தமிழ்நாட்டு அரசியலில் ஒரு விடிவெள்ளி

 

நாகேஸ்வரி அண்ணாமலை

 

இந்தியா சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அரசியலில் ஊழல் நுழைந்துவிட்டது என்று சொன்னால் அது பெரிய தவறான பிரகடனமாக இருக்க முடியாது.  தேசத் தந்தை காந்திஜியோடு சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களே ஊழல் புரிந்தார்கள் என்பது வேதனையன விஷயம்தான்.  புதிதாகச் சுதந்திரம் பெற்ற, வளர்ந்துவரும் ஜனநாயக நாடுகளில் இது தவிர்க்க முடியாதது என்று கூறுவோரும் உண்டு.  ஆனாலும் இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆகியும் ஊழல் ஒழியாதது மட்டுமல்ல, மிகவும் அதிகரித்திருக்கிறது என்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட.

 

எல்லா மாநிலங்களிலும் ஊழல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அதைப் பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியாது.  ஆனாலும் தமிழ்நாட்டில் இருக்குமளவு வேறு எங்கும் இல்லை என்பது என்னுடைய கணிப்பு.  (வேண்டுமானால் பீகாரில் லாலு காலத்தில் தமிழ்நாட்டில் இருக்குமளவு இருந்தது என்று சொல்லலாமோ என்னவோ!)  நாங்கள் கடந்த நாற்பத்தைந்து வருடங்களாகக் கர்நாடகாவில் வாழ்ந்துவந்தாலும் கர்நாடக அரசியல் பற்றித் தெரிந்தது தமிழ்நாட்டின் அரசியலைப் பற்றித் தெரிந்ததைவிட குறைவுதான்.  ஒரு முறை கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது கர்நாடக அன்பர் ஒருவரிடம் ‘எடியூரப்பா பெரிய ஊழல் பேர்வழி இல்லை, அல்லவா?’ என்று கேட்டேன். உடனே அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.  பின் எடியூரப்பா பற்றி நிறையத் தெரிந்துகொண்டபோது அவர் எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்று தெரிந்துகொண்டேன்.  இருப்பினும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை யாராலும் மிஞ்ச முடியாது என்பதுதான் என்னுடைய இப்போதைய நிலைப்பாடு.

 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் காலத்திலிருந்தே வேண்டியவர்களுக்குச் சலுகைகள் அளிப்பது என்பது இருந்துவந்திருக்கிறது.  தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின் கடைசிக் காலத்தில் ஊழல் தலையெடுக்கத் துவங்கிவிட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.  ஆனால் அது  ஆரம்பம்தான்.  ஊழலை உரம் போட்டு வளர்த்தது திராவிடக் கட்சிகள்தான்.  அண்ணாதுரை உயிரோடு இருந்து தமிழ்நாட்டு அரசியலை வழிநடத்தியிருந்தால் இந்த அளவு ஊழல் வளர்ந்திருக்காது என்பது என் ஊகம்.  அவருக்குப் பிறகு முதலமைச்சராகப் பதவியேற்ற கருணாநிதியின் காலத்தில் ஊழல் என்னும் செடி உரம் பெற்று செழிக்கத் தொடங்கியது.  பின் மரமாகி முழு வளர்ச்சி அடைந்தது பின்னால் வந்த ஆட்சிகளின்போதுதான்.  இப்போது இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு எதில் சிறந்து விளங்குகிறதோ இல்லையோ ஊழலில் கண்டிப்பாக முதல் இடம் வகிக்கிறது.  இந்தப் பெருமையை நமக்கு ஈட்டிக் கொடுத்தவர்கள் கடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டை ஆண்டுவந்தவர்கள்.   ஊழல் செய்த அரசியல்வாதிகளைத் ‘தெய்வமாக’ ஏற்றுக்கொண்டவர்கள் நம் தமிழ் மக்கள் மட்டும்தான்.  இதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது.  ஒரு சில அப்பாவி மக்களால் தெய்வமாக மதிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர் மறைந்ததும் தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் பிறந்தது என்று பலர் நினைக்கிறார்கள்.  ஊழல் செய்ய வெற்றிடமா என்று தெரியவில்லை!

 

இப்போது அரசியலுக்கு நடிகர்கள் உட்படப் பலர் வந்திருக்கின்றனர்.  இவர்களில் கமலஹாஸன் குறிப்பிடத் தகுந்தவராக விளங்குகிறார்.  இது நாள்வரை அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருந்தபோதிலும் இப்போதாவது வந்திருக்கிறாரே என்று சந்தோஷப்படலாம்.  ‘உங்கள் கட்சியின் கொள்கை என்னவென்று?’ ரஜினியிடம் கேட்கப்பட்டபோது அவருக்குத் தலை சுற்றிவிட்டதாம்.  கட்சியின் கொள்கைகூட என்னவென்று இதுவரை சிந்திக்காதவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால்  அப்படி என்ன சாதித்துவிடப் போகிறார்?  கமலஹாஸன் அப்படியில்லை.  நன்றாகச் சிந்தித்துத் தன் கட்சியின் கொள்கை என்ன என்று தயார் நிலையில் வந்திருக்கிறார்.

 

இலவசங்களால்தான் தமிழ்நாடு இப்படிச் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்ந்து இலவசங்கள் கொடுப்பதைவிட பிறருக்கு இலவசங்கள் கொடுக்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்துவேன் என்கிறார்.  அவர் செய்யப் போகும் காரியங்களில் முதன்மையாகக் குறிப்பிட்டது மக்களுக்கு நல்ல கல்வி கொடுப்பது.  எல்லோரும் நல்ல கல்வி கற்று அறிவு தெளிந்தால் ஊழலிலே ஊறிப்போன அரசியல்வாதிகளை ‘தெய்வம்’ என்று யாரும் குறிப்பிட மாட்டார்கள்.  ஒரு சமூகம் ஜனநாயக சமூகமாக விளங்க வேண்டுமென்றால் முதலில் எல்லோருக்கும் ஜனநாயகத்தைப் பற்றிய கல்வியைப் புகட்டிய பிறகுதான், எல்லோரிடையேயும் சிந்திக்கும் திறனை வளர்த்த பிறகுதான் ஜனநாயகத்தைப் புகுத்த வேண்டும் என்கிறார் சிந்தனையாளர் சாக்ரடீஸ்.  சாக்ரடீஸின் இந்த அறிவுரையைக் கமலஹாஸன் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதுபோல் தெரிகிறது.  தான் எல்லோருக்கும் தலைவன் என்பதைவிட எல்லோருக்கும் சேவை செய்யப் போகும்  ஊழியன் என்கிறார்.  மதுரையில் கட்சியைத் துவக்கிவைத்தபோது ஆர்.கே.நகர். தேர்தலை மனதில் கொண்டு மக்களைப் பார்த்து, ‘நீங்கள் உங்கள் வாக்கின் மதிப்புத் தெரியாமல் அதை விலைக்கு விற்றுவிட்டீர்கள்.  வாக்கு உங்களுடைய நலனைக் காக்கும் உங்களுடைய உரிமை.  அதை நீங்கள் விற்றால் ஜனநாயகம் குலைந்துவிடும்’ என்றார்.  என்னுடைய கட்சி உங்கள் வாக்குக்காக ஒரு பைசாவும் கொடுக்காது என்றார்.  இது ஜனநாயகக் கல்வியின் ஒரு பகுதி.

 

தான் எந்த ‘இஸத்’தையும் பின்பற்றப் போவதில்லை என்றும் மக்களின் நலன்களே தன் குறிக்கோள் என்றும் கூறுகிறார்.  அதனால்தான் தன் கட்சிக்கு ‘மக்கள் நீதி மையம்’ என்று பெயர் கொடுத்திருக்கிறார்.  படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாலும் பல பட்டங்கள் பெற்றவர்களுக்கு நிகராக அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.  எம்.ஜி.ஆர்.போல் முதல் மந்திரியாகப் பதவியேற்றாலும் இரவில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லவில்லை.  (அவராலும் அப்படிச் செய்ய முடியவில்லை என்பது இன்னொரு விஷயம்.)  இனி மக்களுக்குச் சேவை செய்யும் நல்ல அரசியல்வாதியாக மட்டுமே இருப்பேன் என்கிறார்.  இவர் தலைமையில் தமிழ் மக்களின் நலன்கள் மத்திய அரசால் சூறையாடப்படாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

 

இந்தியாவில் வடக்கில் ஒரு கெஜ்ரிவால் தோன்றியிருப்பதுபோல் தெற்கில் ஒரு கமலஹாஸன் தோன்றியிருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்வோம்.  தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்து இந்தியாவுக்கே ஒரு மாடலாகத் தமிழகம் விளங்கும் என்று நம்புவோம்.  தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று பெருமிதம் கொள்வோம்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தமிழ்நாட்டு அரசியலில் ஒரு விடிவெள்ளி

  1. வரவேற்க வேண்டிய அலசல். உண்மையை அடிப்படையாகக்கொண்டது. என்னுடைய கணிப்பில் தமிழ் நாட்டில் முதிர்ந்த, மக்கள் நலம் நாடும், சுயநலம் ஒழித்த அரசியலர் ஒருவரும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published.