திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 46
க. பாலசுப்பிரமணியன்
இறைவனிடம் காட்டும் அன்புக்கு பதில் என்ன கிடைக்கும் ?
உலகம் போற்றும் மகானான இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் பக்தர்களுக்கு ஒரு சிறிய கதை மூலம் இறைவனின் அருளை விளக்கிக் கொண்டிருந்தார் .. ” ஒரு சிறிய கிராமத்தில் இறைவனிடம் அளவற்ற பக்தியைக் கொண்டிருந்த ஒரு மனிதன் தினமும் காலையிலே நீராடி திருநீறு அணிந்து கோயிலுக்குச் சென்று இறைவனின் புகழ்பாடி வலம் வந்து போற்றிக்கொண்டிருந்தான். இதை அவன் பல ஆண்டுகளாகச் செய்துகொண்டிருந்தான். வழக்கம்போல் ஒரு நாள் காலையில் அவன் இறைவனைத் துதித்து வலம் வந்து கொண்டிருந்தபோது காவலர்களுக்குப் பயந்து வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு திருடன் இவர் மீது மோதிவிட இவர் தடுமாறிக் கீழே விழுந்தார். அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டு காலில் இரத்தம் வந்துகொண்டிருந்தது.
ஆனால் ஓடிச்சென்று கொண்டிருந்த திருடனோ தன்னுடைய காலில் ஏதோ தடுக்கிவிட குனிந்து பார்த்தான் அங்கே ஒரு சிறிய துணிப்பை கிடந்தது. அதை அவன் திறந்து பார்த்த பொழுது அதனுள்ளே நிறைய பொற்காசுகள் இருந்தன. அவன் மிக்க மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.
பரம ஏழையாக இருந்த இந்த பக்தனுக்கோ ஒரே வியப்பு! எத்தனை வருடங்களாக நான் மிகவும் பக்தியோடு இறைவனை நாடி வருகிறேன். எனக்கோ காலில் அடிபட்டு இரத்தம் வருகின்றது. ஆனால் ஒரு திருடனுக்கோ இந்தக் கோவில் வழியாக ஓடும் பொழுது பொற்காசுகள் கிடைக்கின்றன. இது என்ன அநியாயம் என்று நினைத்து இறைவனிடம் முறையிடுகின்றான். “இறைவா! நீ செய்வது உனக்கே சரியென்று தோன்றுகின்றதா?. இதுதான் நீ காட்டும் கருணையா? “
பக்தனின் கதறலைக் கேட்ட இறைவன் கூறுகின்றான் “பக்தனே! உன்னுடைய ஊழ்வினையின் காரணமாக உனக்கு இரண்டு கால்களும் இன்று போயிருக்க வேண்டும். ஆனால் என்மீது நீ நிறைந்த பக்தி கொண்டதன் விளைவாக உனக்கு காலில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு வினை விலகியது. அவனுக்கோ அவன் ஊழ்வினையின் காரணமாக ஒரு மிகப்பெரிய செல்வம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவன் இறை நம்பிக்கையின்றி தவறான செயலில் ஈடுபட்டுள்ளதால் அவனுக்கு ஒரு சிறிய தொகை மட்டும் கிடைத்துள்ளது.” என்று எடுத்துரைக்க அந்த பக்தன் இறைவனின் பேரருளைக் கண்டு வியந்தான்.
ஊழ்வினையின் வலிமையை யாரறிவார்? அது நம்மை எவ்வாறு துன்புறுத்தும்? அதிலிருந்து விடுபடுவது எப்படி? அந்தப் பேரறிவாளனின் பாதங்களைத் தவிர வேறு எங்கு செல்ல முடியும்?
மாணிக்கவாசகரின் இந்தப்பாடல் அவருடைய அந்த உள்ளநிலையை வெளிப்படுத்துகின்றது.
பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையென்
போதஎன்(று) எனைப் புரிந்து நோக்கவும்
வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன்
மாண்டிலேன் மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்
நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை
இருத்தி னாய்முறை யோஎன் எம்பிரான்
வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே.
இறைவன் சில நேரங்களில் நமக்குக் கொடுக்கும் சில துன்பங்களைப் பார்க்கும் பொழுது ஒருவேளை இறைவன் நம்மை வெறுக்கிறானோ என்று தோன்றும். அவன் பாரபட்சமானவனா என்றுகூட சிந்திக்கத் தோன்றும். ஆனால் இறைவனின் உண்மைப் பொருளைப் புரிந்துகொண்டால் இந்த மயக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இதை நமக்கு உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது சுந்தரமூர்த்தி நாயனாரின் இந்தப் பாடல்
ஒறுத்தாய் நின் அருளில்: அடியேன் பிழைத்தனைகள்
பொறுத்தாய் எத்தனையும்: நாயேனைப் பொருட்படுத்திச்
செறுத்தாய்; வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம்
கருத்தாய்: தண்கழனிக் கழிப்பாலை மேயோனே !
பல நேரங்களில் நாம் நமது இறையன்பிற்கும் பக்திக்கும் தகுந்த பலன் கிடைக்கவில்லையே என்ற எண்ணத்தில் இறையருளை சந்தேகிக்க நினைக்கின்றோம். இது மிகவும தவறான கருத்து. இறைவனிடம் செலுத்தும் அன்புக்கும் பக்திக்கும் பதில் ஏதாவது பலனை எதிர்பார்க்கின்றோம். அதுவும் நமக்கு வெளிப்படையாகத் தெரியக்கூடியதாகவும் இறைவனின் அருளின் முத்திரை பதிந்ததாகவும் எதிர்பார்க்கின்றோம். இது ஒரு விவேகமற்ற எதிர்பார்ப்பு. அன்பும் பக்தியும் பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுவது அல்ல. இந்த வாழவை நமக்குத் தந்த அளவற்ற கருணைக்காக நாமே காட்டும் மரியாதை உண்மையான அன்பும் பக்தியும் எதிர்பார்ப்பைக் கடந்ததாக இருத்தல் அவசியம், கீதையில் அர்ச்சுனனுக்கு அறிவுரை வழங்கும் கண்ணன் கூறுகின்றான் “நீ கடமையை மட்டும் செய். பலன்களை எதிர்பார்க்காதே.” பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்களில் அந்தப் பலன் நமது விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது சற்றே மாறுபட்டதாகவோ அமைந்துவிட்டால் நமக்கு அதனால் துயரே தோன்றும். உண்மையான மகிழ்ச்சி செய்யும் செயலைச் செவ்வனே செய்வதில் மட்டும் உள்ளது.
இந்த நிலையில் சிந்தனையும் அவனே, செயலும் அவனே, அதன் பலனும் அவனுடையதே என்று எண்ணி அவன் தாள்களைச் சரணடைந்தால் துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்காதோ?
திருமூலர் மிக அழகாக சுருக்கமாக இதை நமக்கு விளக்குகின்றார்:
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர் சேரும்
(தொடருவோம்)