Blog

  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 4

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ் 

    மெட்ரீனா கதவருகில் நின்று சைமனைப் பார்த்து, “அவன் நல்லவனாக இருந்தால் நிர்வாணமாக இருக்க மாட்டான். அவன் மீது ஒரு சட்டை கூட இல்லை. அவன் நல்லவனானால், நீ அவனை, எங்கே, எப்படிக் கண்டாயென்று சொல்லியிருப்பாய்” என்றாள். அதற்கு சைமன் “நானும் அதைச் சொல்வதற்குப் பல முறை முயற்சித்தேன், நீ இடங்கொடுக்கவில்லை” என்றான்.

    “நான் ஆலயத்தின் அருகே வந்த போது, இவன் நிர்வாணமாகக் குளிரில் உறைந்திருந்தான். இந்தக் கடுமையான குளிரில் எப்படி நிர்வாணமாக இருக்க முடியும்? இறைவன்தான் என்னை அங்கு அனுப்பியிருக்க முடியம். இல்லையென்றால் அவன் மரணமடைந்திருப்பான். நான் என்ன செய்வது? அவனுக்கு என்ன நடந்ததென்று நமக்கு எப்படித் தெரியும்? ஆகையால் நான் அவனுக்கு என் கோட்டைக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தேன். மெடீனா, கோபப்படாதே. நாம் எல்லோரும் ஒரு நாள் மரணமடைவோம்”.

    மெடீனா கோபத்தில் பதில் சொல்ல நினைத்தவள் அந்த மனிதனைப் பார்த்து அமைதியானாள். அவன் கண்களை மூடி, கைகளை மடியில் வைத்துத் தலை குனிந்து பெஞ்சின் ஓரத்தில் அமர்ந்திருந்தான். அவன் புருவங்கள் சுருங்கி, வேதனையோடு இருப்பதைக் கண்டாள்.

    மெட்ரீனா அமைதியானாள். சைமன் அவளை நோக்கி “ மெட்ரீனா, உன்னிடம் இறைவனின் அன்பு இல்லையா?” என்று கேட்டான். அதைக் கேட்ட போது அவள் அந்த மனிதனைத் திரும்பவும் பார்த்தாள். அவள் மனம் திடீரெனெ இளகியது. கதவு அருகிலிருந்து விலகி அடுக்களைக்குச் சென்று குடிப்பதற்கு போதை கொடுக்காத திராவகத்தையும், மீதியிருந்த ரொட்டியையும் மேசை மீது கொண்டு வைத்துவிட்டு அவனைச் சாப்பிடச் சொன்னாள். சைமன் உணவைப் பகிர்ந்து கொடுத்தான். மெட்ரீனா மேசையின் மூலையில் அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரெனெ அவள் மனம் இரக்கத்தால் நிறைந்து அவன்மேல் அன்பு கொண்டாள். உடனே அவன் முகம் பிரகாசமடைந்தது. அவன் கண்களை உயர்த்தி மெட்ரீனாவைப் பார்த்துப் புன்னகைத்தான். புருவங்களில் காணப்பட்ட சுருக்கங்களும், வேதனையும் மறைந்து விட்டன.

    அவர்கள் உண்டு முடித்த பின், மெட்ரீனா எல்லாவற்றையும், சுத்தம் செய்து விட்டு, அந்த மனிதனிடம் “நீ எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டாள்..

    “நான் இந்தப் பகுதியிலுள்ளவனல்ல” என்றான்
    “அப்படியானால், எப்படிக் கோவிலருகில் வந்தாய்?”
    “என்னால் சொல்ல முடியாது”

    “யாராவது உன்னிடமிருந்து திருடினார்களா?”

    “இல்லை, கடவுள் என்னைத் தண்டித்தார்”

    “நீ அங்கே நிர்வாணமாக இருந்தாயா?”

    “ஆம், நிர்வாணமாகவும், குளிரில் உறைந்தும் இருந்தேன். சைமன் என்னைப் பார்த்து இரக்கம் கொண்டு அவன் கோட்டை எடுத்து எனக்கு அணிவித்து இங்கே கூட்டிக் கொண்டு வந்தான். நீ என் மேல் இரக்கம் கொண்டு உண்ண உணவும், குடிக்க நீரும் கொடுத்தாய். இறைவன் உனக்கு கைம்மாறு கொடுப்பாராக” என்றான்
    மெட்ரீனா, தான் தைத்துக் கொண்டிருந்த சைமனின் பழைய கோட்டையும், ஒரு பழைய கால் சட்டையையும் அவனுக்குக் கொடுத்து இரவு தூங்குவதற்கும் இடம் கொடுத்தாள். இரவு முழுவதும் மெட்ரீனாவால் தூங்க முடியவில்லை. வீட்டிலிருந்த கடைசி ரொட்டியும் முடிந்துவிட்டது. மறுநாள் உணவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சைமனும் தூங்கவில்லை. அவள், “சைமன், ஏன் அந்த மனிதன் நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை? பார்த்தால் நல்லவனாகத்தான் தோன்றுகிறான்” என்றாள்.

    “ஏதோ காரணங்கள் இருக்கலாம்”.
    “சைமன், நாம் எல்லோருக்கும் கொடுக்கிறோம், நமக்கு ஏன் ஒருவரும் கொடுக்கவில்லை?”

    சைமனுக்குப் பதில் தெரியவில்லை. “சரி, நாம் இப்போது தூங்குவோம்” என்று கூறித் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

    தொடரும்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 106

    உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி

    முனைவர் சுபாஷிணி

    மனித உடல் ஆச்சரியங்கள் பல நிறைந்த ஒரு அதிசயப் பொருள். தாயின் கருமுட்டையில் தந்தையின் விந்துக் கலப்பு நிகழ்ந்து கருத்தரிக்கும் போது ஒரு குழந்தையின் உருவாக்கம் தொடங்குகின்றது. சிறு அணுவாக உருவாகி படிப்படியாக நரம்புமண்டல வளர்ச்சி, இருதய வளர்ச்சி, உடல் உருப்புக்கள் வளர்ச்சி எனப்படிப்படியாக வளர்ந்து 10 மாதங்கள் முடிந்து முழு குழந்தையாக தாயின் கருப்பையில் இருந்து குழந்தை வெளிவருவது நிகழ்கின்றது.

    தொல்பழங்காலத்தில் பெண்ணின் வயிறு பெரிதாகி பின்னர் ஒரு மனிதக்குழந்தைப் பிறப்பதைப் பார்த்த மனிதர்கள் தம்மைப் போன்ற இன்னொரு விலங்கினை உருவாக்கும் சக்தி படைத்த பெண்ணையே தெய்வமாகச் சிலை வடித்து வழிபடும் வழக்கத்தை உருவாக்கித் தொடர்ந்தனர். உலகின் பல சமுதாயங்களில் மிகப்பழமையான தாய் தெய்வச் சிலைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் காலம் ஆராயப்பட்டு, அச்சிலைகள் உருவான பகுதிகளில் மக்கள் கொண்டிருந்த பண்பாட்டுக் கூறிகளை ஆராயும் ஆய்வுகள் பல நடந்திருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் மனிதன் ஒரு குழந்தை பிறப்பை அவதானித்த தன்மைகளைக் கண்டறியும் வழிகளை ஆய்வுலகத்திற்கு வழங்கியிருக்கின்றன.

    1
    இன்று நமக்குக் கிடைக்கின்ற மிகப் பழமையான தாய் தெய்வ சிற்பங்கள் எனும் போது இன்றைய ஆஸ்திரியாவின் வில்லண்டோர்ஃப் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கிட்டிய Venus of Willendorf என்ற தாய் தெய்வத்தைக் குறிப்பிடலாம். இதன் காலம் கி.மு. 28,000லிருந்து 25,000 எனக்கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல இன்றைய துருக்கியின் காத்தாலோயுக் (Çatalhöyük ) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Çatalhöyük எனப்படும் தாய் தெய்வம் கி.மு. 5500லிருந்து 6000 எனக் கண்டறியப்பட்டுள்ளது, இதேபோல சிரியா, ஜெர்மனி, ஐக்கிய அரபு நாடுகள், பண்டைய பெர்சியா போன்ற நாடுகளிலும் இத்தகைய தெய்வ வடிவங்கள் பண்டைய மக்களின் வழிபாட்டில் இருந்தமையைக் காண்கின்றோம்.

    2
    மனித உடலை ஆராயும் முயற்சி பன்னெடுங்காலமாக அறிவியல் ஆய்வு நோக்கம் கொண்ட பலரால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. பல்வேறு காலகட்டங்களில் உடல்கூறு ஆய்வுகள் பல்வேறு சமூகங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று மேற்கத்திய ஆய்வுமுறைகள் உலகாளவிய அளவில் உடற்கூறு ஆய்வில் துரித வளர்ச்சியை அறிமுகப் படுத்தி செயல்படுத்தியிருப்பதால் மருத்துவத்துறை பன்மடங்கு வேகத்தில் வளர்ந்திருக்கும் சூழலை நாம் காண்கின்றோம். தமிழகச் சூழலில் உடல்கூறு ஆய்வுகள் என்பன இன்று நமக்கு அறிமுகமான புதியதொரு ஆய்வுத்துறை அல்ல. மாறாகச் சித்த வைத்திய முறையில் எப்படி மூலிகைகளை ஆராய்ந்து நோய்களுக்குத் தீர்வைக்கண்டு பிடித்தனரோ அதே போல உடலைக் கூறு செய்து பாகங்களை ஆராய்ந்து சோதனை மேற்கொண்டிருந்தனர் நம் மூதாதையர் என்பதனை நாம் மறந்து விடலாகாது. இத்தகைய ஆய்வுகளைச் செய்தோரை நமது சமூகத்தில் சித்தர்கள் என அடையாளப்படுத்தினர். இவர்கள் ஆய்ந்தறியும் விஞ்ஞானிகள் எனக் காண்பதை விடுத்து புனிதத்துவத்தை ஏற்றி வைத்தமையால் இவர்களது ஆய்வுகளை பொது மக்கள் பெருவாரியாகக் கற்றுப் பலனடைய வாய்ப்பு கிட்டாமல் போனது ஒரு துரதிட்டமே.

    3
    4 வார வளர்ச்சியில் குழந்தை

    ஆனால் ஐரோப்பாவிலோ உடற்கூறு ஆய்வில் ஈடுபட்டோர் அவற்றை அறிவியலாகவும் அழகியலாகவும் காணும் முயற்சியைப் புகுத்தியமை உடற்கூறுகளை அறிந்து கொள்ளும் துறையில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டு இதனை மருத்துவ அறிவியல் துறையாக வளர்த்துள்ளது.

    மேற்கத்திய உலகில் உடற்கூறு ஆய்வுகள் எனக் குறிப்பிடும் போது நமக்கு நன்கறிந்த லியோனார்டோ டாவின்சியின் பங்களிப்புக்கள் மிகச் சிறப்பானவை. மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு இறந்த மனிதர்களின் உடல்களைப் பெற்று, அவ்வுடல்களை கூறு செய்து, உடலின் பாகங்களைத் தனித்தனியாக எடுத்து அவற்றை ஓவியமாக வரைந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஓவியங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவருக்கு அடுத்தார் போல மேலும் பலர் தொடர்ந்தனர் என்றாலும், டாவின்சி இத்தகைய மனித உடற்கூறு பற்றிய ஓவியங்களை வழங்கி அறிவியலைக் கலைப்படப்பாக்கியதில் முன்னோடியாகத் திகழ்கின்றார் என்று குறிப்பிட வேண்டியது மிக அவசியமாகும்.

    இன்று மருத்துவ உலகம் துரித வளர்ச்சி கண்டுள்ளது. ஒவ்வொரு வினாடியும் ஏராளமான புதிய நோய்கள் உருவாகிக்கொண்டேயிருக்கின்ற அதே வேளையில் ஒவ்வொரு விநாடியும் உலகின் பல மூலைகளில் நோய்களுக்கான நிவாரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதும் நிகழ்கின்றது.

    4

    மென்மையான தோல் போர்த்திய மனித உடலின் மேல் அழகிய ஆடைகளும் அணிகலன்களும் போட்டு அழகு பார்க்கின்றோம். அந்த தோலுக்குக் கீழ் உள்ள பாகங்களையும் அவை செயற்படும் முறைகளையும் பொதுவாக நாம் எண்ணிப் பார்ப்பது கிடையாது. இந்த பொது நிலை இருப்பதால் நமது சிந்தனையில் மனித உடல் என்பது ஒரு புனிதப் பொருளாகவோ, அல்லது காமப் பொருளாகவோ மட்டுமே பார்க்கும் மனம் வாய்த்து விடுகின்றது. அந்தக் கோணத்திலிருந்து விடுபட்டு தோலுக்குக் கீழே மறைந்திருக்கும் தசைகள், உடல் உறுப்புகள், நரம்புகள், இரத்த நாளங்கள், எலும்புகள், எனக் காணத்தொடங்கும் போது நமக்குக் கிடைக்கும் பார்வை ஒரு மாற்றுப் பார்வையாகவே அமையும். இந்தப் பார்வையை வழங்கும் வகையில் உலகின் சில நாடுகளில் மனித உடலைக் கூறு செய்து பாடம் செய்து அவற்றை ஆய்வில் ஆர்வம் உள்ளோருக்குக் கண்காட்சியாக ஏற்படுத்தியிருக்கின்றார்கள். ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், வட அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இத்தகைய உடற்கூறு கண்காட்சிக் கூடங்கள் அமைந்திருக்கின்றன. அத்தகைய ஒரு கண்காட்சிக் கூடம் தான் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் நகரில் இருக்கும் ”உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம்”.

    5

    ”மகிழ்ச்சியளிக்கும் உடலின் பாகங்கள்” என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்திருக்கின்றனர். இதனை வடிவமைத்தவர்கள் டாக்டர்.குந்தர் வோன் ஹாகென்ஸ் மற்றும் டாக்டர்.அஞெலினா வேலி ஆகிய இருவருமாகும்.

    இந்த அருங்காட்சியகத்தில் 200க்கும் குறையாத மனித உடலின் பாகங்கள் முழுமை யாகவும் பகுதிகளாகவும் எனக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கனவாக, இங்குள்ள தாயின் கருப்பையில் வளர்ந்த 4 வாரம் தொடங்கி 8 வாரம் வரையிலான குழந்தைகளின் பாடம் செய்யப்பட்ட உடல்கள், கருகொண்ட தாயின் உடலில் குழந்தை முழுமையாக இருக்கும் வகையிலான ஒரு உடல், புகைபிடிப்பதனால் சேதப்பட்ட நுரையீரல், ரத்த நாளங்கள் பாயும் மனித முகம், தலை, மூளை, கால்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம். இங்குள்ள அனைத்து மாடல்களுமே மனிதர்களது உடலுறுப்புக்களேயாகும். இறப்பதற்கு முன்னர் தங்கள் உடலை மருத்துவ சோதனைக்காக அளித்த மனிதர்களின் உடல்களே இங்குப் பாடம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    6

    இந்த அருங்காட்சியகத்திற்கு வருபவர்களுக்கு மனித உடலைப் பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன. உடல் உறுப்புக்களைக் கண்டு அஞ்சுவோரும், உடலை பாவப்பொருளாகவும் புனிதப் பொருளாகவும் நினைப்போரும் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்தால் உடலைப்பற்றி கொண்டிருக்கும் சிந்தனையில், தெளிவு தரும் வகையிலான அறிவியல் பூர்வமான தெளிவினை நிச்சயம் பெற முடியும்.

    எத்தனையோ அதிசயங்களை நம் மனம் ஆசைப்பட்டுத் தேடி ஓடுகிறது. நாமே ஒரு அதிசயம் தான், நம் உடலும் ஒரு அதிசயம் தான், நம் உடலில் இயங்கும் உறுப்புக்களின் செயற்பாடுகளும் அதிசயம் தான் எனப் புரிந்து கொண்டால் பொய்யான அதிசயங்களில் நம் மனம் நாட்டம் கொள்ளாது.

    போலித்தனத்தை துடைத்தொழிப்பதற்கும், மூட நம்பிக்கைகளை மனதிலிருந்து அகற்றுவதற்கும் அறிவியல் அறிவு ஒன்று தான் ஒரே வழி. அத்தகைய அறிவியல் பார்வையை வழங்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு ஜெர்மனிக்கு வருகை தருவோர் அனைவரும் வந்து பார்த்துச் செல்ல வேண்டும். இந்த அருங்காட்சியகத்தைப் பற்றிய முழு விபரங்களையும் https://bodyworlds.com/ என்ற வலைப்பக்கத்தில் பெறலாம்.

    ​

    Share
  • கொண்டாடப்படும் தினங்கள்!

    -பெருவை பார்த்தசாரதி

    Time-Management-Tips

    நாட்களிலே  நல்லதுகெட்டதெது  என்பதொரு கேள்வியே.?
    ……….நாட்களைத்துமே கொண்டாட வேண்டிய  நற்தினங்களே.!
    நாட்காட்டியில்  நாளொன்றின்  தாளைநாம்  கிழிக்கும்போது..
    ……….நம்வாழ்வில்  நாளொன்று  கழிவதைநாம்  அறியவேண்டும்.!
    ஆட்டம்காணா  வாழ்வமைய  ஆன்றோர்  வகுத்துவைத்த..
    ……….இருங்கலையதைக்  கற்றுத்தேற  அரும்பாடு படவேண்டும்.!
    கோட்பாடுடன்  குறிக்கோளையும்  நாம்  கொண்டுவிட்டால்..
    ……….கோள்கள் கொடுக்கும்  கொடுமைகூட  விலகிவழிவிடும்.!

    வளைந்தாலும் நெளிந்தாலும் வீழ்ந்தாலும் தாழ்ந்தாலும்..
    ……….நாளைசெய்வோம்  எனவொரு  எண்ணம் எழவேண்டாம்.!
    இளைஞனே  நற்செயலைத்  திட்டமிடு! அச்செயலில்..
    ……….இறங்கியபின்  நாட்டமுடன்  நல்கியதை முடிக்கப்பழகு.!
    முளைக்கும் விதைக்கு மண்ணைப்பிளக்கும் வீரியமுண்டு..
    ……….மூளையில் உருவாகும் சிந்தனைக்குமொரு சக்தியுமுண்டு.!
    களைகளும் தடைகளும் தடங்கலின்றி தழைத்துவருமாம்..
    ……….தாங்கியதை  எதிர்ப்பின்  எல்லாதினமும் கொண்டாட்டமே.!

    ஒருதினத்தில்  இல்லையெனில்  மறுதினத்தில்  வந்துவிடும்..
    ……….ஓர்விழாவும்  பண்டிகையும்!…உலகமுழுதுமிது இயற்கை.!
    உருவமிலா  நிலையிலவன்  உலகத்தில்  நிறைந்திருப்பான்..
    ……….உருகும்  பக்தர்கள்  இறைஞ்சவெங்கும்  இரைந்திருப்பான்.!
    அருட்கொடை  யோனவன்  ஆசிபெற  அண்டத்திலுள்ள..
    ……….ஆலயமுழுதும்  அரங்கேறும்  அன்றாடம்  கொண்டாட்டம்.!
    இருளகற்றி  வாழ்வில்  வெளிச்சம்பெறும்  வரம்வேண்ட..
    ……….இறைவனைக்  கொண்டாடும்  தினத்திற்கே  பஞ்சமில்லை.!

    கொண்டாட  வேண்டியநல்  வாழ்வையும்  இழந்துவிட்டு..
    ……….திண்டாடும்  மாந்தர்களும்  இவ்வுலகில்  இருக்கிறார்கள்.!
    தண்டச்சோறு  தின்றுவிட்டுத்  திண்ணைக்கதை பேசியே..
    ……….தினமொரு  நாளைவீணே  கழித்தவர்கள்  இருக்கிறார்கள்.!
    துண்டறிக்கை  விடும்சினிமா  அரசியலின்  பின்னலைந்து..
    ……….தொலைத்ததைத்  திரும்பப்பெற  நினைப்பவரும் உண்டு.!
    கண்டறிந்து  கேட்டறிந்து  கற்றறிவுபெறு  தற்கிவர்கள்- நம்..
    ……….தண்டமிழிழைக் கொண்டாட  வேண்டும்  தினமுமதை.!

    ******

    நன்றி:: தினமணி  கவிதைமணி

    நன்றி:: கூகிள் இமேஜ்

     

     

    Share
  • புகழ்ந்து கவி பாடுவோம்! 

    – எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

    கண்மூடிக் காதல்கொள்ளும்
    -காதலினை விட்டிடுவோம்
    மண்ணிலுள்ளார் மனங்கவரும்
    -காதலினைச் செய்திடுவோம்
    பெண்மனமும் ஆண்மனமும்
    -பேதமின்றிக் கலக்கும்படி
    மண்மீது காதலினை
    -மலர்ந்துவிடச் செய்திடுவோம்!

    அரும்பாகி   மொட்டாகி
    -மலராகும் காதலினை
    விரும்பாதர் இவ்வுலகில்
    -இல்லையென்றே இயம்பிடலாம்
    நரம்பெல்லாம் முறுக்கேற்றும்
    -நற்காதல் என்றென்றும்
    நம்வாழ்வின் அடித்தளமாய்
    -நமையியக்கும் சக்தியன்றோ!

    காதலிப்பார் வாழ்வெல்லாம்
    -காணுவது பேரின்பம்
    காதலனும் காதலியும்
    -கனவினிலும் காதலிப்பார்
    சோதியெனக் காதலங்கே
    -சுடர்விட்டு  நிற்குமங்கே
    சொர்க்கமதைக் காதலர்கள்
    -சொந்தமாய் ஆக்கிடுவார்!

    காலமெலாம் காதலுடன்
    -கைகோத்துப் பாருங்கள்
    காணுகின்ற அத்தனையும்
    -கற்கண்டாய் ஆகிவிடும்
    ஓடியோடி உழைத்தாலும்
    -உள்ளமதில் காதலின்றேல்
    உங்கள்வாழ்வு உலகினிலே
    -உவப்புதனை ஈந்திடுமா!

    காதலர்கள் தினமதிலே
    -காதலினைப் போற்றிடுவோம்!
    காலமெலாம் காதலது
    -வாழ்கவென வாழ்த்திடுவோம்
    சாதிமத பேதமின்றி
    -காதலர்கள் தினமதனைப்
    பூதலத்தில் பொலிகவென்று
    -புகழ்ந்து கவிபாடிடுவோம்!

                

    Share
  • எங்கள் நீலகிரி

     

    images

    தடதடத்த சாலைகள்
    லொலொடத்த வண்டிகள்
    பதைபதைக்கும் நெஞ்சம்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    சோசோவென பெய்யும் மழை
    படபடவென இடிக்கும் பேரிடிகள்
    பளிச்பளிச்சென வெட்டும் மின்னல்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    மளமளவென வளர்ந்த காடு
    சுளீர்சுளீரென வீசும் காற்று
    சடசடவென முறியும் கிளைகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    சரசரவென தாவும் மான்கள்
    துருதுருவென இருக்கும் குரங்கு
    நறநறவென குதறும் ஓநாய்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    வதவதவென்ற காட்டுப் பன்றி
    கரகரவென கத்தும் வரையாடு
    ஊஊவென ஊளைடும் நரிகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    மதமதவென பருத்த பெரும் யானை
    கொழுகொழுத்த வன்புலிகள்
    முசுமுசுவென முடி கொண்ட கரடி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    திடுதிடுவென வந்தழிக்கும் சிறுத்தை
    கருகருத்த முரட்டு காட்டெருமை
    சிலிர்சிலிர்த்து நிற்கின்ற முள்ளம் பன்றி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    தைதையென ஆடும் மயில்கள்
    திருதிருவென விழிக்கும் ஆந்தை
    கீச்கீச்செனெ கத்தும் குருவி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    மினுக்மினுக்கென்ற மின்மினி
    வீச்வீச்சென கத்தும் பூச்சிகள்
    கொர்கொர்ரென கத்தும் தவளைகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    கிடுகிடுக்கும் பெரும் பள்ளம்
    வழுவழுக்கும் மலைச்சரிவு
    கொழகொழக்கும் சேறு
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    தழதழவென்ற பசும் தேயிலை
    கமகமக்கும் வாசனை பொருட்கள்
    சொரசொரத்த பட்டையுள உயர் மரங்கள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    குளுகுளுவென்றிருக்கும் உதகை
    சிலுசிலுவென தழுவும் தென்றல்
    சுடசுடவே கிடைக்கும் நெய்வர்க்கி
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    சலசலவென ஓடும் நீரோடை
    குபுகுபுவென வெள்ளம் பாயும் நதிகள்
    ஓஓவென இரையும் பேரருவிகள்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!

    நடுநடுங்கும் குளிர்
    தகிதகிக்கும் உள்ளம்
    கிறுகிறுக்கும் எதிர்காலம்
    இதன் நடுவே எங்கள் வாழ்க்கை!!

    – ஆ.செந்தில் குமார்.

    நன்றி : கூகிள் இமேஜ்

    Share
  • சுற்றுச்சூழல் தூய்மை

    -ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி

    சுத்துப்புறம் காத்திடுவோம்
    சொத்துசுகம் போல…
    பெத்துப்போட்டபுள்ள குட்டி
    சுத்தமாக வாழ…
    ஒத்துமையா ஊருக்கூரு
    ஒண்ணாக்கூடுவோங்க…
    வெத்துக்குப்பை கூளங்களை
    விரட்டிடுவோம் வாங்க…!

    ஆத்துமேடு குளத்து மேடு
    அசிங்கமாச்சுனா
    பாய்ஞ்சுவரும் நல்லதண்ணி
    பாய்சனாச்சுனா
    உடம்புக்குள்ளே நோவு நொடி
    தேடி வருமுங்க!
    நாடி நரம்பு கெட்டுப்போயி
    பலமிழக்குமுங்க!

    பிளாஸ்டிக்கால பையெடுத்து
    பார்சல் வாங்குறோம்
    பண்டமெல்லாம் விசமாகிப்
    பாழடிக்கிறோம்
    துணியால பையெடுத்தா
    துயரமில்லீங்க!
    நச்சுதரும் பிளாஸ்டிக்கினி
    நமக்கு எதுக்குங்க??

    ஓசோனில் ஓட்டை வந்தா
    உலகந்தாங்குமா?
    காசு பணம் மட்டுமிங்கே
    சுகத்தக் கொடுக்குமா?
    ஒருநிமிசம் யோசிச்சா
    பலவிசயம் புரியுமுங்க!
    ஒவ்வொருத்தர் மனசு வச்சா
    பசுமை வந்து சேருமுங்க!

    திட்டம் போடும் அரசாங்கம்
    மட்டுமிதுக்குக் காரணமா?
    சட்டுபுட்டுனு சர்க்கார
    திட்டீட்டாத் தீந்திடுமா?
    ஒட்டுமொத்தமா எல்லோருக்கும்
    பங்கு இருக்குதுங்க!
    பட்டுத்தொலையும் முன்னால
    பொங்கி எழுவமுங்க!!
     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180130 - Yadava -Raas 14b -lr the circle of the Raas by its fast movement appeared like a wheel. Krishna enters the yamuna to bless her too.
    180130 – Yadava -Raas 14b -lr
    the circle of the Raas by its fast movement appeared like a wheel. Krishna enters the yamuna to bless her too.

    ”ரங்காரங் காரோஸஸ் மங்கை யரோடுபோஸஸ்(POSEs)
    ரங்கா யமுனாத ரங்கரே -சிங்கனே!
    All -Fell(ஆல் -ஃஃபெல்) Down!(டவுன்)அவள் ஆகுலமாய் கோகுலத்தில்,
    மாலுனக்காய் காத்திருக்காள் மாது’’(ராதையோ அல்லது யசோதையோ)….கிரேசி மோகன்….!

    Share
  • சந்திர கிரஹண கவிதை

    மூவர்ண நிலா
    31.01.18

    FB_IMG_1517421787702

    வெண்ணிலா

    என்னவளின் பால்முகம்
    மறைக்கப்பட்டதால்

    செந்நிலாவாகி

    கோபத்திலும் தாபத்தை
    கொஞ்சலோடு உணர்த்தி

    நீல நிலாவாக

    நீந்தி மீண்டு வந்து
    பூரணப் பொலிவுடன்
    புதுநகை பூத்தாளே
    மீண்டும் வெண்ணிலாவாய்.

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    watercolour -indian ink -lr - 24x32cms  Raas 01 - Gopikas were overwhelmed with pride on their relationship with Krishna. Krishna disappears from their sight. (He was near but they couldn’t see him.) They lament their miserable plight. (Gopika geetham Sr.Bh.) They sing about the qualities of Krishna — It riverberated throughout the forest, carrying the fragrance of the upanishads. Krishna reappears — strengthening their devotion.
    watercolour -indian ink -lr – 24x32cms
    Raas 01 – Gopikas were overwhelmed with pride on their relationship with Krishna. Krishna disappears from their sight. (He was near but they couldn’t see him.) They lament their miserable plight. (Gopika geetham Sr.Bh.) They sing about the qualities of Krishna — It riverberated throughout the forest, carrying the fragrance of the upanishads. Krishna reappears — strengthening their devotion.

    ”பழக்கதோ ஷத்தால் பதுமையர்(கோபியர்) , மாலை
    வழக்கத்தில் கர்வமாய் வம்புக்(கு), -இழுத்திட,
    தேசிகர் பாடினார், தான்தோன்றி லீலையை,
    கேசவ் அதற்கேற்பக் கோடு(ஓவியம்)’’….கிரேசி மோகன்….!

    கண்ணன் தோன்றி மறையும் தன்மாயத்தைக் கோடு காட்டினார், எங்கள் கேசவ் அதற்கேற்ப கோடு காட்டினார்….!

    Share
  • ரமண வசனாம்ருதம்….!

    இன்று கிரகணம்….!
    ———————————————-

    ரமண வசனாம்ருதம்….!
    —————————————————————–

    ’’அகந்தை கிரகணம் ஆன்ம நிலவுள்
    புகுந்து பிடிக்கும் பளிச்சை, -உகந்துன்னுள்,
    நானார் விசாரிக்க நம்மைவிட்(டு) ஓடுமது:
    சோணா சலரமணன் சொல்’’….கிரேசி மோகன்….!

    Share
  • சாலையின் விதி!

    -ஆ.செந்தில் குமார்

    செலவுகள் பல கோடி
    செய்து நாட்டில் இட்ட
    குலவும் சாலைகள் யாவும்
    குடிமக்கள் மனம் மகிழ்ந்து
    உலவித் திரியும் முன்னே
    உளுத்துக் கொட்டின கற்களாய்!

    பாடு படுத்தியது சாலையைப்
    பாதாளச் சாக்கடைத் திட்டம்!
    ஓடும் மழைநீர் அரிப்பு
    ஓடாய்த் தேய்த்தது சாலையை!
    வீடுகளனைத்தும் எறியும் குப்பை
    காடாய் ஆக்கிரமித்தது சாலையை!

    தரைவழித் தொலைபேசி இணைப்பு
    துண்டு துண்டாக்கியது சாலையை!
    நிறைவான மின் இணைப்பு
    நிலை மாற்றியது சாலையை!
    குறைவான குடிநீர் வழங்கும்
    குழாய்கள் குதறின சாலையை!

    குறைந்த தரங்கொண்ட பொருட்கள்
    குலைத்துப் போட்டது சாலையை!
    நிறைந்த வண்டிகளின் நெரிசல்
    நிதமும் திணறடித்தது சாலையை!
    மறைந்தன சாலை நடைமேடைகள்
    நிறுவிய நடைபாதைக் கடைகளாலே!

    புலம்பித் தவிக்கும் மக்கள் – இந்த
    புரையோடிய ஊழலை எண்ணி!
    குழம்பித் தவிக்கும் மக்கள் – இந்த
    குறைகளை நிதமும் எண்ணி!
    விளம்பி உறுதி ஏற்போம்
    விரைவான மாற்றம் எண்ணி!

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  46

    க. பாலசுப்பிரமணியன்

    இறைவனிடம்  காட்டும் அன்புக்கு பதில் என்ன கிடைக்கும் ?

    திருமூலர்-1-1

    உலகம் போற்றும் மகானான இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் பக்தர்களுக்கு ஒரு சிறிய கதை மூலம் இறைவனின் அருளை விளக்கிக் கொண்டிருந்தார் .. ” ஒரு சிறிய கிராமத்தில் இறைவனிடம் அளவற்ற பக்தியைக் கொண்டிருந்த ஒரு மனிதன் தினமும் காலையிலே நீராடி திருநீறு அணிந்து கோயிலுக்குச் சென்று இறைவனின் புகழ்பாடி வலம் வந்து போற்றிக்கொண்டிருந்தான். இதை அவன் பல ஆண்டுகளாகச் செய்துகொண்டிருந்தான். வழக்கம்போல் ஒரு நாள் காலையில் அவன் இறைவனைத் துதித்து வலம் வந்து கொண்டிருந்தபோது காவலர்களுக்குப் பயந்து வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு திருடன் இவர் மீது மோதிவிட இவர் தடுமாறிக் கீழே விழுந்தார். அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டு காலில் இரத்தம் வந்துகொண்டிருந்தது.

    ஆனால் ஓடிச்சென்று கொண்டிருந்த திருடனோ தன்னுடைய காலில் ஏதோ தடுக்கிவிட குனிந்து பார்த்தான் அங்கே ஒரு சிறிய துணிப்பை கிடந்தது. அதை அவன் திறந்து பார்த்த பொழுது அதனுள்ளே நிறைய பொற்காசுகள் இருந்தன. அவன் மிக்க மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.

    பரம ஏழையாக இருந்த இந்த பக்தனுக்கோ ஒரே வியப்பு! எத்தனை வருடங்களாக நான் மிகவும் பக்தியோடு இறைவனை நாடி வருகிறேன். எனக்கோ காலில் அடிபட்டு இரத்தம் வருகின்றது. ஆனால் ஒரு திருடனுக்கோ இந்தக் கோவில் வழியாக ஓடும் பொழுது பொற்காசுகள் கிடைக்கின்றன. இது என்ன அநியாயம் என்று நினைத்து இறைவனிடம் முறையிடுகின்றான். “இறைவா! நீ செய்வது உனக்கே சரியென்று தோன்றுகின்றதா?. இதுதான் நீ காட்டும் கருணையா? “

    பக்தனின் கதறலைக் கேட்ட இறைவன் கூறுகின்றான் “பக்தனே! உன்னுடைய ஊழ்வினையின் காரணமாக உனக்கு இரண்டு கால்களும் இன்று போயிருக்க வேண்டும். ஆனால் என்மீது நீ நிறைந்த பக்தி கொண்டதன் விளைவாக உனக்கு காலில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு வினை விலகியது. அவனுக்கோ அவன் ஊழ்வினையின் காரணமாக ஒரு மிகப்பெரிய செல்வம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவன் இறை நம்பிக்கையின்றி தவறான செயலில் ஈடுபட்டுள்ளதால் அவனுக்கு ஒரு சிறிய தொகை மட்டும் கிடைத்துள்ளது.” என்று எடுத்துரைக்க அந்த பக்தன் இறைவனின் பேரருளைக் கண்டு வியந்தான்.

    ஊழ்வினையின் வலிமையை யாரறிவார்? அது நம்மை எவ்வாறு துன்புறுத்தும்? அதிலிருந்து விடுபடுவது எப்படி? அந்தப் பேரறிவாளனின் பாதங்களைத் தவிர வேறு எங்கு செல்ல முடியும்?

    மாணிக்கவாசகரின் இந்தப்பாடல் அவருடைய அந்த உள்ளநிலையை வெளிப்படுத்துகின்றது.

    பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையென்

    போதஎன்(று) எனைப் புரிந்து நோக்கவும்

    வருத்த மின்மையேன்  வஞ்ச முண்மையேன்

    மாண்டிலேன் மலர்க் கமல பாதனே

    அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்

    நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை

    இருத்தி னாய்முறை யோஎன் எம்பிரான்

    வம்ப னேன்வினைக்  கிறுதி யில்லையே.

    இறைவன் சில நேரங்களில் நமக்குக் கொடுக்கும் சில துன்பங்களைப் பார்க்கும் பொழுது ஒருவேளை இறைவன் நம்மை வெறுக்கிறானோ என்று தோன்றும். அவன் பாரபட்சமானவனா என்றுகூட சிந்திக்கத் தோன்றும். ஆனால் இறைவனின் உண்மைப் பொருளைப் புரிந்துகொண்டால் இந்த மயக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இதை நமக்கு உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது சுந்தரமூர்த்தி நாயனாரின் இந்தப் பாடல்

    ஒறுத்தாய் நின் அருளில்: அடியேன் பிழைத்தனைகள்

    பொறுத்தாய் எத்தனையும்: நாயேனைப்  பொருட்படுத்திச்

    செறுத்தாய்; வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம்

    கருத்தாய்: தண்கழனிக் கழிப்பாலை மேயோனே !

    பல நேரங்களில் நாம் நமது இறையன்பிற்கும் பக்திக்கும் தகுந்த பலன் கிடைக்கவில்லையே என்ற எண்ணத்தில் இறையருளை சந்தேகிக்க நினைக்கின்றோம். இது மிகவும தவறான கருத்து. இறைவனிடம் செலுத்தும் அன்புக்கும் பக்திக்கும் பதில் ஏதாவது பலனை எதிர்பார்க்கின்றோம். அதுவும் நமக்கு வெளிப்படையாகத் தெரியக்கூடியதாகவும் இறைவனின் அருளின் முத்திரை பதிந்ததாகவும் எதிர்பார்க்கின்றோம். இது ஒரு விவேகமற்ற எதிர்பார்ப்பு. அன்பும் பக்தியும் பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுவது அல்ல. இந்த வாழவை நமக்குத் தந்த அளவற்ற கருணைக்காக நாமே காட்டும் மரியாதை உண்மையான அன்பும் பக்தியும் எதிர்பார்ப்பைக் கடந்ததாக இருத்தல் அவசியம்,  கீதையில் அர்ச்சுனனுக்கு அறிவுரை வழங்கும் கண்ணன் கூறுகின்றான் “நீ கடமையை மட்டும் செய். பலன்களை எதிர்பார்க்காதே.” பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்களில் அந்தப் பலன் நமது விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது சற்றே மாறுபட்டதாகவோ அமைந்துவிட்டால் நமக்கு அதனால் துயரே தோன்றும். உண்மையான மகிழ்ச்சி செய்யும் செயலைச் செவ்வனே செய்வதில் மட்டும் உள்ளது.

    இந்த நிலையில் சிந்தனையும் அவனே, செயலும் அவனே, அதன் பலனும்  அவனுடையதே என்று எண்ணி அவன் தாள்களைச் சரணடைந்தால் துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்காதோ?

    திருமூலர் மிக அழகாக சுருக்கமாக இதை நமக்கு விளக்குகின்றார்:

    சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ

    சுத்த வெளியிற் சுடரிற் சுடர் சேரும்

    (தொடருவோம்)

    Share
  • பிரதோஷம்

      

    “சந்தியா காலத்தில் சங்கரன் தாண்டவம், –

    நந்தியிரு கொம்பின் நடுவிலே, -தொந்தியார் ,-

    கந்தனார் காண கயிலையில் கற்பகப் –

    பந்தலிடப் பங்கில் படர்ந்து “….கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180129 -Yadavabhyudaya 13- govinda pattabhishekam lr watercolour indian ink 24x32cms. The rain continued for 7days and nights without a stop. Krishna held the Goverdhana, unmoved. A humbled Indra stops the rain and repents. Krishna replaces the hill in its original place. His friends check his palm and limbs to see whether he was hurt. It didn’t show any signs of fatigue.   Indra extolls Krishna, “It is no wonder that you lifted the mountain - you sustain the whole world.  I wish to anoint you as Govinda, although it has already been given to you in your Varaha avatar, when you retrieved the earth from the waters.” Brahma sent Kamadhenu for the abhisheka of Krishna. Indra thought of the celestial Ganga. With her waters and the milk of Kamadhenu, he performed the Govinda Pattabhishekam.
    180129 -Yadavabhyudaya 13- govinda pattabhishekam lr watercolour indian ink 24x32cms.
    The rain continued for 7days and nights without a stop. Krishna held the Goverdhana, unmoved.
    A humbled Indra stops the rain and repents. Krishna replaces the hill in its original place. His friends check his palm and limbs to see whether he was hurt. It didn’t show any signs of fatigue.
    Indra extolls Krishna, “It is no wonder that you lifted the mountain – you sustain the whole world.
    I wish to anoint you as Govinda, although it has already been given to you in your Varaha avatar, when you retrieved the earth from the waters.”
    Brahma sent Kamadhenu for the abhisheka of Krishna. Indra thought of the celestial Ganga. With her waters and the milk of Kamadhenu, he performed the Govinda Pattabhishekam.

    ”கோவிந்த நாமம் கொடுத்திந் திரர்சொன்னார்,
    நோவுண்டோ மூவா முகுந்தனுக்கு! -ஆவின்பால்
    காமதேனு வார்த்திட, கங்கை ஜலமூற்ற
    சாமகானம் செய்தபி ஷேக்”….கிரேசி மோகன்….!

    நோவுண்டோ மூவா முகுந்தர்கு-குன்றேந்திய சிரமம் ஏது மூவா(மூப்பிலா-அபிராமி பட்டர் பிரயோகம்) முகுந்தர்….!
    சாமகானம் செய்து அபிஷேகம்(தளை தட்டாதிருக்க அபிஷேக்….!)(ஷேக் -மன்னர்….!)

    Share
  • மகாத்மாவுக்கு அஞ்சலி!

    -மேகலா இராமமூர்த்தி

    How To Draw Mahatma Gandhi Easily Mahatma Gandhi Drawing Pictures Please - Drawing Of Sketch - Great Drawing

    வெள்ளைப் பரங்கியன் ஆட்சிகூட உம்மைப்
    பத்திரமாய்ப் பாதுகாத்த தையா!
    கொள்ளை போனதே உந்தனுயிர் இங்கே
    இந்துச் சோதரன் கையாலே அந்தோ!

    பாழ்பட்டு நின்றதேசம் தன்னை
    வாழ்விக்க நீயிருந்தாய் அன்று
    தாழ்வுற்று நிற்கின்றோம் இன்று – எமைக்
    காத்திடவோர் உத்தமனும் இல்லை!

    இங்கே,
    சாதியின் பெயராலே சண்டை – நிதம்

    சாமியின் பெயராலே சண்டை
    வீதிகள் தோறும்தினம் சண்டை
    நாதியற்றுப் போனோமே நாங்கள்!

    வாராது வந்தமா மணியே  உம்மைத்
    தொலைத்துவிட்டு நிற்கின்றோம் தனியே
    தீராத எங்கள்துயர் தீர்க்க நீர்
    வாரீரோ பிறப்பெடுத்து மீண்டும்!

     

    Share