பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – பகுதி 2

-பேரா. பீ.பெரியசாமி

 1:1:12. மெய்யே என்றல்

மெய்யே என்றலென்பது, “உரைத்த மாற்றத்தை மெய்யேயெனக் கூறுதல்” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “பொய்யை மெய்யென்று துணிதல்” (பேரா.,மெய்.22). எனவும், “இது முன்னதற்கு மாறாகப் பொய்ப்பினும் தலைவன் சொல் மெய்யெனத் துணியும் தலைவியியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவன் தன்னிடம் சொன்ன பொய்யை மெய்யாகக் கருதல். இது பெரும்பாலும் தலைவன் வாயில் வேண்டி நிற்கையில் அவன் சொல்லும் பொய்ம்மொழிகளின் மேல்வரும் மெய்ப்பாடு.” இராசா,மெய்.22) எனவும், “தலைவன் மாட்டுப் பொய்ம்மை நிகழினும் தன் காதன் மிகுதியான் அதனை மெய்ம்மையாகக் கருதிக் கொள்ளுதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். முன்னர் தலைவன் கூறும் மெய்ம்மைகளைப் பொய்யெனக் கொண்ட தலைவி. இங்ஙனம் பொய்ம்மையை மெய்யே என்று காதல் மிகுதியால் கொள்ளுதலே மெய்யே என்றலாகும். இதனை விளக்க இளம்பூரணர், குறுந்.121 ஆம் பாடலும்; பாலசுந்தரம், குறுந்.21 ஆம் பாடலும்;  தாசன், குறுந்.121, 21 ஆகிய பாடல்களையும்;  பாரதி, குறுந்.21, 288 ஆகிய பாடல்களும்; மேலும் பேராசிரியர், பாரதி, குழந்தை ஆகியோர்,

கழங்கா டாயத் தன்றுநம் மருளிய
பழங்கண்
ணோட்டமு னலிய
வழுங்கின
னல்லனோ வயர்ந்ததன் மணனே.” (அகம்.66)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், கழங்காடலை ஆடும் நம்மாயத்தார் நடுவே அன்று நமக்கு அருளிய பழங்கண்ணோட்டம் தன்னை வருத்தலால், செய்த தன்மணத்தைச் சிறிது தவிர்த்தானல்லனோ என பொய்யை மெய்யாகக் கொண்டாள் தலைவி. இதனை, “இன்பத்தை வெறுத்தல் என்னுஞ் சூத்திரத்து, ‘மெய்யே யென்றல்’  என்பதற்குப் பொய்யை மெய்யென்று கூறுதல் என்று பொருள்கூறி அது, ‘கழங்கடாயத்து …………………………………………. அயர்ந்தனன் மணனே’; என்பது: தானே தன் மகனை வாயில் கொண்டு புக்கானாயினும், அதனைப் பழங்கண்ணோட்டமும் நலிதரப் பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்து கோடலால் அப்பெயர்த்தாயிற்று என்றார் பேரா.” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை, ப.159) என ந.மு.வேங்கடசாமி தமது அகநானூற்று உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

1:1:13 ஐயஞ் செய்தல்

ஐயஞ் செய்தலென்பது, “தலைவன் குறிப்புக் கண்டு ஐயப்படுதல்.” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “இது, காதல் மிகையாற் கடுக்குமியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும், “நம்மை வரையாது விடுவாரோ என வாளாதே ஐயம் செய்தல். வரையாது – மணக்காது. வாளா – சும்மா.” (குழந்தை, மெய்.22). எனவும், “ ‘நம்மை இம்மைப் பிறப்பினுள் துறப்பார் கொல்’ எனத் தலைவி காரணமின்றி ஐயங் கொள்ளுதல்.” (இராசா, மெய்.22).எனவும், “தலைவன் சொல்லையும் செயலையும் ஐயுற்றுக் கருதுதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். ஐயஞ் செய்தலென்பது தலைவனின் செயலைக் கண்டு அவன் தன்னை மணக்காது போய்விடுவானோ? என ஐயுறுதலாகும். இதனை விளக்க இளம்பூரணர், பாலசுந்தரம், தாசன் ஆகியோர் கலி.4 – ஆம் பாடலையும்; பேராசிரியரும் குழந்தையும், கலி.33 ஆம் பாடலையும்; பாரதி கலி.4, 24 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:14. அவன்தமர் உவத்தல்

அவன்தமர் உவத்தலாவது, “தலைவன் தமரைக் கண்டவழி உவத்தல்.” (இளம்.,மெய்.22). எனவும், “அவன் தமரைக் கண்டு உவந்தது. இது முனிவெனப் படாவோவெனின், அது தலைமகனைப் புலந்தாற்போல்வதோர் முனிவாயினல்லாது பகைப்பட நிகழாக்குறிப்பெனப்படும்; அல்லாக்கால், அது பெண்டண்மையன்றாமாகலின்.” (பேரா.,மெய்.22). எனவும், “தலைவனுடைய தமரான பாணன் முதலியோரைக் கண்டு மகிழ்தல். தமர்-சுற்றம்.” (குழந்தை, மெய்.22). எனவும், “தலைவனைச் சார்ந்தாரைக் கண்டுழியும் அவர் சொற்கேட்டுழியும் உளம் மகிழ்தல். (எ-டு) வந்துழிக் கண்டுகொள்க. அவன் தமரேயன்றி அவன் நாட்டுப்பொருள் முதலியவற்றை உவத்தலையும் இதன்கண் அடக்கிக் கொள்க.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அவன்தமர் உவத்தலென்பது, தலைவனின் உறவினர்களையும் அவன் நாட்டுப் பொருளையும் கண்டவழி மகிழ்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.83-ஆம் பாடலையும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர், குறுந்.361 – ஆம் பாடலையும்;  பாரதி கலி.82 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

 1:1:15. அறனழித்துரைத்தல்

அறனழித்துரைத்தலென்பது, “அறத்தினையழித்துக் கூறுதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “அறனழிய வெறுப்பது போல வெறுத்துக் கூறல்.” (பாரதி.,மெய்.22) எனவும்,  “பிரிவுத் துன்பத்தான்  உளம்நொந்த தலைவி தலைவன் முதலானோரிடத்து அறமில்லை என வெறுத்துப் பேசுதல்.” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இளம்பூரணர், தாசன், இராசா, பாரதி, பாலசுந்தரம் ஆகியோர் இம்மெய்ப்பாட்டினை அறனழித்துரைத்தல் எனவும், பேராசிரியர், குழந்தை ஆகியோர் அறனளித்துரைத்தல் எனவும் பொருள் கொள்வர். அறனளித்துரைத்தலென்பது, “அறக்கிழவனை அன்பு செய்தல்.” (பேரா.,மெய்.22) எனவும், “அறத்தினை அன்பு செய்து பரவுதல். அறன் –ஞாயிறு, திங்கள் முதலியனவும், பல்லி சொல்லல், காக்கை கரைதல் முதலியனவுமாம். தலைவி, ஞாயிறு திங்கள் முதலியனவற்றைத் தலைவன் வரும் வழியை இனிது செய்யும்படி வேண்டுதலும், தனது ஆற்றாமையால் தலைவன் விரைவில் வரவேண்டும், எனப் பல்லியைச் சொல்லும்படியும், காக்கையைக் கரையும்படியும் வேண்டுதலுமாம். அளி- அன்பு. அன்புடன் பரவுதலாம்.” (குழந்தை, மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இங்கு அறனழிந்துரைத்தலென்பது தனது நிலையினை உணராமல் பிரிந்துச் சென்ற தலைவனிடம் அறனில்லை என வெறுத்துக் கூறுதலாகும். இங்கே அறன் அளித்துரைத்தல் என்பது அறத்திற்கு அன்பு செய்தலாகும். இதனை, “அறனளிந் துரைத்தல் எனப் பாடங்கொண்டு அதற்கேற்ப விளக்கந்தருவார் பேரா. அது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதலான் அறியலாம்.”(பால. பதிப்பு.83. பக்.315) “நெஞ்சு அழிந்த வழியே அறன் அழிந்துரைத்தல் நிகழுமாதலின் அறனளித்துரைத்தல் என்ற பாடமே சிறக்கும் என்று தோன்றுகிறது.” (தி.வெ.கோ. மேலது, xxxi)” (கே.எம். வேங்கடராமையா, தொல்காப்பிய மூலம் பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு, ப.281.) என வேங்கடராமையா கூறியுள்ளார். இவற்றுள் அறனளிந் துரைத்தல்  பொருந்தாமையைப் பேராசிரியரே ஆங்கு நெஞ்சழிதலில் கூறியுள்ளமையின் அறனழிந்துரைத்தலென்பதே இங்குப் பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும் குறள்.1209.ஐயும்; பாரதி, குறுந்.191; 25, 262, ஐங்குறு.385, குறள்.1154, 1209 ஆகியவற்றையும்;  பாலசுந்தரம், கலி.143, 144 குறுந்.262 ஆகிய பாடல்களையும்; பேராசிரியரும் குழந்தையும்,

பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
கன்றுபுகு
மாலை நின்றோ ளெய்தி” (அகம்.9)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், பக்கத்தே பல்லி சொல்லுந்தோறும் கடவுளை வணங்கி கன்றுகள் மன்றிற்புகும் மாலைக் காலத்தே நின்றோளையடைந்து வணங்கி நின்றோளையெய்தி என்க என்பதில் அறனளித்துரைத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

1:1:16 ஆங்கு நெஞ்சழிதல்

ஆங்கு நெஞ்சழிதலென்பது, “அறனழிந்துரைக்குமிடத்து நெஞ்சழிந்து கூறுதல்” (இளம்.,மெய்.22) எனவும், “அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்துரைத்தல்;  எனவே, அறனளிந்துரைத்தல் அழிவின்றொன்றாமென்பது சொல்லினானாம்.” (பேரா.,மெய்.22). எனவும், “சொல்லளவில் அறனழிவது போலக் கூறிய தலைவி பின் அவ்வளவிற்கு உளம் உளைந்து வருந்துதல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். அறனழிந்து உரைக்கும்போது தன் நெஞ்சினையும் யழித்துக் கூறுதல் ஆங்கு நெஞ்சழிதலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1295-ஐயும்; பேராசிரியரும் குழந்தையும், கலி.143-ஆம் பாடலையும்; பாரதி, கலி.143, குறுந்.93 ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம், கலி.144, 114 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:17 எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல்

எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பது, “யாதானுமோர் உடம்பாயினுந் தன்னோடு ஒப்புமை கோடல் என்றவாறு.” (இளம்.,மெய்.22) எனவும், “யாதானும் ஒரு பொருள் கண்டவிடத்துத் தலைமகனோடொப்புமை கோடல்.” (பேரா.,மெய்.22). எனவும், “இதுகாணும் பொருள் எதுவும் தலைவன் வடிவுவண்ணம் பண்பு வினைகளுள் ஒன்றுக்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும் “பிரிவாற்றாது புலந்த தலைவி நெஞ்சழிந்த நிலையில் தான் காணும் பொருள் எல்லாம் தன்னைப் போலத் துன்புறுவதாகக் கருதிக்கோடல். மெய் என்றது பொருளை உருவப்பொருளும் அருவப் பொருளும் அடங்க “எம்மெய்யாயினும்” என்றார்.” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பது காதல் மிகுதியால் தான் காணும் பொருட்களிலெல்லாம் தன் காதலரின் ஒப்புமையைத் தேடலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1222.ஐயும்;  பேராசிரியரும் குழந்தையும் கலி.20ஆம் பாடலையும்; பாரதி, குறள்.1111, 1112, 1116, கம்ப.மிதிலை.செய்.56, 57 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், கலி.129, 55, குறள்.1116 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:18 ஒப்புவழி உவத்தல்

ஒப்புவழி யுவத்தலென்பது, “தலைமகனோடு ஒக்குமெனப் பிறிதொன்று கண்டவழி யுவத்தல்” (இளம்., தாசன்,மெய்.22). எனவும், “ஒப்புமை யுண்டாகிய வழியே உவமைகொண்டு அதனானே உவகை தோன்றுவது. எனவே, முன்னது ஒப்பின்றி ஒப்புமை கொண்டதாயிற்று;  என்னை? எம்மெய்யாயினு மென்றமையின்.” (பேரா., குழந்தை,மெய்.22). எனவும்,  “இஃது அவ்வாறு ஒப்புமை கண்டவழி மகிழும் காதலியல்பாம்.” (பாரதி., இராசா,மெய்.22). எனவும், “தம் நிலைமைக்கேற்ப ஒப்ப நிற்கும் பொருள் கண்டவழி உவப்புறுதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். தலைவனோடு ஒப்பன கண்டு மகிழ்தல் ஒப்புவழி உவத்தலாகும். இதனை விளக்கப் பேராசிரியர் கலி.80, 86 ஆகிய பாடல்களையும்;  பாரதி கலி.86 ஆம் பாடலையும்; குழந்தை கலி.80 ஆம் பாடலையும், பாலசுந்தரம் குறுந்.315, 162, கலி.86 ஆகிய பாடல்களையும்; இளம்பூரணர்,

யாவருங்……………… …………….
…………. …………………… …………………….
…………………. ………………………..
காணுநர் இன்மையிற், செத்தனள் பேணி,” (அகம்.16)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், யாரும் பார்க்காததை அறிந்து அவன் அருகே சென்று அவனைத் தூக்கித் தன் தலைவன் போன்று இருக்கின்றதை எண்ணி இளமார்பையுடைய பொன் அணிகள் அணிந்த பெண், வருக என் உயிரே என அன்போடு அழைத்து மகிழ்ந்து தூக்கிக் கொஞ்சியதை, நான் பார்த்தேன் என்பதில் தலைமகனோடு ஒப்புடைய மகனைப் பரத்தை கொஞ்சியது வெளிப்பட்டுள்ளமையால், இஃது ஒப்புவழி யுவத்தலாயிற்று.

1:1:19 உறுபெயர் கேட்டல்

உறுபெயர் கேட்டலென்பது, “தலைவன் பெயர்கேட்டு மகிழ்தல்” (இளம்.,தாசன்,மெய்.22). எனவும், “தலைமகன் பெரும்புகழ் கேட்டு மகிழ்தல்” (பேரா., குழந்தை, இராசா,மெய்.22). எனவும், “இது தலைவன் பீடார் பெரும்புகழ் பிறர்வாய்க்கேட்டு மகிழ்தல்” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவனது பெருமை பற்றிய புகழினைத் தலைவி விரும்பிக் கேட்டல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகன் பெயரையும் புகழையும் கேட்டு உவத்தல் உறுபெயர் கேட்டலாகும். இதனை விளக்க, இளம்பூரணரும் தாசனும், குறள்.1199.ஐயும்;  பேராசிரியரும் பாலசுந்தரம், கலி.41, 142 ஆகிய பாடல்களையும்;  பாரதி, குறள்.1199, கலி.142, கம்ப.பால.கார்முகப்.செய். 59, 60, 62 ஆகியவற்றையும்; குழந்தை, கலி.142-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:20  கலக்கம்

கலக்கமென்பது, “மனங்கலங்குதல். மேற் ‘கலங்கி மொழிதல்’ என்பது ஒருகாற் சொல்லின்கண் வந்து பெயர்வது. இது மனங்கலங்கி நிற்கும் நிலை.” (இளம்.,மெய்.22) எனவும், “சொல்லத்தகாதன சொல்லுதல். ‘கலக்கமு நலத்தக நாடி னதுவே’ (270) என்னாது கலக்க மென்பதை வேறுபெயர்த்து வைத்ததென்னையெனின் இக்காலத்து அதனினூங்கு நிகழும் மெய்ப்பாட்டுக் குறிப்புளவல்ல தலைமகட்கென்பது அறிவித்தற்கென்பது. இன்னும் அதனானே தலைமகற்காயின் அதினினூங்கு வருவதோர் கலக்கமும் உளதாமென்றது; அவை, மடலூர்தலே வரைபாய்தலே என்றற்றொடக்கத்தக்கன.” (பேரா.,மெய்.22) எனவும், “நன்றாகத் தகுதிநோக்கி யாராயின் மயக்கமென்பதும் மேலது போலவே காதற்றிணை நிமித்தமாகும் மெய்ப்பாடேயாம் முன் குறித்த 19ஆம் அமையாவழியே, அவற்றினிறுதியில் கலக்கம் எழும் என்னும் அதன் சிறப்பியல் குறித்தற்கு அது இறுதியில் வேறு பிரித்துக் கூறப்பட்டது.” (பாரதி.,மெய்.22) எனவும் “ஆற்றாமையான் மதிதிரிந்து சொல்லுதற்காகாதன சொல்லுதலும் செய்தற்கொவ்வாதன செய்தலுமாம்” (பாலசுந்.,மெய்.22)எனவும், உரையாசிரியர்கள் உரை கொள்வர். காதலர் மனங்கலக்க முறுவதால் செய்யத்தகாதன செய்தலும்; சொல்லுதலும் கலக்கமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் பேராசிரியரும், கலி.142, 144 ஆகிய பாடல்களையும், பாரதி, குறுந்.152 ஆம் பாடலையும்; குழந்தை, கலி.142, குறுந்.17 ஆகிய பாடல்களையும், பாலசுந்தரமும் இராசாவும் கலி.142ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:2  பேராசிரியருரையில் சுட்டப்படும் புறநடைகள்

சாதல் எல்லையாகக் கூறுதலும் கலக்கத்தின் பாற்படும் இதனை விளக்க பேராசிரியர் குறுந்.17 ஆம் பாடலையும்; தானே துன்புறுமாறு உரைத்தலும் துன்பத்துப் புலம்பலாகும் என்பதனை விளக்க குறுந்.19ஆம் பாடலையும்; முற்காலத்து எதிர்ப்பட்டமை, பிற்காலத்துச் சொல்லுதலும் எதிர்பெய்து பரிதலாகும் என்பதனை விளக்க,

அந்தீங் கிளவி யாயிழை மடந்தை
கொடுங்குழைக்
கமர்த்த நோக்க
நெடுஞ்சே
ணாரிடை விலங்கு ஞான்றே” (அகம்.3.)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளார். இதில் அக்கானகத்தைக் கடந்து பொருள்தேட முன்பொரு காலத்தில் சென்றபோது சிவந்த வாயினையும் இனியமொழியையும் அழகிய அணிகலன்களையும் உடைய தலைவியின் பார்வையானது சிந்தையில் தோன்றிக் கானகத்தைக் கடந்து செல்லாதவாறு தடுத்ததன்றோ! ஆதலால் பொருளுக்குப் புரியவேண்டும் என்று கூறும் நெஞ்சே; உன் உண்மை போன்ற பொய்ம் மொழியை நம்பி நான் மீண்டும் சென்றால் முந்தைய துன்பந்தானே வரும். எனவே இத்துன்பம் போக வழியாது? எனத் தன் நெஞ்சிடம் தலைவன் கூறினானெப்பது முன்பு நடந்ததை பின்பு கூறிச் செல்கின்றான் இதுவும் எதிர்பெய்து பரிதலாகும்.

1:3. முடிவுரை

  1. இன்பத்தை வெறுத்தலென்பதை விளக்க, பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம், இராசா ஆகியோர், அகம்.74 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் கண்துயில் மறுத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளதே யொழிய, இன்பத்தை வெறுத்தல் என்பது வெளிப்படவில்லை எனவே இஃது பொருந்தாது.
  2. உண்டியிற் குறைதலெனும் மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணரும் தாசனும் அகம்.48 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் “பாலும் உண்ணாள்” என கூறுவதால் பசியட நிற்றலின் பாற்படும். மேலும், பேராசிரியரும் பாலசுந்தரமும் இலக்கண விளக்க பாடல் 527 ஐ எடுத்தாண்டுள்ளனர். இது உணவு உண்ணாமையே உணர்த்துகிறது. எனவே இதுவும் பசியட நிற்றலின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது சிறிதுண்ணல் எனவே இம்மெய்ப்பாட்டிற்கு இவை பொருந்தாது.
  3. இளம்பூரணர், தாசன், இராசா, பாரதி பாலசுந்தரம் ஆகியோர் அறனழித்துரைத்தல் எனவும், பேராசிரியர், குழந்தை ஆகியோர் அறனளித்துரைத்தல் எனவும் பொருள் கொள்வர். இவற்றுள் அறனளித்துரைத்தல் என்பது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதலான் அறியலாம்.
  4. சாதல் எல்லையாகக் கூறுதலும் கலக்கத்தின் பாற்படும்; தானே துன்புறுமாறு உரைத்தலும் துன்பத்துப் புலம்பலாகும்; முற்காலத்து எதிர்ப்பட்டமை, பிற்காலத்துச் சொல்லுதலும் எதிர்பெய்து பரிதலாகும்.
  5. இவ்வியலில் கூறப்பட்டுள்ள பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் இருபதில், இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், ஏதமாய்தல், பசியட நிற்றல், உண்டியிற் குறைதல், கண்துயில் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக்கோடல், மெய்யே என்றல், அறனழிந்துரைத்தல், ஒப்புவழி உவத்தல் எனும் பதினோரு மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். ஏனைய ஒன்பது மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை மேற்கோளாக எடுத்தாளவில்லை.

*****

கட்டுரையாசிரியர்
தமிழ்த்துறைத்தலைவர்,
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
விளாப்பாக்கம், ஆற்காடு.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – பகுதி 2

  1. இத்தகைய ஆய்வுகளை நாம் ஒரு மனதாக வரவேற்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *