எத்தவம் சிறந்தது ?

துறவு பூண்டு இமயத்தில் இருந்து இறைவனை ஆராதித்துக்கொண்டிருந்த ஒரு முனிவருக்கு சில சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு சீடன் தன்னுடைய குருவை அணுகி “குருவே, பல ஆண்டுகள் தவம் செய்து நீங்கள் பல விதமான திறமைகளை அடைந்திருக்கின்றீர்கள். இவற்றில் சிலவற்றையாவது தாங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தால் மிகப் பேறுபெற்றவனாக இருப்பேன்.” என்றான்.

அவனைப் பார்த்து சிரித்த குருவோ ‘நீ முதலில் தன்னை வென்றுகொள் ” என்று சூசகமாக சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார், இதனால் கோபமடைந்த சீடனோ அந்த குருவிடம் சொல்லாமல் மலையின் இன்னொரு பகுதியில் வாழும் மற்றொரு துறவியிடம் புகலடைந்தான். சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவன் தன்னுடைய முதல் குருவிடம் தான் கற்ற கலைகளைக் காட்டி பெருமிதம் கொள்வதற்காகத் திரும்பி வந்தான். அவனை வரவேற்ற குருவிடம் தன் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் “குருவே. உங்களால் செய்ய முடியாததை என்னால் செய்ய முடியும்” என்று சொல்ல புன்முறுவலுடன் குருவும் “அப்படியா, மிகவும் மகிழ்ச்சி. அப்படி என்ன செய்யப் போகின்றாய்?” என வினவினார்.

அவன் “இதோ என் வாயைத் திறந்தேனென்றால் ஏன் நாவிலிருந்து தீப்பொறிகள் பறக்கும்” என்றான். “மிகவும் மகிழ்ச்சி. ஆனால் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள உனக்கு எவ்வளவு காலம் பிடித்தது ?” எனக் கேட்டார்

அவனோ பெருமிதத்தட்டுடன் :”இதைக் கற்றுக்கொள்ள இருபது ஆண்டுகள் ஆயிற்று” என பதிலளிக்க குருவோ “மூடனே, பத்து வினாடிகளில் தீக்குச்சியால் கொணரக்கூடிய நெருப்பைத் தோற்றுவிக்க உனது இருபது ஆண்டுகளை வீணடித்து விட்டாயே” என்று சொன்னார்.

இது போல்தான். நம்மில் பலரும் ஒளிப்பிழம்பாக உள்ளே நின்று நம் வாழ்வை வளப்படுத்திக்கொண்டிருக்கும் இறைவனை அறிந்து கொள்ளாமல் இங்கும் அங்கும் அவனைத் தேடி, எந்த முறையில் பிரார்த்தனை செய்தால் நமக்கு அவன் கிடைப்பான், எந்தத் தவம் சிறந்தது என்று அலைந்து கொண்டிருக்கின்றோம். இதற்குத் தெளிவு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் இந்தப் பாடல்

இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்

பித்தரைக் காணின் தருமங்கள் போநந்தி

எத்தவ மாகிலென் எங்கு பிறக்கிலென்

ஒத்துணர் வார்க்கு கொல்லையூர் புகலாமே

எந்த வழியில் நாம் இறைவனை அடைய முயற்சித்தாலும் எப்பொழுது நாம் அவனோடு ‘ஒத்துணர்’ நிலையில் இரண்டறக் கலந்த நிலையில் அபேதமாக இருக்கும்பொழுதுதான் நமக்கு உண்மையான அனுபவம் கிடக்கின்றது.

இந்த நிலையைத் தேடிய பத்திரகிரியாரும் கூறுகின்றார்

நானெவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும்

நீயெனவே சிந்தைதனி னேர்படுவ தெக்காலம்?

இந்தக் கருத்தையே வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது பட்டினத்தாரின் கீழ்கணட பாடல்

எட்டுத் திசையும் பதினாறு கோணமு மெங்குமென்றாய்

முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம்

கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார்

பட்டப்  பகலை யிரவென்று கூறிடும் பாதகரே

என்ன அருமையான கருத்து.! தங்கள் மனதிலும் கருத்திலும் இறைவனை வைக்காமல் எட்டுத் திசைகளும் பதினாறு கோணங்களிலும் இறைவனைத் தேடும் மூடர்களைப் பற்றி என்ன சொல்வது?

இந்தத் துயரிலிருந்து நாம் எப்படி விடுபட முடியும்? அவனுடன் உறவை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? அவனை மனதுக்குள்  சிறைப்படுத்தி விடலாமா? அதன் பின்பு எப்படி அவனை நம்பால் பற்று வைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் ?

இதோ விடை கிடைக்கின்றது திருமூலரின் இந்த உன்னதமான உணர்ச்சிமயமான பாடலில்:

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்

என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்

என்பொன் மணியை இறைவனை ஈசனைத்

தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.”

அது மட்டுமா ? திருமூலரின் மனம் என்னவெல்லாம் செய்ய விழைகின்றது?

சூடுவன் நெஞ்சிடை வைப்பன்  பிரான்என்று

பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்

றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று

நாடுவன்  நானின் றறிவது தானே.

இந்த ஆனந்த அனுபவத்தை எல்லோராலும் பெற முடியுமா? இறைவனுடன் இப்படிப்பட்ட சொந்தத்தையும் உரிமையையும் எல்லோராலும் எடுத்துக்கொள்ள முடியுமா? இந்த ஆனந்த நிலையிலே திருமூலரைப் போன்று வேறு யாரவது இருந்திருக்கின்றார்களா ?

உண்மை! இதே ஆனந்த நிலையை வெளிப்படுத்துவது போல் உள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உள்ள கீழ்கண்ட பாடல்

பாடவேண்டும் நான் போற்றி நின்னையே

பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு

ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து

ஆடும் நின் கழல் போது நாயினேன்

கூட வேண்டும் நான் போற்றி இப்புழுக்

கூடு நீக்கு எனைப் போற்றி பொய் எலாம்

விட வேண்டும் நான் போற்றி வீடு தந்து

அருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே.

இப்படிப்பட்ட பரவச நிலைக்கு எல்லா உயிர்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள முடியுமா? இதற்கும் அந்தத் திருவருளின் துணை வேண்டாமா?

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *