இலக்கியம்கவிதைகள்

செந்தூர் முருகன்

மீ.விசுவநாதன்

திருச்செந்தூர் ஷண்முகர்

குடகு மலையோ பொதிகை மலையோ

குறிஞ்சித் தலைவன் இடமதுதான் – என்

குமரன் இருக்கும் குகையதுதான் – ஒரு

படகு எடுத்துக் கடலில் மிதப்பேன்

பயத்தை மறந்த பயணம்தான் – குக

பக்தி கொடுக்கும் துணிவேதான் !

 

செந்தூர் முருகன் சிரிக்கும் அழகை

சிந்தை செய்வ தொருபழக்கம் – ஒரு

சின்னப் பொழுதி(ல்) அவன்நெருக்கம் – நான்

எந்தூர் திசையில் இருந்த போதும்

இந்தப் பிள்ளை நினைவேதான் – என்

இதயம் அவனின் அருளேதான் !

 

வானம் முழுக்க வரைந்த விரல்கள்

வடித்த உருவே முருகன்தான் – அதை

வணங்க மனமும் அடங்கும்தான் – தன்

மானம் நிறுத்த மலையில் தனித்த

மகேச மகனே குருவானான் – அவன்

மட்டும் எனக்குள் குடியானான் !

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க