காயத்ரி பூபதி

13652649_1046331315421067_1817652577_n

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் பிரபு வெங்கட்ராமன். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

இந்த ஒளிப்படத்தில் இடம்பெற்றிருப்பவர் உடன்பிறப்பை தூக்கிச்சுமந்து நிற்கும் சிறுமி. சுமையல்ல சுகம் என்று புன்னகையுடன் இச்சிறுமி எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பயணம் குறித்து, கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,

வறுமை ஒருபுறம், வறுமையில் காணும் இன்பமாய் குழந்தைகள் ஒருபுறம் என்று அவதியுறும் மக்களின் நிலைக்கு தீர்வாய் குழந்தை தொழிலாளிகள் உருவாவதை தம் கவிதையில் எடுத்துக்காட்டியுள்ளார் மா. பத்மப்ரியா. கவிஞருக்கு பாராட்டுகள்.

தாய் தந்தை இல்லாமல் தவிக்கும் குழந்தைகள், இளைய உடன்பிறப்பை தாய்மை உணர்வோடு தூக்கிச் சுமக்கும் மூத்தவளான இச்சிறுமி நாளை சமுதாயத்தின் ஏளனப் பார்வைக்கு ஆளாகி விடக்கூடாது என்று சமுக பார்வை கொண்டு எடுத்துரைத்துள்ளார் செண்பக ஜெகதீசன்.

கிராம வாழ்க்கை வயலுக்கு வேலைக்குச் செல்லும் தாய், இளையவனை சுமக்கும் மூத்தப்பிள்ளை , மூத்தவள் உழைக்க, இளையவன் கல்வி கற்க என வறுமையிலும் செம்மையாக வாழும் குடும்ப நிலையை எடுத்துக்காட்டும் சரஸ்வதி இராசேந்திரன், நகர மக்களை போல் மனிதநேயத்தினை மறந்து விடக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றார்.

பல தடைகளைத் தாண்டி, ஏற்ற இறக்கங்களுக்கு ஈடு கொடுத்து விழித்தெழுந்த பெண் கல்வி குறித்து பேசுகின்றது  இக்கவிதை ,

காலன் இட்ட பிச்சையா இல்லை

கள்ளிப்பாலில் கூட கலப்படமா

கடவுளின் கருணை மனுவில்

கருச்சிதையை எழூச்சியுடன்

காலால் எட்டி உதைத்த வெற்றிச் சிரிப்பு

கால் வயிற்றிற்காக‌

கடுமையாக உழைக்க அச்சமில்லை

கஞ்சியோ கூழோ கிடைத்தால் போதும்

காற்று மழை வெய்யில் கண்டு பயமில்லை

கல்வி கற்க வழி செய்வீர்களா

கன்னியாக நான் வளர்வதற்குள்

கழுத்தில் தாலி ஏற்றி விடாதீர்கள்

கண்களில் ஆயிரமாயிரம்

கனவுகளோடு காத்திருக்கிறேன்

கல்வி கற்க வழி செய்வீர்களா

கலுடைக்க மட்டும் அனுப்பிடாதீர்கள்

கையில் என்னுடன் பிறந்தவருடன்

கனவுகளையும் சுமந்து நிற்கிறேன்

கல்வி கற்க வழி செய்யுங்கள் இல்லை

கனவு காண மட்டும் வழி செய்யுங்கள்

(ராதா விஸ்வநாதன்)

கள்ளிப்பாலாலும், கருச்சிதைவாலும், குழந்தை மணத்தாலும் சிதைவுற்ற பெண்ணின் வாழ்வு கல்வியால் மட்டுமே ஏற்றமடைய முடியும்  என்று அறிஞர்கள் வலியுறுத்திய பெண் கல்வி குறித்த கருத்தினை வெளியிட்டுள்ள ராதா விஸ்வநாதனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக  தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க