இவ்வார வல்லமையாளர் (241)
இவ்வார வல்லமையாளராக மலேசியாவை சேர்ந்த கமலநாதன் அவர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
தேனி எனும் புனைபெயரில் தமிழ் மீதும் சைவம் மீதும் ஒப்பற்ற அன்புகொண்டு எழுதிவரும் பெருந்தகையாளர் திரு கமலநாதன். இவர் திருக்குறளுக்கு சைவ சித்தாந்தம் சார்ந்து எழுதும் விளக்கவுரைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் நில்லாது சைவசித்தாந்த கருத்துக்களை குறள் சார்ந்த பொருளில் அறியவும் வழி வகுக்கிறது.
இதற்கு ஒரு சான்றாக திருக்குறளில் உள்ள அறவாழி அந்தணன் எனும் குறளுக்கு இவர் தரும் பொழிப்புரையை காண்போம்.
திருக்குறளில் “அறவாழி அந்தணன்”
சைவம் கூறுவதென்ன?
பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி யந்தணன் ஆதி பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.(10:7௯-திருவருள் வைப்பு- பாடல் 10)
முதுமுனைவர் சி. அருனை வடிவேலு அவர்களின் பொழிப்புரையும் குறிப்புரையும் – தருமை ஆதின திருமுறை விளக்கவுரை நூல்.
பொழிப்புரை:
சிவபெருமான் எனக்கு இனிப் பிறவா நெறியை அளித்த பெருங்கருணையை உடையவன். அதன்பின்னும் தன்னை யான் மறவாதிருக்கும்படியும் அருள்புரிந்தான். தவக்கோலத்தைப் பூண்டவன். அறக்கடலாய் அழகிய தட்பத்தையும் உடையவன். தனக்கொரு முதல் இன்றித்தானே எல்லாவற்றிற்கும் முதலானவன். எல்லாவற்றிற்கும் மேலொடு கீழாய் விரிந்தவன் ல் அத்தகையோன் தானே எனது உள்ளத்தைத் தகவு செய்து அதனுட் புகுந்தான்
குறிப்புரை:
`எனவே, இப்பயனை விரும்புவோர் யாவரும் அவனையே உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பு. “நந்தி“, என்பதை முதலிற் கூட்டியுரைக்க. மறந்தவழிக் கன்மமும், மாயையும் அற்றம் பார்த்து வந்து அடுத்தல் மறவாதவாறு அருள் செய்வானாயினான்.
“மாதவன்“ என்பதற்கு, `மங்கை பங்காளன்` என்று உரைத்தலும் ஆம் `பெண்ணாகிய பெருமான்`3 என்று அருளிச் செய்தது காண்க. `இஃது அவன் பேரருளாளன் ஆதலைக் குறிக்கும் குறிப்பு` என்பது கருத்து.
“இறைவனாவான் அறவாழி அந்தணன்“ 8 என்னும் மறை மொழிக்கு இலக்கியமாய் உள்ளவன் என்பதுணர்த்தற்கு அம் மொழியைக் கொண்டு கூறினார். இதன் பொருள் விளக்கம் இதன் உரையிற் காண்க. பரன் – மேலே உள்ளவன்; அபரன் – கீழே உள்ளவன்.
இதனால், `திருவருள்` எனப்படுவது சிவனது அருளே என்பது தெரித்துணர்த்தப்பட்டது. பிறரது அருளைத் திருவருளாக மயக்கி எய்த்திடாமை இதனது பயன் என்க.
—
தமிழ் மற்றும் சைவம் மேல் பக்தி பூண்டுள்ள கமலநாதன் அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இவரை போலவே தமிழ்ச்சித்தாந்த நூல்களை வாசித்து பொருள்காணும் வல்லமை தமிழ் இளைஞர்களுக்கு வர இந்த தேர்வு உதவும் என வல்லமை நம்புகிறது
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]