Blog

  • பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – பகுதி 2

    -பேரா. பீ.பெரியசாமி

     1:1:12. மெய்யே என்றல்

    மெய்யே என்றலென்பது, “உரைத்த மாற்றத்தை மெய்யேயெனக் கூறுதல்” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “பொய்யை மெய்யென்று துணிதல்” (பேரா.,மெய்.22). எனவும், “இது முன்னதற்கு மாறாகப் பொய்ப்பினும் தலைவன் சொல் மெய்யெனத் துணியும் தலைவியியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவன் தன்னிடம் சொன்ன பொய்யை மெய்யாகக் கருதல். இது பெரும்பாலும் தலைவன் வாயில் வேண்டி நிற்கையில் அவன் சொல்லும் பொய்ம்மொழிகளின் மேல்வரும் மெய்ப்பாடு.” இராசா,மெய்.22) எனவும், “தலைவன் மாட்டுப் பொய்ம்மை நிகழினும் தன் காதன் மிகுதியான் அதனை மெய்ம்மையாகக் கருதிக் கொள்ளுதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். முன்னர் தலைவன் கூறும் மெய்ம்மைகளைப் பொய்யெனக் கொண்ட தலைவி. இங்ஙனம் பொய்ம்மையை மெய்யே என்று காதல் மிகுதியால் கொள்ளுதலே மெய்யே என்றலாகும். இதனை விளக்க இளம்பூரணர், குறுந்.121 ஆம் பாடலும்; பாலசுந்தரம், குறுந்.21 ஆம் பாடலும்;  தாசன், குறுந்.121, 21 ஆகிய பாடல்களையும்;  பாரதி, குறுந்.21, 288 ஆகிய பாடல்களும்; மேலும் பேராசிரியர், பாரதி, குழந்தை ஆகியோர்,

    “கழங்கா டாயத் தன்றுநம் மருளிய
    பழங்கண்
    ணோட்டமு னலிய
    வழுங்கின
    னல்லனோ வயர்ந்ததன் மணனே.” (அகம்.66)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், கழங்காடலை ஆடும் நம்மாயத்தார் நடுவே அன்று நமக்கு அருளிய பழங்கண்ணோட்டம் தன்னை வருத்தலால், செய்த தன்மணத்தைச் சிறிது தவிர்த்தானல்லனோ என பொய்யை மெய்யாகக் கொண்டாள் தலைவி. இதனை, “இன்பத்தை வெறுத்தல் என்னுஞ் சூத்திரத்து, ‘மெய்யே யென்றல்’  என்பதற்குப் பொய்யை மெய்யென்று கூறுதல் என்று பொருள்கூறி அது, ‘கழங்கடாயத்து …………………………………………. அயர்ந்தனன் மணனே’; என்பது: தானே தன் மகனை வாயில் கொண்டு புக்கானாயினும், அதனைப் பழங்கண்ணோட்டமும் நலிதரப் பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்து கோடலால் அப்பெயர்த்தாயிற்று என்றார் பேரா.” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை, ப.159) என ந.மு.வேங்கடசாமி தமது அகநானூற்று உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

    1:1:13 ஐயஞ் செய்தல்

    ஐயஞ் செய்தலென்பது, “தலைவன் குறிப்புக் கண்டு ஐயப்படுதல்.” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “இது, காதல் மிகையாற் கடுக்குமியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும், “நம்மை வரையாது விடுவாரோ என வாளாதே ஐயம் செய்தல். வரையாது – மணக்காது. வாளா – சும்மா.” (குழந்தை, மெய்.22). எனவும், “ ‘நம்மை இம்மைப் பிறப்பினுள் துறப்பார் கொல்’ எனத் தலைவி காரணமின்றி ஐயங் கொள்ளுதல்.” (இராசா, மெய்.22).எனவும், “தலைவன் சொல்லையும் செயலையும் ஐயுற்றுக் கருதுதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். ஐயஞ் செய்தலென்பது தலைவனின் செயலைக் கண்டு அவன் தன்னை மணக்காது போய்விடுவானோ? என ஐயுறுதலாகும். இதனை விளக்க இளம்பூரணர், பாலசுந்தரம், தாசன் ஆகியோர் கலி.4 – ஆம் பாடலையும்; பேராசிரியரும் குழந்தையும், கலி.33 ஆம் பாடலையும்; பாரதி கலி.4, 24 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:14. அவன்தமர் உவத்தல்

    அவன்தமர் உவத்தலாவது, “தலைவன் தமரைக் கண்டவழி உவத்தல்.” (இளம்.,மெய்.22). எனவும், “அவன் தமரைக் கண்டு உவந்தது. இது முனிவெனப் படாவோவெனின், அது தலைமகனைப் புலந்தாற்போல்வதோர் முனிவாயினல்லாது பகைப்பட நிகழாக்குறிப்பெனப்படும்; அல்லாக்கால், அது பெண்டண்மையன்றாமாகலின்.” (பேரா.,மெய்.22). எனவும், “தலைவனுடைய தமரான பாணன் முதலியோரைக் கண்டு மகிழ்தல். தமர்-சுற்றம்.” (குழந்தை, மெய்.22). எனவும், “தலைவனைச் சார்ந்தாரைக் கண்டுழியும் அவர் சொற்கேட்டுழியும் உளம் மகிழ்தல். (எ-டு) வந்துழிக் கண்டுகொள்க. அவன் தமரேயன்றி அவன் நாட்டுப்பொருள் முதலியவற்றை உவத்தலையும் இதன்கண் அடக்கிக் கொள்க.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அவன்தமர் உவத்தலென்பது, தலைவனின் உறவினர்களையும் அவன் நாட்டுப் பொருளையும் கண்டவழி மகிழ்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.83-ஆம் பாடலையும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர், குறுந்.361 – ஆம் பாடலையும்;  பாரதி கலி.82 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

     1:1:15. அறனழித்துரைத்தல்

    அறனழித்துரைத்தலென்பது, “அறத்தினையழித்துக் கூறுதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “அறனழிய வெறுப்பது போல வெறுத்துக் கூறல்.” (பாரதி.,மெய்.22) எனவும்,  “பிரிவுத் துன்பத்தான்  உளம்நொந்த தலைவி தலைவன் முதலானோரிடத்து அறமில்லை என வெறுத்துப் பேசுதல்.” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இளம்பூரணர், தாசன், இராசா, பாரதி, பாலசுந்தரம் ஆகியோர் இம்மெய்ப்பாட்டினை அறனழித்துரைத்தல் எனவும், பேராசிரியர், குழந்தை ஆகியோர் அறனளித்துரைத்தல் எனவும் பொருள் கொள்வர். அறனளித்துரைத்தலென்பது, “அறக்கிழவனை அன்பு செய்தல்.” (பேரா.,மெய்.22) எனவும், “அறத்தினை அன்பு செய்து பரவுதல். அறன் –ஞாயிறு, திங்கள் முதலியனவும், பல்லி சொல்லல், காக்கை கரைதல் முதலியனவுமாம். தலைவி, ஞாயிறு திங்கள் முதலியனவற்றைத் தலைவன் வரும் வழியை இனிது செய்யும்படி வேண்டுதலும், தனது ஆற்றாமையால் தலைவன் விரைவில் வரவேண்டும், எனப் பல்லியைச் சொல்லும்படியும், காக்கையைக் கரையும்படியும் வேண்டுதலுமாம். அளி- அன்பு. அன்புடன் பரவுதலாம்.” (குழந்தை, மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இங்கு அறனழிந்துரைத்தலென்பது தனது நிலையினை உணராமல் பிரிந்துச் சென்ற தலைவனிடம் அறனில்லை என வெறுத்துக் கூறுதலாகும். இங்கே அறன் அளித்துரைத்தல் என்பது அறத்திற்கு அன்பு செய்தலாகும். இதனை, “அறனளிந் துரைத்தல் எனப் பாடங்கொண்டு அதற்கேற்ப விளக்கந்தருவார் பேரா. அது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதலான் அறியலாம்.”(பால. பதிப்பு.83. பக்.315) “நெஞ்சு அழிந்த வழியே அறன் அழிந்துரைத்தல் நிகழுமாதலின் அறனளித்துரைத்தல் என்ற பாடமே சிறக்கும் என்று தோன்றுகிறது.” (தி.வெ.கோ. மேலது, xxxi)” (கே.எம். வேங்கடராமையா, தொல்காப்பிய மூலம் பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு, ப.281.) என வேங்கடராமையா கூறியுள்ளார். இவற்றுள் அறனளிந் துரைத்தல்  பொருந்தாமையைப் பேராசிரியரே ஆங்கு நெஞ்சழிதலில் கூறியுள்ளமையின் அறனழிந்துரைத்தலென்பதே இங்குப் பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும் குறள்.1209.ஐயும்; பாரதி, குறுந்.191; 25, 262, ஐங்குறு.385, குறள்.1154, 1209 ஆகியவற்றையும்;  பாலசுந்தரம், கலி.143, 144 குறுந்.262 ஆகிய பாடல்களையும்; பேராசிரியரும் குழந்தையும்,

    “பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
    கன்றுபுகு
    மாலை நின்றோ ளெய்தி” (அகம்.9)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், பக்கத்தே பல்லி சொல்லுந்தோறும் கடவுளை வணங்கி கன்றுகள் மன்றிற்புகும் மாலைக் காலத்தே நின்றோளையடைந்து வணங்கி நின்றோளையெய்தி என்க என்பதில் அறனளித்துரைத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

    1:1:16 ஆங்கு நெஞ்சழிதல்

    ஆங்கு நெஞ்சழிதலென்பது, “அறனழிந்துரைக்குமிடத்து நெஞ்சழிந்து கூறுதல்” (இளம்.,மெய்.22) எனவும், “அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்துரைத்தல்;  எனவே, அறனளிந்துரைத்தல் அழிவின்றொன்றாமென்பது சொல்லினானாம்.” (பேரா.,மெய்.22). எனவும், “சொல்லளவில் அறனழிவது போலக் கூறிய தலைவி பின் அவ்வளவிற்கு உளம் உளைந்து வருந்துதல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். அறனழிந்து உரைக்கும்போது தன் நெஞ்சினையும் யழித்துக் கூறுதல் ஆங்கு நெஞ்சழிதலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1295-ஐயும்; பேராசிரியரும் குழந்தையும், கலி.143-ஆம் பாடலையும்; பாரதி, கலி.143, குறுந்.93 ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம், கலி.144, 114 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:17 எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல்

    எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பது, “யாதானுமோர் உடம்பாயினுந் தன்னோடு ஒப்புமை கோடல் என்றவாறு.” (இளம்.,மெய்.22) எனவும், “யாதானும் ஒரு பொருள் கண்டவிடத்துத் தலைமகனோடொப்புமை கோடல்.” (பேரா.,மெய்.22). எனவும், “இதுகாணும் பொருள் எதுவும் தலைவன் வடிவுவண்ணம் பண்பு வினைகளுள் ஒன்றுக்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும் “பிரிவாற்றாது புலந்த தலைவி நெஞ்சழிந்த நிலையில் தான் காணும் பொருள் எல்லாம் தன்னைப் போலத் துன்புறுவதாகக் கருதிக்கோடல். மெய் என்றது பொருளை உருவப்பொருளும் அருவப் பொருளும் அடங்க “எம்மெய்யாயினும்” என்றார்.” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பது காதல் மிகுதியால் தான் காணும் பொருட்களிலெல்லாம் தன் காதலரின் ஒப்புமையைத் தேடலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1222.ஐயும்;  பேராசிரியரும் குழந்தையும் கலி.20ஆம் பாடலையும்; பாரதி, குறள்.1111, 1112, 1116, கம்ப.மிதிலை.செய்.56, 57 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், கலி.129, 55, குறள்.1116 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:18 ஒப்புவழி உவத்தல்

    ஒப்புவழி யுவத்தலென்பது, “தலைமகனோடு ஒக்குமெனப் பிறிதொன்று கண்டவழி யுவத்தல்” (இளம்., தாசன்,மெய்.22). எனவும், “ஒப்புமை யுண்டாகிய வழியே உவமைகொண்டு அதனானே உவகை தோன்றுவது. எனவே, முன்னது ஒப்பின்றி ஒப்புமை கொண்டதாயிற்று;  என்னை? எம்மெய்யாயினு மென்றமையின்.” (பேரா., குழந்தை,மெய்.22). எனவும்,  “இஃது அவ்வாறு ஒப்புமை கண்டவழி மகிழும் காதலியல்பாம்.” (பாரதி., இராசா,மெய்.22). எனவும், “தம் நிலைமைக்கேற்ப ஒப்ப நிற்கும் பொருள் கண்டவழி உவப்புறுதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். தலைவனோடு ஒப்பன கண்டு மகிழ்தல் ஒப்புவழி உவத்தலாகும். இதனை விளக்கப் பேராசிரியர் கலி.80, 86 ஆகிய பாடல்களையும்;  பாரதி கலி.86 ஆம் பாடலையும்; குழந்தை கலி.80 ஆம் பாடலையும், பாலசுந்தரம் குறுந்.315, 162, கலி.86 ஆகிய பாடல்களையும்; இளம்பூரணர்,

    “யாவருங்……………… …………….
    …………. …………………… …………………….
    …………………. ………………………..
    காணுநர் இன்மையிற், செத்தனள் பேணி,” (அகம்.16)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், யாரும் பார்க்காததை அறிந்து அவன் அருகே சென்று அவனைத் தூக்கித் தன் தலைவன் போன்று இருக்கின்றதை எண்ணி இளமார்பையுடைய பொன் அணிகள் அணிந்த பெண், வருக என் உயிரே என அன்போடு அழைத்து மகிழ்ந்து தூக்கிக் கொஞ்சியதை, நான் பார்த்தேன் என்பதில் தலைமகனோடு ஒப்புடைய மகனைப் பரத்தை கொஞ்சியது வெளிப்பட்டுள்ளமையால், இஃது ஒப்புவழி யுவத்தலாயிற்று.

    1:1:19 உறுபெயர் கேட்டல்

    உறுபெயர் கேட்டலென்பது, “தலைவன் பெயர்கேட்டு மகிழ்தல்” (இளம்.,தாசன்,மெய்.22). எனவும், “தலைமகன் பெரும்புகழ் கேட்டு மகிழ்தல்” (பேரா., குழந்தை, இராசா,மெய்.22). எனவும், “இது தலைவன் பீடார் பெரும்புகழ் பிறர்வாய்க்கேட்டு மகிழ்தல்” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவனது பெருமை பற்றிய புகழினைத் தலைவி விரும்பிக் கேட்டல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகன் பெயரையும் புகழையும் கேட்டு உவத்தல் உறுபெயர் கேட்டலாகும். இதனை விளக்க, இளம்பூரணரும் தாசனும், குறள்.1199.ஐயும்;  பேராசிரியரும் பாலசுந்தரம், கலி.41, 142 ஆகிய பாடல்களையும்;  பாரதி, குறள்.1199, கலி.142, கம்ப.பால.கார்முகப்.செய். 59, 60, 62 ஆகியவற்றையும்; குழந்தை, கலி.142-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:20  கலக்கம்

    கலக்கமென்பது, “மனங்கலங்குதல். மேற் ‘கலங்கி மொழிதல்’ என்பது ஒருகாற் சொல்லின்கண் வந்து பெயர்வது. இது மனங்கலங்கி நிற்கும் நிலை.” (இளம்.,மெய்.22) எனவும், “சொல்லத்தகாதன சொல்லுதல். ‘கலக்கமு நலத்தக நாடி னதுவே’ (270) என்னாது கலக்க மென்பதை வேறுபெயர்த்து வைத்ததென்னையெனின் இக்காலத்து அதனினூங்கு நிகழும் மெய்ப்பாட்டுக் குறிப்புளவல்ல தலைமகட்கென்பது அறிவித்தற்கென்பது. இன்னும் அதனானே தலைமகற்காயின் அதினினூங்கு வருவதோர் கலக்கமும் உளதாமென்றது; அவை, மடலூர்தலே வரைபாய்தலே என்றற்றொடக்கத்தக்கன.” (பேரா.,மெய்.22) எனவும், “நன்றாகத் தகுதிநோக்கி யாராயின் மயக்கமென்பதும் மேலது போலவே காதற்றிணை நிமித்தமாகும் மெய்ப்பாடேயாம் முன் குறித்த 19ஆம் அமையாவழியே, அவற்றினிறுதியில் கலக்கம் எழும் என்னும் அதன் சிறப்பியல் குறித்தற்கு அது இறுதியில் வேறு பிரித்துக் கூறப்பட்டது.” (பாரதி.,மெய்.22) எனவும் “ஆற்றாமையான் மதிதிரிந்து சொல்லுதற்காகாதன சொல்லுதலும் செய்தற்கொவ்வாதன செய்தலுமாம்” (பாலசுந்.,மெய்.22)எனவும், உரையாசிரியர்கள் உரை கொள்வர். காதலர் மனங்கலக்க முறுவதால் செய்யத்தகாதன செய்தலும்; சொல்லுதலும் கலக்கமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் பேராசிரியரும், கலி.142, 144 ஆகிய பாடல்களையும், பாரதி, குறுந்.152 ஆம் பாடலையும்; குழந்தை, கலி.142, குறுந்.17 ஆகிய பாடல்களையும், பாலசுந்தரமும் இராசாவும் கலி.142ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:2  பேராசிரியருரையில் சுட்டப்படும் புறநடைகள்

    சாதல் எல்லையாகக் கூறுதலும் கலக்கத்தின் பாற்படும் இதனை விளக்க பேராசிரியர் குறுந்.17 ஆம் பாடலையும்; தானே துன்புறுமாறு உரைத்தலும் துன்பத்துப் புலம்பலாகும் என்பதனை விளக்க குறுந்.19ஆம் பாடலையும்; முற்காலத்து எதிர்ப்பட்டமை, பிற்காலத்துச் சொல்லுதலும் எதிர்பெய்து பரிதலாகும் என்பதனை விளக்க,

    “அந்தீங் கிளவி யாயிழை மடந்தை
    கொடுங்குழைக்
    கமர்த்த நோக்க
    நெடுஞ்சே
    ணாரிடை விலங்கு ஞான்றே” (அகம்.3.)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளார். இதில் அக்கானகத்தைக் கடந்து பொருள்தேட முன்பொரு காலத்தில் சென்றபோது சிவந்த வாயினையும் இனியமொழியையும் அழகிய அணிகலன்களையும் உடைய தலைவியின் பார்வையானது சிந்தையில் தோன்றிக் கானகத்தைக் கடந்து செல்லாதவாறு தடுத்ததன்றோ! ஆதலால் பொருளுக்குப் புரியவேண்டும் என்று கூறும் நெஞ்சே; உன் உண்மை போன்ற பொய்ம் மொழியை நம்பி நான் மீண்டும் சென்றால் முந்தைய துன்பந்தானே வரும். எனவே இத்துன்பம் போக வழியாது? எனத் தன் நெஞ்சிடம் தலைவன் கூறினானெப்பது முன்பு நடந்ததை பின்பு கூறிச் செல்கின்றான் இதுவும் எதிர்பெய்து பரிதலாகும்.

    1:3. முடிவுரை

    1. இன்பத்தை வெறுத்தலென்பதை விளக்க, பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம், இராசா ஆகியோர், அகம்.74 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் கண்துயில் மறுத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளதே யொழிய, இன்பத்தை வெறுத்தல் என்பது வெளிப்படவில்லை எனவே இஃது பொருந்தாது.
    2. உண்டியிற் குறைதலெனும் மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணரும் தாசனும் அகம்.48 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் “பாலும் உண்ணாள்” என கூறுவதால் பசியட நிற்றலின் பாற்படும். மேலும், பேராசிரியரும் பாலசுந்தரமும் இலக்கண விளக்க பாடல் 527 ஐ எடுத்தாண்டுள்ளனர். இது உணவு உண்ணாமையே உணர்த்துகிறது. எனவே இதுவும் பசியட நிற்றலின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது சிறிதுண்ணல் எனவே இம்மெய்ப்பாட்டிற்கு இவை பொருந்தாது.
    3. இளம்பூரணர், தாசன், இராசா, பாரதி பாலசுந்தரம் ஆகியோர் அறனழித்துரைத்தல் எனவும், பேராசிரியர், குழந்தை ஆகியோர் அறனளித்துரைத்தல் எனவும் பொருள் கொள்வர். இவற்றுள் அறனளித்துரைத்தல் என்பது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதலான் அறியலாம்.
    4. சாதல் எல்லையாகக் கூறுதலும் கலக்கத்தின் பாற்படும்; தானே துன்புறுமாறு உரைத்தலும் துன்பத்துப் புலம்பலாகும்; முற்காலத்து எதிர்ப்பட்டமை, பிற்காலத்துச் சொல்லுதலும் எதிர்பெய்து பரிதலாகும்.
    5. இவ்வியலில் கூறப்பட்டுள்ள பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் இருபதில், இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், ஏதமாய்தல், பசியட நிற்றல், உண்டியிற் குறைதல், கண்துயில் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக்கோடல், மெய்யே என்றல், அறனழிந்துரைத்தல், ஒப்புவழி உவத்தல் எனும் பதினோரு மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். ஏனைய ஒன்பது மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை மேற்கோளாக எடுத்தாளவில்லை.

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    விளாப்பாக்கம், ஆற்காடு.

     

    Share
  • தமிழ் இலக்கியங்களில் பன்முகச் சிந்தனைகள்

    பவள சங்கரி

     

    ஒரு நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் என்பது அந்நாட்டின் சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரின் நற்சிந்தைகளையும் ஊக்குவிக்கக்கூடிய சிறந்த ஆக்கங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். அந்த வகையில் இலக்கியம் என்பது ஒரு காலத்தின் கண்ணாடி எனலாம். அந்த இலக்கியம் உருவாக்கப்பட்ட காலத்தின் மொழி, பண்பாடு, கலை, வாழ்வியல் கூறுகள் போன்ற அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு களமாகச் செயல்படக்கூடியது.
    இலக்கியங்கள் என்பது காலத்தின் கண்ணாடி. அதுமட்டுமன்றி இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட மொழியின் இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை பகுத்தாய்வுச் செய்யக்கூடிய களமாகவும் விளங்கக்கூடியது.

    மொழி என்பது மனிதருக்கிடையில் கருத்துப் பரிமாற்றங்களுக்கான ஒரு கருவி எனக்கொள்ளலாம். மொழியைப் பேசுகின்ற அந்த இனத்தின் கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கங்கள், ஒழுக்கநெறிகள், அரசியல், சிந்தைகள் போன்ற பல வாழ்வியல் கூறுகள், பண்பாட்டு நிலைகள் போன்றவற்றின் அடிப்படையில் வெளிப்படை விளக்கமாக இருப்பதாகும்.

    வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் அரசியல், பண்பாட்டு, வணிகத் தொடர்பிலான சூழ்நிலைகளால் ஒரு மொழி பிறமொழிகளுடன் தொடர்பு கொள்ள நேரிடுவதால் அதன் வழக்காற்றில் பல பிறமொழிச் சொற்களும் இணைந்துவிடுகின்றன. இது மொழி வரலாற்றில் சுவையானதொரு பிரிவாகவும் அமையும். இயற் சொற்களிலும் பிற மொழிச் சொற்களிலும் தொடர்ச்சியான பொருள் மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. சமுதாயத்தில் காலத்திற்குக் காலம் ஏற்படும் மாற்றங்களை எதிரொலிக்கும் வகையில் ஒருசொல் தன் பொருள் எல்லையிலிருந்து வேறொரு எல்லைக்கு மாறும் நிலையில் அந்தப் பொருள் அமைப்பில் ஒரு மாற்றத்தை உணர்த்துகின்றது. அதே வேளையில் மாற்றத்திற்கு உட்படாமல் இருக்கும் மொழி இறந்தமொழி எனப்படும். எந்த ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்ற வகையில் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாகக் கருதப்படும்.

    ஏதேனும் ஒரு மொழி குறித்து பேசும்போதெல்லாம் அம்மொழியின் இலக்கியம் குறித்து பேசுவதும் இயல்பாகிறது. அதாவது இலக்கியம் குறித்து பேசாத மொழியின் உரையாடலிலும் சுவை இருப்பதில்லை என்பதோடு அவை முழுமையடைவதுமில்லை என்பதே நிதர்சனம். இலக்கியம் என்பது அத்தனை அவசியமானதா என்ற வினாவும் எழாமல் இல்லை. பள்ளிப் பாடத்திட்டங்களிலும் இலக்கியத்திற்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்படும் காரணமும் இதுதான். ஆகவே இலக்கியத்தின் வழியாக மட்டுமே ஒரு மொழியை நாம் செம்மையாகக் கற்கவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது என்பதும் உண்மை.

    ஆக, மொழியின் வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளுக்கு இலக்கியங்களையே முதன்மையாகக் கொள்ளப்பட வேண்டியதாகிறது. அந்த வகையில் இந்த இடத்தில் இலக்கியம் பற்றி குறிப்பிடும்பொழுது அதிகத்தரம் வாய்ந்த நூல்கள் என்ற வரையறைக்கு உட்படுத்தாது அனைத்துப் பொருட்களையும் சுட்டும் உரைநடை அல்லது செய்யுள் வடிவில் உள்ள நூல்களையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

    பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பின்னரே எளிய மனிதரும் புரிந்துகொள்ளும் வகையில், நொண்டிச்சிந்து, கட்டபொம்மன் கும்மி, ராமப்பையன் அம்மானை போன்ற இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வந்துள்ளதை அறியமுடிகின்றது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில், பாமர மக்களின் பேச்சுவழக்குகள் கொண்ட நாடகங்கள், புதினங்கள் ஆகியவற்றைக் காண்கிறோம். இவை பேச்சு வழக்கினை ஆராய்வதற்கு இன்றியமையாதன எனலாம். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் எல்லீஸ், கால்டுவெல் போன்றோர் எழுதிய சிறந்த நூல்களும் உள்ளன.

    வரலாறு என்பதும் காலத்தின் கண்ணாடி தான் என்றபோதும், இலக்கியத்தின் பரிமாணங்கள் அந்த வரலாற்றையே மாற்றக் கூடியதாகத் திகழ்கின்றது. அந்த இலக்கியம் பிரதிபலிக்கும், வாய்மொழி இலக்கியம், ஏட்டு இலக்கியம் என்று பல்வேறு முகங்கள் பன்முகச் சிந்தைகளை வெளிப்படுத்தும் ஆளுமைகளாகவும் அமைகின்றன.

    பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பன்னிரு திருமுறைகள் போன்ற இலக்கியங்கள் இத்தகைய ஆளுமைகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேற்குறிப்பிட்ட சங்க இலக்கிய நூல்களில், தமிழர்களுக்கு மட்டுமன்றி உலக மாந்தர் அனைவருக்குமான வாழ்வியல் நெறிகள் என்ற அறக்கோட்பாடுகளே தலையாய நோக்காக உள்ளது.
    குவலயக் குடும்பம் (Global Family) என்று இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிற உலகமயமாதல் தொடர்பான அணுகுமுறைகள் குறித்து நம் தமிழர்கள், பல நூற்றாண்டுகளுக்கும் முன்பாகவே,

    “யாதும் ஊரே யாவரும் கேளீர்”

    என்ற மாபெரும் தத்துவத்தைச் சொல்லிச் சென்றுள்ளனர். மிகப்பெரிய உயரிய வாழ்வியலை உணர்த்தக்கூடிய இத்தகைய அறநெறி உலகிற்கெல்லாம் பொதுவானதொன்றல்லவா.

    அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளில் வாய்மை, பொய்யாமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறன் இல் விழையாமை, புறங்கூறாமை, பயன்இல சொல்லாமை, புலால் மறுத்தல், ஈகை, கள்ளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை போன்ற அனைத்து சிறப்புக் குறிப்புகளும் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சுட்டியுள்ள வாழ்வியல் அறநெறிகள் ஆகும். இதுமட்டுமன்றி குறுந்தொகை, புறநானூறு போன்ற பாடல்களில் அரசியல், சமூக நலம் சார்ந்த பல அறநெறிகளும் சுட்டப்பட்டுள்ளன.

    “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே” – புறத்திணை பாடல் – 312

    ஒரு தனிமனிதர் தம் வாழ்வில் அமைதிபெற, பிறரிடம் வேண்டும் அனைத்துப் பண்புகளையும் தானும் பெற்றிருக்கவேண்டும் என எண்ணி வாழ்வதே அவர்தம் சிறந்த வாழ்வியல் அறநெறிகளாகின்றன. அந்த வகையில் சமூகத்தில் முழுமையும் மகிழ்ச்சியும், அன்பும், பண்பும், அமைதியும் நிலவ வேண்டுமெனில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும், ஒழுக்க நெறிகளையும் விதித்துக்கொண்டு அதை முழுமையாகப் பின்பற்றவும் வேண்டும். அதுவே எதிர்கால சமூகத்தின் அமைதிக்கும், ஆரோக்கியத்திற்கும் நாம் இன்று சரியான பாதையில் எடுத்து வைக்கக்கூடிய அடியாகவும் இருக்கும்.

    இதுபோன்ற கருத்தரங்கங்கள் மூலமாக இளைஞர்கள் மத்தியில் நற்சிந்தைகளுக்கான விதைகளை ஊன்றுவது சமுதாயத்திற்கும் செய்யும் சிறப்பான சேவை என்றே கொள்ளக்கூடும் என்பதால் இக்கருத்தரங்கம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற உளமார வாழ்த்துகிறோம்.

    பி.கு. “தமிழ் இலக்கியங்களில் பன்முகச் சிந்தனை” என்ற தலைப்பில் நாமக்கல், செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 27, 2018, நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கின் என் வாழ்த்துரை.

    Share
  • நீடிக்காத காதல்!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    உனது நாள் ஓடுது,
    உன் மனது வாடுது,
    நீ தேவை இல்லை என்பதால்!
    வஞ்சியின்  கனிவு மொழிகள் எனது
    நெஞ்சினில் ஊன்றிப் போனது!
    காலை எழும் மங்கை
    கழிப்பது தன் பொழுதை
    வாழ்வு விரைவது அறியாமல் போனாள்.
    தேவை யில்லை நீ யெனத்
    தெரிய வில்லை அவள் விழிகளில்!
    காதல் அடையாளம் எதுவும்
    காண வில்லை நானும்! 

    கண்ணீர்த் துளிகள் யாரை
    எண்ணி அழுதிடும்?
    நீ அவளை விரும்புவ துண்மை;
    அவளும் உனக்குத் தேவையே!
    தன் காதல் செத்த விட்ட
    தென்றவள் விலகிப் போயினும்,
    நம்ப வில்லை நீதான்!
    ஆயினும் நீ நினைத்துக் கொள்வது,
    அவள் உனைத் தேடுவதாய்! 

    ஆயினும் அவள் கண்ணுக்குள்
    நீயில்லை  தெரியுதா?
    நீடித் திருந்த காதல் உணர்வு
    ஓடிப் போனது புரியுதா?
    வீட்டுக் குள்ளே நீ!
    வெளியே செல்வது அவள்!
    அவள் சொல்வது,
    தனக் கொருவன் இருப்பதாய்!
    உனது நாள் ஓடுது!
    உன் மனது வாடுது!

     

     

     

    Share
  • Nature

    -Niveditha

    Caves dotted every inch of the land
    Filling its thirst with dew drops
    Flowers bloom with fragrance
    Attracting me from every view
    Green grass soft under my feet
    Crushing down with every step
    I wouldn’t mind if it rained
    I wouldn’t mind if it snowed
    At least I’m here in this place
    And that’s all I need
    For it fills my heart with joy

     

    Share
  • தமிழ்நாட்டு அரசியலில் ஒரு விடிவெள்ளி

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    இந்தியா சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அரசியலில் ஊழல் நுழைந்துவிட்டது என்று சொன்னால் அது பெரிய தவறான பிரகடனமாக இருக்க முடியாது.  தேசத் தந்தை காந்திஜியோடு சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களே ஊழல் புரிந்தார்கள் என்பது வேதனையன விஷயம்தான்.  புதிதாகச் சுதந்திரம் பெற்ற, வளர்ந்துவரும் ஜனநாயக நாடுகளில் இது தவிர்க்க முடியாதது என்று கூறுவோரும் உண்டு.  ஆனாலும் இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆகியும் ஊழல் ஒழியாதது மட்டுமல்ல, மிகவும் அதிகரித்திருக்கிறது என்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட.

     

    எல்லா மாநிலங்களிலும் ஊழல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அதைப் பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியாது.  ஆனாலும் தமிழ்நாட்டில் இருக்குமளவு வேறு எங்கும் இல்லை என்பது என்னுடைய கணிப்பு.  (வேண்டுமானால் பீகாரில் லாலு காலத்தில் தமிழ்நாட்டில் இருக்குமளவு இருந்தது என்று சொல்லலாமோ என்னவோ!)  நாங்கள் கடந்த நாற்பத்தைந்து வருடங்களாகக் கர்நாடகாவில் வாழ்ந்துவந்தாலும் கர்நாடக அரசியல் பற்றித் தெரிந்தது தமிழ்நாட்டின் அரசியலைப் பற்றித் தெரிந்ததைவிட குறைவுதான்.  ஒரு முறை கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது கர்நாடக அன்பர் ஒருவரிடம் ‘எடியூரப்பா பெரிய ஊழல் பேர்வழி இல்லை, அல்லவா?’ என்று கேட்டேன். உடனே அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.  பின் எடியூரப்பா பற்றி நிறையத் தெரிந்துகொண்டபோது அவர் எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்று தெரிந்துகொண்டேன்.  இருப்பினும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை யாராலும் மிஞ்ச முடியாது என்பதுதான் என்னுடைய இப்போதைய நிலைப்பாடு.

     

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் காலத்திலிருந்தே வேண்டியவர்களுக்குச் சலுகைகள் அளிப்பது என்பது இருந்துவந்திருக்கிறது.  தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின் கடைசிக் காலத்தில் ஊழல் தலையெடுக்கத் துவங்கிவிட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.  ஆனால் அது  ஆரம்பம்தான்.  ஊழலை உரம் போட்டு வளர்த்தது திராவிடக் கட்சிகள்தான்.  அண்ணாதுரை உயிரோடு இருந்து தமிழ்நாட்டு அரசியலை வழிநடத்தியிருந்தால் இந்த அளவு ஊழல் வளர்ந்திருக்காது என்பது என் ஊகம்.  அவருக்குப் பிறகு முதலமைச்சராகப் பதவியேற்ற கருணாநிதியின் காலத்தில் ஊழல் என்னும் செடி உரம் பெற்று செழிக்கத் தொடங்கியது.  பின் மரமாகி முழு வளர்ச்சி அடைந்தது பின்னால் வந்த ஆட்சிகளின்போதுதான்.  இப்போது இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு எதில் சிறந்து விளங்குகிறதோ இல்லையோ ஊழலில் கண்டிப்பாக முதல் இடம் வகிக்கிறது.  இந்தப் பெருமையை நமக்கு ஈட்டிக் கொடுத்தவர்கள் கடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டை ஆண்டுவந்தவர்கள்.   ஊழல் செய்த அரசியல்வாதிகளைத் ‘தெய்வமாக’ ஏற்றுக்கொண்டவர்கள் நம் தமிழ் மக்கள் மட்டும்தான்.  இதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது.  ஒரு சில அப்பாவி மக்களால் தெய்வமாக மதிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர் மறைந்ததும் தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் பிறந்தது என்று பலர் நினைக்கிறார்கள்.  ஊழல் செய்ய வெற்றிடமா என்று தெரியவில்லை!

     

    இப்போது அரசியலுக்கு நடிகர்கள் உட்படப் பலர் வந்திருக்கின்றனர்.  இவர்களில் கமலஹாஸன் குறிப்பிடத் தகுந்தவராக விளங்குகிறார்.  இது நாள்வரை அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருந்தபோதிலும் இப்போதாவது வந்திருக்கிறாரே என்று சந்தோஷப்படலாம்.  ‘உங்கள் கட்சியின் கொள்கை என்னவென்று?’ ரஜினியிடம் கேட்கப்பட்டபோது அவருக்குத் தலை சுற்றிவிட்டதாம்.  கட்சியின் கொள்கைகூட என்னவென்று இதுவரை சிந்திக்காதவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால்  அப்படி என்ன சாதித்துவிடப் போகிறார்?  கமலஹாஸன் அப்படியில்லை.  நன்றாகச் சிந்தித்துத் தன் கட்சியின் கொள்கை என்ன என்று தயார் நிலையில் வந்திருக்கிறார்.

     

    இலவசங்களால்தான் தமிழ்நாடு இப்படிச் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்ந்து இலவசங்கள் கொடுப்பதைவிட பிறருக்கு இலவசங்கள் கொடுக்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்துவேன் என்கிறார்.  அவர் செய்யப் போகும் காரியங்களில் முதன்மையாகக் குறிப்பிட்டது மக்களுக்கு நல்ல கல்வி கொடுப்பது.  எல்லோரும் நல்ல கல்வி கற்று அறிவு தெளிந்தால் ஊழலிலே ஊறிப்போன அரசியல்வாதிகளை ‘தெய்வம்’ என்று யாரும் குறிப்பிட மாட்டார்கள்.  ஒரு சமூகம் ஜனநாயக சமூகமாக விளங்க வேண்டுமென்றால் முதலில் எல்லோருக்கும் ஜனநாயகத்தைப் பற்றிய கல்வியைப் புகட்டிய பிறகுதான், எல்லோரிடையேயும் சிந்திக்கும் திறனை வளர்த்த பிறகுதான் ஜனநாயகத்தைப் புகுத்த வேண்டும் என்கிறார் சிந்தனையாளர் சாக்ரடீஸ்.  சாக்ரடீஸின் இந்த அறிவுரையைக் கமலஹாஸன் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதுபோல் தெரிகிறது.  தான் எல்லோருக்கும் தலைவன் என்பதைவிட எல்லோருக்கும் சேவை செய்யப் போகும்  ஊழியன் என்கிறார்.  மதுரையில் கட்சியைத் துவக்கிவைத்தபோது ஆர்.கே.நகர். தேர்தலை மனதில் கொண்டு மக்களைப் பார்த்து, ‘நீங்கள் உங்கள் வாக்கின் மதிப்புத் தெரியாமல் அதை விலைக்கு விற்றுவிட்டீர்கள்.  வாக்கு உங்களுடைய நலனைக் காக்கும் உங்களுடைய உரிமை.  அதை நீங்கள் விற்றால் ஜனநாயகம் குலைந்துவிடும்’ என்றார்.  என்னுடைய கட்சி உங்கள் வாக்குக்காக ஒரு பைசாவும் கொடுக்காது என்றார்.  இது ஜனநாயகக் கல்வியின் ஒரு பகுதி.

     

    தான் எந்த ‘இஸத்’தையும் பின்பற்றப் போவதில்லை என்றும் மக்களின் நலன்களே தன் குறிக்கோள் என்றும் கூறுகிறார்.  அதனால்தான் தன் கட்சிக்கு ‘மக்கள் நீதி மையம்’ என்று பெயர் கொடுத்திருக்கிறார்.  படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாலும் பல பட்டங்கள் பெற்றவர்களுக்கு நிகராக அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.  எம்.ஜி.ஆர்.போல் முதல் மந்திரியாகப் பதவியேற்றாலும் இரவில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லவில்லை.  (அவராலும் அப்படிச் செய்ய முடியவில்லை என்பது இன்னொரு விஷயம்.)  இனி மக்களுக்குச் சேவை செய்யும் நல்ல அரசியல்வாதியாக மட்டுமே இருப்பேன் என்கிறார்.  இவர் தலைமையில் தமிழ் மக்களின் நலன்கள் மத்திய அரசால் சூறையாடப்படாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

     

    இந்தியாவில் வடக்கில் ஒரு கெஜ்ரிவால் தோன்றியிருப்பதுபோல் தெற்கில் ஒரு கமலஹாஸன் தோன்றியிருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்வோம்.  தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்து இந்தியாவுக்கே ஒரு மாடலாகத் தமிழகம் விளங்கும் என்று நம்புவோம்.  தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று பெருமிதம் கொள்வோம்.

     

     

    Share
  • தனிப்பட்டவர்கள் உண்டாக்கிய குறியீட்டு முறைகள்

    -பேரா. முனைவர். வெ.இராமன்

    கணினியில் தமிழ்  தோன்றியது  1980  காலப்பகுதியில்தான். இக்காலப் பகுதியில் தான்  தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல தொழில் நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத்  தயாரித்து வெளியிட்டுச் சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான  இயக்கு தளங்களை  (Operating system) கொண்டிருந்தன. பின்னர்  மக் ஓ.எஸ். (Mac OS), மைக்ரோசாப்ட் டாஸ் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயங்கு தளமுடைய கணினிகள் கிட்டத்தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ்வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில்1. இவை வெளிவந்து கொண்டிருக்கும் போது  தமிழ்க்  கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.

    கணினிகள் பெரும்பாலும்  ஆங்கிலத்திலேயே  இயக்கக் கட்டளைகளையும் (operation commands) மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பயன் பொருட்களும் கணினியின் திறமையைப் பயன்படுத்திச் சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென்பொருள்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம்மென்பொருள்கள் மக்களின் பல தேவைகளை மிக எளிதாகச் செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.

    தமிழில் முதல் மென்பொருள்

    ஆங்கில மென்பொருள்களின் பயன்களைத் தமிழிலும் பெற முயன்றனர் தமிழ்க் கணினி வல்லுநர்கள். இம் முயற்சிகளின் பயனாக முதலில் தோன்றிய  மென்பொருள்களில்  ஆவணங்கள் எழுதும்  ஆதமி (Adami) என்பதும் ஒன்றாகும்2. இது  1984- இல் கனடாவில்  வாழும் முனைவர்  ஸ்ரீநிவாசன்  என்பவரால் உருவாக்கப்பட்டது3. இதன்மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது அக்காலத்தைய  IBM DOS 2.x  இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும்  MS Windows இயங்குதளத்தில் பயன்படக் கூடியதாகப் பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அந்நாளில் தமிழ்க் கணினிப் பயனாளர்களிடம் பிரபலமாக இருந்தன. இதே நேரத்தில் தோன்றிய இன்னொரு மென்பொருள் பாரதி என்பதாகும். இது சிங்கப்பூர்,  மலேசியா  ஆகிய நாடுகளில் பிரபலமாக இருந்தன.

    தமிழ் எழுத்துருக்கள் அறிமுகம்

    80களின் பிற்பகுதியில் திரு. அர்த்தனாரி (Mr. T. S. Arthanari) ஒரு தமிழ் எழுத்துருவை உருவாக்கியதாக அறியப்படுகிறது; ஆனால் மேலதிக விபரங்கள் பெற முடியவில்லை. 1990களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு (Tamil Fonts) அறிமுகப் படுத்தப்பட்டது4. ஆதமி (1984) உருவாகும் முன்னர்ப் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தியிருந்தார். இதே நேரத்தில் யூனிக்சு (UNIX) இயங்கு தளத்திலும் முதன்முதலாக முனைவர் பால சுவாமிநாதன் அவர்களும் அவர்தம் உடன்பிறந்தார் முனைவர் ஞானசேகர் அவர்களும் யூனிக்சில் தமிழுருக்கள் ஆக்கினர். அத்தோடு  LaTex  எழுதியில் உபயோகிக்க  wntamil  என்னும் எழுத்துரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  ஐ-ட்ரான்ஸ் (iTrans) என்ற நிறுவனமும் யூனிக்சில் தமிழில் எழுத வசதியாக எழுத்துருக்களையும், உதவிகளையும் வழங்கியிருந்தது5. இந்த எழுத்துருக்களைக் கணினியில் அடிக்க எழுத்துப்பெயர்ப்பு (transliteration) முறையே உபயோகிக்கப்பட்டது. அதாவது அம்மா என்பதை  ammaa  என்று கணினியின் விசைப்பலகையில் அடிக்க வேண்டும்6. எழுத்துருக்கள் உருவாக்கமும் எழுதும் முறையும் இலகுவாக இருக்க, கணினிகளில் மேலதிக மென்பொருள் தேவையின்றியே தமிழில் எழுதமுடிந்தது. இக்காலகட்டத்தில் பல எழுத்துருக்களைப் பல வல்லுநர்கள் உருவாக்கத் தொடங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளில் உபயோகத்திற்கு வந்து கொண்டிருந்தன.

    இவ்வெழுத்துருக்களில்  கனடாவில்  வாழும் முனைவர் விஜயகுமார் அவர்கள் ஆக்கிய நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் குறிப்பிடத்தக்கன. இவ்வெழுத்துருக்களுக்குக் கருநாடக இசை  இராகங்களின்  பெயர்களை இட்டிருந்தார். முனைவர் பெ குப்புசாமி அவர்கள் ஆக்கிய கல்வி என்னும் பயன் மென்பொருள்களுக்குப் பயன்படுத்திய எழுத்துருக்களும், முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆக்கிய மயிலையும் (Mylai)7, பாமினி (Bamini) 8போன்றவையும் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களால் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் எழுத்துக்கோர்ப்பு, கணிக்கும் அட்டவணை ஆக்கி (Word, Excel) ஆகிய மென்பொருட்களைத் தமிழில் உபயோகிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன. 

    பொதுத் தரம் இல்லா எழுத்துருக்கள்

    இப்படி உருவான எழுத்துருக்களினால் இன்னொரு சிக்கலும் இருந்தது. அதாவது, எழுத்துரு உருவாக்குபவர்கள் எந்த ஒரு  தரத்தையும்  (standards) கடைப்பிடிக்கவில்லை9. தரங்கள் ஏதும் வகுக்கப்படவில்லை. வெவ்வேறு எழுத்துருக்கள் வெவ்வேறு தனி முறைகளைக் கொண்டிருந்தன. இதனால், இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கிலமூல மென்பொருட்களிலும் நூறு விழுக்காடு சரியாக ஒத்தியங்கவில்லை.

    சில சமயங்களில், சில மென்பொருள்களிலும் தொல்லைகள் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பயன்பாடுகளான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறைவேற்றக் கூடியதாக இருந்தன.

    வலைக் கணினியில் (இணையத்தில்) தமிழில் மின்னஞ்சல்

    தொழில்நுட்பம் வளரும்போது, தனித்தனியாகத் தன் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணினிகள்  வலை வேலைப்பாட்டால் இணைக்கப்பட்டன. இணைக்கப்பட்ட கணினிகளும் அவற்றின் செலுத்துகைகளும் மனிதனின் தேவைகளை மேலும் செம்மையாக நிறைவு செய்யத்தொடங்கின. வலையில் இணைக்கப்பட்ட கணினிகள், இந்தக் காலகட்டத்தில் (90களில்)  தொடர்பாடல்  துணைக்கருவியாக நறுமணம்வீசத் தொடங்கின.  மின்னஞ்சல்  பயன்பாடு பெரும்புகழாகத் தொடங்கியது.

    யூனிக்சு (UNIX)  இயங்குதள  (operating system) கணினிகளில் மின்னஞ்சல் தொடர்புகள் முன்னரே இருந்தும்கூட, தனிக் கணினிகளில் (Personal Computers) மின்னஞ்சல் தொடர்பாடல் பரவலாகத் தொடங்கும்போது தான் தமிழைத் தொடர்பாடலில் பயன்படுத்தும் தேவை எழுந்தது. தனிப்பட்டவரின் எழுத்துருக்கள் சீர்தரம் இல்லாச் சிக்கல்களால் இந்த இடத்தில் கொஞ்சம் இடரத் தொடங்கின.

    தமிழ் மின்னஞ்சல் இடர்கள்

    தனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற்கேற்பப் பயன்பாட்டில் வைத்திருந்ததால், ஒருவர், தமிழில், தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும்போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும் அனுப்ப வேண்டும். அனுப்புபவர், பெறுநர் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்த வேளைகளிலும் அஞ்சல் தொடர்பு என்பது இலகான செயலாக இருக்கவில்லை. மின்னஞ்சல் மென்பொருளிலேயே தமிழில் அனுப்பப்படும் அஞ்சலை வாசிக்க முடியாது. வேறு செயலிக்கு வெட்டி ஒட்ட (cut and paste) வேண்டும்.

    அனுப்பப்பட்ட அஞ்சல், வலைக் கணினிகளிடையே பயணிக்கும் போது அந்தக் கணினிகள் ஏதாவது காரணத்தால் மடல் சரியாகப் போகிறதா எனச் சோதித்துப் பார்க்கும்போது அறிமுகமில்லாத எழுத்துருக்களைக் குப்பையெனக் கருதி எறிந்து விடக்கூடும் அல்லது சிக்கலைப் பெரிதாக்கக் கூடும். ஆக, ஒட்டுமொத்தத்தில் தமிழில் மின்னஞ்சல் தொடர்பு என்பது கடினமாகவே இருந்தது.

    தமிழில் மின்னஞ்சல் தீர்வுகள்

    மதுரை

    இப்படியான சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மென்பொருள் தோன்றியது. அது தான்  மதுரை (Madurai) என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு வேறுபாடான வேலையைச் செய்தது. அதாவது ஒரு  கோப்பில் தமிழ் ஆக்கங்களைத் தமிழ் ஒலிப்பை  இலத்தீன் (ஆங்கில) எழுத்துப்படி (எழுத்துப்பெயர்ப்பில்) எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு  மதுரை  கட்டளையை (command) அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். இது பெருமளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை, ஆனால் எளிதாகச் சின்னச் சின்னச் சொற்களைத் தமிழ்ப்படுத்த இது மிகவும் பயனுடையதாக இருந்தது.

    அத்துடன் ஒரு முக்கியக் குறிப்பு என்னவென்றால்,  மதுரையிலிருந்து கிடைத்த தமிழ் எழுத்து வடிவம் எந்தவொரு தமிழ் எழுத்துருவிலும் தங்கியிருக்கவில்லை. அவை  அஸ்கி  (ASCII) அமைப்பிலமைந்தவை. ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துகளின் உதவியால் பெறப்பட்டவையே இந்தத் தமிழ் எழுத்துகள். ஆதலால் இவ்வெழுத்து வடிவில், தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது 1990 களின் முற்பகுதியில் செயல்படத் தொடங்கி இருந்தது. இந்த மென்பொருளை ஆக்கியவர்  முனைவர் பாலா சுவாமிநாதன்  அவர்கள்.

    இதன் மூலம் கிடைக்கும் எழுத்துகள் கிட்டத்தட்ட இப்படித்தான் தெரியும்.

                |_| L |_| L |T

    படபடா என எழுதுவது கிட்டத்தட்ட இப்படியாக இருக்கும்.
    இதிலிருந்த பெரிய குறை. எழுத்துகள் பெரிதும் சின்னதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் இருந்ததுதான். அதனால் இந்த மென்பொருள் மக்கள் பயன்பாட்டில் பெரிதாக இடம்பெற முடியாமல் போய்விட்டது.

    தனித் தீர்வு நோக்கி – முரசு அஞ்சல்

    “தமிழ் மூலம் மின்னஞ்சல்” சிக்கல்களுக்குத் தீர்வு முயற்சிகளும், ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986ஆம் ஆண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால்  முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் இப்பொழுது இலகுவாக்கப்பட்டது.

    இந்தச் செயலியில் முக்கியமான கூறு விசைப்பலகை. இந்த மென்பொருளைத் தொடங்கிவிட்டு, ஆங்கில விசைப் பலகையினூடாகவே தமிழ்-ஆங்கில  எழுத்து பெயர்ப்பு  மூலம் தமிழை எழுத முடிந்தது. அத்தோடு இந்த விசைப்பலகையில் தமிழ்த் தட்டச்சும் முறையும் இருந்தது. இப்பொழுது, தமிழ்த் தட்டச்சு தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இலகுவாகத் தமிழை எழுதத் தொடங்கினர். அது மட்டுமல்ல, தமிழை எழுத, வாசிக்கத் தெரியாத தமிழ் படிக்காத மேதைகள் கூட (ஆங்கிலம் தெரிந்திருந்தவர்கள்) எழுத்துப்பெயர்ப்பைப் பயன்படுத்தித் தமிழில் எழுத முடிந்தது. அதை அவர்கள் வாசித்துப் பிழைதிருத்த முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

    முரசு அஞ்சல் வெளிவந்த மிக விரைவிலேயே,  யூடோரா (Eudora) என்ற மின்னஞ்சல் செயலி தமிழ் போன்ற பிற மொழி எழுத்துருக்களை உள்வாங்கி மின்னஞ்சல்களை எழுதி அனுப்பவும், படிக்கவும் கூடிய வசதிகளுடன் வெளிவந்து மின்னஞ்சல் தமிழை மேம்படுத்தியது.

    முரசு அஞ்சல் (Murasu Anjal), இணைமதி (Inaimathi)  மயிலை  (Mylai),  ஆவரங்கால் (Avarangkal) போன்ற எழுத்துருக்கள் இதில் முக்கியப் பங்காற்றின. இந்த எழுத்துருக்களும் கூட எந்தவொரு பொது ஒழுங்கையும் கடைப்பிடித்திருக்கவில்லை. இந்நேரத்தில்,  யுனிக்ஸில் அகரம் (akarm) என்ற செயலியும்,  மக்கிண்டாசில்  சில்க்கி  (SILKey) என்ற செயலியும் தமிழைக் கணினியில் ஏற்ற உருவாகிவிட்டிருந்தன.

    இது தவிர நளினம் (செல்லையா), கம்பன் (வாசுதேவன்), அணங்கு (குப்புசாமி), துணைவன் (ரவி) போன்றோரின் எழுத்துரு செயலிகளில் புழக்கத்தில் வரத்துவங்கின.

    இணைய யுகம் – வைய விரி வலை

    மின்னஞ்சல் தொடர்பாடல் (Communication) தமிழில் கைகூடலாகி வரும் நேரத்தில் இன்னொரு புரட்சிகரமான மாற்றம் கணினி உலகில் ஏற்படத் தொடங்கியது. இது ஒரு புது யுகத்திற்கும் வித்திட்டது. அது தான்  இணைய  யுகம். (Internet era) இணையத்தில், வைய விரி வலை  (world wide web) 1990 நடுப் பகுதியில்  கோபர் (Gopher),  மொசையிக் (Mosaic) என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்கள் உருவாகி வலைக் கணினிகளின் பாவனையை ஒரு படி உயர்த்தத் தொடங்கியிருந்தன. மிக விரைவாகவே இது ஆக்கம் அடைந்து  மீயுரைக்  (HTML) குறியுடன் “நெட்ஸ்கேப்” (Netscape) உலாவிகளில் இணைய உலா முழு வடிவம் பெற்று இணைய யுகமே தொடக்கமாகியது.

    சில இணைய தளங்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த நிலையில் உருவாக்கம் பெறத் தொடங்கின. தமிழர் தாயகங்களிலிருந்து தனிப்பட்ட எழுத்துருக்களிலும் பல இணைய தளங்கள் பெரும்புகழாகத் தொடங்கின.  தினமலர், ஆனந்த விகடன்,  குமுதம்,  வீரகேசரி  மற்றும் பல ஏடுகள், பருவஇதழ்கள் இணையத்தில் கால்பதித்துக் கொண்டன. ஒரு தடவை அவர்களின் எழுத்துருவைத் தனிக் கணினிகளில் இறக்கம் செய்து வைத்திருந்தால் போதும் அந்த இணைய தளங்களை எப்பொழுதும் வாசிக்க முடியும்.

    இணையத் தமிழ் முன்னோடி – நா. கோவிந்தசாமி

    முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த  நா. கோவிந்தசாமி. 1995ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation – Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன்முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.

    இயங்கு எழுத்துரு

    90 இறுதியளவில், பிற மொழி இணைய தளங்களைக் கருத்தில் கொண்டு, இயங்கு எழுத்துரு (dynamic font) என்ற எழுத்துரு பயன்பாட்டிற்கு வந்தது. இதைப் பிட்ஸ்ட்ரீம் (bit stream) என்ற ஒரு தனியார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன்மூலம் இணைய தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப்பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப்படையில், உபயோகிப்பாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணைய தளங்களைப் பார்வையிட முடிந்தது.

    இந்த இயங்கு எழுத்துருவைப் பயன்படுத்திப் பல தமிழ் மொழி இணையத் தளங்கள் அழகாக உருவாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில்,  மைக்ரோசாப்ட்  நிறுவனமும் இயங்கு எழுத்துருவுக்குக் கருவிகளை வழங்கியிருந்தது. காலப்போக்கில் இது நடைமுறை இழந்து வருவது தெரிகிறது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் பயன்படுத்த உருப்பெற்ற வண்ணமிருந்தன.

    தமிழ்.நெட்

    இணையப் பயனும் தமிழில் மின்னஞ்சல் கைகூடலான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில் தொடர்பாட வைத்தன.

    இந்நிலையில்,  1995  அளவில்,  ஆஸ்திரேலியாவில்  இருக்கும் திரு. பாலா பிள்ளை  என்பவர் ஒரு மடலாடற் குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஈடுபாட்டில் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணைய தளத்தைத் தொடங்கி அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழ்க் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடினர். தமிழும் தமிழர் சார்ந்த எல்லாச் செய்திகளுமே அங்கே அலசப்பட்டன. பல அறிஞர்களையும், வித்துவான்களையும் சந்திக்க வைத்து அவர்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்த தமிழ்.நெட் பெருமைக்குரியது. முரசு அஞ்சல் எழுத்துருவை ஒழுங்காகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது. இவ்வாறு பல்வகையான தனியாளர்களின் பங்களிப்புடன் தமிழ் எழுத்துருக்கள் கணினியில் வலம் வரத்தொடங்கின.

    *****

    குறிப்புகள்

    1. https://en.wikipedia.org/wiki/Personal_computer

    2. http://www.sivalingam.in/computer/basics/kaaladithadam.htm

    3. Ibid

    4.http://www.mypno.com/index.php?view=article&catid=49%3Aeduart&id=7495%3A2013-09-11-08-30-15&tmpl=component&print=1&page=&option=com_content&Itemid=95

    5. Ibid

    6. http://www.vallamai.com/?p=57199

    7. http://manikandanvanathi.blogspot.in/2012/04/blog-post.html

    8. Ibid

    9. கணினியில் தமிழ் நிகழ்வுகள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள், பக். 876 – 878

    10. “கணினியில் தமிழ் எழுத்துருக்களும், குறியீட்டு முறைகளும்” வெ.இராமன் (2016) மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடு.

    *****

    கட்டுரையாசிரியர்
    முதன்மையர், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641021
    மின்னஞ்சல்: raman600@gmail.com

    Share
  • மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 3

     

    இன்னம்பூரான்
    13 03 2018

     

    இனி விஷயத்துக்கு வருவோம். மதாபிமானமும், சுயமரியாதையும் வாழ்வியலின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி உடையவை. அவற்றை விலக்கி வாழும் திறன் சாத்தியமெனினும், மிகவும் சிலரே அவ்வாறு வாழ்வதை இயல்பாக வைத்துக்கொள்கிறார்கள். தேசீய அளவில் பார்க்கப்போனால், இங்கிலாந்தில் அத்தகைய வாழ்வியல் தென்படுகிறது. அமெரிக்காவில் மிகவும் குறைவு; ஏன்? அங்கு பைபிள் பெல்ட் என்று வருணிக்கப்படும் மாநிலங்களில் மதவெறி தென்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் அவரவர் போக்கை அவரவர்கள் கடைபிடிப்பதில் சிக்கல் ஒன்றும் இல்லை. ஹிந்து சனாதன தர்மமோ, கிருத்துவமோ, இஸ்லாமியமோ, நாத்திகமோ மூளைச்சலவையில் ஈடுபட்டால், அது நலம் பயக்காது.
    வாழ்வியலின் பரிமாணங்களில் மிகவும் உயர்ந்தது நன்னடத்தை. வாய்மை, நியாயம், சரியான அணுகுமுறை ஆகியவை அதில் அடங்கும். மதாபிமானம், சுயமரியாதை ஆகிவற்றை தவிர்த்து வாழக்கூட அவை உதவும். அண்ணல் காந்தி அதற்கு நல்லதொரு உதாரணம்; அவர் கூட தன்னை ஹிந்து என்று தான் அடையாளம் காட்டிக்கொண்டார். அந்த மதாபிமானம் அவருடைய வாழ்வியலுக்கு முட்டுக்கட்டை போடவில்லை. அந்த அணுகுமுறையை சிறிதேனும் கடைப்பிடிப்பது நல்லது.

    இத்தருணம் ‘அறிவியல்’ என்ற சொல்லின் எல்லையைப் புரிந்து கொள்வோம். அது ‘விஞ்ஞானம்’ என்ற சொல்லின் ஒரு பின்னம் எனலாம். விஞ்ஞானமே அறிவியலின் பின்னம் என்பதில் முரண் ஒன்றுமில்லை. உபனிஷத்கள், சித்தர் பாடல்கள், திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்கள் அறிவியல் இல்லை என்று பிரசாரம் செய்வது மதியீனம். அதே சமயம் இன்றைய விஞ்ஞான புரிதல்கள், நிரூபணங்கள் நிரந்தரமானவை அல்ல. விஞ்ஞானத்தின் தனிச்சிறப்பே திறந்த அணுகுமுறை. அதை தவிர்த்து விட்டு தனது அபிப்ராயங்கள் தான் இறுதி முடிவு என்று பறை கொட்டுவதை போல் வாழ்வியலுக்கு முரண் யாதுமில்லை.

    ஒரு சிறிய உண்மைச் செய்தி. பெங்களுரில் பேரின்பத்தைப் பற்றி, இன்பத்தைப் பற்றி, மனநிறைவைப் பற்றி ஒரு விஞ்ஞான ஆய்வு நடந்து வருகிறது, துறவிகள் வாழும் ஒரு பல்கலை கழகத்தில். அதன் பெயர் ஸாரா ஜே மடம் & பல்கலைக்கழகம். பெளத்த பிக்ஷுக்கள் அங்கு பெரும்பாலும் பிரார்த்தனை செய்த வண்ணம் இருப்பார்கள்; மதாபிமானம் நிறைந்த இடம் அது. பெளத்த மதம் சார்ந்த சடங்குகளுக்கு பஞ்சம் இல்லை. குரு-சிஷ்ய உறவு தான் அங்கு பிரதானம். அந்த பிக்ஷுக்கள் விஞ்ஞானத்தின் மீது தீராத காதல் கொண்டவர்கள்.
    அங்கு என்ன ஆய்வு நடக்கிறது என்பதை உரிய நேரத்தில் கூறுகிறேன்.

    (தொடரும்)

    …தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின் தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி… விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்…இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்…கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு…தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது… அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?…இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?…இயகை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாய்க் கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்… பார்ப்பனர் பார்ப்பனல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது… வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி . ’ யாதும் ஊரே யாவருங்கேளீர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்காலத் தமிழர் சிறுமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகுது…”
    தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள் ஜூலை 5: 1928, ஏப்ரல் 10,11,12: 1929 ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ’’மேல்கோட்டை செல்லத்தின்(செல்லப்பிள்ளை) கால்மாட்டைக் கன்றுண்ண,
    மால்பாட்டுக்(கு) ஓட்டம் மதியாது, -ஸோல்மேட்டை(ஆவினம்),
    விட்டாலும் கன்று, விடாது கருப்பனை;
    கெட்டாலும் விட்டலன் கால்’’….கிரேசி மோகன்….!

    “கேசவர்தாள் மாடாக, கேசவ்கைக் கோடாக,
    பாசிப்புல் மேடாக, பண்டரி , -வாசனவர்,
    வீடாக, வீற்றக்கல் ஓடாக, போற்றும்பா
    ஏடாகச், செய்பிறப்(பு) ஏழு”….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (265)

    இவ்வார வல்லமையாளராக தென்னிந்திய திரைத்துறை மையம் அமைப்பை தேர்ந்தெடுக்கிறோம்.

    இந்த அமைப்பு புதியதாக இளம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் பெண்களால் துவக்கபட்ட அமைப்பாகும். சென்னையில் சமீபத்தில் இயங்க துவங்கியுள்ள இந்த நிறுவனம் திரைத்துறை பெண்களுக்கு குரல் கொடுத்து செய்திகளில் இடம் பிடித்தது. இதன் தலைவி வைஷாலி சுப்பிரமணியன்

    பெண்கள் பாலியல் ரீதியாக பணியிடங்களில் துன்புறுத்தப்படும் விகிதம் மிக அதிகம் எனில் திரைத்துறையில் இது மிக அதிகம் எனும் குற்ற்சாட்டு உண்டு. செக்ஸ் டார்ச்சர் காரணமாக நடிப்பை விட்டுவிட்டு ஓடிய நடிகையர் ஏராளம். அதை எதிர்த்து குரல் கொடுக்கும் அமைப்பாக இது உருவெடுத்துள்ளதாக வைஷாலி கூறுகிறார்

    நடிகையர் என மட்டும் இன்றி சினிமாவில் நடிக்கும் துணைநடிகையர், பூக்களை கட்டி சினிமா கம்பனிக்கு விற்கும் பாட்டி, சினிமா கம்பனியில் பாத்திரம் கழுவும் பெண்கள் என அனைத்து மட்ட பெண்களுக்கும் குரல் கொடுக்கவும், நியாயமான ஊதியம் வழங்க கோரியும் போராட இருப்பதாக கூறுகின்றனர் இவர்கள்.

    பல படப்பிடிப்பு மையங்களில் நடிகையருக்கு போதுமான கழிப்பிடம், பாதுகாப்பு ஆகியவையே இல்லை என்றும் இரவு நேர ஷூட்டிங் முடிந்து பாதுகாப்பாக திரும்புவதே கடினம் என்றும் சினிமா படம் எடுக்கையில் உடல் உபாதை, மாதவிடாய், பேறுகால சிரமங்களுக்கு கூட எந்த தீர்வும் இல்லை என ஆதங்கபடுகின்றனர்

    பல சினிமா பிரபலங்கள் இவர்களின் இம்முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். “சினிமா நடிகையர் மேல் இனி யாரும் கைவைக்க முடியாது” எனும் போர்க்குரலை எழுப்பி பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வரும் இவ்வமைப்பினரை பாராட்டி இதுபோன்ற விழிப்புணர்வு அனைத்து துறைகளிலும் வரவேண்டும் எனும் நோக்கில் இவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி 151-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பலவண்ணங்களைச் சிதறடித்துச் சாலம் காட்டும் இந்தப் புகைப்படத்திலிருப்பது மலரா? இலையா? என்று மலைக்கவைக்கிறது இதனைப் புகைப்படம் எடுத்திருக்கும் கலைத்திறன்! இப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பனே இப்புகைப்படத்தை எடுத்தவருங்கூட. அவருக்கு என் நன்றியும் பாராட்டும்!

    நீலமும் பச்சையும் கலந்தொளிரும் இந்தக் கோலமிகு படத்திற்குக் கருத்தொடு கவிவடிக்கக் கவிவலவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களைக் கனிவோடு வரவேற்போம்!

    *****

    ”அக இருளாம் அறியாமையைப் போக்கி ஒளியேற்றிடும் கல்வி; கதிரவனைக் கண்டு காணாமற் போகும் பனித்துளிபோல் எதிரில் நிற்கும் இன்னலை இல்லாமல் ஆக்கிடும் கல்விதரும் நல்லறிவு” என்று படத்தில் காணும் புறஒளியோடு அறிவொளியேற்றும் கல்வியை ஒப்பிட்டுக்காட்டியுள்ளார் திரு. ஆ. செந்தில் குமார்.

    வாழ்வில் ஒளியேற்றும் கல்வி…!

    உதய வானில் சிறகடிக்கும் வண்ணப் பறவை போல…
    இதயம் கூட அமைதி அடையும் நல்ல நூல்களை நாட…!
    இதிகாசங்களும் ஆன்றோர் பலரும் காட்டும் வழி போல…
    எதிர்காலம் கூட வண்ணமயம் கற்ற வழி நிற்க…!

    புற இருளைப் போக்கிவிடும் ஆதவனைப் போல…
    அறியாமை அகஇருளை அகற்றிவிடும் கல்வி…!
    பிறவாமை வேண்டிநிற்கும் ஞானியரைப் போல…
    சிறப்புபல தந்திடுமே கற்கும் நல்ல கல்வி…!

    கதிரவனைக் கண்டுவிட்ட பனித்துளியைப் போல…
    எதிர்த்துநிற்கும் இன்னல்களைப் போக்கிடும் நல்லறிவு…!
    விதி வழியே சென்றிடுவோம் என்று சொல்லும் மனதும்…
    மதிநுட்பம் இருந்துவிட்டால் மாற்று வழியைத் தெரியும்…!

    மதயானை போன்றிருக்கும் மாந்தர்தம் மனதை…
    இதமாக்கி நெறிப்படுத்தி ஒளியேற்றும் கல்வி…!
    எதிரேறு பொறுத்தக்கல் ஆகின்றதோர் தெய்வம்…
    எதன்பொருட்டும் வருந்தாதோர் இலக்கடைவது திண்ணம்…!

    *****

    ”வாழ்வில் தலைநிமிர நல்ல நூல்களை நோக்கிக் குனி” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன் கனிவாய்.

    ஒளி பிறக்க…

    தலை குனி,
    நல்ல நூல்களை நோக்கி..

    ஒளி வட்டம்
    உன் தலையைச் சுற்றி
    வராவிட்டாலும்,
    உறுதியாய் நீ
    தலை நிமிர்வாய்,
    தானாய் ஒளி பிறக்கும்-
    வாழ்க்கையிலே…!

    *****

    ”சூடிக்கொள்ளவும் முடியாது; பாடிப்பரவி இறைவனுக்குச் சேர்ப்பிக்கவும் இயலாது! நெகிழி மலரே! மணமில்லா உன்னால் யாருக்கென்ன பலன்?” என்று மலரை நோக்கி வினாத் தொடுக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    நெகிழிப்பூவே உனக்குப் புகழில்லை புவியுலகில்!

    அன்றாடம் தன்னிதழ்கள் பிரித்து மலராது
    ……….அழுக்காகும் அழுகாத நெகிழிப் பூக்கள்..!
    குன்று போலக் கடைகளிலே குவிந்திடும்
    ……….கண்கள் கூசுமளவிற்கு நிறமிகள் உண்டு..!
    இன்புறும் அளவுக்கு மணமென்ப தில்லை
    ……….இல்லாளுமிதை ஒரு நாளும் விரும்பாள்.!
    என்று மிதற்கெனவே தனி மதிப்பில்லை
    ……….எதற்கு மிதன் உபயோகம் பெரிதுதான்..!

    வாடிவிடும் தன்மையோ இதற்கு இல்லை
    ……….வாழ்த்தக் கொடுப்பதற்கும் வழி யில்லை..!
    கோடீஸ்வரன் இறந்து விட்டால் அவன்
    ……….கழுத்தில் நீண்ட நாள் தொங்கிடுமன்றோ..!
    சூடிக்கொள்ளவும் முடியாது வாயினால்
    ……….பாடிபகவானுக்கு பூஜை செய்ய இயலாது..!
    ஓடிவரும் வண்டினங் களிதை அண்டாது
    ……….ஒளியூட்டினால் சற்றே அழகு மிகக்கூடும்..!

    செங்கதிரோன் ஆசியுடன் சோலையிலே
    ……….செழித்து சிந்தனை குளிரச்செயும் மலரே..!
    தங்கத்தைப் போலப் பெருமை உனக்கு
    ……….மங்காத புகழும் பெருமதிப்பும் உண்டாம்..!
    மங்கையர் சூடும் மலருக்கெது ஈடாகும்
    ……….மலரின் வாசனைக் கெதுவும் ஒப்பாகா..!
    அங்கத்தில் அணிய முடியா நிலையில்
    ……….அலர் மாலையில் சேருமா?..நெகிழிப்பூ..!

    *****

    மூச்சுப்பயிற்சியாம் வாசி யோகத்தில் தேர்ச்சி பெற்றோர், நீலமும் பச்சையுமாய் ஒளிக்குமிழிகளைத் தம் புருவ மத்தியில் காண்பதை, படத்தில் அணிவகுத்திருக்கும் அவ்விரு நிறங்களோடு அழகாய் இணைத்துப் பார்க்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

    ஒருபுனல் தம்பமிடை சிலம்பமும் எழுந்ததே!
    இருபுனல் கபாடமுள் உருபுனல் லலாடமும்

    வருபுனல் தடாகமுடி இருபுயக் கதம்பமும்
    தருபுனல் தெறிக்குமிழி இருநிறக் கபம்பமும்
    ஒருபுனல் தம்பமிடை சிலம்பமும் எழுந்ததே!

    *****

    புகைப்படத்தில் ஒளிரும் புறவண்ணங்களை அறிவொளியோடும் கல்வியோடும் யோகத்தோடும் பொருத்திப் பார்த்துத் திருத்தமாய்ப் பாப்புனைந்திருக்கும் பாவலர்களுக்குப் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது இனி…

    மன எழுச்சியே மகிழ்ச்சி

    செயற்கையான மலர்இதழ்கள்
    செய்துவைத்து அதன் மேலே
    சிறுமின்விளக்குகள்ஒளிபாய்ச்சிச்
    சிதறவைக்குது இருளைத்தானே!!
    மேல்நோக்கிஎழுகிற எண்ண அலை
    மேம்பட்டால் வராது வாழ்வில் பிழை!!
    ஒருநிலைப்படுத்தும்ஆற்றல் நிலை
    ஓங்கிடப்பெய்யும்பேரானந்த மழை!!
    இயற்கையான உடலுக்குள்ளும்
    இருட்டைவிரட்டிட மார்க்கமுண்டு!!
    உள்ளமென்னும் வீட்டுக்குள்ளே
    உதிரத்தில் உருவாகும் மின்சாரம்!
    நரம்புகள்வழியே அது பாய்ந்து
    இருதய பல்பை எரியவைக்கும்!!
    நாசம் செய்யும்கெட்டசிந்தனைகள்
    நன்மையை என்றும் கொடுக்காது!!
    நினைப்புக் கலப்பையில் ஏர் உழுது
    நிலமாம் மனசைச் சமன்படுத்தி
    நடுகிற நாற்று செயலாய் ஆகி
    நன்கு வளர்ந்து மகசூல் பெருகும்!
    வாழ்வுத் தோட்டத்தின் விளைச்சல்
    வருங்காலவசந்தத்தை வழங்கும்!!
    பொம்மைப் பூக்கள் போலன்றி
    உண்மைவாசம் வாழ்வில் வீசும்!!

    வெளிச்சத்தை புறத்தே மட்டுமன்று அகத்தேயும் கருவாக்கி உருவாக்கலாம். ஆம்! உளமெனும் வீட்டுக்குள் உதிரத்தில் உருவாகும் மின்சாரம் நரம்புகள் வழிப்பாய்ந்து இதய விளக்கை எரியவைக்கும்.

    மனத்தைச் சமன்படுத்தி, நற்சிந்தனைகளை நட்டுவைத்தால், வாழ்வெனும் தோட்டம் வாசமில்லாப் பொய்ப்பூக்களின் தொகுப்பாய் ஆகாமல், நேசத்துக்குரிய மெய்ம்மலர்களாய் மணம் பரப்பும்” என்று வாழ்வியல் பாடம் சொல்லும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஏ. ஆர். முருகன் மயிலம்பாடி இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டு!

     

     

    Share
  • SRI AUROBINDO

     

    SRI AUROBINDO or The adventure of consciousness -Satprem…..!
    ——————————————————————————————————————————————————————-
    HE is the CHILD of the waters, HE is the CHILD of forests,the CHILD of things stable,
    and the CHILD of things that move…..Even in the stones HE is there….!Rescue thy FATHER
    in thy knowledge keep him safe, thy FATHER becomes thy SON and bears thee….!

    “சேயவர் நீரிலே ,சேயவர் கானிலே
    சேயவர் சேதனஅ சேதனத்தில்; -தாயென
    சாலப் பரிந்தூட்ட சேயவர் ராட்சஸமாய்
    காலக் கணக்கில் குடிப்பு”….!

    “சேயவர் நீரிலே ,சேயவர் கானிலே
    சேயவர் சேதனஅ சேதனத்தில்; -மாயையாம்-
    மாறாத தோட்டத்தில் தீராத ஆட்டத்தை
    சீராக ஆடிடும் சேய்….!

    “சேயவர் நீரிலே ,சேயவர் கானிலே
    சேயவர் சேதனஅ சேதனத்தில்; -மாயையாம்-
    வித்தை புரிந்திடும் ,சித்தப்பா ஆக்கிடும்
    அத்தை முகத்தில் அசைந்து (மீசையாய் -அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா)….!

    “சேயவர் நீரிலே ,சேயவர் கானிலே
    சேயவர் சேதனஅ சேதனத்தில்; -மாயையாம்-
    விந்தை புரிந்திடும், வேடம் புனைந்திடும்
    தந்தை மகனாய் தரித்து (ஆத்மாநாம் புத்ரானாம்)….!கிரேசி மோகன் …..!

    HE is the PLAY….!
    HE is the PLAYER….!
    HE is the PLAYGROUND….!

    HE PLAYS for HIMSELF….!BAGAWAN SRI AUROBINDO….!

    ”ஆட்டம் அவர்தான், அதைக்காணும் ஆடியன்ஸ்
    கூட்டம் அவர்தான், களமுமவர், -நாட்டமோ
    சண்டிக் குதிரையாய் சச்சிதா னந்தராட்டம்
    ஒண்டிக்கே ஒண்டியாம் ஓய்’’….கிரேசி மோகன்….

    Evolyution is eternal….!
    The ADULT SOUL regains its origin….!

    The SON becomes once again THE FATHER…or more truly

    THE FATHER, who had become THE SON,becomes HIMSELF once more….!

    SRI AUROBINDO or The adventure of consciousness -Satprem…..!

    “தந்தை(ஆன்மா) மகனான(ஜீவன்) , தாத்பர்யம் என்னவென்றால்,
    விந்தை மகன்மீண்டும் தந்தையின் -சிந்தையில் ,

    வந்தான் உதித்திட, வெற்றிபரி ணாமத்தின்,
    முந்திடும் ஜீவன் மகான் (மகன் ஆன்ம மகானானார்)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”சிஸுபாலர்(கண்ணன்) காலில், பசுமாடு மேய்தல்,
    விசுவாஸம் இல்லை வயதில்; -நிஸிவண்ணன்
    தாள்பணிந் துகிட துவமேவ என்றுநிதம்
    கால்மாட்டில் மாடாய்க் கிட’’….கிரேசி மோகன்….!

    Share
  • புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனையா?

     

    பவள சங்கரி

    தலையங்கம்

    தொழில்நுட்பங்கள் முன்னேறி வருவதும், அதனால் தக்கவாறு பயன் பெறுதலும் பாராட்டிற்குரியது. ஆனால் அதே சமயம் அவை யார் யாருக்கு எந்த வகையில் பயனளிக்கக் கூடியது என்பதை நன்கு ஆய்ந்தறிந்த பின்பே அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் அவசியம். இல்லையென்றால் அவை தேவையற்ற விரயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான ஆதாரமே இந்தத் திட்டம். காரணம் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்புடையது அனைத்தும் இந்தியாவிற்கு ஏற்புடையதன்று. சமீபத்தில் சந்தைக்கு வந்துள்ள அனைத்து வாகனங்களும் நிரந்தர ஒளியேற்றப்பட்டு (ஹெட் லைட் எப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பது) வருகின்றன. இவை நமக்குத் தேவையா, இதனால் நமக்கு என்ன பயன் என்ற ஆய்வு நடத்தப்பட்டதா? மேலை நாடுகளில் அதிக நேரங்கள் பனியால் அல்லது இருட்டினால் சூழப்பட்டுள்ள சூழ்நிலைகள் இருக்கின்றன என்பதால் அங்கு இதுபோன்ற வடிவமைப்புடன் தயாரிக்கப்படும் வாகனங்கள் பயனுள்ள வகையில் அமையும். வருடத்திற்கு சுமாராகப் பத்து மாதங்கள், இரவு நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் பிரகாசமாக, சூரிய ஒளியில் மின்னிக்கொண்டிருக்கிற இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இது போன்ற வடிவமைப்புகளுடனான வாகனங்கள் நிச்சயம் பயனற்றது. இதனால் தேவையற்ற செலவுகளும், தேய்மானங்களும் ஏற்படும் வாய்ப்புதான் அதிகம். உற்பத்தியாளர்களின் இலாபம் கருதி மட்டுமே செய்யப்படும் செயல் திட்டம் இது. இதனால் வாகன உபயோகிப்பாளர்களுக்கு பணம் விரயமே தவிர வேறு எந்த பயனும் இல்லை. வாகன உற்பத்தியாளர்களும், அரசும் இது குறித்து தகுந்த ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (152)

     

     

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஜேக்சன் ஹெர்பி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (17.03.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • போதிதர்மரும் தங்கமீன்களும்

    என்னுடைய எட்டு வயது மகன் மாதம்தோறும் ஒன்றிரண்டு புத்தகங்கள் தவறாமல் வாசிக்கிறான். எந்த நேரமும் கதைகள், கட்டுரைகள், நாட்குறிப்பு, பாடல்கள், சொந்தக் கருத்தாக்கங்கள் என்று எந்நேரமும் எழுதிக்கொண்டு அவனொரு கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். செய்யும் கலையில் லயித்திருக்கும் அஃதொரு ஆழ்ந்த தியானநிலை என்பதை ஒரு படைப்பாளியாக அறிவேன். ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென்று என்னிடம் வந்து அவனுடைய கதைகளைப் புத்தகமாக்குவது பற்றிக் கேட்டான். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, “நீயே அவருக்குக் கடிதம் எழுது..” என்று கூறினேன். அவனாகவே அவருக்குக் கடிதமும் எழுதிவிட்டான். அவரும் பெருந்தன்மையோடு அந்தக் கடிதத்தை  நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதை வாசித்து விட்டு பேராசிரியை லோகமாதேவி அவர்களிடமிருந்து என் மகனுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் வந்தது. அதில் இரண்டு, மூன்று இடங்களில் கடிதம் எழுதியதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். அதற்குக் காரணம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று நான் முடிவெடுத்து ஒதுங்கியது. அவருக்கு எழுதிய பதில் கடிதத்தில், “சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினேனே தவிர, நண்பர்களிடமிருந்து விலகி இருக்கவேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல.” என்று தெரிவித்திருந்தேன். இந்தப் பதிவை எழுதுவதற்கும் அது ஒரு தூண்டுதலாக அமைந்தது. மேலும் சில நண்பர்களும் இதுகுறித்து என்னைக் கேட்டார்கள்.

    முகநூல் மட்டுமல்ல, குடும்பப் புலனக் குழுக்களில் [WhatsApp] இருந்துகூட வெளியேறினேன். அதற்குப் பல காரணங்கள். காணி நிலம் வேண்டுமென்பதில்லை என் ஆசை. விதைகள் வேண்டுமெனக்கு. ஆமாம், நான் ஒரு விவசாயியைப் போன்றவன். நேரமே என்னுடைய விதை. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அப்படியே என அறிவேன். சரியான நிலத்தில் உழுது, பயிரிட்டு அதில் விளைச்சலைக் காண விரும்புகிறேன். இணைய உலகம் 24 x 7 விழித்துக்கொண்டே இருக்கிறது. உலகமெங்கும் நண்பர்களிருக்கிறார்கள். காலையில் எழுந்தவுடன் கிழக்கிலிருந்து வந்திருக்கும் செய்திகளைப் பார்த்து ஒவ்வொன்றுக்கும் பொறுப்புடன் பதிலளிப்பது; முடிந்தால் ஓரிருவருடன் உரையாடல்கள். பிறகு அடித்துப் பிடித்துக்கொண்டு நாளைத் துவக்க வேண்டியது. அத்தோடு முடிந்ததா என்றா அதுவும் இல்லை. நாள் முழுவதும் ஒரு மணிநேரத்துக்கு ஒன்பது முறை புலனம் பார்த்துக்கொண்டு, எதைப் பற்றியாவது எவருடனாவது விவாதித்துக்கொண்டிருப்பது. இதனால் செய்யும் எந்தப் பணியிலும் கவனம் கூடவில்லை. என்னுடைய “கவன நீட்டம்” [Attention Span] வெகுவாகக் குறைந்து விட்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. ஒரு காலத்தில் புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்தால் உலகையே மறந்து வாசித்துக் கொண்டிருப்பேன். ஆனால் முகநூல் மற்றும் புலன உலகுக்குள் புகுந்ததிலிருந்து நாற்பது பக்கங்கள் வாசிப்பதற்குள் நான்கு முறை கைப்பேசியை எடுத்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்.

    மாலை வீடு வந்து சேர்ந்ததும் மீண்டும் முகநூல், புலனம் வழி  உரையாடல்கள் துவங்கிவிடும். தரமான புத்தகங்களைத் தேடிப்  பிடித்து வாசிப்பது, எழுதுவது, பியானோ வாசிப்பது, நண்பர்களிடம்   உரையாடல் (blood & flesh நண்பர்கள்,  சமூக வலைதள நண்பர்களல்ல), குடும்பம், தோட்டம், தொழில், யோகா என்று பல திறக்குகளில் இயங்கிக்கொண்டிருந்தவன், புலனத்தில் வரும் ஒன்றுக்கும் உபயோகமற்ற செய்திகளையெல்லாம் அதிதீவிரமாக வாசித்து அவற்றுக்கு என்னுடைய கருத்துக்களை மிகுந்த பொறுப்புணர்வுடன் சொல்லிக் கொண்டிருக்கும் நிலைக்கு என்னை அறியாமலேயே நகர்த்திச் செல்லப்பட்டுவிட்டேன். இரவு தூங்கப் போகலாம் என்று நினைக்கும் பொழுது, அமெரிக்கா விழித்துக்கொண்டு விடுகிறது. அவ்வளவுதான். முடிந்து போயிருந்த விவாதம் ஒன்று மீண்டும் தொடங்கும். நான் டின்னிட்டஸால் அவதியுற்றிருந்த காலங்களில் இந்த உரையாடல்கள் என் இரவைக் கடப்பதற்குப் பேருதவி புரிந்தது என்பது உண்மையென்றாலும், பேய்க்கு பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கதையாகிவிட்டிருந்தது என் நிலை. ஒரு முறை ப்ரசல்ஸ் மாநகரத்தில் கார் ஒட்டிக்கொண்டிருக்கும்போது, சிவப்பு சமிக்ஞை விழாதா என்று ஏங்கி, விழுந்தவுடன் குதூகலத்துடன் கைபேசியை எடுத்துச் செய்தி வந்திருக்கிறதா என்று பார்க்குமளவு அடிமையாகி விட்டிருந்தேன். இன்னொரு முறை நண்பர் கார்த்திக்கின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர்களுடன் பேசாமல் புலனம் வழி யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தேன். எரிச்சலடைந்த என்னுடைய தோழி திவ்யா, “மாதவன், போனை சற்று நேரம் தூரமாக வைக்கிறாயா?” என்று திட்டினாள்.

    “உன் நேரத்தை எப்படி நிர்வகிக்கிறாய்” என்று நண்பர்கள் வியப்புடன் கேட்குமளவிற்கு பல செயல்களில் என்னை உட்படுத்திக்கொண்டிருந்தவன் இப்படியொரு பரிதாபகரமான நிலைக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்று தீவிரமாக ஆய்ந்து பார்த்தேன். மேலும், எங்கள் வீட்டில் அடிக்கடி ஆய்வுக் கூட்டம் [Retrospective] நடத்துவோம். அதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அனைவரும் பச்சை நிறத் தாள்களில் வீட்டில் “நன்றாகப்  போய்க்கொண்டிருக்கும் விஷயங்களை” எழுத வேண்டும். சிவப்பு நிறத் தாள்களில் “மோசமாகப் போய்க்கொண்டிருக்கும் விஷயங்களை” எழுதவேண்டும். இறுதியாக நீல நிறத் தாள்களில்  “பிரச்சினைகளைக் களைவதற்கான யோசனைகளை” எழுத வேண்டும். ஒவ்வொரு முறையும் அதிகமான ரெட் கார்டுகளை வாங்குவது அடியேனே. என் மனைவியும், மகனும் ஒரு மூன்று மாத காலம் என்னை கிழித்து எடுத்துவிட்டார்கள். அவர்களுக்கான நேரமே ஒதுக்குவதில்லை. எந்த நேரமும் கைப்பேசியிலேயே கிடக்கிறேன் என்பது அவர்கள் வாதம். அது முற்றிலும் சரியே! என் நூலகத்திலிருக்கும் புத்தகங்களும், என் வீட்டுச் செடிகளும், மரங்களும்கூட இதையே என்னிடம் எப்படித் தெரிவிப்பது என்று எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. இல்லத்தில் “Sunday – no device day!” என்கிற முறையை அமல்படுத்தினோம். ஆனால் அதன் மூலம் நாங்கள் நினைத்த அளவுக்கு எந்த மாற்றமும் உண்டாகவில்லை. எனவேதான் முகநூல், புலனக் குழுக்கள் அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக்கொண்டேன். விலகுவதற்கான காரணங்களை விளக்கமாக எழுதி அத்தனை குழுக்களுக்கும் அனுப்பினேன். எல்லோரும் ஆதரவு தெரிவித்தார்கள். குழுக்களில் இருந்து மட்டுமே விடைபெறுகிறேன். ஆனால் எனக்குத் தனியாகச் செய்தியோ அல்லது மின்னஞ்சலோ அனுப்பலாம் என்று தெரிவித்தேன். அன்று வரை ரத்தமும் சதையுமாகப் பழகி, அவர்களுடனான உரையாடல்களுக்காக என் உடல், பொருள், ஆவி அத்தனையும் கொடுத்து வந்திருந்தேன். 😉 ஆனால் பாருங்கள், அன்றிலிருந்து இன்று வரை எனக்குத் தனியாக வந்த செய்திகளைக் “கைவிட்டு எண்ணிவிடலாம்”. என் இல்லாமையை பெரும்பாலானவர்கள் உணரவில்லை என்பது எனக்குத் தெளிவானது. ஆனால், என் தனிப்பட்ட நேரத்தின் பெரும் பகுதியை அவர்களுக்குத்தான் செலவழித்தேன். எனவே, சமூக வலைதளம் என்பது என்னளவில் ஒருவித மாயையே; போதையே. அஃதொரு மாயவலை.

    சிறுவயதில் அப்பா அடிக்கடி சென்னை மாநகருக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரை வழியனுப்பிவிட்டால், அதை முற்றிலும் மறந்து நண்பர்களுடன் விளையாட்டுகளில் மூழ்கிவிடுவோம். அவரும் அவருடைய பணிகளையெல்லாம் முடித்து விட்டு, ஓரிரு நாட்கள் கழித்து இரவு நேரத்தில் வீட்டிற்குத் திரும்புவார். காலையில் எழுந்தவுடன் அப்பா உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது கொண்டாட்டமாக இருக்கும். ஓடிச் சென்று அவருடைய பெட்டியைத் திறந்து என்ன வாங்கி வந்திருக்கிறார் என்று துழாவுவோம். அதில் ஒரு சுவாரசியம் இருக்கும். இப்போதெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் பரிமாற்றம் நடக்கிறது. இதை எங்கள் வீட்டு ஆய்வுக் கூட்டத்தில் ஒருமுறை பேசி அலசியிருக்கிறோம். அன்றிலிருந்து, நான் நண்பர்களைச் சந்திக்கச் சென்றாலோ, வெளியூர் அல்லது வெளிநாடு சென்றாலோ என் மனைவியிடமிருந்து எந்தச் செய்தியும் வராது. நானாகத் தொடர்புகொண்டால்தான் உண்டு.

    எவ்வளவு பிரச்சினைகளைத்தான் ஒரு மனிதன் தீர்த்துவைக்க முடியும் என்கிற அளவுக்கு பிரச்சனைகளின் குவியலாக இருக்கிறது சமூக வலைத்தளம். அங்கு தொடர்ச்சியாக நடந்து வரும் புரட்சிகளின் ஜ்வாலை என்னைச் சுட்டெரிக்கின்றது. எல்லாமே அவசர புரட்சிகள். இந்த வாரம் புதிதாக உதயமாகும் புரட்சி, முந்தைய வாரம் உதித்த புரட்சியை அஸ்தமிக்கவைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு மேல் எதுவுமே நீடிப்பதில்லை. ஏனெனில் அடித்தளத்தை மாற்றும் நோக்கத்துடன் நாம் செயல்படுவதில்லை. அப்படியே செயல்பட்டாலும் அதில் நீடித்த முயற்சிகள் இருப்பதில்லை. பல புரட்சிகள் வெறும் திசைதிருப்பல்களாகவே வருகிறது. புரட்சிக் கருத்து கூறுபவர்களிடம் தீர்க்கமாக எதையேனும் பரிந்துரைத்தால் மௌனமாகக் காணாமல் போய்விடுகிறார்கள். எனவே, அவற்றை வெறும் உணர்ச்சிகர எதிர்வினைகளாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். அதுதான் நம்முடைய படைப்பாற்றலுக்கு [Creativity] முழுமுதற்காரணம். ஆனால், நம்முடைய ஆகப்பெரும் குறைபாடும் இந்த “உணர்ச்சிவசப்படுதலே”. அதனாலேயே பலமுறை சமநிலையை இழக்கிறோம். அதுசார்ந்த விழிப்புணர்வும் நமக்கு இல்லை. உணர்ச்சிகளின் மீது கொஞ்சம் கண் வையுங்கள் என்று பேசினால் அதற்கும் கொந்தளிக்கிறார்கள். இதையெல்லாம் விமர்சிக்கும் அதே சமயம், புதிய மாற்றங்களை வரவேற்பவனாகவும், ஒரு தொழில்நுட்ப வல்லுநராகவும், சமூக வலைத்தளங்களை முற்றிலும் வேண்டாம் என்றும் கூறமாட்டேன். அவற்றை உபயோகிக்கும் விதம், செய்திகளை எதிர்கொள்ளும் விதம் மற்றும் உபயோகிக்கும் காலஅளவு போன்றவை  பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே கூறுகிறேன்.

    இரண்டு வருடங்களுக்கு முன்பு நானேகூட முகநூலைப் பயன்படுத்தி வெள்ள நிவாரண நிதி திரட்டி சென்னைக்குக் கொண்டுவந்தேன். ஆனால், எனக்கு நெருங்கிய வட்டத்திலேயே என்னுடைய சாரதி, பணியாளர்கள், உற்றார், சுற்றார், என்று அடிப்படைத் தேவைகளுக்காக அன்றாடம் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுதற்கான வல்லமையையே முழுவதும் பெற்றுவிடாத நிலையில், பெயர் தெரியாதவர்களுக்கு உதவி புரிவது எனக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. அதையும் அவர்களை அருகில் வைத்துக்கொண்டே செய்யும்போது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பெயர் தெரியாதவர்களுக்கு உதவி செய்யவேண்டாமென்பது என்னுடைய கருத்தல்ல. சுற்றி இருப்பவனின் கண்ணீருக்கு நெஞ்சைக்  கல்லாக்கிக்கொண்டு, எங்கோ இருப்பவனுக்கு அழுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதே என் மனசாட்சி என்னிடம் கேட்கும் கேள்வி. அதுபோன்று கன்னத்தில் அறையும் விதமாக சில நிகழ்வுகள் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு அலைந்தபோதே நடந்திருக்கிறது. அதைத்தான் நான் மாயை என்பது. மேலும், சமூக வலைத்தளங்களில் நடக்கும் பல போராட்டங்களுக்கு வெறும் தார்மீக ஆதரவை மட்டும் தந்துப் புரட்சி செய்துகொண்டிருப்பதும் என்னுடைய குற்றவுணர்வை அதிகப்படுத்துகிறது.

    இன்னொன்று – எல்லாவற்றுக்கும் கருத்து கூறவேண்டிய சமூக அழுத்தமும் அங்கு அதிகமாக இருக்கிறது. கருத்து கூறாதவனை உணர்ச்சியற்றவனாக பாவிக்கும் மனநிலையும் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கருத்துக்கூறாதவன் செய்துகொண்டிருக்கும் அரிய பல சமூகப் பணிகள் குறித்து இமியளவும் அப்படி விமர்சிப்பவர்களுக்குத் தெரிந்திருக்காது. இவையனைத்துக்கும் மேலாக நான் ஏற்கனவே சொன்னதுபோல் எனக்கு என் நேரம் வேண்டும். இணைய உலகில் நடந்துகொண்டிருக்கும் எல்லாவற்றையும் சிறிது நேரம் மறந்து, கண்களை மூடி, மனதைச் சற்று அமைதிப்படுத்தி, சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனித்தீர்களேயானால் நான் கூற வருவதில் இருக்கும் உண்மை புலப்படலாம்; நியாயம் புரியலாம்.

    தற்போதெல்லாம் நான் செய்தித்தாள்களைக்கூட அவ்வளவாக வாசிப்பதில்லை. செய்திகளுக்கா பஞ்சம் நம்மிடம். அன்றாடம் ஏதாவது ஒரு செய்தி; ஏதாவது ஒரு பிரச்சினை. வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் முன்னெப்போதைவிடவும் தற்போது உலகம் அமைதியாகத்தான் இருக்கிறது என்கிற நேர்மறைச் சிந்தனை கொண்டவன் நான். முன்பெல்லாம் செய்திகள் வரலாறுகளான பிறகே நமக்குத் தெரிய வரும், அதனால், Ignorance was bliss. ஆனால் இப்போதெல்லாம் ஆயிரம் செய்திகள் அடுத்தடுத்த நிமிடங்களிலேயே அதிரடியாக அடுப்பங்கரைக்கும், படுக்கையறைக்கும், அவ்வளவு ஏன் கழிப்பறை வரை நம்மைத் தேடி வந்து தாக்குகிறது.  நம்மைச் சுற்றி நடக்கும் “முக்கியமான விஷயங்களை”, “அவசியமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளைப்” பற்றிய விழிப்புணர்வைக் கொன்றழித்து விட்டு, ஒரு மாய உலகில் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன பெரும்பாலான செய்திகள். நாமறியாமலேயே நாமெல்லோரும் மனநோயாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் வலி மிகுந்த உண்மை.

    செய்திகள் வேண்டாம் என்று கூறவில்லை. தேவையான செய்தி, தேவையற்ற செய்தி எவை என்பதை இனங்காண முயல வேண்டும்; முன்னுரிமைப்படுத்தவேண்டும். ஆனால், இன்றைக்கு முக்கால்வாசி செய்திகள் சந்தேகமில்லாமல் Toxic-ஆக இருக்கிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் வலம் வரும் மதம், அரசியல் சார்ந்த நச்சுத்தன்மை வாய்ந்த செய்திகளும், அது சார்ந்த சண்டைகளும், சச்சுரவுகளும் பெரும் அச்சுறுத்தலைத் தருகின்றன. நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்கூட வெறும் முகநூல் சண்டையில் பிரிந்துபோனதைப் கண்ணுற்றிருக்கிறேன். இதுபோன்ற நச்சுத்தன்மை வாய்ந்த செய்திகளுக்கு ஏன் மனிதர்கள் இரையாகிறார்கள்? ஒரு நாளைக்கு 4 செய்திகள் வாசிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடத்திற்கு ஆயிரத்து ஐநூறு செய்திகள். இதில் எத்தனைச் செய்திகள் நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப் பயன்பட்டிற்கும், எத்தனை பேர் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுத்த உதவியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றுகூட இல்லை.

    ஒரு சில தேர்ந்தெடுத்தத் தளங்களை மட்டும் தொடர்ந்து வாசிக்கிறேன். இது தவிர தேவையான செய்திகள் நம்மை எவ்வழியிலேனும் வந்தடையும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மற்றபடி புத்தகங்கள் போதுமெனக்கு. கடந்த ஐந்து வருடங்களில், நான் அதிகமான புத்தகங்கள் வாசித்த வருடம் கடந்த வருடமாகத்தான் இருக்கும். எண்ணற்ற புத்தகங்கள். அதில் ஒரு முக்கியமான புத்தகமாக கால் நியூபோர்ட்டினுடைய “DEEP WORK”  புத்தகத்தைச் சுட்டுவேன். என்னுடைய அலுவலக நூலகத்தில்தான் முதன்முறையாக இந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். “DEEP WORK” என்கிற தலைப்பு என்னை மிகவும் கவர்ந்ததால், அதை எடுத்துப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். அப்போதைய என்னுடைய சிந்தனைகளுக்கு இந்தக் கருத்தாக்கம் ஒத்துப்போனதால், அன்று மாலையே அந்தப் புத்தகத்தை வாங்கினேன். கவனச்சிதைவு நிறைந்த இந்த உலகில் நாம் அனைவருமே நுனிப்புல் மேய்பவர்களே. செய்யும் தொழிலில், செயலில், கலையில் “தேர்ச்சித்திறத்தை” [Mastery] அடையவேண்டுமென்றால், சித்தி கிட்டவேண்டுமென்றால் இந்த “DEEP WORK” மிகவும் அவசியம். நுனிப்புல் மேய்வதன் மூலம் எதிலும் MASTERY அடையமுடியாது. இயந்திரம் போன்று மாறுதல் இல்லாத, சுவையற்ற பணிகளை பெரும் சலிப்புடன் வாழ்க்கை முழுமைக்கும் செய்துகொண்டிருக்கவேண்டியதுதான். கால் நியூபோர்ட், கவனச்சிதைவுகளுக்கு மத்தியில் எதிலும் ஆழ்ந்து செயல்படுவதன் அவசியத்தை எடுத்துரைத்து, அதை அடைவதற்கு சில விதிகளை முன்வைக்கிறார். அதில் மூன்றாவது விதி என்ன தெரியுமா? “சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுங்கள்!” [Quit Social Media] என்பது.

    கடந்த ஜனவரி மாதம் என்னுடைய பத்தாம் வகுப்புத் தோழர்கள் அவர்கள் உருவாக்கியிருக்கும் புலனக் குழுவில் என்னை இணைத்தார்கள். என்னை அந்தக் குழுவில் அவர்கள் இணைப்பது இது இரண்டாவது முறை. மறுப்பதற்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. அடுத்த வருடத்தோடு நான் பத்தாம் வகுப்பு படிப்பு முடிந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிறது என்று நண்பனொருவன் நினைவுபடுத்தினான். ஒன்றிரண்டு குழுக்களில் இருப்பதில் பிரச்சினையில் இல்லை. பல குழுக்களில் இருந்தால் அது நம் நேரத்தைத் தின்றுவிடும். ஆனால், அதற்கென்று குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கிவிடவேண்டும். அதிக நேரம் செலவழிக்கக்கூடாது. நான் பகிரும் தகவல்களின் மூலம் அவர்களுக்கு ஏதெனும் பயனிருக்கிறதா என்று கணக்கெடுப்புகூட நடத்தினேன். பெரும்பாலான புலனக் குழுக்களில் யாரும் அவர்களைப் பற்றி பேசிக்கொள்வதில்லை. மீம்ஸ்களிலும், பயனற்ற துணுக்குகளிலும் நேரத்தை வீணாக்குகிறார்களே என்று மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு மணித்துளியும் ஒரு விதையன்றோ? அத்திப் பூத்தாற்போல சில சமயங்களில் யாரேனும் மலரும் நினைவுகளைக் கொண்டுவருவார்கள். ஆனால், நான் ஏற்கனவே கூறியது போல் என்னுடைய நிலம் பெரியது; விதைகள் குறைவு. என் பட்டியலில் இருக்கும் விஷயங்களைச் செய்து முடிப்பதற்கு நேரமே போதவில்லை. இப்போது இந்தக் குழுவில் என்னுடைய இயக்கம் சற்று அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. நான் ஒரு extrovert! மற்றவர்களிடம் பேசுவதன் மூலமாகவே என்னுடைய உற்சாகத்தையும் ஆற்றலையும் பெறுகிறேன். ஆனால், அவர்கள் எல்லோருமே நேரில் வந்து உரையாடினால் அதைவிட மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்த முறை இந்தியாவுக்கு செல்லும்போது அவர்களில் பெரும்பாலானவர்களைச் சந்திக்க இருக்கிறேன். அதன் பிறகு விலகலாம் என்றிருக்கிறேன். தற்போதைக்கு நட்புகளின் சிந்தனைக்கு முக்கியமான சில விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகக் குழுவில் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

    சில நாட்களுக்கு முன்பு என்னுடைய மனைவியிடம் “லூவன் நகரில் இருக்கும்போது நிறைய எழுதினேன். ஆனால் இப்போது இங்கே தீனன் நகரம் வந்த பிறகு அந்த அளவுக்கு எழுத முடிவதில்லை.” என்று கூறினேன். அதற்கு அவள், “அப்போதெல்லாம் நீ அடிக்கடி பேருந்திலும், இரயிலும் பயணிப்பாய். சுற்றி நடப்பதை அவதானித்து, மாலை வீட்டுக்கு வந்ததும் சொல்வதற்கு விஷயங்கள் உன்னிடம் ஏராளம் இருக்கும். இப்போதெல்லாம் தனியாகக் காரில் செல்கிறாய். காரணம் அதுவாகக்கூட இருக்கலாம்.” என்றாள். அவள் கூறியதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. என்னுடைய சக பயணிகளை நான் அவதானித்ததை வைத்து நான் எழுதிய சிறுகதைகளே நான்கைந்து தேறும். மாறாக காரில் செல்லும்போது நிஜ உலகத்திடமிருந்து தொடர்பு அறுந்துவிட்டதைப்போல உணர்ந்திருக்கிறேன். நெடுஞ்சாலைகளில் பலவித வாகனங்களையும் சிவப்பு விளக்குகளையும் தவிர வேறெதையும் பார்க்கமுடிவதில்லை. அதிலென்ன சுவாரசியம் இருக்கிறது.  இரத்தமும் சதையுமாக நம்மைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும் நிஜ மனிதர்களின் தொடர்பைத் துண்டித்துவிட்டு வேறு உலகில் சஞ்சாரம் செய்து அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதும் அதைப் போன்றதே. எப்படி இணையத்தில் வாசிப்பது ஒரு  சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் வாசிப்பதற்கு ஈடாகாதோ, அதுபோலவே, சமூக வலைத்தளங்களில் லைக் இட்டுவிட்டு உரையாடிக்கொண்டிருப்பது என்பது, ஒரு நண்பனுடன் காலாற நடந்துச் சென்று தெருமுனையில் தேநீர் பருகிக்கொண்டே உரையாடுவது போலாகாது.

    அதெல்லாம் சரி, இந்தப் பதிவுக்கும் “போதிதர்மரும் தங்கமீன்களும்” என்கிற தலைப்புக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதுதானே? விஷயத்துக்கு வருகிறேன். ஒரு வருடத்துக்கு முன்பு டாக்டர் எரிக் தோபோலுடைய “The Creative Destruction of MEDICINE” என்கிற புத்தகத்தை வாசித்தேன். அதில் எரிக், தொன்னூறுகளில் 12 நொடிகளாக இருந்த  மனிதனுடைய “கவன நீட்டம்” தற்போது 8 நொடிகளுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தங்கமீன்களின் கவன நீட்டமான 9 நொடிகளைவிடவும் குறைவு என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு. இந்த ஆராய்ச்சியே தவறு என்றுகூட ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆராய்ச்சி நமக்கு முக்கியமில்லை. ஆனால் இதை வாசிக்கும்போது எனக்கு பௌத்தத் துறவியான போதிதர்மர் நினைவுக்கு வந்தார். மீன்தொட்டியில் இருக்கும் தங்கமீன்களைப் பார்த்திருக்கிறீர்களா? உயிரோடு இருக்கிறதா, இல்லையா என்று சந்தேகம் தோன்றுமளவுக்கு, தியானநிலையில் இருக்கும் போதிதர்மரைப் போன்று முண்டைக்கண்கள் எதையோ உற்று நோக்கிக்கொண்டு அசைவற்றுக் கிடக்குமவை. மீன்தொட்டியைச் சற்று லேசாகத் தட்டினால் போதும், அந்தக் கணமே திடுக்கிட்டு, வெடுக்கென்று திரும்பி சடுதியில் ஓடி ஒளிந்துகொள்ளும். அதற்கு மாறாக, குகைச்சுவரை உற்று நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்த போதிதர்மரைக் கயிற்றால் கட்டி இழுத்தாலும் மனிதர் அசரவில்லையாம். அது ஒரு “DEEP WORK” நிலை. சமூக வலைத்தளம் ஒரு மீன்தொட்டி போன்றதே. அதில் முண்டைக்கண் துருத்திக்கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றன நம்முடைய மனங்கள். தொட்டியை டொக்கென்றும், டக்கென்றும் தட்டி கவனத்தைத் திசைதிருப்புவதற்கென்று ஒரு கூட்டமே அலைந்துகொண்டிருக்கிறது. அவர்களின் தட்டல்களுக்காகவே காத்துக்கொண்டிருந்தது போன்று, எதிர்ச்செயலாய் திடுக்கென்றும், வெடுக்கென்றும், நடுக்கத்துடன் இங்குமங்கும் அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன தங்கமீன்களாய் நம் மனங்கள்.

    Share