இலக்கியம்கவிதைகள்

வழிசமைப்போம் வாருங்கள் !

 

எம் . ஜெயராமசர்மாமெல்பேண்அவுஸ்திரேலியா

 

ஆட்சிதனில் அமர்ந்திருந்தும்

அதியுயர்ந்த பதிவிபெற்றும்

மாட்சியுடை மணிமகுடம்

தான்சூடிக் கொண்டிருந்தும் 

நாட்டிலிப்போ பெண்கள்தமை

நலிவடையச் செய்யும்நிலை 

நாளுமே பெருகுவதை

நாம் தினமும் பார்க்கின்றோம் !

 

வீட்டுக்குள் இருந்தவளை 

வெளிவரவே செய்திருந்தும்

நாட்டுக்குள் நடமாட

நரகாசுரர் விடவில்லை 

கல்விகற்கும் பெண்கள்கூட

கண்கலங்கி நிற்கின்றார்

கயமைநிறை மனமுடையார்

கதிகலங்கச் செய்கின்றார் !

 

பட்டம்பல பெறுகின்றார்

சட்டம்பல பயிலுகின்றார்

நட்டம்பல வாழ்க்கையிலே

நாளுமவர் காணுகிறார்

கெட்டவரின் கண்பார்வை

பட்டுவிடும் போதெல்லாம்

பட்டுவிடும் பாடதனை 

பார்க்கின்றோம் ஏக்கமுடன் !

 

படிக்கின்ற இடத்திலெல்லாம்

பலதுன்பம் காணுகிறார்

படிப்பிக்கும் ஆசானே 

பாதகனாய் மாறுகிறார் 

அரவணைக்கும் காவலரோ

அரக்கராய் மாறுகிறார் 

அவதியுறும் பெண்கள்தமை

அன்றாடம் காணுகின்றோம் !

 

வள்ளுவனார் குறள்படித்தும்

மனமாற்றம் வரவுமில்லை

துள்ளுதமிழ் பாரதியின்

சொல்கூட ஏறவில்லை 

பலமதங்கள் தத்துவமும்

பயனற்றுப் போயினவோ

பரிதவிக்கும் பெண்கள்நிலை

பரிதாபம் ஆகிறதே !

 

திருமணத்தின் பெயராலே

தினமும்பெண்கள் வதைபட்டு

திடீர்மரணம் தேடுவதை

தினசரியால் அறிகின்றோம் 

தெருவிலவர் நடமாட

தினமுமே அஞ்சுகிறார்

அனுதினமும்  அவர்வாழ்வு

அச்சமுடன் விடிகிறதே  !

 

பெண்களெங்கள் கண்களென

பெருமையுடன் பேசிவிட்டு

பெண்களது பெருமைதனை

பிய்த்தெறிந்து வீசுகிறோம் 

மங்கலங்கள் தரும்பெண்கள் 

வாழ்வினுக்கே விளக்காவார்

வாழ்வாங்கு வாழ்வதற்கு 

வழிசமைப்போம் வாருங்கள் !

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க