Blog

  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூலை 4 ஆம் கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது [1]. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக பெட்னா (FeTNA) என்றழைக்கப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தொடர்ந்து 29 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் அருமையான தமிழ்ப்பணி ஆற்றிவரும் ஓர் இலாபநோக்கமற்ற தன்னார்வலர்களால் ஆன குழுமம். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் தங்களின் வேலைநேரம் போக மீதிநேரத்தைத் தமிழுக்காக இரவும் பகலுமாக உழைத்து வியப்பூட்டும் ஒரு கலைவிழாவும் ஒன்றுகூடலும் வெற்றிகரமாக நடத்திவருகின்றார்கள். வட அமெரிக்காவில் இருக்கும் ஏறத்தாழ 40 தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை இந்த பெட்னா என்பது.


    ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் விடுதலை நாளாகிய சூலை 4-ஐ ஒட்டி நான்கு நாள்கள் ஏதேனும் ஓர் அமெரிக்க நகரத்தில் பல்கலைவிழா எடுக்கின்றார்கள். இந்தியாவிலிருந்தோ தமிழர்கள் வாழுமிடங்களிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழறிஞர்களையும் தமிழ்க்கலைஞர்களை வட அமெரிக்காவுக்கு வரவழைத்து பெருமைப் படுத்துகின்றார்கள். வட அமெரிக்காவில் வாழும் குழந்தைகளும் சிறார்களும் இளைஞர்களும் தமிழ்மொழி, தமிழ்க்கலை தமிழிலக்கியம் முதலியவற்றில் ஆழமாக ஆர்வம்பற்றிக்கொள்ளுமாறு மிகச்சிறப்பாக நிகழ்ச்சிகள் அமைத்து பெருவெற்றி கண்டுவருகின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் 2000-3000 தமிழர்கள் ஒரு நகரத்தில் கூடி இவ்விழா எடுப்பது என்பது வட அமெரிக்காவில் எளிதன்று. இவ்விழா எடுப்பதை இந்தியத்துணைக்கண்டத்தின் பிறமொழியினத்தாரும் பெருமையுடன் பார்க்குமளவும் சிறப்பு வாய்ந்ததாகவுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கத்தமிழர் முன்னோடிகள் (Tamil American Pioneer) விருது என்னும் ஒன்றை நிறுவி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற பல துறைகளில் பெரும்புகழ் நாட்டிய தமிழர்களைப் பெருமைப்படுத்தி வருகின்றார்கள். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பின்னர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் இராசுச் செட்டி அவர்கள், ஐ.இ.இ.இ. (IEEE) -யின் மார்க்கோனி விருதுபெற்ற பேராசிரியர் பால்ராசு அவர்கள், மாந்த உரிமைகள் துறையில் நன்கறியப்பட்ட கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆந்தசங்கரி அவர்கள் போன்ற பலரையும் பெருமைப்படுத்துவதைப் பார்க்கும் தமிழிளைஞர்கள் தமிழ்க்குமுகத்தின் மீதும் தமிழர்களின் வெற்றிகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டு ஈர்க்கப்படுகின்றார்கள். இளைஞர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றார்கள்

    ஒவ்வொரு ஆண்டும் தமிழுக்குத் தொண்டாற்றிய சிலரையோ அல்லது முக்கிய நிகழ்ச்சியையோ முதன்மைப்படுத்தி விழா எடுக்கின்றார்கள். சென்ற ஆண்டு வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2014 ஆம் சுந்தரேசனார் நூற்றாண்டு. 2013 ஆம் ஆண்டு தனிநாயகம் அடிகளார், 2012 ஆம் ஆண்டு மு. வரதராசனார் என்றும் அதற்கு முன்னதான ஆண்டுகளில் அறிஞர் அண்ணா, பெரியசாமி தூரன் என பலரின் நினைவை முன்னிறுத்திக் கொண்டாடித் தமிழ்பரப்புகின்றார்கள். 2016 ஆண்டாகிய இவ்வாண்டு நியூ செர்சியில் திரென்றன் (Trenton) நகரில் நடந்த பெட்னா விழாவைத் தனித்தமிழ் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடினார்கள்.


    தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா . படம் [4]


    மேடையில் இளைஞர்களின் தமிழ்கலை முழக்கம் . படம் [5]

    வருமாண்டு (2017) அமெரிக்காவின் மினெசோட்டா (Minnesota) மாநிலத்தில் 30 ஆம் ஆண்டுவிழாவாகக் கொண்டாடவிருக்கின்றார்கள். 2016 ஆம் ஆண்டு பெட்னாவின் தலைவர் திரு. நாஞ்சில் பீற்றர் அவர்களுக்கும், அவருடைய அருமையான அணியினருக்கும் பாராட்டுகள் [3]. ஆர்வமும் உழைப்பும் மிக்க நற்றமிழர்கள் நல்லணியாக உழைத்து ஒவ்வொரு ஆண்டும் பெருஞ்சிறப்பு மிக்க விழா எடுத்து தமிழ்வளர்ப்பது மட்டுமல்லாமல் தமிழ்ச்சங்களின்வழி தமிழ்க்கல்வி, கலை, தமிழ்க்கலைப் போட்டிகள், கவிதை, இலக்கிய நிகழ்ச்சிகள் என ஆண்டுமுழுவதும் தணியாத ஆர்வ்த்துடன் தமிழ்வளர்க்கின்றார்கள். பெட்னாவின் தமிழ்ப்பணியை விரித்து எழுதினால் நூலாகிவிடும். பெட்னா தமிழ்ப்பணி வரலாற்றுப்புகழ் பெற்றதாகிவிட்டது. பெட்னாவின் நிகழ்ச்சிகளின் படங்கள் பலவற்றையும் இங்கேயும், இங்கேயும் காணலாம்.

    பெட்னாவின் தமிழ்ப்பணியைப் பாராட்டி சூலை 4 ஆம் கிழமையின் வல்லமையாளர் விருது பெறும் நிறுவனமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகின்றோம். பெட்னாவையின் அதை நடத்தும் அனைவரையும் பாராட்டுகின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] இப்பதிவு சூலை 4 அன்று வரவேண்டியது. சில காரணங்களால் அதனை இன்றுதான் வெளியிட நேர்கின்றது.
    [2] http://www.fetna.org/
    [3] இக்கட்டுரை எழுத நிறைய செய்திகளையும் குறிப்புகளையும் என் வேண்டுதலுக்கு இணங்க நல்கிய, ந்லகுவித்த திரு நாஞ்சில் பீற்றர் அவர்களுக்கும், திருவாளர் தில்லை குமரன், சொக்கலிங்கம், மகேந்திரராசு, பொற்செழியன் இராமசாமி, முத்துசாமி செந்தில்நாதன், திருவாட்டி கீதாஞ்சலி பொன்முடி ஆகியோருக்கும் பிறருக்கும் என் நன்றி.
    [4] படம் தில்லை குமரன் அவர்களின் முகநூல் பக்கம்
    [5] பெட்னா தளம்

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (5)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி – 4

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

    நிலமிசை நீடுவாழ் வார் (01:3)

    kural-2-1 

    அன்பரின் நெஞ்ச மலரில் பொருந்தியிருக்கும் கடவுளின் திருவடிகளை எப்பொழுதும் நினைப்பவர், உலகில் நிலையாக வாழ்வார்.

     

    இங்கே மலர் நமது இதயக் கமலமே! `ஹ்ருதய குஹர மத்யே` என்று விளக்குவார் ரமணர். யோகத்தில், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அனாஹதமே இதயக் கமலம் எனப்படுகிறது. அதற்கு மேலும் ஆதாரங்கள் உண்டெனினும், மனித ஆன்மா விடுதலை பெறுவது அனாஹதக் கமலத்தில் இறங்குவதால் மட்டுமே சாத்தியமாகிறது என்பது ராஜயோகம். அங்குதான், மிகச் சிறிய, ஆனால் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசமுடைய புள்ளியாய் பரமாத்மா துலங்குகிறது. `தஸ்மாஸ் சிகாயை மத்யே பரமாத்மா விவஸ்திதஹ,` என்கிறது கடோபநிடதம்.

    ஆக, இதயக் கமலமே ஆதி பகவனாகிய வாலறிவனின் இருப்பிடம். அதில் நுழைந்தவன் அவனடி சேர்ந்தவனாகிறான்!

    குருவின் அருளால், இடைவிடாத அப்பியாசத்தால் இதயக் கமலத்தில் நுழைந்தால் அங்கே இறைவன் எழுந்தருளுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் ஏகினான் என்ற கடந்த காலத்தைக் குறிக்கும் சொல், ஏற்கெனவே நடந்து முடிந்த செயலை, அவன் ஏற்கெனவே எப்போதுமே அங்கிருக்கிறான் என்பதைச் சுட்டுகிறது. அவனருளாலே அவன் தாள் வணங்கி என்கிறார் மாணிக்க வாசகர். அது எப்படிச் சாத்தியமானதாம்? சிவனவன் என்றன் சிந்தையுள் நின்ற அதனால் என்று எத்தனை ஆணித்தரமாகச் சொல்கிறார்! என் சிந்தையில் ஏற்கெனவே சிவன் வந்து நின்றுகொண்டிருக்கிறான். நான் உணர்ந்தேனில்லை. ஆனால், என்னில் அவனுடைய இருப்பே அருளாய் விரிந்தது. அந்த அருள் என்ன? அவன் தாளை வணங்கச் சொன்னது. வணங்கினேன். அவன், என் சிந்தையில் ஏற்கெனவே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது! நான் என் முயற்சியில் அவனுடைய திருவடிகளை வணங்கி, அதன்பின் அவனுடைய அருளைப் பெற்று, அதற்குப் பிறகு என்னுள் அவனைக் காணவில்லை. அவன் அருள், ஒரு நினைப்பாக வந்து அவன் தாள்களைப் பணியச் சொன்னது. பணிந்தேன். அவன் சிந்தையில் ஏற்கெனவே இருந்தான் என்று புரிந்தது! இதுதான் மலர்மிசை ஏகினான் என்பது.

    `அழைத்தால் வருபவனே ஆண்டவன்,` என்பது தெலுங்குப் பழமொழி. `யார் உன்னை எவ்விதம் கருதுகிறார்களோ, அவர்களுக்கு நீ அம்மட்டே!` என்பது அன்னமாசார்யாவின் கீர்த்தனை. ஆக மலர்மிசை ஏகினான், அழைத்தால் வருபவன் இல்லை. அழைக்கும் பொழுது அவன் அங்கேயேதான் இருக்கிறான் என்று உணரப்படுபவன்! எங்கே? இதயக் கமலத்தில். அவன் இல்லாத இடம் உண்டா? எனில், அழைத்து, அதன்பின் வருபவனா அவன்?

    நீண்ட கைகள் கவளம் நாடி

    நடுங்குகின்றேன் அமிழ்த மழையில்

    ஞானமா? வெறும் நாணமா? வினை

    வீழ்கையில் உயிர் கூசுமா?

     

    என்று என்னைப் பாடவைத்தது. பரிபூரண ஆன்ம விடுதலை என்னும் இலக்கை நோக்கிய பயணத்தில் பல படிகள் இருக்கின்றன. ஒவ்வொரு படியிலும் நாம் அதுவரை கொண்டிருந்த கொள்கைகள், பிடிவாதமாக நம்பியிருந்த சித்தாந்தங்கள் தவிடுபொடியாகி நாணமே மிஞ்சுகிறது. அதில் தலையாய நாணம் உள்ளே ஏற்கனவே எப்போதிலிருந்தோ இருப்பவனை ஊரெங்கும் தேடி உரக்க உரக்க அழைத்தோமே என்பதுதான்!

    என்

    இதயக் கமலம் உந்தன் இருகண் கதிரால் திணறும்

    இசைநாடும் முடிவே நீ வருக! என்

    இறைவா தலைவா வருக!

     

    என்று என் குருநாதரை வரவேற்றுப் பாடினேன். `குரு பார்த்ததால் இதயக் கமலம் திறந்ததா, இல்லை, இதயக் கமலம் திறந்ததால் குரு பார்த்தாரா?` என்று அவரே கேள்வி எழுப்பி, அவரே விடையும் தந்தார்,`இரண்டும் ஒரே கணத்தில் நிகழ்வன!` என்று. அழைத்தால்தான் அவன் ஏற்கெனவே உள்ளே இருப்பது புரிகிறது. அழைக்கச் செய்ததும், அழைத்தபின் உள்ளே ஏற்கனவே இருந்துகொண்டிருக்கிறான் என்பதை உணரச் செய்ததும் அவனுடைய அருளே.

    எனவே, மலர்மிசை ஏகினான் என்று அற்புதமாகச் சொன்னார். எளிமையாகச் சொன்னால், வாசலில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை அம்மா உள்ளிருந்து அழைக்கிறாள். குழந்தை, `இதோ வந்துட்டேம்மா!` என்றுதானே சொல்கிறது! ‘இதோ வருகிறேன்’ என்றோ ‘வரப்போகிறேன்’ என்றோ இலக்கண சுத்தமாகச் சொல்வதில்லை அல்லவா? அன்பால் அழைத்த அடியார் மனத்தில் அவர்கள் நினைத்த கணத்தில் விரைந்து தோன்றுகிறான் என்பதே ஏகினான் என்ற சொல்லுக்கு விளக்கமாகும்.

    தரிசனம் என்பது முதலில் தற்செயலாகத் தட்டுப்படும் அதிசயம். யோகி, யோகத்தில் நிலைபெறும்போது, யோகநிலை என்பது காலவரம்பின்றி, தான் எப்போதுமே அப்படி இருந்துவந்ததுபோல் தோன்றுகிறது.

    அப்படிப்பட்ட யோகியே `வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறான்! இங்கிருக்கும்போது அங்கிருப்பவனாகக் கருதப்படுகிறான். அங்கே இறுதியாய்ச் சென்றபின்னும் இங்கேயே இருப்பதுபோலும் கருதப்படுகிறான்!

    `எல்லோருடைய உள்ளத்திலும் நான் நன்கு வீற்றிருக்கிறேன்.` (கீதை : 15:15) என்கிறான் கண்ணன்.

    மாணடி என்றால் மாண்புள்ள அடி. அது மட்டுமல்ல மாண்பு தரும் அடி! கல்வி, செல்வம், கலைகள், அழகு, திறமை, பதவி இவையெல்லாம் மாண்புகளைத் தரா. மலர்மிசை ஏகியுள்ளவனின் திருவடிகளைப் பணிவதன் மூலமே நிலையான மாண்பு பெறப்படுகிறது. அவன் திருவடிகளைப் பணிந்திருத்தலே மாண்பு.

    நிலமிசை நீடு வாழ்வார் என்பதைப் பரிமேலழகர் மிசை நிலம் என்று கொண்டு, வீடு பேற்றைக் குறிப்பதாக விவரிப்பார். பொதுவாக, மனிதன் நீண்டநாள் வாழவே விரும்புவான். இதனால்தான் நாம் பெரியவர்களை வீழ்ந்து வணங்கும்போது அவர்களும் `நூறாண்டு வாழ்க! பல்லாண்டு வாழ்க! நீடு வாழ்க! நெடிது வாழ்க!` என்றெல்லாம் நம்மை வாழ்த்துகிறார்கள். `நீண்ட காலம் வாழ்வார் தரைமீது,` `கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தரநீ கடவாயே,` என்று பாடுகிறான் பாரதி. எனவே, இறைவனின் திருவடிகளைப் பணிவதன் மூலம், இந்த உலகிலேயே நெடுங்காலம் எந்தக் குறைவுமின்றி வாழலாம் என்றும் கொள்ளலாம்.

    நாம் அறநெறியினின்று பிறழாமல் வாழ்வோமானால், இந்த உலகைவிட்டு நாம் நீங்கிய பின்னும், நாம் நீண்ட காலம் நினைத்துப் போற்றப்படுவோம் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்துவிட்ட எத்தனையோ மாமனிதர்களை, முனிவர்களை நாம் இன்னும் நினைத்துப் போற்றுகிறோமே, அதுதான் நீடு வாழ்தல். வள்ளுவர் போல்!

    நிலம் என்னும் சொல்லை வேறிடங்களில் வள்ளுவர் எப்படிப் பயன்படுத்தி உள்ளார் என்பதைப் பார்க்கும்போதும் அவர் உட்கிடக்கையை நாம் விளங்கிக் கொள்ளலாம்:

    யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

    தான்நோக்கி மெல்ல நகும் (1094)

    இதைத்தான் கண்ணதாசன் அழகாக,

    உன்னை நான் பார்க்கும்போது

    மண்ணை நீ பார்க்கின்றாயே

    விண்ணை நான் பார்க்கும்போது

    என்னை நீ பார்க்கின்றாயே!

     

    என்று பாடுவார்.

    நிலமென்னும் நல்லாள் நகும், அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல, நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும், நிலத்தறைந்தான் என்று பலவிடங்களிலும் நிலம் என்ற சொல்மூலம் இந்த மண்ணை, மண்ணுலகத்தைத்தான் குறிக்கின்றார்.

     தொடருவோம்


     

    Share
  • கருணை மந்திரம்

    மீ.விசுவநாதன்

    எனக்கொரு மந்திரம் வாய்த்துளது – அது

    எல்லோர் நலமும் நினைக்கிறது

    தனக்கொரு தந்திரம் கொள்ளாத – தினம்

    தவிக்கும் உயிரை அணைக்கிறது !

     

    இளமையில் ஓடிய கால்களுக்கு – இன்று

    இதமாய் தடவிக் கொடுக்கிறது

    அளவிலா அன்பினைத் தந்தவர்க்கு – கவலை

    அருகில் வராமல் தடுக்கிறது !

     

    பலமுறை வாழ்விலே தோற்றவர்க்கு – உள்

    பலத்தைக் அளித்துப் பழக்கியது 

    குலமுறை எதுவுமே பார்க்காமல் – நல்ல

    குணத்தைக் கண்டு மதிக்கிறது !

     

    தீவிர வாதமே தீர்வில்லை – “கருணை”

    தெய்வ மனத்தைத் திறக்கிறது

    தூவிய பூக்களின் வாசம்போல் – அது

    பூமி சுகிக்க மணக்கிறது !

    Share
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

    எம்.ரிஷான் ஷெரீப் 

    கறுத்த கழுகின் இறகென இருள்
    சிறகை அகல விரித்திருக்குமிரவில்
    ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்
    ரட்சகனின் மந்திரங்கள் விசிறி
    கிராமத்தை உசுப்பும்

    சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்
    ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்
    குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்
    முன் தள்ளிய வேட்டைப் பற்கள்
    விடைத்து அகன்ற நாசியென
    நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு
    கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்
    சனம் விழித்திருக்கும் அவ்விரவில்
    பேரோலமெனப் பாயும்

    பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்
    ஊழிக் காற்றின் வீச்சுக்கேற்ப
    மாறி மாறியசையும் அக் காரிருளில்
    அவளது உடல்விட்டகழ மறுக்கும்
    யட்சியின் பிடியையும் துர்வார்த்தைகளையும்
    மந்திரவாதியின் கசையும்
    ஆட்டக்காரர்களின் பறையும்
    மட்டுப்படுத்தும்

    பேரிளம்கன்னியைப் பீடித்துள்ள பிசாசினை
    அன்றைய தினம்
    குறுத்தோலைப் பின்னல் அலங்காரங்களில்
    எரியும் களிமண் விளக்குகளின் பின்னணியில்
    அடித்தும் அச்சுறுத்தியும் வதைத்தும் திட்டியும்
    துரத்திவிட எத்தனிக்கும் பேயோட்டியைப் பார்த்தவாறு
    ஆல விழுதுகளைப் பற்றியபடி காத்துக் கிடக்கும்
    பீதியோடு உறங்கச் செல்லவிருப்பவர்களுக்கான
    துர்சொப்பனங்கள்

    அந்தகாரத்தினூடே
    அவர்களோடும் அவைகளோடும்
    சுவர்க்கத்துக்கோ அன்றி நரகத்துக்கோ
    இழுத்துச் செல்லும் தேவதூதர்கள்
    அவளது ஆன்மாவைக் காத்திருக்கிறார்கள்

    – எம்.ரிஷான் ஷெரீப்
    mrishanshareef@gmail.com

    Share
  • உமையாள் திருப்புகழ்

    வித்தக இளங்கவி. விவேக்பாரதி

    காப்பு 
    ஆத்தாளை அண்ட மளந்தாளை ஏழுலகம்
    காத்தாளைக் என்றன் கவிதையினைப் – பூத்தாள
    வாவெனக் கூப்பிட்டு வார்க்கின்றேன் வண்ணப்பா !
    காவென்றேன் செந்தமிழே கா !

    பதிகம்
    அரனுடலில் பாதி
    …அமையவுரு வாகி
    …அழகுவடி வான – உமையாளே
    முருகனவ னாள
    …முழுமைமிகு வேலை
    …முறுவலொடு தந்த – உமையாளே
    திருவுடலில் மேவுங்
    …களபமத னாலே
    …திடமகவை யீன்ற – உமையாளே
    அருளினொளி பாய
    …அழிவுணர்வு மாய
    …அமைந்தகதி நீயே – உமையாளே ! (1)

    மனதுரையும் மாய
    …மினியகல நாளும்
    …மதிமொழியும் நாம – முனதேகாண்
    தனமுடைய தாயே
    …தயையருளு வாயே
    …தவறுகளைப் போக்கும் – வழிதேடி
    தினமுனது பாதத்
    …திருவருளை நாடும்
    …திசைவழியி லோர்க்கு – மருள்வாயே !
    கனகபத மாடிக்
    …கவிவனைய நாளும்
    …கடுகிவர மீனு – முமையாளே ! (2)

    பவளமணி தண்டை
    …படுவழகி லாரம்
    …பகருமிடைச் சூட்டி – அணிவோளே
    கவலையது போகிக்
    …கரிநெருப்பில் வேகக்
    …கடைவிழியில் பாரிங் – கதுபோதும் !
    தவழுமெழில் மாரில்
    …தமிழினணி பூட்டித்
    …தரணியிது காக்க – உடன்வாராய் !
    சிவனழகி தேவி !
    …சிறுமைகுண மேவி
    …சிதையுமுறை நீக்கி – யருளாயே ! (3)

    Share
  • படக்கவிதைப் போட்டி 72 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13652649_1046331315421067_1817652577_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் பிரபு வெங்கட்ராமன். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    இந்த ஒளிப்படத்தில் இடம்பெற்றிருப்பவர் உடன்பிறப்பை தூக்கிச்சுமந்து நிற்கும் சிறுமி. சுமையல்ல சுகம் என்று புன்னகையுடன் இச்சிறுமி எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பயணம் குறித்து, கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    வறுமை ஒருபுறம், வறுமையில் காணும் இன்பமாய் குழந்தைகள் ஒருபுறம் என்று அவதியுறும் மக்களின் நிலைக்கு தீர்வாய் குழந்தை தொழிலாளிகள் உருவாவதை தம் கவிதையில் எடுத்துக்காட்டியுள்ளார் மா. பத்மப்ரியா. கவிஞருக்கு பாராட்டுகள்.

    தாய் தந்தை இல்லாமல் தவிக்கும் குழந்தைகள், இளைய உடன்பிறப்பை தாய்மை உணர்வோடு தூக்கிச் சுமக்கும் மூத்தவளான இச்சிறுமி நாளை சமுதாயத்தின் ஏளனப் பார்வைக்கு ஆளாகி விடக்கூடாது என்று சமுக பார்வை கொண்டு எடுத்துரைத்துள்ளார் செண்பக ஜெகதீசன்.

    கிராம வாழ்க்கை வயலுக்கு வேலைக்குச் செல்லும் தாய், இளையவனை சுமக்கும் மூத்தப்பிள்ளை , மூத்தவள் உழைக்க, இளையவன் கல்வி கற்க என வறுமையிலும் செம்மையாக வாழும் குடும்ப நிலையை எடுத்துக்காட்டும் சரஸ்வதி இராசேந்திரன், நகர மக்களை போல் மனிதநேயத்தினை மறந்து விடக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றார்.

    பல தடைகளைத் தாண்டி, ஏற்ற இறக்கங்களுக்கு ஈடு கொடுத்து விழித்தெழுந்த பெண் கல்வி குறித்து பேசுகின்றது  இக்கவிதை ,

    காலன் இட்ட பிச்சையா இல்லை

    கள்ளிப்பாலில் கூட கலப்படமா

    கடவுளின் கருணை மனுவில்

    கருச்சிதையை எழூச்சியுடன்

    காலால் எட்டி உதைத்த வெற்றிச் சிரிப்பு

    கால் வயிற்றிற்காக‌

    கடுமையாக உழைக்க அச்சமில்லை

    கஞ்சியோ கூழோ கிடைத்தால் போதும்

    காற்று மழை வெய்யில் கண்டு பயமில்லை

    கல்வி கற்க வழி செய்வீர்களா

    கன்னியாக நான் வளர்வதற்குள்

    கழுத்தில் தாலி ஏற்றி விடாதீர்கள்

    கண்களில் ஆயிரமாயிரம்

    கனவுகளோடு காத்திருக்கிறேன்

    கல்வி கற்க வழி செய்வீர்களா

    கலுடைக்க மட்டும் அனுப்பிடாதீர்கள்

    கையில் என்னுடன் பிறந்தவருடன்

    கனவுகளையும் சுமந்து நிற்கிறேன்

    கல்வி கற்க வழி செய்யுங்கள் இல்லை

    கனவு காண மட்டும் வழி செய்யுங்கள்

    (ராதா விஸ்வநாதன்)

    கள்ளிப்பாலாலும், கருச்சிதைவாலும், குழந்தை மணத்தாலும் சிதைவுற்ற பெண்ணின் வாழ்வு கல்வியால் மட்டுமே ஏற்றமடைய முடியும்  என்று அறிஞர்கள் வலியுறுத்திய பெண் கல்வி குறித்த கருத்தினை வெளியிட்டுள்ள ராதா விஸ்வநாதனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக  தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • வழிசமைப்போம் வாருங்கள் !

     

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    ஆட்சிதனில் அமர்ந்திருந்தும்

    அதியுயர்ந்த பதிவிபெற்றும்

    மாட்சியுடை மணிமகுடம்

    தான்சூடிக் கொண்டிருந்தும் 

    நாட்டிலிப்போ பெண்கள்தமை

    நலிவடையச் செய்யும்நிலை 

    நாளுமே பெருகுவதை

    நாம் தினமும் பார்க்கின்றோம் !

     

    வீட்டுக்குள் இருந்தவளை 

    வெளிவரவே செய்திருந்தும்

    நாட்டுக்குள் நடமாட

    நரகாசுரர் விடவில்லை 

    கல்விகற்கும் பெண்கள்கூட

    கண்கலங்கி நிற்கின்றார்

    கயமைநிறை மனமுடையார்

    கதிகலங்கச் செய்கின்றார் !

     

    பட்டம்பல பெறுகின்றார்

    சட்டம்பல பயிலுகின்றார்

    நட்டம்பல வாழ்க்கையிலே

    நாளுமவர் காணுகிறார்

    கெட்டவரின் கண்பார்வை

    பட்டுவிடும் போதெல்லாம்

    பட்டுவிடும் பாடதனை 

    பார்க்கின்றோம் ஏக்கமுடன் !

     

    படிக்கின்ற இடத்திலெல்லாம்

    பலதுன்பம் காணுகிறார்

    படிப்பிக்கும் ஆசானே 

    பாதகனாய் மாறுகிறார் 

    அரவணைக்கும் காவலரோ

    அரக்கராய் மாறுகிறார் 

    அவதியுறும் பெண்கள்தமை

    அன்றாடம் காணுகின்றோம் !

     

    வள்ளுவனார் குறள்படித்தும்

    மனமாற்றம் வரவுமில்லை

    துள்ளுதமிழ் பாரதியின்

    சொல்கூட ஏறவில்லை 

    பலமதங்கள் தத்துவமும்

    பயனற்றுப் போயினவோ

    பரிதவிக்கும் பெண்கள்நிலை

    பரிதாபம் ஆகிறதே !

     

    திருமணத்தின் பெயராலே

    தினமும்பெண்கள் வதைபட்டு

    திடீர்மரணம் தேடுவதை

    தினசரியால் அறிகின்றோம் 

    தெருவிலவர் நடமாட

    தினமுமே அஞ்சுகிறார்

    அனுதினமும்  அவர்வாழ்வு

    அச்சமுடன் விடிகிறதே  !

     

    பெண்களெங்கள் கண்களென

    பெருமையுடன் பேசிவிட்டு

    பெண்களது பெருமைதனை

    பிய்த்தெறிந்து வீசுகிறோம் 

    மங்கலங்கள் தரும்பெண்கள் 

    வாழ்வினுக்கே விளக்காவார்

    வாழ்வாங்கு வாழ்வதற்கு 

    வழிசமைப்போம் வாருங்கள் !

    Share
  • செந்தூர் முருகன்

    மீ.விசுவநாதன்

    திருச்செந்தூர் ஷண்முகர்

    குடகு மலையோ பொதிகை மலையோ

    குறிஞ்சித் தலைவன் இடமதுதான் – என்

    குமரன் இருக்கும் குகையதுதான் – ஒரு

    படகு எடுத்துக் கடலில் மிதப்பேன்

    பயத்தை மறந்த பயணம்தான் – குக

    பக்தி கொடுக்கும் துணிவேதான் !

     

    செந்தூர் முருகன் சிரிக்கும் அழகை

    சிந்தை செய்வ தொருபழக்கம் – ஒரு

    சின்னப் பொழுதி(ல்) அவன்நெருக்கம் – நான்

    எந்தூர் திசையில் இருந்த போதும்

    இந்தப் பிள்ளை நினைவேதான் – என்

    இதயம் அவனின் அருளேதான் !

     

    வானம் முழுக்க வரைந்த விரல்கள்

    வடித்த உருவே முருகன்தான் – அதை

    வணங்க மனமும் அடங்கும்தான் – தன்

    மானம் நிறுத்த மலையில் தனித்த

    மகேச மகனே குருவானான் – அவன்

    மட்டும் எனக்குள் குடியானான் !

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 66

    சிக்மண்ட் பிராய்டு அருங்காட்சியகம், வியன்னா, ஆஸ்திரியா

    முனைவர்.சுபாஷிணி

    மனிதர்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறு உடல் நோய்களுக்குக் காரணமாக உளவியல் பிரச்சனைகளே அமைகின்றன. வெளிப்படையாக உடலில் தோன்றும் நோய்கள் என்பன சில. மனிதர்களாகிய நமக்கு ஏற்படுகின்ற பல நோய்கள் ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கின்ற சங்கடங்கள், பீதிகள், அச்சங்கள், வேதனைகள், துயரங்கள், ஏமாற்றங்கள், வலிகள், தோல்விகள் ஆகியவற்றின் தேக்கத்தினால் ஏற்படுபவையாகவே இருக்கின்றன. இவற்றின் மூலத்தை அறியும் முயற்சியில் சமயஞானிகளும் விஞ்ஞானிகளும் ஆய்வில் ஈடுபடுவது என்பது தொன்று தொட்டு நிகழ்வதைக் காண்கிறோம்.

    ​as6

    ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் உலகப் புகழ்மிக்க அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கனவற்றுள் ஒன்றாகத் திகழ்வது உளவியல் நிபுணரும் நரம்பியல்துறை வல்லுனரும் சைக்கோ-அனாலிசிச் எனச்சொல்லப்படும் உளவியல் ஆய்வுத்துறைக்கான வழிமுறைகளை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு உலகப்புகழ் பெற்றவருமான சிக்மண்ட் பிராய்டு அருங்காட்சியகம்.

    இவரது ஆய்வு முறையானது ஒரு ஆய்வாளர் ஆழ்மனத்தில் படிந்து கிடக்கும் நினைவுகளின் முரண்பாடுகளை தனித்தனியாகப் பிரித்து அலசி ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வில், உளவியல் பாதிப்புக்குள்ளானவரின் மனதில் எழும் கற்பனை உலகங்களும், கனவுகளும் நுணுக்கமான ஆய்வுப் பொருட்களாக கையாளப்படும். இவரது ஆய்வுகளில் மிகக் குறிப்பாக சிறு குழந்தைகளின் தன்னைப்பற்றிய சுய எண்ணம், காமம் தொடர்பான உளப்பிறழ்ச்சிகள், சுயசிந்தனை என்பவை மைய ஆய்வுப் பொருட்களாகக் கையாளப்படுவன என்பது குறிப்பிடத்தக்கது.

    as5

    ​​சிக்மண்ட் பிராய்டு – சில புகைப்படங்களின் தொகுப்பு

    வியன்னா நகரின் மையப்பகுதியிலேயே பார்லிமென்ட், அரச அலுவலகங்கள், நூலகம் அனைத்தும் இருக்கும் பகுதியில் சற்று தள்ளி இருந்தாலும் நடக்கும் தூரத்திலேயே அமைந்திருக்கின்றது இந்த அருங்காட்சியகம். அவர் வாழ்ந்து ஆய்வு செய்த கட்டிடமே இன்று அவரது நினைவைப் பறைசாற்றும் நினைவு மாளிகையாகவும் அருங்காட்சியகமாகவும் திகழ்கின்றது.

    இன்றைக்கு செக் ரிபப்ளிக் நாட்டின் ஒரு நகரமாகத் திகழ்ந்த ஃப்ரைபெர்க் (Freiberg) நகரில் இவர் 1856ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி பிறந்தார். தமக்கு ஐந்து வயதாகும் போது இவரது குடும்பத்தினர் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவிற்கு குடி பெயர்ந்தனர். அது தொடங்கி வியன்னாவிலேயே இவரது வாழ்க்கை அமைந்தது. 1881ம் ஆண்டில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்று திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். இவரது ஆறாவது மகள் அன்னா, இவரைப் போலவே உலகப்புகழ்பெற்ற உளவியல் ஆய்வுத்துறை நிபுணராகத் திகழ்ந்தார். இந்த சிக்மண்ட் பிராய்டு அருங்காட்சியகத்தில் இவர்கள் இருவருடையதுமான ஆவணங்களும் ஆய்வுக் குறிப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    as4

    ​சிக்மண்ட் பிராய்டு அமர்ந்து பயன்படுத்திய நாற்காலி

    முதலில் இவரது ஆய்வுகள் ஹிஸ்டீரியா நோயாளிகளைப் பற்றியதாக அமைந்தது. பின்னர் அந்த ஆய்வுகளிலிருந்து விடுபட்டு கனவுகள் பற்றிய ஆய்வுகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1900 ஆண்டு, The Interpretation of Dreams என்ற நூலை வெளியிட்டார். தொடர்ச்சியான ஆய்வின் பலனாக 1901ம் ஆண்டில் The Psychopathology of Everyday Life என்ற நூலையும் 1905ம் ஆண்டு Three Essays on the Theory of Sexuality என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். ஆரம்ப நிலையில் இவை பெருமளவிலான வரவேற்பைப் பெறவில்லை. ஆயினும் 1909ம் ஆண்டு அமெரிக்காவில் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவு செய்ய அழைக்கப்பட்டார். அதன் பின்னர் 1916ம் ஆண்டு இவரது Five Lectures on Psycho-Analysis வெளிவந்தது. இவை அவரது புகழை உயர்த்தின.

    as3

    ​​சிக்மண்ட் பிராய்டு பயன்படுத்திய பார்வையாளர்கள் அறை

    சிக்மண்ட் பிராய்டு அவர்களின் ஆய்வுகள் உலகளவில் உளவியல் துறையில் நிலையான இடத்தைப் பிடித்தன. எந்த அளவிற்கு அவரது ஆய்வுகள் புகழப்பட்டனவோ அந்த அளவிற்கு அவரது ஆய்வுகள் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாக்கப்பட்டன. ஆயினும் அவரது ஆய்வுகள் எட்டிய ஆழத்தை இத்துறையில் வேறு ஆய்வு முறைகள் எட்டினவா என்பது கேள்விக்குறியே.

    சிக்மண்ட் பிராய்டின் இறுதிக் காலம் சோகம் நிறைந்ததாகவே அமைந்தது. அவருக்குத் தொண்டைப்புண் நோய் ஏற்பட்டு அது புற்று நோயாக மாறி அவரது உடலில் வலிமையைக் குறைத்தது. மருத்துவர்களிடம் வேண்டிக் கேட்டு அதிகப்படியான மயக்க மருந்து கொண்ட மாத்திரைகளை விழுங்கி அவர் 1939ம் ஆண்டில் தான் நாடு கடந்து வசித்து வந்த இங்கிலாந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    இது ஒரு வருந்தத்தக்க நிகழ்வு!

    as2
    ​​சிக்மண்ட் பிராய்டு அலுவலகம் – தற்சமயம் காட்சிக் கூடமாக உள்ளது

    மலேசியாவில் என் இளம் வயதில், மறைந்த உளவியல் அறிஞரும் தமிழறிஞருமான டாக்டர்.லோகநாதன் அவர்களின் இலவச உளவியல் வகுப்புகளில் பாடம் கேட்ட காலங்களில் சிக்மண்ட் பிராய்டு பற்றி அடிக்கடி நான் அவரது வகுப்புகளில் கேள்விப்பட்டதுண்டு. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து மறைந்த டாக்டர்.லோகநாதன் அவர்கள் சிக்மண்ட் பிராய்டு அவர்களின் ஆய்வு முறை வழியில் உளவியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    as1
    ​​சிக்மண்ட் ப்ராய்ட் – வீட்டு வாசலில்

    சிக்மண்ட் பிராய்டு அவர்களது ஆய்வு முறைகள் மனிதகுல உளவியல் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வுகாணும் வழிமுறைமைகளை உலகுக்கு வழங்கியுள்ளன . இவர் போற்றப்பட வேண்டிய உலக ஆய்வாளர்களின் வரிசையில் தனியிடத்தைப் பெறுபவர்!

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-22

    மீனாட்சி பாலகணேஷ்

    சிறுதேர் உருட்டும் செந்தில்வாழ் கந்தவேள்

    bb481341-ca9a-48b2-bbb6-3648bf4b87c8
    தத்தித் தத்தித் தளர்நடைபயிலும் சிறு ஆண்மகவு; நடக்கக் கற்றுக்கொண்டு விட்டதனால் அவனுடைய தாய் அவனுக்கு விளையாட சில புதிய விளையாட்டுப்பொருள்களைக் கொடுத்திருக்கிறாள். அவற்றுள் ஒன்று நேற்றுதான் தச்சனிடம் செய்துவாங்கிய ஒரு அழகான சிறுதேர்; இலேசான, கனமற்ற மரத்தால் குழந்தை விளையாடுவதற்காகவே செய்யப்பட்டு, கூர்மையான முனைகள் எல்லாம் தேய்த்து மழுங்கவைக்கப்பட்டு (பின், குழந்தை கையிலோ காலிலோ குத்திக் காயம் பண்ணிக்கொண்டால் என்ன செய்வதாம்? அதற்கான முன்னெச்சரிக்கை இது!) செய்விக்கப்பட்ட தேர். சிவப்பு, பச்சை, மஞ்சள் எனக் கண்ணைக்கவரும் வண்ணங்கள் பூசப்பட்டு, சில பட்டுத்துணித்துண்டுகளால் கொடிகளும் பறக்கும்படி அமைந்து மிக அழகாக இருக்கிறது. தாய் தனது ஆசைப்படி அதில் ஒரு அழகான அன்றலர்ந்த தாமரைப்பூவினையும் செருகிவைத்திருக்கிறாள்.

    இந்தத்தேரை அழகான ஒரு மணிக்கயிற்றினால் கட்டி, குழந்தை அதனை இழுத்து உருட்டும்போது ஒலியெழும்படியாகச் சில மணிகளையும் அங்கங்கே இணைத்துள்ளான் அதனைச் செய்த தச்சன். மிக்க மகிழ்ச்சியுடன் சிறுகுழந்தை தேரை இழுத்துக்கொண்டு செல்கிறான். தேர்ச்சக்கரங்கள் உருளும்போது மணிகள் இனிமையாக ஒலிக்க அதனை இழுத்து உருட்டும் தன் மகனைக்கண்டு தாயின் மனம் ஆனந்தத்தில் பூரிக்கின்றது. குழந்தையும் புது விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டுத் தெருவெங்கும் தேரினை இழுத்தவண்ணம் செல்கிறான்.

    இந்தக்குழந்தை நம்மையெல்லாம் காக்கும் செந்தில்வாழ் கந்தன்; சேவற்கொடி (பதாகை) கொண்ட குமரன். பக்தியிலும் தாயன்பிலும் திளைக்கும் புலவர் பகழிக்கூத்தர் தாமியற்றியருளிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் குமரன் சிறுதேர் உருட்டுவதனை பரவசமாக வருணிக்கிறார்: குமரன் தேருருட்டுங்காலை மற்றும் பலரும் பலவிதமான தேர்களை உருட்டுகின்றனர் எனக்கூறும் நயம் வியக்கத்தக்கது.
    ‘தேவர்களுக்கரசன் இந்திரன்; மணம்மிகுந்ததும் தேன்சொரிவதுமான மாலைகளை அணிந்தவன்; ஆயிரம் யாகங்களைச் செய்து இந்திரபதவி பெற்று தக்கதருணத்தில் அரியாசனத்தில் அமர்ந்தவன்; அவனுடைய அழகிய தேரினை ஓட்டுபவன் (தேரினை உருட்டுபவன்) மாதலி எனும் பெருமைமிக்க தேர்ப்பாகன். உலகின் நிலைப்பாடு அழிந்துபட்டதென்று குபேரன் எனும் தேவன் தானும் ஒரு தேரை உருட்டுகிறான். அது என்ன? பழங்காலம்தொட்டே பகைமைகொண்ட அரக்கர்கள் அச்சமடையும்படி, வடவரையாகிய இமயத்தினைப்பொரும் புஷ்பகவிமானத்தினை அவன் செலுத்துகிறான் (புட்பகத்தேரை உருட்டுகிறான்). வெற்றிமிகும்படி உதித்தெழுகின்ற ஆயிரம்கதிர்களைக் கொண்ட கதிரவன் ஆகாயத்தில் ஒளிபரப்பியவண்ணம் கோலம் நிறைந்த அழகான ஒளிவட்டத்தைப் பரிவட்டமாகக் கொண்டு சுடர் வீசுகின்றான்: உலகினைத்தன் ஒளியால் துலக்கி விளக்கமுறச் செய்கின்றான். சூரியனின் தேரோட்டியான அருணன் முட்கோல் எனப்படும் தேரோட்டுபவனின் கைக்கோலை (சாட்டைக்கோலை) எடுத்துக்கொண்டு வலிமைமிகுந்த தேரினை உருட்டிவருகிறான். ஆகவே, செந்தில்பதியில் வாழும் கந்தனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டி வருவாயாக!’ எனப் பகழிக்கூத்தர் வேண்டுகிறார்.

    தண்டே னுடைந்தொழுகு மருமாலை நீள்முடி
    தரிக்குஞ் சதக்கிருதுசெந்
    தருணமணி ஆசனத் தேறமா தலிசெழுந்
    தமனியத் தேருருட்டப்
    பண்டே பழம்பகை நிசாசரர்கள் உட்கப்
    பரப்புநிலை கெட்டதென்று
    பரவுங்கு பேரன்வட பூதரம் பொருபுட்
    பகத்தேர் உருட்டவீறு
    கொண்டே உதித்தசெங் கதிரா யிரக்கடவுள்
    குண்டலந் திருவில்வீசக்
    கோலப்ர பாமண் டலச்சுடர் துலக்கமுட்
    கோலெடுத் தருண அருணன்
    திண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே
    சிறுதேர் உருட்டி யருளே
    சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
    சிறுதேர் உருட்டி யருளே.
    (திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்- சிறுதேர்ப்பருவம்- பகழிக்கூத்தர்)

    புலவரின் ஆவல் இத்துடன் நிறைவுபெறவில்லை! இன்னும் யார்யார் என்னவெல்லாம் உருட்டினார்கள் எனக் குறிப்பிடுவதிலேயே முனைப்பாக இருக்கிறார். இதுவுமொரு அழகிய சொல்நயம். எழில்மிகு தமிழ்நயம்!

    வாரணிந்த இளமுலைகளைக் கொண்ட இடைச்சியர்கள் (பொதுவியர்) தங்கள் ஆடை மோரினாலும் தயிரினாலும் முடைநாற்றம் வீசும் தகைமையர். தயிரினைக் கடைந்து வெண்ணையையும் அந்த வெண்தயிரையும் உறிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகளுக்குள் கள்வனைப்போல் மெல்லப்புகுந்து அந்தத் தயிரினை உண்கிறான் ஒருவன்; பின் குடைத்தை உருட்டித்தள்ளி அதிலிருந்து வெண்ணையையும் அள்ளிவாரி (உருட்டி வாயில் இட்டுக்கொள்ளக்கூட அவகாசமின்றி) யாரும் காணும்முன்பு திருட்டுத்தனமாக மிக அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு உண்டுவிடுகிறான்; அதன்பின்பு தனது செங்கனி வாயினையும் துடைத்துக்கொண்டு ஒன்றுமேதெரியாதவன் போலச் செல்பவன், ஒரு பருத்த பெரிய சகடத்தைச் சிலம்பணிந்த தனது சிறுகாலால் எட்டியுதைத்து உருட்டி விளையாடிச் சிதைக்கிறான்! யாரிவன்? சகடாசுரனைக் கொன்ற கிருஷ்ணபெருமானே இவன். ‘அந்தப் பச்சைமாலின் மருகனே’ என முருகனைப் புலவர் விளிக்கிறார்: இவ்வாறு முறைமைகூறி விளித்த மருகனாகிய முருகனிடம், “உன்னிடம் தீராத பெரும்பக்தி கொண்ட அடியவர்களின் பழவினைகளாகிய கொடுமைகள் தீருமாறு நீ அவற்றைப்புறந்தள்ளி (உருட்டிவிட்டு) அனுக்கிரகம் செய்கிறாய் முருகா! மேலும் அத்துணை உலகங்களிலும், அண்டபகிரண்டங்களிலும் உனது ஆணை (கட்டளை, அதிகாரம்) எனும் ஆக்ஞாசக்கரத்தை (ஆழியை) உருட்டிக் காக்கிறாய். இவ்வாறு செய்து, உனதடியைச்சேராத / வணங்காத அசுரர்களின் தலைகளாகிய குவடுகளை (மலைகளை) உருட்டுகின்றனை! நீ இந்தச் சிறுதேரையும் உருட்டியருளுக,” என வேண்டுவதாக இப்பாடல் அழகுற அமைகிறது.

    ‘சேவற்பதாகைக் குமாரகம்பீரனே,’ என ஆசையாக விளிக்கிறார். சேவல்கொடியைக்கொண்டு கம்பீரமாக விளங்குபவனே எனும் இப்பிரயோகம் தனித்துவம்கொண்டு விளங்குகிறது.

    வாராரும் இளமுலை முடைத்துகிற் பொதுவியர்
    மனைக்குட் புகுந்து மெல்ல
    வைத்தவெண் தயிருண்டு குடமுருட் டிப்பெருக
    வாரிவெண் ணெயை யுருட்டிப்
    பாராமல் உண்டுசெங் கனிவாய் துடைத்துப்
    பருஞ்சகடு தன்னையன்று
    பரிபுரத் தாளால் உருட்டிவிளை யாடுமொரு
    பச்சைமால் மருக பத்தி
    ஆராமை கூருமடி யவர்பழ வினைக்குறும்
    பறவே உருட்டி மேலை
    அண்டபகி ரண்டமும் அனைத்துலக முஞ்செல்லும்
    ஆணையா ழியையு ருட்டிச்
    சேராநி சாசரர் சிரக்குவ டுருட்டநீ
    சிறுதேர் உருட்டி யருளே
    சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
    சிறுதேர் உருட்டி யருளே.
    (திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்- சிறுதேர்ப்பருவம்- பகழிக்கூத்தர்)

    முருகனின் சிறுதேர் உருட்டி விளையாடும்போது மாதலி உருட்டும் தேரில் இந்திரனும், குபேரன் தனது புட்பகத்தேரை உருட்டியும், அருணன் உருட்டும் தேரில் சூரியனும் பெருமையுடன் வலம் வருகின்றனராம். பால் தயிர்க்குடத்தையுருட்டி, அவற்றிலிருந்து வெண்ணையை உருட்டாது வாயிலிட்டுக் கொண்டு, சகடத்தையும் உருட்டிச் சிதைத்த பச்சைமாலின் மருகனான் முருகன் அடியார்களது பழவினைகளை எல்லாம் உருட்டிவிட்டு, உலகெங்கும் தன் ஆணையாழியை உருட்டி, கொடியோர் சிரங்களைக் கொய்துருட்டிக் காக்கிறான். பலவிதமான தேர்களும் பொருட்களும் உருட்டப்படுவதைப் புலவர் நம்கண்முன்பு சொற்சித்திரங்களாகப் புனைந்து நிறுத்துவது இனிய இலக்கிய விருந்தாகின்றது.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    _
    *************

    Share
  • படக்கவிதைப் போட்டி (73)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    13734582_1050429538344578_1049135032_n

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் ! (13)

    நிர்மலா ராகவன்

    தாயைப்போல் பிள்ளையா!

    நலம்-

    ‘யாருக்கெல்லாம் இன்னும் அதிகமாகப் படித்திருக்கலாம் என்ற குறை இருக்கிறது?’ என்று, தமிழ்ப்பெண்களுக்கான ஒரு கருத்தரங்கில் நான் உரையாற்றி முடித்ததும் கேட்டேன்.

    முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் கைதூக்கினார்கள்.

    அவர்களுக்குப் படிப்பில் நாட்டமில்லாமல் போகவில்லை. ஆனால் அவர்கள் பெற்றோர் ஆண்பிள்ளைகளை மட்டும் நிறைய படிக்க வைத்தார்கள். பெண்கள், `அண்ணன் மட்டும் என்ன உயர்த்தி?’ என்று வாதாட, `அவன்தான் கடைசி காலத்திலே எங்களை வெச்சுக் காப்பாத்துவான்!’ என்று பதில் வந்ததாம்.

    என் மாணவியரில் ஒருத்தி, `எனக்கு ஒரு பெண் பிறந்தால், அவளை நிறையப் படிக்க வைப்பேன்,’ என்று அழுகைக்குரலில் கூறியிருந்தது நினைவில் எழுந்தது. அவள் சீனப்பெண். ஆனால், பிரச்னை என்னவோ ஒன்றுதான்.

    `அண்ணன்தான் உங்களை வெச்சுக் காப்பாத்துவான்னு என்ன நிச்சயம்?’ என்று சண்டைகூட போட்டுப் பார்த்தாளாம். `பலனில்லை,’என்று என்னிடம் தெரிவித்தாள். சூடிகையான பெண். ஆனால் முன்னுக்கு வர வாய்ப்பில்லை.

    இம்மாதிரி, `வாய்ப்பை இழந்துவிட்டோமே,’ என்று வருந்தும் பெண்கள் தாம் கண்ட கனவுகளை தமக்குப் பிறக்கும் குழந்தைகள்மூலம் நிதரிசனமாக்கிக்கொள்ளப் பார்க்கிறார்கள். ஆகவே, தனக்குப் பிடித்ததெல்லாம் மகளுக்கும் பிடிக்க வேண்டும், அதில் திறமையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!

    இது நடக்கிற காரியமா?

    மகள் தன் தந்தையை ஒத்திருக்கலாம், அல்லவா?

    கதை: அருணா துணி தைப்பது, சித்திரம் வரைதல் என்று நுண்கலை சம்பந்தப்பட்டவைகளில் திறமை வாய்ந்திருந்தாள். தான் பெறாத கல்வியுடன், இவைகளிலும் மகள் ஆனந்தி தேர்ச்சி பெறவேண்டும் என்று எதிர்பார்த்தாள். மகளுக்கோ, ஒரே இடத்தில் உட்கார்ந்தால் அது படிப்பதற்குத்தான் என்பதுபோல் ஒரு மனப்பான்மை. சித்திரம் வரைய அடியோடு வரவில்லை. அதற்கான பொறுமையும் கிடையாது. அது புரியாது, தன்னைப்போல் இருக்க மகள் மறுக்கிறாள், தன்னை ஏற்கவில்லை என்று அருணா தப்பர்த்தம் கற்பித்துக்கொண்டாள். விளைவு: மகள் செய்ததில் எல்லாம் அருணா குற்றம் கண்டுபிடிக்கத் தொடங்க, சிறியவள் மனத்தளவில் அவளிடமிருந்து விலகிப்போனாள். அவளுக்குப் பிடித்ததைச் செய்ய ஊக்கமளித்த தந்தையுடன் நெருக்கம் அதிகரித்தது.

    என்னதான் மகளானாலும், அவளும் தன்னைப்போல் ஒரு பெண்தானே! போட்டி மனப்பான்மை அதிகரிக்க, அருணா தன்னையும், அத்துடன் ஆனந்தியையும் சேர்த்து வருத்தினாள்.

    எல்லாக் குழந்தைகளும் இம்மாதிரி தாயின் பேச்சை மீறத் துணியமாட்டார்கள். `எதற்கு வீண் வம்பு!’ என்று விட்டுக்கொடுத்து விடுவார்கள்.

    வேறு சிலர், தாயின்மேல் கொண்ட பாசத்தால், அவள் மனம் நோகாது நடக்கவேண்டும் என்று முடிவெடுப்பார்கள். அப்படிச் செய்யாது, வேறு துறையில் நாட்டம் செலுத்தி, அதில் ஒரு வேளை வெற்றி பெறாவிட்டால், காலம் பூராவும் அம்மாவின் கண்டனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள நேருமோ என்ற பயமும் ஒரு முக்கிய காரணம்.

    `நான் இஞ்சினீயர் ஆனால்தான் அம்மாவுக்கு மகிழ்ச்சியா? அப்படியானால் சரி,’ என்று வேண்டாவெறுப்பாக தான் படிக்கவேண்டிய துறையைத் தேர்ந்தெடுத்திருந்த ஒருவர், `நான் என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை!’ என்று காலங்கடந்து என்னிடம் குறைப்பட்டுக்கொண்டார். அவருக்குப் பிடித்ததோ நுண்கலைகள். அவைகளில் நிறையப் பணம் பண்ண முடியுமா என்று அவரது தாய் நினைத்திருக்கக்கூடும்.

    எவ்வளவுதான் சம்பாதித்தாலும், இவர்கள் வாழ்க்கை பூராவும் ஏதோ பாரத்தைத் தாங்க நேர்வதுபோல் நடப்பார்கள். அம்மாவின்மேல் இருக்கும் மனத்தாங்கல் விரக்தியாகவோ, அல்லது வேறு ஏதாவது வழியிலோ வெளிப்படும்.

    எல்லாக் குழந்தைகளுக்கும் எதிலாவது ஒன்றில் திறமை இருக்குமே! அதிலேயே அவர்களை ஈடுபடுத்தினால், அவர்களது திறமையும் முழுமையாக வெளிப்படும்; அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சியும், மனநிறைவும் வயதான பெற்றோருக்கும் தாம் தம் கடமையைச் சரிவரச் செய்துவிட்டோம் என்ற திருப்தியைக் கொடுக்கும்.

    இதை விட்டு, பிள்ளைகள் பெரியவர்களானதும்கூட, எல்லாவற்றிலும் தாம் கூறியபடியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிறுபிள்ளைத்தனம் என்றுதான் தோன்றுகிறது.

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(129)

    செண்பக ஜெகதீசன்

     

    மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்        

    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 

         -திருக்குறள் -134(ஒழுக்கமுடைமை)

     

    புதுக் கவிதையில்…

    கற்ற வேதத்தை அந்தணர்

    மறந்திடினும்,

    கற்றிடலாம் மீண்டும்,

    ஆனால் அவர்தம்

    குல ஒழுக்கம் கெட்டால்,

    கெட்டிடும் எல்லாமே…!

     

    குறும்பாவில்…

    மறந்திட்டாலும் வேதத்தை, 

    மீண்டும் கற்றிடும் அந்தணர்,

    கெடுவர் குலவொழுக்கம் குறைந்தால் …!

     

    மரபுக் கவிதையில்…

    வேதம் ஓதிடும் வேதியர்க்கு

         வேதம் மறந்தே போனாலும்

    வேதனை யேதும் வாராது

       ஓதிட மீண்டும் கற்றிடலாம்,

    பாதக மாகிக் கெட்டழிவார்

      பரிவுடன் அவர்தம் முன்னோர்கள்

    பாது காத்த குலவொழுக்கப்

       பண்பு தன்னை மறந்தாலே…!

     

    லிமரைக்கூ…

    மறந்தாலும் கற்றிடலாம் வேதம்,

    அந்தணாளர் மறந்திட்டால் குலவொழுக்கம், 

    அடைவார் வாழ்வில்பெரும் சேதம்…!

     

    கிராமிய பாணியில்…

    பாதிப்பில்ல பாதிப்பில்ல

    அய்யருக்குப் பாதிப்பில்ல,

    மந்திரந்தான் மறந்துபோனாலும்

    முழுசா பெரிய பாதிப்பில்ல,

    மறுபடி பாத்துப் படிச்சிக்கலாம்..

     

    ஆனா

    கெட்டுப்போவும் கெட்டுப்போவும்

    வாழ்க்கயெல்லாங் கெட்டுப்போவும்

    அவுரு

    கொலத்து ஒழுக்கம் கொறஞ்சிபோனா,

    கெட்டுப்போவும் கெட்டுப்போவும்

    எல்ல்லாமே கெட்டுப்போவும்…!

    Share
  • மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை (கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி கூறுதல்)

    மலர்சபா

    gopikas

    கோவேந்தன் தேவியே!

    நான் கணவனை இழந்தவள்

    ஒன்றும் அறியாத் தன்மையுடையவள்.

    பிறர் ஒருவருக்கு முற்பகல்

    ஒரு கேடு நினைத்தால்

    அக்கேட்டினை

    அன்று பிற்பகலே காணும்

    தன்மை உடையவை வினைகள்.

     

    கற்புடை மகளிர் எழுவர் வரலாறு

    வன்னி மரத்தையும் மடப்பள்ளியையும்

    நற்பகல் ஒன்றில்

    தனக்குச் சாட்சிப் பொருட்களாய்

    அனைவரும் காணும்படி

    முன்னிலையில் கொண்டுவந்து

    நிறுத்திக் காட்டினாள்

    அடர்ந்த கூந்தலையுடைய

    பத்தினிப் பெண்ணொருத்தி.

     

    பொன்னியாற்றின் மணற்பரப்பில்

    மகளிர் சிலர் விளையாடும்போது,

    ஒருத்தி ஒரு மணற்பொம்மையைச் செய்து

    ‘இதுதான் உன்னுடைய கணவன்’ என

    விளையாட்டாய்க் கூறியதும்,

    அதை உண்மை என்று நம்பி

    அங்கேயே தங்கி,

    அலைகள் அப்பொம்மையை அழித்துவிடாமல்

    காத்து நின்றாள்

    வரிபொருந்திய அகன்ற அல்குலை உடைய

    பத்தினிப் பெண்ணொருத்தி.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -36

    க. பாலசுப்பிரமணியன்

    சூழ்நிலைகள் கற்றலை பாதிக்குமா?

    education-1

    ” படிப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளைப் பற்றி நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி.. ஆனால் எத்தனை பேருக்கு இந்த மாதிரி சூழ்நிலைகள் கிடைக்கின்றன? சரியான சூழ்நிலைகள் இல்லாத போதும், தெரு விளக்குகளில் படித்தவர்களும் அகல் விளக்குகளின் அருகில் அமர்ந்து படித்தவர்களும் வாழ்க்கையில் முன்னுக்கு வரவில்லையா? ” என்று என் நண்பர் சென்ற இதழைப் படித்தபின் எழுப்பிய கேள்விகள் முற்றிலும் உண்மையானவை. படிப்பதற்கு சாதகமான சூழ்நிலைகள் என்னவென்றுதான் முந்தைய இதழில் பார்த்தோமே தவிர, அவை இருந்தால் தான் நம்மால் படிக்க முடியுமென்றோ சாதிக்க முடியுமென்றோ சொல்லப்படவில்லை.

    தேவை, ஆர்வம், உள்நோக்கம் (Motivation), ஈர்ப்பு போன்ற பல வித காரணங்களால் கற்றலின், படிப்பின் நோக்கம், திறன், அளவு ஆகியவை பாதிக்கப் படுகின்றன. வாழ்க்கையில் பல சாதனைகளை செய்தவர்களின் கற்றல் மிக நெருக்கமான சூழ்நிலைகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்று உள்ளது. “சாதிக்க வேண்டும்” என்ற உள்ளுணர்வும் உந்துதலும் ஒருவரிடம் இருக்கும் பட்சத்தில் கற்றலுக்கான விருப்பும் ஆர்வமும் அவர்களுக்குத் தானாக வரும்..

    ஒண்டிக்குடித்தனத்திலும் ஓட்டு வீடுகளிலும் வாழ்ந்துகொண்டு படிக்க இடமில்லாமல் நூலகங்களையும் தோட்டங்களிலும் தெரு விளக்குகளிலும் உட்கார்ந்து கிடைத்த நேரத்தில் படித்து சிறப்பாகக் கற்றவர்கள் பல்லாயிரம். ஆகவே சிறப்பான கற்றலுக்கு நல்ல உள்நோக்கமும் உந்துதலும் தேவை. இவை தானாகவே ஒரு நபருக்கு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். சில நேரங்களில் முன்மாதிரிகளைப் பார்த்தும் அவர்களுடைய சாதனைகளையும் வாழ்க்கைக் கோட்பாடுகளையும் பார்த்தும் அல்லது பெற்றோர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுதலாலும் இப்படிப்பட்ட உந்துதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

    சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகள் முன்பு பல வீடுகளில் குழந்தைகள் படிப்பதற்கு புத்தகங்கள் கூட இல்லாத அல்லது வாங்க முடியாத சூழ்நிலைகள் இருந்தது. அப்பொழுது பழைய புத்தகக் கடைகளிலும் அல்லது உற்றார் உறவினர்கள் வீடுகளிலுருந்தும் புத்தகங்களை வாங்கி அவற்றை சரி செய்து ஆண்டு முழுவதும் உபயோகித்த குழந்தைகள் பலருண்டு.. பல நேரங்களில் வீடுகளில் ஒரு குழந்தை படித்த புத்தகத்தை அடுத்த குழந்தைக்காக பேணிக்காத்தது உண்டு.. அப்படிப்படித்த குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, மன நல வளர்ச்சி மற்றும் சாதனைத் திறன்கள் எந்த வயதிலும் குறைந்ததில்லை.

    இந்தக் கருத்தை வலியுறுத்தக் காரணம் – வசதிகளும் சொகுசான சூழ்நிலைகளும் இருந்தால் தான் படிப்பும் கற்றலும் சிறப்பாக இருக்கும் என்ற தவறான கருத்து எவர் மனதிலும் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். வறுமையும் இல்லாமையும் முன்னேற்றத்திற்குத் தடங்கலாக நிச்சயமாக இருக்கும் என்பது உண்மை. ஆனால் இந்தத் தடங்கல்களை ஒருவரின் தன்னம்பிக்கையின் மூலமும் விடாமுயற்சியின் மூலமும் வென்று விடலாம் என்பதும் அசைக்க முடியாத உண்மை.

    பல சாதனையாளர்களின் வாழ்க்கைச் சரிதத்தை  பார்க்கும்பொழுது அவர்கள் சந்தித்த சோதனைகளும் தடங்கல்களும் எவ்வாறு அவர்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு அடிகோலியுள்ளன என்பது தெள்ளத்  தெளிவாக விளங்கும்.

    மேலும் எல்லாவிதமான வசதிகளுமுடைய பள்ளிகளில் படித்தால் தான் சிறந்த கற்றல் ஏற்படும் என்பதும் ஒரு தவறான கருத்து. ஒரு பள்ளியின் தரம் அதனுடைய கட்டிடத்தாலோ, அங்குள்ள வசதிகளாலோ அல்லது அங்கு செலுத்தப்படும்  படிப்புக்கான கட்டணத்தாலோ மட்டும் நிர்ணயிக்கப் படுவதில்லை. தரமான, கோட்பாடுகளும், தொழிலில் ஈடுபாடுடைய ஆசிரியர்களாலும் மற்றும் கல்வியின் தரத்தில் உறுதி பூண்ட நிர்வாகத்தாலும் தான்  நிர்ணயிக்கப் படுகிறது.

    முப்பது ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் பல தரப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சாதிக்கும் திறன் (Achievement level) அலசப்பட்டது. இதில் தெரிந்த ஒரு உண்மை – வசதி வாய்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சாதிக்கும் உந்துதலைவிட  பல நடுத்தர மற்றும் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்களுக்கு அதிகம் இருந்தது. ஆகவே, சில நேரங்களில் வசதிகள் அனைத்தும் இருந்தாலும் அவை உண்மையான அறிவு மற்றும் மன நல வளர்ச்சிக்கு உதவுவதாக இல்லாமல் இருக்கலாம்.

    ஆகவே கற்றலுக்குச் சாதகமான சூழ்நிலைகள் தேவை .. ஆனால் கற்றலுக்கான ஒரு ஆர்வம், தேவை இருக்கும் பொழுது அதற்கான சூழ்நிலைகளை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.

    (தொடரும்)

    Share