Blog

  • இந்த வார வல்லமையாளர் (253)

    இவ்வார வல்லமையாளராக இயக்குநர் சமுத்திரகனியை தேர்ந்தெடுக்கிறோம்.

    மதுரையில் மலையாக குவிந்திருக்கும் குப்பைகளை குறித்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது. அதை வல்லமையிலும் மீள்பதிவு செய்திருந்தோம்.

    அதன்பின் விழித்துக்கொண்ட மாநகராட்சி “தூய்மை தூதுவர்கள்” எனும் திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றுவதை முன்னெடுக்கும் வகையிலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி, நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து, ரேடியோ தொகுப்பாளர் ரமணா ஆகியோர் தூய்மைத் தூதுவர்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    இந்த நிகழ்வில் பேசிய சமுத்திரக்கனி “நமக்குப் பிரச்னை என்றால் மட்டுமே நாம் சத்தம் போடும் காலம் போய் விட்டது. தற்போது எல்லோருக்கவும் குரல் கொடுக்க வேண்டிய அளவுக் குப்பைகள் நம்மை சூழ்ந்துவிட்டது. முன்பு நமது முன்னோர்கள் காலத்தில் நாம் பயன்படுத்திய பொருளின் எச்சத்தை வீட்டுக்குப் பின்னால் போட்டு, அந்தக் குப்பை உரமாக்கி வயலுக்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. வரும் காலத்தில் உணவுக்காகத்தான் உலகச் சண்டை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஒருவன் வரும் காலத்தில் நான்கு இட்லி வைத்திருந்தால், அதைப் பிடுங்கித் தின்னும் காலம் வரப்போகிறது. நம் முன்னோர் விட்டுச் சென்ற பல பொக்கிஷங்களை நாம் காணாமல் செய்துவிட்டோம், அதை மீட்க வேண்டும். அனைவரும் ஒன்று படுவோம் பாரம்பர்யத்தை மீட்போம்’’ என்றார்.

    இவர் விழிப்புணர்வு ஊட்டும் படங்களை எடுப்பதிலும் திறமையானவர். இவர்நடித்த விசாரணை படம் போலிஸின் பிடியில் சிக்கி பொதுமக்கள் படும் அவதிகளை சுட்டிகாட்டியது. அதற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவரது அப்பா படம் ஒரு தந்தையின் கடமையை மிக அழகாக எடுத்துரைத்த படம்.
    சுற்றுசூழலை மேம்படுத்தும் பணியை இவர் திறம்பட ஆற்றுவார் என நம்பியும், வருங்கால இளைஞர்களுக்கு சுற்றுபுறசூழலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் இவரது தேர்வு அமையும் என வல்லமை நம்புகிறது.

    வல்லமையாளர் சமுத்திரகனிக்கு நம் நல்வாழ்த்துகள்

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -4

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருவாலி -திருநகரி  (அருள்மிகு அழகிய சிங்கர்)

    sri-azhagiya-singar-triplicane-2

    கண்களில் கனலும் கைகளில் நகமும்

    உள்ளத்தில் சினமும் உறுமிடும் குரலும்

    ஒப்பிலா வீரமும் ஒன்றிய சிங்கமாய்

    உருவமே எடுத்தாய் அழகிய சிங்கா !

     

    தூண்களைப் பிளந்து தோன்றிய ஒளியே

    தானெனும் அகந்தையை அடக்கிய அரியே !

    தாயெனும் கருணை நெஞ்சினில் நின்றும்

    தருமங்கள் காக்க நெருப்பென வந்தாய் !!

     

    முன்னும் பின்னும் முடிவாய் பிரித்து

    முகத்தினில் குருதியால் முடிவுரை எழுதி

    மூலவன் அமர்ந்த திசையினை நோக்கி

    முப்புரி அமரரும் மோனத்தில் நின்றார் !

     

    சினம்காக்க சினம்காக்கச் சேர்ந்தனர் அமரரும்

    சேவடி விடுத்தே சிந்தையை  அணைத்துச்

    சேர்ந்தே அமர்ந்தாள் சீர்மிகு செங்கமலத்தாள்

    சிதையாத கருணையைச்  சிங்கமே தந்தாயே !

     

    நலம்காக்க நலம்காக்க நானிலமே வேண்டிட

    நிலையாத சினம்விட்டு நீலமேகன் அருளிட

    நினையாத துயர்கூட நிலம்விட்டு நீங்கிடும்

    நினைவெல்லாம் சிங்கனின் சேவடி நின்றிடும் !

     

    வந்திட்ட துயரெல்லாம் வரதனே நீக்கிடுவாய்

    வாராத துயரெல்லாம் வருமுன்னே விலக்கிடுவாய்

    வந்தனை செய்கின்றேன் வாழ்வெல்லாம் துணையிருக்க

    வருவாயே அருள்வாயே  வரலட்சுமி மணாளனே !

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 139இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    cat and child

    பூனையும் குழந்தையும் கொஞ்சிமகிழும் அழகுக்காட்சி நெஞ்சைக் கவர்கின்றது. இந்த அரிய காட்சியை அற்புதமாகப் படம்பிடித்துவந்திருக்கும் திரு. எஸ்.எம்.கே.வுக்கும், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குப் பரிந்துரைத்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி.

    உறவுகளையும் நட்பையும் தகுதி அடிப்படையில் தெரிவு செய்யும் பெரியோர் மத்தியில், உயிர்களிடத்தில் பேதமின்றிப் பரிவுகாட்டும் கள்ளமற்ற வெள்ளை மனம் பிள்ளைகளுடையது!

    பாலுளம் படைத்த அப்பிஞ்சுகளை நஞ்சாக்கும் திருப்பணியைப் பெற்றோரும் சுற்றமும் செய்யாதிருக்கவேண்டும்!

    இனி, கவிஞர்கள் கவிபாடும் நேரம்!

    *****

    ”வீட்டுப் பூனையையும் காட்டுப் புலியையும் பேதம்காட்டாமல் நேசிக்கும் பிள்ளைகளுக்கு உணவோடு வேண்டாத பழக்கங்களையும் சேர்த்து ஊட்டுகின்றானே பாவி மனிதன்!” என உளம் நோகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வளர்வது…

    அஞ்சுவதில்லை
    பிஞ்சுக் குழந்தை,
    அதற்கு
    புலிக் குட்டியும்
    பூனைக் குட்டியும் ஒன்றுதான்..

    பிள்ளை வளர
    உணவு ஊட்டுவதனுடன்,
    உதவாத பழக்கங்களையும்
    ஊட்டிவிடுகிறானே மனிதன்..

    விளைவு-
    அச்சமும் பேதங்களும்
    பிள்ளையின்
    வெள்ளை உள்ளத்தைக்
    கொள்ளைகொண்டுவிடுகின்றன,
    வளர்வது
    பிள்ளையின் உடல்தான்-
    உள்ளமல்ல..

    மாறுவாயா மனிதா
    இனியாவது…!

    *****

    ”தன் சின்னச் சின்ன ஆசைகளைப் பட்டியலிட்டு, கூண்டுக்கிளியாய் அடைபட்டிருக்கும் தனக்கு அந்த ஆசைகள் கைகூடும்வரை, இந்தப் பூசையே (பூனை) துணை” என்றுரைக்கும் குழந்தையைக் காண்கின்றோம் திருமிகு. ஹேமா வினோத்குமாரின் கவிதையில்.

    நின்னை பிரியோன்!!

    சிறுபிள்ளையென்று செல்கிறாயோ??
    விளையாட மறுக்கிறாயோ??
    அம்மா வைகிறாள்!!
    அப்பா கோபிக்கிறார்!!
    தாத்தாவும் தமையனும் தண்டிக்கிறார்கள்!!
    புறம் செல்லாமல் அடைபட்டேன்
    கூண்டிற்கிளியாய்!!
    புறம் சென்றால் கால் பழுக்கும்
    பாட்டியின் கடுஞ்சொல். !!
    புழுதிமண்ணில் தவழ ஆசை!!
    ஏர்மாட்டின் பின்செல்ல ஆசை!!
    சேற்றுமண்ணோடு விளையாட ஆசை!!
    குஞ்சுக்கோழிகளைக் கொஞ்ச ஆசை!!
    இவ்வனைத்தும் நிறைவேற வேண்டும்
    என்று நினைவெல்லாம் ஆசை!!
    இவ்வனைத்திற்கும் அப்பால்
    உன்னைக் கொஞ்சி மகிழ ஆசை!!
    மேற்சொன்ன ஆசை எப்போதோ??
    கூண்டிற்கிளியாய்!!
    ஆசைகளுடன்!!
    நீயாவது விலகாதே!!
    ஆசை நிறைவேறும் மட்டும்!!
    அதுவரை!!

    நின்னை பிரியோன்!!

    *****

    ”பயமறியாத இளங்கன்று பேதமறியாது உயிர்களை அரவணைக்கின்றது. அன்பின் வழியதன்றோ உயிர்நிலை!” என்று அன்பின் இன்றியமையாமையை அகிலத்துக்கு உணர்த்துகின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம். 

    அரவணைப்பு:

    பூந்தளிர் அணைப்பில் ஒரு பூனை இங்கே!
    சாந்தமாய் இருக்குது தன் குணம் மறந்தே!
    இளங் கன்று பயமறியாது!
    பிள்ளைக்கு பேதம் தெரியாது!
    அன்பின் பிடியில் அகப்படும் மலையே!
    அன்பின் விளைவில் அனைத்தும் நலமே!
    அன்னையின் அணைப்பில் பிள்ளை மகிழும்!
    பிள்ளையின் அணைப்பில் அகிலம் மகிழும்!
    நீரின் அணைப்பில் பயிர்கள் வாழும்!
    ஆண்டவன் அணைப்பில் உலகம் வாழும்!
    காற்றின் அணைப்பில் சீவன் வாழும்!
    அணைப்பில்லா உலகம்!
    உயிரில்லா மெய்யாகும்!
    மணமில்லா மலராகும்!
    இ!சையில்லா பாட்டாகும்!
    ஒளியில்லா விளக்காகும்!
    மழையில்லா பயிராகும்!
    அன்பில்லா தாயாகும்!
    அரவணைத்து வாழ்ந்திட்டால்!
    உலகம் உன் வசமாகும்!
    கணவன், மனைவி அரவணைத்து சென்றிட்டால்!
    இல்லறம் இனிதாகும்!
    அண்ணன், தம்பி அரவணைத்து வாழ்ந்திட்டால்!
    குடும்பம் சிறந்தோங்கும்!
    மாமியார், மருமகள் அரவணைத்து இருந்திட்டால்!
    சொர்க்கம் வீட்டிலே உருவாகும்
    அவனின்றி ஓர் அணுவும் அசையாது!
    இது ஆன்றோர் மொழி!
    அரவணைப்பின்றி உலகம் மகிழாது!
    இதுவே இன்றைய வாழ்வின் வழி!

    *****

    ”சாதியற்ற சமூகத்தைப் படைக்கவும், சமநீதியற்ற சமூகத்தை உடைக்கவும் நாம் இணைந்து பாடுபடுவோம்” என்று புரட்சிசெய்யப் பூனையைத் துணைக்கழைக்கும் பாப்பாவைக் காண்கிறோம் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனின் பாட்டில். 

    பாப்பா பாட்டு

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    நாம் அனைவரும் ஒன்றென பாரதி சொன்னாரே

    காக்கை குருவி எங்கள் சாதியெனப் பாடினாரே
    சாதிகள் இல்லை என்றென்னிடம் கூறினாரே

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    பேதமின்றி வாழ்ந்திடக் கற்றோரே

    இணைந்திருவரும் பாடம் புகட்டலாம்
    வேற்றுமையும் பாகுபாடும் தவறென உணர்த்தலாம்

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    நானில மனிதருக்கு நல்வழி புகட்டிடுவீரே

    எந்நிற மிருப்பினும் யாவும் ஒரே தரமென்று
    எந்நிலையிலும் தன்னிலை மாறாமல்
    என்றும் எங்கும் கூடி வாழும் பூனையாரே

    எம் மனிதருக்கும் அதை உணர்த்திட வாரீரே
    மதம் நிறம் மொழியென அவர் பாடும்
    வேற்றுமை கீதங்கேட்டு பாரதத்தாய் வருந்துவதைப் பாரீரே..

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    மனிதரிடம், சாதிகள் இல்லையென உணர்த்துவீரே
    பாகுபாடு கூடாதென தெளிய வைப்பீரே

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    நாம் அனைவரும் ஒன்றென பாரதி சொன்னாரே!!

    *****

    ஆசையுடன் மழலையர் விளையாட ஏற்றது மீசை வைத்த பூனைக்குட்டி; பாரதியின் ஏட்டில், மருதகாசியின் பாட்டில் துள்ளி இடம்பிடித்தது இந்தப் பூனைக்குட்டி; பாய்ந்து இரையைப் பிடிக்கவும் செய்யும்; சாய்ந்து மழலை மடியில் உறவாடவும் செய்யும்” என்று இனிய பூனைக்கதையொன்றைத் தன் கவிதையில் சொல்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    குழந்தையும் பூனையும்..!

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றென..
    ……………கவியரசின் மனதிலன்று தத்துவமே பிறந்தது.!
    மழலை பேசும்அழும் விழும்எழும்.!…வீட்டில்..
    ……………பழகும் பிராணியோடு பயமின்றி விளையாடும்.!
    அழுக்காக்கிக் கொள்ளும் உடம்பையும் சட்டையும்..
    ……………அழுக்கதன் மனதிலொரு போது மில்லையாம்.!
    பழுத்த பெரியோர்களைப் பழமைபேசச் சொல்லி.!
    ……………குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும்.!.
    ஆசையுடன் வளர்ப்பதற்கும் பழகு தற்கும்..
    ……………ஐந்தறிவு ஜீவிகளும் பலவுண்டு நம்மிடையே.!
    மீசைவச்ச பூனைக்குட்டியும் அதிலே ஒன்றாம்..
    ……………மியாமியா வெனக்கத்தும்! நம்காலடியில் சுற்றும்.!
    தோசைபோல ஒட்டிக் கொள்ளும் நம்மடியில்..
    ……………தொட்டு வருடினால் மனதுக்கு இதமளிக்கும்.!
    ஆசைநாயகிக்கு அருமைப் பரிசாக அப்பூனையை..
    ……………அயல்நாட்டில் வழங்கும் வழக்கமும் உண்டாம்.!..

    வானூர்திபோல சிறிதுதூரம் வேகமாக ஓடியே..
    ……………வகையாய் இரையை வாயால் பிடிக்கும்.!
    தானும் புலிக்குச் சற்றும் சளைத்தவனில்லை..
    ……………எனச்சீறிப் பாய்ந்துதன் பல்லைக் காட்டும்.!
    ஊனுண்ணும் பாலூட்டி,!..சஷ்டியின் வாகனமது!..
    ……………உபத்திரவம் மனிதர்க் கென்றும் செய்யாது.!மீனுணவை விரும்பி உண்ணும் மிச்சமதை..
    ……………தானீன்ற குட்டிக்குப் பகிர்ந்து கொடுக்கும்.!..

    காட்டில் உலவும் புலியுமிதற்கொரு உறவாகும்..……………கனிவுடன் பழகும் ஆபத்தில்லா அழகுப்பூனை.!
    வீட்டில் நமக்குப் பொழுதுபோகும் தன்னிடம்..
    ……………மாட்டிய எலியைக் கவ்வித்தூக்கியே பந்தாடும்.!
    பாட்டில் பாரதியு மிதற்கொரு இடமளித்தான்..
    ……………பூனையின் பலநிறம் சொல்லும் தத்துவத்தாலே.!
    ஏட்டில் எழுதிய மியாவ்மியாவ்ப் பாடலின்றும்..……………என்றும் ஒலிக்கிறது மருதகாசியின் நினைவாக.!

    *****

    ”காலை நேரப் பரபரப்பில் தாய்க்கும் தந்தைக்கும் குழந்தையிடம் பாசம் காட்ட நேரம் வாய்க்கவில்லை; அன்புக்கு ஏங்கும் குழந்தை பூனையைக் கொஞ்சி நெஞ்சம் ஆறுகின்றது” என்கிறார் மரு. எஸ். பார்த்தசாரதி. 

    காலத்தை வெல்ல வேண்டுமே !
    கால்களில் காகமும் குருவியும் —
    காலையில் கிழக்கு நோக்கி
    பணிக்குப்பறக்கும் தந்தை –
    வேகுமோ அரிசியும் பருப்பும்
    வேகத்தில் நடக்கிறது சமையல் –
    அவகாசம் கொடுக்காத அவசரம் –
    வேலைக்கு நேரமாகிறதே –
    மேற்கே பறக்கும் தாய் –
    ஓ ! குட்டிப்பூனையே !
    அந்தக்குழந்தை
    அன்பு காட்ட ,
    பாசம் பொழிய ,
    உன்னைத்தவிர யாரிருக்கார்
    இந்த பொருள் சார் உலகில் ?

    *****
    பூனையும் குழந்தையும் பரிவோடு இணைந்திருக்கும் காட்சியை, அதில் தெரியும் அன்பின் மாட்சியை அழகுறப் பதிவுசெய்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து…

    குழந்தை மனம்

    பூனையின் பட்டுடல் தொட்டப்
    பூங்கரம் கொண்டு மொட்டு
    விரிந்திடும் மலரைப் போன்று
    வியந்திடுமன்றோ குழந்தை மனம்! – அதை
    பட்டம் பதவி பணமென்ற
    பகட்டுக ளனைத்தும் சேர்ந்தாலும்
    எட்டிப் பிடிக்க இயன்றிடுமா
    எந்திர வாழ்க்கை மனிதனுக்கு?

    வண்ணத்துப்பூச்சி பறப்பதைக் கண்டும் – வானில்
    விண்மீன் இருப்பதைக் கொண்டும்
    மிதக்கும் வட்ட நிலவினைப்போல
    முகம் மகிழ்ச்சியடையும் மழலைக்கு! 
    அரும்பாடு பட்டு உழைத்து
    அங்கம் நோக ஈட்டியவெல்லாம்
    தங்கமனம் கொண்ட குழந்தையின் 
    தகுதிக் கென்றும் ஈடாமோ?

    இருப்பதைக்கொண்டு மகிழும் இதயம்
    இன்முகத்தோடு இருந்திடும் என்றும்
    சற்றும் தளரா சுறுசுறுப்பு – வெறுப்பைச்
    சடுதியில் மறந்திடும் குழந்தைமனம்!
    தரங்கெட்ட குறுகிய நோக்கம்
    தகுதியற்ற கோணல் புத்தி
    செல்லும் குறுக்கு வழிகளெல்லாம் – மனிதா 
    செம்மை வாழ்வைக் கொடுத்திடுமா?

    குழந்தைமை ஒரு வரம்! ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இறையடியாரைப் போல் குழந்தையின் உலகில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் பேதமில்லை! ”எத்துணைப் பொருட்செல்வத்தை வாரிவாரிக் குவித்தாலும் மழலையின் பொன்மனத்துக்கு அவை ஈடாகுமா?” என்று கவிஞர் கேட்கும் கேள்வி நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

    பூனையைத் தொட்டு மகிழும் பூந்தளிரின் மகிமையைச் சொல்லோவியமாய்த் தீட்டியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பினைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

     

     

     

    Share
  • சனிப்பெயர்ச்சி மஹா யாகம்

    தன்வந்திரி பீடத்தில்

    19.12.2017-அன்று காலை

    சனிப்பெயர்ச்சி மஹா யாகம்

    இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற 4ம் தேதி மார்கழி மாதம் செவ்வாய் கிழமை 19.12.2017 காலை 8.59 மணி முதல் 10.10க்குள் சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப் பெயர்ச்சி ஆகிறார்.

    இடப்பெயர்ச்சியை முன்னிட்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 19.12.2017 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சனிப்பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து சனியால் உண்டான பாதிப்புகள் குறைய நடைபெறும் ஊனமுற்றோர்க்கு உதவி, முதியோர்க்கு அன்னதானம், வஸ்திர தானம், எள்ளு தானம்,நல்லெண்ணைய் தானம், மற்றும் இரும்பு தானம், வழங்கப்பட உள்ளது. இந்த தானங்களில் பங்கேற்க விரும்பும் நபர்கள் கைங்கர்யம் செய்து பயன் பெறலாம். மேலும் தன்வந்திரி பீடத்தில் ஸ்வாமிகளின் ஆசிகளுடன் கடந்த 13 ஆண்டுகளாக குரு பெயர்ச்சி, இராகு-கேது பெயர்ச்சி, சனி பெயர்ச்சி யாகங்களும், நூற்று கணக்கான யாகங்கள் பக்தர்கள் பயன்பெறும் விதத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குருப்பிடத்தக்கதாகும்.

    அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் :

    ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்கள் மற்றும் சனிதிசை,சனிபுத்தி நடப்பவர்கள்.

    சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6,11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது. மற்ற எல்லா ஸ்தானத்துக்கும் பகை, தீமைதான். அஷ்டமசனி, ஏழரைசனி, கண்டகசனி ,விரய சனி, பாதசனி அதிக பாதிப்பைதரும்

    ஜாதகத்தில் கிரகங்களின் பலத்தை பொறுத்துதான் சனியோ, குருவோ பலனை தர முடியும். யோகமான திசாபுத்தி நடந்தால் கல்யாணம் ,காதுகுத்து வீடுகட்டுதல் என சுப செலவாக மாற்றி சுப விரயமாக ஏழரை சனி மாற்றி விடும்.

    இந்த யாகத்தில் கலந்துகொள்வதற்கு ஒரு நபர் ஒரு ராசிக்கு சங்கல்ப காணிக்கை ரூ 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற ,தன்வந்திரி பகவான் டாலர், மற்றும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் புகைப்படம், ஹோம பிரசாதத்துடன் வழங்கப்படும்..

    இந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். சனிபெயர்ச்சியில் தங்கள் பெயரை பதிவு செய்து பயன்பெறகேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்,

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

    கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,

    வாலாஜாபேட்டை-632513

    தொலைபேசி : 04172-230033 / 09443330203

    www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in

    Email : danvantripeedam@gmail.com

    Share
  • தமிழ் ஹைக்கூ – 100 – அன்பின் அழைப்பு

     

    ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா’

     

    Haiku 100 copy

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    Tiruppavai 03 -Uththama -raw -watercolour -24x32cms (The glory of Uththama.  Like a good monsoon, the generosity of wise men to impart knowledge, results in unhindered wealth and prosperity.)
    Tiruppavai 03 -Uththama -raw -watercolour -24x32cms (The glory of Uththama. Like a good monsoon, the generosity of wise men to impart knowledge, results in unhindered wealth and prosperity.)

    ”கிளிப்பிள்ளை போலவள் கீசுகீசு பாட்டை
    களிப்புடன் ஓதுவான் கண்ணன் -தளிப்புன்னில்
    அக்காரச் சோறுண்ன அந்தரங்கன் கைப்பிடித்து
    உக்கார வைத்தோளை உன்னு”….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி (140)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    24550360_1497454750308719_486553151_n

    லோகேஸ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -3

    க.பாலசுப்பிரமணியன்

     

    திருவாரன் வில்லை – பார்த்தசாரதி பெருமாள்

    thiruvidanthai

    மண்வீழ்ந்த சக்கரத்தை மறுபடியும் தூக்கிடவே

    மனமொடிந்து மாவீரன் கர்ணனும் முயன்றிடவே

    மனங்குவிந்த சினம்கொண்டு தனயனைத் தாக்கிவிட்ட

    தனஞ்செயன் தவறுகள் களைந்திட்ட தலமன்றோ !

     

    ஆலிலையில் வந்தாலும் ஆயர்பாடி வளர்ந்தாலும்

    ஆதிசேடன் மேலுறங்கி அலைகடலில் வாழ்ந்தாலும்

    ஆதிமூலமென அழைத்தவுடன் அருள்செய்ய வருவானே

    ஆதிமுதல் அந்தம்வரை அருள்பவனே அரங்கத்தானே !!

     

    குழலோசை மயக்கத்திலே கூடிவரும் கோபியர்கள்

    குலம்மறந்து குடிமறந்து கோகுலனின் போதையிலே

    குழல்பறக்க  உடல்நெளிந்து கொடியெனவே அசைய

    குழம்பினவே ஆவினங்கள் கோவிந்தன் மாயையிலே !

     

    வான்செல்லும் கார்மேகம் வளிதன்னில் இளைப்பாற

    மான்போன்ற கோபியர்கள் நடுவினிலே நீயிருக்க

    தான்பெற்ற நிழலாகத் தன்னுருவம் உன்னில்கண்டு

    வியந்தே நிற்கின்றது கண்டாயோ வைகுந்தா !

     

    காழியிலே படமெடுத்து வலமிட்ட காளிங்கனை

    நாழியிலே நாடியடக்கி நடனமிட்ட நாரணனே

    தோழியர்கள் கூடிடவே தாள்பார்த்து ஆடியவனே

    ஊழியிலும் உயிர்காக்க உன்னையன்றி யாருண்டு ?

     

    போர்முனையில் நானில்லை தேரோட்ட நீயில்லை

    போதனைகள் சொல்லிவிடவே புதியகீதை தேவையில்லை !

    போக்கிடமே  பொற்பாதம் புகலடைந்தேன் புண்ணியனே

    போக்கிடுவாய் துயரமெல்லாம் புவியெல்லாம் காப்பவனே !

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 101.

    பார்த்தோல்டி அருங்காட்சியகம், கோல்மார், பிரான்சு

    முனைவர் சுபாஷிணி

    அமெரிக்காவை நினைத்தால் நம் மனதில் முதலில் தோன்றுவது பிரம்மாண்டமாக நியூ யார்க் மாநிலத்தின் லிபர்ட்டி தீவில் உயர்ந்து நிற்கும் சுதந்திர அன்னையின் சிற்பம் என்றால் அதனை மறுக்க முடியாது அல்லவா? இந்தச் சுதந்திர அன்னையின் சிலை உருவாக்கத்தின் பின்னணியை அறிந்து கொள்வதும் சுவாரசியமான ஒன்று தானே.

    unnamed (1)

    முதன் முதலில் பிரஞ்சுக்காரரான எடுவர்ட் (Edouard de Laboulaye) அமெரிக்காவில் சுதந்திர சிந்தனையைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சின்னம் ஒன்று கட்டப்பட வேண்டும் என்ற தன் கருத்தினை 1865ஆம் ஆண்டு வெளியிட்டார். இதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரஞ்சு சிற்பியான திரு.பார்த்தோல்டியிடம் (Frederic Auguste Bartholdi) இச்சிலையை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனைக் கட்டுவதற்குப் போதுமான பொருளாதார பலமின்றி இருந்த சூழலினால் பல கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும், லாட்டரி, கேளிக்கை நிகழ்வுகள் என்ற வகையிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும் இதனைக் கட்டி முடிக்கத் தேவைப்படும் பணத்தைச் சேகரிக்கும் பணி மிகத் துரிதமாகவும் விரிவாகவும் நடைபெற்றது.

    unnamed (2)

    சிற்பி பார்த்தோல்டி செம்பினால் உருவாக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவித் தேவைப்பட்டதால் ஐஃபெல் ( Alexandre Gustave Eiffel ) அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் பணியில் இணைந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டார். ஐஃபல் அவர்கள் தான் உலக அதிசயங்களில் ஒன்றாக இன்று பாரீஸ் நகரில் உயர்ந்து நிற்கும் ஐஃபெல் கட்டிடத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்தச் சிற்பம் வடிவம் பெற்று 1884ஆம் ஆண்டு முழுமை பெற்றது. ப்ரான்ஸிலிருந்து கடல் மார்க்கமாகக் கப்பலில் பயணித்து நியூ யார்க் நகரை ஜூன் மாதம் 1885ஆம் ஆண்டு வந்தடைந்தது. தனித்தனி பகுதியாக 350 பாகங்களாக 214 பெட்டிகளில் வைக்கப்பட்டு வந்த இந்தச் சிற்பம் நியூ யார்க் நகரம் வந்தடைந்த பின்னர் அக்டோபர் மாதம் 1886ஆம் ஆண்டு முழுமைப்படுத்தப்பட்டது.

    unnamed (3)

    அமெரிக்க சுதந்திர தேவி சிலையை வடிவமைத்த பிரஞ்சு சிற்பி பார்த்தோல்டி 1834ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி பிரான்சின் கோல்மார் நகரில் பிறந்தார். ”சுதந்திர சிந்தனை உலகிற்கு வெளிச்சம் தரும்” (Liberty Enlightening the World) என்ற கருத்துடன் அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை ஒரு சின்னமாக உருவாக்கியது உலகுக்கு இவர் அளித்த முக்கிய பங்களிப்பாகும்.

    பார்த்தோல்டி அடிப்படையில் இத்தாலிய, ஜெர்மானிய பின்புலத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். பிரான்சில் இளமை முதலே ஓவியம் சிற்பக்கலை என ஆர்வம் கொண்டிருந்தவர். தனது சிற்பக்கலைப் பயிற்சியைப் புகழ்மிக்க சிற்பிகளிடம் பெற்றவர். தனது சிறந்த படைப்புக்களினால் பாரிஸ் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய நகர்களிலும் சிற்பக்கலை வடிப்பதற்காக அழைக்கப்பட்டார். அதிலும் குறிப்பாக 1868ஆம் ஆண்டில் எகிப்தின் சூயஸ் கால்வாயின் கலங்கரை விளக்கத்தை வடிவமைத்துக் கட்டும் பணி இவருக்கே வழங்கப்பட்டது. “எகிப்து ஆசியாவிற்கான ஒளியை ஏந்திக்கொண்டிருக்கின்றது” (Egypt Carrying the Light to Asia) என்ற தலைப்பில் இக்கலங்கரை விளக்கத்தை அவர் வடிவமைத்தார். இது தவிர பிரான்சில், அதிலும் குறிப்பாக தான் பிறந்த கோல்மார் நகரில் புகழ்மிக்க சிற்பக்கலைப் படைப்புக்களை இவர் உருவாக்கியுள்ளார்.

    unnamed (4)

    கோல்மார் நகரில் உள்ள பார்த்தோல்டியின் பிறந்த இல்லம் இன்று அவர் பெயரில் இயங்கும் அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. ஒரு சிறிய அரண்மனை போன்ற கட்டிடம் இது. மூன்று மாடிக் கட்டிடத்தில் பார்த்தோல்டி அவர்களின் அனைத்து படைப்புக்களைப் பற்றிய தகவல்களும் சிற்பங்களும் இடம் பெறுகின்றன. அமெரிக்க சுதந்திர தேவி சிலை செய்வதற்காக அவர் செய்த முதல் மாடல் அமைப்பும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    unnamed (5)

    இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
    30 rue des Marchands, 68000 Colmar, France

    அருங்காட்சியகம் பற்றிய மேலதிகத் தகவல்களை www.musee-bartholdi.com என்ற வலைப்பக்கத்தின் வழி அறியலாம். இந்த அருங்காட்சியகம் பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் மூடப்பட்டு ஏனைய நாட்களில் காலை 10 முதல் மாலை 6 வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை வடித்த பெருமையைப் பிரான்சு பெறுகின்றது. பார்த்தோல்டியின் ஒளி மிகுந்த சிந்தனையின் சிற்ப வடிவமாக இந்தச் சிலை அமைந்திருக்கின்றது!

    Share
  • சொர்க்க வாசம்

    images (2)

    ஓர் இரவு நெடுநேரம் தூங்க விடாமல் போக்கு காட்டிப் பின் ஒரு வழியாக காலையில் மலர்ந்த ஒரு உணர்வுப் பிரவாகம்

    காளியைத் துணைக்க ழைத்துக் காட்சியை அமைக்க வைத்துக்
    கவிதை செய்யக் காத்திருக்கிறேன்- அவள்
    கண்டு கண்டு பரிகசிக்கிறாள்! – மனத்
    தூளியை அசைத்து விட்டுத் தூங்குமென்னைக் கிள்ளி விட்டுத்
    தூரம் நின்றபடி சிரிக்கிறாள் – என்
    துன்பம் சோர்வினை மிதிக்கிறாள்!

    நீளுமிக் கணத்தி லென்னை நெஞ்சமே அமர்த்திக் கொண்டு
    நீலியூழிக் கூத்திசைக்கிறாள் – என்றன்
    நினைவெலாம் அவள் வசிக்கிறாள்! – தங்கத்
    தோளிலே இருக்கை தந்து தோய்வெலாம் முடிப்ப தென்று
    தோன்றிவந்தவள் நடிக்கிறாள் – திசை
    தோறுமின்னிசை படிக்கிறாள்!

    அண்மையில் நெருங்கி வந்து அக்கரைக் குயர்ந்து தாவி
    அன்னை சக்தி போக்குசெய்கிறாள் – நின்று
    ஆவி யுள்ளில் வாக்கு செய்கிறாள்! – காணும்
    உண்மையில் ஜொலிக்கும் சக்தி உணர்வெலாம் இனிக்கும் சக்தி
    உச்சி கோதி எனையணைக்கிறாள்! – கொஞ்சம்
    உழல விட்ட பின்பிணைக்கிறாள்!

    நீரில்வான் நெருப்பு காற்று நிலத்திலே திளைக்கும் ஆதி
    நித்தநித்தம் நமை அசைக்கிறாள்! – நம்
    நரம்பிலேறிச் சுரமிசைக்கிறாள் – அந்தக்
    காரிலே வெடித்து வந்து கடலிலே கலந்து பின்னும்
    கரியமேக மாய்த்திரள்பவள்! – தன்
    கடமையாக்க நமைவிடுக்கிறாள்!

    இசையினோ டின்ப வெள்ள அசைவெலாம் சமைக்கு மன்னை
    ஆடுங்கூத்தை உள்ளில் காண்கிறோம் – அந்த
    அனுபவத்தில் ஞானம் பூண்கிறோம்! – சூழும்
    விசையெலாம் நமக்கு வாய்க்கும் விடையெலாம் அருட்க டம்ப
    வாசினியின் ஆசியென்கிறோம் – அதன்
    வாசனையே சொர்க்கமென்கிறோம்!!

    -விவேக்பாரதி
    10.12.2017

    Share
  • புறநானூற்றில் தமிழர் பண்பாடு   

    -வி.நாகலெட்சுமி

    முன்னுரை:

    சங்க இலக்கியம் தமிழர் வாழ்ந்த வாழ்வின் வெளிப்பாடு ஆகும். இவற்றுள் அகம்-புறம் என்னும் பகுப்பு முறை தமிழர்களின் செம்மையான வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்றன. அகவாழ்வைக் காட்டிலும் புறவாழ்வு தமிழுக்கென்ற தனித்துவத்தைப் பறைசாற்றி நிற்கின்றது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு பண்டைத்தமிழரின் பண்பாட்டுக் களஞ்சியமாகத் திகழ்கின்றது. மேலும் தமிழ் மன்னர்களின் சீர்சால் பண்புகளாம் ஒழுக்கமும், புலவர்களின் பண்பாடுகளாம் தன்மான உணர்வும், பண்டைத்தமிழ் மக்களின் வாழ்வியல் ஒழுங்குகளும், பண்பாடுகளும் பதிவு செய்யப்பெற்று பண்டைத் தமிழரின் பெருமையைப் புறநானூறு மற்ற இனத்தாரும் பிறநாட்டாரும் வியப்புறும் வண்ணம் வெளிப்படுத்துகிறது. புறநானூற்றுப் பண்பாட்டுப் பதிவுகளை தொகுத்துக் காட்டுவது இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

    பண்பாடு – விளக்கம்:

    பண்பாடு என்பது ‘பண்படுதல்’ எனும் சொல்லின் வினையடியாகப் பிறந்தது. பண்படுதல், ஒன்றுபடுதல், இசைவு பெறுதல், இசைந்து ஒழுகுதல் போன்ற பொருளைக் குறிக்கிறது. அதாவது பண்படுதலே பண்பாடாகும். “ஒரு முறையான நடத்தை முறைக்கு மக்கள் ஏற்படுத்திக்கொள்ளும் ஓர் அமைப்பு அல்லது மன அளவிலான விதி” எனக் கருத்தியலாளர்கள் பண்பாட்டிற்கு ஒரு பொது விளக்கம் தருகின்றனர்.

    பண்டை மறம்:

    பண்டைத்தமிழர்கள் பகைவர் நாட்டின் மீது படையெடுக்கப் புறப்படும் முன் தாங்கள் வருவதை முன்கூட்டியே அறிவித்தலும் உண்டு. அவ்வாறு அறிவிக்கும் பொழுது தங்கள் படையெடுப்பால் சாதாரண பொதுமக்கள் உள்ளிட்டோர் துன்பப்படக்கூடாது என்ற உயர்ந்த பண்பாட்டைக் கொண்டிருந்தனர். இதனை,

    “ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும்
    பிணியுடை யீரும் பேணித்
    தென்புல
    வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற்
    புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்
    அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்”      (புறம் – 9)

    என்ற புறநானூற்றுப் பாடல்வழி அறியலாம். மேலும் போர் நெறியிலும் அறநெறியைக் கடைப்பிடித்துப் பசு, பெண்டிர், பார்ப்பனர், பிணியுடையோர், இறந்தவர்க்குச் செய்யவேண்டிய கடன்களைச் செய்தற்குரிய பிள்ளைகளைப் பெறாதவர் ஆகியோரை பாதுகாப்பான இடத்தை அடைவீராக என்று மக்களை எச்சரிக்கும் நோக்கில் மன்னனது பேணும் இயல்பும், கருணை இயல்பும் வெளிப்படுகின்றன.

    நீர்வளம்:   

    நாட்டுவளத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ள நீர்வளத்தின் இன்றியமையாமையைத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்தும் குடபுலவியனார்,

    “உணவுஎனப் படுவது நிலத்தோடு நீரே
    நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
    உடம்பும்
    உயிரும் படைத்திசி னோரே”   (புறம் – 18)

    என்ற பாடல் வழி நீர்நிலைகளைப் பெருக்கி நாட்டை வளப்படுத்துவது அரசியலில் அரசனின் தலையாயக் கடமை என்றும், அத்தகைய அரசனே நிலைபெற்ற புகழ்பெற முடியும் என்றும் அறிவுறுத்தியமை புலனாகிறது.

    ஒற்றுமை உணர்வு:

    ‘ஒற்றுமையாக இருப்பதே பலம்’ என்பதைப் புலவர், இருவேறு அரசர்கள் ஒருசேர இருந்தமையை நோக்கி இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும் என வாழ்த்தியமையை,

    “இருவீரும்
    உடன்நிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்
    பௌவம்
    உறுத்தஇப் பயம்கெழு மாநிலம்
    கையகப் படுவது பொய் ஆகாதே”   (புறம் – 58)

    என்ற பாடல்வழி அறியலாம். தமிழக மூவேந்தர்கள் ஒருவருக்கொருவர் பகை கொண்டு போரிட்டால் வேற்றுப்புலத்து அரசர்களுக்குத் தமிழகம் ஆளும் இடமாகும் என்பதும் ஒற்றுமையினால் உலகம் வசப்படும் என்பதும் புலனாகின்றது.

    பகுத்துண்ணும் பண்பு:

    பழந்தமிழர்  பகுத்துண்ணும் பண்பினைப் பெரிதாகப் போற்றினர். கிடைத்தற்கரிய அமிழ்தம் கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல் அனைவரோடும் பகுத்துண்டார்கள் என்பதை,

    “இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்
    இனிதெனத்
    தமியர் உண்டலும் இலரே” (புறம் – 182)

    எனப் புறநானூறு காட்டும். ஔவையார் அதியமானின் வீரத்தைப் பாராட்டுவதுடன், அவன் எல்லாருக்கும் பகுதுக்கொடுத்து உண்ணும் இயல்பினான் என்பதைச் சுட்டுகின்றார்.

    “உண்டாயின் பதம் கொடுத்து
    இல்லாயின்
    உடன் உண்ணும்
    இல்லோர்
    ஒக்கல் தலைவன்”   (புறம் – 95)

    என்ற பாடல்வழி அதியமானின் உயரிய பண்பை ஔவையார் வெளிப்படுத்துகின்றார்.

    கல்வியின் பெருமை:

    மனிதனை மேம்படுத்தவும் நன்னெறியில் செல்ல வைப்பதற்கும் சிறந்த செல்வமாகத் திகழ்வது கல்விச் செல்வமாகும். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ எனப் பெயர் பெற்ற உயர்நிலைக்குத் தமிழகம் அக்காலத்து மேம்பட்டு விளங்கியது. ஆசிரியருக்குத் துன்பம் வந்தபோது உதவியும், வேண்டிய பொருள் கொடுத்தும், வழிபாட்டு நிலையை வெறுக்காது கற்பது நன்று எனக்கூறும் பாண்டியன் ஆரியப்படைக்கடந்த நெடுஞ்செழியன்,

    “ஒருகுடிப்  பிறந்த  பல்லோ  ருள்ளும்
    மூத்தோன்  
    வருக  என்னாது அவருள்
    அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
    வேற்றுமை
    தெரிந்த  நற்பா  லுள்ளும்
    கீழ்ப்பால்  
    ஒருவன்  கற்பின்
    மேற்பால்  
    ஒருவனும்  அவன்கண்  படுமே”   (புறம் – 183)

    என்று உலகியலில் கல்வியின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றான். கல்வி உயர்வு தாழ்வினை நீக்குகிறது. அரசனும் கற்றவன் அறிவுரைப்படியே ஒழுகுவான். தன் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பு கொண்ட பலரில் கற்றவனையே தாயின் மனம் மிகவும் விரும்பும் என்பதை அறியமுடிகிறது.

    வரி வாங்கும் முறை:

    அரசன் தன் நாட்டு வருவாய்க்காக, மக்களிடம் வரிவாங்குதல் முறையேயாயினும், ஒரு சமயத்தில் மக்கள் துன்புறுமாறு வாங்கும் வரிப்பணத்தினால் அரசனுக்குக் கேடு வரும்; மக்களுக்குத் துன்பம் வரும். இதனை அரசன் உணர வேண்டும்.

    “பரிவுதப எடுக்கும் பிண்டம்  நச்சின்
    யானை
    புக்க புலம் போலத்
    தானும்
    உண்ணான் உலகமும் கெடுமே”   (புறம் – 184)

    என்று பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் பிசிராந்தையார் அறிவுறுத்துகின்றார்.

    செல்வத்துப் பயனே ஈதல்:

    செல்வம் என்பது சிந்தையின் நிறைவாகும். பிறருக்குக் கொடுத்து மகிழும் வாழ்வே சிறப்புடையது. உண்பது நாழி; உடுப்பவை இரண்டே எனக் கூறி,

    “செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம்
    எனினே தப்புந பலவே”    (புறம் – 189)

    என்று நக்கீரனார் பொதுவாக அறிவுறுத்துகின்றார். அறவழியில் பொருளீட்டித் தானும் இன்புற்றுப் பிறர்க்கும் கொடுத்து அவர்களையும் இன்புற்று வாழவகை செய்வதன் மூலம் சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கை நிலைகள் மேம்பட்ட தன்மைகளாக விளங்கியமை புலனாகின்றது.

    மனிதநேயம்:

    பழந்தமிழர் பண்பாடு மிக உயர்ந்தது. உலகமெல்லாம் பாராட்டிப் பின்பற்றக்கூடியது. தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றென்று கருதினர். உலகமக்களை ஒரே குலத்தவராக எண்ணினர். மனிதநேயமே இவ்வுலகிற்கு அவசியம். ஒருமைப்பாடே ஊக்கம் என்பதைக் கணியன் பூங்குன்றனார் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே,

    “யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும்
    நன்றும் பிறர்தர வாரா
    ————————————————–
    பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை
    இகழ்தல் அதனினும் இலமே”   (புறம் – 192)

    என்று ஒற்றுமையுணர்வையும், மனிதநேயத்தையும், நன்மையும் தீமையும் நமக்கு நம்மால்தான் வருகிறது என்பதையும் பறைசாற்றுகிறார். இப்பாடல் தமிழர்களின் தனித்த பண்பாட்டை விளக்குவதாக அமைகின்றது.

    முடிவுரை:

    எட்டுத்தொகை நூல்களில் புறநானூறு பண்டையத் தமிழரின் வாழ்வியல் பண்பாட்டை மெய்மையுற விளக்கும் கலங்கரை விளக்கமாகும். மறத்தில் அறமும், நீர்வளம் குறித்த சிந்தனையும், பகுத்துண்ணும் பண்பும், ஒற்றுமை உணர்வும், ஏற்றத்தாழ்வை நீக்கும் கல்வியும், மக்களைத் துன்புறுத்தாது வரிவாங்கும் முறையும், அனைவரையும் ஒன்றாக எண்ணும் மனிதநேயமும் பண்டையத் தமிழரிடையே நிலவியமை புலனாகின்றது. இன்றைய நாகரிக உலகில் சிலர் பண்பாட்டை மறந்தும், இழந்தும் வரும் வேளையில் அவற்றை நினைவுகூர்வது சாலப் பொருந்தும்.

    துணை நின்ற நூல் ஆதாரங்கள்:

    1. புறநானூறு மூலமும் உரையும் – ஒளவை துரைசாமிப்பிள்ளை.
    2. பண்பாட்டு மானுடவியல் – பக்தவத்சல பாரதி.
    3. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி.

    *****
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை
    அ.வ.அ கல்லூரி (தன்னாட்சி)
    மன்னன்பந்தல்

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(196)

    -செண்பக ஜெகதீசன் 

    வினைபகை யென்றிரண்டி னெச்சம் நினையுங்கால்
    தீயெச்சம் போலத் தெறும்.  (திருக்குறள் -674:வினைசெயல்வகை) 

    புதுக் கவிதையில்… 

    செய்யும் செயல்,
    ஒழிக்கும் பகை இவற்றில்
    முடிக்காது மிச்சம் வைத்தல்
    என்பது,
    அணைக்காது மிச்சம்வைத்த
    நெருப்புபோல்
    கெடுதலே தரும்…! 

    குறும்பாவில்… 

    செயல் பகை இரண்டையும்
    முடிக்காது மிச்சம்வைப்பது, அணைக்காமல்
    மிச்சம்வைத்த தீபோல் கெடுதல்தரும்…!      

    மரபுக் கவிதையில்… 

    செயலைச் செய்யத் தொடங்கிவிட்டால்
    -செய்து முடித்திடு மிச்சமின்றி,
    தயவு யேதும் காட்டாமல்
    தொடரும் பகையை முடித்துவிடு,
    அயர்வு கொண்டே யிவையிரண்டில்
    அணுவள வேனும் மீதிவைத்தால்,
    உயரும் தீயை அணைக்காமல்
    விட்ட மீதியாய்க் கெடுதிதானே…! 

    லிமரைக்கூ… 

    செயல்பகையில் வைக்கவேண்டாம் மிச்சம்,
    முற்றிலும் அணைக்காமல் விட்டதீபோல்
    இதுதருமே அழித்துவிடும் அச்சம்…! 

    கிராமிய பாணியில்… 

    வேண்டாம் வேண்டாம் மிச்சம்வேண்டாம்
    வேலசெய்யிறதுல மிச்சம்வேண்டாம்…
    முழுதும் வேலய செய்யாமலே
    மிச்சம் வச்சாலும்,
    மோதவாற பகய முழுசா அழிக்காம
    மிச்சம் வச்சாலும் ஒண்ணுதான்…

    இந்த ரெண்டுமே
    முழுசா அணைக்காம
    மிச்சம்சவச்ச தீபோல
    முழுசாத்தருமே கெடுதியையே…

    அதால,
    வேண்டாம் வேண்டாம் மிச்சம்வேண்டாம்
    வேலசெய்யிறதுல மிச்சம்வேண்டாம்…!

     

     

    Share
  • இலக்கண விளக்க யாப்பியல் – 3

    – ம.பிரபாகரன்

    யாப்பருங்கலக்காரிகையில் உள்ள சூத்திரத்தில் ஆறாவது அடிவரை உறுப்பு பற்றிய செய்தி இடம்பெறுகிறது. ஏழாவது எட்டாவது அடியில் பா மற்றும் பாவினம் பற்றிய செய்தி இடம்பெறுகின்றது. ஆனால் யாப்பருங்கல விருத்தியில் ஏழாவது அடி தூக்கு பற்றியதாகும். யாப்பருங்கலத்தின் கொள்கைப்படி செய்யுளுறுக்கள் ஏழு. இதில் ஏழாவது வருவது தூக்கு. யாப்பருங்கலத்தின் சூத்திரத்தை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்: 

    ” எழுத்தசை சீர்தளை யடிதொடை தோக்கோ
    டிழுக்கா நடைய தியாப்பெனப் படுமே ”. (சூத்.1)

    இவ்வாறு யாப்பருங்கலத்துடைய யாப்புறுப்புக்கொள்கையில் தூக்கு இடம்பெற்றிருப்பதால் யாப்பருங்கலவிருத்தியில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும்
    ” எழுதப்படுதலின்” எனத்தொடங்கும் மேற்கோள் சூத்திரத்தில் ஏழாவது அடி தூக்கு உறுப்பு கூறுவதோடு முடிகிறது. ஆனால் யாப்பருங்கலக் காரிகையைப் பொறுத்த அளவில் அதனுடைய உறுப்புக்கொள்கையில் தூக்கு என்ற உறுப்பு இடம் பெறவில்லை. எனவே யாப்பருங்கலக் காரிகையின் மேற்கோள் சூத்திரம்  எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறு உறுப்பே கூறுகிறது. எனவே யாப்பருங்கலக் காரிகையில் இடம்பெறும் மேற்கோள் சூத்திரமாகிய எழுதப்படுதலின் … என்ற சூத்திரத்தில் ஏழாவது அடியில் தூக்கு பற்றிய அடி இடம்பெறவில்லை. அதற்கு மாறாக ஒரு பொது அறிமுகத்தின் பொருட்டுப் பா மற்றும் பாவினத்திற்கு இரண்டு அடி கூடுதலாகக் கொடுக்க பட்டுள்ளது.

    யாப்பருங்கலக்காரிகையின் இந்த மேற்கோள் சூத்திரத்தை இலக்கண விளக்கம் அப்படியே எடுத்தமைத்துக்கொண்டதே தவிர இது பாடவேறுபாடாகாது என்று தோன்றுகிறது.  இந்தச் சூத்திரம் யாப்பருங்கலவிருத்தியிலும், யாப்பருங்கலக்காரிகையிலும் சற்று வேறுபட்டுக்காணப்படுவதற்கு அவ்வவ் நூல்களின் யாப்புறுப்புக்கள் குறித்த கொள்கையே காரணம் என்பது மேற்சொல்லப்பட்டது. இத்தொடர்பில் எழும் இன்னொரு ஐயம், இதற்குரிய மூலச்சூத்திரத்தை எழுதியது யார்? என்பதாகும். இதற்குரிய மூலச்சூத்திரம் யாப்பருங்கல விருத்தியில் காட்டப்பட்டிருக்கின்ற சூத்திரமா? அல்லது யாப்பருங்கலக்காரிகையில் காட்டப்பட்டிருக்கும் சூத்திரமா? என்பதாகும். காலநிலையில் யாப்பருங்கல விருத்தி யாப்பருங்கலக் காரிகை உரைக்கு முற்பட்டதாகும். எனவே யாப்பருங்கல விருத்தியிலுள்ள சூத்திரமே காலத்தாற் முற்பட்டது என்று கூறத் தோன்றும். எனினும் யாப்பருங்கல மரபில் உள்ள மேற்கோள் சூத்திரங்கள், யாப்பருங்கலத்திற்கு முந்தைய பழமை உடையனவாகத் திகழ்கின்றன. யாப்பருங்கல விருத்தியில் ” எழுதப்படுதலின்….எனத்தொடங்கும் சூத்திரத்தை எடுத்துக்காட்டிய பின் ” என்றார் ஆசிரியரெனக் கொள்க  ” (பக்.18; மு.சு.நூ) என்பது இடம்பெற்றுள்ளது. ஆனால் யாப்பருங்கலக் காரிகையில் இச்சூத்திரம் காட்டப்பட்டபிறகு  ” என்றாராகலின் ” என்பது காட்டப்பட்டுள்ளது. என்றாராகலின் என்பதற்குப் பாடவேறுபாடாக என்பவாகலின் என்பது வே.பால்ராஜ்ஜினால் குறிக்கப்பட்டுள்ளது. யாப்பருங்கல விருத்தியில் இச்சூத்திரத்தை அடுத்து ” என்றார் ஆசிரியரும் ” என்றிருப்பதால் ஒருவேளை அது அமிர்தசாகராகவும் இருக்கலாம். எனினும் உறுதியாக ஒன்றும் சொல்வதற்கில்லை இது ஆய்விற்குரியது.

    மேலே யாப்பருங்கல மரபினுடைய  சூத்திரத்தை இலக்கண விளக்கம் அப்படியே

    எடுத்துப் பயன்படுத்திக்கொண்டதைப் பார்த்தோம். இனி யாப்பருங்கல மரபினுடைய சூத்திரங்களைத் தழுவி இலக்கணவிளக்கம் எங்ஙனம் சூத்திரத்தை அமைத்துக்கொள்கிறது எனப் பார்க்கலாம். உதாரணமாக யாப்பருங்கலத்தில் வரும் அசைகள் பற்றிய சூத்திரத்தை இலக்கணவிளக்கம் எப்படி தழுவிக்கொள்கிறது எனப் பார்க்கலாம்.

    யாப்பருங்கலத்தில் வரும்  அசைகள் பற்றிய சூத்திரம்: 

    ”  நெடில்குறில் தனியாய் நின்று மொற்றடுத்து
    நடைபெறு நேரசை நால்வகை யானே ”   (யாப்.6) 

    ” குறிலிணை குறினெடி றனித்து மொற்றடுத்தும்
    நெறிமையி னான்காய் வருநிரை யசையே ” (யாப்.8)

    இச்சூத்திரங்களைத் தழுவி, இலக்கணவிளக்கம்:

    ” நெடிலுங் குறிலுங் தனித்துமொற் றடுத்து
    நடைபெறு நேரசை நான்கு நீங்காக்
    குறிலிணை குறினெடிற் றனித்துமொற் றடுத்து
    நெறிவரு நிரையசை நான்கு மாகும் ” (இல.வி.714)

    என்று தன் சூத்திரங்களை அமைத்துக் கொள்கிறது.

    மேலே இலக்கண விளக்கம் யாப்பருங்கல சூத்திரங்களை அப்படியே எடுத்தாண்டும் தழுவியும் அமைத்துக் கொண்டதையும் கண்டோம். மேலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி ஆகியவற்றின் உரைகளைத் தழுவி தம் உரையை அமைத்துக்கொள்ளும் போக்கையும் கவனிக்க முடிகிறது. கீழ்க்கண்ட உதாரணம் மூலம் அதைத் தெரிந்துகொள்ளலாம்.

    யாப்பருங்கல விருத்தி:

    கடியார் பூங்கோதை…….” இதனுள் பூங்கோதை என்றும் கடாயினான் என்றும் அலகிடன், ஆசிரியத்தளையும், கலித்தலையும் தட்டு, வெள்ளையுள் பிறதலை விரவா என்னும் இலக்கணத்தோடு மாறுகொள்ளும் ஆதலின் அதனைக் ‘ கடியார்பூ ‘ என்று புளிமாங்காய் ஆகவும் ‘ கோதை ‘ என்று தேமா ஆகவும் அலகிடத் தளையும் சீரும் வண்ணமும் சிதையாவாம். (பக். 396, இரா.இளங்குமரன் பதிப்பு யாப்பருங்கல விருத்தியுரை:1976 )

    யாப்பருங்கலக்காரிகை:

    கடியார் பூங்கோதை….இதனை கடியார் எனவும், ‘ பூங்கோதை ‘ எனவும் அலகிடின் ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு வெள்ளைத்தன்மை குன்றுமாதலால் ‘ கடியார் பூ ‘ என்று புளிமாங்காயாகவும் ‘கோதை ‘ என்று தேமாவாகவும் ‘ கடாயினான் ‘ என்று கருவிளமாகவும் அலகிட்டு கொள்க. (பக்: 281, மு.சு.நூ)

    இலக்கண விளக்கம்:

    ” கடியார் பூங்கோதை…இதனுள் கடியார் என்றும் பூங்கோதை என்றும் கடாயினான் என்றும் இவ்வாறு அலகிட ஆசிரியத்தளையும், கலித்தளையும் தட்டு செப்பல் ஓசை சிதைதலின் கடியார்பூ என்றும் கோதை என்றும் அலகிட ஓசை சிதையாவாம் (பக்.774, மு.சு.நூ).

    மேற்கண்ட  உதாரணங்களில் இலக்கணவிளக்க உரைப்பகுதி யாப்பருங்கலக்காரிகையைக் காட்டிலும்  யாப்பருங்கல விருத்தியோடு ஒத்தமைவதைக் கவனிக்க.

    இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்:

    யாப்பருங்கலக்காரிகை:

    ” பாடுநர்க்கும்…..இதனுள் டுகர நகரங்கள் பிரிந்திசைத்தனவாயினும் இரண்டினையுங் கூட்டி நிரையசையாக அலகிடச் சீரும், தளையும் சிதையாவாம். அல்லாவிடின் நாலசைச் சீராய் வண்ணமழிந்து ஓசையுண்ணாது கெடும் பிறவுமன்ன.(பக். 282, மு.சு.நூ)

    யாப்பருங்கலவிருத்தி

    ” பாடுநர்க்கும்….இப்பாட்டினுள் டுகரமும் நகரமும் பிரிந்திசைத்தனவாயினும், இரண்டினையும் கூட்டி, நிரையசையாக அலகிட்டுக் கொள்க. அல்லாவிடின் வண்ணம் அழிந்து கிடக்கும்.

    இலக்கண விளக்கம்:

    ” பாடுநர்க்கும்…இதனுள் டுகர நகரங்கள் பிரிந்து இசைத்தன ஆயினும் இரண்டு அடியும் நாலசைச்சீராய்ச் செப்பலோசை சிதைதலின் டுகர, நகரங்களைக் கூட்டி நிரை அசையாக அலகிடச் சிதையாதாம்; இவ்வாறே பிறவும் அலகிட்டுக் கொள்க. (பக்.774, மு.சு.நூ)

    மேற்கண்ட அட்டவணையில் இலக்கணவிளக்கத்தின் உரைப்பகுதி யாப்பருங்கல விருத்தியை விட யாப்பருங்கலக் காரிகை உரைப்பகுதியோடு ஒத்திருப்பதைக் கவனிக்கமுடியும்.

    இலக்கண விளக்கம்,  செய்யுளியல் இறுதிப்பகுதியில் வைத்து விளக்கும் வகையுளி, வாழ்த்து,  எண்வகை வனப்பிலக்கணம், குறிப்பிசை, ஒப்பு, வண்ணங்கள் , புனைந்துரை, ஆனந்தம், அடிவரையறையில்லாத செய்யுள்வகை ஆகியவை யாப்பருங்கல மரபைப் பின்பற்றியே விளக்கப்பட்டுள்ளன. வண்ணத்தைப் பொறுத்தவரை வரிசைமுறை அடிப்படையில் (அதாவது வகையுளி, வாழ்த்து, வனப்பு, குறிப்பிசை, ஒப்பு, வண்ணம் என்ற முறையில்) யாப்பருங்கல மரபையும், விளக்க முறை அடிப்படையில் தொல்காப்பியத்தையும் (மூலம், )  யாப்பருங்கல மரபையும் (உரை)  இலக்கணவிளக்கம் பின்பற்றுகிறது. அது சூத்திரத்தில் தொல்காப்பியர் காட்டிய இருபது வண்ணங்களைப் பற்றி மட்டுமே கூறினாலும் உரையில் வண்ணம் நூறு என்றும்  கூறி யாப்பருங்கல மரபையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் அது யாப்பருங்கல மரபையே முன்னிலைப்படுத்துகிறது. மேலும் அது  வண்ணங்கள் நூறு என்று கூறுவதோடு மட்டும் அமையாமல் ” அவற்றைக் குறிலகவற் றூங்கிசை வண்ணம் நெடிலகவற் றூங்கிசை வண்ணமென வண்ணம் நூறென்பாரும் உளர். அவ்வேறுபாடும் உணர்க ” (பக்.732, மு.சு.நூ) என்று  கூறுவதன் மூலம் யாப்பருங்கல மரபின்  வண்ணம் தொடர்பான எந்தச் செய்திகளும் விட்டுபோய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதையும் கவனிக்கமுடிகிறது.

    யாப்பருங்கலத்தின் உரையும் யாப்பருங்கலக்காரிகை உரையும் வண்ணங்கள் நூறு என்று கூறினாலும் அவை தொல்காப்பியத்தின் வண்ணம் தொடர்பான சூத்திரங்களை எடுத்துக்காட்டுவதையும் இவண் நினைவு கூறவேண்டும். அதனோடு ஒரு புடை ஒப்புமையாக,  இலக்கண விளக்கம், சூத்திரத்தில் இருபது வகை வண்ணங்களையும் கூறி உரையில் யாப்பருங்கல மரபின் வண்ணங்களைக் கூறுவதை ஒப்புநோக்க வாய்ப்புண்டு.  எனினும் இலக்கண விளக்கத்தினுடைய வண்ணம் பற்றிய சூத்திரம் தொல்காப்பியத்தின் சூத்திரத்தைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. தழுவி என்பதை விட தொல்காப்பியச் சூத்திரம் என்றே கூறலாம். இவ்விடத்தில் தொல்காப்பியம் மற்றும் இலக்கண விளக்கம் ஆகியவற்றின் வண்ணம் பற்றிய சூத்திரத்தை எடுத்துக்காட்டுவது பயனுடையதாக இருக்கும்:

    தொல்காப்பியம்:

    ” வண்ணந் தாமே நாலைந் தென்ப ” ( தொல்.செய். 214)

    ”  அவைதாம்
    பாஅ வண்ணம் தாஅ வண்ணம்
    வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்
    இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்
    நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்
    சித்திர வண்ணம் நலிபு வண்ணம்
    அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்
    ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்
    எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்
    தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்
    உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென்று
    ஆங்கென மொழிப அறிந்திசினோரே ” (தொ.செய்.216)

    இலக்கண விளக்கம்:

    வண்ணந் தானே நாலைந் தவைதாம்
    பாஅ வண்ணந் தாஅ வண்ணம்
    வல்லிசை வண்ண மெல்லிசை வண்ண
    மியைபு வண்ண மெல்லிசை வண்ண
    நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணஞ்
    சித்திர வண்ண நலிபு வண்ண
    மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ண
    மொழுகு வண்ண முரூஉ வண்ண
    மெண்ணு வண்ண மகைப்பு வண்ணந்
    தூங்கல் வண்ண மேந்தல் வண்ண
    முருட்டு வண்ண முடுகு வண்ணமென்
    றாங்கென மொழிப வறிந்திசி னோரே ” (இ. வி.  757)

    இரு சூத்திரங்களையும் ஒப்புநோக்குக.

    இங்குச் சூத்திரநிலையில் இலக்கண விளக்கம் தொல்காப்பியத்தைப் பின்பற்றுகிறது என்பதே சரி எனினும் சூத்திரத்தோடு உரையையும், வண்ணத்தை விளக்க எடுத்துக் கொண்ட வரிசை முறையையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது (இலக்கண விளக்க மூலமும், உரையும் ஒரே நபரால் செய்யப்பட்டதாக இருப்பதினால் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது) இலக்கண விளக்கம் வண்ணம் பற்றிய கொள்கையில்  யாப்பருங்கல மரபைப் பின்பற்றுகிறது என்பதே நேரிதாகும். நாமிங்கே  இதை விரிவாகக் கூறுவதற்குக் காரணம் ஒரு நூல் பல நூல் செய்திகளை எடுத்தாண்டாலும் அது பின்பற்றும் மூலநூலே அது சார்ந்த கோட்பாட்டை விளக்க வல்லதாக இருக்கும் என்பதாலேயேயாகும். இது போல (வண்ணம் பற்றிய சூத்திரத்தில் இலக்கண விளக்கம் தொல்காப்பியச் சூத்திரத்தை பயன்படுத்துவது போல)   இலக்கண விளக்கம் தொல்காப்பியம் சார்ந்த சில செய்திகளைப் அடியொற்றினாலும் அது சார்ந்திருக்கும் மரபு என்பது யாப்பருங்கல மரபேயாகும்.

    இதுகாறும் கண்டவற்றால் இலக்கணவிளக்கம் தொல்காப்பியத்தின் சில செய்திகளை எடுத்தாண்டாலும்,  தொல்காப்பியத்தைப் பின்பற்றித் தன்வழியை அமைத்துக்கொள்ளவில்லை என்பதையும் அது யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.

    *****

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர்
    பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO)
    புதுச்சேரி

     

     

    Share
  • விடையில்லா விடுகதை..!

    Mahatma Gandhi with Cheering Female Fans at Greenfield Mill, Darwen, Lancashire

    விடையில்லா விடுகதைபோல வினாப்பல உண்டிங்கே..
    விடையில்லை இன்றளவும் எஞ்சுவது வினாவொன்றே.?
    படையுடன் போர்தொடுத்து பகையிலா நாட்டையும்..
    பழிதீர்க்கும் செயலுக்குத் தகும்காரணம் ஏதுமுண்டா.?
    இடைத்தரகர் இறாது எதையுமிங்கே செய்யமுடியுமா..
    எதுவும்முடியும் அவர்தயவால் என்பதுதான் நியாயமா.?
    கடையேழு வள்ளலையும்கூட வஞ்சகரெனக் கூறுவார்..
    குறையில்லா மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறாரா.?

    பொதுச்சொத்தை அழிக்கும் புரட்சியின் நோக்கம்தான்..
    பொதுநலமெனச் சொல்லியது சழக்கரின் சதிச்செயலோ.?
    பொதுஊர்வலம் போராட்டம் மறியல் கண்டனமெனப் ..
    புதிதாக வெடிக்கும்பல விடையில்லா விளம்பரத்தோடு.!
    எதுக்காகப் பயணியர்செலும் பேருந்திற்கு தீவை
    என்னநோக்கம்? இன்னுமிது விடையில்லா விடுகதை.!
    கொதிக்கும் உள்ளத்தில் எழும்நல் எண்ணங்களால்..
    கொந்தளிக்கும் கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.!

    உத்தமர்கள் பலருமுதித்த உலகுபுகழ் நம்திருநாட்டில்..
    உலவுகின்ற அவலங்கள்பல இன்னமும் தீரவில்லை.!
    ஒத்துவாழும் உணர்வுடன் உள்நாட்டு மாநிலங்களும்..
    ஒன்றுக்கொன்று உறவாடி ஒன்றிடும்நாள் எந்நாளோ.?
    அத்தியாயம்போல இச்சதிச்செயலெலாம் நீளும்..இந்த
    அநியாயத்துக்கிது தீர்ப்பென ஆய்ந்தவழி எதுவோ.?
    அத்துணைக்கும் ஒருநாளில் முற்றுப்புள்ளி வரும்..
    என்பதெலாம் “விடையில்லா விடுகதை” போலாகும்.!

    கைநிறையப் பணமீட்டி மனம்நிறைந்து வாழலாமென..
    கல்லூரிக்குக் கையூட்டு கொடுத்துக் கல்விபயின்றேன்.!
    பைநிறைக்கும் எண்ணமுடன் பலருமலையும் இந்தப்
    பைத்தியங்களில் நானொருவன் எனப் பின்பறிந்தேன்.!
    கையாலாகதவனெனும் பட்டப் பெயருடன் கடைசியில்..
    காலமிடும் விடுகதைக்கு விடைதேடி அலைகின்றேன்.!
    கைபார்த்துன் காலத்தைக் கணிக்காதே கையிலாதவருக்கும்..
    காலமுண்டு.!…கலாம் மொழிந்ததை நினைவுறுகிறேன்.!

    ================================================

    நன்றி:: தினமணி வெளியீடு::04-12-17
    நன்றி:: படம் கூகிள் இமேஜ்
    அன்புடன்
    பெருவை பார்த்தசாரதி

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (86)

    நிர்மலா ராகவன்

    குழந்தைகளின் திறன்

    நலம்-1-2-1

    உங்கள் வீட்டுக்குக் குழந்தை சுவற்றில் கிறுக்கினால் கோபம் எழுகிறதா? என்னதான் காகிதமும் பென்சிலும் கொடுத்தாலும், குழந்தைக்கு என்னவோ கண்ட இடத்தில் கிறுக்குவதுதான் உவப்பாக இருக்கும். பெரியவர்கள் திட்டினால், தம் தொடையிலேயே வரைந்துகொள்ளும் குழந்தைகளையும் கண்டிருக்கிறேன். அவர்களால் வரைவதை நிறுத்த முடியாது.

    இயற்கை ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களுக்கே தெரியாமல், ஏதோ திறமையைக் கொடுத்திருக்கிறது. பெற்றோருடையதை ஒத்திருக்கும் என்பதுமில்லை.

    சிறு வயதிலேயே ஒரு குழந்தையின் திறனைக் கண்டுகொள்ளும் பெற்றோர் அது மேன்மேலும் வளர துணை புரிகிறார்கள். மகா புத்திசாலி என்னும் குழந்தைகூட எல்லாத் துறைகளிலும் சிறந்திருக்காது. ஏதோ, ஒன்றிரண்டில்தான்.

    மிகப் பிரபலமான ஒரு மிருதங்க வித்வான் என்னிடம் கூறியது: “நான் முதலில் வாய்ப்பாட்டுதான் கற்றேன். ஒரு திருவிழாவின்போது என் தகப்பனார் தன் தோளில் என்னைத் தூக்கிக்கொண்டு நடந்தபோது, அவர் தலையில் இரு கைவிரல்களாலும் தாளம் போட்டுக்கோண்டே இருந்தேன். `இந்தப் பயலுக்கு தாளத்தில்தான் அதிக ஆர்வம்!’ என்று அவர் என்னை மிருதங்கம் கற்க அனுப்பினார்”.

    பதினெட்டு வயதிலேயே இந்தியாவில் தேசிய விருது பெற்றிருக்கிறார் இவர். குருகுல வாசம் என்னும் முறைப்படி பல மாணவர்களுக்கு இக்கலையைப் போதிக்கிறார். உலகின் பல பாகங்களிலும் இவரது பாணி தவறாது, சீடர்கள் தாளவாத்தியக் கலையைப் பரப்புகிறார்கள்.

    கேள்வி: யார் இவர்?

    இன்னொரு சிறுவன் தன் அண்ணன் தற்காப்புப் பயிற்சிக்குச் செல்லும்போதெல்லாம் ஏக்கத்துடன் கதறி அழுவான். இவனுக்கோ நான்கு வயதுதான். சமாதானப்படுத்த அண்ணனைப்போன்ற உடை வாங்கிக்கொடுத்தார்கள் பெற்றோர். ஏழு வயதில் முறையாக ஆரம்பித்த பயிற்சியால் இன்று நாட்டைப் பிரதிநிதித்து முன்னணியில் இருக்கிறான். இது மலேசியாவில்.

    பிரபல தபேலா வித்வான் ஜாகிர் ஹுசேன் பள்ளிப்பருவம் வரும்வரை காலை ஆறு மணியிலிருந்து வாத்தியத்தை வாசித்துப் பழக வேண்டும் என்று அவருடைய ஆசிரியர் (தந்தை) கண்டிப்பாக இருந்தார். ஆறு வயதுக்குமேல் அதிகாலை இரண்டு மணியிலிருந்து சாதகமாம்! அவருக்கு ஆர்வமும் திறமையும் ஒருங்கே அமைந்திருந்தன. அதனால் பிற குழந்தைகளை அவரைப்போல் பெற்றோர் நடத்தவில்லை என்பது குறையாகப்படவில்லை.

    ஒரு கச்சேரிக்குப்பின், விமர்சகரான நான் அவரைப் பாராட்டியபோது, வெட்கத்துடன் நுனிநாக்கை வெளியே நீட்டி, தோள்களைத் தூக்கிக்கொண்டார் – ஒரு குழந்தைபோல! எதுவும் பேசவில்லை!

    சுவற்றில் கிறுக்கிய குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே வித விதமான வண்ணக்கலவைகளும், வரைவதற்கென்றே தயாரிக்கப்பட்ட பென்சிலும் வாங்கிக் கொடுத்தாள் அதன் தாய். தான் தொடையில் கிறுக்கிக்கொண்டது அவளுக்கு மறக்கவில்லை. மணிக்கணக்கில் சாப்பிடக்கூட மறந்து வண்ணம் தீட்டுகிறாள் அந்தப்பெண்.

    இப்படியாக, கலை, விளையாட்டு போன்ற பல துறைகளிலும் சாதித்தவர்களின் பின்னணியைப் பார்த்தால், அவர்களுடைய இயற்கையான ஆர்வமும் திறமையும் பெற்றோராலும், ஆசிரியர்களாலும் வளர்க்கப்பட்டிருப்பது புரியவருகிறது.

    சாதனையாளர்கள்தாம் குழந்தைப் பருவத்திலேயே தம் திறனை வெளிக்காட்டுகிறார்கள். பெற்றோருக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த துறையைப்பற்றி அதிகம் தெரிந்திருக்காவிட்டாலும், ஊக்கம் அளிக்கிறார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சியே முக்கியமாகப்பட, `இதனால் பணமும், புகழும் கிடைக்குமா?’ என்ற யோசனை வருவதில்லை.

    ஒருவருக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மனதில் அமைதி நிலவுகிறது. முன்னுக்கு வந்தவர்களைப் பார்த்துப் பொறாமை எழுவதில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தாம் செய்வதில் மனநிறைவு கிட்டிவிடுகிறது.

    சிறு வயதில் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டையாக பெற்றோர் இருந்திருந்தாலோ, இயற்கைத்திறன் அப்போதே நசித்துவிடும். ஏக்கமும், ஏமாற்றமும்தான் தொடரும்.

    திறமையை எப்படி வெளிக்கொணர்வது?

    படிப்பது, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை, மனிதர்கள் என்று பல விஷயங்களிலும் ஒரு சிறுவனை ஈடுபடுத்துவது நல்லது. தனக்குப் பிடித்தது என்னவென்று புரிந்து, அதில் முனைப்புடன் ஈடுபடுவான்.

    வாய் ஓயாது தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சிறுமி எழுத்தாளராகவோ, பேச்சாளராகவோ ஆகலாம். உதாரணம்: அடியேன்!

    பிடித்துத் தள்ளாதே!

    சிலருக்குத் திறமை இருந்தும் அத்துறையில் ஆர்வம் இல்லாது போகலாம். அப்போது அவர்களை வற்புறுத்தி அதில் ஈடுபடச் செய்வது மகிழ்வை ஊட்டாது.

    `நீ பெரிய பாடகியாக வேண்டும். விளையாடி பொழுதை வீணாக்காதே!’ என்று பிற குழந்தைகளுடன் கலந்து பேசி, விளையாடக்கூட அனுமதிக்காத தாயைப்பற்றி கசப்புடன் பேசும் பாடகியை அறிந்திருப்பீர்கள்.

    ஆசையா, பேராசையா?

    குழந்தைப் பருவத்திலேயே பல துறைகளிலும் சிறந்து விளங்கவேண்டும், அல்லது ஒரே துறையில் முழுமனதாக கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசைதான்.

    பாடம், பயிற்சி என்பதெல்லாம் மகிழ்ச்சி ஊட்டுவதாக, `அடுத்த பாடம் எப்போது?’ என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணுவதாக இருக்க வேண்டும். அலுப்புக்கும், அச்சத்திற்கும் அங்கு இடமில்லை. திட்டியும் அடித்தும் பாடம் சொல்லிக்கொடுக்கிற ஆசிரியர்கள், `படிப்பதெல்லாம் போட்டிக்காக, அல்லது பரீட்சை சமயங்களில்தான்!’ என்ற சலிப்பை உண்டுபண்ணுகிறார்கள்.

    இளமைக்காலத்துக்கே உரிய களிப்பு, சிரிப்பு, விளையாட்டு, பிறருடன் பழக முடிவதால் யாரை நம்பலாம், யாரை ஒதுக்க வேண்டும் என்ற – வாழ்க்கைக்கு முக்கியமான — அனுபவங்களெல்லாம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆத்திரம் வராமல் என்ன செய்யும்?

    ஒப்பிடாதே!

    எல்லாருமே சாதனையாளர்கள் ஆகிவிட முடியுமா? இதனால் மற்ற குழந்தைகள் திறமையற்றவர்கள் என்று அர்த்தமில்லை.

    `நீயும் இருக்கிறாயே! உன் தம்பியைப் பார்! எவ்வளவு புத்திசாலி!’ என்று இழித்துரைக்கும் பெற்றோர் இத்தகைய ஒப்பிடுதலால் தாழ்வு மனப்பான்மையை விதைத்து, ஒரு சிறுவனுக்கு இருக்கும் சொற்ப திறமையையும் அழித்துவிடுகிறார்கள்.

    `அடக்க முடியவில்லை!’ என்று பள்ளிக்கூடத்தில் தண்டிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் அப்படி இருக்கிறார்கள்?

    கதை

    ஒரு வயதுக்குள்ளாகவே ஏதாவது ராகத்தை இழுத்துக்கொண்டிருப்பாள் சந்திரிகா. ஒன்றரை வயதில் கதை சொல்வாள் – மழலையில்தான். அவளுக்கு நான்கு வயதானபோது, பாலர் பள்ளி ஆசிரியை புகார் செய்தாள் – அடிக்கடி வகுப்புக்கு வெளியே அவள் போய்விடுகிறாள், அவளைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் போய்விடுகிறார்கள் என்று.

    தாய் மகளிடம் கேட்டபோது, “நடப்பது உடம்புக்கு நல்லது என்று சொல்லியிருக்கியேம்மா! எனக்கு டீச்சர் சொல்லிக்கொடுப்பது புரியவில்லை. அதுதான்!” என்றாள்!

    முதல் வகுப்பிலிருந்து பல வருடங்கள் அவளுடைய கையெழுத்து மோசம் என்ற புகார் வந்தது.

    இம்மாதிரிக் குழந்தைகளின் திறமைகளைப் பாராட்டி, குறைகளைப் பெரிதுபடுத்தாது இருத்தல் நலம். பள்ளிக்கூடத்தில் திட்டி, அடிக்கிறார்களே என்று தாயும் அதுபோல் செய்யாது, மகளுக்குப் பக்கபலமாக இருந்தாள்.

    ஒரே ஒரு ஆசிரியை மட்டும் சொன்னாள், `இவளைப்போன்ற புத்திசாலியைப் பார்த்ததேயில்லை!’ என்று. ‘SUPER BRAINS’ என்ற பிரிவைச் சேர்ந்தவள் சந்திரிகா.

    வயதுக்குமீறிய அறிவு இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளை வேலை செய்யும் வேகத்திற்கு கைகள் ஒத்துழைக்காது. எதையும் வேகமாகச் செய்ய முற்படுவதால் எழுதுவது கிறுக்கலாக இருக்கும். எதையும் வித்தியாசமாக யோசிப்பார்கள்.

    இன்று இசை, கல்வி இருதுறைகளிலும் முன்னிலையில் இருக்கிறாள் உளவியல் பேராசிரியையான இப்பெண்.

    மேற்கொண்டு செய்யவேண்டுவது

    உங்கள் குழந்தைக்குப் பாட்டு கேட்கப் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். (`யாருக்குத்தான் பிடிக்காது?’ என்று கேட்கக் கூடாது, ஆமாம்! ஔரங்கசீப்புக்கு இசை பிடிக்காது என்று படித்திருக்கிறேன்). உங்களுக்கோ சங்கீதத்தில் ஞானமோ, ஆர்வமோ கிடையாது. இருந்தாலும், குழந்தையை பாட்டு வகுப்பில் சேர்த்துவிடுகிறீர்கள். மாதாமாதம் ஆசிரியருக்குச் சம்பளம் கொடுத்துவிடுவதோடு உங்கள் கடமை முடிந்து விடுவதில்லை. அத்துறையில் சிறந்தவர்களின் கச்சேரிக்கு அழைத்துப்போனால், அறிவு விரிவடையும். இப்போதுதான் இணையத்தில் எந்தத் துறை வேண்டுமானாலும் கிடைக்கிறதே! ஆனாலும், நேரில் கற்றுக்கொடுக்க, தவற்றைத் திருத்த, ஒரு குரு அவசியம்.

    தோல்வியா? மக்கு!

    போட்டிகளில் வெற்றிபெற்றால் குழந்தையைக் கொண்டாடி, தோல்வி அடைந்தால் தண்டிப்பது ஒரு குழந்தையைப் பயங்கொள்ளியாக ஆக்கும் செயல்.

    மாறாக, `அடுத்த முறை நன்றாகச் செய்வாய், பார்!’ என்பதுபோல் ஊக்கமளித்தால் தன்னம்பிக்கையுடன், எந்த நிலையிலும் ஊக்கத்தை இழக்காது இருப்பதுடன், வேறு புதிய துறைகளிலும் ஆர்வத்துடன் வளர்வான்.

    எல்லாக் குழந்தைகளும் சாதனையாளர்கள் ஆகமுடியாதுதான். ஆனாலும், அவர்களால் முடிந்ததைச் செவ்வனே செய்து முடிக்கப் பிறர் ஆதரவு காட்டினால், திருப்தியாவது கிடைக்குமே!

    பி.கு: யார் அந்த மிருங்க வித்வான்?

    பதில்: குரு காரைக்குடி மணி.

    Share