Blog

  • உறவாகிய யோகமும் போகமும் உயிராளீ

    -முனைவர் இரா. மதன் குமார் 

    முன்னுரை

    உயிர்கள், சார்ந்ததன் வண்ணமாய் விளங்கவல்லவை. அவை, மும்மலங்களின் தொடர்பால், நிலையில்லாத உடம்பே, தாம் என மயங்குகின்றன; உடம்பின் வழியே  பெண்ணின்பமே பெரிதென அழிகின்றன. உயிர்கள் இவ் அறியாமை நீங்கி, கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, உற்று அறிதலாகிய பேரறிவு ஐந்தாலும்,   தலைவனாகிய இறைவனை உணர்ந்து, ‘திருவடி இன்பமே பேரின்பம்’ என்னும் ஞானநிலையினை எய்தவேண்டும். அதற்கு, ‘உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்’ என்னும் பெருநிலையில், புலன்இன்பங்களைப் பேரின்ப நெறிக்குரியதாகப் பண்படுத்திக் கொள்ளவேண்டும். அளவுகடந்த புலனின்ப நாட்டத்தை, இறைவன்பால் மடைமாற்றம் செய்கின்ற முயற்சியாகவே, சமயக்குரவர், சந்தானக் குரவர் முதலான அருளாளர்கள், தமது திருப்பதிகங்களில் அகத்துறையினையும் பாடுபொருளாகக் கொண்டு பாடியுள்ளனர்.  அவ்வகையில், ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவராகிய திருமாளிகைத் தேவரது, ‘உறவாகிய யோகமும்’ என்ற திருப்பதிகம் பேரின்பப் பெருநெறி காட்டுகின்ற திறத்தை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    அருள்துறையுள் அகத்துறை

    திருமாளிகைத்தேவர்தம் அருளியல் வாழ்வானது, தில்லைத்திருத்தலத்துடன் மிகநெருங்கிய தொடர்புடையது. அவர் அருளியதாக உள்ள நான்கு திருப்பதிகங்களும், தில்லைத் திருத்தலத்திற்கு உரியவையாக விளங்குகின்றன.  அவற்றுள் மூன்றாவது திருப்பதிகம், அகத்துறைப் பொருண்மையில் அமைந்துள்ளது. இத்திருப்பதிகத்தில், ‘காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்கின்ற நோக்கில்,  இறைவனுக்கான அருள்துறையினைப் பாடுவதற்கு அகத்துறையும் பாடுபொருளாக அமைந்துள்ளது. அகத்துறை வழியே அருள்துறையைப் பாடுங்கால், சிற்றின்பநிலைப் பொருண்மைகள், திருவருள் தொடர்புடைய தத்துவநிலைகளாக, உள்ளுறைப் பொருள் தருவனவாக அமைகின்றன.

    இத்திருப்பதிகத்துள், தலைவனாக,  பரம்பொருளாகிய சிவபெருமானும், தலைவியாக,  பக்குவ ஆன்மாவும் வைத்து உணரப்பெறுகின்றனர். பதிகப் பொருண்மை அளவில், மணிவாசகப்பெருமானால் தில்லையில் அருளிச்செய்யபட்டதாகிய, ‘கீர்த்தித் திருஅகவல் மற்றும் போற்றித் திருஅகவல்’ முதலான திருப்பதிகப் பொருண்மைகள், சிவனார் பெருந்திறமாக விரித்துரைக்கப்பெற்றுள்ளன.

    நாதாந்தத்துக் குணக்குன்று

    பெருமானே, அண்டத்திலும், பிண்டத்திலும் நாதாந்தக் கூத்தாடி அனைத்தையும் இயக்குகின்றான். அத்துடன், தத்துவங்களின் முடிவாகிய நாததத்துவத்தையும் கடந்த பரத்துவம் கொண்டும் விளங்குகின்றான்.  “நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர்” (உண்மை விளக்கம்: பாடல்:39) எனப் பெருமானின் தத்துவாதீதப் பரத்துவம் போற்றப்பெறும். ஓயாத அவனது அருள்கூத்தினாலேயே, அண்டம், பிண்டம் ஆகியவை இயங்குகின்றன. ஞானாகாசப் பெருவெளியில் அணுவுக்கும் அணுவாக இருந்து ஆடி ஆட்டுவிக்கின்ற பெருமான், அனைத்துயிர்களிலும் உயிர்ப்பாக இருந்து அவற்றையும் ஆட்டுவிக்கின்றான்.

          “தில்லை மூதூர் ஆடிய திருவடி
           பல்லுயிர் எல்லாம் பயின்றனவாகி
           எண்ணில் பெருங்குணம் எழில்பெற விளங்கி…” (திருவாசகம்: கீர்த்தித் திருஅகவல்: அடிகள்: 1-3) என்பது, மணிவாசகரின் அருள்வாக்கு.   இவ்வாறு, அருமையாம் பெருந்திறமும், எளிமையாம் கருணைத்திறமும் ஒருங்கே விளங்குகின்ற பெருமானை மேலும் போற்றுபவராக மணிவாசகர்,
    “அருமையில் எளிய அழகே போற்றி”   (திருவாசகம்: போற்றித் திருஅகவல்: அடி: 126) எனக் குறித்தருளியுள்ளார்.

    குணமும் குறியும் கடந்த பெருமான், தன்னை உயிரறிவுக்கு உணர்த்தி அருளவேண்டி, குறித்த குணமும், குணப்பொருளாகவும் எழுந்தருள்கின்றான். எனவே திருமாளிகைத்தேவர், பெருமானை இத்திருப்பதிகத்தின், அனைத்துத் திருப்பாடல்களிலும் ‘குணக்குன்றே’ என விளித்து மகிழ்ந்துள்ளார். அத்துடன், பெருமானின் அருமை, எளிமை ஆகிய இருவேறு பெருங்குணங்களையும் நமக்கு உணர்த்தத் திருஉள்ளம் கொண்டுள்ளார். அத்திருக்குறிப்புடன், ‘கயிலை மலைப்பெருமானே, தில்லையில் அருள்கூத்தனாக விளங்குகின்றான்’ என்று அருளிச்செய்துள்ளார். மேலும், கயிலை மலையில், பெருமான்,  உமையம்மைக்கு, ஆகமப் பொருளை உபதேசித்தருளிய பாங்கினையும், காடுறை வேடனென உமையோடும் கானகத்தில் நடந்தருளிய அருங்கருணையையும், சங்காரகாரணனாகிய பெருமானின் பரத்துவத்தை விளக்குகின்ற திருநீற்றுப்பொலிவழகையும் இப்பதிகத்துள் எடுத்தாண்டுள்ளார்.

    உறவாகிய யோகமும் போகமுமாய் உயிராளீ

    இத்திருப்பதிகமானது, ‘உறவாகிய யோகமும்’ எனத் தொடங்குகிறது. ‘ உறவு – யோகம் – போகம் – உயிராளீ’ என்பது பதிகத்தின் முதற்தொடராகும். உறவாவது, உயிர், ஞானநெறி வழியே இறைவனுடன் கொள்கின்ற பிரிவறியாத திருவருளுறவாகும்; திருவருளுறவின் வழியே இறைவன் மீதான பற்று நீங்காது, அவனுடன் ஒன்றியிருத்தலே யோகமாகும்; போகமாவது, இன்பம் நுகர்தல். அந்நிலையானது,

                “வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால் தோறும்
                தேக்கிடச் செய்தனன்…
                அற்புதமான அமுத தாரைகள்
                ஏற்புத் துளைதொறும் ஏற்றினன்” (கீர்த்தித் திரு அகவல்: அடிகள்170-171, 175-176) என்றமைகின்ற பேரின்ப அனுபவமாகும். இவ்வாறு, உயிர்களின் உறவாகவும், யோகமாகவும், போகமாகவும் இருந்து,  உயிர்களை ஆள்கின்ற பசுபதியாக பெருமானைப் போற்றித் திருமாளிகைத்தேவர்,  இப்பதிகத்தைத் தொடங்கியுள்ளார்.

    புரம் செற்ற சிலைகொண்ட வில்லாளி
    தனது மகளது நிலைக்கு இரங்குகின்ற செவிலித்தாயின் கூற்றுகளாக அமைந்துள்ள இப்பாடல்களில், அருச்சுனருக்குப் பாசுபதப் படைக்கலம் அருளவேண்டி, வேடுவக்கோலம் ஏற்றுவந்து, பெருமான் புரிந்த திருவிளையாடல் போற்றியுரைக்கப்பெற்றுள்ளது. இவ்வரலாற்றினைக் குறிக்கின்ற முதலாவது திருப்பாடலில், பெருமான், முப்புரத்தை எரிஅம்பு செலுத்தி அழித்தொழித்த வில்லுடன், கானகத்தில் பன்றியை வீழ்த்தத் துரத்தி நடந்ததாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

                 “சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
                  சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
                 மறவா”  (உறவாகிய யோகமும்: பாடல்: 1)

    என்றமைந்த தொடர்களில்,  ‘முப்புர அழிப்புக்காக, பெருமான் கைக்கொண்ட வில்லுடன், அருச்சுனருக்கும் அருளவந்ததன் காரணத்தைத் திருமாளிகைத்தேவர் உள்ளுறைப் பொருளாக விளக்கியுள்ளார். “முப்புராதியர்கள், பெறுதற்கு அரிய பேற்றினைப்பெற்ற ஆணவத்தால் பெருமானை மறந்து, மண்ணுயிர்களுக்குத் தீமையினை மட்டுமே செய்து துன்புறுத்திவந்தனர். பெருமான் அவர்களது அறியாமையினை அகற்றி அருளவேண்டி, எரியம்பினை எய்து முப்புரங்களை அழித்தொழித்தார். அது பெருமானது மறக்கருணைக்குச் சான்றெனலாம். முப்புராதியர்கள் தாம்பெற்ற உயர்ப்பேற்றினை மறந்ததும் அன்றி, தமக்கு அவ் உயர்ப்பேற்றினைத் தந்தருளிய பெருமானையும் மறந்து மயங்கினர்.

    பேறு தந்தருளிய பெருமானை மேன்மேலும் மறவாது வழுத்துதல், நம்மைக் குறையாத திருவுடையாராக விளங்கச்செய்யும். ஆனால், மலமறைப்பாகிய அறியாமையில் ஆழ்ந்த முப்புராதியரிடத்தில், ‘தாம் பெற்ற பேற்றிலும் இனிப் பெறத்தக்க பேறு எவையும் இல்லை’ என்று மயங்குகின்ற அறியாமையே விளைந்தது. அதனால் அவர்கள், ‘சிறவாதவர்’ என்று ஆசிரியரால் இகழ்ச்சிப்பொருளில் சுட்டப்பட்டுள்ளனர்.  அத்தகைய இகழ்ச்சிச் சுட்டு, மனித உயிர்களாகிய நமக்கும் பொருந்துவதாகும். காரணம், நமக்குப் பெருமானால் அருளப்பெற்ற பிறப்பின் பெரும்பயனை நாம் உணராமல், வாழ்நாளை வீணே கழிக்கின்றோம். அத்தகைய அறியாமையினை உணர்த்தி, பெருமானைப் பற்றி உய்ய, அருச்சுனனின் பக்தித்திறத்தையும், பெருமான் அவர்க்கு இரங்கியருளிய திறத்தையும் பதிகப்பொருண்மையாக, திருமாளிகைத்தேவர் எடுத்தாண்டுள்ளார்.

    நெடும்பகல் நடந்த வேடர்

    அடியவர்’ என்பதை மறந்தவர்களுக்காக நிகழ்த்திய முப்புர எரிப்பில், பெருமானின் அளப்பரும் வீரத்தின் வெளிப்பாடாகிய மறக்கருணை வெளிப்பட்டது எனலாம். ஆனால், அருச்சுனரோ, பக்குவநிலை கொண்ட அடியவராகப் பெருமானை நோக்கித் தவமியற்றினார். அதனால், அருச்சுனருக்கு அருளவேண்டிப் பெருமான், காடுறை வேடனென வந்தருளினார். அந்நிலையில், அவர்தம் தாயின் நேர் தயாகுணமும், தாம் புண்சுமந்தேனும் அடியவர்க்கு அருள்கின்ற அருட்கருணையும் விளங்கக்காணலாம்.

    “முகாசுரன் என்னும் அசுரன் அருச்சுனரைக் கொல்லவந்த வேளையில், அவ்அசுரனிடமிருந்து அருச்சுனனைக் காப்பதற்கு பெருமானே, வேடுவக் கோலம் தாங்கினார். அவர் வேடுவக்கோலம் தாங்கி, தாம் மட்டும் தனியே நடவாமல், வேடுவச்சியாக அம்மையையும் உடன்அழைத்துவந்து, திருவடிகள் நிலந்தோயும் வண்ணம், நெடும்பகல் நடந்தார்” எனத் திருமாளிகைத்தேவர் பெருமானின் வேடுவத் திருவிளையாடலைக் குறித்தருளியுள்ளார்.

                “வண்டார் குழல்உமை நங்கை முன்னே
                  மகேந்திரச் சாரல்  வராகத் தின்பின்
                 கண்டார் கவலவில் லாடி வேடர்
                  கடிநா யுடன்கை வளைந்தாய்”   (உறவாகிய யோகமும்: பாடல்:6)

    “காடாடு பல்கணம் சூழக் கேழற்
                  கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
                  வேடா”         (உறவாகிய யோகமும்: பாடல்:2)

    கானகத்தில் நெடும் பகல்பொழுது முழுவதும் கழிய நடந்தநிலையில், பெருமானின் எளிவந்த கருணை விளங்குகிறது.

    அருச்சுனருக்கு அருளவேண்டி, அன்று கானகத்தில் திருவடிதோய நடந்த பெருமான், இன்று தனக்கு அருளவேண்டிப்  பலகாலும் வருந்தி அழைத்தும் வாரமையைக் கண்டு, தலைவி ஆற்ற இயலாமல் புலம்புவதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

              “சேவேந்து வெல்கொடியானே என்னும்
                   சிவனே என் சேமத் துணையே என்னும்
              மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
                   வளர்நாய காஇங்கே வாராய் என்னும்”                 (உறவாகிய யோகமும்: பாடல்: 8)

    நாதாந்த பதம் நல்கும் தனிநாயகன்

         பெருமானது வேடுவக் கோலப்பொலிவழகு, திருமாளிகைத் தேவரின் சொல்லோவியமாக, வேடன் ஒருவனையே நமது கண்முன்னர் கொண்டுவந்து நிறுத்துகின்ற சிறப்புடையது. ‘சுடுகாட்டின் பல்பூதங்களும், வேற்றுருக் கொண்டுப் பெருமானைப் பின்தொடர்ந்தன;  வேடுவனாகிய பெருமான், விரைந்து பறை ஒலிக்கவும், அம்பினை விரைந்து செலுத்தவல்ல வலிய வில்லையும், அம்பையும்  கையில் ஏந்தியதுடன், குறுவாளும் உடன்இருக்க, கல்லைச் செலுத்தப் பயன்படுவதாகிய கவண்கருவி ஆகியவற்றுடன்,  வெற்றிக்குரிய ஆரவாரம் சிறிதும் குறையாமல், சீழ்க்கை ஒலி எழுப்பிப் பன்றியின் பின்னால் விரைந்து நடந்தார். அவர், இடுப்பில் புலித்தோலாடையினைப் புனைந்தும், திருவடியில் தோல் செருப்பினை அணிந்தும் வந்தார்’ என்று பெருமானின் வேடுவக்கோலப் பொலிவழகு, திருப்பதிகத்தின் ஏழாம் திருப்பாடலில் சிறப்புறச் சுட்டப்பெற்றுள்ளது.

    நாததத்துவத்தையும் கடந்த அரும்பொருளாகிய பெருமான், தன் அடியவருக்கும் அத்தகைய பெருநிலையினை அருளவல்லவர். வேண்டுவார் வேண்டுவதை ஈவதையே இயல்பெனக் கொண்ட பெருமானிடத்தில், நாதாந்த பெரும்பேற்றினை விழைந்தவர், திருமாளிகைத்தேவர். அன்று அருச்சுனருக்கு எளிவந்த கருணையுடன் நாடிவந்து அருளியவகையில், தமக்கும் நாதாந்த பெரும்பதத்தை அருள, பெருமான் இரங்கியருளவேண்டும் என்ற வேண்டுதலே,

               “கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
    சிலையும் கணையும் கவணும் கைக்கொண்
      டுடுப்பாய தோல் செருப் புச்சுரிகை
    வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
                              நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்
    தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
                              கொடுப்பாய் என் னும் குணக் குன்றே என்னும்
    குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே”                (உறவாகிய யோகமும்: பாடல்: 7) என்னும் திருப்பாடலாக அமைந்துள்ளது.

    குருவாக வந்தருளாயோ

    நாதாந்தப் பெரும்பேற்றினை அருளவேண்டிய திருமாளிகைத்தேவர், ‘குருவே சிவம் எனக் கூறினன் நந்தி’ என்னும் பெருமொழிகளை நினைகின்றார். கயிலையில்,  மலைமகளுக்குக் குருவாகி, ஆகமப்பொருளை அன்று விரித்துரைத்த பெருமான், திருமால் முதலான தேவர்களுக்கும் குருவாக விளங்கியவர்.

                 “மகேந்திரப் பொன்மலையில் மலைமகளுக்கருளும் குரு” (உறவாகிய யோகமும்: பாடல்: 10)

                 “சுடர்நீள் முடிமால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கெல்லாம் குரவா”                                                     (உறவாகிய யோகமும்: பாடல்: 9) என்று பெருமானின் ஞானாசிரியநிலையைப் போற்றுகின்றவேளையில், அவரே  தனக்கும் குருவாக எழுந்தருளுதற்குப் பேராவல் கொள்கின்றார். ‘பசுபதியாகிய பெருமானைப் பற்றுதற்கு பசுநூல் ஓதுவிக்கும் அறியாமை மிக்க குருவால், உயிரறிவு எள்முனை அளவும்கூட விளக்கம்பெறாது’ என்பது அவர்தம் ஞானத்தெளிவு. அத்தகைய கீழோரைக் கண்ணால் காண்பதையும், அவருடன் உரையாடுவதையும் தாம் புரியேன்’ என்பதனைத் திருமாளிகைத்தேவர்,

     “கயவரைப் பசுநூல் கற்கும்
     பிச்சரைக் காணா கண்வாய்
           பேசாதப் பேய்க ளோடே”                             (இணங்கிலா ஈசன்: பாடல்: 9)

    என உறுதிபடச் சாற்றியுள்ளார்.  பற்றாகவும், பற்றப்படுகின்ற பொருளாகவும், அதனைப் பற்றுதற்குரிய வழியாகவும், வழித்துணையாகவும், பெருமானே விளங்குகின்ற நிலையினைத் திருமந்திரம், ‘காண வல்லார்க்குக் கண்ணின் மணி’ (திருமந்திரம்: 2823) என உணர்த்துகிறது. அவ்வகையில், பெருமானே தமக்குக் குருவாக இரங்கியருளவேண்டும் என்பதனைத் திருமாளிகைத்தேவர்,

               “நெறியே என்னும் நெறிநின்றவர்கள்
                           நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
                       குறியே”     (உறவாகிய யோகமும்: பாடல்: 4)                          என்றும் குறித்தருளியுள்ளார்.

    உமையம்மைக்கும், தேவர்களுக்கும், சனகாதி முனிவர்களுக்கும் அமைந்த அருள்பக்குவநிலையால், அவர்கள் பெருமானையே குருவாகப் பெற்றுய்ந்தனர்; அத்தகைய பக்குவநிலையில், பெருமானையே நினைந்துருகி, அவனது பெரும்பெயராம் திருவைந்தெழுத்தை ஓதிக் கரைந்து, குறையாத பேரன்பில் பெருகி, பிறவிப்பிணி தீர்க்கின்ற திருநீற்றுப் பொலிவுடன் திகழ்வதாகிய தம் பக்குவநிலையினைத் திருமாளிகைத்தேவர் அகத்துறைப் பதிகத்தில் உள்ளுறைப்பொருளாகக் குறித்தருளியுள்ளார்.

                    “உற்றாய் என் னும் உன்னை யன்றி மற்றொன்
                 றுணரேன் என் னும் உணர் வுள்கலக்கப்            பெற்றாய ஐந்தெழு த்தும்பிதற்றிப்
                             பிணிதீர் வெண் ணீறிடப் பெற்றேன் என்னும்
                சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
                    மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில்
                குற்றாய் என் னும் குணக் குன்றே என்னும்
                    குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே”                 (உறவாகிய யோகமும்: பாடல்:11)
    என்றமைந்த திருப்பாடல், பேரருள் விழைவில் தன்வயமிழந்த தலைவியின் நிலையாக, திருமாளிகைத்தேவரின் அருள்பக்குவநிலைக்குச் சான்றாகிறது.

    பேரருள் திளைப்பில் சீவன்முத்தநிலை

     ‘சிவமே பெரும்பொருள்’ என்றும், ‘திருவருளே பெரும்பொருள்’ என்றும் தெளிந்தவராகிய திருமாளிகைத்தேவர், திருவருள் நிலைப்புக்குக் காரணமாகிய அடியார் இணக்கத்தையே விழைகின்றார். அதனால், ‘பூசுவதும் திருநீறு, பேசுவதும் பெருமானின் திருப்புகழாம்’ என்று விளங்குகின்ற உயர்அடியார் உடனான இணக்கத்தையே நாடுபராக,  ‘திருநீறிடா உருத்தீண்டேன்’ என்று குறித்தமைகின்றார்.

    அடியார்களுடனான இணக்கம், தம்மைச் சிறுபொருளாகக் கருதி, தான் என்கின்ற ஆணவச் செயல்பாட்டை மறக்கச்செய்யும்; தம்மை மறந்து, பெருமானையே பெரும்பாருளாகக் கருதி அவரைப் பற்றுகின்றநிலையில் பித்தேறி, உயிர் தனது சுற்றுப்புறத்தை முற்றிலும் மறக்கும். தானும் சிவமும் ஒன்றாக, ஏகபோகமாகக் கலந்த பேரின்பநிலையாக அது விளங்கும். அப் பெருநிலையில், பெருமான் உவப்பவையே தனக்கும் உவப்பாகக்கொண்டு, காண்பன யாவற்றையும் சிவமாகக் கண்டும், பூண்பன யாவற்றையும் சிவமாம் தன்மைக்குரியதாகப் பூண்டும், தன்னைச் சிவமாகவே உணர்கின்ற பேறும் உயிர்க்கு வாய்க்கும். அத்தகைய பெருநிலை கைவரப்பெற்றவராகத் திருமாளிகைத்தேவரும் விளங்கினார். அவர்தம் அருளனுபவப் பேறு,

                “திருநீறிடா உருத் தீண்டேன்”    உறவாகிய யோகமும்: பாடல்: 10) என்ற உறுதிமொழியாக, அடியார் கூட்டத்துடனான அரும்பேற்றுக்கு வழிகாட்டுகிறது.

    மேலும், ‘உற்றாய் என்னும்’ என்ற பதினொன்றாம் திருப்பாடலில், ‘செம்மை மனத்துத் திருஅடியார்’ எனத் தலைவி விளங்குவதன் அடையாளமாக அவள், ‘திருநீற்றுக் கவசம் புனைந்துள்ளாள்’ எனச் சுட்டப்பெற்றுள்ளது. அத்துடன், திருநீறு புனையாதவரைப் பாவி எனக் கருதுகின்ற குறிப்பும் அமைந்துள்ளது. திருமாளிகைத்தேவர், ‘பெருமானின் திருமேனி, திருநீறால் பொலிந்திலங்குகின்ற பேரழகைத் தம் அகக்கண்ணால் கண்டின்புற்றவர்’  எனலாம். அவ்அருளனுபவப் பதிவே, அவர் பெருமானை, ‘நீறணி பவளக்குன்றமே’ (ஒளிவளர் விளக்கே:பாடல்: 6) என்று போற்றிப்பாடியுள்ள நிலையாகும். பெருமானிடத்தில் பொலிகின்ற திருநீறு முதலான சிவச்சின்னங்கள்  மக்கள்தம் அறியாமைநோய்க்கு மருந்தாகின்ற திறத்தை, திருஞானசம்பந்தர் முதலானோர் திறம்பட உணர்த்தியுள்ளனர். அந்நெறிவழியே திருமாளிகைத் தேவரும், ‘அரனடியார்கள், உலகின் தீமைகளை நசித்து ஒழிக்கவேண்டித் திருநீறு தரிக்கின்றார்கள்’ என ஏற்றிப் போற்றியுள்ளார்.

                      “தீய நசிக்க வெண்ணீறதாடும் நமர்கள்”                              (இணங்கிலா ஈசன், பாடல்: 5)

    அரனடியார்களது பெருநோக்கத்தை உணராத மக்கள், திருநீறு முதலான சிவச் சின்னங்களையும் தரிக்க வாய்ப்பற்று, பெருமானை உணர்கின்ற பெருநெறிக்குத் தலைப்படுவதும் அரிதாகும். அவர்கள் திருநீறு பொலிகின்ற அரனடியார்களை, அரனாகவே கண்டு வழிபடுகின்ற பக்குவநிலைக்கும் தலைப்படார். மக்கள், அடியார் கூட்டத்துடனான இருப்பினாலும்,  திருநீறு முதலான, சிவவேடப் பொலிவினாலும், பக்திநெறியில் மேம்பட்டுய்ய வேண்டும். இவ்அருநெறியினை உணர்த்தவே தலைவி, திருநீறு தரியாதவரைத் தான் ஒருபோதும் நாடேன்’ என்று உறுதிபடக் கூறுவதாகத் திருமாளிகைத் தேவரால் விளக்கப்பட்டுள்ளது.  

    முடிவுரை
    ‘உறவாகிய யோகமும்’ என்று தொடங்குகின்ற இத்திருப்பதிகமானது, ஐந்து பேரறிவும் பேரின்ப நெறியில் செல்ல வழிகாட்டுவதாகும். அனைத்து திருப்பாடல்களும் தில்லை அம்பலவனுக்காகத் தலைவி இரங்குகின்ற நிலையினைக் குறிப்பதாக அமைந்துள்ளன. பசுக்களாகிய ஆருயிர்கள், பதியாகிய பெருமானை அடைவதற்குக் கொள்கின்ற பேரின்பஆவலை இத்திருப்பாடல்கள், பேரின்பப் பொருள்கொண்டு விளக்குகின்றன.

    தில்லை அம்பலவன், ஆருயிர்க்கு நாதாந்தப் பெரும்பேறு நல்கவல்ல நாதாந்தக் கூத்தினை ஆடியருள்கின்றான். பெருமானின் பெருங்கருணைத் திறமே, அவனது கூத்தாக அமைகிறது எனத் திருமந்திரம், பெருமானது திருக்கூத்துக்கான தத்துவத்தை விளக்கியருளும். அத்தகைய தத்துவத்தை மேலும் எளிமையுற விளக்கவேண்டியே திருமாளிகைத்தேவர், அம்பலத்துக் கூத்தனாகிய பெருமான், அருச்சுனருக்கு அருளவேண்டி, வேடுவக்கோலம் தாங்கி வந்ததாக  இப்பதிகத்தில் எடுத்தாண்டுள்ளார். அத்திருப்பாடல்களின் வழியே புலனாகவல்ல பெருமானின் வேடுவக்கோலம், உள்ளக்கிழியில் அவன் உருவைப் பலகாலும் எழுதிப்பார்த்து, பெருமானே, ‘புவன போகமும், யோக வெள்ளமும்’ என உணரச்செய்யும்; அவ் அன்பின் விரிவு,  அண்டத்திலும், பிண்டத்திலும் பெருமான் இருந்தாடுகின்ற பெருங்கூத்தினை, அகக்கண் கொண்டு தொழுதுய்ய வகைசெய்யும்.

    ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

    1. ஒன்பதாம் திருமுறை, டாக்டர் இராச. வசந்தகுமார் (ப.ஆ), பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,

    கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம், கோயம்புத்தூர் -21. முதல் பதிப்பு: ஏப்ரல்: 2016.

    1. திருவாசகம், சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை. நான்காம் பதிப்பு: 1999.
    2. திருமந்திரம், சிவ ஆ.பக்தவச்சலம் (ப.ஆ), “தமிழ் வேதம்” மாத இதழ், குடியாத்தம்.        வெளியீடு: 2007.

    *****

    கட்டுரையாளர்,
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம்,
    கோயம்புத்தூர் – 21.

     

    Share
  • சிதறும் சிறகுகள்

     

    அன்பு செலுத்துவதை
    வினோத குற்றமாய்
    நீ கருதுகிறாய்..!
    நீ வினோதமானவளென்பதாலே
    உன் மீது அன்பு செலுத்த நேர்கிறது.
    ——-
    தண்டனையாக
    இரண்டு நாட்கள் பேசாமலிரு என்கிறாய்.
    ம்ம்ம்
    இரண்டு நாட்கள் உயிரை விட்டுவிடென
    நீ சொல்லி இருக்கலாம்..!
    ———
    கடந்தக்கால ரணங்களை
    மறக்க
    நீ நடத்தும் நிகழ்கால செய்கைகள்
    எதிர்கால ஆபத்து என்கிறேன்.
    என் தோள் சாய்ந்து
    உனை காப்பாத்து என்கிறேன்.
    நீயென் அறிவுரையை
    காதலென திட்டுகிறாய்.
    காதலென்றாலும் அது தீட்டில்லையடி..!

    ஒன்று மட்டும் மறவாதே
    மறுமணத்தை வலியுறுத்திய
    பெரியாரின் பேரன் நான்,,!

    ——
    உன் விருப்பம் வேண்டாமா என்கிறாய்.
    நிச்சயமாக
    விருப்பமற்று விளைச்சல் ஏதுமில்லை.
    காத்திருக்கிறேன்
    எப்போது விருப்பம் கொள்வாய்…
    என் மீது…
    என் மீது மட்டும்..?
    அப்போது சொல்….

    மின் மயான
    தகன மேடையில்
    எரிந்துச் சாம்பலாகுமே
    அப்போதும் கூட
    நீ விரும்பினால் போதும்
    எரியும் என்னுடல்
    கொஞ்சம் குளிரும்..

    —
    பெண்ணுரிமை ஆராதனைச் செய்பவன்
    ஒரு போதும்
    என்னுரிமை
    உன்னுரிமையில் தலையிடாது,

    —-
    சரி விலகி போ என்கிறாயா..?
    விலகி போகிறேன்.
    ஆனால்
    உன் நினைவுகளை
    நான் என்ன செய்ய…?

    —-
    முதலில் நீ சாதிக்க வழி தேடு என்கிறாய்.

    என் சாதனையே நீதானம்மா…!

    —
    ம்ம்ம் உன்னிடமிருந்து விலகுவதுதான்
    உன் அடியாழ விருப்பமெனில்…
    இதோ விலகுகிறேன்

    உன்னிடமிருந்து

    விழி ஒளியில்
    கத்தி செய்துக்கொடு..
    இருதயத்தை வெட்டிக்
    கொடுத்து போகிறேன்.

    —
    உன்னை அடைந்தே தீருவேனென
    நான் அடம்பிடிக்கவில்லை.
    உன்னை அடைவதில் தான்
    நான் தீருவேன்…!

    —

    ”நான் இப்படித்தான்
    பிடித்தால் பழகு
    பிடிக்கலானா விலகு”
    என்கிறாய்…

    உன்னிடம் பிடித்ததே
    இந்த திமிர் தான் தேவதையே!

    —

    -இரா.சந்தோஷ் குமார்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    திருப்பாவை -6

    171221 - Tiruppavai 06 - Hear the birds, wake up! #watercolour #KrishnaforToday lr
    171221 – Tiruppavai 06 – Hear the birds, wake up! #watercolour #KrishnaforToday lr

    ‘அழகாண்டாள் பாட்டு அழகாண்டாள் பக்தி
    பழகாண்டாள் போல்நீயும் பண்பு, -கழுகாண்டான்,
    கண்முன்னே தோன்றியுனைக் கல்யாணம் செய்திடுவான்
    பெண்கள்நாம் புருஷோத் தமர்க்கு’’….கிரேசி மோகன்….

    Share
  • தமிழ் இசைக் கல்வெட்டு

    பவள சங்கரி

    கொங்கு நாட்டின் மிகச்சிறப்பான ஒரு விசயம் என்றால் அது உலகின் முதல் தமிழ் இசைக்கல்வெட்டு!

    isai1

    isai
    ஈரோடு மாவட்டம், ஈரோடு – காங்கேயம் பாதையில் 12 கல் தொலைவில், அரச்சலூரில், அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள பாண்டியர் குழி என்ற இடத்தில் உள்ள கற்குகையில் அமைந்துள்ளது அற்புதமான இந்த தமிழ் இசைக் கல்வெட்டு . இதன் அருகில் ஒரு, ஆண், பெண் உருவங்கள் பொறிக்கப்பட்ட கல்லும் உள்ளது. இதனைப்பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிறார் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள்.

    IMG_20171221_132623484

    இந்தக் கல்வெட்டை முதலில் 1961 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தவர் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்ட இந்தத்.தமிழ் கல்வெட்டு தொன்மைக்கால தமிழி எனும் எழுத்து பிற்காலத்தில் வட்டெழுத்தாக உருமாற்றம் பெற்றுள்ளதையும், , இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் ஆவணமாகவும் திகழ்கிறது. சங்ககாலத்திலேயே தமிழர்கள் தமிழிசைக் குறியீடுகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் உறுதியாகிறது. இது சிலப்பதிகாரம் சொல்லும் சதுரப்பாலையைச் சார்ந்த இசைக்குறிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

    IMG_20171221_125239428

    பல்லடம் – காளிவேலம்பட்டியைச் சேர்ந்த தூரன் சு. வேலுச்சாமி என்பவர் இதனை ஆவணப்படமாக எடுக்க முயற்சி எடுத்துக்கொண்டுள்ளதும், இவர் ஏற்கனவே பெரியார் மற்றும் ராமானுஜர் ஆகிய திரைப்படங்களுக்கு களப்பணிகள் செய்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என் ‘கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற நூல் பற்றிய சுவையான கலந்துரையாடலும் சிறப்பாக அமைந்தது.

    Share
  • அம்மன்!

    “செத்தால் மெய் சிலிர்க்கும்
    சுட்டால் (காட்டில் ) “நான்” பிறக்கும்
    இத்தால் சந்தேகம்
    இயல்பே உன்தேகம்

    அகந்தை பாடலும் ,சுகம்தை ஆடலும்
    புகுந்திட ஆன்மன் வரார்
    சரணாகதியோ ! மரணாகதியோ !
    சற்றே கண் அயர்ந்தால்
    உறுமோ சரணம் ! வருமோ மரணம் !
    உறக்கத்தை ஆள் நெஞ்செ ….!

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -6

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருவஹீந்திரபுரம் (அருள்மிகு தேவநாதப் பெருமாள் )

    perumal

     

    கண்ணயர்ந்து பொழுதினிலும் கருணைதரும் கண்ணனைக்

    காலமெல்லாம் தொழுதிடவே கருநாகன் சேடனுமே

    காவிரிக் கரைதன்னில் ஆலயமே எழுப்பிடவே

    கானிருந்த முனிவரெல்லாம் கைகூப்பி நின்றனரே

     

    பாம்பணைமேல் படுத்தவன் பள்ளி எழுந்தான்

    பக்தர்களைக் காத்திடவே பேரொளியாய் நின்றான்

    பார்வையிலே மூவராகப் பிரிந்த தத்துவமே

    பாங்குடனே ஒன்றாகித் தந்தருளும் தரிசனமே !

     

    மரணத்தை வென்ற மார்க்கண்டேயன் மனம்மகிழ

    மாதவனும் வந்தானே தெய்வ நாயகனாய் !

    மாமுனியாம் மணவாளரும் மனமுருகி வேண்டிடவே

    மாலனும் மனமிசைந்து மகிழ்வோடு நின்றானே !

     

    அழகுக்கு அழகளிக்கும் ஆனந்தன் தேவநாதன்

    அழகுடன் ஆதிசேடன் ஆலயத்தில் நின்றான்

    அளவில்லா தாகத்தில் அச்சுதனும் நீர்வேண்ட

    ஆதிசேடன் வாலசைக்க வளர்ந்ததோர் கங்கையம்மா !!

     

    வான்பறந்த கருடனுமே மாமுனியின் கமண்டலத்தை

    வலுவாகத் தள்ளிடவே வளர்ந்ததங்கே வற்றாதநதியே !

    வந்தவினை தீர்ந்திடுமே வைகுந்தன் பார்வையிலே

    வந்தவரை வரதனவன் வளம்பெறுக வாழ்விப்பான் !

     

    சங்கோடு சக்கரத்தைக் கையேந்தி அவனிருக்க

    அங்கத்தை மலரோடு துளசியும் அலங்கரிக்க

    செங்கமலத் தாயும் மலர்மார்பில் உடனிருக்க

    மங்கலமே உன்னெழிலே மாதவனே போற்றிடுவேன் !

     

     

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 16

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவன் மீண்டும் பொருள்தேடுவதற்காகத் தன்னைப் பிரிந்துசெல்ல விழைகின்றான் எனும் உண்மை புலப்படவே தலைவியின் மனத்தில் மீண்டும் கவலை வலை பின்னலாயிற்று.

    பொருளின்றி இனி நெடுங்காலம் வளமாய் வாழவியலாது எனும் எண்ணம் தலைவனின் உள்ளத்தை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

    அவ்வேளையில் தலைவிபேணும் இல்லறத்தை அருகிருந்து காண வந்திருந்தாள் அவள் ஆருயிர்த்தோழி. கவலையினால் இருண்டிருந்த தலைவி முகம் தோழியின் வரவுகண்டு சற்றே மலர்ந்தது. விரைந்து வாயிலுக்குச் சென்று அவளைக் கட்டியணைத்து அகத்தினுள் அழைத்துவந்தாள்.

    வீட்டினுள் வந்த தோழி, தலைவனைக் கண்டு நலம் விசாரித்தாள். தலைவனும் அவளை முகமலர்ச்சியோடு வரவேற்றான்.

    பிறகு தலைவி தோழியை அழைத்துக்கொண்டு அடுக்களைப் பக்கம் சென்றாள். “எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது உன் மணவாழ்க்கை?” என்று மெதுவாக ஆரம்பித்தாள் தோழி.

    “நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றது….ஆனால்…” என்று தலைவி இழுக்கவும், ”ஆனால் என்ன?” என்றாள் தோழி தலைவியின் முகத்தைக் கூர்ந்துநோக்கியபடி.

    ”ஒன்றுமில்லை…” என்று தலைவி மழுப்பவே, ”ஒன்றுமில்லை என்று நீ சொல்லும் தோரணையே ஏதோ இருக்கின்றது என்பதைக் காட்டிக்கொடுக்கிறதே…என்னிடம் எதற்கு மறைக்கவேண்டும்? நடந்ததைச் சொல்!” என்று தூண்டினாள் தோழி.

    cactus”காலத்தில் பெய்தலை உடைய மழை பெய்யாதுநீங்கிய தனிமைமிகு பாலைநிலத்தில், கவைத்த முள்ளினையுடைய கள்ளியின் காய் வெடிக்கும்போது விடும் கடிய ஒலியானது, நெருங்கிய மென்சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய சோடிப் புறாக்களை நீங்கசெய்கின்ற அருவழிகள் கடத்தற்கரியனவென்று கருதாமல் பொருளீட்டும் பொருட்டுத் தலைவர் நமைத்துறந்து பிரிவாராயின் இவ்வுலகத்தில் நிச்சயமாகச் செல்வமே உறுதிப் பொருளாவது; அருள் தன்னை ஏற்பார் யாருமற்ற அநாதையானது” என்றாள் தலைவி; அவள் கண்களில் நீர் துளிர்த்தது.

    பெயன்மழை  துறந்த  புலம்புறு  கடத்துக்
    கவைமுட்  கள்ளிக்  காய்விடு  கடுநொடி
    துதைமென்  தூவித்  துணைப்புற  விரிக்கும்
    அத்தம்  அரிய  என்னார்  நத்துறந்து
    பொருள்வயிற்  பிரிவா  ராயினிவ்  வுலகத்துப்
    பொருளே  மன்ற  பொருளே
    அருளே  மன்ற  ஆருமில்  லதுவே.   (குறுந்: 174 – வெண்பூதியார்)

    இதே பொருளமைந்த மற்றொரு பாடலும் தலைவி கூற்றாகக் குறுந்தொகையில் இடம்பெற்றிருப்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

    அருளும் அன்பும்  நீக்கித் துணைதுறந்து
    பொருள்வயிற் பிரிவோர்  உரவோ  ராயின்
    உரவோர்
     உரவோர்  ஆக
    மடவ
     மாக  மடந்தை  நாமே.  (குறுந்: 20 – கோப்பெருஞ்சோழன்)

    பாண்டிநாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு (முகத்துக்கு முகம்) பாராமலேயே அகநட்பு பாராட்டிய சோழமன்னன் கோப்பெருஞ்சோழன், அரச புலவனாகவும் திகழ்ந்துள்ளமையை இப்பாலைப் பாடல் புலப்படுத்துகின்றது. இப்பாடலேயன்றி, மருதத்திணையில் ஒரு பாடல் #53, குறிஞ்சித் திணையில் ஒரு பாடல் #129, மற்றொரு பாலைப் பாடல் #147 என 4 பாடல்கள் கோப்பெருஞ்சோழனின் பெயரால் குறுந்தொகையில் காணக்கிடைப்பது சோழனின் கவிபாடும் திறமைக்குத் தக்க சான்றுகளாகும்.

    ஈதொப்ப,

    ”…அருளி லாளர் பொருள்வயி னகல
    எவ்வந்
    தாங்கிய இடும்பை நெஞ்சத்து
    யானெவன்
    உளனோ தோழி….” (அகம்: 305) எனும் பாடலும் தலைவனின் அருளற்ற பொருள்வயிற் பிரிவை எண்ணித் தலைவி தோழியிடம் கவலும் பாடலே.

    சரி… தலைவி தோழி உரையாடலை விட்ட இடத்திலிருந்து நாம் தொடர்ந்து செவிமடுப்போம் வாருங்கள்!

    தலைவன் மீண்டும் பொருள்தேடச்செல்ல உத்தேசித்துள்ளான் என்பதைத் தலைவி வாயிலாய் அறிந்த தோழி,

    ”பெண்ணே! ஆடவர்க்கு வினைதான் உயிர் என்று சொல்லத் தொடங்கவும், எங்கே தலைவன் பொருள்தேடிப் போவதை இவள் நியாயப்படுத்த முனைகிறாளோ என்று ஐயுற்ற தலைவி அவளை அச்சத்தோடு நோக்க, அவள் மனத்தைப் படித்தறிந்த தோழி, ஆனால் தம்இல்லம் கடவாது மனையுறைகின்ற மகளிர்க்கோ அந்த ஆடவர்தானே உயிர்? இதனை நம்மிடம் சொன்னவரே தலைவர்தான். அப்படியிருக்க உடலாகிய உனைநீங்கி உயிராகிய அவர் எங்ஙனம் பிரிவார்? ஒருநாளும் பிரியார்!” என்றுகூறித் தலைவியின் விழிநீரை வழித்தெறிந்தாள்.

    வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
    மனையுறை
    மகளிர்க்கு ஆடவர்  உயிரென
    நமக்குரைத்
     தோருந்  தாமே
    அழாஅல்
     தோழி அழுங்குவர் செலவே.     (குறுந்: 135 – பாலைபாடிய பெருங்கடுங்கோ)

    ”தலைவிமீது கொண்ட காதல்நீங்கி நான் பொருளைநாடிப் பிரிவது அவள் சாதலுக்கு வழிவகுக்கும்” என்று தலைவன் தன் நெஞ்சுக்கு உரைப்பதுபோன்ற ஓர் அகப்பாடலும் இங்கே எண்ணிப்பார்க்க ஏற்றது.

    ….நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
    உயிரியைந்
    தன்ன நட்பின் அவ்வுயிர்
    வாழ்தல்
    அன்ன காதல்
    சாதல்
    அன்ன பிரிவரி யோளே.  (அகம்: 339 – நரைமுடி நெட்டையர்/நிறைமுடி நெட்டையார்)

    ஆக, தான் பிரிவதால் தலைவியின் உடலும் உயிரும் கெடும் என்பது தலைவனுக்குத் தெரியாமலில்லை. அது தெரிந்தபின்னும் அவன் துணிந்தே அவளைப் பிரிந்துசெல்கின்றான் என்பதை அறிக.

    தலைவிக்கு ஆறுதல்மொழி பகர்ந்து அவளைத் தேற்றிய தோழி, தலைவனின் உளக்குறிப்பை உய்த்துணர அவனிருக்கும் அறைநோக்கிச் சென்றாள்.

    அங்கே அலைபாயும் மனத்தோடு குறுக்கும் நெடுக்கும் உலவிக்கொண்டிருந்த தலைவன் தோழியைக் கண்டதும், நடைபயில்வதை நிறுத்திவிட்டு அவளை வரவேற்றான்.

    தலைவனின் முகத்தை உற்றுநோக்கிய தோழி அதில் தெரிந்த சிந்தனைக் கோடுகளை கவனித்தாள்.

    துணிவை வரவழைத்துக்கொண்டு ”ஐய! உம்மையே காப்பாக எண்ணித்தானே என்னருமைத் தோழியை இல்லறம்பேண உம்மோடு அனுப்பி வைத்தேன். நீர் இப்போது அவளைப் பிரிந்து மீண்டும் பொருள்தேட விழைவதாய் அறிகின்றேன். அது மெய்தானா?” என்றாள்.

    தலையசைப்பில் தன் ஆமோதிப்பைத் தெரிவித்தான் தலைவன்.

    அதுகண்ட தோழி, “கண்ணியை அணிந்த கொம்பையும், தன்னினத் தலைமையும் உடைய நல்ல மலை எருதானது, செவ்விய தண்டுகளையுடைய அறுகின்  நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும் மடப்பம் பொருந்திய கண்ணையுடைய மலைப் பசுவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, புல்லிய அடியையுடைய உகாஅய் மரத்தின் வரி நிழலில் தங்குகின்ற கடத்தற்கரிய இன்னா அருஞ்சுரத்தை இனிய துணைவியை நீத்துக் கடத்தல் உமக்கு இனிமையுடைத்தோ பெரும?” என்றாள் அகவருத்தம் முகத்தில் தோன்ற.

    கண்ணி  மருப்பின்  அண்ணல்  நல்லேறு
    செங்கோற்  பதவின்  வார்குரல்  கறிக்கும்
    மடக்கண்
     வரையா  நோக்கி  வெய்துற்றுப்
    புல்லரை  யுகாஅய்  வரிநிழல்  வதியும்
    இன்னா  அருஞ்சுரம்  இறத்தல்
    இனிதோ  பெரும  இன்துணைப்  பிரிந்தே. (குறுந்: 363 – செல்லூர்க் கொற்றன்)

    தோழியின் கேள்விக்குப் பதிலேதும் அளிக்கவில்லை அந்தப் பெருமான்.

    [தொடரும்]

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171220 -Tiruppavai 05 -Mayan -lr (Mayan-manivannan-Manivilakku-Kudal vilakkam (shows the world to yashoda)-Damodara(when he is tied up the soul is free) Theeyinil doosagum (sins become dust.) etc., watercolour 24x32 cms
    171220 -Tiruppavai 05 -Mayan -lr (Mayan-manivannan-Manivilakku-Kudal vilakkam (shows the world to yashoda)-Damodara(when he is tied up the soul is free) Theeyinil doosagum (sins become dust.) etc., watercolour 24×32 cms

    கயிற்றுதரக் கண்ணன்மேல்(தாமோதரர்) காதல்கொண்(டு) அன்று
    இயற்றினாய் பாடல் எமக்காய் -பயிற்றுவித்த
    தாதையுடன்(அப்பா பெரியாழ்வார்) சென்றந்த கீதையோன் கைப்பிடித்த
    கோதைக்கை கோகிலமே காப்பு….!

    ”எத்தனுக்(கு) எத்தனந்த ஏரார்ந்த கண்ணியவள்
    பெத்தெடுக் காதஅப் பிள்ளையை -முத்துடை
    பந்தலுக்குக் கீழே பதியாய்ப் பிடித்திழுத்து
    குந்தவைத்தக் கையிரெண்டும் காப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171215 -Periyazhwar Tirumozhi 1-6-1 Uyya Ulagu-lr -watercolour - 24x32cms
    171215 -Periyazhwar Tirumozhi 1-6-1 Uyya Ulagu-lr -watercolour – 24x32cms

    கடவுள் மடியில் கிடக்கும் வரையில்
    அட!உள் வெளியேது அஞ்சேல்! -கடலுள்ளே
    பன்னகத்தில்(பாம்பில்) யோகம் பயிலும் பரம்பொருளாம்
    கன்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்

    தன்வந்திரி பீடத்தில்

    சனிப்பெயர்ச்சி மஹா யாகமும்

    காலச்சக்ர பூஜையும்

    IMG_20171219_114410

    இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று 4ம் தேதி மார்கழி மாதம் செவ்வாய் கிழமை 19.12.2017 காலை சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு

    இடப்பெயர்ச்சியானதை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் காலை 06.00 மணிக்கு கோ பூஜை, 07.00 மணிக்கு யாகசாலை பூஜை, 08.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 09.00 மணிக்கு கலச பூஜை போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் தன்வந்திரி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம், மற்றும் சனி தோஷ நிவர்த்தி பூஜையுடன் சனிபெயர்ச்சி யாகம் நடைபெற்று 27 நக்ஷத்திரங்களுக்கு உரிய விருட்சங்களுக்கும் 9 நவகிரக விருட்சங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று வன்னி விருட்சத்திற்கு சிறப்பு பூஜையுடன் காலச்சக்ர பூஜையும் நடைபெற்றது.

    IMG-20171219-WA0019

    இதனை தொடர்ந்து சனியால் உண்டான பாதிப்புகள் குறைய ஊனமுற்றோர்க்கு உதவி, முதியோர்க்கு அன்னதானம், வஸ்திர தானம், எள்ளு தானம்,நல்லெண்ணைய் தானம், மற்றும் இரும்பு தானம், வழங்கப்பட்டது. இதில் ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்கள் மற்றும் சனிதிசை,சனிபுத்தி நடப்பவர்கள் சங்கல்பம் செய்துகொண்டனர். இந்த யாகத்தில் ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி சேர்மன் திரு D.L. பாலாஜி அவர்கள், திரு. ஜகத் ஜீவன் ராம், கோவை கிரிஜா சம்பத் குமார், தன்வந்திரி பீட அறங்காவலர்கள், மற்றும் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடக பக்தர்கள் பங்கேற்றனர்.

    இந்த யாகத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஸ்வாமிகள் அருளாசி வழங்கி மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற தன்வந்திரி பகவான் டாலர், புகைப்படம், ஹோம பிரசாதத்துடன் 2018 தினசரி காலண்டர் வழங்கி ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக சென்னை பிரபல ஜோதிடர் திரு ஆதித்ய குருஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -40

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளத்தின் உள்ளே இருப்பவனே…

    திருமூலர்-1-3-3-1

    இறையின்பத்தை அனுபவிக்கத் துடிக்காத மாந்தர்கள் கிடையாது. சிலர் தங்கள் பார்வைகளாலும், சிலர் தங்கள் அறிவின் மூலமாகவும், சிலர் தங்கள் அனுபவங்களின் மூலமாகவும், இன்னும் சிலர் தங்கள் அனுபூதிகள் மூலமாகவும் இறைவனை நாடத் துடிக்கின்றனர். சிலர் மலைகளின் உச்சியில் கல்லில் கடவுளைத் தேடுகின்றனர். சிலர் கடல், குளம், நதிகள் இவற்றின் கரைகளில் அந்த ஆனந்த மூர்த்தியைத் தேடி வழிபட நினைக்கின்றனர். சிலர் மந்திரங்கள் சொல்லி அதன் மூலமாக அடையத் துடிக்கின்றனர். இன்னும் சிலரோ இசையின் மூலமாக அந்த நாதத்தின் மூலவனை நாட விழைகின்றனர். அவன் உண்மையில் எங்கு இருக்கின்றான்?

    என்ன விந்தை! அவன் யார்யார் எவ்வாறு விரும்புகின்றனரோ அவ்வாறே அவர்களுக்குத் தோன்றுகின்றான். அவர்கள் விரும்பியபடியே அவன் வந்தடைகின்றான். இது எப்படி நடக்கின்றது?

    உண்மையில் உள்ளத்தின் உள்ளே இருக்கின்ற அவன் கூப்பிட்ட குரலுக்கு வருபவன். அன்போடு, பணிவோடு, அறத்தோடு அவனை நாடினால் அவன் நிச்சயமாகத் தோன்றுவான். இப்படிப்பட்டவனை நாம் எதற்கு மலை கடல் மற்றும் வேறு பல இடங்களில் தேட வேண்டும் ?

    திருமூலர் கூறுகின்றார்:

    உள்ளத்தின் உள்ளே உள் பலதீர்த்தங்கள்

    மெல்லக் குடைந்துநின் றாடார் வினைகெடப்

    பள்ளமும் மேடும் பரந்து திரிவரே

    கள்ள மனமுடைய கல்வி யிலோரே !

    தன் உள்ளங்களுக்குள் தேடுபவர்களுக்கு உள்ளத்திலேயே நின்று அருளுகின்ற பெருந்தகை வேண்டுவோர்க்கு வேண்டியபடி வருபவன். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இவ்வாறு அவனைப் போற்றுகின்றார் :

    ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்

    சேயானை சேவகனைத் தென்னன் பெருந்துறையின்

    மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை

    நாயென நந்தம்மை ஆட்கொண்ட நாயகனை

    தாயான தத்துவனை தானே உலகேழும்

    ஆயானை ஆள்வானை  பாடுதுங்காண் அம்மானாய்!

    இவ்வாறு இறைவனின் அருளை நாடும் மாணிக்கவாசகருக்கு அவன் பேரொளியின் அனுபவம் எப்படியிருந்தது? இதோ, அவரே கூறுகின்றார்:

     ஊனாய் உயிராய் உணர்வாய்என் நுட்கலந்து

    தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்

    வானோ ரறியா  வழியெமக்குத் தந்தருளுந்

    தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்

    ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்குள்

    கோனாகி  நின்றவர் கூறுதுங்காண் அம்மானாய் !

    இதே அனுபவ நிலையை நாம் பத்திரகிரியாரிடமும் பார்க்கின்றோம். தன்னையே அறியாத  நிலையில் தடுமாறும் மனதைப்  பார்த்து அவர் கேட்கின்றார் :

    ஊனாகி யூனி  லுயிராகி யெவ்வுலகுந்

    தானாகி நின்ற தனையறிவ தெக்காலம் ?

    என்னைவிட்டு நீங்காம  லென்னிடத்தில் நீயிருக்க

    உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம் ?

    உள்ளத்தின் உள்ளே இருந்துகொண்டு அவன் என்னதான் செய்கின்றான்? அவன் செய்யும் மாயத் தந்திர வேலைகள் என்னென்ன? பதில் நமக்கு கிடைக்கின்றது பட்டினத்தாரிடமிருந்து:

    உள்ளார்க்கு முள்ளாண்டி யூருமில்லான் பேருமில்லான்

    கள்ளப் புலனருக்கக் காரணமாய் வந்தாண்டி.

    அப்பிறப்புக் கெல்லாம் அருளா யமர்ந்தாண்டி

    இப்பிறப்பில் வந்தா னிவனாகு மெய்ப்பொருள்காண்

    எத்தனை ஆழமான சிந்தனையில் நம்பிக்கையில் அனுபவ நிலையில் சொல்லப்பட்டவை இந்தச் சொற்கள்.

    இந்தக் கருத்தையே இன்னும் பாராட்டும் வண்ணம் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகின்றார்: 

    ” கறந்தபால் கன்னலொடு  நெய்கலந்தால் போலச்

    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

    பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமான் “

    இறைவனைத் தங்கள் உள்ளே நிறுத்தி ஆனந்த நிலையில் அடியார்கள் அனுபவங்களைச் சொல்லிக் கேட்க நமது சிந்தனைகள் மேலும் வளம்பெருமன்றோ ?

    தொடருவோம்

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -5

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருநாகை (அருள்மிகு அழகியன் -சௌந்தரராஜப் பெருமாள் )

    Koodal-Azhagar-Perumal-Vishnu-Temple1st1-1397192

    நீலவண்ணப் பீலியழகு சிகையழகு மலரழகு

    நீலவிழி தவழுகின்ற நிலவழகு இமையழகு

    நிலைதேடி உருண்டோடும் கருவிழிக் கலையழகு

    நினைவழகு நினைக்கும் காலத்தின் கருவழகு !

     

    தோளழகு துவளாமல் துணைநிற்கும் துளசியழகு

    துடிக்கின்ற மார்பினிலே துணைகொண்ட திருவழகு

    துய்யாமல் துய்க்கின்ற தோரணையில் துயிலழகு

    தோத்திரங்கள் சொல்லழகு சொல்லுண்ட பொருளழகு

     

    கைகொண்ட சக்கரமும் களமொலிக்கும் சங்குமழகு

    கரையில்லா அருளழகு கலிநீக்கும் தாளழகு

    கணத்தினிலே கைகொடுக்கும் கண்ணன் நட்பழகு

    காலமெல்லாம் போற்றிடவே புவிபெற்ற வாழ்வழகு !

     

    பேரழகே நீநின்றால் பேரருளே உனைக்கண்டால்

    பேரின்பம் கிடைக்காதோ வேறின்ப வாழ்வெதற்கு ?

    பேரிடரால் யுகம்மாறப் பெருமாளே நீநின்றாய்

    பேதமின்றி சத்தியத்தில் திரேதத்தில் துவாபரத்தில் !

     

    கரையில்லா அன்போடு பெருகிடும் காவிரிக்

    கரைதன்னில் கனிவோடு குறைதீர்க்கும் துறைவனே !

    கதியென்று உனைத்தேடிக் காலடியில் நின்றோமே

    கணநேரம் எனைக்காணக் களிப்போடு வருவாயோ?

     

    நின்றாலும் நடந்தாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும்

    நிலையான உன்னெழிலுக்கு ஈடில்லை நீர்வண்ணா !

    நினைவெல்லாம் உன்னுருவே நிதியாக இருந்திட்டால்

    நிலையாத வாழ்விற்கு ஈடேது மணிவண்ணா !

     

     

     

    Share
  • பெண் எனும் பிரபஞ்சம்..!

    பெருவை பார்த்தசாரதி

    விண்ணில் காணும் கார்மேகத்தையும் வெண்ணிலவையும்..
    வியந்து நோக்கும்போது என்னுளவளே தெரிகின்றாள்.!
    மண்ணில் உலவும் அனைத்துயிரிலும் அன்புணர்வுகள்..
    மலர்வதைப் பார்க்கின்றேன்!….அவளின் கருத்தரிப்பில்.!
    தண்ணீரில் மிதக்கும்தாமரையும் அல்லியுமலர்வது அவளின்..
    தளிர்நடை கண்டபிறகுதானென கவிதையும் பாடுவேன்.!
    மண்டலத்தில் மாறாத வாசமனைத்துமவள் சொந்தமோ?.
    பெண்ணவள் பிரபஞ்ச மனைத்திலும் நிறைந்திருப்பாள்.!

    மண்ணிலவதரித்த அழகான மனுஷியர்களங்கே கூடுவார்..
    மானுடர் நிறையுமேடையும் அண்டமும் இதைக்காணும்.!
    பெண்தானுலகிலேயே அழகுப் பண்டமெனக் கூடிப்பேசுவர்..
    பொன்னுமுத்துமணியாப் பேரழகி யாரெனறிய முனைவர்.!
    பெண்ணுக்குள் மறைந்திருக்கும் ரகசியத்தை? அழகியர்தன்..
    பேச்சில் நடையழகில் நாடுபுகழச்செய்வர்!.நடப்புவருடம்.!
    பெண்ணெனும் பிரபஞ்சழகியைப் பெற்றெடுத்த பெருமை..
    பாரதமென!..பாருலகு அறியவைத்தார் மானுஷிசில்லார்.!

    இரும்புமனுஷி எனவெப்போதும் இவரைப் புகழுவார்கள்..
    இழந்தும் இன்றுவரை இவர்தான் பெண்சிங்கமென்பார்.!
    பெரும்பேரன்பு இவர்மீது கொண்டவர்கள் ஏழரைகோடி..
    பெற்றவளைவிட்டு இவரையே தாயாகக் கொண்டார்கள்.!
    அருளும் அன்னதானமெனும் அருங்கொடை தந்ததால்..
    அலையுமேழையர் வயிற்றுப் பசியறியா உணர்வுற்றனர்.!
    பருவமங்கைமுதல் பிரகாசித்து பரலோகம் செல்லும்வரை..
    பிரபஞ்சமே புகழப் பெருமையுற்றவளொரு பெண்தான்.!

    தீவிரவாதத்துள் அமிழ்ந்திருந்த அத்தீயவர்களுக் கெதிராக..
    தீக்குரல்கொடுத்தவள் குண்டுகளைப் பரிசாகப் பெற்றாள்.!
    பாவியரின் கொடுஞ் செயலவளைப் பள்ளத்தாக்கிலிருந்து..
    பார்புகழும் ஐநாசபைவரை அழைத்துப் புகழ்சேர்த்தது.!
    ஜீவிதத்திற்குப் பெண்கல்வியும் சமத்துவமும் அவசியமென..
    சீராகயுழைத்து சிறப்புற்ற நோபல்பரிசினை வென்றாள்.!
    மாவீரத்துக் கடையாளமாய் மாலாலாவெனும் மகத்தான..
    முத்திரையை இளவயதுமங்கை பிரபஞ்சத்தில் பதித்தாள்.!

    ============================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::11-12-17

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171219 -tiruppavai 04_lr -24x32cms -(Andal appeals to the Krishna, the Lord of Varuna, to shower bountiful rains. Reference also to the Acharya, akin to the rain bearing cloud, not to hold back anything that they can explain.-Uthamur swami.)
    171219 -tiruppavai 04_lr -24x32cms -(Andal appeals to the Krishna, the Lord of Varuna, to shower bountiful rains. Reference also to the Acharya, akin to the rain bearing cloud, not to hold back anything that they can explain.-Uthamur swami.)

    எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தானை,
    சங்கிருக்கும் கையானை சாரங்கனை -திங்கள்நன்
    மார்கழியில் பாடி மணம்புரிந்த ஆண்டாளே,
    நேர்வழியில் எம்மை நடத்து….கிரேசி மோகன்….!

    Share
  • இந்திய மக்கள் நலம்பெற வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    பிரதமர் மோடி அவர்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம். கட்சியையும் தாண்டி தனிப்பெரும் ஒரு தலைவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையே இந்த வெற்றி காட்டுகிறது. சென்ற முறை அடைந்ததைவிட குறைவான இடங்களைப் பெற்றாலும் இந்த வெற்றி பாராட்டுதலுக்குரியதே. பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பாக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற மாயையை உடைத்தெறிந்து கிடைத்த இந்த வெற்றி மேலும் சிந்திக்கவைக்கத்தக்கதே. பல தொகுதிகளில் வாக்களிப்பட்ட நோட்டோ எண்ணிக்கை எதிர் கட்சியினருக்கு வாக்களிக்கப்பட்டிருந்தால் இந்த வெற்றி கிடைக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். தற்போது மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளெல்லாம் சிற்சில மாற்றங்கள் செய்தாலே பொருளாதாரத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பயன் தருவதாக அமைவதால் மக்களின் நம்பிக்கையை மேலும் பெறக்கூடும். நோட்டோ வாக்களித்தவர்களின் நிலையை மாற்றி அவர்களுக்கு இந்தியப் பொருளாதாரத்தின்மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்பட்டால் அருதிப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பி.ஜே.பி. கட்சிக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, பெரும்பான்மையான மக்கள் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக பிரதமர் மோடி அவர்களை தனிப்பெரும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். 29 மாநிலங்களில் 19 மாநிலங்கள் பிரதமரின் ஆளுமையை ஏற்றுள்ளனர் என்பது எதிர்கால செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய செய்தி என்பதில் ஐயமில்லை. வெற்றி அதிகரிக்கும் அதே வேளையில் பொறுப்புகளும் கூடுகிறது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மக்கள் நலம் சார்ந்ததாகவும், வாழ்வாதாரம் பாதிக்காமல், ஏற்றம் பெறும் வகையிலும் இருக்க வல்லமையின் உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

    எதிர்க்கட்சியான காங்கிரசிற்கும் 41.4% மக்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சி என்பதாலேயே பிரதமர் கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களையும் எதிர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையும் மக்கள் கொண்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் முதிர்ச்சியான செயல்பாடுகள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து செயல்படுவதையே மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

    Share