மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 4

தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ் 

மெட்ரீனா கதவருகில் நின்று சைமனைப் பார்த்து, “அவன் நல்லவனாக இருந்தால் நிர்வாணமாக இருக்க மாட்டான். அவன் மீது ஒரு சட்டை கூட இல்லை. அவன் நல்லவனானால், நீ அவனை, எங்கே, எப்படிக் கண்டாயென்று சொல்லியிருப்பாய்” என்றாள். அதற்கு சைமன் “நானும் அதைச் சொல்வதற்குப் பல முறை முயற்சித்தேன், நீ இடங்கொடுக்கவில்லை” என்றான்.

“நான் ஆலயத்தின் அருகே வந்த போது, இவன் நிர்வாணமாகக் குளிரில் உறைந்திருந்தான். இந்தக் கடுமையான குளிரில் எப்படி நிர்வாணமாக இருக்க முடியும்? இறைவன்தான் என்னை அங்கு அனுப்பியிருக்க முடியம். இல்லையென்றால் அவன் மரணமடைந்திருப்பான். நான் என்ன செய்வது? அவனுக்கு என்ன நடந்ததென்று நமக்கு எப்படித் தெரியும்? ஆகையால் நான் அவனுக்கு என் கோட்டைக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தேன். மெடீனா, கோபப்படாதே. நாம் எல்லோரும் ஒரு நாள் மரணமடைவோம்”.

மெடீனா கோபத்தில் பதில் சொல்ல நினைத்தவள் அந்த மனிதனைப் பார்த்து அமைதியானாள். அவன் கண்களை மூடி, கைகளை மடியில் வைத்துத் தலை குனிந்து பெஞ்சின் ஓரத்தில் அமர்ந்திருந்தான். அவன் புருவங்கள் சுருங்கி, வேதனையோடு இருப்பதைக் கண்டாள்.

மெட்ரீனா அமைதியானாள். சைமன் அவளை நோக்கி “ மெட்ரீனா, உன்னிடம் இறைவனின் அன்பு இல்லையா?” என்று கேட்டான். அதைக் கேட்ட போது அவள் அந்த மனிதனைத் திரும்பவும் பார்த்தாள். அவள் மனம் திடீரெனெ இளகியது. கதவு அருகிலிருந்து விலகி அடுக்களைக்குச் சென்று குடிப்பதற்கு போதை கொடுக்காத திராவகத்தையும், மீதியிருந்த ரொட்டியையும் மேசை மீது கொண்டு வைத்துவிட்டு அவனைச் சாப்பிடச் சொன்னாள். சைமன் உணவைப் பகிர்ந்து கொடுத்தான். மெட்ரீனா மேசையின் மூலையில் அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரெனெ அவள் மனம் இரக்கத்தால் நிறைந்து அவன்மேல் அன்பு கொண்டாள். உடனே அவன் முகம் பிரகாசமடைந்தது. அவன் கண்களை உயர்த்தி மெட்ரீனாவைப் பார்த்துப் புன்னகைத்தான். புருவங்களில் காணப்பட்ட சுருக்கங்களும், வேதனையும் மறைந்து விட்டன.

அவர்கள் உண்டு முடித்த பின், மெட்ரீனா எல்லாவற்றையும், சுத்தம் செய்து விட்டு, அந்த மனிதனிடம் “நீ எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டாள்..

“நான் இந்தப் பகுதியிலுள்ளவனல்ல” என்றான்
“அப்படியானால், எப்படிக் கோவிலருகில் வந்தாய்?”
“என்னால் சொல்ல முடியாது”

“யாராவது உன்னிடமிருந்து திருடினார்களா?”

“இல்லை, கடவுள் என்னைத் தண்டித்தார்”

“நீ அங்கே நிர்வாணமாக இருந்தாயா?”

“ஆம், நிர்வாணமாகவும், குளிரில் உறைந்தும் இருந்தேன். சைமன் என்னைப் பார்த்து இரக்கம் கொண்டு அவன் கோட்டை எடுத்து எனக்கு அணிவித்து இங்கே கூட்டிக் கொண்டு வந்தான். நீ என் மேல் இரக்கம் கொண்டு உண்ண உணவும், குடிக்க நீரும் கொடுத்தாய். இறைவன் உனக்கு கைம்மாறு கொடுப்பாராக” என்றான்
மெட்ரீனா, தான் தைத்துக் கொண்டிருந்த சைமனின் பழைய கோட்டையும், ஒரு பழைய கால் சட்டையையும் அவனுக்குக் கொடுத்து இரவு தூங்குவதற்கும் இடம் கொடுத்தாள். இரவு முழுவதும் மெட்ரீனாவால் தூங்க முடியவில்லை. வீட்டிலிருந்த கடைசி ரொட்டியும் முடிந்துவிட்டது. மறுநாள் உணவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சைமனும் தூங்கவில்லை. அவள், “சைமன், ஏன் அந்த மனிதன் நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை? பார்த்தால் நல்லவனாகத்தான் தோன்றுகிறான்” என்றாள்.

“ஏதோ காரணங்கள் இருக்கலாம்”.
“சைமன், நாம் எல்லோருக்கும் கொடுக்கிறோம், நமக்கு ஏன் ஒருவரும் கொடுக்கவில்லை?”

சைமனுக்குப் பதில் தெரியவில்லை. “சரி, நாம் இப்போது தூங்குவோம்” என்று கூறித் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

தொடரும்

About சற்குணா பாக்கியராஜ்

பறவைகள் ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க