மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -5
க. பாலசுப்பிரமணியன்
திருநாகை (அருள்மிகு அழகியன் -சௌந்தரராஜப் பெருமாள் )
நீலவண்ணப் பீலியழகு சிகையழகு மலரழகு
நீலவிழி தவழுகின்ற நிலவழகு இமையழகு
நிலைதேடி உருண்டோடும் கருவிழிக் கலையழகு
நினைவழகு நினைக்கும் காலத்தின் கருவழகு !
தோளழகு துவளாமல் துணைநிற்கும் துளசியழகு
துடிக்கின்ற மார்பினிலே துணைகொண்ட திருவழகு
துய்யாமல் துய்க்கின்ற தோரணையில் துயிலழகு
தோத்திரங்கள் சொல்லழகு சொல்லுண்ட பொருளழகு
கைகொண்ட சக்கரமும் களமொலிக்கும் சங்குமழகு
கரையில்லா அருளழகு கலிநீக்கும் தாளழகு
கணத்தினிலே கைகொடுக்கும் கண்ணன் நட்பழகு
காலமெல்லாம் போற்றிடவே புவிபெற்ற வாழ்வழகு !
பேரழகே நீநின்றால் பேரருளே உனைக்கண்டால்
பேரின்பம் கிடைக்காதோ வேறின்ப வாழ்வெதற்கு ?
பேரிடரால் யுகம்மாறப் பெருமாளே நீநின்றாய்
பேதமின்றி சத்தியத்தில் திரேதத்தில் துவாபரத்தில் !
கரையில்லா அன்போடு பெருகிடும் காவிரிக்
கரைதன்னில் கனிவோடு குறைதீர்க்கும் துறைவனே !
கதியென்று உனைத்தேடிக் காலடியில் நின்றோமே
கணநேரம் எனைக்காணக் களிப்போடு வருவாயோ?
நின்றாலும் நடந்தாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும்
நிலையான உன்னெழிலுக்கு ஈடில்லை நீர்வண்ணா !
நினைவெல்லாம் உன்னுருவே நிதியாக இருந்திட்டால்
நிலையாத வாழ்விற்கு ஈடேது மணிவண்ணா !