விடையில்லா விடுகதை..!
விடையில்லா விடுகதைபோல வினாப்பல உண்டிங்கே..
விடையில்லை இன்றளவும் எஞ்சுவது வினாவொன்றே.?
படையுடன் போர்தொடுத்து பகையிலா நாட்டையும்..
பழிதீர்க்கும் செயலுக்குத் தகும்காரணம் ஏதுமுண்டா.?
இடைத்தரகர் இறாது எதையுமிங்கே செய்யமுடியுமா..
எதுவும்முடியும் அவர்தயவால் என்பதுதான் நியாயமா.?
கடையேழு வள்ளலையும்கூட வஞ்சகரெனக் கூறுவார்..
குறையில்லா மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறாரா.?
பொதுச்சொத்தை அழிக்கும் புரட்சியின் நோக்கம்தான்..
பொதுநலமெனச் சொல்லியது சழக்கரின் சதிச்செயலோ.?
பொதுஊர்வலம் போராட்டம் மறியல் கண்டனமெனப் ..
புதிதாக வெடிக்கும்பல விடையில்லா விளம்பரத்தோடு.!
எதுக்காகப் பயணியர்செலும் பேருந்திற்கு தீவை
என்னநோக்கம்? இன்னுமிது விடையில்லா விடுகதை.!
கொதிக்கும் உள்ளத்தில் எழும்நல் எண்ணங்களால்..
கொந்தளிக்கும் கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.!
உத்தமர்கள் பலருமுதித்த உலகுபுகழ் நம்திருநாட்டில்..
உலவுகின்ற அவலங்கள்பல இன்னமும் தீரவில்லை.!
ஒத்துவாழும் உணர்வுடன் உள்நாட்டு மாநிலங்களும்..
ஒன்றுக்கொன்று உறவாடி ஒன்றிடும்நாள் எந்நாளோ.?
அத்தியாயம்போல இச்சதிச்செயலெலாம் நீளும்..இந்த
அநியாயத்துக்கிது தீர்ப்பென ஆய்ந்தவழி எதுவோ.?
அத்துணைக்கும் ஒருநாளில் முற்றுப்புள்ளி வரும்..
என்பதெலாம் “விடையில்லா விடுகதை” போலாகும்.!
கைநிறையப் பணமீட்டி மனம்நிறைந்து வாழலாமென..
கல்லூரிக்குக் கையூட்டு கொடுத்துக் கல்விபயின்றேன்.!
பைநிறைக்கும் எண்ணமுடன் பலருமலையும் இந்தப்
பைத்தியங்களில் நானொருவன் எனப் பின்பறிந்தேன்.!
கையாலாகதவனெனும் பட்டப் பெயருடன் கடைசியில்..
காலமிடும் விடுகதைக்கு விடைதேடி அலைகின்றேன்.!
கைபார்த்துன் காலத்தைக் கணிக்காதே கையிலாதவருக்கும்..
காலமுண்டு.!…கலாம் மொழிந்ததை நினைவுறுகிறேன்.!
================================================
நன்றி:: தினமணி வெளியீடு::04-12-17
நன்றி:: படம் கூகிள் இமேஜ்
அன்புடன்
பெருவை பார்த்தசாரதி