க. பாலசுப்பிரமணியன்

 

அஷ்ட லட்சுமியர்

ashtalakshmi-QM21_l

 

 கண்ணனின் காதலியே கருணையின் புன்சிரிப்பே

கற்பனையின் முதலசைவே கதிரின் முதலொளியே

கலைகளின் முதலெழுத்தே கருவின் முதல்மூச்சே

காலத்தின் கண்விழிப்பே காத்தருள்வாய் ஆதிலட்சுமி !

 

சிதறாத கவனத்தைச் சிந்தையில் தந்து

உறங்காத உள்ளத்தில் உழைப்பை5த் தந்து

வீழ்ந்தாலும் எழுகின்ற உறுதியைத் தந்து

வெற்றிக்கு வழிகாட்டும் விஜயலட்சுமியே !

 

தருமத்தைக் காக்க நெருப்பாக எழுகின்ற

துணிவான தோள்களுக்குத்  துணையாக நின்று

மலைக்கின்ற நேரத்தில்  மலையான தைரியத்தை

மடைவெள்ளமெனத் தருகின்ற தைரியலட்சுமியே !

 

மண்ணும் செல்வமே மழையும் செல்வமே

மலரும் மணமும் பயிரும் உயிரும்

மதியும் அறிவும் உழைப்பும் உயர்வும்

மகிழ்வும் தருவாள் செல்வமாய் தனலட்சுமி !

 

தான்படைத்த உயிர்கள் தரணியிலே தழைத்திடவே

நெல்லொடு கம்பும் நிலமெல்லாம் தானியமும்

பாலோடு பழமும் பருப்பும் பல்வகைக்கனியும்

தடையின்றித் தருபவளே தாயே தான்யலட்சுமி

 

தாய்மைக்கு நிகரில்லை தாயுள்ளம் ஈடில்லை

தரணியிலே திருக்கோயில் கருவறையில் கொண்டவளே

பூவுக்கும் புழுவுக்கும் தாய்மையினைத் தந்தவளே

சந்ததியைத் தந்தருளும் சக்தியே சந்தானலட்சுமியே

 

கரையறியா விண்ணொளியை கற்பனையாய்த்  தருபவளே

கலையெல்லாம் கண்விழியில் கருணையாய்க் கொண்டவளே

மதிகொண்ட இருள்நீக்க எண்ணெழுத்தில் இனிப்பவளே !

விதிவெல்ல மதிதேடும் வித்தையே வித்யாலட்சுமியே !

 

கரியோடு அரியும் கணக்கில்லா கால்நடைகள்

கடலுள்ள உயிரினங்கள் பறக்கின்ற புள்ளினங்கள்

மண்ணுள்ளே மறைந்திட்ட எண்ணில்லா உறவெல்லாம்

கண்ணின்று காக்கின்ற கருணையே கஜலட்சுமியே !

 

வடிவங்கள் பலகொண்டு வற்றாத நதியாய்

அகிலங்கள் காக்கும் அழிவில்லா அருளூற்றே

பருவங்கள் அனைத்திலுமே பரந்தாமன் துணையோடு

பசிதீர்க்க வருவாயே பாராளும் பெருந்தேவி !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.