– ம.பிரபாகரன்

யாப்பருங்கலக்காரிகையில் உள்ள சூத்திரத்தில் ஆறாவது அடிவரை உறுப்பு பற்றிய செய்தி இடம்பெறுகிறது. ஏழாவது எட்டாவது அடியில் பா மற்றும் பாவினம் பற்றிய செய்தி இடம்பெறுகின்றது. ஆனால் யாப்பருங்கல விருத்தியில் ஏழாவது அடி தூக்கு பற்றியதாகும். யாப்பருங்கலத்தின் கொள்கைப்படி செய்யுளுறுக்கள் ஏழு. இதில் ஏழாவது வருவது தூக்கு. யாப்பருங்கலத்தின் சூத்திரத்தை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்: 

எழுத்தசை சீர்தளை யடிதொடை தோக்கோ
டிழுக்கா நடைய தியாப்பெனப் படுமே. (சூத்.1)

இவ்வாறு யாப்பருங்கலத்துடைய யாப்புறுப்புக்கொள்கையில் தூக்கு இடம்பெற்றிருப்பதால் யாப்பருங்கலவிருத்தியில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும்
” எழுதப்படுதலின்” எனத்தொடங்கும் மேற்கோள் சூத்திரத்தில் ஏழாவது அடி தூக்கு உறுப்பு கூறுவதோடு முடிகிறது. ஆனால் யாப்பருங்கலக் காரிகையைப் பொறுத்த அளவில் அதனுடைய உறுப்புக்கொள்கையில் தூக்கு என்ற உறுப்பு இடம் பெறவில்லை. எனவே யாப்பருங்கலக் காரிகையின் மேற்கோள் சூத்திரம்  எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறு உறுப்பே கூறுகிறது. எனவே யாப்பருங்கலக் காரிகையில் இடம்பெறும் மேற்கோள் சூத்திரமாகிய எழுதப்படுதலின் … என்ற சூத்திரத்தில் ஏழாவது அடியில் தூக்கு பற்றிய அடி இடம்பெறவில்லை. அதற்கு மாறாக ஒரு பொது அறிமுகத்தின் பொருட்டுப் பா மற்றும் பாவினத்திற்கு இரண்டு அடி கூடுதலாகக் கொடுக்க பட்டுள்ளது.

யாப்பருங்கலக்காரிகையின் இந்த மேற்கோள் சூத்திரத்தை இலக்கண விளக்கம் அப்படியே எடுத்தமைத்துக்கொண்டதே தவிர இது பாடவேறுபாடாகாது என்று தோன்றுகிறது.  இந்தச் சூத்திரம் யாப்பருங்கலவிருத்தியிலும், யாப்பருங்கலக்காரிகையிலும் சற்று வேறுபட்டுக்காணப்படுவதற்கு அவ்வவ் நூல்களின் யாப்புறுப்புக்கள் குறித்த கொள்கையே காரணம் என்பது மேற்சொல்லப்பட்டது. இத்தொடர்பில் எழும் இன்னொரு ஐயம், இதற்குரிய மூலச்சூத்திரத்தை எழுதியது யார்? என்பதாகும். இதற்குரிய மூலச்சூத்திரம் யாப்பருங்கல விருத்தியில் காட்டப்பட்டிருக்கின்ற சூத்திரமா? அல்லது யாப்பருங்கலக்காரிகையில் காட்டப்பட்டிருக்கும் சூத்திரமா? என்பதாகும். காலநிலையில் யாப்பருங்கல விருத்தி யாப்பருங்கலக் காரிகை உரைக்கு முற்பட்டதாகும். எனவே யாப்பருங்கல விருத்தியிலுள்ள சூத்திரமே காலத்தாற் முற்பட்டது என்று கூறத் தோன்றும். எனினும் யாப்பருங்கல மரபில் உள்ள மேற்கோள் சூத்திரங்கள், யாப்பருங்கலத்திற்கு முந்தைய பழமை உடையனவாகத் திகழ்கின்றன. யாப்பருங்கல விருத்தியில் ” எழுதப்படுதலின்….எனத்தொடங்கும் சூத்திரத்தை எடுத்துக்காட்டிய பின் ” என்றார் ஆசிரியரெனக் கொள்க  ” (பக்.18; மு.சு.நூ) என்பது இடம்பெற்றுள்ளது. ஆனால் யாப்பருங்கலக் காரிகையில் இச்சூத்திரம் காட்டப்பட்டபிறகு  ” என்றாராகலின் ” என்பது காட்டப்பட்டுள்ளது. என்றாராகலின் என்பதற்குப் பாடவேறுபாடாக என்பவாகலின் என்பது வே.பால்ராஜ்ஜினால் குறிக்கப்பட்டுள்ளது. யாப்பருங்கல விருத்தியில் இச்சூத்திரத்தை அடுத்து ” என்றார் ஆசிரியரும் ” என்றிருப்பதால் ஒருவேளை அது அமிர்தசாகராகவும் இருக்கலாம். எனினும் உறுதியாக ஒன்றும் சொல்வதற்கில்லை இது ஆய்விற்குரியது.

மேலே யாப்பருங்கல மரபினுடைய  சூத்திரத்தை இலக்கண விளக்கம் அப்படியே

எடுத்துப் பயன்படுத்திக்கொண்டதைப் பார்த்தோம். இனி யாப்பருங்கல மரபினுடைய சூத்திரங்களைத் தழுவி இலக்கணவிளக்கம் எங்ஙனம் சூத்திரத்தை அமைத்துக்கொள்கிறது எனப் பார்க்கலாம். உதாரணமாக யாப்பருங்கலத்தில் வரும் அசைகள் பற்றிய சூத்திரத்தை இலக்கணவிளக்கம் எப்படி தழுவிக்கொள்கிறது எனப் பார்க்கலாம்.

யாப்பருங்கலத்தில் வரும்  அசைகள் பற்றிய சூத்திரம்: 

”  நெடில்குறில் தனியாய் நின்று மொற்றடுத்து
நடைபெறு நேரசை நால்வகை யானே   (யாப்.6) 

குறிலிணை குறினெடி றனித்து மொற்றடுத்தும்
நெறிமையி னான்காய் வருநிரை யசையே (யாப்.8)

இச்சூத்திரங்களைத் தழுவி, இலக்கணவிளக்கம்:

நெடிலுங் குறிலுங் தனித்துமொற் றடுத்து
நடைபெறு நேரசை நான்கு நீங்காக்
குறிலிணை குறினெடிற் றனித்துமொற் றடுத்து
நெறிவரு நிரையசை நான்கு மாகும் (இல.வி.714)

என்று தன் சூத்திரங்களை அமைத்துக் கொள்கிறது.

மேலே இலக்கண விளக்கம் யாப்பருங்கல சூத்திரங்களை அப்படியே எடுத்தாண்டும் தழுவியும் அமைத்துக் கொண்டதையும் கண்டோம். மேலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி ஆகியவற்றின் உரைகளைத் தழுவி தம் உரையை அமைத்துக்கொள்ளும் போக்கையும் கவனிக்க முடிகிறது. கீழ்க்கண்ட உதாரணம் மூலம் அதைத் தெரிந்துகொள்ளலாம்.

யாப்பருங்கல விருத்தி:

கடியார் பூங்கோதை…….” இதனுள் பூங்கோதை என்றும் கடாயினான் என்றும் அலகிடன், ஆசிரியத்தளையும், கலித்தலையும் தட்டு, வெள்ளையுள் பிறதலை விரவா என்னும் இலக்கணத்தோடு மாறுகொள்ளும் ஆதலின் அதனைக் ‘ கடியார்பூ ‘ என்று புளிமாங்காய் ஆகவும் ‘ கோதை ‘ என்று தேமா ஆகவும் அலகிடத் தளையும் சீரும் வண்ணமும் சிதையாவாம். (பக். 396, இரா.இளங்குமரன் பதிப்பு யாப்பருங்கல விருத்தியுரை:1976 )

யாப்பருங்கலக்காரிகை:

கடியார் பூங்கோதை….இதனை கடியார் எனவும், ‘ பூங்கோதை ‘ எனவும் அலகிடின் ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு வெள்ளைத்தன்மை குன்றுமாதலால் ‘ கடியார் பூ ‘ என்று புளிமாங்காயாகவும் ‘கோதை ‘ என்று தேமாவாகவும் ‘ கடாயினான் ‘ என்று கருவிளமாகவும் அலகிட்டு கொள்க. (பக்: 281, மு.சு.நூ)

இலக்கண விளக்கம்:

” கடியார் பூங்கோதை…இதனுள் கடியார் என்றும் பூங்கோதை என்றும் கடாயினான் என்றும் இவ்வாறு அலகிட ஆசிரியத்தளையும், கலித்தளையும் தட்டு செப்பல் ஓசை சிதைதலின் கடியார்பூ என்றும் கோதை என்றும் அலகிட ஓசை சிதையாவாம் (பக்.774, மு.சு.நூ).

மேற்கண்ட  உதாரணங்களில் இலக்கணவிளக்க உரைப்பகுதி யாப்பருங்கலக்காரிகையைக் காட்டிலும்  யாப்பருங்கல விருத்தியோடு ஒத்தமைவதைக் கவனிக்க.

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்:

யாப்பருங்கலக்காரிகை:

” பாடுநர்க்கும்…..இதனுள் டுகர நகரங்கள் பிரிந்திசைத்தனவாயினும் இரண்டினையுங் கூட்டி நிரையசையாக அலகிடச் சீரும், தளையும் சிதையாவாம். அல்லாவிடின் நாலசைச் சீராய் வண்ணமழிந்து ஓசையுண்ணாது கெடும் பிறவுமன்ன.(பக். 282, மு.சு.நூ)

யாப்பருங்கலவிருத்தி

” பாடுநர்க்கும்….இப்பாட்டினுள் டுகரமும் நகரமும் பிரிந்திசைத்தனவாயினும், இரண்டினையும் கூட்டி, நிரையசையாக அலகிட்டுக் கொள்க. அல்லாவிடின் வண்ணம் அழிந்து கிடக்கும்.

இலக்கண விளக்கம்:

” பாடுநர்க்கும்…இதனுள் டுகர நகரங்கள் பிரிந்து இசைத்தன ஆயினும் இரண்டு அடியும் நாலசைச்சீராய்ச் செப்பலோசை சிதைதலின் டுகர, நகரங்களைக் கூட்டி நிரை அசையாக அலகிடச் சிதையாதாம்; இவ்வாறே பிறவும் அலகிட்டுக் கொள்க. (பக்.774, மு.சு.நூ)

மேற்கண்ட அட்டவணையில் இலக்கணவிளக்கத்தின் உரைப்பகுதி யாப்பருங்கல விருத்தியை விட யாப்பருங்கலக் காரிகை உரைப்பகுதியோடு ஒத்திருப்பதைக் கவனிக்கமுடியும்.

இலக்கண விளக்கம்,  செய்யுளியல் இறுதிப்பகுதியில் வைத்து விளக்கும் வகையுளி, வாழ்த்து,  எண்வகை வனப்பிலக்கணம், குறிப்பிசை, ஒப்பு, வண்ணங்கள் , புனைந்துரை, ஆனந்தம், அடிவரையறையில்லாத செய்யுள்வகை ஆகியவை யாப்பருங்கல மரபைப் பின்பற்றியே விளக்கப்பட்டுள்ளன. வண்ணத்தைப் பொறுத்தவரை வரிசைமுறை அடிப்படையில் (அதாவது வகையுளி, வாழ்த்து, வனப்பு, குறிப்பிசை, ஒப்பு, வண்ணம் என்ற முறையில்) யாப்பருங்கல மரபையும், விளக்க முறை அடிப்படையில் தொல்காப்பியத்தையும் (மூலம், )  யாப்பருங்கல மரபையும் (உரை)  இலக்கணவிளக்கம் பின்பற்றுகிறது. அது சூத்திரத்தில் தொல்காப்பியர் காட்டிய இருபது வண்ணங்களைப் பற்றி மட்டுமே கூறினாலும் உரையில் வண்ணம் நூறு என்றும்  கூறி யாப்பருங்கல மரபையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் அது யாப்பருங்கல மரபையே முன்னிலைப்படுத்துகிறது. மேலும் அது  வண்ணங்கள் நூறு என்று கூறுவதோடு மட்டும் அமையாமல் ” அவற்றைக் குறிலகவற் றூங்கிசை வண்ணம் நெடிலகவற் றூங்கிசை வண்ணமென வண்ணம் நூறென்பாரும் உளர். அவ்வேறுபாடும் உணர்க ” (பக்.732, மு.சு.நூ) என்று  கூறுவதன் மூலம் யாப்பருங்கல மரபின்  வண்ணம் தொடர்பான எந்தச் செய்திகளும் விட்டுபோய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதையும் கவனிக்கமுடிகிறது.

யாப்பருங்கலத்தின் உரையும் யாப்பருங்கலக்காரிகை உரையும் வண்ணங்கள் நூறு என்று கூறினாலும் அவை தொல்காப்பியத்தின் வண்ணம் தொடர்பான சூத்திரங்களை எடுத்துக்காட்டுவதையும் இவண் நினைவு கூறவேண்டும். அதனோடு ஒரு புடை ஒப்புமையாக,  இலக்கண விளக்கம், சூத்திரத்தில் இருபது வகை வண்ணங்களையும் கூறி உரையில் யாப்பருங்கல மரபின் வண்ணங்களைக் கூறுவதை ஒப்புநோக்க வாய்ப்புண்டு.  எனினும் இலக்கண விளக்கத்தினுடைய வண்ணம் பற்றிய சூத்திரம் தொல்காப்பியத்தின் சூத்திரத்தைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. தழுவி என்பதை விட தொல்காப்பியச் சூத்திரம் என்றே கூறலாம். இவ்விடத்தில் தொல்காப்பியம் மற்றும் இலக்கண விளக்கம் ஆகியவற்றின் வண்ணம் பற்றிய சூத்திரத்தை எடுத்துக்காட்டுவது பயனுடையதாக இருக்கும்:

தொல்காப்பியம்:

” வண்ணந் தாமே நாலைந் தென்ப ” ( தொல்.செய். 214)

”  அவைதாம்
பாஅ வண்ணம் தாஅ வண்ணம்
வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்
இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்
நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்
சித்திர வண்ணம் நலிபு வண்ணம்
அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்
ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்
எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்
தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்
உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென்று
ஆங்கென மொழிப அறிந்திசினோரே (தொ.செய்.216)

இலக்கண விளக்கம்:

வண்ணந் தானே நாலைந் தவைதாம்
பாஅ வண்ணந் தாஅ வண்ணம்
வல்லிசை வண்ண மெல்லிசை வண்ண
மியைபு வண்ண மெல்லிசை வண்ண
நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணஞ்
சித்திர வண்ண நலிபு வண்ண
மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ண
மொழுகு வண்ண முரூஉ வண்ண
மெண்ணு வண்ண மகைப்பு வண்ணந்
தூங்கல் வண்ண மேந்தல் வண்ண
முருட்டு வண்ண முடுகு வண்ணமென்
றாங்கென மொழிப வறிந்திசி னோரே (இ. வி.  757)

இரு சூத்திரங்களையும் ஒப்புநோக்குக.

இங்குச் சூத்திரநிலையில் இலக்கண விளக்கம் தொல்காப்பியத்தைப் பின்பற்றுகிறது என்பதே சரி எனினும் சூத்திரத்தோடு உரையையும், வண்ணத்தை விளக்க எடுத்துக் கொண்ட வரிசை முறையையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது (இலக்கண விளக்க மூலமும், உரையும் ஒரே நபரால் செய்யப்பட்டதாக இருப்பதினால் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது) இலக்கண விளக்கம் வண்ணம் பற்றிய கொள்கையில்  யாப்பருங்கல மரபைப் பின்பற்றுகிறது என்பதே நேரிதாகும். நாமிங்கே  இதை விரிவாகக் கூறுவதற்குக் காரணம் ஒரு நூல் பல நூல் செய்திகளை எடுத்தாண்டாலும் அது பின்பற்றும் மூலநூலே அது சார்ந்த கோட்பாட்டை விளக்க வல்லதாக இருக்கும் என்பதாலேயேயாகும். இது போல (வண்ணம் பற்றிய சூத்திரத்தில் இலக்கண விளக்கம் தொல்காப்பியச் சூத்திரத்தை பயன்படுத்துவது போல)   இலக்கண விளக்கம் தொல்காப்பியம் சார்ந்த சில செய்திகளைப் அடியொற்றினாலும் அது சார்ந்திருக்கும் மரபு என்பது யாப்பருங்கல மரபேயாகும்.

இதுகாறும் கண்டவற்றால் இலக்கணவிளக்கம் தொல்காப்பியத்தின் சில செய்திகளை எடுத்தாண்டாலும்,  தொல்காப்பியத்தைப் பின்பற்றித் தன்வழியை அமைத்துக்கொள்ளவில்லை என்பதையும் அது யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.

*****

கட்டுரையாசிரியர்
ஆய்வாளர்
பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO)
புதுச்சேரி

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.