மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -3

க.பாலசுப்பிரமணியன்

 

திருவாரன் வில்லை – பார்த்தசாரதி பெருமாள்

thiruvidanthai

மண்வீழ்ந்த சக்கரத்தை மறுபடியும் தூக்கிடவே

மனமொடிந்து மாவீரன் கர்ணனும் முயன்றிடவே

மனங்குவிந்த சினம்கொண்டு தனயனைத் தாக்கிவிட்ட

தனஞ்செயன் தவறுகள் களைந்திட்ட தலமன்றோ !

 

ஆலிலையில் வந்தாலும் ஆயர்பாடி வளர்ந்தாலும்

ஆதிசேடன் மேலுறங்கி அலைகடலில் வாழ்ந்தாலும்

ஆதிமூலமென அழைத்தவுடன் அருள்செய்ய வருவானே

ஆதிமுதல் அந்தம்வரை அருள்பவனே அரங்கத்தானே !!

 

குழலோசை மயக்கத்திலே கூடிவரும் கோபியர்கள்

குலம்மறந்து குடிமறந்து கோகுலனின் போதையிலே

குழல்பறக்க  உடல்நெளிந்து கொடியெனவே அசைய

குழம்பினவே ஆவினங்கள் கோவிந்தன் மாயையிலே !

 

வான்செல்லும் கார்மேகம் வளிதன்னில் இளைப்பாற

மான்போன்ற கோபியர்கள் நடுவினிலே நீயிருக்க

தான்பெற்ற நிழலாகத் தன்னுருவம் உன்னில்கண்டு

வியந்தே நிற்கின்றது கண்டாயோ வைகுந்தா !

 

காழியிலே படமெடுத்து வலமிட்ட காளிங்கனை

நாழியிலே நாடியடக்கி நடனமிட்ட நாரணனே

தோழியர்கள் கூடிடவே தாள்பார்த்து ஆடியவனே

ஊழியிலும் உயிர்காக்க உன்னையன்றி யாருண்டு ?

 

போர்முனையில் நானில்லை தேரோட்ட நீயில்லை

போதனைகள் சொல்லிவிடவே புதியகீதை தேவையில்லை !

போக்கிடமே  பொற்பாதம் புகலடைந்தேன் புண்ணியனே

போக்கிடுவாய் துயரமெல்லாம் புவியெல்லாம் காப்பவனே !

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க