இந்திய மக்கள் நலம்பெற வாழ்த்துகள்!

பவள சங்கரி

தலையங்கம்

பிரதமர் மோடி அவர்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம். கட்சியையும் தாண்டி தனிப்பெரும் ஒரு தலைவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையே இந்த வெற்றி காட்டுகிறது. சென்ற முறை அடைந்ததைவிட குறைவான இடங்களைப் பெற்றாலும் இந்த வெற்றி பாராட்டுதலுக்குரியதே. பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பாக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற மாயையை உடைத்தெறிந்து கிடைத்த இந்த வெற்றி மேலும் சிந்திக்கவைக்கத்தக்கதே. பல தொகுதிகளில் வாக்களிப்பட்ட நோட்டோ எண்ணிக்கை எதிர் கட்சியினருக்கு வாக்களிக்கப்பட்டிருந்தால் இந்த வெற்றி கிடைக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். தற்போது மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளெல்லாம் சிற்சில மாற்றங்கள் செய்தாலே பொருளாதாரத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பயன் தருவதாக அமைவதால் மக்களின் நம்பிக்கையை மேலும் பெறக்கூடும். நோட்டோ வாக்களித்தவர்களின் நிலையை மாற்றி அவர்களுக்கு இந்தியப் பொருளாதாரத்தின்மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்பட்டால் அருதிப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பி.ஜே.பி. கட்சிக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, பெரும்பான்மையான மக்கள் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக பிரதமர் மோடி அவர்களை தனிப்பெரும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். 29 மாநிலங்களில் 19 மாநிலங்கள் பிரதமரின் ஆளுமையை ஏற்றுள்ளனர் என்பது எதிர்கால செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய செய்தி என்பதில் ஐயமில்லை. வெற்றி அதிகரிக்கும் அதே வேளையில் பொறுப்புகளும் கூடுகிறது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மக்கள் நலம் சார்ந்ததாகவும், வாழ்வாதாரம் பாதிக்காமல், ஏற்றம் பெறும் வகையிலும் இருக்க வல்லமையின் உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

எதிர்க்கட்சியான காங்கிரசிற்கும் 41.4% மக்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சி என்பதாலேயே பிரதமர் கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களையும் எதிர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையும் மக்கள் கொண்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் முதிர்ச்சியான செயல்பாடுகள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து செயல்படுவதையே மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *