பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

24550360_1497454750308719_486553151_n

லோகேஸ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி (140)

  1. வலைஞரின் வாழ்க்கை
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    மீன்பிடி வலைதன்னில் முந்தினத்தில் ஏற்பட்ட
    முக்கியப் பழுதுகளை முத்தாய்ப்பாய் சரிசெய்து
    பாய்மரச்சீலை விரித்து பக்குவமாய் வடம்பிடித்து
    கடலோடு உறவாடி அலையோடு விளையாடி 
    காற்றோடு கவிபாடி வலையோடுப் போராடி
    கட்டுமரத் தொட்டிலையே கடலலைகள் தாலாட்ட…

    நெகிழியிழைப் படகோடு நெஞ்சமெல்லாம் நிறைவோடு
    தோணிகளின் துணையோடு தோழர்களின் படையோடு
    வள்ளங்கள் மரக்கலங்கள் விசைப்படகின் இசைவுடனே 
    எங்கும் நிரைந்திருக்கும் எல்லையில்லாப் பெருங்கடலில் சங்கும் முத்துச்சிப்பியும் அரியபலவும் மீனுங்கொணர
    வலைஞர் விரைந்திடுவர் வான்குலவும் கடலாட…

    ஆழ்கடலில் வலைவிரித்து அகப்பட்ட மீனையெல்லாம்
    அயர்ச்சியென்றும் இல்லாமல் முயற்சிக்கிழுக்கு நேராமல்
    மழையென்றும் வெய்யிலென்றும் புயலென்றும் பாராமல்
    முறையாகப் பாதுகாத்து முனைப்புடனே கரைசேர்த்து
    காத்திருக்கும் வணிகரின் கூடையெல்லாம் மீன்நிரம்ப – எதிர்
    பார்த்திருக்கும் மக்களின் பசிபோக்க முனைந்திடுவர்…

    இளைப்பாற வலையுலர்த்த உதவிற்ற கட்சத்தீவை
    இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அளித்ததனால்
    தமிழக மீனவர்கள் பரிதவித்து நிற்கின்றார்
    தரங்கெட்ட சிங்களனும் செய்நன்றி மறந்துவிட்டு
    தமிழனின் வலையறுத்து சிறைப்பிடித்து மகிழ்கின்றான் – இதைத்
    தட்டிக்கேட்க நாதியற்று தமிழன்தன்னுயிரைக் கொடுக்கின்றான்…

      -ஆ.செந்தில் குமார்.

  2. மீனவன்
    °°°°°°°°°°°

    இன்று
    கடந்துவந்த பாதையின் கசப்பான நினைவுகளோடு
    மீன்பிடித் தடைக்காலம் நீங்குமுன்னே
    பழுதுப்பட்ட வலைகளை சரிசெய்தான்
    எதிர்வரும் பருவத்தை மனதிற்கொண்டு…

    அலை மோதும் கடலினிலே
    வலை வீசும் மீனவனின் – உயிருக்
    குலை வைக்கும் போராட்டம்
    மலை போல ஏராளம் – அதை
    சிலை போல தாங்கி – நிதம்
    நிலை குலையாது இருந்திடுவான்…
    அன்று
    சிங்கள கடற்படையின் சீற்றம் தாளாமல்
    சிதைவுற்ற வலையோடு மீனின்றி கரைசேர்ந்தான்… 
    இழையோடும் சோகத்தால் 
    கலை இழந்து காணப்பட்டான்…

    காலை விடியும் முன்னே
    ஓலைக் குடிசையை விட்டு
    அலை கடலாட பாய்மரச்
    சீலை விரித்து பயணித்து
    தொலை தூரம் சென்றிடுவான்…
    வலை வீசி மீன்பிடிப்பான்…
    அன்று
    காற்றழுத்தத் தாழ்வுநிலையின் சீற்றம் தாளாமல்
    சிதைவுற்ற வலையோடு மீனின்றி கரைசேர்ந்தான்…
    இழையோடும் சோகத்தால்
    கலை இழந்து காணப்பட்டான்…

    நெகிழி இழை கொண்டு
    நேர்த்தியுடன் பின்னப் பட்ட
    பெரிய வலை எடுத்து
    புறப்பட்டான் ஆழ் கடலுக்கு…மீனோடு வரும்
    மணாளனை எதிர் நோக்கி
    மனையாள் காத்தி ருந்தாள்
    அன்று
    பருத்தபெரும் சுறாவின் சீற்றம் தாளாமல்
    சிதைவுற்ற வலையோடு மீனின்றி கரைசேர்ந்தான்…
    இழையோடும் சோகத்தால்
    கலை இழந்து காணப்பட்டான்…

    இனிவரும் காலங்களில்
    தமிழக மீனவன் சுடப்பட்டான்
    தமிழக மீனவன் சிறைப்பட்டான்
    என்று செய்திசொல்லும் நிலைமாறி
    இந்திய மீனவன் சுடப்பட்டான்
    இந்திய மீனவன் சிறைப்பட்டான்
    என்று சொல்லிடும் நிலைவேண்டும்…
    அப்போதேனும் கன்னடர்க்கும் காசுமீரிக்கும் 
    மத்திய அரசுக்கும் மளையாளிக்கும் – நெஞ்சில்
    சற்றேனும் ஈரம் பிறக்கும்….

    – ஆ. செந்தில் குமார்.

  3. (க)வலையா…

    வலை,
    வாழ்வாதாரமாகிறது
    மீனவர்களுக்கு..

    சிலநேரம் அது
    கவலையைக் கொண்டுவருகிறதே-
    கடலில் மீன்பிடிக்கச் சென்றால்..

    மீன் கிடைக்கவில்லை என்பது
    சிறு கவலை,
    மீனவனே கிடைக்கவில்லை என்பது
    மீளமுடியாக் கவலை..

    கவலையேயில்லா வாழ்வைக்
    கொண்டுவருமா வலை-
    காத்திருப்போம்…!

    -செண்பக ஜெகதீசன்…

  4. விடியலை நோக்கி!!!

    கட்டுமரங்கட்டி
    கவனத்தோடு வலைபின்னி
    சொந்தங்களுக்கு
    பிரியா விடையளித்து
    நடுக்கடல் நோக்கி…!!
    பகலெல்லாம் பாடுபட்டு
    இரவெல்லாம் கண்விழித்து
    மாதம்பாதி மண்ணிலும்
    மீதம்பாதி தோனியிலும்
    அப்பா வருவார் என்று மகளும்
    ஐயா வருவார் என்று மகனும்
    ஆசையாய் மலர்சூடி
    அத்தான் வருவார் என்று என்னவளும்
    அன்புடன் தமயாளும்
    பிராத்தனையோடு பெற்றோரும்
    எனக்காக!!
    என் பாதச்சுவடுகளுக்காக!!
    வழியின் மேல் விழி வைத்து!!
    வழியின் மேல் விழி வைத்து…
    உப்புக்காற்றில் கறைந்து
    எம்மக்கள் நினைவுகளோடு
    கட்டுமரத்தில் அயர்ந்து
    வயிற்று பிழைப்பிற்காக
    ஆயிரம் ஆயிரம்
    மீன்களோடும் விண்மீன்களோடும்
    நடுக்கடலில்…!!
    காற்றோடு கவிபாடி
    வலையோடு விளையாடி
    சிற்றுயிர் கொய்து
    பாவஞ்சுமந்த மனதுடன்
    கறையை நோக்கி
    கட்டுமரத்தில் நான்!!
    வழிபுறளாமல்
    எல்லை தாண்டாமல்
    பெருங்கவனத்துடன்
    அலைகளோடு புரண்டு
    சுடுமணலில் கால்பதிக்க
    ஓடத்துடன் ஓடி
    இரண்டாஞ்சாமத்தில் கிழியோடு
    கட்டுமரத்தில்!!
    சின்னஞ்சிறு ஆசைகளை
    சுமந்து…!!!

    மீனவனாய்!!

    விடியலை நோக்கி!!

  5. கண்ணீர் கடல் : அலை குதிரைகளில் சவாரி செய்யும் மன்னர்கள்!
    சமுத்திர ராசனின் செல்லப் பிள்ளைகள்!
    ஆழ் கடல் பயணம் அனு தினம் போய் வரும்
    மீனவ நண்பர்கள்!
    உயிரைப் பணயம் வைத்து, மீன்களை நமக்குத்
    தரும் கர்ம வீரர்கள்!
    வலையில் மீன்கள் சிக்கினால் தான்!
    மீனவன் வீட்டில் உலை கொதிக்கும்!
    மீன் கிடைக்காத நாட்களிலே!
    பசிக் கொடுமையினால் உடல் கொதிக்கும்!
    கிழிந்த வலையில் மீன் சிக்காது!
    மீனவன் வாழ்வில் என்றும் மகிழ்விருக்காது!
    கடலருகில் வலை போட்டால் மீன் கிடைக்காது!
    ஆழ் கடல் சென்றாலோ உயிருக்கு
    உத்தரவாதம் இருக்காது!
    கடல்நீர் ஏன் உப்பென்று காரணம்
    இன்று தான் புரிந்தது!
    மீனவப் பெண்டிர் வடித்த கண்ணீர் தான்
    கடல் நீரை உப்பாய் மாற்றியது!!!
    கிழிந்த வலையைத் எளிதாய் தைத்து விடலாம்!
    தொலைந்த இவர்கள் வாழ்வை
    நாம் முயன்றால் தேடிக் கொடுத்து விடலாம்!

  6. கடலோடியின் கதறல்..!
    =================

    கடலால் சூழ்ந்திம் மண்ணுலகம் இருப்பதாலே..

    ……….கடல்சார்ந்து வாழ்வதுதான் கடலோடியின் நிலை.!

    அடலேறுபோல உடலுறுதி கொண்டவரே யாயினும்..

    ……….அலைநடுவே ஆபத்துடன் கழிப்பதேயம் வாழ்வு.!

    இடர்படும் துன்பமும் தொல்லையுமெம் உடன்பிறப்பு..

    ……….இல்வாழ்வில் இன்பமென்றால் யாருக்கும் தெரியாது.!

    கடலுக்கும் கரைக்குமுள்ள தூரத்தாலே எங்களது..

    ……….உடலுக்கும் உயிருக்குமொரு உத்திர வாதமில்லை.!
    .
    .
    .
    வலைவீசி மீனுக்காகக் காத்திருக்கும் வேளையில்..

    ……….வஞ்சகர்கள் வீசும் வலையிலும்யாம் வீழ்வதுண்டு.!

    அலைமேலேறித் தாவும் பெருந்திமிங்கிலம் போல்..

    ……….ஆயிரமைல் வேகத்தில் வருமன்னியப் படையது.!

    வலையறுக்கும்! படகுடைக்கும்! பகை விலக்கியாம்..

    ……….தொலைதூரம் சென்றால்?எல்லை தாண்டினாயென..

    கொலையும் செய்வார்! கொடும் பாவியரப்போது..

    ……….அலைதான் எங்களுக்கெலாம் ஆறுதல் சொல்லும்.!
    .
    .
    .
    காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?எனக்..

    ……….கருத்துக் கவிபுனைந்தான் கவியரசு கண்ணதாசன்.!

    காற்றுடனும் அலையுடனும் போராடி உறவாடும்..

    ……….கண்ணீரும் கடல்நீரும் வற்றாதென்பது இயற்கை.!

    காற்றழுத்தம் வரும் போதலையின் சீற்றத்தால்..

    ……….காய்ந்த கருவாடு போலநாளும் கரைசேருவோம்.!

    மாற்றுவழி வாழவொரு வழியில்லை ஆற்றாதழுத..

    ……….மனதைக் கல்லாக்கி தேற்றியும்யாம் வாழுகிறோம்.!
     

  7. வலைப்பதிவு

    தண்ணீரில் நித்தமும் நீந்திச் செல்லும் என்னால்
    கண்ணீரில் நிற்க முடியாது தத்தளிக்கிறேன்

    பெற்ற மகனையும் கட்டிய கணவனையும்
    பேரலை வந்து அள்ளிச்சென்றதென கேட்டு
    பேரதிர்ச்சியில் கதறி அழும் பந்தங்களின் கண்ணீரில்

    அப்பா எப்போது வருவார்; முத்தம் தருவார்;
    அள்ளி அணைத்து அழகிய புத்தாடை வாங்கித் தருவார் என
    ஆயிரம் கனவுகளுடன் ஏங்கிக் கிடக்கும்
    அல்லி மலர்களின் கண்ணீரில் –

    தத்தளிக்கிறேன்.. தவிக்கிறேன்..
    கரைபுரண்டோடும் வெள்ளத்தில் நீந்தி மகிழும் என்னால்
    கவலையில் ஊற்றெடுக்கும் இக் கண்ணீரில் நொடி கூட நிற்க முடியவில்லை..

    நானே வருகிறேன் தலைவா.. எனை நம்பி வாழ்வை நடத்தும் என் தலைவா..
    காலங்காலமாக உனக்காய் மீன்களை பிடித்துத் தரும் என்னால்,
    காப்பாற்ற ஆளில்லாமல் பரிதவிக்கும் உனை
    காக்க முடியாதென்று நினைத்தாயோ?!
    எவரும் வேண்டாம் என் வேந்தனே..
    இதோ நான் வருகிறேன்..
    உனை காப்பாற்றி கரை சேர்க்க..
    உற்றவரிடம் உனை கொண்டு சேர்க்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *