-வி.நாகலெட்சுமி

முன்னுரை:

சங்க இலக்கியம் தமிழர் வாழ்ந்த வாழ்வின் வெளிப்பாடு ஆகும். இவற்றுள் அகம்-புறம் என்னும் பகுப்பு முறை தமிழர்களின் செம்மையான வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்றன. அகவாழ்வைக் காட்டிலும் புறவாழ்வு தமிழுக்கென்ற தனித்துவத்தைப் பறைசாற்றி நிற்கின்றது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு பண்டைத்தமிழரின் பண்பாட்டுக் களஞ்சியமாகத் திகழ்கின்றது. மேலும் தமிழ் மன்னர்களின் சீர்சால் பண்புகளாம் ஒழுக்கமும், புலவர்களின் பண்பாடுகளாம் தன்மான உணர்வும், பண்டைத்தமிழ் மக்களின் வாழ்வியல் ஒழுங்குகளும், பண்பாடுகளும் பதிவு செய்யப்பெற்று பண்டைத் தமிழரின் பெருமையைப் புறநானூறு மற்ற இனத்தாரும் பிறநாட்டாரும் வியப்புறும் வண்ணம் வெளிப்படுத்துகிறது. புறநானூற்றுப் பண்பாட்டுப் பதிவுகளை தொகுத்துக் காட்டுவது இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

பண்பாடு – விளக்கம்:

பண்பாடு என்பது ‘பண்படுதல்’ எனும் சொல்லின் வினையடியாகப் பிறந்தது. பண்படுதல், ஒன்றுபடுதல், இசைவு பெறுதல், இசைந்து ஒழுகுதல் போன்ற பொருளைக் குறிக்கிறது. அதாவது பண்படுதலே பண்பாடாகும். “ஒரு முறையான நடத்தை முறைக்கு மக்கள் ஏற்படுத்திக்கொள்ளும் ஓர் அமைப்பு அல்லது மன அளவிலான விதி” எனக் கருத்தியலாளர்கள் பண்பாட்டிற்கு ஒரு பொது விளக்கம் தருகின்றனர்.

பண்டை மறம்:

பண்டைத்தமிழர்கள் பகைவர் நாட்டின் மீது படையெடுக்கப் புறப்படும் முன் தாங்கள் வருவதை முன்கூட்டியே அறிவித்தலும் உண்டு. அவ்வாறு அறிவிக்கும் பொழுது தங்கள் படையெடுப்பால் சாதாரண பொதுமக்கள் உள்ளிட்டோர் துன்பப்படக்கூடாது என்ற உயர்ந்த பண்பாட்டைக் கொண்டிருந்தனர். இதனை,

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும்
பிணியுடை யீரும் பேணித்
தென்புல
வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற்
புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்
அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்”      (புறம் – 9)

என்ற புறநானூற்றுப் பாடல்வழி அறியலாம். மேலும் போர் நெறியிலும் அறநெறியைக் கடைப்பிடித்துப் பசு, பெண்டிர், பார்ப்பனர், பிணியுடையோர், இறந்தவர்க்குச் செய்யவேண்டிய கடன்களைச் செய்தற்குரிய பிள்ளைகளைப் பெறாதவர் ஆகியோரை பாதுகாப்பான இடத்தை அடைவீராக என்று மக்களை எச்சரிக்கும் நோக்கில் மன்னனது பேணும் இயல்பும், கருணை இயல்பும் வெளிப்படுகின்றன.

நீர்வளம்:   

நாட்டுவளத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ள நீர்வளத்தின் இன்றியமையாமையைத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்தும் குடபுலவியனார்,

உணவுஎனப் படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும்
உயிரும் படைத்திசி னோரே”   (புறம் – 18)

என்ற பாடல் வழி நீர்நிலைகளைப் பெருக்கி நாட்டை வளப்படுத்துவது அரசியலில் அரசனின் தலையாயக் கடமை என்றும், அத்தகைய அரசனே நிலைபெற்ற புகழ்பெற முடியும் என்றும் அறிவுறுத்தியமை புலனாகிறது.

ஒற்றுமை உணர்வு:

‘ஒற்றுமையாக இருப்பதே பலம்’ என்பதைப் புலவர், இருவேறு அரசர்கள் ஒருசேர இருந்தமையை நோக்கி இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும் என வாழ்த்தியமையை,

இருவீரும்
உடன்நிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்
பௌவம்
உறுத்தஇப் பயம்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய் ஆகாதே”   (புறம் – 58)

என்ற பாடல்வழி அறியலாம். தமிழக மூவேந்தர்கள் ஒருவருக்கொருவர் பகை கொண்டு போரிட்டால் வேற்றுப்புலத்து அரசர்களுக்குத் தமிழகம் ஆளும் இடமாகும் என்பதும் ஒற்றுமையினால் உலகம் வசப்படும் என்பதும் புலனாகின்றது.

பகுத்துண்ணும் பண்பு:

பழந்தமிழர்  பகுத்துண்ணும் பண்பினைப் பெரிதாகப் போற்றினர். கிடைத்தற்கரிய அமிழ்தம் கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல் அனைவரோடும் பகுத்துண்டார்கள் என்பதை,

இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்
இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே” (புறம் – 182)

எனப் புறநானூறு காட்டும். ஔவையார் அதியமானின் வீரத்தைப் பாராட்டுவதுடன், அவன் எல்லாருக்கும் பகுதுக்கொடுத்து உண்ணும் இயல்பினான் என்பதைச் சுட்டுகின்றார்.

உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின்
உடன் உண்ணும்
இல்லோர்
ஒக்கல் தலைவன்”   (புறம் – 95)

என்ற பாடல்வழி அதியமானின் உயரிய பண்பை ஔவையார் வெளிப்படுத்துகின்றார்.

கல்வியின் பெருமை:

மனிதனை மேம்படுத்தவும் நன்னெறியில் செல்ல வைப்பதற்கும் சிறந்த செல்வமாகத் திகழ்வது கல்விச் செல்வமாகும். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ எனப் பெயர் பெற்ற உயர்நிலைக்குத் தமிழகம் அக்காலத்து மேம்பட்டு விளங்கியது. ஆசிரியருக்குத் துன்பம் வந்தபோது உதவியும், வேண்டிய பொருள் கொடுத்தும், வழிபாட்டு நிலையை வெறுக்காது கற்பது நன்று எனக்கூறும் பாண்டியன் ஆரியப்படைக்கடந்த நெடுஞ்செழியன்,

ஒருகுடிப்  பிறந்த  பல்லோ  ருள்ளும்
மூத்தோன்  
வருக  என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை
தெரிந்த  நற்பா  லுள்ளும்
கீழ்ப்பால்  
ஒருவன்  கற்பின்
மேற்பால்  
ஒருவனும்  அவன்கண்  படுமே”   (புறம் – 183)

என்று உலகியலில் கல்வியின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றான். கல்வி உயர்வு தாழ்வினை நீக்குகிறது. அரசனும் கற்றவன் அறிவுரைப்படியே ஒழுகுவான். தன் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பு கொண்ட பலரில் கற்றவனையே தாயின் மனம் மிகவும் விரும்பும் என்பதை அறியமுடிகிறது.

வரி வாங்கும் முறை:

அரசன் தன் நாட்டு வருவாய்க்காக, மக்களிடம் வரிவாங்குதல் முறையேயாயினும், ஒரு சமயத்தில் மக்கள் துன்புறுமாறு வாங்கும் வரிப்பணத்தினால் அரசனுக்குக் கேடு வரும்; மக்களுக்குத் துன்பம் வரும். இதனை அரசன் உணர வேண்டும்.

பரிவுதப எடுக்கும் பிண்டம்  நச்சின்
யானை
புக்க புலம் போலத்
தானும்
உண்ணான் உலகமும் கெடுமே”   (புறம் – 184)

என்று பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் பிசிராந்தையார் அறிவுறுத்துகின்றார்.

செல்வத்துப் பயனே ஈதல்:

செல்வம் என்பது சிந்தையின் நிறைவாகும். பிறருக்குக் கொடுத்து மகிழும் வாழ்வே சிறப்புடையது. உண்பது நாழி; உடுப்பவை இரண்டே எனக் கூறி,

செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம்
எனினே தப்புந பலவே”    (புறம் – 189)

என்று நக்கீரனார் பொதுவாக அறிவுறுத்துகின்றார். அறவழியில் பொருளீட்டித் தானும் இன்புற்றுப் பிறர்க்கும் கொடுத்து அவர்களையும் இன்புற்று வாழவகை செய்வதன் மூலம் சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கை நிலைகள் மேம்பட்ட தன்மைகளாக விளங்கியமை புலனாகின்றது.

மனிதநேயம்:

பழந்தமிழர் பண்பாடு மிக உயர்ந்தது. உலகமெல்லாம் பாராட்டிப் பின்பற்றக்கூடியது. தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றென்று கருதினர். உலகமக்களை ஒரே குலத்தவராக எண்ணினர். மனிதநேயமே இவ்வுலகிற்கு அவசியம். ஒருமைப்பாடே ஊக்கம் என்பதைக் கணியன் பூங்குன்றனார் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே,

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும்
நன்றும் பிறர்தர வாரா
————————————————–
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை
இகழ்தல் அதனினும் இலமே”   (புறம் – 192)

என்று ஒற்றுமையுணர்வையும், மனிதநேயத்தையும், நன்மையும் தீமையும் நமக்கு நம்மால்தான் வருகிறது என்பதையும் பறைசாற்றுகிறார். இப்பாடல் தமிழர்களின் தனித்த பண்பாட்டை விளக்குவதாக அமைகின்றது.

முடிவுரை:

எட்டுத்தொகை நூல்களில் புறநானூறு பண்டையத் தமிழரின் வாழ்வியல் பண்பாட்டை மெய்மையுற விளக்கும் கலங்கரை விளக்கமாகும். மறத்தில் அறமும், நீர்வளம் குறித்த சிந்தனையும், பகுத்துண்ணும் பண்பும், ஒற்றுமை உணர்வும், ஏற்றத்தாழ்வை நீக்கும் கல்வியும், மக்களைத் துன்புறுத்தாது வரிவாங்கும் முறையும், அனைவரையும் ஒன்றாக எண்ணும் மனிதநேயமும் பண்டையத் தமிழரிடையே நிலவியமை புலனாகின்றது. இன்றைய நாகரிக உலகில் சிலர் பண்பாட்டை மறந்தும், இழந்தும் வரும் வேளையில் அவற்றை நினைவுகூர்வது சாலப் பொருந்தும்.

துணை நின்ற நூல் ஆதாரங்கள்:

  1. புறநானூறு மூலமும் உரையும் – ஒளவை துரைசாமிப்பிள்ளை.
  2. பண்பாட்டு மானுடவியல் – பக்தவத்சல பாரதி.
  3. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி.

*****
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை
அ.வ.அ கல்லூரி (தன்னாட்சி)
மன்னன்பந்தல்

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *