்டி.

“மூத்தவனாவது, கீத்தவனாவது! யாராயிருந்தாலும் என்னைக் கண்டதும் ஒதுங்கி வழி விட்டால்தான் ஆச்சு; இல்லாவிட்டால் அவர்களை நான் மோதி மிதித்து விடுவேனாக்கும்!” என்று கார் உறுமிற்று.

“ஐயோ வேண்டாம் அப்பனே! இதோ நான் ஒதுங்கி விடுகிறேன்; நீ போ, கன ஜோராகப் போ!” என்று ஒதுங்கி வழி விட்டுவிட்டது மாட்டுவண்டி.

அது சொன்னபடியே கன ஜோராகப் போன காரை “எங்கே, என்னை மோதி மிதித்து விடு பார்ப்போம்?” என்பதுபோல் ஒரு ரயில்வே கேட் தடுத்து நிறுத்தியது.

வேறு வழியில்லாமல் நின்ற காரை நெருங்கி, “அந்த ரயில் மட்டும் உன்னைக் கண்டதும் ஏன் அப்பா ஒதுங்கி வழி விடவில்லை?” என்று மாட்டு வண்டி கேட்டது.

கார் வாயைத் திறக்கவில்லை!’

தமக்குக் கிடைக்கும் சில சலுகைகளுக்காக அடிமை வாழ்வில் சுகம் காண்பவர்களை எள்ளி நகையாடும் விதத்தில் ‘சுதந்திரம்’ என்னும் கதையை விந்தன் எழுதியுள்ளார். இக்கதையில் நாயொன்று கட்டப்பட்டிருக்கிறது. அதன் எதிரே கிளி ஒன்று கூண்டில் அடைபட்டிருக்கிறது. இரண்டுமே சுதந்திர வாழ்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. அப்பொழுது அவ்வழியாக வந்த குரங்கொன்று அவை இரண்டையும் விடுவிக்கின்றது. இரண்டுமே விடுதலை கிடைத்த மகிழ்ச்சியோடு வெளியேறுகின்றன.

‘சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தன்னால் விடுதலை செய்யப்பட்ட கிளியைச் சந்தித்த குரங்கு, “எப்படி இருக்கிறது, விடுதலை?” என்று கேட்டது.

“ஆனந்தம், பரமானந்தம்!” என்றது கிளி, கன குஷியுடன்.

‘மகிழ்ச்சி!” என்ற குரங்கு அதனுடன் விடுதலை செய்யப்பட்ட நாயை நோக்கி, “எப்படி இருக்கிறது, சுதந்திரம்?” என்று கேட்டது.

“சுத்த மோசம்! காலையில் பால், மத்தியானம் இறைச்சி, மாலையில் பிஸ்கெட், இரவு மறுபடியும் பால் – இதெல்லாம் இந்தச் சுதந்திர வாழ்வில் எங்கே கிடைக்கிறது? ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாலும் ஒரு கவளம் எச்சில் சோற்றுக்கு ஓராயிரம் நாய்களுடன் போட்டியல்லவா போட வேண்டியிருக்கிறது? என்றது நாய், வெறுப்புடன்.”

அடிமை வாழ்வை நினைத்து ஏங்கும் நாயை நினைத்து “சுதந்திரத்தில் கூட எல்லோருக்கும் சுகம் கிட்டி விடாது போலும்?” என்று குரங்கு சொல்லிற்று என உலக நடப்பியலைப் பதிவு செய்கிறார்.

நன்றி மறக்கும் தன்மைக்கு குளத்துப் பறவைகளைச் சான்றாகக் காட்டுவர். இதனை வேறொரு கோணத்தில் ‘ஆலமரம்’ என்னும் கதையில் விந்தன் பார்க்கிறார். ஆலமரம் துளிர்த்துப் பூத்துக் குலுங்கும் காலத்தில் பறவைகள் அங்கேயே தங்கி உண்டு மகிழ்ந்தன. மரம் வாடியதும் பறவைகள் இரை தேடி வேறிடத்துக்குப் பறந்தன. அப்போது அருகிலிருந்த அரசமரம் “என்ன நன்றி கெட்ட பறவைகள் அவைகள்! எல்லாம் இருக்கும் வரைதான் அவற்றின் உறவுபோலும்?” என்றது ஆலமரத்திடம். ஆலமரம் சிரித்துச் சொல்லிற்று: “உனக்கும் எனக்கும் உள்ள இடத்திலேயே உணவு கிடைப்பதுபோல் அவற்றுக்கும் கிடைத்தால், அவையும் நன்றியுள்ள ஜீவன்களாய்த்தான் இருக்கும்!”

மனிதன் வாழும் சூழல், அவனது பொருளாதார நிலைமை, அவனுக்குக் கிடைக்கும் கல்வி போன்ற பல காரணங்கள் ஒரு மனிதனின் குணத்தை, நடத்தையை நிர்ணயிக்கிறது. மனித இனத்தில் சிலர் கொலைகாரர்களாய், போக்கிரிகளாய், விபசாரிகளாய் வாழ்வதற்கு அவர்களின் சூழலும் தேவையுமே காரணம். அவர்களின் பொருளாதாரத் தேவைகள் உயர் வகுப்பினர்போல் நிறைவடைந்தால் அவர்கள் இவ்வாறு இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை ‘ஆலமரம்’ என்னும் கதை உணர்த்துகிறது.

ஒரு மனிதன் வாழ இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் தூக்கிட்டுக் கொள்கிறான். இதைப் பார்த்த பறவைக் குஞ்சு தனது தாயிடம், “அதெல்லாம் நமக்குக் கிடைக்கும்போது அவனுக்கு மட்டும் ஏன் அம்மா கிடைக்கவில்லை?”

தாய்ப்பறவை சொல்லிற்று:

“அவன் அடைந்த நாகரிகம் அப்படி! அவனும் நம்மைப் போல் இந்த உலகத்தில் எதற்கும் உரிமை கொண்டாடாமல் வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனுக்கும் நமக்குக் கிடைப்பதுபோல் எல்லாம் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. அவன் எப்போது இது உன்னுடையது, அது என்னுடையது என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தானோ, அப்போதே அவனுக்கு இங்கே எதுவுமே உரிமையில்லாமல் போய்விட்டது!”.

மனிதச் சமுதாயம் தனது புராதனப் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பை மறந்து ‘நாகரிகம்’ பெற்ற தனியுடைமைச் சமுதாயமாக மாறியதுதான் சமூகம் அனுபவிக்கும் பெரும்பாலான இன்னல்களுக்குக் காரணம் என்பதை ‘நாகரிகம்’ என்னும் இக்கதையில் விந்தன் உணர்த்துகிறார். தனக்கென்று ஒரு காணி நிலம் இருந்தால் கஞ்சிக்கு ஏன் அலையப் போகிறேன் என்று பலர் பெருமூச்சு விடுவதைப் பார்த்த மண் தன்னையொத்த இயற்கைப் பொருட்களான நெருப்பு, காற்று, நீர், வான் ஆகியவற்றை நோக்கி,

“நீ எல்லோருக்கும் சொந்தமாயிருக்கிறாயே, நான் ஏன் சிலருக்கு மட்டும் சொந்தமாயிருக்கிறேன்?” என்று கேட்டது.

அதற்குப் “போடி பைத்தியமே! உன்னிடம் இருக்கும் பொன்னை நீ ஏன் மனிதனுக்குக் காட்டினாய்? அதனால் தான் எங்களைப்போல் உன்னால் எல்லோருக்கும் சொந்தமாயிருக்க முடியவில்லை!” என்றது வானம்.

இக்கதையின் மூலம் மனித சமூகம் பொருளாசையால், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் மனிதத்தன்மை இழந்து நிற்பதை விந்தன் உணர்த்துகிறார்.

விந்தன் கடவுள் நம்பிக்கை கொண்டவரா? கடவுள் நம்பிக்கை அற்றவரா? என்பதை ‘விந்தன் குட்டிக்கதைகள்’ என்னும் நூலின் அடிப்படையில் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ‘தன்னம்பிக்கை’ என்னும் கதையில் நாட்டுப் பசுவொன்று குளத்தங்கரையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த புலி நாக்கைச் சப்புக் கொட்டிற்று. இதைக் கண்ட பசு “ஏ! அறியாமை நிறைந்த புலியே! நீயும் நானும் ராம ராஜ்ஜியத்தில் எப்படி ஒற்றுமையாய் இருந்தோம் தெரியுமா?” என்று பல்வேறு சான்றுகள் மூலம் ஆராய்ச்சி பூர்வமாகப் வலியுறுத்திக் கூறியது. புலியோ அதன் கூற்றை எள்ளல் செய்து அதனைக் கொன்று தின்ன வருகிறது. இதனைக் கண்ட பசு, “அட ராமா, உன்னை நம்பிய எனக்கா இந்தக் கதி?” என்று புலம்பிற்று பசு.

“உனக்கென்ன, தன்னை நம்பாத எவனுக்குமே இந்தக் கதைதான்! – நீ மட்டும் அவனை (ஆண்டவன்) நம்பாமல் உன்னையும் உன் கொம்புகளையும் நம்பியிருந்தால் இந்நேரம் என்னை விரட்டியிருக்கலாமே!” என்று அதன்மேல் பாய்ந்துவிட்டது புலி.

இக்கதையின் அடிப்படையில் விந்தன் அவர்களைக் கடவுள் நம்பிக்கை அற்றவராக மதிப்பிடலாம். ஆனால் அவர் ‘புதிய புராணம்’ என்னும் கதையை நாராயணனுக்கும் நாரதருக்குமான உரையாடலாய் எழுதுகிறார். இக்கதையில் நாரதர் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காக நாராயணனிடம் செல்கிறார். நாரதர் ‘ஏழைகளுக்கு வீடு கட்டித் தருபவர்கள் பெயர் நிலைத்து நிற்குமா? அல்லது தங்களுக்கு கோவில் கட்டித் தருபவர்களின் பெயர் நிலைத்து நிற்குமா?’ என்று தன் சந்தேகத்தை நாராயணனிடம் முன்வைக்கிறார்.

நாராயணன், ‘எவனொருவன் இயற்கையின் உபாதைகளுக்கு அடிக்கடி ஆளாகும் ஏழைகளின் குடிசைகளை அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக ஏற்றமிகு மாளிகைகளைக் கட்டித் தருகிறானோ, அவன் பூதவுடலை நீத்ததும் என்னை வந்து அடைந்துவிடுகிறான். எல்லாம் வல்ல எனக்காகக் கோயில் கட்டுபவன் எனை வந்து ஒரு நாளும் அடைவதில்லை; என்னுள் ஐக்கியமாவதும் இல்லை. இதனால் ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களைச் சிரிக்க வைப்பவனின் பெயர் மண்ணுலகில் மறைகிறது; விண்ணுலகில் நிலைக்கிறது. எனக்குக் கோயில் கட்டித் தருபவனின் பெயரோ மண்ணுலகில் நிலைக்கிறது; விண்ணுலகில் மறைகிறது. – இதுதான் உண்மை என்றார் நாராயணன். இவ்வாறு இருவேறு தளங்களில் விந்தன் பயணித்திருப்பினும் பெரும்பான்மை அவர் மனிதத்தையே முன்னெடுத்துள்ளார்.

சாதிய முரண்பாடு, வர்க்க முரண்பாடு குறித்துத் தெளிவான சிந்தனையைக் கொண்டிருக்கும் ஆண் மனதும் கூட ஒடுக்கப்பட்ட பாலினமான பெண்கள் குறித்துத் தன் நனவிலி மனத்தில் கேலியையும் கிண்டலையும் புதைத்து வைத்துள்ளது. ‘மாட்டுத் தொழுவம்’ என்னும் தன் சிறுகதையில் பெண்ணினம் இந்தச் சமூகத்தில் மாட்டைவிடக் கேவலமாக நடத்தப்படுவதனை நேர்த்தியாகப் பதிவு செய்தவர் விந்தன். அவரே கூட தனது குட்டிக் கதைகளில் பெண்களை ஏளனத்துக்கு உள்ளாக்குகிறார். ‘பெண்ணின் பெருமை’ என்னும் கதையில் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையைக் கண்டு பூரிக்கிறாள் எஜமானி. அதற்கு விந்தன் ‘அடடா! என்ன சந்தோசம், என்ன சந்தோசம்! தன் சொந்த புத்திக்கு வேலை கொடுக்காதவர் யாராயிருந்தாலும் இந்தப் பெண்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது!’ என்று கூறுகிறார். ‘கடமை’ என்னும் கதையில் பரிசு கொடுத்தால்தான் பெண்கள் புன்னகை பூப்பர் என்று எள்ளல் செய்கிறார். ‘முடியவில்லை’ என்னும் கதையில் குடும்பத் தலைவர் ஒருவர் பொங்கலையொட்டி பழைய சாமான்களை எல்லாம் அகற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது வந்த அவரது நண்பர், “வேலை முடிந்துவிட்டது போலிருக்கிறது; வேண்டாத சாமான்களையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து விட்டீர்கள் போலிருக்கிறது!” என்று கூறிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார்.

“ஆமா; இன்னும் ஒரே ஒரு சாமான்தான் பாக்கியிருக்கிறது. அதை எடுத்து வெளியே எறிய என்னால் முடியவில்லை!” என்றார் கிரகஸ்தர்.

“அது என்ன அப்படிப்பட்ட சாமான்?” என்று நண்பர் நெருங்கி ஆவலுடன் கேட்டார். “வேறு என்னவாயிருக்க முடியும்? என் மனைவிதான்!’ என்றார் கிரகஸ்தர் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே.

அவ்வளவுதான்; “எங்கே அப்பளக் குழவி?” என்று உள்ளே யாரோ உறுமும் சத்தம் கேட்டது. வந்தவர் எழுந்து பிடித்தார் ஓட்டம்!’ இக்கதை விந்தனுடைய எழுத்துகளைப் போல் அல்லாமல் வெகுசனப் பத்திரிக்கைகளில் வரும் நகைச்சுவைத் துணுக்கைப் போல இருக்கிறது. வெகுசனப் பத்திரிகையின் தேவைக்கு இம்மாதிரியான தீனியை விந்தன் போன்றவர்களும் போடவேண்டிய சூழல் நெருக்கடி நிலவியது போலும்.

இந்த உலகத்தில் தன்னால் முடியாத காரியம் என்று எதுவுமில்லை என்று கர்வம் கொண்டிருக்கிறான் ஒரு விஞ்ஞானி. ஒரு முதியவர் அவனிடம் ரோஜா மொட்டு ஒன்றைக் கொடுத்து மலரவைக்கச் சொல்கிறார். அவனும் அன்று முழுவதும் தன் ஆய்வுக் கூடத்தில் இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். மறுநாள் காலை இயற்கையாக செடியிலிருந்த ரோஜா மொட்டுக்கள் தானாக மலர்ந்து மணம் வீசின. மணம் வந்த திசையை நோக்கித் திரும்பிய விஞ்ஞானி “இத்தனை மொட்டுக்களையும் இவ்வளவு அழகாக இவற்றுக்கு அருகில்கூட வராமல் மலர வைத்தது யார்?” என்றான் வியப்புடன். முதியவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். இப்படித்தான் மனிதர்கள் அறிவியலில் வளர்கிறேன், நாகரிகம் அடைகிறேன் என்று இறுதியில் இயற்கைக்கும் தனக்குமான சங்கிலியை அறுத்துவிடுகின்றனர். நிலநடுக்கத்தையும், ஆழிப்பேரலையையும் நாயாலும் யானையாலும் உணர முடிகிறது; மனிதனால் முடியவில்லை. இயற்கைக்கும் செயற்கைக்குமான போட்டியில் எவ்வளவு முயன்றாலும் மனிதனால் இயற்கையை வெற்றிக் கொள்ள முடிவதில்லை என்பதை இக்கதையில் உணர்த்துகிறார்.

விந்தன் எழுதிய ‘செந்தமிழ் நாட்டிலே’ என்னும் கதை வாழும்போது எழுத்தாளனைக் கண்டுகொள்ளாத சமூகம் அவன் இறந்த பின்பு அவனையும் அவன் எழுத்துகளையும் கொண்டாடுவது குறித்த எள்ளலே. வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் கொள்கைக்காகத் தனது எழுத்துப் பணியைக் கடும் வறுமையிலும் தொடர்கிறார் எழுத்தாளர் சதானந்தம். அவரின் எழுத்தைத் கொண்டாடவோ அவருக்கு உதவி செய்யவோ யாருமில்லை. அவர் சூரிய கிரகணத்தன்று கடலில் மூழ்கி இறந்துவிட்டார் என்று தெரிந்தும் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்; ரசிகர்கள் உதவித்தொகைத் திரட்டி அவரது குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கின்றனர். பத்திரிகையாளர்கள் அவரது சந்ததியார்களைப் பற்றி எழுதிப் பணம் சேர்க்கின்றனர். ஆனால் பிறரை இறந்த பிறகும் வாழவைக்கும் சதானந்தமோ இறக்கவில்லை; அவர் தமிழ் நாட்டில் பிழைக்க முடியாமல் வட நாட்டுக்குச் சென்று இந்தியில் நாவல் எழுதுகிறார்; அது மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வருகிறது. இவ்வாறு ஒரு எழுத்தாளரின் வாழ்வையும் வலிகளையும் எள்ளலுடன் தம் கதையில் பதிவு செய்தவர் விந்தன். அதேபோல் மற்றொரு கதையான ‘சமதர்மம்’ என்னும் கதையில், கடைத்தெருவைக் கூட்டம் வந்து மொய்க்கும் நேரம். தன் கடையிலிருந்த பழங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து வைத்துக் கொண்டிருந்தான் கடைக்காரன்.

புது மெருகு ஏற்றப்பட்ட ஆரஞ்சுப் பழம் ஆற்றாமையுடன் பொருமிற்று.

“நம்மையெல்லாம் துடைத்து வைப்பதோடு சரி; அந்த ஆப்பிள் பழத்துக்கு மட்டும்…..”

“என்னவாம்?” என்று இடைமறித்துக் கேட்டது திராட்சை.

“வெள்ளைக்கலை உடுத்தி, வெள்ளைப் பணி பூண்டு, வெள்ளை அரியாசனத்தில் ஏற்றி……”

‘ஓ’ அதைச் சுற்றி வைத்திருக்கும் அந்த மெல்லிய வெள்ளைக் காகிதத்தைச் சொல்கிறாயா? ஆமாம்! ஆமாம்!, அதற்கு எப்போதுமே ஒரு தனி அலங்காரம்தான்! என்று அது சொன்னதைத் திராட்சை ஆமோதித்தது.

“ஏன், இருக்கக் கூடாதா? அது உன்னைப்போல் கன்னங் கரேலென்றா இருக்கிறது? எப்போதுமே அது தன் அழகிலும் தனி, மதிப்பிலும் தனி! என்றது அன்னாசி. மாதுளை திரும்பி, “யாரது, பைன் ஆப்பிள் சாரா? யு ஆர் கரெக்ட்! முள்ளம்பன்றி போல் இருக்கும் உமக்குச் சாதாரண பன்றிபோல் இருக்கும் ஆப்பிள் தன் அழகிலும் தனியாய்த்தான் தெரியும்! மதிப்பிலும் தனியாய்த்தான் தெரியும்” என்றது எரிச்சலுடன்.

அப்போது அழுகிப்போன ஆரஞ்சுப்பழம் ஒன்றோடு, கன்றிப்போன ஆப்பிள் பழம் ஒன்றையும் எடுத்துக் கடைக்காரன் குப்பைத் தொட்டியில் விட்டெறிய, “வாழ்க, சமதர்மம்!” என்றது வாழைப்பழம்.

“ஸ்…. பேசாதே! மனிதர்களுக்குச் சமதர்மம் சுடுகாட்டில் கிட்டுவதுபோல், நமக்குக் குப்பைத் தொட்டியிலாவது கிட்டட்டும்!” என்று சொல்லி அதன் வாயை அடக்கிற்று திராட்சை” என்று இவ்வுலகின் சமதர்ம நிலையினை காட்டுகிறார்.

‘புகழரசி’ என்னும் குட்டிக் கதையிலும் எழுத்தாளரின் வாழ்வே மையம். காலதேவனுக்கும் புகழரசிக்கும் இடையிலான உரையாடலாக இக்கதையை விந்தன் அமைத்துள்ளார். இந்தத் தொகுப்பில் இருக்கக் கூடிய கதைகளிலே அதிகப் பக்கங்களைக் கொண்ட கதையும் இதுதான். எழுத்தாளர்கள் வாழும்போதே புகழ் அவர்களை ஏன் அடையவில்லை என்று காலதேவன் கேட்பதே இக்கதையின் மையம். இதற்குக் “கலைஞன் உயிரோடிருக்கும்போது அவனுடைய குற்றங்கள் பெரிதாகவும் கலைத்திறன் சிறிதாகவும் ஜனங்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே, என்னுடைய அருள் ஒரு கலைஞனுக்கு அவனுடைய ஜீவிய காலத்தில் நியாயமாகக் கிடைத்தாலும், ஏதோ காரியார்த்தமாக நாலுபேர் சேர்ந்துகொண்டு அவனைத் தூக்கி விடுவதாக ஜனங்கள் புறம் பேசுகிறார்கள். அசூயையும் பொறாமையும் சேர்ந்து அவர்களுடைய உள்ளத்தை அவ்வாறு மாசுபடுத்தி விடுகின்றன!” என்று புகழரசி பதில் கூறுகிறாள். விந்தனின் இவ்விரண்டு கதைகளும் அவர் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை போலவே உள்ளன; வாழும்போது பாட்டாளியாய் வாழ்ந்து பாட்டாளிகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவுமே வாழ்ந்தவர்; அவர் இறந்தபிறகு தன் எழுத்துகளால் பிறரை வாழவைக்கிறார். 

துணைநின்ற நூல்கள்

 • அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
 • அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
 • பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
 • பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
 • பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
 • பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
 • பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
 • வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
 • விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
 • விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
 • விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
 • விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
 • ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030

இதழ்கள்

 • குங்குமம், மார்ச்-1994
 • தினமணி, வெள்ளிமணி,10.1987
 • மனிதன்,08.1954

***** 

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
திருவண்ணாமலை 606603
கைப்பேசி: 9786863839
மின்னஞ்சல்: drnprabu@gmail.com

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *