Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_3842

    “கஜங்கள் குளிர்விக்க ,கையம் புஜங்கள்
    நிஜம்கொள் அபயவரம், நீள்அம்-புஜங்கள்
    தரிக்கப்பச் சையணிந்த தாய்கஜ லஷ்மி
    பரத்தினும் மேலாம் பணி”…

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
    ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
    மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
    முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சரஸ்வதி மஹா யாகம்

    சரஸ்வதி துதி

    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை “ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்” ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் “ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்” ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டும் மாணவ மாணவியர்களின் கல்வித்தரம் உயரவேண்டியும், ஞானத்தின் பிறப்பிடமான கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் அருள்பெற வருகிற 29.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மஹா சரஸ்வதி யாகம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று சரஸ்வதி தேவியை வணங்கி ஞான தெளிவை பெறுவோம்.

    கல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானதுதான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்குத் தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி.

    சரஸ்வதி தேவி பிரம்மாவை மணம் புரிய ஊசியின் முனை மேல் நின்று உத்த தவம் செய்ததாகக் கூறுவர். சரஸ்வதிக்குப் பெரும்பாலும் நிறைய கோயில் இல்லை. தமிழகத் தில் கூத்தனூரில் மட்டுமின்றி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இல்லம்தோறும் சரஸ்வதி பூஜையன்று கோலோச்சுபவள் சரஸ்வதியே. வெண் தாமரையில் வீற்றிருப்பவள் சரஸ்வதி. வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். தன் கரங்களில் வீணையை யும் புத்தகத்தையும் தாங்கிய கலாவாணி. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சரஸ்வதி தேவிக்கு வருகிற 29.09.2017 ல் சரஸ்வதி பூஜையன்று வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் மஹாசரஸ்வதி யாகத்தில் பங்கேற்று சரஸ்வதியை வணங்குவதால் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிலை உயரப் பெறுவார்கள். சரஸ்வதியின் பாதங்களிலும் யாகத்திலும் வைத்து பூஜித்த எழுது பொருட்களான நோட்டு புத்தகம், பேனாக்களை பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்வாமிகள் திருக்கரங்களால் அருட்பிரசாதமாக வழங்கவுள்ளார். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மேலும் தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
    கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
    வாலாஜாபேட்டை-632513
    தொலைபேசி : 04172-230033 / 09443330203
    www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in
    Email : danvantripeedam@gmail.com

    Share
  • நவராத்திரி 10

    இசைக்கவி ரமணன்

    f05b0d62a058d1566368fe0ba06abfeb

    சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும்
    நில்லா திமைக்கின்ற சுந்தரீ!
    முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே
    மெளனத்தை சுவாசிக்கும் அந்தரீ!
    எல்லைகள் இல்லா நிரந்தரீ! நெஞ்சுள்
    எங்கோ த்வனிக்கின்ற மந்த்ரிணீ!
    தொல்லைகள் நீக்கியெனைத் தொய்வின்றித் தூக்கவே
    தோட்டத்தில் பாடிடும் பைங்கிளீ!

    வற்றாத ஊற்றையே வார்க்கிறாய்! தக்க
    வார்த்தையே தருணத்தில் சேர்க்கிறாய்!
    முற்றாத புத்தியின் முன்னிலும், கட்டி
    முக்தியை வெண்ணையாய் வைக்கிறாய்!
    பற்றேது மற்றவன் ஆக்குவாய், தெருவில்
    படும்பா டனைத்தையும் பார்க்கிறாய்!
    கற்றென்றும் வாராத கவிதையெனும் விந்தையைக்
    கலைவாணி தந்துன்னுள் ஈர்க்கிறாய்!

    செல்வந்தர் பலபேரைக் கண்டனம், கலை
    தேர்ந்தவர் சிலரையும் கண்டனம்
    புல்லர்புகழ் பெறுவதைக் கண்டனம், ஏதும்
    புரியா விமர்சகரைக் கண்டனம்
    நல்லவர் நலிவதும் கண்டனம், யார்க்கும்
    நல்லசிரிப் பில்லையதைக் கண்டனம், என்னை
    வல்லமை தரும்தமிழைப் பாடுமொரு கவிஞனாய்
    வாழ்வித்த தாயே என் வந்தனம்!

    உயிரெனும் உலையூதும் போதுன் – தோளில்
    ஒருகரம் வைத்துற்றுப் பார்க்கிறேன் – உலையில்
    உயிரைநீ வாட்டிடும் போதுன் – தாளில்
    போதுமடி என்றுவா திடுகிறேன்
    உயிரைஉய் விக்கும் போதுன் – முன்னில்
    ஓங்கியுன் புகழ்பாடு கின்றேன்
    உயிருக்குள் உயிராக சேய்வயிறில் தாயாக
    உற்றகலை வாணியே வந்தனம்!

    வாணிநீ! தேனிநீ! வற்றாத கேணிநீ!
    வார்த்தைகளின் தாயகம்!
    ராணிநீ! அறியாத ரகசியம் நீ அங்கு
    ராகங்களின் சேவகம்!
    மாணிக்க வீணையுன் மார்பில் படும்போது
    மனமெங்கும் பூங்காவனம்!
    தோணித் துறைமூலை பொன்னந்தி மாலையெதிர்
    தோன்றும்தாயே வந்தனம்!

    27.09.2017 / புதன் / காலை 9.21

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170927  Sharada -Devi series 08-lr

    படிகமணி மாலை, படிப்புணர்த்தும் ஓலை,
    மடிதவழும் வீணை, மருங்கின்(இடையின்) -பிடிபடாமை,
    கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
    வேலொத்து பாய்ச்சும் வசவு….

    வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
    தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
    மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
    ஞானத்தை நானுற நல்கு….

    அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
    பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
    ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
    மாற்றுத் துணியாய் மனது….

    கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
    வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
    கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
    தலைவானில் நிற்கும் திமிர்ந்து….

    வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
    சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
    பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
    பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….

    துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
    சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
    கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
    நடத்தெனது நாடகத்தை நன்கு….

    சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
    துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
    சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
    வித்தை சிருங்கேரி வாய்த்து….

    கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
    சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
    கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
    கிரகங்கள் கூப்பும் கரம்….

    வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
    மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
    அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
    முளைத்திடு முண்டக மா….

    உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
    களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
    ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
    ஓசை சதங்கையொலி ஓம்….

    நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
    ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
    படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….கிரேசி மோகன்….!

    Share
  • திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி

     

    unnamed
    வானைக்கா வையம்கா தூணை துரும்பைக்கா
    மோனை எதுகைக்கா மோஹனைக்கா -ஆனைக்கா
    ஆத்தா அகிலாண்ட அம்மைபோல் வேறேகாப்
    பாத்த எவரோ பகர்….!

    சுனையாக வாழும் சிவனிட பாகத்தில்
    அணையாத சக்தீயே, அம்மே -வினையான
    மண்வாழ்வின் மாருதமாம் ஆனைக்கா அம்பிகை
    விண்ணாகா சத்தின் விளைவு….

    யானைக்(கு) ஒருகாலம் பூனைக்(கு) ஒருகாலம்
    ஆனைக்கா அன்னை அடியார்க்கோ -வானம்தீ
    மண்காற்று நீர்காலம் மற்றுள்ள பூதமிவன்
    முன்தோற்று மண்டியிடு மாம்….!

    தேனுக்காய் வண்டேபோல் தாவி அடைக்கலமாய்
    ஆனைக்கா அன்னை அடிபணிய -பானைத்தோல்
    பிண்டத்தால் பட்டகடன் பாரம் குருவித்தலை 
    சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….

    பானைத்தோல் பாரத்தால் பட்டகடன் போக்கிட
    ஆனைக்கா அம்மை அடிக்கமலம் -தேனைப்போய்
    வண்டுண்ணும் வேகத்தில் வந்துநீ மொய்த்திட
    சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….

    கூன்பிறையும் மான்மழுவும் தேனொழுகும் பூவிதழும்
    பூணிறையின் ஊனுறையும் ஆணுமையை -நான்மறையும்
    வானவரும் மாலயனும் காணஅரி தானவளைக்
    காணத் திருவானைக் கா….

    தானே தனக்குவமை ஆன உமையாளை
    வீணே வர்ணிப்பதேன் வெண்பாவில் -ஆனை
    தனையன்று காத்த அகிலாண்ட வல்லி
    துணையென்(று) அவளைத் துரத்து….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • நவராத்திரி 09

    இசைக்கவி ரமணன்

     

    Navaratri

    நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம்
    நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள்
    பகராமல் எதையும்நான் செய்ததில்லை,
    பகிராமல் எதையும்நான் மறைத்ததில்லை
    சுகமென்றும் துயரென்றும் வருவதெல்லாம், சென்று
    சொல்லாமல் ஒருநாளும் சென்றதில்லை
    நகர்ந்துவிட்டாள் ஏனோ தெரியவில்லை! தவறு
    நான்புதிதாய் என்செய்தேன் புரியவில்லை!

    கணந்தோறும் எந்நலம் கேட்கின்றவள், நித்தம்
    கண்ணார நேசத்தைப் பெய்கின்றவள், என்னைப்
    பிணமாகப் பார்க்கின்ற பொருளென்னவோ? இந்தப்
    பிச்சியின் நெஞ்சின் கருத்தென்னவோ?
    ரணமாக உயிரெலாம் குடைகின்றதே, பல
    ராகங்கள் ஸ்ருதியின்றி உடைகின்றதே!
    மணமாலை பிணமாலை ஆகலாமா? தாய்
    மகனைப்போய்ப் பகையென்று தள்ளலாமா?

    கனவிலே நிலவுமுகம் காட்டுகின்றாள், காதல்
    கண்களால் இன்னும்தா லாட்டுகின்றாள்
    நனவிலோ தொலைவையே காட்டுகின்றாள்
    நான்ராணி என்பதை நாட்டுகின்றாள்
    மனதினை ஈயாக ஓட்டுகின்றாள், எனை
    மல்லாந்த ஆமையாய் வாட்டுகின்றாள்
    தினையளவும் என்மீதில் அன்பில்லையோ?
    சென்றகதை மாற்றுவதும் வன்பில்லையோ?

    அன்னையே! ஈதென்ன பரிசோதனை? காயும்
    அனலிலே மஞ்சமாய் ஒருவேதனை?
    வன்கொடுமை யால்வீழ்ந்த ஊமையாக, நான்
    வாடநீ பார்ப்பதா உன் சாதனை?
    உன்னில்நான் என்னில்நீ உண்மையன்றோ? அதை
    உணரா திருக்கின்ற பெண்மை நன்றோ?
    என்றென்றும் நீயென்றன் உயிரல்லவோ? நான் உன்
    அன்பிலே வாழ்கின்ற பயிரல்லவோ?

    போதுமம் மாயிந்தப் புதிய வேடம், பசும்
    புல்லுக்குத் தீயைப் புகட்டும் பாடம்
    தீதுநன் மையெலாம் தீர்த்தபின்பும், நான்
    தீரா திருப்பதில் என்ன லாபம்?
    ஆதரவுக் கேங்கிடும் அல்லிகண்டு, நிலவு
    அசிங்கமென் றேவிலகிச் செல்வதுண்டோ?
    காதலே யாவுமெனக் கற்றுத்தந்து, பின்
    காலால் மிதிக்கின்ற காதலென்னே!

    கன்னங் கருத்தசிறு பிள்ளையாக, மொத்த
    ககனம் அதிர்ந்திடும் காளியாக, இடை
    பின்னி நடக்கின்ற வஞ்சியாக,கிழப்
    பீடிகை போட்டிடும் பிச்சியாக
    என்னென்ன வடிவத்தில் வந்துநிற்பாய்! சுகம்
    எத்தனை வண்ணத்தில் தந்துநிற்பாய்!
    கன்னம் ஈரம்கண்டு காலமாச்சே! நீ
    கட்டித் தழுவினால் கவலை போச்சே!

    26.09.17 / செவ்வாய்

    Share
  • பறவையின் மனசு..!

    பெருவை பார்த்தசாரதி

     

    கற்றால்தான் உலகுபயன் மிகுமென்பதை மக்களும்..

    ……….கற்றபின்தான் உணர்ந்தறிய முடிகிறது.!…ஆனால்

    கற்காமலேயுலகில் வாழுமரிய உயிரினங்கள் பலவும்..

    ……….கற்றவருக்கு தன்செயலால் மேலும்கற்க வைக்கிறது.!

     

    பரந்துதிரியும் பறவைமனசை ஆராய்ந்து பார்த்தால்..

    ……….பாடம்பல சொல்லுமது…ஆறறிவுபெற்ற மனிதனுக்கே.!

    பரபரப்பான இயற்கைச் சூழலில் அழகுகொஞ்சும்..

    ……….பறவைக் கூட்டத்தைக் கண்டால்மனம் அமைதியுறும்.!

     

    பெற்றவள் ஒருவளிருக்க மற்றொரு பறவையதற்கு..

    ……….பெருமையுடன் உணவீந்தும் உயர்ந்த குணமுண்டு.!

    வேற்றுமை நிறமிலிருப்பினுமது ஒற்றுமையாகக் கூடிப்..

    ……….பற்றுடன் வாழ்வதற்கு பறவையெங்கே கற்றனவோ.!

     

    பகுத்துண்ணும் குணம்கொண்ட பறவையைப் பார்த்து..

    ……….படித்த மாந்தர்கள் கற்கவேண்டியது பலவுண்டாமதை..

    தொகுத்துப் பார்க்கின் புரியாதபல ஆச்சரியங்களதில்..

    ……….தொக்கி நிற்குமது மனிதனுக்குச் சாத்தியமில்லையாம்.!

     

    உச்சாணி மரக்கிளையிலோரம் ஒடிந்துவிழும் நிலையில்..

    ……….உறுதியுடன் தொங்கியாடும் தூக்கணாங் குருவிக்கூடும்.!

    பச்சிலையைச்சேர்த்து பசையிலாமலே இலைக்கூட்டை..

    ……….பசுஞ்சிட்டால் கட்டுமாற்றலு மிவைநமக்குச் சாத்தியமா.?

     

    உண்ணாமல் வெகுதூரம் பறக்கும் தன்னினத்துடன்சேர..

    ……….ஓராயிரம் மைல்கடக்கு மபாரசக்தி அதனிடமுண்டு.!

    உண்ணத்துடிக்கும் தன்குஞ்சுகளுக்கு ஓயாமல் இரை..

    ……….ஊட்ட உண்டதையுமிழ்ந்து தரும் பெரியமனசுண்டு.!

     

    பறவைத்தேடல் என்பதொரு வாழ்க்கைத் தேடலாகுமாம்..

    ……….பிரபஞ்சத்தில் பிரமிக்குமொரு படைப்பே பறவையினம்.!

    பறவைமனசு மிகப்பரந்த மனசாக அமைந்ததினாலந்தப்..

    ……….பறவையைத்தன் வாகனமாகக் கொண்டானோ இறைவன்.!

     

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 4

    -மேகலா இராமமூர்த்தி

    ”நாளை எங்குச் சந்திக்கலாம்?” என்று ஒவ்வொருநாளும் விடைபெறுமுன் தலைவியையும் அவளுயிரன்ன தோழியையும் தவறாது கேட்பது தலைவனின் வழக்கம். அவ்வாறே அன்றும் வினவினான்.

    அதற்குத் தோழி பதிலுரைக்கலானாள்…

    ”அன்ப! எம் ஊருக்கு அணித்தே பொய்கையொன்று உண்டு; அதனருகே ஓடுகின்றது ஒரு காட்டாறு; அக்காட்டாற்றுக்கு அருகே அமைந்துள்ளது அழகிய பூம்பொழிலொன்று. இரைதேரும் குருகுகளன்றி அப்பகுதி நாடி வேறாரும் வாரார். எம் கூந்தலை அலசுதற்கு வேண்டிய எருமண்ணைக் (களிமண்/ வண்டல்மண்) கொணர்வதற்காகத் தலைவியும் நானும் ஆண்டு வருவோம். நீவிர் அங்குவந்தால் தலைவியைச் சந்தித்து அளவளாவலாம்” என்று காதலரின் நாளைய சந்திப்புக்கு ஏற்றதோர் இடத்தைச் சொன்னாள்.

    பெண்கள் எண்ணெய்க் குளியலின்போது தம் கூந்தலில் தேய்த்துள்ள எண்ணெயின் பிசுக்கைப் போக்குதற்கு அற்றை நாளில் களிமண்ணை (இன்று சிகைக்காய் அல்லது ஷாம்பு பயன்படுத்துவதுபோல்) பயன்படுத்தியுள்ளமை இதன்மூலம் அறியக் கிடைக்கின்றது. இற்றை நாளிலும் இவ்வழக்கம் சில கிராமப்புறப் பெண்களிடம் இருத்தல் கூடும். இஃது ஆய்தற்குரியது.

    ஊர்க்கும்  அணித்தே  பொய்கை  பொய்கைக்குச்
    சேய்த்தும்  அன்றே  சிறுகான்  யாறே
    இரைதேர்  வெண்குரு  கல்ல  தியாவதும்
    துன்னல்போ கின்றாற்  பொழிலே  யாமெம்
    கூழைக்  கெருமண்  கொணர்கஞ்  சேறும்
    ஆண்டும்  வருகுவள்  பெரும்பே  தையே.  (குறுந்: 113 – மா(தி)தீரத்தன்)

    தோழியின் விருப்பப்படியே மறுநாள் பகற்போதில் எழிலார் பொழிலின்கண் தலைவனும் தலைவியும் சந்தித்தனர். தலைவியின் நெடுங்கூந்தலின் நறுமணம் தலைவனைச் சுண்டியிழுத்தது. ”மலரினும் நறியவோ உன் கூந்தல்…சொல் அரிவையே!” என்று கேட்டான்.

    “யானறியேன் அன்பரே! மலர்கள்தோறும் தேனைத் தேடியுண்ணும் தும்பியொன்று இதோ… நம்மருகே சிறகுவிரித்துப் பறக்கிறது பாருங்கள்! அதனிடம் உங்கள் ஐயத்தைக் கேளுங்கள்!” என்றாள் தலைவி வேடிக்கையாக.

    ”அப்படியா…இதோ கேட்டுவிடுகின்றேன்” என்று நகைத்த தலைவன், தும்பி ஒன்றைத் தன் கையில் ஏந்தி, “பூந்தாதைத் தேர்ந்துண்ணும் எழிற் சிறகமைந்த தும்பியே! நீ என் நிலத்தைச் சேர்ந்த வண்டாகையால் எனக்கு விருப்பமானதை உரைக்கவேண்டும் என எண்ணாது, உண்மையை உரை! என்னொடு கெழுமிய நட்புடைhoneybee இவ்வரிவை கூந்தல் மணத்தினும் மிக்க மணமுடை மலர்கள் இந்நானிலத்தில் உண்டோ நவில்!” என்று கேட்டான். தும்பியொடு தலைவன் நிகழ்த்திக்கொண்டிருக்கும் உரையாடல் கண்ட தலைவி நகையாடி அதனை இரசித்தாள்.

    கொங்குதேர்  வாழ்க்கை  அஞ்சிறைத்  தும்பி
    காமம்  செப்பாது  கண்டது  மொழிமோ
    பயிலியது  கெழீஇய  நட்பின்   மயிலியல்
    செறியெயிற்  றரிவை  கூந்தலின்
    நறியவும்  உளவோ  நீயறியும்  பூவே.   (குறுந்: 2 – இறையனார்)

    இப்பாடலைத் தருமி எனும் பிரமசாரிக்குப் பாண்டிய மன்னனிடம் பொற்கிழி பெற்றுத்தருவதற்காக ’ஆலவாய் இறையனார்’ பாடியதாய்த் ’தமிழ் நாவலர் சரிதை’ எனும் நூல் புகல்கின்றது. இதே கருத்தையே திருவிளையாடற்புராணம், கடம்பவன புராணம் போன்ற பின்னாளைய சைவசமயப் புராண நூல்களும் வழிமொழிகின்றன.

    தலைவன், ’தலைவியின் நலம் பாராட்டல்’ என்ற அடிப்படையிலேயே இப்பாடல் குறுந்தொகையில் அமைந்துள்ளது. கடவுட் கதைகள் ஏதும் இதனோடு இணைத்துச் சொல்லப்படவில்லை என்பதை அறிக. எனவே, இறையனார் எனும் பெயரிய மானுடப் புலவர் ஒருவர் இயற்றிய பாடலை, ’இறையனார்’ எனும் பெயர்கண்டு இஃது இறைவனே பாடியது என்று மக்கள் எண்ணியதன் விளைவாய் இத்தகு புராணக் கதைகள் பின்னர்த் தோற்றம் பெற்றிருத்தல் கூடும் என்று நினையவேண்டியுள்ளது.

    இப்பாடலில் தும்பியொடு தலைவன் நிகழ்த்திய நயமான உரையாடல் பிற்றைநாளைய புலவோர் உள்ளத்தையும் வெகுவாய்க் கவர்ந்திருக்க வேண்டும். ஆதலால்தான் இப்பாடலை அடியொற்றி வேறுசில பாடல்களும் எழுதப்பட்டிருக்கின்றன என எண்ணுகிறேன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று நம்மாழ்வாரின் பின்வரும் திருவிருத்தப் பாசுரம்.

    வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ
    உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம் ஏனமொன்றாய்
    மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
    விண்டுகள் வாரும் மலருள வோநுல் வியலிடத்தே.
    (திவ். பிரபந்தம் – திருவிருத்தம் – 55)

    தலைவனையும் தலைவியையும் பொழிலிடத்து விட்டுவந்தோமே…அவர்களை இப்போது கவனிப்போம்!

    தன் செயல்கண்டு நகையாடிய தலைவியின் சிரிப்பில் தலைவனும் இணைய, காதலரின் சிரிப்பொலி கேட்டுச் சோலை மரங்களிலிருந்த பறவைகளும் ஆரவார ஒலியெழுப்பி அவர்கள் மகிழ்ச்சியில் தாமும் பங்குகொண்டன.

    அப்போது பதற்றமாய்ப் பொழிலுக்குள் நுழைந்தாள் தோழி. அதுகண்ட தலைவி, ”என்னவாயிற்று… ஏனிந்தப் பதற்றம்?” என்றாள் மிரட்சியோடு.

    ”அதை ஏன் கேட்கிறாய்? சோதனையாய் இன்றுபார்த்து நம் அண்டைவீட்டுப் பெண்கள் பலரும் இந்தப் பொய்கைக் கரைக்கு எருமண் எடுக்க வந்துவிட்டனர். கரையோரம் நின்றிருந்த எனைப் பார்த்து,

    “நீ ஏன் இங்கே தனியே நிற்கிறாய்? உன் ஆருயிர்த்தோழியான தலைவி எங்கே?” என்று கேள்விக் கணைகளால் என்னைத் துளைத்தெடுத்துவிட்டனர். அவர்கள் நம்புகின்ற வகையில் விடைசொல்லித் தப்பிவருவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது” என்று பெருமூச்செறிந்தாள் தோழி.

    தலைவி அவளைக் கவலையோடு பார்த்திருக்க, தொடர்ந்த தோழி, “இனியும் இந்தப் பொழில் உங்கள் சந்திப்புக்கு உகந்ததன்று. இவ்விடம்  மட்டுமன்று…இப்பகுதியிலுள்ள எவ்விடமுமே பகற்குறிக்கு உகந்ததன்று. ஆம், பகற்பொழுதில் திகிரிக்குப் போட்டியாய்த் திரிந்துகொண்டிருக்கும் நம்மூர் மக்களின் கழுகுக் கண்களிலிருந்து காதலர் நீங்கள் தப்பவே முடியாது” என்று கூறிநிறுத்தினாள்.

    தலைவி விக்கித்து நின்றாள்.

    ”அப்படியானால் இதற்கு என்னதான் தீர்வு? என் உடம்பொடு உயிரிடையன்ன தலைவியைக் காணாது நான் இருப்பது எவ்வாறு?” என்றான் தலைவன் வேதனை மீதூர.

    தோழி சற்று யோசித்துவிட்டு, ”இதற்கு ஒரு வழியிருக்கின்றது என்று கூறவும், தலைவனும் தலைவியும் ஏககாலத்தில் ”என்ன வழி?” என்றனர் பரபரப்போடு.

    ”பகலில்தானே நீங்கள் சந்திக்க இயலாது; இரவில் சந்திக்கலாமே! என்றாள்.

    தலைவியின் நிலவு முகத்தை மறைத்திருந்த கவலை மேகம் மெல்ல விலக, அவள் பவளச் செவ்வாயிலிருந்த முத்துப் பல்வரிசை பளீரிட்டது.

    “அப்படியானால் நானும் தலைவியும் நாளைமுதல் இரவில் சந்திக்கப் போகிறோமா? என்றான் தலைவன் உற்சாகமாக.

    ”ஆம்” – தோழி.

    ”எங்கே?” – தலைவன்.

    “நண்ப! தாழை பொருந்திய வளைந்த கழியானது இழுமென ஒலிக்கும் பெருங்கடலை வேலியாகவுடைய எம் சிறிய நல்லூரிலே, பொன்னணி புனைந்து கொடுஞ்சியொடு பொலியும் உம் நெடுந்தேரை (மலையொத்த) உயர்ந்த மணல்மேட்டிலே நிறுத்திவிட்டு, அதனருகே சற்றே இளைப்பாறி, தழையுடை அணிந்த இவ்வேந்திழையின் தனிமைத் துயர்தீர இவளோடு இனிதாய்த் தங்குவீர்” என்று இரவுக்குறிக்கான (இரவுநேரச் சந்திப்பு) இடத்தை உரைத்து அவனுக்கு விடைகொடுத்தாள் தோழி.

    இழையணிந்  தியல்வருங்  கொடுஞ்சி  நெடுந்தேர்
    வரைமருள்  நெடுமணல்  தவிர்த்துநின்  றசைஇத்
    தங்கினி  ராயின்  தவறோ  தகைய
    தழைதாழ் அல்குல்  இவள்புலம்  பகலத்
    தாழை தைஇய  தயங்குதிரைக்  கொடுங்கழி
    இழுமென  ஒலிக்கும்  ஆங்கண்
    பெருநீர்  வேலியெஞ்  சிறுநல்  லூரே.  (குறுந்: 345 – அண்டர்மகன் குறுவழுதியார்)

    விண்ணோடும் முகிலோடும் வெண்ணிலவு விளையாடும் நல்லிரவு நேரத்தில் பெண்ணிலவைச் சந்திப்பது தனக்கு இனியதோர் அனுபவமாக இருக்கும் என்றெண்ணி உவந்தபடி, தேரைத் தன் ஊர்நோக்கித் திருப்பினான் தலைவன்!

    [தொடரும்]

     

    Share
  • நவராத்திரி நாயகியர் (9)

    க. பாலசுப்பிரமணியன்

    சரஸ்வதி தேவி

    images (2)

    வெள்ளைத்தாமரை விரித்து விடியும்வரை காத்திருப்பேன்

    வீணையினைக் கையிலேந்தி விரைவாக வருவாயே

    கரையில்லாக் கலைகளைக் கைகளில் எடுத்துவந்தே

    தடையின்றித் தந்திடுவாய் தலைமகளே கலைமகளே !

     

    அசைகின்ற இதழ்களிலே உயிரூட்டும் மொழியனாய்

    அமுதான முத்தமிழில் அனுதினமும் இசையானாய்

    அழகான கவிதையிலே கற்பனையின் கருவானாய்

    அருளூற்றே! அலைபாயும் உள்ளத்தில் அமைதியானாய் !

     

    நரம்பெல்லாம் நான்மீட்டி நாதங்கள் எழுப்பிடுவேன்

    தசையெல்லாம் தாளமிட நின்நினைவே நடனமிட

    இருளெல்லாம் நீக்கிடவே எழுந்தருள்வாய் எழிலரசி

    இசையோடு மலர்தூவி இமைவிழித்துக் காத்திருப்பேன் !

     

    குரல்வேண்டும் வளம்வேண்டும் குறைவில்லா மதிவேண்டும்

    குலம்போற்றும் அறம்காக்க மறைசொன்ன மனம்வேண்டும்

    நான்முகனின் படைப்பினிலே நாலோடுஒன்றாக நானின்றி

    நாள்தோறும் உனைப்போற்றும் நல்லறிவு நீதரவேண்டும்  !

     

    எழுபிறப்பும் உன்னருளால் உயிரினங்கள் உயர்ந்திடவே

    எழுத்தறிவுக்கும் ஆசானாய் இனியதொழில் செய்யவேண்டும் !

    மடமைகள் மறைந்திடவே மாதங்கி அருளவேண்டும்

    மறக்காமல் உன்நினைவில்  உளம்மறந்து வாழவேண்டும் !

     

    விடையமர்ந்த மலைமகளோடும் வேங்கடத்தான் திருமகளோடும்

    நான்முகனின் நாவமர்ந்து நல்லவளே நீவருவாய் !

    விண்ணமர்ந்த வானவரின் வாழ்த்துக்கள் சேர்த்திடுவாய்

    மண்வாழும்  மாந்தருக்கே மகிழ்வுடனே  தந்திடுவாய் !

     

     

     

     

     

    Share
  • கீழடியில் தமிழர் தொன்மம்

    – நிலவளம் கு.கதிரவன்

        ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பார்கள். மிக சமீபத்தில் எனது நகரம் சார்ந்த தமிழ் அமைப்பின் செயற்குழுவில் கலந்துகொண்டபோது இவ்விடயம் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். ஆதாரமாக 02.02.1835-ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மெக்காலே ஆற்றிய உரையை மேற்கோளாகக் கூறினேன்.  மெக்காலே இப்படி பேசியிருந்தார். ”இந்தியா வளமான நாடு. தார்மீக மதிப்பும், சிறப்பும் கொண்ட அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கை, கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் முதுகெலும்பை முறித்தாலன்றி அந்த நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என நான் நினைக்கவில்லை”. பிறகு பேச்சு கீழடி அகழாய்வு தொடர்பில் சென்றது.

          தமிழர்களின் தொன்மையையும், நகரிய வாழ்க்கை முறையையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வண்ணம் கீழடி அகழாய்வில் அரிய சான்றுகள் கிடைத்து வருவது தமிழராகிய நாமெல்லாம் கர்வமும், பெருமையும் அடையக் கூடிய ஒன்றாகும்.  இத்தகைய பெருமையில் நாம் தொடர்ந்து திளைப்போமா என்பது ஆய்வு தொடர்ந்து நடைபெறுவதில்தான் உள்ளது.

           சிவகங்கை மாவட்டம் கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்டு மத்தியத் தொல்லியல் துறை உதவியுடன் அகழாய்வு தொடங்கப்பட்டது.  தொடங்கப்பட்ட சில நாட்களிலிலேயே, கி.மு.3-ம் நுற்றாண்டு தொடங்கி கி.பி.10ஆம் நுற்றாண்டு வரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதற்கான தடயங்கள் ஆய்வில் கிடைத்துள்ளன.  இதுவரை 5300 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.  அதில் தமிழ்பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள், தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள், பாசன வாய்க்கால்கள், ஆப்கானிஸ்தான் கலைப் பொருட்கள், வட மாநில முத்து மணிகள் குறிப்பிடத் தகுந்தவையாகும்.இவையெல்லாம் அன்றே பெரு வணிகம் நடந்ததற்கான சாட்சியாகும்.

           இதன் மூலம் சிந்துசமவெளி நாகரிகம் மட்டுமே நகர நாகரிகம் என்பது புறந்தள்ளப்பட்டு, சங்க காலத்திலேயே தமிழன் நகர நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறான் என்பது புலனாகிறது.

           முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி அவர்கள்,  ”கீழடி ஆய்வின் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள்  கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.  சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல் இங்கும் நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.  இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது.  புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன” என்று ஏற்கெனவே கூறியுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

                       தவிரவும் தமிழர் தொல்லியல் வரலாற்றில் அதிகமான செங்கல் கட்டடங்கள் உள்ளதும் கீழடியில்தான். செங்கற்களைக் கொண்டு நுட்பமான முறையில் திறந்தநிலைக் கால்வாய், மேற்புறம் செங்கற்கள் கொண்டு மூடப்பட்ட கால்வாய், சுடுமண் உருளைகள் கொண்டு அமைக்கப்பட்ட கால்வாய் என வெவ்வேறு கோணங்களில் இருந்து ஓரிடத்தில் வந்து சேரும்படியான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டிருந்தது, சங்ககாலத்தில் தமிழர்களின் அறிவியல் மேன்மையை புலப்படுத்துகிறது.

              இவை மட்டுமின்றி, கிடைக்கப் பெற்ற தொல் பொருட்களில் வேந்தன், திசயன், இயணன், சேந்தன், அவதி முதலிய சொற்களும், ”வணிகப் பெருமூவர்” என்று குறிப்பிட்ட ( சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரே வணிகப் பெருமூவர்) ஆதாரங்களும் கிடைத்ததின் வழியாகச் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட பெயர்களோடு இவை பொருந்திப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

               மேலும் தமிழறிஞர் ம.ராசமாணிக்கனார் தனது நீண்ட சங்க இலக்கிய ஆராய்ச்சியில், சங்ககால மதுரை தற்போதைய மதுரை இல்லை என்றும், அது திருபுவனத்திற்கு மேற்காகவும், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்காகவும் அமைந்திருக்கக் கூடும் எனக் கூறினார்.  தற்போதைய கீழடி அகழாய்வும் அதை உறுதிப்படுத்தும் வண்ணமே உள்ளது.

                110 ஏக்கர் கொண்ட கீழடியின் மொத்த அகழாய்வு இடத்தில் 50 சென்ட் இடத்தில் மட்டுமே தற்பொழுது இரண்டு கட்டங்களாக ஆய்வுகள் நடைபெற்று நிறைவுபெறும் நிலையில் உள்ளது.  மூன்றாம் கட்ட அகழாய்வு தொடர்ந்து நடைபெறுமா? என்ற ஐயம் கல்வியாளர்கள், தொல்லியல் வல்லுநர்கள், வரலாற்றாய்வாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.  இது தவிர, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் வழக்கமாகக் கொண்டு செல்லப்படும் மைசூர் அருங்காட்சியகத்திற்கே கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படிச் சென்றால் ஆதிச்சநல்லூர் ஆய்வுக்குக் கிடைத்த கதிதான் கீழடிக்கும் ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

     ஏற்பட்டுள்ள ஐயங்களையும், அச்சங்களையும் போக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.  தமிழர்களின் தொன்மை நாகரிகத்தைக் கண்டெடுத்து, உலகிற்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமது தமிழக அரசிற்குக் கூடுதலாக உள்ளது.  எனவே கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை அருங்காட்சியகம் அமைத்துப் பராமரிக்க ஏதுவாக மாநில அரசு உறுதியளித்தது போல் உடனடியாக 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்.  தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி உடனடியாக அறிக்கை வெளியிட ஆவனசெய்து தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உறுதி செய்ய வேண்டும்.  இதுவே அனைத்துத் துறை வல்லுநர்களின் எதிர்பார்ப்பாகும்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    புத்தாண்டு அன்று பத்மாவதித் தாயார்(திருச்சானூர்) தரிசனம்….கீழ் திருப்பதியில் நாடகம்….தாயார் சந்நிதியில் தோன்றிய வெண்பா….

    170926 Padmavathi - Devi series 07 - lr

    “மலைமேல் மால்மணாளர் மேவிட, மங்கா,
    அலமேல் அடிவாரம் ஆள்வோய், -கலைமேவி,
    நாடக பாக்கியத்தை, நாங்கள் அடைந்திட,
    ஆடகச்செம் பொன்னே அருள்”….!
    “உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
    பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
    மாலின் மரகத மார்பில்பத் மாவதி
    பாலின் நிறத்தில் பொலிவு”….!
    “சீதையாய் ராமன்பின் சென்றளித் தாள்ஜெயத்தை
    கோதையாய் கோவிந்தன் கைப்பிடித்தாள்-ராதை
    யாகி ரசித்தாள் யதுகுலக் கண்ணனை
    பாகிபத்மா பாதாம் புஜம்”….கிரேசி மோகன்….!

    Share
  • நவராத்திரி (8)

    இசைக்கவி ரமணன்

     

    hqdefault

    நீ கானம் நீ மோனம் நீயே மெளனம்

    நீ தென்றல் நீ சூறை நீயே
    அமைதி

    தேவை தருவதும் நீ
    அதைத்
    தீர்த்து வைப்பதும் நீ
    ஆசை தருவதும் நீ
    மிக மிக
    அலைய வைப்பதும் நீ

    தேவை யாவும் தீர்ந்த பின்னும்
    தேட வைப்பது நீ

    யாவும் ஒன்றென அறிந்திடும் வரை
    எதிரில் இருந்தும் ஏங்க வைப்பது நீ

    கன்னல் பிழிந்தே சாறு தருவாய்

    காற்றைப் பிழிந்தே மாரி பொழிவாய்

    மின்னல் பிழிந்தே சொல்லை எடுப்பாய்

    உருவைப் பிழிந்தே அருவைத் தருவாய்

    என்னைப் பிழிந்தாய் என்னவோ!
    அது
    உன்னைப் பார்த்திடும் எண்ணமோ!

    உன்னில் நானும் என்னில் நீயும்
    என்றும் ஒன்றாய் நின்ற துன்னருள் (நீ)

    25.09.2017 / திங்கள் 

     

    Share
  • இவ்வார வல்லமையாளர் (241)

    இவ்வார வல்லமையாளராக மலேசியாவை சேர்ந்த கமலநாதன் அவர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    தேனி எனும் புனைபெயரில் தமிழ் மீதும் சைவம் மீதும் ஒப்பற்ற அன்புகொண்டு எழுதிவரும் பெருந்தகையாளர் திரு கமலநாதன். இவர் திருக்குறளுக்கு சைவ சித்தாந்தம் சார்ந்து எழுதும் விளக்கவுரைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் நில்லாது சைவசித்தாந்த கருத்துக்களை குறள் சார்ந்த பொருளில் அறியவும் வழி வகுக்கிறது.

    இதற்கு ஒரு சான்றாக திருக்குறளில் உள்ள அறவாழி அந்தணன் எனும் குறளுக்கு இவர் தரும் பொழிப்புரையை காண்போம்.

    திருக்குறளில் “அறவாழி அந்தணன்”

    சைவம் கூறுவதென்ன?

    பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
    மறவா அருள்தந்த மாதவன் நந்தி
    அறவாழி யந்தணன் ஆதி பராபரன்
    உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.(10:7௯-திருவருள் வைப்பு- பாடல் 10)

    முதுமுனைவர் சி. அருனை வடிவேலு அவர்களின் பொழிப்புரையும் குறிப்புரையும் – தருமை ஆதின திருமுறை விளக்கவுரை நூல்.

    பொழிப்புரை:

    சிவபெருமான் எனக்கு இனிப் பிறவா நெறியை அளித்த பெருங்கருணையை உடையவன். அதன்பின்னும் தன்னை யான் மறவாதிருக்கும்படியும் அருள்புரிந்தான். தவக்கோலத்தைப் பூண்டவன். அறக்கடலாய் அழகிய தட்பத்தையும் உடையவன். தனக்கொரு முதல் இன்றித்தானே எல்லாவற்றிற்கும் முதலானவன். எல்லாவற்றிற்கும் மேலொடு கீழாய் விரிந்தவன் ல் அத்தகையோன் தானே எனது உள்ளத்தைத் தகவு செய்து அதனுட் புகுந்தான்

    குறிப்புரை:

    `எனவே, இப்பயனை விரும்புவோர் யாவரும் அவனையே உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பு. “நந்தி“, என்பதை முதலிற் கூட்டியுரைக்க. மறந்தவழிக் கன்மமும், மாயையும் அற்றம் பார்த்து வந்து அடுத்தல் மறவாதவாறு அருள் செய்வானாயினான்.

    “மாதவன்“ என்பதற்கு, `மங்கை பங்காளன்` என்று உரைத்தலும் ஆம் `பெண்ணாகிய பெருமான்`3 என்று அருளிச் செய்தது காண்க. `இஃது அவன் பேரருளாளன் ஆதலைக் குறிக்கும் குறிப்பு` என்பது கருத்து.

    “இறைவனாவான் அறவாழி அந்தணன்“ 8 என்னும் மறை மொழிக்கு இலக்கியமாய் உள்ளவன் என்பதுணர்த்தற்கு அம் மொழியைக் கொண்டு கூறினார். இதன் பொருள் விளக்கம் இதன் உரையிற் காண்க. பரன் – மேலே உள்ளவன்; அபரன் – கீழே உள்ளவன்.
    இதனால், `திருவருள்` எனப்படுவது சிவனது அருளே என்பது தெரித்துணர்த்தப்பட்டது. பிறரது அருளைத் திருவருளாக மயக்கி எய்த்திடாமை இதனது பயன் என்க.

    —

    தமிழ் மற்றும் சைவம் மேல் பக்தி பூண்டுள்ள கமலநாதன் அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இவரை போலவே தமிழ்ச்சித்தாந்த நூல்களை வாசித்து பொருள்காணும் வல்லமை தமிழ் இளைஞர்களுக்கு வர இந்த தேர்வு உதவும் என வல்லமை நம்புகிறது

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • நவராத்திரி நாயகியர் (8)

    க. பாலசுப்பிரமணியன்

     

    அஷ்ட லட்சுமியர்

    ashtalakshmi-QM21_l

     

     கண்ணனின் காதலியே கருணையின் புன்சிரிப்பே

    கற்பனையின் முதலசைவே கதிரின் முதலொளியே

    கலைகளின் முதலெழுத்தே கருவின் முதல்மூச்சே

    காலத்தின் கண்விழிப்பே காத்தருள்வாய் ஆதிலட்சுமி !

     

    சிதறாத கவனத்தைச் சிந்தையில் தந்து

    உறங்காத உள்ளத்தில் உழைப்பை5த் தந்து

    வீழ்ந்தாலும் எழுகின்ற உறுதியைத் தந்து

    வெற்றிக்கு வழிகாட்டும் விஜயலட்சுமியே !

     

    தருமத்தைக் காக்க நெருப்பாக எழுகின்ற

    துணிவான தோள்களுக்குத்  துணையாக நின்று

    மலைக்கின்ற நேரத்தில்  மலையான தைரியத்தை

    மடைவெள்ளமெனத் தருகின்ற தைரியலட்சுமியே !

     

    மண்ணும் செல்வமே மழையும் செல்வமே

    மலரும் மணமும் பயிரும் உயிரும்

    மதியும் அறிவும் உழைப்பும் உயர்வும்

    மகிழ்வும் தருவாள் செல்வமாய் தனலட்சுமி !

     

    தான்படைத்த உயிர்கள் தரணியிலே தழைத்திடவே

    நெல்லொடு கம்பும் நிலமெல்லாம் தானியமும்

    பாலோடு பழமும் பருப்பும் பல்வகைக்கனியும்

    தடையின்றித் தருபவளே தாயே தான்யலட்சுமி

     

    தாய்மைக்கு நிகரில்லை தாயுள்ளம் ஈடில்லை

    தரணியிலே திருக்கோயில் கருவறையில் கொண்டவளே

    பூவுக்கும் புழுவுக்கும் தாய்மையினைத் தந்தவளே

    சந்ததியைத் தந்தருளும் சக்தியே சந்தானலட்சுமியே

     

    கரையறியா விண்ணொளியை கற்பனையாய்த்  தருபவளே

    கலையெல்லாம் கண்விழியில் கருணையாய்க் கொண்டவளே

    மதிகொண்ட இருள்நீக்க எண்ணெழுத்தில் இனிப்பவளே !

    விதிவெல்ல மதிதேடும் வித்தையே வித்யாலட்சுமியே !

     

    கரியோடு அரியும் கணக்கில்லா கால்நடைகள்

    கடலுள்ள உயிரினங்கள் பறக்கின்ற புள்ளினங்கள்

    மண்ணுள்ளே மறைந்திட்ட எண்ணில்லா உறவெல்லாம்

    கண்ணின்று காக்கின்ற கருணையே கஜலட்சுமியே !

     

    வடிவங்கள் பலகொண்டு வற்றாத நதியாய்

    அகிலங்கள் காக்கும் அழிவில்லா அருளூற்றே

    பருவங்கள் அனைத்திலுமே பரந்தாமன் துணையோடு

    பசிதீர்க்க வருவாயே பாராளும் பெருந்தேவி !

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (28)

     எத்தவம் சிறந்தது ?

    துறவு பூண்டு இமயத்தில் இருந்து இறைவனை ஆராதித்துக்கொண்டிருந்த ஒரு முனிவருக்கு சில சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு சீடன் தன்னுடைய குருவை அணுகி “குருவே, பல ஆண்டுகள் தவம் செய்து நீங்கள் பல விதமான திறமைகளை அடைந்திருக்கின்றீர்கள். இவற்றில் சிலவற்றையாவது தாங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தால் மிகப் பேறுபெற்றவனாக இருப்பேன்.” என்றான்.

    அவனைப் பார்த்து சிரித்த குருவோ ‘நீ முதலில் தன்னை வென்றுகொள் ” என்று சூசகமாக சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார், இதனால் கோபமடைந்த சீடனோ அந்த குருவிடம் சொல்லாமல் மலையின் இன்னொரு பகுதியில் வாழும் மற்றொரு துறவியிடம் புகலடைந்தான். சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவன் தன்னுடைய முதல் குருவிடம் தான் கற்ற கலைகளைக் காட்டி பெருமிதம் கொள்வதற்காகத் திரும்பி வந்தான். அவனை வரவேற்ற குருவிடம் தன் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் “குருவே. உங்களால் செய்ய முடியாததை என்னால் செய்ய முடியும்” என்று சொல்ல புன்முறுவலுடன் குருவும் “அப்படியா, மிகவும் மகிழ்ச்சி. அப்படி என்ன செய்யப் போகின்றாய்?” என வினவினார்.

    அவன் “இதோ என் வாயைத் திறந்தேனென்றால் ஏன் நாவிலிருந்து தீப்பொறிகள் பறக்கும்” என்றான். “மிகவும் மகிழ்ச்சி. ஆனால் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள உனக்கு எவ்வளவு காலம் பிடித்தது ?” எனக் கேட்டார்

    அவனோ பெருமிதத்தட்டுடன் :”இதைக் கற்றுக்கொள்ள இருபது ஆண்டுகள் ஆயிற்று” என பதிலளிக்க குருவோ “மூடனே, பத்து வினாடிகளில் தீக்குச்சியால் கொணரக்கூடிய நெருப்பைத் தோற்றுவிக்க உனது இருபது ஆண்டுகளை வீணடித்து விட்டாயே” என்று சொன்னார்.

    இது போல்தான். நம்மில் பலரும் ஒளிப்பிழம்பாக உள்ளே நின்று நம் வாழ்வை வளப்படுத்திக்கொண்டிருக்கும் இறைவனை அறிந்து கொள்ளாமல் இங்கும் அங்கும் அவனைத் தேடி, எந்த முறையில் பிரார்த்தனை செய்தால் நமக்கு அவன் கிடைப்பான், எந்தத் தவம் சிறந்தது என்று அலைந்து கொண்டிருக்கின்றோம். இதற்குத் தெளிவு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் இந்தப் பாடல்

    இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்

    பித்தரைக் காணின் தருமங்கள் போநந்தி

    எத்தவ மாகிலென் எங்கு பிறக்கிலென்

    ஒத்துணர் வார்க்கு கொல்லையூர் புகலாமே

    எந்த வழியில் நாம் இறைவனை அடைய முயற்சித்தாலும் எப்பொழுது நாம் அவனோடு ‘ஒத்துணர்’ நிலையில் இரண்டறக் கலந்த நிலையில் அபேதமாக இருக்கும்பொழுதுதான் நமக்கு உண்மையான அனுபவம் கிடக்கின்றது.

    இந்த நிலையைத் தேடிய பத்திரகிரியாரும் கூறுகின்றார்

    நானெவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும்

    நீயெனவே சிந்தைதனி னேர்படுவ தெக்காலம்?

    இந்தக் கருத்தையே வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது பட்டினத்தாரின் கீழ்கணட பாடல்

    எட்டுத் திசையும் பதினாறு கோணமு மெங்குமென்றாய்

    முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம்

    கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார்

    பட்டப்  பகலை யிரவென்று கூறிடும் பாதகரே

    என்ன அருமையான கருத்து.! தங்கள் மனதிலும் கருத்திலும் இறைவனை வைக்காமல் எட்டுத் திசைகளும் பதினாறு கோணங்களிலும் இறைவனைத் தேடும் மூடர்களைப் பற்றி என்ன சொல்வது?

    இந்தத் துயரிலிருந்து நாம் எப்படி விடுபட முடியும்? அவனுடன் உறவை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? அவனை மனதுக்குள்  சிறைப்படுத்தி விடலாமா? அதன் பின்பு எப்படி அவனை நம்பால் பற்று வைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் ?

    இதோ விடை கிடைக்கின்றது திருமூலரின் இந்த உன்னதமான உணர்ச்சிமயமான பாடலில்:

    அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்

    என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்

    என்பொன் மணியை இறைவனை ஈசனைத்

    தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.”

    அது மட்டுமா ? திருமூலரின் மனம் என்னவெல்லாம் செய்ய விழைகின்றது?

    சூடுவன் நெஞ்சிடை வைப்பன்  பிரான்என்று

    பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்

    றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று

    நாடுவன்  நானின் றறிவது தானே.

    இந்த ஆனந்த அனுபவத்தை எல்லோராலும் பெற முடியுமா? இறைவனுடன் இப்படிப்பட்ட சொந்தத்தையும் உரிமையையும் எல்லோராலும் எடுத்துக்கொள்ள முடியுமா? இந்த ஆனந்த நிலையிலே திருமூலரைப் போன்று வேறு யாரவது இருந்திருக்கின்றார்களா ?

    உண்மை! இதே ஆனந்த நிலையை வெளிப்படுத்துவது போல் உள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உள்ள கீழ்கண்ட பாடல்

    பாடவேண்டும் நான் போற்றி நின்னையே

    பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு

    ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து

    ஆடும் நின் கழல் போது நாயினேன்

    கூட வேண்டும் நான் போற்றி இப்புழுக்

    கூடு நீக்கு எனைப் போற்றி பொய் எலாம்

    விட வேண்டும் நான் போற்றி வீடு தந்து

    அருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே.

    இப்படிப்பட்ட பரவச நிலைக்கு எல்லா உயிர்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள முடியுமா? இதற்கும் அந்தத் திருவருளின் துணை வேண்டாமா?

    தொடரும்

    Share