Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -40

க. பாலசுப்பிரமணியன்

உள்ளத்தின் உள்ளே இருப்பவனே…

திருமூலர்-1-3-3-1

இறையின்பத்தை அனுபவிக்கத் துடிக்காத மாந்தர்கள் கிடையாது. சிலர் தங்கள் பார்வைகளாலும், சிலர் தங்கள் அறிவின் மூலமாகவும், சிலர் தங்கள் அனுபவங்களின் மூலமாகவும், இன்னும் சிலர் தங்கள் அனுபூதிகள் மூலமாகவும் இறைவனை நாடத் துடிக்கின்றனர். சிலர் மலைகளின் உச்சியில் கல்லில் கடவுளைத் தேடுகின்றனர். சிலர் கடல், குளம், நதிகள் இவற்றின் கரைகளில் அந்த ஆனந்த மூர்த்தியைத் தேடி வழிபட நினைக்கின்றனர். சிலர் மந்திரங்கள் சொல்லி அதன் மூலமாக அடையத் துடிக்கின்றனர். இன்னும் சிலரோ இசையின் மூலமாக அந்த நாதத்தின் மூலவனை நாட விழைகின்றனர். அவன் உண்மையில் எங்கு இருக்கின்றான்?

என்ன விந்தை! அவன் யார்யார் எவ்வாறு விரும்புகின்றனரோ அவ்வாறே அவர்களுக்குத் தோன்றுகின்றான். அவர்கள் விரும்பியபடியே அவன் வந்தடைகின்றான். இது எப்படி நடக்கின்றது?

உண்மையில் உள்ளத்தின் உள்ளே இருக்கின்ற அவன் கூப்பிட்ட குரலுக்கு வருபவன். அன்போடு, பணிவோடு, அறத்தோடு அவனை நாடினால் அவன் நிச்சயமாகத் தோன்றுவான். இப்படிப்பட்டவனை நாம் எதற்கு மலை கடல் மற்றும் வேறு பல இடங்களில் தேட வேண்டும் ?

திருமூலர் கூறுகின்றார்:

உள்ளத்தின் உள்ளே உள் பலதீர்த்தங்கள்

மெல்லக் குடைந்துநின் றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பரந்து திரிவரே

கள்ள மனமுடைய கல்வி யிலோரே !

தன் உள்ளங்களுக்குள் தேடுபவர்களுக்கு உள்ளத்திலேயே நின்று அருளுகின்ற பெருந்தகை வேண்டுவோர்க்கு வேண்டியபடி வருபவன். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இவ்வாறு அவனைப் போற்றுகின்றார் :

ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்

சேயானை சேவகனைத் தென்னன் பெருந்துறையின்

மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை

நாயென நந்தம்மை ஆட்கொண்ட நாயகனை

தாயான தத்துவனை தானே உலகேழும்

ஆயானை ஆள்வானை  பாடுதுங்காண் அம்மானாய்!

இவ்வாறு இறைவனின் அருளை நாடும் மாணிக்கவாசகருக்கு அவன் பேரொளியின் அனுபவம் எப்படியிருந்தது? இதோ, அவரே கூறுகின்றார்:

 ஊனாய் உயிராய் உணர்வாய்என் நுட்கலந்து

தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்

வானோ ரறியா  வழியெமக்குத் தந்தருளுந்

தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்

ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்குள்

கோனாகி  நின்றவர் கூறுதுங்காண் அம்மானாய் !

இதே அனுபவ நிலையை நாம் பத்திரகிரியாரிடமும் பார்க்கின்றோம். தன்னையே அறியாத  நிலையில் தடுமாறும் மனதைப்  பார்த்து அவர் கேட்கின்றார் :

ஊனாகி யூனி  லுயிராகி யெவ்வுலகுந்

தானாகி நின்ற தனையறிவ தெக்காலம் ?

என்னைவிட்டு நீங்காம  லென்னிடத்தில் நீயிருக்க

உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம் ?

உள்ளத்தின் உள்ளே இருந்துகொண்டு அவன் என்னதான் செய்கின்றான்? அவன் செய்யும் மாயத் தந்திர வேலைகள் என்னென்ன? பதில் நமக்கு கிடைக்கின்றது பட்டினத்தாரிடமிருந்து:

உள்ளார்க்கு முள்ளாண்டி யூருமில்லான் பேருமில்லான்

கள்ளப் புலனருக்கக் காரணமாய் வந்தாண்டி.

அப்பிறப்புக் கெல்லாம் அருளா யமர்ந்தாண்டி

இப்பிறப்பில் வந்தா னிவனாகு மெய்ப்பொருள்காண்

எத்தனை ஆழமான சிந்தனையில் நம்பிக்கையில் அனுபவ நிலையில் சொல்லப்பட்டவை இந்தச் சொற்கள்.

இந்தக் கருத்தையே இன்னும் பாராட்டும் வண்ணம் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகின்றார்: 

கறந்தபால் கன்னலொடு  நெய்கலந்தால் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமான் “

இறைவனைத் தங்கள் உள்ளே நிறுத்தி ஆனந்த நிலையில் அடியார்கள் அனுபவங்களைச் சொல்லிக் கேட்க நமது சிந்தனைகள் மேலும் வளம்பெருமன்றோ ?

தொடருவோம்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க