Blog

  • தி லாஸ்ட் செல்ஃபி

    –கவிஜி.

    இந்தப் பயணத்தின் முடிவு எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது…. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடோ ஆசையோ இல்லை…

    போகி…………………….றே………………………..ன்…

    என் சொந்த ஊருக்கு, நான் பிறந்த மண்ணுக்கு… நீண்ட நாட்களுக்கு பின்.. இல்லையில்லை நீண்ட வருடங்களுக்கு பின்…போகிறேன்.. மனதுக்குள் ஏதேதோ மாற்றங்கள்.. நொடிக்கொரு தரம் மாறும் மனநிலைக்குள் நான் எந்த நொடி என்பதுதான் எனது பதிலாக இருக்கிறது, மாறாக கேள்வியும் கூட…கேள்விகளினூடாக நினைவுகளும் பயணிக்கத்தான் செய்கிறது….பயணங்களின் ஊடாக நினைவுகளும் நிலைக்கண்ணாடி சுமக்கத்தான் செய்கிறது….

    எங்கள் ஊருக்கு ஜீன்ஸ் பேண்டை அறிமுகப் படுத்தியவன் நானே.. கான்வாஸ் ஷூ.. குளிர் கண்ணாடி.. ஒற்றைக் காதுக் கடுக்கன் என்று 90களின் உலகத்தை ஊருக்குள் கொண்டு சென்றவன் நானே.. அதன் மூலமாக எனக்கு கிடைத்த பெண் தோழிகளின் எண்ணிக்கை அதிகம்.. அதே போல் அதைக் கண்டு பொறாமை கொண்டு எனை வாய்ப்பு கிடைத்தால் அடித்து துவைக்க காத்துக் கொண்டிருந்த ஆண் நண்பர்களுக்கும் பஞ்சமில்லை…ஆனாலும் நானே.. இளவரசன் என்பது போலதான்….. பைஜாமா போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவதாக இருந்தாலும் சரி…தொடை ஒட்டிய ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு வீதி வலம் வருவதாக இருந்தாலும் சரி… நானே… நாகரிகத்தின் குறியீடாக இருப்பது போலக் காட்டிக் கொள்வேன்.. மற்றவர்களும் காண்பார்கள்….

    எல்லாரும் சாதாரண மிதி வண்டி ஓட்டியபோதே நான் பைக் மாதிரியான மிதி வண்டியை ஓட்டியவன்.. கொஞ்சம் ஆங்கிலமும் தெரிந்தவன் என்பதால் என்னை சுற்றி எப்போதும் படிப்பு தொடபான விஷயங்கள் மொய்த்துக் கொண்டிருக்கும்.. ஊருக்குள் பல பேருக்கு கடிதம் எழுதிக் கொடுத்தும், படித்தும், பேர் வாங்கிய கொஞ்சம் புத்திசாலியும் கூட…..ஊரில் இருக்கும் என்ன மாதிரி பசங்க எல்லாருமே பயந்து கொண்டிருந்த குடுகுடுப்புக் காரனை…. பேயை போல வேஷம் போட்டு ஊர்க்கோடி வரை விரட்டி கொண்டுபோய் விட்டு வந்த கில்லி என்று பெரியவர்கள் மெச்சுவார்கள்….

    அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.. நான் எங்களூருக்கு இப்போது போவது எதற்கென்றால்……?……

    சேப்டர் ஒன்
    அது உங்களில் பல பேருக்கு மொக்கையாக் கூட இருக்கலாம். என்ன செய்வது எனக்கு மொக்கையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கலாம். உங்களுக்கு மொக்கையா இருப்பது அவருக்கு பிடிக்கலாம்… எல்லாமே சமநிலை யதார்த்தம்தானே…அப்ப,டி அது எனக்கு ஹாபி… இந்த ஸ்டாம்ப்ஸ் எல்லாம் சேர்த்து வைப்பது போல… இந்த பழைய கால நாணயங்களையெல்லாம் சேகரிப்பது போல… சரி அப்படி என்ன ஹாபி என்று யோசிப்பவர்கள் பின் தொடருங்கள்…… சொல்கிறேன்..சொல்லுதல் எல்லாமே சொல்லி விட்டவைகளின் நீட்சி என்று நான் நம்புவதே இல்லை..நம்பியவைகளை எல்லாம் சொல்லிவிடுவதும் இல்லை… ஒரு புதிருக்குள் தலையை மட்டும் விட்டு விட்ட உடலின் வாலின் துடித்தலைப் போலதான் இங்கு வாழ்வின் இரண்டாம் பாகம் துடித்துக் கொண்டேயிருக்கிறது…..

    சுழற்சிகளின் தத்துவ சாரத்தோடு பேருந்தை விட்டு இறங்கிய நான், ஊர்க்கோடியில் இருந்த அந்த மரத்தை நோக்கித்தான் சென்றேன்…. என்னை தாண்டிய சிலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை… நானும் கண்டு கொள்ளவில்லை… என் மனம் முழுக்க அந்த மரமே வியாபித்திருந்தது…இந்த மரத்தின் யோசனை எத்தனை இரவுகளில் கிளை அசைத்திருக்கும்……மனம் அசைய அசைய மரத்தை பார்த்தும் விட்டேன்….பார்க்க பார்க்க பரவசம்… என் கண் முன்னால் விதைந்து… செடியாகி.. மரமாகி இத்தனை காலத்துக்கு அப்புறமும் இங்கு இப்படி நிற்கிறதே….. காலத்தின் கிளைகளை என்னவென்று வர்ணிப்பது…! அடுப்பில் சட்டினியை வைத்துக் கொண்டு…. “குட்டி…. ஓடிப் போய் கருவாபுல்ல புடிங்கிட்டு வா” ன்னு அத்தை சொல்ல சொல்ல, நான் பாதி மரம் ஏறி இருப்பேன்… அடுத்த கணம் பிடுங்கிய கறிவேப்பிலை சட்டினியில் மணக்க மணக்க வதக்கப் படும்… இன்றும் மணக்கும் நினைவுக்குள் மரம் இன்னும் பெரியதாகி இருந்தது…. இருக்கிறது….இருக்கும்……

    சுற்றும் முற்றும் பார்த்தேன்.. யாரும் இல்லை… பறந்து கிடந்த வெளி எங்கும் வெறும் கட்டடங்களால் சூழ்ந்த ஒரு வேறு பகுதி போல தோன்றினாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கொண்டது புதியதாக இருந்தது…இரவு பகல் பாராமல் வாசல் எங்கும் மக்களின் கூட்டமும்…அப்பத்தாவின் கதையும்…வெண்ணிலவின் குளிரும்.. அடர் வெயிலின் நிறமும்…. தங்கிக் கிடந்த நாட்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை…. தொலைக்காட்சியை முடக்கி வைத்துக் கொண்டார்கள் போல…. ஜன்னல்கள் கூட அடைபட்டே கிடந்தன……மள மளவென ஏற முடியவில்லை என்றாலும்.. பார்த்து பார்த்து ஏறினேன்… அப்பிடி இப்பிடி என்று கறிவேப்பிலை மரத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்… ஏனோ காலத்தில் பின்னோக்கி ஏறி நடந்து வந்து என் பால்யத்தை அடைந்தது போலவே ஒரு மிரட்சி… மனதுக்குள் மட்டும் கறிவேப்பிலையின் இலையில் தங்கிய நேற்று பெய்த மழையின் குளிர்ச்சி…

    எனக்கு புன்னகையை அடக்கவே முடியவில்லை…சிறு பிள்ளையின் இனிப்புத் தேடல் போல எனது மனம் அலைந்தது….எடுத்தேன் என் செல்போனை… முகத்துக்கு நேராக நீட்டினேன்.. கறிவேப்பிலை மரத்தின் உச்சியிலிருந்து கறிவேப்பிலை பழங்களினூடாக என் முகம் விழுவது போல ஒரு செல்பி எடுத்தேன்… நான் முன்னமே சொல்லாமல் சொன்னது போல என் ஹாபிக்கு என் நினைவுகளின் துளியை விதைக்கும் பயணம் இது என்பது போல… வாழ்வின் சாட்சியாய்…. ஒரு பால்ய நண்பனைப் போல நான் எடுத்துக் கொண்ட இந்த செல்பி… என்னை தாலாட்டியது போல இருந்தது….. தூரத்தில் இன்னுமும் ஏதோ ஒரு வீட்டில் “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது”…பாட்டு பாடிக் கொண்டிருந்தது….. மெய்மறந்த, என் பிடி விலக… சர சரவென கீழே………..

    சேப்டர் டூ
    நீண்டு கிடந்த தனிமைக்குள் மீண்டும் நான் தேடிக் கொண்ட தனிமையோடு அமர்ந்திருந்தேன்… இதே ரயிலடியில் எத்தனை நாள் விளையாடி இருப்பேன்.. எப்போதாவது வரும் அந்த ஒற்றை ரயிலைக் காண எத்தனை நேரம் காத்துக் கிடந்திருப்பேன்.. ரயில் மீது இனம் புரியாத அச்சம் கொண்ட ஆசை மனதுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும், இழுக்காத நிறுத்தல்களைக் கொண்ட குறியீட்டு சொப்பனமாய் நான் மீண்டும் மீண்டும் ஒரு ரயிலின் பாதையாய் இருப்பது போல இன்று அமர்ந்திருந்தேன்…..

    என் இடது பக்க விலா சதையில் இருந்து ரத்தம் கசிவதை துடைத்துக் கொண்டே அமர்ந்திருந்தேன்……கறிவேப்பிலை மரம் செல்பியில் கிடைத்த விழுதலில் இன்னும் கொஞ்சம் கீழே நகர்ந்திருந்தால் சதையை கிழித்த கூர் வாது.. வயிற்றுக்குள்ளும் சென்றிருக்கும்… கடைசி நேரத்தில் கிடைத்த இன்னொரு கிளை உயிர் காத்தது…நினைக்கவே உடல் வேர்த்தது….

    எத்தனை யோசித்தாலும்… என் சிறு வயது ரயிலுக்கு வண்ணம் பூசவே முடியவில்லை….. ஒரு கருப்பு வெள்ளை சினிமா படம் போலதான் ஓடி வந்து என்னைத் தாண்டி செல்லும் ரயிலை நினைக்க முடிகிறது…. ரயிலின் ஞாபகங்கள் எப்போதுமே தாலாட்டும் காலங்களைக் கொண்டவை… ஆனால் இன்று வரை நான் ரயிலில் பயணம் செய்ததே இல்லை என்பதை யோசிக்கும் போது, அன்று ரயிலைப் பார்க்க காத்திருந்த ஆசைக்கு கை கால் முளைத்து ஓட வைத்தது போலத்தான் நினைக்கிறேன்…..

    கண்களாய் நீண்டு விட்ட போதும் முழுக்க தண்டவாளத்தின் நீட்சியே….. ஒரு நதி போல திரும்பி பார்த்த பின்னும் வாலின் திரும்புதலாய் மீண்டும் நீண்டு கிடக்கும் இம் முனையை… இன்னும் கொஞ்சம் நீட்டித்துக் கொள்ளும் கற்பனையோடு இனம் புரியாத புள்ளிக்குள் அடைபட்டவனாக மிதந்தேன்…. தூரத்தில் கேட்கும் ரயிலின் ஓசையை துல்லியமாக இதயம் உள் வாங்கி எதிரொலிப்பதாக நினைத்த மாத்திரத்தில் ஒரு சதுர புள்ளியாக வரத் தொடங்கி இருந்தது ரயில்….

    ‘அதே ரயிலா’- என்று கேட்ட மனதோடு எழுந்து நின்றேன்……. தண்டாவாளத்தில் நடுவில் நின்ற போது மனதுக்குள் ஏதேதோ கிளிக்கியது….. ‘இது என் ரயில்’- என்ற ஒரு வகை இருள் மாப்புடன் என் செல்போனை எடுத்து என் முகத்துக்கு நேராக நீட்டி செல்பி எடுக்கத் தயாராக இருந்தேன்… ரயில் என் அருகே வரும் போது செல்பி எடுத்து விட்டு எட்டிக் குதிப்பதுதான் திட்டம்….

    ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது… நன்றாகவே சத்தத்தையும்.. வேகத்தையும் உள் வாங்க முடிந்தது…… ஏனோ கை நடுங்கத் தொடங்கியது… காதோரம் வியர்வை கொப்புளங்கள் உடைந்து வழிந்தன……. கால்கள் பலம் இழப்பது போல ஒரு நிஜம் என்னை சுற்றி அலையடித்தது…ரயிலின் பெரும் ஓலம் மிக அருகில் கேட்டது… என் பெரு விரல் வேலை செய்யாமல் இருப்பது போல தோன்ற, நொடியில் ஒரு முறை கிளிக் செய்தேன்… தொடுதிரையில் விரல் படாமலே வேகமாக தன் தலையை எடுத்துக் கொண்டது போல இருந்தது… என்ன செய்வதென்றே தெரியவில்லை.. எதற்கு நிற்கிறேன் என்றே மறந்து போனது…இன்னும் ரயிலின் நேரக்கத்தின் தூரம் குறைந்தது ….மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு சதுரத்தில் குவித்து… கண்களை கூர்மையாக்கி…கிளிக்கி விட்டேன்…. ஆனால் என் உடல் நடுக்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆடி விட.. மீண்டும் மீண்டும் முயற்சிகளில் கிளிக்கிக் கொண்டேயிருக்க…………… இருக்க…………………. க்க……………………. ரயில் என் முதுகுக்கு அருகே வந்து…வந்து……ந்து…………து…. வந்து விட்டதை செல் போன அப்படியொரு பயங்கர சத்தத்தோடு பிரதிபலித்தது……. இதோ.. இதோ.. அடுத்த நொடி….

    சேப்டர் 3
    எல்லா கிராமத்திலும்.. ஒரு கதை சொல்லி இருப்பார்கள்…. கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கும்… இந்த வீடு.. எங்கள் ஊர் கதை சொல்லியின் வீடு.. இந்த திண்ணையில்தான் கதை சொல்லியான எங்கள் எல்லாருக்கும் சொந்தமான, பொதுவான அப்பத்தா உட்கார்ந்திருக்கும்… விடிய விடிய சுவற்றைப் பார்த்து விட்டு விடிந்த பின், “இன்னுமா படம் போடறானுங்க.. நான் போறேன்”- என்று எழுந்த போதுதான்.. தான் திரையைப் பார்க்காமல் திரும்பி அமர்ந்திருந்ததை உள் வாங்கி கொள்ளும் அளவுக்கு ஏதோ ஒரு கதையின் ஓட்டத்தை மனதுக்குள் ஓட விட்டுக் கொண்டேயிருக்கும், ஒரு சுவாரஷ்யமான கதாபாத்திரம் எங்கள் அப்பத்தா………

    வெள்ளிக்கிழமை இரவென்றால் அது பேய் கதைக்கான நாள்.. அதுவும் அடுத்த இரண்டு நாட்கள் பள்ளிகள் விடுமுறை என்பதால் பள்ளி விட்டதுமே வீட்டுக்கு சென்று துணி மாற்றிக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று என்னைப் போல உள்ள பசங்களையும், பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு ஏதோ திருவிழாவுக்கு போவது போல படை திரட்டிக்கொண்டு வரும் நான் ஒரு கதாநாயகனாகவேதான் தோன்றுவேன்.. அப்படி ஒரு நினைப்பு….. அப்பத்தாவும்.. கதை சொல்லும் போதெல்லாம் அதிகமாக, என்னையேதான் பார்த்து பேசும்.. அடிக்கடி உதாரணதுக்கு.. “இப்போ இவன் இருக்கானே…” என்று என்னைத்தான் கை காட்டி பேசும்… ரயிலில் அடி பட்டு இறந்த யானை பேயின் கதையை சொன்ன நாளில்தான்.. ஊருக்குள் முதன் முதலாக ஒரு முக்கியமான நபர் வந்தார்… நாங்கள் அவரை கண்டு கொள்ளாமல் யானைப் பேயின் கதைக்குள் மூழ்கிக் கிடந்தோம்……

    அப்பத்தா கதை சொல்ல சொல்ல கதாபாத்திரங்கள் நம் அருகே செல்வதைப் போலவே இருக்கும்…. நம்மோடு கலந்து உரையாடுவது போல இருக்கும்… பேய்க் கதைகளின் பேய்கள் நம்மை ஊடுருவி பார்ப்பது போலவே இருக்கும்…… அப்படி ஒரு ஆளுமை.. வார்த்தை பிரயோகம்… கதைகள், காடு மலைகளைத் தாண்டி ஒரு தேவதையைத் தேடி ஓட வைக்கும்… இரவெல்லாம் விரட்டிய பேயிடம் மாட்டிக் கொள்ளாமல்… கிராமம் கிராமமாக ஓடிக் கொண்டேயிருக்கும் கதை நாயகன் பேயிடம் மாட்டிக் கொண்ட கதையைக் கூட காப்பாற்றியபடியே ஓடிக் கொண்டிருப்பான்……. அவன் ஓட்டம் தடை படும் நேரத்தில் எல்லாம்.. எங்களின் வாய் பிதுங்கும்…… விட்டால் அழுகையே வந்து விடும்…. எங்களின் முக குறிப்பை புரிந்து கொண்டு கதையை சாமர்த்தியமாக நீட்டிக் கொண்டு செல்லும் அப்பத்தா…. புதிர்களின் முடிச்சாகவேதான் தெரிந்தது…..

    ஒரு கதையில்கூட கெட்டவன் வெற்றி பெற்றது போல அப்பத்தா, கதையை முடிக்காது…..

    “தர்மம்தான் ஜெயிக்கணும்..”- என்று அடிக்கடி சொல்லும்.. “தீமை அழியத்தான் வேணும்….. நல்லவனா இருக்கத்தானே இந்த பொறப்பு.. அது கதையா இருந்தா என்ன… நிஜமா இருந்தா என்ன…?.. ரெண்டும் ஒன்னுதான்”- என்று அடிக்கடி அடிக் கோடிட்டு கதையை துவக்கும்… அல்லது முடிக்கும்…..

    அப்பத்தாவுக்கென்று யாரும் சொந்த பந்தங்கள் கிடையாது.. எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இந்த வீட்டில்தான், அதுவும் இந்த திண்ணையில் தான் உட்காந்திருக்கும்.. தூங்கும்.. பெரும்பாலும் பகலில் தூங்கிக் கொண்டேயிருக்கும்…இரவில் விழித்துக் கொண்டே கதை தேடிக் கொண்டிருக்கும்….கேட்டால் சொல்லும்…. “கதைங்கறது கதையில்ல, அது நிசம்…. அதை தேடிட்டே இருக்கனும்…. விட்டா உசுரு மாதிரி ஓடிப் போய்டும்…”- என்று தொடர்ந்து பேசும்.. பேச பேச பேசிக் கொண்டே இருக்கும் சொற்களின் கூட்டாஞ்சோறுக் குவியலாய் எங்களுக்கு மட்டும் ருசி சேர்ந்து கொண்டேயிருக்கும்……

    சிறுகதை… குறுங்கதை.. தொடர்கதை.. ஒப்பாரிபாட்டு.. பிறந்த நாள் பாட்டு… நாற்று நட பாட்டு… சமைந்த பெண்ணுக்கு பாட்டு…இறப்புக்கு பாட்டு என்று எப்போதும்.. கதைகளும் பாட்டுகளும்தான்….. இவை அனைத்தும் இலக்கியங்கள் என்று தெரியாமலே இங்கேயே வாழ்ந்து இங்கேயே முடிந்தும் போன அப்பத்தாவை நினைக்க நினைக்க மனதுக்குள், விட்ட கதை தொட்ட கதை விடாமலும், தொடாமலும்.. துரத்துவதை உணர முடிந்தது….எத்தனையோ அப்பத்தாக்கள் சொல்ல முடியாத கதைகளோடு, கதைகளாய் ஆகி விடுவதை கோடிட்டுக் கொண்டே இருந்த மனதோடு……ஊருக்குள் தனித்துக் கிடந்த வீட்டில் யாருமில்லாமல் இடிந்து பாழடைந்து கிடந்த திண்ணையின் ஓரத்தில் அமர்ந்தேன்….மனக் கண் முன்னால் அப்பத்தா திண்ணையில் அமர்ந்திருப்பது போலவும் நாங்கள் கீழே அமர்ந்து அப்பத்தாவையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் காட்சிகள் முன் பின்னாக ஓடின..அடித் தொண்டையில் அடிக்கடி சிரிக்கும் அப்பத்தாவின் குரல் கூட கேட்பது போலதான் இருந்தது அந்த நிமிடம்…

    அப்பத்தாவின் ஆன்மா எனக்குள் ஏதோ ஒரு கதையை சொல்ல முயற்சிப்பதாக நினைக்கத் தூண்டியது.. அங்கு சட்டென வீச ஆரம்பித்த கறிவேப்பிலை வாசம்…. கறிவேப்பிலை துவையல் மீதிருந்த அப்பத்தாவின் ஆசையை ஞாபகமூட்டியது…

    கதைசொல்லிகளின் மனதில்தான் கதைகளின் ஆரம்பவும் முடிவும் கணக் கச்சிதமாக அமர்ந்து விடுகின்றன……. மனம் கனத்த மௌனத்துக்குள் செல்ல செல்ல.. நான் என் செல்போனை எடுத்தேன்.. ஏற்கனவே எடுத்த செல்பிகளை மீண்டும் தொடுதிரை நகர்த்தி நகர்த்தி பார்த்தேன்….மனம் ஒரு வித அலைக்குள் தடுமாறி ஆழ்ந்த மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டது போல உணர்ந்தேன்….. … கறிவேப்பிலை மர உச்சியில் எடுத்த செல்பி.. என்னை ஒரு சிறு பிள்ளையாக காட்டியது போல இருந்தது….. அடுத்து…………. நகர்த்தினேன்…..அடுத்து…………. நகர்த்தினேன்…. ரயிலின் முன்னால் நொடிகளில் உயிர் தப்பிய செல்பி…. பட படக்கும் காற்றில் மிதந்து செல்லும் ஒரு போர் வீரனைப் போல காட்டியது….. புன்னகைக்க தோன்றியது…. திக் திக் நொடிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பின் ஒரு சமயம் பார்க்கும் போது… கிடைக்கும் திர்லிங்… கைகளின் மயிர்கால்கள் நட்டுக் கொண்டன……. மைக்ரோ நொடிகளில் உயிர் தப்பிய ….செல்பியல்லவா…!

    சிரித்துக் கொண்டே … மெல்ல தலையை சாய்த்து.. அப்பத்தா அமர்ந்திருக்கும் இடத்தோடு தலையைக் காட்டி ஒரு செல்பி எடுத்தேன்.. எடுக்க எடுக்கவே உடலை வளைத்து நின்ற கால்கள்… தடுமாறி…திரும்பி..

    “என் கண்கள்… என் கண்கள்… அப்பத்தா……”………………………… கத்தினேன்…..

    சேப்டர் 4
    “நான் வந்த ரயிலில் தான் அந்த யானை அடி பட்டு செத்து போச்சு”- என்றுதான் எங்களிடம் பேசவே ஆரம்பித்தது ஷைலஜா… எனக்கு ஷைலஜாவைப் பார்க்க பார்க்க ஒரு புது மாதிரியாக இருந்தது…..

    சைலஜா…. எப்டி இருக்கும் என்று எப்படி சொல்வது……?…!….

    இந்த சினிமாக்களில் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு படித்த பெண், தாவணி பாவாடையில் வெல வெலவென ஒல்லியாக, வளர்ந்து ஜடையை தூக்கி முன்னால் போட்டுக் கொண்டு, மாலை நேரங்களில் சிறுவர்களுக்கு பாடம் எடுப்பார்களே.. அந்த மாதிரி ஒரு பெண்… அந்த மாதிரி எங்கள் ஊரில் எந்த பெண்ணும் இருந்ததில்லை. எப்போதும் குளித்து, தலை முடியை காற்றில் அலைய விட்டு… உதட்டு சாயம் பூசி… பள பளக்கும் குட்டிகுரா பவ்டர் போட்டு… அதுவும் அவ்ளோ உயரத்தில் பார்க்கவே, பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும் அழகு….

    தூரத்தில் வந்தாலும் மினுங்கும் ஒற்றை மூக்குத்தி… முகத்தை இன்னும் அழகாக்கி காட்டும்.. நான் நிறைய தடவை நேராகவே, “அக்கா நீங்க ரெம்ப அழகு” என்று கூறி இருக்கிறேன்… ஷைலஜா என்னை பிடித்து இழுத்து என் கன்னத்தில் ஆழமாக ஒரு முத்தம் பதித்து…. “என்ன அக்கானு எல்லாம் கூப்ட வேண்டாம்… ஷைலுனு கூப்டு, அதான்.. அழகா இருக்கும்” என்று கண்ணடித்தது..

    நானும்.. முதலில் தயங்கி தயங்கி ‘ஷை…ல் …லு….” என்று மெல்ல முணங்கிக் கொண்டே அழைத்தேன்…. வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் “ஷைலுலுலுலுலுலுலுலு……………..” என்று சத்தமாக கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன்… மெல்ல பழகியது…… பல நாள் இரவுகளில் வெண்ணிலா முகம் பிரகாசிக்கும் மொட்டைமாடியில்… நான் அப்பத்தா கூறிய பேய்க் கதைகளை கூறுவேன்… கண்கள் அகல விரிந்து… பின் மெல்ல சுருக்கி … உதடு குவித்து… பின், கதையின் போக்குக்கு தகுந்தார் போல முகம் மற்றும் உடல் விரியும் ஒரு மோகினியைப் போல மாற்றிக் கொள்ளும் ஷைலுவின் பாவங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே செய்யாது…

    “அப்பத்தா கதை சொன்ன அந்த வெள்ளிக் கிழமையில் வந்த அந்த முக்கியமான ஆள் இந்த ஷைலுதான்…” என்று குழந்தையின் கன்னத்தை பிடித்து இழுப்பது போல நான் அவ்வப் போது செய்வது ஷைலுவுக்கு ரெம்ப பிடிக்கும்…

    “அது ஏன் ஷைலு…….தினமும்.. நம்மூர் ஆம்பளைங்க எல்லாம் தெரியாம தெரியாம இங்க வராங்க.. அப்போ மட்டும் நீ என்னை வீட்டுக்கு போக சொல்லிர்ற….. ஏன்?…..” என்று கேட்ட போது.. என்னை சற்று நேரம் முறைத்து பார்த்து விட்டு,……. ‘வா’…… என்று அருகே அழைத்து இறுகக் கட்டிக் கொண்டது…. அதன் பிறகு நான் கேட்பது இல்லை…….

    ஒரு நாள் நீண்ட நேரம் அழுது கொண்டிருக்கும் போல…. முகம் வீங்கி கண்கள் சிவந்திருந்தது….

    “ஏன் சைலு அழுதிருக்க…. என்னாச்சு….?”- என்று கேட்டேன்..

    என்னைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்தபடி “சீக்கிரம்… தம்பி பாப்பா பொறக்க போறான்.. எனக்கு பயமா இருக்கு…. இன்னைக்கு என் கூடயே படுத்துக்கோ”- என்று என்னை அணைத்து என் வயிற்றில் முகம் புதைத்து தூங்கிப் போனது…. நான் தூக்கம் வராமல்.. வெகு நேரம் விழித்துக் கிடந்தேன்…

    காலையில், “ஆமா உனக்கு வயசென்னடா.. உன் உயரத்தை வச்சு சொல்லவே முடியல” என்று கேட்டது…

    நான் ’13’ என்றேன்.. மெல்ல திறந்த புன்னகையோடு.

    சிரித்துக் கொண்டே கன்னம் பிடித்து கிள்ளியது ஷைலு…

    அதன் பிறகு…. நான் ஊரை விட்டு போக வேண்டியதாய் இருக்க, எல்லாவற்றையும் விட்டு சென்றது போல ஷைலுவையும் விட்டு சென்றேன்.. காலத்தின் ஓட்டத்தில் மறதி என்பதை விட.. ஞாபகம் என்பதே அதிகம் இருந்தாலும்… தூரம் அதிகமானது போலதான் இருந்தது… என்று யோசித்துக் கொண்டே ஷைலுவைப் பார்க்க சைலுவின் வீட்டு பக்கம் போய்க் கொண்டிருக்கும் போதுதான்.. ஆங்காங்கே சிலர் நிற்பதும், குனிந்து கொண்டு போவதும் வருவதுமாக இருந்தார்கள்….

    கண்களில் பட்டாம் பூச்சிகள் சிறகில்லாமல் பறப்பது போல ஒரு பிரமை…என் கண்ணுக்கருகே வலித்த கன்னப்பரப்பை கையால் தேய்த்துக் கொண்டே முன்னேறினேன்….. அப்பத்தாவை திண்ணையில் கட்டி வைத்திருந்த கம்பி வளையத்தின் முனையில் என் பேண்ட் மாட்டவில்லை என்றால் அப்பத்தாவின் திண்ணையை செல்பி எடுத்த போது உடல் வளைந்த நொடிகளில் தடுமாறி சரிந்து.. பின் சரி செய்து கொள்ள திமிறியதில் அப்பத்தாவின் திண்ணையில், மேல் சட்டத்தில் அடித்திருந்த ஆணி என் தடுமாற்ற விழுதலில் என் கண்ணுக்குள் போயிருக்கும்… கால் தடுமாறியதில் காலம் மெல்ல நகர ஆணிக்குள் போக வேண்டிய கண்ணுக்கு பதில் கன்னம் உரசிப் போனது…

    நினைக்கும் போதே கண்ணுக்குள் ஊசி குத்துவது போல இருந்தது… ஒரு முறை கண்ணை தடவிக் கொண்டே, அப்பத்தாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே நடந்தேன்…. யாரும் என்னை கண்டு கொள்ளாமல் வேலையைப் பார்த்தபடி இருந்தார்கள்… சொல்லப்போனால் யாருமே யாரையுமே கண்டு கொள்ளவில்லை…ஒரு வேளை என் முகம் மறந்திருக்கலாம்… ஷைலுவின் வீட்டு முன் ஒரு துக்க வீட்டைப் போல, நின்றவர்களின் பாவனை இருந்தது…..

    ஆம்.. அது துக்க வீடுதான்..

    ஷைலு இறந்து விட்டதாம்…. கேட்ட நொடி திக் என்று நின்று யோசித்து… அழுகை, முடியாத மன நிலையில் நான் மெல்ல வீட்டுக்குள் சென்றேன்… வயதான ஷைலுவின் முகம் இன்னும் பழைய முகமாகவே இருந்தது…. கூட்டம், என்னை யாரோ ஒரு வாடிக்கையாளன் என்று கூட நினைத்திருக்கலாம்…. நினைப்பது தானே… நினைப்புக்கு ஏது தொடக்கம் அல்லது முடிவு… யாரும் கண்டு கொள்ளவில்லை.. எனக்கு ஷைலுவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது…கண்டிப்பாக ஆசை தீர அழுகை தீர கட்டிக் கொள்ள வேண்டும்…எப்படி கட்டிக் கொள்வது…? ஆனால் கட்டிக் கொள்ள வேண்டும்… ஆன்மாவுக்குள் கேட்கும் அலறல் சத்தம் ஷைலுவுக்கு கேட்டிருக்கும்….. நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் பதிக்க வேண்டும்… எத்தனை கதைகளை சொல்ல நினைத்து வந்தேன்… சொல்லவும் முடியாமல்.. சொன்னாலும் கேட்க முடியாத இடத்தில் நான் ஷைலுவைப் ஆழமாய் பார்க்க ஷைலுவும் என்னை மட்டுமே பார்ப்பது போல இருந்தது….

    “என்னதான் இருந்தாலும் அவ பையன் வராம, பொணத்தை எடுக்கறது நியாயம் இல்ல.. அவன் வந்த பின்னால எடுத்துக்கலாம்..வந்துட்டு இருக்கானாம்”- என்ற கூட்டம் மெல்ல கலையத் துவங்கியது…ஏனோ பிணம் காக்கும் இரவில்தான் அதிகமாக பசிக்கிறது….. எனக்கு ஒப்பாரி வைத்து அழ வேண்டும் போல தோன்றியது ….சில பாட்டிகள் ஆங்கங்கே சிணுங்கிக் கொண்டிருந்தார்கள்…

    இரவை துளைத்த நேரத்தில் பிணம் இருந்த அறைக்குள் யாருமே இல்லை… நான் உள்ளே போனதையும் வெளிய தூங்கிக் கொண்டிருந்த சில பெருசுகள் கண்டு கொள்ளவில்லை… நான் உள்ளே சென்று கதவை நன்றாக சாத்தி விட்டு ஓடிச் சென்று ஷைலுவை வாரி அணைத்துக் கொண்டேன்…… கனமாக இருந்து ஷைலுவின் …. காதுக்குள் ரகசியமாய் கூறினேன்..

    “நான் தான் நான்தான் என்று..”

    ம்ஹும்.. அசைவே இல்லை…. எத்தனை அன்பும் அரவணைப்பும் இறந்த உடலை ஒன்றுமே செய்வது இல்லை… கன்னம் பிடித்து கிள்ளிப் பார்த்தேன்….. ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போல கிடந்தது ஷைலு…. நன்றாக அணைத்து என் மார்போடு ஷைலுவின் தலை இருக்கும்படி வைத்துக்கொண்டேன்.. காலம் முழுக்க யார் யார் தலையையோ தாங்கிய மார்பு இது….. இன்று துக்கப் பட்டு விசனப் பட்டு நொந்து சுருங்கிக் கிடந்தது…. எனக்கு நண்பர் ஒருவர் எழுதிய ஒரு கவிதைதான் ஞாபகம் வந்தது…….

    மென் முலைகள்
    பருத்து, நின்று
    வசீகரித்து,
    செவ்வரிகளாகி, சிவந்து
    காலை மாலை எவ்வேளையும்
    கண் நிரப்பும்
    சிறு மலையாகி
    பின், மெல்ல மெல்ல
    சரிந்து, விழுந்து
    மறந்து போகும்
    நாளில்
    மாராப்பு சரி செய்ய
    தோன்றாத
    மென் நடையோடு
    எங்கள் வீதி அழகி ஒருத்தியின்
    கதையை
    முடித்து வைக்கிறோம்….

    ஷைலுவை சாய்த்துக் கொண்டு தாலாட்டினேன்…ஒரு குழந்தையைப் போல முகத்தை ஏந்திக் கொண்டேன்…தலையின் கனம் நேரம் கூட கூட அதிகமாகிக் கொண்டேயிருக்க தலையை நேராக சாய்க்க நான் சற்று என் உடலைத் திருப்பினேன்… யாரோ என் தலையை இன்னும் சற்று ஷைலுவின் முகத்தைப் பார்த்து வேகமாக இழுத்தது போல இருந்தது ….

    “ஷைலுலுலுலுலுலு” என்று சத்தமே வராமல் கத்தினேன்…

    சேப்டர் 5
    இறுதிச் சடங்குக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்க, நான் பிணம் போல அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன் … சட சடவென எல்லாம் நடந்தது.. ஷைலுவின் பையன்… வேண்டா வெறுப்பாக தீ மூட்டி விட்டு வேகமாக போய்க் கொண்டிருந்தான்…..ஊரும் அவன் பின்னால் ஒழுக்கத்தின் வரிசையைப் போல போய்க் கொண்டிருந்தது….நான் ஷைலு எரிவதைப் பார்த்துக் கொண்டு கரைந்து கொண்டிருந்தேன்…..கரைதலில் நேற்றைய இரவு மூளைக்குள் கொட்டியது….. நேற்று ஷைலுவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு செல்பி எடுத்த போதுதான் அந்த செந்தேள், மேலே சிதிலமடைந்த கரும்புகை அப்பிய ஓட்டில் இருந்து நேராக என் முகத்தை நோக்கி விழுந்தது….. கண நேரத்துக்குள் யாரோ இழுத்தது போல நான் என் தலையை இடம் மாற்றியதில் அந்த செந்தேள் என் தலை இருந்த இடத்தில் விழுந்தது….என் தலை தப்பியது…

    அடிக்க எதுவும் கிடைக்காத போது… ஷைலுவின் கையைக் கொண்டே செந்தேளை நசுக்கினேன்…. மனதுக்குள் பெரும் புயல் ஓயாமல் வீசிக் கொண்டே யிருப்பது போல என் செல்பி ஆசையும்..உச்சி மழைக் காற்றாய் வந்து போனது…. நினைக்க நினைக்க என் மனநிலை மேல் எனக்கு சந்தேகம் வரத்தான் செய்தது….. எரிய எரிய மெல்ல எழுந்து அமர்ந்த ஷைலுவின் நெஞ்சில் ஒருவன் ஓங்கி ஓங்கி தடியால் அடித்தான்..

    “அட …பாவி…மார்புகளின் சுமையை இறக்கி வைக்கவே விரும்பியவள் ஷைலு…. இன்று இறுகிப் போன பின் இத்தனை அடி எப்படி தாங்குகிறாள்…”-என்னால் அங்கு அமர முடியவில்லை…. எழுந்து நடந்தேன்…. வேகமாக நடந்தேன் ….

    சற்று தூரம் தள்ளி ஒரு தம்பதி ஒரு குழந்தையை அழுதுகொண்டே குழிக்குள் போட்டு மண்ணை தள்ளத் தொடங்கியிருந்தார்கள்…. மரணங்களிலேயே குழந்தையின் மரணம் மிக கொடுமை ஆனது என்று மனம் வேறு திசையில் பயணிக்க தொடங்குகையில் சட்டென உள்ளே இருந்த பிசாசு விழிக்கத் தொடங்கியது…என் செல்போனை எடுத்துக் கொண்டு அந்த குழந்தையின் அருகே செல்பி எடுக்க சென்றேன்…”செல்பி எடுக்காவிட்டால் அந்தக் குழந்தை உயிர் பெற்று விடுமா என்ன?” என்று சமாதானம் வேறு சொல்லிக் கொண்டது மனம்…. அப்போதுதான் ஒன்றை …கவனித்தேன்… அந்த குழந்தை மிகக் குறைவாக மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை நன்றாகவே பார்க்க முடிந்தது……. அது தெரியாமல் கணவனும் மனைவியும் மண்ணை அள்ளி அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்……

    நான் கத்தினேன்..

    “டேய்… குழந்தை இன்னும் சாகலடா… இன்னும் சாகலடா……..ஏம்மா…. நிறுத்துமா.. குழந்தை சாகல.. உயிர் இருக்கு…”

    யாருக்குமே நான் கத்துவதோ அங்கு நான் இருப்பதோ, கேட்கவில்லை…………… தெரியவில்லை…………………

    சேப்டர் ?
    நேற்றிரவு ஷைலு வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு (அதுவும் பாழடைந்த பழைய வீடுதான் ) சென்று இருட்டுக்குள் வெகுநேரம் அமர்ந்திருந்தேன் ,…. ஒரு கரப்பான் பூச்சி என் கன்னத்தில் உரசுவதும்….பறப்பதுமாக இருக்க ஜன்னலோரம் மெல்ல நகர்ந்து சென்று திறந்திருந்த சாளரத்தின் விளிம்பில் சாய்ந்து நின்றேன்.. அப்போதுதான் நிலா தன்னை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்ததோ என்னவோ… பளிச்சென ஒரு இரவைக் கண்டேன்…

    வந்து வந்து போய்க் கொண்டும்.. கன்னம் காது மூக்கு நெற்றி என்று பட்டும் படாமல் சிறகடிப்பதுமாக இருந்த கரப்பான் பூச்சியியோடு ஒரு செல்பி எடுக்க சட்டென்று ஒரு குரங்கு மனதுக்குள் தாவியது… கரப்பான் பூச்சி கன்னம் உரசியவுடன் செல்பி எடுப்பதுதான் எனது திட்டம்… திட்டதை தாண்டியும் கரப்பான் பூச்சி என் மூக்கின் நுனியிலே அமைந்தது.. நிலா வெளிச்ச நேரத்தில் சிலு சிலு காற்றில்… தனிமை இருளுக்குள் மௌன சாட்சியாக அந்த கரப்பான் பூச்சி என்னிடம் கொண்ட நட்பின் சாட்சியை செல்பியாய் எடுத்த மறுகணம்… நான் சற்றும் எதிர்பார்க்காத நொடியில் கரப்பான் பூச்சி என் மூக்கினுள் நுழைந்தது, படு வேகமாக….. அவ்ளோ தான்… தலைக்குள் பம்பரம் சுழல்வுது போல நான் கிறுகிறுத்து தடுமாறி…… திரும்பியதில் சுவற்றில் அடித்திருந்த ஆணியில் என் நெற்றியைக் கொண்டு சொருகினேன்……..

    சூடாக என் மூக்கில், கன்னத்தில் வழிந்த குருதியை தொட, தொடவே நெற்றியை வேகமாக வெளியே உருவின சற்று நொடியில் கிறுகிறுத்த தலை சாளரத்தை தாண்டி கீழே சரிய, முழு உடம்பும்…….கீழே சரிந்தது…மாடியில் இருந்து சரிந்த நான் கீழே இருந்த ஒரு கறிவேப்பிலை மரத்தின் நடுவே விழ, குத்தி கிழிக்கப்பட்ட வயிற்றோடு வலி தாங்காமல் மாட்டிக் கொண்ட மரத்திலிருந்து எட்டிக் குதிக்க, நான் எகிறி இப்போது விழுந்தது என் வீட்டுக்கு பின்புறமுள்ள கறிவேப்பில்லை மரத்தை ஓட்டிப் போய்க் கொண்டிருக்கும் தண்டவாளத்தில்…….

    கண நேரத்தில் வந்து போன ரயிலுக்குள் நான் வெறும் சதைகளாகக் கிடந்தேன்.. என்னோடு சில தேள்களும் செத்துக் கிடந்தன….

    இந்த சேப்டர்க்கு நீங்களே எண் கொடுத்துக் கொள்ளுங்கள்…

    Share
  • உன்னையறிந்தால் ………. (35)

    நிர்மலா ராகவன்

    குடும்பத்துள் ஏன் போட்டி?

    உனையறிந்தால்

    கேள்வி: `நீ அப்பா பிள்ளையா, அம்மா பிள்ளையா?’ என்று யார் கேட்டாலும், என் இரண்டு வயது மகள், `அப்பா பிள்ளை!’ என்று பளிச்சென்று சொல்கிறாள். அப்படியானால், அம்மா முக்கியமில்லையா?

    விளக்கம்: அப்பாவுக்கும், அம்மாவுக்கும் குழந்தையின் அன்பில் போட்டியா, இப்படி ஒரு கேள்வி எழ! இருவருடைய பராமரிப்பு, அன்பு, அறிவுரை — இவை எல்லாமே குழந்தைகளுக்கு அவசியம்தானே!

    சிறு வயதிலேயே குழந்தை புரிந்து கொள்கிறது, அப்பா தூக்கிக் கொண்டிருந்தால், `அப்பா பிள்ளை,’ என்றும், அம்மா வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தால், `அம்மா பிள்ளை,’ என்றும் சொல்ல வேண்டும் என்று. (அப்போதுதானே தன்னையும் வெளியே அழைத்துச் செல்வார்கள்!)

    அம்மா வேலையாக இருக்கும்போது விஷமம் செய்தால், திட்டுகிறாள். அதனால், அப்பாவின் பக்கம் சாய்கிறது. தானே இன்னும் இரண்டு வயது போனால், அம்மாவைப்போல் தானும் ஒரு பெண்தான் என்று புரிய, அவளைப்போல் நடக்க முயலும். விடுங்கள். குழந்தைகள் செய்வது, சொல்வது எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் சுயமாகவா சிந்திக்கிறார்கள்!

    சிறு வயதில், உடன்பிறந்தாருடன் போட்டி போடுவது பிறவிக்குணம். அது வேறு விஷயம். ஆனால், போட்டி மனப்பான்மை இருந்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணத்துடன், தம்மையுமறியாது, சிறு வயதிலிருந்தே அக்குணத்தை வளர்க்க முற்படுகிறார்கள் பலரும்.

    `தம்பி பாத்தியா, எவ்வளவு சமர்த்தா சாப்பிடறான்! இத்தனைக்கும் ஒன்னைவிடச் சின்னவன்!’ என்று நான்கு வயதான பையனிடம் சொல்லிப் பாருங்கள்.

    அவனால் தன் போக்கை மாற்றிக்கொள்ள முடியாது. பதிலுக்கு, தம்பியின் முதுகில் ஒன்று வைக்கிறான், `நீ ஏன் சமத்தா இருக்கே? என்னை மாதிரி இரேன்!’ என்று!

    போட்டி மனப்பான்மையால் விளையும் தீமை — பொறாமை. எல்லாக் குழந்தைகளையும் சமமாகப் பாவிக்காது, பாரபட்சத்துடன் நடத்துவதால் வரும் வினை இது.

    தான் எப்படியாவது எல்லாரையும்விட, எப்போதும், உயர்த்தியாகவே இருக்க வேண்டும் என்ற வெறியாலும் போட்டி வருகிறது.

    இதுவே பழக்கமாகப் போய்விட, பெரியவர்களான பின்பும், பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் பொறாமை கொண்டு, அவர்களை வார்த்தைகளால் தாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள் இப்படிப்பட்டவர்கள். இவர்களுக்குத் தங்களுடைய வெற்றிகளால் திருப்தி அடைந்துவிட முடிவதில்லை. பிறரைத் தாழ்த்தினால்தான் சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சி.

    ஒரு குடும்பத் தலைவன் இப்படி போட்டி மனப்பான்மையோடு வளர்ந்திருந்தால், தன் மனைவி, குழந்தைகளுடன் எப்போதும் போட்டி. சிலர் அவனது குணம் புரிந்து விட்டுக்கொடுக்கலாம். அனேகமாக, குடும்பத்தில் பிளவுதான் வரும்.

    எனக்குத் தெரிந்த ஒருவர் அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க உத்தியோகத்தில் இருந்தார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் மனைவியை, `முட்டாள்’ என்று பழிப்பார். அவள் பட்டதாரி. முதல் வகுப்பில் தேறியவள். ஆனால், அவரைப்போன்று மூன்று பட்டங்கள் பெற்றிருக்கவில்லை. தான் அவரைவிடத் தாழ்ந்தவள்தான் என்று அவர் எவ்வளவு மட்டம் தட்டியபோதும் பொறுத்துப்போனாள். இம்மாதிரியானவர்களின் தாம்பத்திய உறவு எவ்வளவு லட்சணமாக இருக்கும்!

    இன்னொரு குடும்பத்தில் மனைவி ஏதோ சிறப்புப் பெற்றிருக்கிறாள். `இவன் நம்மைவிட மேலானவன் என்று நினைத்துவிடப் போகிறானே!’ என்று கணவனின் நண்பர்கள் அச்சம் கொண்டு, காரியத்தில் இறங்குவர்:

    `இனிமேல், நீதான் அவள் பெயரை உன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள வேண்டும்!’

    `எப்படித்தான் இப்படி ஒரு மனைவியை பொறுத்துப் போகிறாயோ! இப்படியே விட்டால், உன்னை மதிக்க மாட்டாள், பார்!’
    `நம் மனைவியைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ள முடியவில்லையே!’ என்ற பொறாமையால் அப்படிப் பேசுகிறார்கள் என்று அவன் புரிந்துகொண்டால் போயிற்று. இல்லையேல், தாழ்வு மனப்பான்மையுடன் மனைவியை எதிர்த்துக்கொண்டே இருப்பான்.

    கணவனது பக்கபலம் இல்லாது, அவனுடைய எதிர்ப்பையும், ஏளனத்தையும் தாங்க வேண்டியிருந்தால், ஒரு பெண் ஆக்ககரமாக ஏதாவது செய்யவே துணியாது, யோசிக்கும் நிலை வந்துவிடக்கூடும். பல பெண்கள், `கல்யாணத்துக்குமுன் நிறைய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது நேரமில்லை,’ என்று சொன்னாலும், உண்மைக் காரணம் அதுவாக இருக்காது. உள்ளுக்குள் புழுங்குவாள்.

    ஆக, கணவன் தான் மனைவியைவிட உயர்வு, அல்லது தாழ்வு என்று நினைப்பதால் குடும்பத்தில் கண்ணுக்குப் புலனாகாத விரிசல்தான் உண்டாகும்.

    பேரும், புகழும் கொண்ட ஒருவனிடம், `உங்கள் மனைவியின் ஊக்குவிப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று யாரும் கேட்பதில்லை. ஏனெனில், அவன் ஆண். அவனுடைய திறமை, உழைப்பு போன்றவை இயல்பானது என்று கருதப்படுகிறது.

    என்னை ஒரு வானொலி பேட்டியின்போது, `உங்கள் கணவரின் ஒத்துழைப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று கேட்டபோது, `நான் இதற்குப் பதில் சொல்ல மாட்டேன். எந்த ஆணையாவது நீங்கள் இப்படிக் கேட்டிருக்கிறீர்களா?’ என்று திருப்பிக் கேட்டேன்.

    `யாருமே ஊக்குவிக்காம நீங்க இந்த அளவுக்கு மேலே வந்தீங்களா?’ என்று இரைந்தார் பேட்டி எடுத்தவர். (ஒரு பெண்ணின் வெற்றியைக் கண்டு அச்சம் அடைகிறவரோ? )

    `உங்கள் கேள்வியைச் சற்று மாற்றி,` யார் உங்களை ஊக்குவித்தது?’ என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்,’ என்றேன்.

    பிறர் மகிழ்ச்சியடைவார், பாராட்டுவார் என்று ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கினால், தொடர்ந்து அதைச் செய்யும் ஆர்வம் குன்றிவிடும். நம் திருப்திக்காக, மனநிறைவுக்காகச் செய்யும்போதுதான் முழுப்பலன் கிடைக்கிறது.

    `என் மனைவி வாழ்வில் உயர்ந்தால், அது எனக்கும் பெருமைதானே! இதில் என்ன போட்டி!’ என்று ஒருவர் எண்ணி நடந்தால், அக்குடும்பத்தில் பரஸ்பர அன்பும், மரியாதையும் நிலவும். அவர்களது குழந்தைகள் பெற்றோரைவிட இன்னும் மேலான நிலைக்குப் போவார்கள். இவர்களுக்கு, `அம்மாவா, அப்பாவா?’ என்ற பாகுபாடு, அதனால் விளையும் குழப்பங்கள் இராது.

    மனித உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்கே உரிய பயன்பாடு உண்டு.
    கண் முக்கியமா, கால் முக்கியமா?
    எது உயர்வு, எது மட்டம்?

    இதேபோல், தாய், தந்தை, மகன், மகள் எல்லாரும் குடும்பத்தின் வெவ்வேறு அங்கங்கள். அனைவரும் இணைந்து செயல்பட்டால், ஒவ்வொருவரின் தனித்தன்மையும், பலமும் மற்றவருடையதுடன் இணைந்து, மேலும் வலுப்படும்.

    சில குடும்பங்களில் எல்லா உறுப்பினர்களுமே பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்று விளங்குவதன் ரகசியம்: போட்டியின்மை, ஒத்துழைப்பு.

    தொடருவோம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 21, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு ஆக்சாத் பிரகாஷ் அவர்கள்

    Akshat Prakash-Photo by PTI profile

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், விபத்தில் உயிர் காக்கும் கருவி ஒன்றை வடிவமைத்தவரும், மேல்நிலைப்பள்ளி மாணவருமான திரு. ஆக்சாத் பிரகாஷ் அவர்கள். மருத்துவ அறிவியலில் மிகுந்த ஆர்வமிக்க ஆக்சாத் பிரகாஷ் உத்தரப் பிரதேசம் காஜியாபாதை சேர்ந்தவர். டெல்லி இந்திராபுரத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும், 17 வயதாகும் இந்த இளைஞர், கைக்கடிகாரம் போல கையில் அணிந்து கொள்ளும் முதலுதவி சிகிச்சை தரும் ‘தொழில்நுட்ப அணிகலன்’ (wearable technology device) ஒன்றினை வடிவமைத்து, தைவானில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சி – 2015 (Taiwan International Science Fair, 2015) இல் அறிமுகப்படுத்தினார். இக்கருவி செயல்படும்விதத்தைப் பற்றி அறிவியல் கண்காட்சியில் செயல்முறை விளக்கமும் அளித்துள்ளார். ஆக்சாத் பிரகாஷ், ‘ஹெலிக்ஸ்சேஃப்’ (HelixSafe – #HelixSafe on twitter.com) என்று பெயரிட்டுள்ள தனது மருத்துவ கருவிக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளார். காப்புரிமை பெற 2013 இல் இவர் விண்ணப்பித்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வமான காப்புரிமை தகவல் இதழில் (Official Patent Journal, 2015) இச்செய்தி வெளியாகியுள்ளது.

    Akshat Prakash-Photo by PTI

    விபத்துகள் நிகழும் பொழுது, உயிருக்கு ஊசலாடுபவர்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்கத் துரித கதியில் இயங்கத் தேவை. வீணாக்கும் ஒவ்வொரு பொன்னான வினாடியும் வாழ்வா, சாவா என்ற முறையில் ஒருவரது வாழ்க்கையையே நிர்ணயிக்கும். நகரப்பகுதியில் விபத்து நிகழ்ந்தாலே அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதில் பெருமளவு காலம் விரயமாவதைத் தடுக்க வழி இருப்பதில்லை. ஆளரவமற்ற அத்துவானக்காட்டின் சாலையொன்றில் வாகன விபத்து நிகழ்ந்தால், அதனைக் கண்டு நடவடிக்கை எடுப்பதற்குள் விபத்திற்குள்ளானவர் உடனடி மருத்துவ உதவியின்றி அவரது வாழ்வே முடிந்துவிடலாம்.

    இது போன்ற வாகன விபத்து நிகழ்வுகளில் கைகொடுத்து உதவக் கூடியது, விபத்தினால் பாதிக்கப்பட்டவர் கையில் அணிந்திருக்கும் கடிகாரம் போன்ற ஹெலிக்ஸ்சேஃப்-தொழில்நுட்ப அணிகலன். இக்கருவியின் சென்சார் என்ற உணரும் பகுதி விபத்து நிகழ்ந்த நேரத்தில், இக்கருவி அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பைக் கணக்கிட்டு அவரது உடல்நிலையைக் கண்காணிக்கும். அது இயல்புக்கு மாறாக இருந்தால், தானே தேவையான முதலுதவிக்கான மருந்தினை கருவியில் இருக்கும் சிறிய ஊசி உடலுக்குள் செலுத்துவதுடன், அருகாமையில் உள்ள மருத்துவ அவசர சிகிச்சை மையத்திற்கு உடனடித் தகவலும் அனுப்பும்.

    இந்த மருத்துவக் கருவியின் மாதிரி வடிவம் ‘அர்டுயினோ டெவெலப்மென்ட் என்விரான்மெண்ட்’, மற்றும் ‘எம்பெடெட் சி’, ‘விஷுவல் பேசிக்’ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது (The prototype has been created with Arduino Development Environment, Heart Rate Sensor and accessories and programmed in Embedded C and Visual Basic). இந்த ‘ஹெலிக்ஸ்சேஃப்’ மருத்துவக் கருவி கண்டுபிடிப்பிற்காக, “சிறந்த கண்டுபிடிப்பை வழங்கிய இந்தியாவின் முதன்மை திறமைசாலிக் குழந்தை” (‘India’s First Whiz Kid’ award for Best Innovation, 2013), என்ற விருதினையும் ஆக்சாத் பிரகாஷ் பெற்றுள்ளார். இந்த விருதினை 2013 ஆண்டு ‘நர்ச்சர் டேலண்ட் அண்ட் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ (Nurture Talent & Computer Society of India) இவருக்கு வழங்கிப் பாராட்டியது. இந்த மருத்துவக் கருவி செயல்படும் முறையைப் பற்றி , ஐ.ஐ.டி. டெல்லி, ஐ.ஐ.டி. மும்பை ஆகிய இந்திய தொழில்நுட்பக் கல்வி பல்கலைக் கழகங்களிலும் ஆக்சாத் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.

    Akshat Prakash-Photo by PTI-3

    ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ துறை மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை. தற்பொழுது பெரும்பாலும் ஆரோக்கிய வாழ்வினை முன்னிறுத்தும் நோக்கில் உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றின் அளவுகளைக் கண்காணிக்க மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்ற ஆண்டு கலிஃபோர்னியா நிலநடுக்கத்தின் பொழுது, தொழில்நுட்ப அணிகலன் அணிந்திருந்தவர்கள் உறக்கம் தடைப்பட்டு விழிக்க நேர்ந்ததையும், மீண்டும் உறங்கச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது என்பது போன்ற தகவல்களை, தானே சேகரித்து தரவுகளை அனுப்பியது.

    Akshat Prakash-Photo by PTI-4

    இந்தத் தொழில் நுட்பத்தை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்துவதில் உள்ள ஆதாயம் பற்றி இத்துறை வல்லுநர்கள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். குறிப்பாக மாரடைப்பு, வலிப்பு போன்ற நேரங்களில் உடலில் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ப விரைந்து செயலாற்றி சிகிச்சையைத் துவக்க விரும்பி மருத்துவத் துறையும் இதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. வரும் ஐந்தாண்டுகளில் 2 பில்லியனில் இருந்து 40 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இத்துறை வளரும் என்றும், சிறு கணினிசார் நிறுவனங்கள் இதன் வளர்ச்சியில் அதிகம் பங்கு பெற்றுப் பலனடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு, உடற்பருமன், இதயநோய் எனப் பல்வேறு வகையிலும் உடல்நலம் கண்காணிக்க ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ உதவக்கூடும் எனவும் தெரிகிறது.

    முன்னேறும் இத்துறையில் ஒரு பதின்ம வயது பள்ளி மாணவன் இந்தியாவில் முன்மாதிரியாக இருப்பது இந்தியத் தொழில் நுட்ப வளர்ச்சி பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கிறது. கணினி அறிவியலில் தனக்கு மிகவும் ஆர்வம் இருப்பதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் அத்துறையில் ஓர் ஆய்வாளராகப் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாகவும் கூறும் செல்வன் ஆக்சாத் பிரகாஷ்; தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு, சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு நிறைந்த சமுதாயம் உருவாக, மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நல்ல பல கருவிகளைத் தயாரிக்க விரும்புவதாகவும் ‘பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ (PTI-Press Trust of India)விற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். செல்வன் ஆக்சாத் பிரகாஷின் விருப்பங்கள் நிறைவேறி, மக்களுக்குப் பயன்தரும் கருவிகள் பல வடிவமைக்க வல்லமை இதழ் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    மேலும் தொடர்புள்ள தகவலுக்கு:
    விபத்தில் உயிர் காக்கும் கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்
    http://tamil.thehindu.com/india/விபத்தில்-உயிர்-காக்கும்-கருவியை-கண்டுபிடித்த-பள்ளி-மாணவர்/article8004063.ece
    Published: December 18, 2015

     

    Beyond Fitbit: The quest to develop medical-grade wearables
    http://www.reuters.com/article/us-usa-health-wearables-insight-idUSKBN0U10G120151218
    Published: December 18, 2015

     

    Wearable Technology is Here: Interoperability will be an issue for this technology, just as it is today for communications and data.
    http://www.emergencymgmt.com/emergency-blogs/disaster-zone/wearable-technology-is-here.html
    Published: December 18, 2015

     

    How The Napa Earthquake Affected Bay Area Sleepers
    https://jawbone.com/blog/napa-earthquake-effect-on-sleep/
    Published: Aug 25, 2014

     

    Share
  • தோற்றங்கள்

    — ஸிந்துஜா.

    “உங்கள் பெயர்?”
    “ராமசேஷன்”
    “உங்கள் தகுதி?”
    “சார்ட்டர்ட் அக்கௌண்டண்ட்”
    “எவ்வளவு வருஷமாக தற்போதைய வேலையில் இருக்கிறீர்கள்?”
    “ஆறு வருஷம்”
    “தற்போது உள்ள கம்பனி அல்லது வேலை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”
    “இல்லை. அப்படியொன்றும் சொல்ல முடியாது.
    “அப்படியானால் எதற்காக இங்கே அப்ளை செய்திருக்கிறீர்கள்? ”
    “பெட்டர் ப்ராஸ்பெக்ட்ஸ்”
    “அங்கே அது இல்லையா?”
    “ஆமாம்”

    ராமசேஷனுக்கு எதிரில் உட்கார்ந்து கேள்விகளை இறைத்துக் கொண்டிருந்தவர், இந்தப் பதிலால் தாக்கப்பட்டவர் போல், ராமசேஷனை உற்றுப் பார்த்தார்.

    ராமசேஷன் அவரைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.

    அப்போது அவரது கைபேசி ஒலித்தது. அதை எடுத்துப் பார்த்தவர் ராமசேஷனைப் பார்த்து “ஒரு நிமிஷம்” என்று எழுந்து வெளியே சென்றார்.

    ராமசேஷன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். மறுபடியும், அவரது திடுக்கிடல் அவன் மனதில் நிழலாடிற்று. அவனுக்கு இப்போது அதிக சம்பளம் தரும் வேலை உடனடியாக வேண்டும். இரு மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலி என்று அவனது தாயாரை மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்ற பின், அவளுக்கு மார்பகப் புற்று நோய் என்று தெரிய வந்தது. அதைக் கேட்ட நொடியில் உலகம் ஏன் இப்படித் திடீரென்று தாறுமாறாகச் சுழன்று அவனைக் கீழே விழுத்தாட்டப் பார்க்கிறது என்று நிலை சாய்ந்தான். நல்ல வேலையாக, அருகில் நின்ற ஆஸ்பத்திரி சிப்பந்தி அவனைத் தாங்கிப் பிடித்து பக்கத்தில் இருந்த படுக்கையில் படுக்க வைத்தான். அம்மாவின் கூடவே அவன் இருந்து ஆக வேண்டிய கட்டாயமான இந்த சமயத்தில் அவன் வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து கனடாவுக்குப் போகச் சொன்னார்கள். அதனால், அவன் வேறு வேலை தேட ஆரம்பித்தான். இப்போது அவன் கையில் ஒரு வேலைக்கான ஆர்டர் இருக்கிறது. ஆனால் அதற்கு அவன் தில்லிக்குச் செல்ல வேண்டும். இப்போது வாங்கும் சம்பளத்தை விட அதிகம் தருகிறார்கள். அந்த வேலையை அவன் ஒப்புக் கொள்வதாகக் கூறும் கடிதத்தை, கடைசி நாளான இன்று கொடுக்க வேண்டும். அதற்கு நடுவில், இந்த இன்டர்வியு.

    இந்த வேலையிலும் நல்ல சம்பளம். ஆனால் மிக முக்கியமான விஷயம், இந்த ஊரிலேயே வேலை…

    அப்போது அறைக்குள் ஒருவன் வந்தான். ராமசேஷன் அவனைப் பார்த்து “ஹலோ பாலா!” என்று புன்னகை செய்தான்.

    அவன் “ஹலோ சார்” என்றான். பாலா பெர்சானால் டிபார்ட்மென்டைச் சேர்ந்தவன். அவன்தான் ராமசேஷன் அந்த அலுவலகத்துக்குள் வந்ததும் வரவேற்று, அவனுடைய பேப்பர்களைப் பரிசீலித்து உதவி செய்தான். அன்று நடக்கும் இன்டர்வியுவில், மார்கெட்டிங் பிரிவுக்கு ஒரு உயர் அதிகாரியும், அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு ஒரு உயர் அதிகாரியும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று சொன்னான். நேர்முகத் தேர்வுக்கு மொத்தம் ஆறு பேர்கள் அழைக்கப் பட்டிருப்பதாகவும், யார் நிர்வாக இயக்குனரால் தெரிவு செய்யப்படுகிறார்களோ, அந்த இருவரும் சேர்மனின் வரவேற்பறைக்கு அனுப்பப் பட்டு சேர்மனைப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னான் …

    வெளியே சென்றவர் உள்ளே வந்தார். பாலாவைப் பார்த்ததும் “காஃபி சாப்பிடலாமா?” என்று ராமசேஷனைக் கேட்டு விட்டு அவன் பதிலை எதிர்பாராமல், பாலாவிடம் அனுப்பச் சொன்னார் …

    பிறகு அவனைப் பார்த்து புன்னகை செய்தபடி மறுபடியும் பேச ஆரம்பித்தார் .

    “நீங்கள் இது வரை வேலை பார்த்த கம்பனியில் உங்களுடையது என்று ஏதாவது குறிப்பிட்டுச் சொல்லும்படியான சாதனை உண்டா? “

    “சாதனை என்றெல்லாம் கூற முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், கம்பனியின் லாபம் கூடுவதற்கான வழிமுறைகளை நிர்வாகத்துக்கு எடுத்துச் சொல்லி, அவைகளை மற்றவர்களின் உதவியுடன், ஒரு குழுவாக இயங்கி நடத்திக் காண்பித்தேன்”. ராமசேஷன், தன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் ஃபோல்டரில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். அதிலிருந்த வரைபடத்தில் கடந்த ஐந்து ஆண்டுக்கான விற்பனை விவரங்களும், அந்தந்த வருஷத்து இலாப நிலவரங்களும் கோடுகளாகப் பரிணமித்திருந்தன. விற்பனைகளை விட இலாபங்களின் சதவிகித உயர்வு, ஒவ்வொரு வருஷமும், பிரமிப்பை ஏற்படுத்தும் விதத்தில் உயர்ந்திருந்தது.

    அவன் கொடுத்த பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தவர், ராமசேஷனைப் பார்த்து,”இது ஒரு மார்க்கெட்டிங் கம்பனி என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்போது வேலை பார்த்து வருவது ஒரு விளம்பரக் கம்பனியில். அப்படி ஒன்றுக் கொன்றும் நெருங்கிய தொடர்புடைய பணி சார்ந்தவை இவ்விரு நிறுவனங்களும் என்று சொல்லமுடியாத போது, வரவிருக்கும் மாற்றுப் பணியினால் உண்டாகும் சவால்களை நீங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

    “நிச்சயமாக” என்றான் ராமசேஷன். “இந்த வயதில் சவால்களை ஏற்று என் அனுபவத்தைப் புடம் போட்டுக் கொள்ளா விட்டால், வேறு எப்போது நான் அம்மாதிரி வாய்ப்புக்களைப் பெறப் போகிறேன் ? ஐ’ம் ஃ பார் இட்!” என்று புன்னகை செய்தான்.

    “உங்கள் ஆப்டிமிஸம் எனக்குப் பிடித்திருக்கிறது. மிஸ்டர் ராம், எங்கள் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கிரெடிட் தருகிறோம். இதற்கு ஒரு கால வரையறையும் உண்டு. ஆனால் கடந்த இரு வருஷங்களாக பணவரவு இந்தக் கால வரையறைக்குள் வர மாட்டேன் என்கிறது. ஒருவருக்கு ஒரு மாத கிரெடிட் என்றால், அவரிடமிருந்து நாங்கள் பணம் பெற்று முடிப்பதற்கு மூன்று நான்கு மாதங்கள் ஆகிவிடுகின்றன.”

    ராமசேஷன் மேலும் விவரம் கேட்பதற்குக் காத்திருப்பவன் போல் ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான்.

    “இது எங்கள் விற்பனை எதிர்பார்ப்புக்களை மிகவும் பாதிக்கின்றது. இந்த வருஷத்தில் ஏழு மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால் நாங்கள் நான்கு மாத விற்பனை இலக்கைக் கூட எட்ட முடியவில்லை.”

    “கால வரையறைக்குள் பணம் கொடுக்காத வியாபாரிகளை நீங்கள் எப்படி ட்ரீட் பண்ணுகிறீர்கள்?” என்று ராமசேஷன் கேட்டான்.

    “இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தக் கம்பனியுடன் சேர்ந்து வளர்ந்தவர்கள். அதனால், திரும்பத் திரும்ப வற்புறுத்தல் மூலமே பணத்தைப் பெற முயற்சிக்கிறோம்.”

    “அதாவது, அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள். கோர்ட், வழக்கு என்றெல்லாம் போக வேண்டிய அவசியத்தை உண்டு பண்ணாதவர்கள் என்கிறீர்கள்.” என்றான் ராமசேஷன்.

    எதிரில் இருந்தவர் தோள்களைக் குலுக்கினார்.

    “கால வரையறைக்குள் வியாபாரிகள் பணம் தராததற்கு வியாபாரத்தில் காணப்படும் மந்த நிலைமை மட்டும் தானா?” என்று ராமசேஷன் கேட்டான்.

    “இந்த வருஷ ஆரம்பத்திலிருந்தே ரீசெஷன் தலை தூக்கி நிற்கிறது. அயல் நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பியாவில் மித மிஞ்சிய மந்த நிலை நீடித்து வருகிறது. அதன் எதிரொலியாக, இங்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.”

    ராமசேஷன் “நீங்கள் குறிப்பிட தேதியில் பணம் தராதவர்களுக்கு, சரக்குகள் தருவதை நிறுத்தி விட்டீர்களா? “

    “ஆமாம். அதுதானே சரியான முறை?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

    “பொதுவாக அது சரியான முறை. பணத்தை வைத்துக் கொண்டு, நமக்குத் தராமல் இழுத்தடிக்கும் ஏஜன்ட்களுக்கு அது பொருந்தும். ஆனால் நீங்கள் கூறுவதைப் பார்த்தால், மொத்த மார்க்கெட்டே இழுபறியில் இருக்கிறது. இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் நாம் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். உங்கள் சரக்கு போவது மொத்த விற்பனையாளர்களிடம். அதை அவர்கள் சில்லறை வியாபாரிகளிடம் விற்கிறார்கள். பொதுவாக சில்லறை வியாபாரிகள் கடனுக்கு விற்பது குறைந்த அளவே. மார்க்கெட் நிலவரத்தால், அவர்களும் கடன் கொடுத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், பணப் புழக்கம் அதிகரிக்க வேண்டும். இதற்கு நடுவே, சப்ளை நின்று போனால், கடன் வசூலிப்பும் நின்று போகிறது. தொடர்ச்சியான சப்ளை ஒன்றுதான் இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்கும்.”

    ராமசேஷனை இன்டர்வியு செய்து கொண்டிருந்தவர் அவனை வியப்புடன் நோக்கினார்.

    “நீங்கள் அக்கவுண்ட்ஸ் ஆள். ஆனால் நீங்கள் பேசுவது மார்க்கெட்டிங் ஆட்கள் பேசுவது மாதிரி அல்லவா இருக்கிறது!”

    “இல்லை, நான் மொத்தப் பிரச்சினையையும் பார்த்து, கம்பனிக்கு எப்படி உதவ வேண்டும் என்று யோசிக்கிறேன்” என்று ராமசேஷன் சிரித்தான் .

    “குட்” என்றார் அவர்.

    காப்பி வந்தது, குடித்தார்கள். அதற்குப் பிறகு அவனிடம் சம்பளத்தைப் பற்றிப் பேசினார். எவ்வளவு விரைவில் வேலைக்குச் சேர முடியும் என்று கேட்டார். இண்டர்காமில் பாலாவைக் கூப்பிட்டார்.

    ராமசேஷனிடம் “நீங்கள் கொஞ்ச நேரம் காத்திருங்கள்” என்றவர், பாலாவிடம் “இவரை அழைத்துக் கொண்டு போ” என்றார்.

    பாலா ராமசேஷனை சேர்மனின் வரவேற்பு அறையில் உட்கார வைத்து விட்டுப் போனான்.

    உள்ளூர மகிழ்ச்சி பெருகி ஒடுவதை ராமசேஷன் உணர்ந்தான். இந்த வேலை கிடைப்பது நிச்சயம்தான். அறையைச் சுற்றி நோக்கினான். குளிர்ச்சியாக இதமாக இருந்தது. செல்வச் செழிப்பின் பிரகாசம், தரைகளிலும், ஜன்னல் திரைகளிலும் சுவர்களிலும், இருக்கைகளிலும் காணப் பட்டது. வலது கோடியில் இருந்த ஓர் இருக்கையில் கண்ணாடி அணிந்திருந்த இளைஞன் ஒருவன் உட்கார்ந்து கணினியைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தான். மார்க்கெட்டிங் பிரிவுக்குத் தெரிவு செய்யப் பட்டவனோ என்று சந்தேகம் மனதில் ஓடிற்று . அப்போது அவனுக்கு நேர்முகத் தேர்வு நடத்தியவர் சேர்மனின் அறைக்குள் நுழைவதை ராமசேஷன் பார்த்தான். சற்றுக் கழித்து சேர்மன் அறையிலிருந்து வெளி வந்த பணியாள் , வலது கோடியில் அமர்ந்திருந்தவனை நெருங்கி ஏதோ சொன்னான். அவன் உடன் எழுந்து சேர்மன் அறைக்குள் சென்றான்.

    ராமசேஷன் இந்த வேலை தனக்குக் கிடைத்து விட்டால், அம்மாவை நன்றாகக் கவனித்துக் கொள்ளத் தோதுவாக இருக்கும் என்று ஆர்வத்துடன் நினைத்துக் கொண்டான். எல்லாம் கடவுள் செயல்! தில்லிக்குப் போகத்தான் வேண்டுமென்று முக்கால் வாசி முடிவு கட்டிவிட்டபோதுதான், இந்த நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நிர்வாக இயக்குனர் அவனது பதில்களால் திருப்தியுற்றவர் போலத்தான் தெரிந்தார்…

    அப்போது பாலா அங்கே வந்தான். ராமசேஷனின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டான். “இன்று மார்கெடிங் பிரிவு நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களில் யாரும் தேர்ந்தெடுக்கப் படவில்லை” என்றான் ராமசேஷனைப் பார்த்து.

    ராமசேஷனுக்குத் ‘திக்’கென்றது

    “அப்படியானால் உள்ளே சேர்மனுடன் உட்கார்ந்து கொண்டிருப்பது? ” என்று பாலாவைப் பார்த்துக் கேட்டான் .

    “அவர் அக்கவுன்ட்சுக்கு வந்திருக்கிறவர்.”

    அப்போது சேர்மனின் பணியாள் வந்து பாலாவைக் கூப்பிடுவதாகத் தெரிவித்தான்.

    உள்ளே சென்ற பாலா, கண்ணாடி அணிந்திருந்தவனுடன் திரும்பி வந்தான். அந்த இளைஞன் முகத்தில் சந்தோஷம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவன் தன் கைப் பையை எடுத்துக் கொண்டு வரச் சென்ற போது, பாலா ராமசேஷனிடம் “டைரக்டர் உங்களைக் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணச் சொன்னார்” என்றான்.

    “அவருக்கு என்ன ஆயிற்று ?” என்று கண்ணாடி அணிந்தவனின் பக்கம் திரும்பிக் கேட்டான் ராமசேஷன் .

    “அக்கவுண்ட்ஸ் பிரிவின் தலைமைப் பதவிக்கு செலக்ட் ஆகி விட்டார் என்றான் பாலா.” உங்களை இருக்கச் சொன்னதால் அனேகமாக அவருக்குக் கீழே காலியாக உள்ள உதவித் தலைமைப் பொறுப்பாளராக உங்களைக் கூப்பிடக்கூடும்” என்றான். பிறகு அந்த இளைஞனுடன் கிளம்பிச் சென்றான்.

    ராமசேஷன் சுற்றிலும் ஒரு முறை நோக்கினான். மங்கலாகப் பிரகாசமற்று அந்த அறை தோற்றமளிப்பது போல இருந்தது அவனுக்கு. தலைமைப் பொறுப்புக்கு அடுத்த இடம் என்றால், அனேகமாக அவன் இப்போது பார்க்கும் வேலைக்குச் சமானமான பதவிதான், சம்பளமும் பெரிதாக ஒன்றும் வந்து விடாது. அவன் கைப்பையைத் திறந்து பார்த்தான். தில்லிக் கம்பனியின் நீல நிறக் கவர் தென்பட்டது. கைப் பையை மூடிவிட்டு எழுந்தான். வாசலை நோக்கிச் சென்றான். இன்று சனிக் கிழமை. அரை நாள்தான் அந்த அலுவலகம் இயங்கும் என்றார்கள். கால்மணி நேரத்துக்குள் போய் விடலாம். பார்க்கிங்கில் இருந்த காரை நோக்கி ‘விறு’ ‘விறு’ என்று நடந்தான் .

    “உங்களை அவ்வளவு தூரம் கவர்ந்து விட்டானா இந்தப் பையன் ? ” என்று சேர்மன் கேட்டார்.

    நிர்வாக இயக்குனர் புன்னகை செய்தார். “மிகவும் துடிப்புடன் இருக்கிறான். அவனிடம் ஸி.ஏ. இருக்கிறது. மார்க்கெடிங் பற்றிய விரிவான புரிதல் இருக்கிறது. மார்க்கெடிங் உடன் வெகுவாக ஒத்துப் போகும் அட்வர்ட்டைஸிங்கிலும் ரிச்சான அனுபவம் இருக்கிறது. ஆறு வருஷம் விளம்பரக் கம்பனியில் பணி புரிந்திருக்கிறான். இந்த மாதிரி காம்பிநேஷன் வேலை மார்க்கெட்டில் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை.அதனால்தான் சொல்கிறேன்”

    “என்னவென்று?”

    “ராமசேஷனை மார்க்கெடிங் பிரிவின் தலைமை அதிகாரியாக நியமித்து விடலாம். வழக்கமாகத் தரும் சம்பளத்தையும் இன்னும் சற்று அதிகப் படுத்திக் கொடுக்கலாம்.ஹீ வில் பீ ஆன் அஸட் டு அவர் கம்பனி ” என்றார் நிர்வாக இயக்குனர்.

    “தென் இட்ஸ் ஓகே, கோ அஹெட் ” என்றார் சேர்மன் தலையை அசைத்தபடி.

    “ராமசேஷனை நீங்கள் ஒரு முறை பார்த்து விடுங்கள். நானே கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன்” என்று நிர்வாக இயக்குனர் சேர்மன் அறையை விட்டு வெளியே வந்தார்.

    Share
  • பிறகும் தொடரும் தீவின் மழை

    எம்.ரிஷான் ஷெரீப்

    1437820074-4948

    மழை வெளி நிலத்தின் பட்சிகள்

    ஈர இறகை  உலர்த்தும் புற்பாதையில்

    மீதமிருக்கும்  நம் பாதச்சுவடுகள் இன்னும்

     

    எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை

    மென்குளிரைப் பரப்பியிருக்க

    நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்

    நடந்து வந்த பாதையது

     

    தீவின் எல்லாத் திசைகளிலும்

    கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்

    அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட

    கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்

    ‘கருமேகக் கூட்டங்களற்ற வானை

    ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்

    சிரட்டைகளால் செதுக்கப்பட்ட

    அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்

    இவ்வாறாக

    கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு

    உன் சேமிப்பில் வந்தது

    மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும்

     

    புனித ஸ்தல மரமொன்றில்

    கடவுளுக்காகத் தொங்க விடப்பட்டிருந்த ஏவல் பொம்மைகள்

    வெயிலை வேண்டும் அவர்களது பிரார்த்தனைகளை

    பொய்ப்பித்தே வந்தன

     

    சூரியனையும் நிலவையும் நட்சத்திரங்களையும்

    நேரில் பார்த்திரா அந்த ஊர்வாசிகள்

    நம்மிடம் அவை பற்றிக் கேட்டார்கள் இல்லையா

    ஆனாலும் அப் பிரதேசத்துக்கும்

    அவை தினந்தோறும் வந்தன

    மழைத் திரை ஒரு நீர்க்கோடாய்

    அவற்றை அவர்களிடமிருந்து மறைத்தது

     

    ‘விதியில் எழுதப்பட்டவர்கள்,

    சமுத்திரத்தில் வழி தவறி

    திசைகாட்டி நட்சத்திரத்தைத் தேடித் தொலைந்தவர்கள்

    முன்பெல்லாம் அத் தனித் தீவில் கரையொதுங்கினர்’

    என்றவர்கள் கூறியதை

    நீ குறித்து வைத்துக் கொண்டாய்

     

    தொலைதூரம் பறந்து சென்ற

    வலசைப் பறவைகள் மட்டுமே கண்டிருந்த வெயிலை

    ஒருபோதும் அறிந்திரா அத் தீவின் சிறார்கள்

    அதன் நிறத்தை, வாசனையை

    அது நம்மைத் தொடும்போது எழும் உணர்வைப் பற்றி

    மழை கண்டு ஆனந்தித்திருந்த நம்மிடம் வினவியதும்

    ‘எவ்வாறு உரைத்தல் இயலும்’ என்றாய்

    சிறிதும் கருணையேயற்று

     

    ஆவி பறக்கும் உஷ்ணப் பானங்களை அருந்தியபடி

    பிரயாணிகள் அனைவரும் சுற்றிப் பார்த்த பின்

    அத் தீவை மழையிடம் தனியே விட்டுவிட்டு

    கப்பலில் நமது தேசம் வந்து சேர்ந்தோம்

     

    ஆனாலும் அன்றிலிருந்து எப்போதும்

    நமது மர வீட்டின் தாழ்வாரத்தில்

    ஈரத் துளி விழும் சப்தம்

    கேட்டுக் கொண்டேயிருக்கிறது இரவிரவாக

     

     

    Share
  • தொல்காப்பியத்தின் காலம்

    –முனைவர் மா.சியாமளாதேவி.

    tholkaapiyar
    தொல்காப்பியம் தமிழில் இன்று கிடைக்கப்பெறும் நூல்களுள் மிகவும் பழமையானது. அதில் காணப்பெறும் சில வழக்காறுகள், இலக்கணக்கூறுகள், வாழ்க்கை மரபுகள் சங்க இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டன என்பது, இன்று பலரும் ஒப்ப அறிந்த முடிபாகும். இதனால் அது ‘தமிழின் முதனூல்’ என்று போற்றப்படுகின்றது. மூவாயிரம் ஆண்டு பழமையுடையதாயினும், இன்றும் அதன் ஆளுமைத் தமிழ் மொழியில் பெரும்பகுதி நிலைத்து நிற்கிறது.

    நூலின் காலம்:
    எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல, இந்நூல் தோன்றுவதற்கு முன்பே இலக்கியங்கள் பல இருந்திருத்தல் வேண்டும். அவை காலப்போக்கில் இறந்துபட்டிருக்கலாம். இத்தகைய நூல்களில் பெயர்களையும், பகுதிகளையும் பிற்கால உரையாசிரியர்கள் மேற்கோளாகக் குறிப்பிடுவது, மேற்கூறிய கருத்தையே வலியுறுத்தும் சான்றாக உள்ளது. தொல்காப்பியர் தமக்கு முன் விளங்கிய ஆசிரியர்களின் நெறியையே தாம் எடுத்துரைப்பதாகக் கூறுகிறார். தொல்காப்பியர் தம் நூலில், சற்றொப்ப 260 இடங்களில் தமக்கு முன்பு இருந்த அல்லது தம் காலத்தில் வாழ்ந்த இலக்கண ஆசிரியர்கள் பலரைப் பலவாறு குறிப்பிட்டுள்ளார். நூலின் இடையே,
    ‘என்ப’- ‘என்மனார்’- ‘மொழிப’-
    ‘யாப்பென மொழிப யாப்பறி புலவர்’-
    ‘தோலென மொழிப தொன்மொழிப் புலவர்’

    என ஆங்காங்கு கூறிச்செல்வதாலும், ‘ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ என்றும் தமக்கு முற்பட்ட இலக்கிய மரபைக் குறிப்பிடுவதாலும், அவருக்கு முன்பே பற்பல இலக்கண நூல்களும் இருந்திருக்க வேண்டுமெனத் துணிந்துரைக்க முடிகிறது.

    “தொல்காப்பியப் பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற தொடர் வடமொழியின் இலக்கணத்தில் வல்லுநரான பாணினியைக் குறிப்பிடாமல் அதற்கும் முந்தைய இந்திர வியாகரணத்தைப் பற்றிக் குறிப்பதால் பாணினிக்கும் (கி.மு.4ஆம் நூற்.) முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது புலப்படுகின்றது”1

    “மறைமலையடிகள், வெள்ளைவாரணார் போன்றோர் இறையனார் களவியல் உரைவழி நின்றும் அகச்சான்று, புறச்சான்று வழி நின்றும் தொக்காப்பியர் காலம் கி.மு.5000 ஆண்டுகட்கு முற்பட்டது என்றும் கூறுகின்றார்”2

    தொல்காப்பியம் தோன்றிய காலத்தைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் பலவுண்டு. ஆண்டிலே முற்பட்டதென்று கூறுவோர் பலர். பிற்பட்டதென்று கூறுவோர் சிலர்.

    1. “வேதவியாசர் காலத்திற்கு முன்னே தொல்காப்பியம் செய்யப்பட்டது. இன்றுள்ள இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் எழுதப்படுவதற்கு முன்னே தொல்காப்பியம் எழுதப்பட்டது.”

    2. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. இந்த முத்தமிழ்ச்சங்க வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றைக் கொண்டு கணக்கிட்டால் சற்றொப்ப 1300 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது தொல்காப்பியம் என்று முடிவு கட்டலாம்.

    3. தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று கூறுவோர் உள்ளனர். தொல்காப்பியத்தில் கார்காலம் முதலில் கூறப்பட்டிருகின்றது. ஆதலால் இந்நூல் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக வழங்கிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுவே தொல்காப்பியம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொன்றியது என்போர் காட்டும் காரணமாகும்.

    4. மக்கள் இரும்பு, பொன் முதலிய உலோக வகைகளைக் கண்டுபிடித்தகாலம் கி.மு.5000 க்குப்பின் என்பர். தொல்காப்பியத்திலே உலோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதலால் அதன் காலம் கி.மு. 5000த்திற்கும் பிற்பட்டதுதான் என்பதில் ஐயம் இல்லை என்பர்.

    5. தொல்காப்பிய காலம் 2400 ஆண்டுகளுக்கு முன்னென்று மொழிவோரும் உள்ளனர். பாணினி இலக்கணத்திற்கு முன்னேயிருந்த ஐந்திர இலக்கணத்தைப் படித்தவர் தொல்காப்பியர். ஆகவே, தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முன்னே வாழ்ந்தவர். பாணினியின் காலம் கி.பி.4ஆம் நூற்றாண்டு, தொல்காப்பியர் கி.பி.4ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தவர். இந்தக் கணக்கு உண்மையானால் தொல்காப்பியம் 2400 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியதாகும்.

    6. தொல்காப்பியம் கி.பி.2ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது.1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்தான் தொல்காப்பியம்; இதற்கு ஆதரவு உண்டு என்போரும் உள்ளனர். இவ்வாறு கூறுவோர் சிறுபான்மையினர்.

    7. எந்த வகையில் பார்த்தாலும் தொல்காப்பியம் கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும். ஆகையால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலேயன்றி பிற்பட்ட நூலில்லை என்போரும் பலர். இது தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிடும் பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதோர் முடிவு என்பர் சாமி. சிதம்பரனார்.”3 மேலும்,

    “சுந்தரமூர்த்தி தொல்காப்பியக் காலத்தைப் பற்றி, சங்க இலக்கிய மொழி நிலையையும் தொல்காப்பிய மொழி நிலையையும் வைத்துப் பார்க்கின் இது சங்க இலக்கியங்களுக்கு முன்னர் எழுந்திருக்க வேண்டும் என்று கி.மு.மூன்றாவது நூற்றாண்டுப் பகுதியை ஒட்டிய காலப் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்றும் எண்ணுவர். சங்க இலக்கியங்கள் கி.மு. இரண்டாவது நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் பல நிலைகளில் தோன்றியுள்ளன அவர் எண்ணம்” என்று கூறுகிறார்.

    சான்றெண்:
    1.சண்முக.செல்வகணபதி. மொழி வரலாறும் மொழி இயலும்.,ப.1
    2.சி.பாலசுப்பிரமணியன்., தமிழ் இலக்கிய வரலாறு.,ப.18
    3.சாமி.சிதம்பரனார். தொல்காப்பியத்தமிழர்., பக்.6-10
    4. Sundaramurthi, Early Literary Theories inTamil., pg.3-7

    துணை நூற்பட்டியல்:
    1.செல்வகணபதி.சண்முக.,
    மொழிவரலாறும் மொழி இயலும்.,
    பழனி; சிட்டிப்பதிப்பகம்
    மு.பதி.2002

    2.சிதம்பரனார்.சாமி.,
    தொல்காப்பியத் தமிழர்.,
    சென்னை; நியூசெஞ்சூரி புக் ஹவுஸ்.,
    மு.பதி.2002

    3.பாலசுப்பிரமணியன்.சி.
    தமிழ் இலக்கிய வரலாறு.,
    சென்னை; மனமலர்ப் பதிப்பகம்.,
    மு.பதி.2003.

    4.Sundaramurthy.G.,
    Early Literary theories in Tamil.,
    Chennai; sarvoday ilakkiya pannai.,
    F.E.1947

    முனைவர் மா.சியாமளாதேவி,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை, அ.வ.அ. கல்லூரி,
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை

    Share
  • படக்கவிதைப் போட்டி – 44

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12395466_930420910345442_335089823_n
    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 1

    — முனைவர்   துரை. குணசேகரன்.

     

    மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

    கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
    படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
    முடியாத முதலோனை மூவர் பெருமானை
    வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே
    வள்ளி மணாளனைப்பேசா, வாயென்ன வாயே…

    என்னும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வரிகளாலே முருகப்பெருமானைப்போற்றி, மகாவித்துவானின் இலக்கியப்பணிகள் குறித்த என்னுடைய பேருரையைத் தொடங்குகின்றேன்.

    கம்பனைப்போல்
    வள்ளுவர்போல்
    இளங்கோவைப்போல்
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

    எனும் பாரதத்தில் ‘பா’ரத்தால் பவனிவந்த சாரதியாம் பாரதியின் பாடலில் சேர்க்கப்படவேண்டிய இன்னொருவர் உண்டென்றால் அவர்தாம் சிற்றிலக்கியக்களஞ்சியக் கருவூலமாம் 199 ஆண்டுகளுக்கு முன் இம்மண்ணில்தோன்றி, மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மாமனிதர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.

    காலத்தொடு கற்பனை கடந்த
    கருவூலத்துப் பழம்பாடல்
    கலைமாச் செல்வர்

    என்னும் குமரகுருபரர் சொற்களுக்கு இலக்கியமாய் வாழ்ந்தவர்.

    செந்தமிழ் வளர்ந்த தென்பாண்டி நாட்டில் மானிடர்போற்றும் மதுரைமா நகரில் இல்லறத்தை நல்லறமாய் நடத்துகின்றார் சிதம்பரம் பிள்ளை – அன்னத்தாச்சி இணையர். வாழ்வின் வளம்வேண்டி திரிசிரபுரம் எனும் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே காவிரித்தென்கரையில் உள்ள எண்ணெயூருக்கும் அதனை அடுத்து அதவத்தூருக்கும் வந்து குடியமர்கின்றனர். இணையர் நடத்திய இல்லறப்பயனாய், செய்த பெருந்தவத்தால் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம்நாள் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பிறந்தார்.

    கல்வியும் இல்வாழ்வும்:-
    ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’என்று பாடிய புறநானூற்றுப்புலவர் ‘சான்றோனாக்குதலை தந்தையின் கடனென்றார். அவரின் கூற்றை மெய்ப்பிக்கும்வகையில் சிதம்பரம்பிள்ளை, மகனை மற்றவர் போற்றும் மாண்புகள் மிகுந்தவனாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.

    ஆம், சிறுவயதிலேயே தந்தை கற்பிக்கும் பள்ளியில் பிள்ளைக்கும் பாடஞ்சொல்லித்தரப்படுகிறது. ஐந்து வயதில் தொடங்கிய கல்வியால் ஆத்திசூடி, நீதிநூல்கள் தொடங்கி, காலஞ்செல்லச்செல்ல அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், நிகண்டு, பிரபந்தம், சதகம், மாலை, நைடதம், நன்னூல் உள்ளிட்ட இன்றியமையா சிற்றிலக்கியவகைகள் மற்றும் இலக்கணங்களையும் பிழையறக்கற்றுக்கொண்டார். பள்ளியில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் உள்ள சட்டாம்பிள்ளையாக உயர்ந்தார்.

    பன்னிரண்டு வயதிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றலைப்பெற்றார். படிக்கும் நூல்களை ஏட்டில் எழுதும் பயிற்சியையும் பெறுகிறார். சூழலைக்கொடுத்து செய்யுள் செய்யும் பழக்கத்தையும் காலஞ்செல்லச்செல்ல திரிபு, யமகம், சிலேடை அமைத்து பாவியற்றும் கலையையும் கற்றுக்கொள்கிறார். விரைந்து, குறுகிய காலத்திலேயே பிந்தைய நிலையில் கற்க வேண்டியதனைத்தும் கற்றுக்கொள்வதுடன், தந்தைசென்று பாடஞ்சொல்லும் இடத்துக்கும் உடன் சென்றுவரலானார். தந்தை செல்லமுடியாத காலத்தில் மீனாட்சிசுந்தம் அவர்களே சென்று பாடம்நடத்தி வருகிறார். பிள்ளையின் திறமறிந்தோர் தந்தைக்கு அளிக்கும் மதிப்பையும் மரியாதையையும் அளிக்கின்றனர்.

    வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழிஉடைந்தாற்போல மீனாட்சிசுந்தரம் பிள்ளை நன்கு வளர்ந்துவரும் சூழலில், பதினைந்து வயதில் தந்தை சிதம்பரம்பிள்ளை மறைவெய்துகிறார். அதுவரை, தாம்பிறந்த அதவத்தூரில் வாழ்ந்துவந்த பிள்ளையவர்கள், திரிசிரபுரம் மலைக்கோட்டையில் உள்ள தெற்கு உள்தெருவில் வாடகை வீடொன்றில்வந்து குடியேறுகிறார். காவேரிஆச்சி என்னும் மங்கை நல்லாளை நண்பர்களும் உறவினர்களும் மணமுடித்து வைக்கின்றனர்.

    தந்தை மறைந்தாலும் கல்வி கற்பதை மறக்கவில்லை. உறையூர் முத்துவீரராகவே முதலியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார், வீரநாயக்கன்பாளையம் இருளாண்டிவாத்தியார் பாலக்கரை வீரராகவசெட்டியார், கோட்டடி ஆறுமுகம்பிள்ளை, கல்குடி மருதமுத்தப்பிள்ளை, வேலாயுதமுனிவர், கீழ்வேளுர் சுப்பையாபண்டாரம், திருநயம் அப்பாவையர், வேலாயுதமுதலியார், கீழ்வேளுர் சுப்பிரமணியதேசிகர், திரிசிரபுரம் கோவிந்தம்பிள்ளை போன்ற தலைசிறந்த கல்விமான்களிடம் எழுத்து, சொல், பொருள், யாப்பு என்னும் நான்கு இலக்கணங்களை ஐயமறக்கற்றுக்கொண்டார்.

    ஐந்தாம் இலக்கணமாம் அணியிலக்கணத்தைக்கற்பிக்க, உரிய ஆசிரியர் கிடைக்காமையால் தண்டியலங்கார ஆசிரியரை எதிர்பார்த்துக்காத்திருந்தார். அவ்வயம் வீடுவீடாக சென்று பிச்சையேற்று வாழ்க்கைநடத்திவரும் பரதேசி ஒருவர், அணியிலக்கணம் அறிந்தவர் என்பதை அறிகிறார். ஆனால், அப்பரதேசி எவரையும் மதிக்கும் இயல்பு அற்றவர் என்பதும் தெரியவருகிறது.

    தானே தரக்கொளி னல்லது தன்பால்
    மேவிக் கொளக்கொடா விடத்து மடற்பனை

    என்பதனையொத்து, தம்மை நாடிவருவோருக்கு சிலதமிழ் நூற்கருத்துகளை உரைப்பார் என்பதனை அறிந்து, அவரிடம் சென்று எவ்வாறேனும் அணியிலக்கணம் கற்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார். பரதேசி பிச்கை ஏற்கும் காலமறிந்து கூடவேசென்று அவருக்குப்பிடிக்கும் பொருள் கீழ்த்தரமான ஒன்று என்று அறிந்தும், அவர்விரும்பும் போதைப்பொருளில் ஒன்றை வாங்கிச் சென்று காலமறிந்து கொடுக்கிறார். அணியிலக்கணம் மட்டுமன்றி வேறுசில நூல்களைப்பெற்றும் பிள்ளையவர்கள் தன்னை மேம்படுத்திக்கொண்டதாக உ.வே.சா. குறிப்பிடுகின்றார்.

    ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்றே’

    என்னும் புறப்பாடலின் பொருளை அறிந்தவர் அன்றோ. இவ்வகையில் ஐந்திலக்கணத்தில் பிள்ளையவர்கள் தேர்ச்சி பெற்றவராகிறார். மேலும்,
    நினைத்த மாத்திரத்தில் நினைத்த அளவு கவிதைபாடும் ஆசுகவி,
    இனிமையாக இசையுடன் கவிபாடும் மதுரகவி,
    சித்திரவடிவில் பாவியற்றும் சித்திரக்கவி,
    சுருங்கிய பொருளை விரித்துப்பாடும் வித்தாரக்கவி
    எனும் நால்வகையிலும் செய்யுளியற்றிப்பாடும் ஆற்றலை உரிய அறிஞர்களின்வழி கற்றுக்கொள்கிறார்.

    செய்யுள் இயற்றும் பயிற்சி:-
    பாடங்களை உரிய ஆசிரியர்களை நாடிக்கேட்டு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொண்ட பிள்ளையவர்கள், நல்லவாய்ப்புகள் வழி அவற்றைச்செயல்படுத்தும் பயிற்சியைப் பெறுகிறார். தந்தையார் காலத்தில் பாடஞ்சொல்லி முடித்தபின் பிள்ளையுடன் உடன் பயின்ற மாணவர்களையும் கடைக்கு அனுப்பி, வீட்டிற்குத்தேவையான பொருள்களை வாங்கிவரச்சொல்வது பழக்கம். அப்போது பிள்ளையவர்களும் மாணவர்களும் ஒருசெய்யுளை ஒருவர் சொல்ல, அதன் இறுதிச்சொல்லை முதலாகக்கொண்டு அந்தாதி முறையில் வேறொருவர் வேறாருசெய்யுளைக் கூறுவர். இவ்வகையில் அவரவர் அறிந்த செய்யுளை அனைவரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

    சங்கச்சாவடியைக்கடந்து பிள்ளைகள் செல்லும் பொழுது அங்குப்பணிபுரியும் அரங்கபிள்ளை என்பவர், சிதம்பரம் பிள்ளையின் மாணவர்கள் என்பதை அறிந்து அப்போது நடைபெற்றுவரும் பாடங்கள் குறித்தும் மனப்பாடம் செய்துள்ள பாடல்கள் குறித்தும் வினவுவார். செய்யுள் இயற்றும் வழியை அறிந்திருக்கிறீர்களா? என்ற வினவலுடன் ஒருமுறை விநாயகர் குறித்து ஒரு வெண்பாவைச்செய்யுங்கள் என்றாராம். அவ்வமயம் அனைவரும் அதுகுறித்து சிந்தனை செய்து கொண்டிருக்கையில் பிள்ளையவர்கள்,

    “பாரதத்தை மேருப்பருப் பதத்திலே எழுதி
    மாரதத்தைத் தந்தையிவர் வண்ணஞ்செய் சீருடையோய்
    நற்றழிழை யாங்கணயந்து கற்றுத் தேறமனத்
    துற்றருளை எங்கட் குதவு”

    எனும் வெண்பாவை விரைந்து எழுதித்தருகிறார். இதே போன்ற வழக்கத்தை ஒவ்வொருமுறையும் செய்யவைத்து, வெண்பாவிற்கு ஒரு பணமாகிய இரண்டு அணா கொடுத்து அனுப்புவாராம். இப்பயிற்சி பிள்ளையவர்கள் எதிர்காலத்தில் கடல்திறந்த மடையாக, பாக்களைக்கொட்டுவதற்குக்களனாக – பயிற்சிக்களமாக அமைந்தது.

    இதேபோன்று திரிசிரபுரம் மலையாண்டிப்பிள்ளை என்பவர் பிள்ளையவர்களின் ஆற்றலை அறிந்து, தம் ஊரிலுள்ள மிராசுதார் ஒருவரின் இல்லம் அழைத்துச்சென்று சிறப்பாக அறிமுகம் செய்தார். அருகில் இருந்த ஒருவர் ஒருபாடலைக்கூறி ‘இப்பாட்டுக்கு அர்த்தம் சொல்’ என்று கேட்க, உடனே பொருளுரைக்கிறார். இதனையே ஈற்றடியாகக்கொண்டு ஒருவெண்பாப்பாடு என்று சொல்ல, ‘சொல்’ என்பதற்கு ‘நெல்’ என்னும் பொருள் கொண்டு எழுத, அது பொருந்தாமையால் ‘தூய’ என்பதனை முன்னே வைத்து, உடனே பாடிமுடிக்கிறார். கேட்ட மிராசுதாரர் ஒருவண்டிநெல் கொடுத்தனுப்புகிறார். இது பிள்ளைக்கு மட்டுமன்றி, ‘தன் மகனைச்சான்றோன் எனக்கேட்கும் தந்தைக்கும்’ நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தன.

    தந்தையார் சோமரசம்பேட்டை எனும் ஊரில் மறைந்தார். மறைந்த ஆண்டு ‘விரோதி’ என்பதாகும். வேதனையின் விளிம்பிற்கே சென்ற பிள்ளையவர்கள்,

    “முந்தை அறிஞர் மொழிநூல் பலநவிற்றும்
    தந்தை எனைப்பிரியத் தான்செய்த – நிந்தைமிகும்
    ஆண்டே விரோதியெனும் அப்பெயர்நிற்கே தகுமால்
    ஈண்டேது செய்யாய் இனி”

    என்று வெண்பாப்பாடுகிறார். இப்பயிற்சிகள் பிற்காலத்தில் படைப்புலக அரிமாவாகத் தமிழகத்தில் பிள்ளையவர்கள் வலம்வர பேருதவியாய் இருந்தது.

    சென்னைப்பயணம்:-

    “நவில்தொறும் நூனயம் போன்று பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு”

    எனும் மொழிக்கேற்ப எண்ணற்ற நூல்களைப்பயின்று தமது அறிவெல்லையை விரிவுபடுத்திக்கொண்டார். தாம் வாழும் இடத்தைச்சுற்றியுள்ள தமிழறிஞர்களிடம் மட்டும் கற்றகல்வி போதாது என்று எண்ணினார். சென்னையில் கல்விச்சங்கம் ஒன்று நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் தமிழ் வித்துவான்களை வரவழைத்து மாணாக்கர்களுக்குப்பாடம் புகட்டுதல், பழைய தமிழ்நூல்களைப்புதிப்பித்தல், செய்யுள் வடிவிலான நூல்களை எழுதுவித்தல், கல்விநிலையங்களுக்கு ஏற்றவகையில் உரைநடையில் இலக்கணங்களையும் பாடங்களையும் இயற்றச்செய்தல், வடமொழி உள்ளிட்ட பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் முதலான பணிகளைச்செய்து வருவதை அறிந்துகொள்கிறார். சென்னை செல்லுவதற்கும் அங்கே தங்கித் தமிழறிஞர்களைச் சந்தித்து வருவதற்கும் பொருட்செலவு குறித்து சிந்தித்து வருகிறார்.

    இலக்குமணப்பிள்ளை மகாவித்துவானை ஆதரித்து வருபவர்களில் ஒருவராவார். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அவரின் வழக்கை நடத்துவதற்குரிய சரியான நபர் யார்’ என்பதை சிந்தித்து, மகாவித்துவானின் நினைவு வரவே, அவரை அனுப்பலாம் என்று முடிவுக்கு வருகிறார். காலம் கனிந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அது இதுதான் போலும் இதனை,

    நித்தியத் தரித்திரராய் உழைத்துழைத்துத்
    தினைத் துணையும் பயனின்றிப் பசித்தமக்கள்
    சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
    கணத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

    என்று புரட்சிக்கவியில் பாவேந்தர் பாடுவாரே அந்த இன்பத்தினை மகாவித்துவான் அடைந்திருப்பார்.

    சென்னையை அடைந்த பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஸ்ரீதாண்டவராயத்தம்பிரான், காஞ்சிபுரம் சபாபதிமுதலியார், எழும்பூர் திருவேங்கடாசலமுதலியார், திருத்தணிகை விசாகப்பெருமாளையர், திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை, சென்னையில் விநாயகப்புராணத்தை கச்சியப்ப முனிவர் அரங்கேற்றம்செய்தபொழுது அதற்குசிறப்புப்பாயிரம் அளித்த போரூர் வாத்தியார், அட்டாவதானம் வீராசாமி செட்டியார், புரசைஅட்டாவதானம் சபாபதி முதலியார் போன்றவர்களிடம் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், காஞ்சிபுராணம், சைவப்பிரபந்தங்கள், திருவாரூர்த்தலபுராணம் உள்ளிட்ட நூல்களில் ஏற்பட்ட ஐயங்களைத்தீர்த்துக்கொண்டார்.

    கல்லாடம், திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவையார், திருக்குறள் பரிமேலழகர் உரை, கம்பராமாயணம், பாகவதம், திவ்வியப்பிரபந்தம் போன்ற நூல்கள் தொடர்பான பாடங்களையும் தெளிவுபடுத்திக்கொண்டார். ஒவ்வொரு நாளையும் மூன்றாகப்படுத்திக்கொண்டு முற்பாகத்தில் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடத்தும், பிற்பகலில் எழும்பூர்த்திருவேங்கடாசல முதலியாரிடத்தும் கதிரவன் மறைவிற்குப் பின் மயிலை திருவண்ணாமலைமடத்துதிருவம்பலத்தின்னமுதம்பிள்ளையிடத்தும் சென்று அவர்களுக்கு ஆகவேண்டிய எழுதுதல், ஒப்புநோக்குதல் முதலான பணிகளைச் செய்துவிட்டு, தக்கநேரத்தில் பாடங்கேட்டுவருதலை வழக்கமாகிக்கொண்டிருந்தாராம். இவர்களில் எவருக்கேனும் பாடஞ்சொல்ல நேரமில்லையாயின் அதனை முன்பே தெரிந்துகொண்டு அந்த நேரத்தில் பிறஅறிஞர்களிடம் பாடம் கேட்கச்சென்று விடுவாராம்.

    பிள்ளையவர்கள் மேற்படிக்காலத்தை எவ்வாறு பொன்னான காலமாக எண்ணிச்செயல்பட்டுள்ளார் என்பதை உ.வே.சா. போன்ற மாணவர்களுக்குச் சொல்லுவாராம். திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை வீட்டிற்குச் செல்லும் பொழுது அருள்மிகு கபாலீசுவரர்கோவில் வாயில் வழியாகத்தான் போவார்களாம். உள்ளே சென்று வழிபட விருப்பம் இருந்தும் நேரம்போய்விடுமே என்னும் கவலையால் வெளியில்நின்றே வழிபட்டுச் செல்வதாக உ.வே.சா பிள்ளையவர்கள் குறித்த வரலாற்றில் குறிப்பிடுகின்றார்.

    அறிஞர் பாராட்டு:-
    ‘அடக்கம் அமரருள் உயக்கும்’ என்பது வள்ளுவரின் வாக்கு அல்லவா? இது பிள்ளையவர்களுக்கு மிகவும் பொருந்தும். சென்னையில் இருந்தநேரம் சபாபதி முதலியார் அவர்கள் பிள்ளையவர்களை மகாலிங்கையர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். இருவரும் தமிழ்மலைகள். நீங்கள் எந்த நூலை வாசித்திருக்கின்றீர்? அவற்றில் ஒன்றிலிருந்து ஒரு பாடலைச்சொல்லுங்கள் என்றாராம். உடனே,

    இரசத வரையமர் பவள விலங்கல்
    இடம்படர் பைங்கொடியே
    இமையவர் மகிழ்வொடு புகழுஞ் சிமயத்
    திமயம் வரும்பிடியே….

    என்று தொடங்கி,

    மதுரித நவரசம் ஒழுகக் கனியும்
    வளத்த நறுங்கனியே
    தரணி மிசைப்பொலி தருமக்குயிலே
    தாலே தாலேலோ
    தழையும் தந்தி வனத்தமர் மயிலே
    தாலே தாலேலோ

    என்று நிறைவு செய்கிறார். பொருளையும் தக்கவாறு எடுத்துரைக்கிறார். கேட்ட மகாலிங்கயைர், ‘இப்பாடல் ஒரு பிள்ளைத்தமிழில் உள்ளது போலிருக்கிறது. சொற்களும் பொருளும் நயம்பட உள்ளன. இது திரிசிரபுரம் முதலிட இடங்களில் மட்டும்தான் வழங்குகிறது போலும். இதன்பெயரையாவது ஒருவரும் நம்மிடம் சொல்லவில்லையே’ என்று ஏக்கத்துடன், ‘இச்செய்யுள் எந்தநூலில் உள்ளது? இயற்றியவர் யார்?’ என்று வினவுகிறார்.

    மிகவும் அடக்கத்தோடு, ‘இது அடியேன் இயற்றிய அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழில் உள்ளது’ என்கிறார். ‘இவ்வளவு அருமையான நூலைப்படைத்தவர் அடங்கியிருப்பது வியப்பாக உள்ளது. இதைப்படைக்க எவ்வளவு நூல்பயிற்சியைப்பெற்றிருக்க வேண்டும் என்று பலவாறாகப்பராட்டி பலமுறை அச்செய்யுளைக்கூறச்சொல்லிக்கேட்டுமகிழ்ந்தாராம். இந்நூல் இதுவரை அச்சேறவில்லையென்றால் உடனே அம்முயற்சியில் இறங்குங்கள் என்று கூறியதுடன், ‘இந்த நகரில் எவ்வளவுநாள்; தங்கினாலும் என்னுடன்தான் தங்கவேண்டும். யோசிக்க வேண்டாம். ஆகவேண்டிய காரியம் எதுவாக இருப்பினும் முடித்துத்தர ஏற்பாடு செய்கிறேன்’ என்று அன்பொழுக வேண்டிக்கொண்டாராம். கற்றோருக்குச்சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்களே அது இதுதான் போலும்.

    பிறகு மகாலிங்கையருடன் பழகும் வாய்ப்பினை மிகுதிப்படுத்திக்கொண்டார். நன்னூல் விருத்தியுரை, காரிகையுரை தண்டியலங்காரவுரை நாற்கவிராச நம்பியகப்பொருளுரை முதலான நூல்களில் தமக்கிருந்த ஐயங்களைப்போக்கிக் கொண்டார். அதுவரை அவருக்குக்கிடைக்காமலிருந்த இலக்கணக்கொத்துரையையும் பெற்றுக்கொண்டார். அதனைக் கொடுக்கும்பொழுது, ‘இந்நூல் கிடைக்காமல் பலவிடங்களில் அலைந்தேன். திருவாவடுதுறை மடத்திலும் இல்லை. பின் தாண்டவராயத்தம் பிரானிடத்தே பெற்றேன். இதனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்’ என்று கொடுத்தாராம். அதனை உடனே படியெடுத்துக்கொண்டதாகக்குறிப்பு உள்ளது. மகாலிங்கையரின் வேண்டுகோளான அகிலாண்டநாயகிபிள்ளைத்தமிழ், திரிசிரபுரம் இலக்குமணப்பிள்ளையின் பொருளுதவியால் அச்சிடப்பெற்றது. இதுகுறித்து என் உரையில் பின்னால் சொல்லவிருக்கிறேன். இதேபோன்று பிள்ளையவர்களின் அச்சான படைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. உரையின் விரிவஞ்சி விட்டுவிடுகிறேன்.

    இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர் கற்றது
    உணர விரித்துரை யாதார்

    என்னும் குறள்நெறிக்கேற்ப, கற்ற கல்வியின் சிறப்பே எடுத்துரைக்கும் ஆற்றலில்தான் உள்ளது. அவ்வகையில் தந்தைஅளித்த பயிற்சியாலும் தாம் செய்த முயற்சியினாலும் பிள்ளையவர்கள் கல்விச்செல்வம் நிரம்பிய நிறைகுடமாய், ஆன்றவிந்தடங்கிய கொள்கைச்சான்றோராய் விளங்கினார். தான்பெற்ற இன்பம் இவ்வையகம் முழுதும் பெருக பாடம்சொல்லும் செயலில் இறங்கினார்.

    பெரியபுராண விரிவுரை:-
    பிள்ளையவர்கள் பெரியபுராணத்தின்மீது ஈடுபாடு கொண்டு அதனை ஐயமற அறிந்து கொண்டார்கள். அதனை விரிவுரையாக நிகழ்த்தினால் தமிழ்ச்சுவையையும் பக்தியின் மேன்மையையும் பலரறியக்கூடும் என்பதால் தக்காரை அணுகி விரிவுரையை நிகழ்த்திவருகிறார். சமயக்காழ்ப்புணர்ச்சியால் பொறாமைகொண்ட சிலரால் விரிவுரை தடைபடுகிறது. காரணம் பெரியபுராணத்தில் வரும் ஒவ்வோர் அடியவரின் புராணத்திலும் அவரின் மரணம் குறித்து செய்திவருவதால் அமங்கலமுடிவாயிருக்கின்ற இந்த நிகழ்வை ஒரு வீட்டில் நடத்தலாமா? என்று இல்லத்து உரிமயாளரை கலைத்துவிடுகிறார்கள். மொழிப்பற்று இல்லாதவரிடத்து இவ்விரிவுரை பயன்தராது என்று உரை நிறுத்தப்படுகிறது. சிலரின் வேண்டுகோளுக்கேற்ப பின்பு வேறொரு இடத்தில் எஞ்சிய பகுதி தொடங்கப்பெற்று நிறைவடைகிறது.

    இதேபோல பிள்ளையவர்களின் சீர்காழிக்கோவை உள்ளிட்ட ஒருசிலபடைப்புகளில் அரங்கேற்றத்தின்பொழுதும் இப்படிப்பட்ட இடர்பாடுகளைச் சந்தித்துள்ளார். காலப்போக்கில் அவையெல்லாம் நீங்கியது மட்டுமன்றி, ‘பிள்ளையவர்கள் நம்பகுதிக்கு வரமாட்டார்களா? நம்மூரைப்பற்றித்தலபுராணங்கள் பாடமாட்டார்களா’ என்று மக்கள் ஏங்கித்தவித்த காலம் உருவாயிற்று.

    (தொடரும்)

    குறிப்பு:-
    இவ்வுரையின் ஒருபகுதி, காரைக்கால் பண்பலை 100.3இல் 08.05.2015 இரவு 08.30க்கு இலக்கியச்சோலை பகுதியில் ஒலிபரப்பானது.

     

     

     

    முனைவர் துரை. குணசேகரன்
    தலைவர் தமிழாய்வுத்துறை
    அ.வ.அ.கல்லூரி (தன்னாட்சி)
    மன்னன்பந்தல்,மயிலாடுதுறை

    *********************

    Share
  • குறளின் கதிர்களாய்…(100)

    –செண்பக ஜெகதீசன் 

    படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
    உடல்சுவை உண்டார் மனம்.   (திருக்குறள் -253: புலால்மறுத்தல்) 

    புதுக் கவிதையில்… 

    கொலைக் கருவியைக்
    கொண்டவனிடத்தில்
    கொஞ்சமுமிருக்காது இரக்கம்! 

    அதுபோல்,
    மற்ற உயிரழித்து

    மாமிசம் உண்போர்
    மனத்திலும் இருக்காது
    நல்லதாம் அருள்! 

    குறும்பாவில்… 

    வாளுடையானிடம் இருக்காது இரக்கம்,
    உயிர்வதைத்து ஊனுண்போரிடம்

    உறையாது அருள்! 

    மரபுக் கவிதையில்… 

    கரத்தினில் ஆயுதம் எடுத்தேதான்
        –காவு கொள்ள நிற்போர்க்கே
    இரக்கம் என்றும் இருப்பதில்லை
        –இதயம் கல்லாய்ப் போய்விடுமே,
    தெரிந்திடு இதுதான் கதையாகும்

        –துடிக்கத் துடிக்க உயிர்வதைத்துத்
    தெரிந்தே மாமிசம் உண்போரிடம்
        தங்கா துண்மை அருளதுவே! 

    லிமரைக்கூ… 

    கொலைவாளன் மனமது ஈரமிலா இருளே,
    கொன்ற உடலை உண்போரிடம்

    என்றும் தங்காது மனதினில் அருளே! 

    கிராமிய பாணியில்… 

    கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,
    திங்காத திங்காத ஒடம்பத்திங்காத… 

    எரக்கமில்ல எரக்கமில்ல,
    அடுத்தவன அழிச்சிடவே

    ஆயிதத்த எடுத்தவங்கிட்ட
    எரக்கமில்ல எரக்கமில்ல
    மனசுலத்தான் எரக்கமில்ல… 

    அதுபோல
    உயிரக்கொன்னு ஒடம்பத்தின்னா
    அருளுயில்ல இருளேதான்… 

    அதால
    கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,
    திங்காத திங்காத ஒடம்பத்திங்காத! 

     

     

    Share
  • மார்கழி மணாளன் – 5 திருமலை (திருப்பதி) ஸ்ரீ வேங்கடாசலபதி  

     க.பாலசுப்பிரமணியன்

    96acbbf9-6813-401e-8ad1-f1f7968c3116

    விழித்தாலும் வேங்கடத்தில் விழிக்கவேண்டும்

    விழியிரண்டும் வேங்கடனைப்  பார்க்கவேண்டும்

    கோவிந்தாவெனக் குரல்கொடுக்க வேண்டும்

    குறைகளெல்லாம் அவனிடமே சொல்லவேண்டும் !

     

    ஆனந்த நிலையம் அவன் கோவில்

    ஆறுதல் அடைந்திட அவன் பாதம்

    அருள் வெள்ளம் அவன் திருமேனி

    அணைத்திடுமே அவன் அபயக்கரம் !

     

    ஏழுமலை ஏறிவந்தால் போதும்

    ஊழ்வினைகள் உருக்குலைந்து ஓடும்

    ஏழ்மையின் பொருளறிந்த வாசன்

    எழுபிறப்பும்  உயிர் காக்கும் நேசன் !

     

    பிரபந்தங்கள் பாடி வந்த பெரியோர்கள்

    பிரபஞ்சத்தில் வியந்து நின்ற தெய்வமன்றோ !

    தங்காத தங்கத்தை அவனுக்குத் தந்தாலும்

    தங்கி நின்று அருள் செய்யும் திருமாலன்றோ !

     

    திருமங்கை வாழ்கின்ற திருமார்பை

    தாளால் மிதித்திட்ட தவத்தோன்

    தாள் பிடித்த தெய்வமன்றோ நீ !

    தந்தருள்வாய் நின் தாளை நான் பிடிக்க !

     

    தானழித்து தலைமழித்துத்  தாள்தேடி வந்துவிட்டால்

    தந்தையாக நீயிருப்பாய் திருமாலே! தாமோதரா !

    மலையேறி வந்தோர் தம் மனம் கொள்வாய்

    மங்கையுடன் வந்தே நீ அருள் தருவாய் !

     

    அலர்மேல் மங்கையவள் அருள்பார்வை ஒரு பக்கம்

    அன்புடனே இலக்குமியும் இதயத்தின் ஒரு பக்கம்

    கண்மூடியே காதல் செய்யும் கள்வனவன் கண்ணன்

    கார்மேகன் கொடுப்பதிலே குறையில்லா குபேரன் !

     

    ஏழுமலைவாசன் இதயத்தில் இருந்தால்

    எழுகின்ற கதிரவனாய் ஒளி தருவான்

    ஏழு பிறப்பிற்கும் தருவான் செல்வம்

    ஏழ்மையால் வலிக்காத வாழ்வின் வண்ணம் !

     

    மலர்வாசம் கனிவாசம் மாதவன் பெயர்வாசம்

    மார்கழி வைகறை வாசலில் மண்வாசம்

    மனங்குளிரக் காலையில் பாவைக் குரல்வாசம்

    மனிதங்கள் காத்திடுமே திருமலை ஸ்ரீனிவாசம் !

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 191 

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

    படைத்துக்கோள் பெயர்

    குரல் நரம்பை
    மாயவன் என்று அழைத்தாள்;
    இளி நரம்பினை வீரம் மிக்க
    பலராமன் என்று அழைத்தாள்;
    துத்த நரம்பினை
    நப்பின்னை என்று அழைத்தாள்;
    மற்றைய நரம்புகள்
    முன்னர் இருந்த மரபுப்படியே
    ஏற்ற பெயர்களைப் பெறும் என்றாள்.

    மாயவன் என்றழைக்கப்பட்ட
    நரம்புக்கு அடுத்து,
    பின்னை என்றழைக்கப்படும்
    துத்தமும் தாரமும் நின்றன.

    பலதேவன் என்றழைக்கப்பட்ட
    இளி நரம்பினைச் சேர
    உளரியும் விழையும் நின்றன.

    கைக்கிளை நரம்பு பின்னைக்கு
    இடப்பக்கம் நின்றது.

    விளரி நரம்பு தாரத்துக்கு
    வலப்பக்கம் நின்றது.

    வளம்பொருந்திய துளப மாலையை
    மாயவன் எனும் கண்ணன் தோளில் சார்த்தி,
    கூத்து நூல் பகரும் இயல்பில் இருந்து நீங்காது
    குரவைக் கூத்தாடத் தொடங்கினாள்.

    உலகினை அளந்த திருமால் தன் மார்பில் இருக்கும்
    இலக்குமியை நோக்காததற்குக் காரணமான
    வளையணிந்த கைகளையுடைய
    நப்பின்னைதானே யாம் என்று மாதரி வியந்தாள்.

     

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (8)

    க. பாலசுப்பிரமணியன்

    ஒலியும் உணர்வும்

    education

    ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் பல படிகள் உள்ளன. இவற்றை நாம் வளர்ச்சியின் மைல் கற்கள் என்றே சொல்லலாம். உதாரணமாக ஒலிகளை அறிதலும் அந்த ஒலிகளுக்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்துதலும் முக்கியமான நிகழ்வு.  சில வாரங்களே ஆன ஒரு குழந்தை ஒரு ஒலியைக்கேட்டதும் அதன் கண்கள் அந்த ஒலி வரும் திசையை நோக்கிச் செல்கின்றன. (sensory Response). அந்த ஒலியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அந்தக் குழந்தைக்கு வருவதற்குமுன் அதைப் பற்றிய ஒரு பய உணர்வு அதன் மனத்தில் தோன்றுகிறது. இந்த நேரத்தில் அந்த பய உணர்வை நீக்கி ஒரு பாதுக்காப்பான செய்தியைத் தருதல் தாயின் முக்கிய கடமை. வரும் ஒலிகளுக்கு ஏற்றவாறு அந்தக் குழந்தையின் விழிகளின் நகர்வுகளைக் கவனித்து செயல் படுதல் அவசியம்.

    சில நேரங்களில் அந்த ஒலி அதிர்வுகள் குழந்தைக்குத் தாங்கமுடியாத பய உணர்வை ஏற்படுத்தும் பொழுது தன் துயரத்தை அழுகை மூலமாகமும் உடல் நகர்வுகளின் மூலமாகவும் வெளிப்படுத்தும். தாய் அந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு குழந்தையோடு உறவாட வேண்டும். குழந்தைகளை அணைத்தும் கொஞ்சியும் பேசியும் சிரித்தும் பயமான சூழ்நிலையிருந்து வெளிக் கொணர வேண்டும்.

    ஒரு குழந்தை ஒரு ஒலியைத் திரும்பத் திரும்பக் கேட்கும் பொழுது அந்த ஒலி அலைகளும் அதனைச் சார்ந்த உணர்வுகளும் குழந்தையின் மூளையில் அழுத்தமாகப் பதிவாகின்றன. அந்த நிலையில் குழந்தை முந்தைய பய உணர்வுகளிலிருந்து விடுபட்டு அந்த ஒலி அதிர்வுகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது, பொதுவாக குழந்தைகளோடு உறவாடும் பொழுது சத்தமாகப் பேசுதல், அலறுதல், கத்துதல் போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் இப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் நீண்ட காலம் வரை தொடரும் வாய்ப்புகள் உண்டு.

    முந்தைய நாட்களில் குழந்தைக்குத் தொட்டிலிட்டு தாயோ உறவினரோ பாடிய தாலாட்டுக்கள் குழந்தைகளின் மன நலத்தை வளர்ப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தன. இசை, இனிய குரல், ஒலி வளம் மற்றும் சொல் நயங்கள் குழந்தையின் உணர்வுகளோடு நல்லுறவை ஏற்படுத்தி அன்பான அமைதியான பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. குழந்தையின் வளர்ச்சிப்பாதையில் இசைக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் இசையின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும் மற்றும் அதை வளர்ச்சிப் பாதையில் இணைக்க வேண்டும்.

    இசை என்று சொல்லும் பொழுது அது படங்களில்; வருகின்ற பாடல்களைக் குறிக்காது. ஆக்கப்பூர்வமான உணர்வுகளை மென்மைப்படுத்துகின்றவற்றை குறிக்கும். தற்போது நடந்து வரும் மன நலம் பற்றிய ஆராய்ச்சிகளில் எவ்வாறு ஒலியும் சொற்களும் மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, எவ்வாறு அவை ஒரு தனி மனிதனின் சிந்தனையையும் உணர்வுகளையும் பாதித்து அவன் வாழ்க்கை முறைகள் மீது தங்கள் பாதச் சுவடுகளை விட்டுச் செல்கின்றன என்று வெளிப்பட்டிருக்கின்றது.

    ஆகவே வளரும் பருவத்தில் நல்ல மன நலத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான மன நலத்தை பேணக்கூடிய ஒலிகளையும் இசை வடிவில் அளித்தால் குழந்தைகள் பிற காலத்தில் சிறப்பான உணர்வுகளோடு வாழ வழி வகுக்கும்.

    தொடருவோம்

    Share
  • ஊமைச் சங்கிலிகள்

    சந்தர் சுப்பிரமணியன்

     

    உறவினரின் வீட்டில் விஷேசம்.

    ‘அடையாளமே தெரியலையே’
    ‘கண்டிப்பா வீட்டுக்கு வாப்பா’
    ‘உன்னையெல்லாம் பார்த்தே ரொம்ப நாளாச்சு’
    ‘மதுரைக்கு வந்த வாப்பா’
    ‘என் பையன் உன்னைப் பத்தித்தான் ரொம்ப பேசிட்டே இருப்பான்’
    ‘மீசையும் அதுவுமா, பெரிய ஆளாயிட்டியே’
    ‘ஏன்டா, எங்க முகமெல்லாம் மறந்தே போச்சா?’
    ‘உங்க மாமா போனபோதும் நீ வரலியா?’
    ‘அப்பப்போ வந்து பாத்துட்டுப் போப்பா’
    ‘கிருஷ்ணன் தெரு, அந்த முக்கு வீட்டுலேதான இன்னும் இருக்கே?’

    – மீண்டு, வீடுவந்துசேர மாலை ஆயிற்று.

    அவசர அவசரமாகக் கதவைத் திறந்து,
    தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினேன் –
    தொடர்கதை ஆரம்பித்துவிட்டிருப்பான்.

    Share
  • மக்களைப் பெற்ற மகராசி!

    -ரா. பார்த்தசாரதி

    வாழ்வின் ஏட்டினைத் திருப்பிப்  பார்த்தேன்
    வலிதாங்கா இளமைபருவத்தை  எண்ணிப் பார்த்தேன்
    எழுதுகோலைத்  துணிவுகொண்டு கையில் எடுத்தேன்
    அன்னை சரோஜாவின் அருமையினை எழுதத் துணிந்தேன்!

    மக்களைப் பெற்ற மகராசியே  தாய்தான்
    குடும்பத்தின் ஆணிவேராய் இருப்பதும் தாய்தான்
    ஞானியும், துறவியும் போற்றும் தெய்வம்
    ஞாலம்  புகழ்ந்திடும் சிறந்த தெய்வம்!

    ஏழு பிறவி எடுத்து ஏழு பிள்ளைகள் பெற்றாய்
    ஏழு ஏழு ஜென்மத்திற்கு ஓர்  தொடர்பு வைத்தாய்
    ஏழிலே ஒன்றே ஒன்று  பெண் ஆனாலும்
    எல்லோரிடத்திலும் மாறா அன்பும் பாசமும் வைத்தாய்!

    ஓய்வின்றி உறக்கம்மின்றி  உன்உயிரைக் கூட
    ஒவ்வோர்  பிறவிக்கும் பணயம் வைத்தாய்
    உன்னை வையகம் எந்நாளும் போற்றுமே
    உன்அருமை அறியாப் பிள்ளைகளைத்  தூற்றுமே!

    பாசமுள்ள வேளையிலே காசு பணம்  கூடலியே
    காசுவந்த   வேளையிலே பாசம் வந்து சேரலியே
    பருவத்திலே நாங்கள் பட்டவலி தாங்கலியே
    வார்த்தையிலே வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லையே!

    பாசத்தோடு வாழ்வதுதான் தாயின் குணமே
    பாசத்துடன்  இருப்பதுதன் பிள்ளைகளுக்கும்  நலமே
    எனக்கென்று துன்பம்வந்தால் உனக்கென்று வேறு பிள்ளையுண்டு
    உனக்கென்று துன்பம் வந்தால் எனக்கென்று வேறு தாயுண்டோ?

    தாயைவிடச்  சிறந்த தெய்வம் இல்லை
    திசை நான்கும்  அவள்போல் எவரும் இல்லை
    தாயின் பெருமையினைச் சொல்ல வார்த்தையில்லை
    தியாகச்சுடரே  தாயுருவம் மனதினின்றும் மறைவதில்லை!

    இளமையில் ஸ்பரிசம்  முதுமையில் பாசம்,
    என்றும் உறவின்  சிறந்த பந்தபாசம்
    இளமையில்  நான் உனக்கொரு குழந்தை
    முதுமையில் எனக்கு    நீயொரு   குழந்தை!

    வாழ்க்கைப்  படகினிலே  நீயொரு  துடுப்பு
    எங்கள்  பிறப்பே  உன் படைப்பு
    எங்கள்  வளமே உன் சிறப்பு
    எங்கள்  நினைவே  பாசத்தின் பிணைப்பு!

    பூமியைவிடச் சிறந்தவள் தாய்
    ஆகாயத்தைவிடச்  சிறந்தவர்  தந்தை
    பூவிலே சிறந்தது  மல்லிகை ரோஜா
    எங்கள் தாயின் பெயரோ சரோஜா!

     

    Share
  • அம்மாவின் மோதிரம்

    — எம்.ரிஷான் ஷெரீப்.

    அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது குறித்துச் சந்தேகப்படவில்லை. அதுவும் சாதுவான பிராணியொன்றின் உறக்கத்தைப் போல அவனது மோதிரவிரலில் மௌனமாக அழகு காட்டிக் கொண்டிருந்தது.

    அவனுக்கு ஆபரணங்கள் மேல் எவ்விதமான ஈர்ப்புமில்லை. அவனது தாய், பரம்பரைப் பொக்கிஷமாக வந்த அந்த மோதிரத்தைப் பாதுகாத்து வைத்திருந்து அவனுக்கு இருபத்து மூன்றாம் வயது பிறந்தபொழுதில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி அதனை அவனது வலதுகை மோதிரவிரலில் அணிவித்து, பின் அவனுக்கு முதலாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு சரியாக இருபத்து மூன்று வயது பிறக்கும்போது அதனை அணிவித்து விடவேண்டுமென்றும் அதுவரையில் எக்காரணத்தைக் கொண்டும் அதனைக் கழற்றக் கூடாதென்றும் ஆணையிட்டு, நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு தூக்கக் கலக்கத்தில் எதுவும் புரியவில்லை. அடுத்தநாள் காலையிலும் அம்மா அதனையே சொன்னாள். காரணம் கேட்டதற்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை. அவளது அப்பா அப்படிச் சொல்லித்தான் அதனை அவளது இருபத்து மூன்றாவது வயதில் அவளுக்கு அணிவித்ததாகச் சொன்னாள்.

    velli mothiramஅவனும் அம்மோதிரத்தை இதற்கு முன்னால் அவளது விரல்களில் பார்த்திருக்கிறான். அவளுக்கென இருந்த ஒரே மோதிரமும் அவன் வசமானதில் கைவிரல்கள் மூளியாகிப் போனது அவளுக்கு.அது சற்று அகலமானதும் பாரமானதுமான வெள்ளி மோதிரம். நடுவில் ஒரே அளவான சற்றுப் பெரிய இரு கறுப்பு வைரங்களும் ஓரங்களில் எட்டு சிறு சிறு வெள்ளை வைரங்களும் பதிக்கப்பட்டிருந்த அழகிய மோதிரம். வெளிச்சம் படும் போதெல்லாம் பளீரென மின்னுமதன் பட்டையான இருபுறங்களிலும் கூட சின்னச் சின்னதாக அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதிலிருக்கும் கற்களை விற்றிருந்தால் கூட ஒரு நல்ல வீட்டை விலைக்கு வாங்குமளவிற்குப் பணம் கிடைத்திருக்கக் கூடும். இப்பொழுது வரையில் வாடகை வீட்டிலேயே வசித்து வரும் அம்மாவுக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் என்ன கஷ்டம் வந்தபோதிலும் அவள் அதனை விற்கவோ, அடகுவைக்கவோ ஒருபோதும் துணியவில்லை. அவனது இருபத்து மூன்று வயது வரும்வரையில் விரல்களிலிருந்து அவள் அதனைக் கழற்றக்கூட இல்லை.

    அம்மா அவனுக்குச் சரியான பொழுதில் இம் மோதிரத்தை அணிவித்துவிட்டுப் போகவென்றே மூன்று மணித்தியாலம் பஸ்ஸிலும் அரை மணித்தியாலம் நடையுமாகப் பிரயாணம் செய்து அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வந்த நோக்கம் கிஞ்சித்தேனும் அத்தைக்குத் தெரியாது. அத்தை எப்பொழுதும் அப்படித்தான். அம்மாவைப் போல எதையும் கேள்விகள் கேட்டு, தூண்டித் துருவி ஆராய்பவளில்லை. பார்க்கத்தான் கரடுமுரடாகத் தென்பட்டாளே ஒழிய மிகவும் அப்பாவியாக இருந்தாள். எதையும் விசாரித்து அறிந்துகொள்ளும் ஆவல் கூட அவளுக்கு இருக்கவில்லை. அம்மாவும் தானாக தான் வந்த விவரத்தைச் சொல்லவில்லை. மறைத்தாள் என்று இல்லை. மதினி கேட்கவில்லை. அதனால் சொல்லவில்லை என்று இருந்தாள். அன்றைய தினம் அம்மா உறங்கவில்லை. வழமையாக ஒன்பது மணியடிக்கும்போதே உறங்கிவிடும் அத்தைக்கு அருகிலேயே பாய்விரித்து அம்மாவும் படுத்திருந்தாளெனினும் சிறிதும் கண்மூடவில்லை. நடந்துவந்த அசதியை, மகனுக்கு மோதிரம் அணிவித்துவிட்டு உறங்கலாமென்று எங்கோ தூரத்துக்கு அனுப்பியிருந்தாள். கூரையின் கண்ணாடி ஓட்டுக்குள்ளால் நிலா வெளிச்சம் அறைக்குள் ஒரு பெரிய நட்சத்திர மீனைப்போலப் படுத்திருந்தது. பின்சுவரில் ஊசலாடும் பழங்காலக் கடிகாரத்தில் நகரும் முட்களை அவ்வப்போது வேலியோர ஓணானைப் போலத் தலையைத் திருப்பிப் பார்த்தவாறிருந்தாள்.

    அத்தைக்கு அவர்களை விட்டால் வேறு யாருமில்லை. அவளது கணவன் குடித்துக் குடித்து கல்லீரல் கெட்டு செத்துப்போயிருந்தான். அதன் பிறகு அவனது பென்ஷன் பணம் அவள் சீவிக்கப் போதுமானதாக இருந்தது. பிள்ளைகளேதுமற்றவள் கணவனின் இறப்புக்குப் பிறகு அவளது அண்ணனுடன் அதாவது அவனின் அப்பாவுடன் அவர்களது ஊருக்குப் போய்விடுவாளென்றே ஊரில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் அவனது அம்மா, அப்பா எவ்வளவோ அழைத்தும் கூட வர மறுத்துவிட்டாள். அவளைத் தனியே விட்டுப்போக அவர்களுக்கும் இஷ்டமில்லை. கொஞ்சநாளைக்கு அவன் அங்கே தங்கியிருக்கட்டுமெனச் சொல்லி அவனை மட்டும் விட்டுப் போனார்கள். பள்ளிப்படிப்பு முடித்திருந்தவன் அந்த ஊரிலேயே தங்கி, பிறகு அந்த ஊருக்கு அருகாமையிலிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டான். அப்பா அவ்வப்போது அவர்களது வயலில் விளைந்த நெல்லும் பயறும் ஊருக்குப் போகும் அவனிடம் அத்தைக்கென கொடுத்தனுப்புவார். அத்தையும் வீட்டில் சும்மா இல்லை. அருமையாக பனை ஓலையால் பாயும், கூடையும் பின்னுவாள். அதில் உழைத்த பணத்தில் ஒரு முறை அவனுக்கு புது ஆடை கூட வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.

    மோதிரம் அணிந்த நாளின் பகலில் அவன் ஏதோ பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோது தான் அந்த முதல் செய்தி வந்தது. அவன் எழுதிக் கொண்டிருந்த தாளின் பாதிவரை முடித்திருந்தான். செய்திகொண்டு வந்த காவலாளி மேற்பார்வையாளரை வாசல்வரை அழைத்து மூன்று விரல்களை வாய் முன்வைத்து முன்னோக்கி லேசாக மடிந்து மிகவும் பவ்யமாகவும் இரகசியமாகவும் விடயத்தை அவரிடம் சொன்னான். மேற்பார்வையாளர் எழுதிக் கொண்டிருந்தவனை ஒருமுறை பார்த்தார். பரீட்சை முடிய இன்னும் முக்கால் மணி நேரம் இருப்பதை அவதானித்து காவலாளியை திருப்பி அனுப்பிவைத்து அமைதியாக இருந்தார். பரீட்சைத் தாளை அவன் ஒப்படைத்து வெளியேற முற்பட்டபோதுதான் அவர் அவனிடம் விடயத்தைச் சொன்னார். ஏதும் புரியாமல் முதலில் மௌனமாயிருந்து கேட்டவன் பின் கலவரப்பட்டு வீட்டுக்கு ஓடினான். அவனை பஸ்ஸுக்குக் காத்திருக்க வைக்காமல் நல்லவேளை பக்கத்துவீட்டுச் சின்னசாமியின் சைக்கிள் வந்திருந்தது.

    சின்னசாமிக்கு எப்பொழுதுமே சைக்கிளில் ஒரு ஆளை அருகிலமர்த்தி ஒழுங்காக மிதிக்கவராது. பாதையின் எல்லாத் திக்கிலும் சக்கரங்கள் அலைபாயும். எனவே கவலையை மனதுக்குள் புதைத்தபடி அவனே சின்னசாமியை அருகிலமர்த்தி அவசரமாகச் சைக்கிள் மிதித்து அத்தை வீடு போய்ச் சேர்ந்தான். வீடு போய்ச் சேரும்வரை மோதிரமும் வெள்ளிநிற சைக்கிளின் ஹேண்டில் பாரும் ஊர் பூராவும் பரவியிருந்த மதியவெயில் பட்டு மின்னிக்கொண்டே இருந்தது.

    அத்தையைக் குளிப்பாட்டி கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். நெற்றியில் போடப்பட்டிருந்த வெள்ளைத் துணிக் கட்டில் கருஞ்சிவப்பில் இரத்தம் உறைந்திருந்தாக ஞாபகம். அம்மாவும் இன்னும் ஊரின் சில வயதான பெண்களும் அருகிலிருந்து ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தனர். அம்மா இவனைக் கண்டதும் வெறிபிடித்தவள் போல அவிழ்ந்துகிடந்த கூந்தலோடு ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். சவமும் எரித்து எல்லாம் முடிந்தபிறகுதான் அவனுக்கு மரணத்தின் காரணம் புரிந்தது.

    காலையில் அவ்வூரில் தெரிந்தவர்கள் சிலரோடு பேசிவரவென அம்மா வெளியே புறப்பட்ட போது அத்தை தன் வீட்டுக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த பூனைக்குட்டியொன்றுக்கு கயிறு நீட்டியும், வாளி போட்டும் அதனைக் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அம்மா எல்லோரையும் சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்து தேடிப்பார்த்த போது அத்தை கிணற்று நீரில் பிணமாக மிதந்திருக்கிறாள். பழங்காலக் கிணற்றின் உட்புற கருங்கல் சுவரில் தலை மோதி இரத்தம் கிணற்று நீரை நிறம் மாற்றியிருந்திருக்கிறது. வழுக்கி விழுந்திருப்பாளென்பது எல்லோரதும் ஊகம். பிணத்தை எடுத்தபின்னர் ஊரார் சிலர் அக்கிணற்றுக்குள் தென்னை மட்டைகளையும் கற்களையும் குப்பைகளையும் போட்டு பாவனைக்குதவா வண்ணம் ஆக்கிவிட்டிருந்தனர். ஊரின் சிறுவர்கள் அவ்வூரின் கிணற்றடிகளில் கூடி விளையாடும் வாய்ப்பு பெரியவர்களால் தடுக்கப்பட்டது. அத்தை ஆவியாக உருமாறி கிணற்றடிகளில் அலையக்கூடுமெனவும் சிறுவர்களை கிணற்றுக்குள் இழுத்துக்கொள்வாள் எனவும் அவர்களிடம் கதைகள் சொல்லப்பட்டன. எவ்வளவோ தேடியும் முதலில் விழுந்த பூனைக்குட்டியைத்தான் இறுதிவரை காணக் கிடைக்கவேயில்லை.

    அத்தையும் போனபின்னால் வீட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு அப்பா, அம்மாவோடு அவனும் சொந்த ஊருக்கே வந்துவிட்டான். அத்தை வீட்டிலிருந்து வந்த முதல் நாள் மதியவேளை, திண்ணையிலிருந்த கயிற்றுக்கட்டிலில் அவன் தூங்கிக்கொண்டிருந்தபோதுதான் அப்பா பஸ்ஸிலிருந்து தவறிவிழுந்து கால் எலும்பை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திவந்தது. அப்பாவும் அம்மாவும் பக்கத்து ஊர் வரைக்கும் ஏதோ வேலையொன்றுக்கெனப் போயிருந்தார்கள். அவன் அடுத்த பஸ்ஸில் ஆஸ்பத்திரிக்கு ஓடினான். பார்க்காத வைத்தியரில்லை. பண்ணாத வைத்தியமில்லை. கொஞ்ச நஞ்சமாகச் சேர்த்திருந்த பணத்தையும் கரைத்துக் குடித்த காலின் வலி குறைந்ததே தவிர காயமடைந்த கால் முழுவதுமாகக் குணமடையவில்லை. இறுதியாக ஓர் நாள் தாங்கி நடக்கவென்று இரு கட்டைகளைக் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது ஆஸ்பத்திரி. வீட்டில் ஒரு நேரம் கூடத் தங்காமல் ஓடியாடி அலைந்தவர் தன்னை பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டது அம்மாதான் என்று தினந்தோறும் புலம்பியவாறே ஒரு நத்தையைப் போல வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனார். விவசாயத்தையும் குடும்பத்தையும் பார்த்துக் கவனிக்கும் பெரும் பொறுப்பு அவன் தலையில் விழுந்தது.

    பிறகோர் நாள் அவர்களது வயற்காடு எரிந்துகொண்டிருப்பதாகச் செய்திவந்த போது அவன் சந்திக்கடையில் கருப்பட்டி கடித்தபடி செஞ்சாயத் தேனீர் பருகிக்கொண்டிருந்தான். அன்று அம்மாவும் வயலைப் பார்த்து வருவதாகப் போயிருந்ததை அவன் அறிவான். கண்ணாடிக் குவளையை மேசையில் வைத்ததும் வைக்காததுமாக அவன் வயலை நோக்கி ஓடத் தொடங்கினான். ஓரத்தில் வைக்கப்பட்டது சாணி மெழுகிய தரையில் விழுந்து உடையாமல் உருண்டது. பாதி வைத்திருந்த பானத்தைத் தரை தாகத்தோடு உறிஞ்சிக்கொள்ளத் தொடங்கியது. இருட்டு வருவதற்குள் எல்லாக் கதிர்களையும் தின்றுமுடித்துவிட வேண்டுமென்ற பேராசையோடு தீ நாக்குகள் உக்கிரமாகவும் ஒருவித வன்மத்தோடும் வயல் முழுவதையும் விழுங்கிக் கொண்டிருந்ததை அவன் கண்டான். அம்மாவுக்கு ஏதுமாகியிருக்கவில்லை. நிழலுக்காக நடப்பட்டிருந்த பூவரச மரத்தடியில் முனகலுடன் வாடிக்கிடந்தவளுக்கு அருகிலிருந்த இருவர் காற்றடித்துக் கொண்டிருந்தனர். இவனைக் கண்டதும் அத்தையின் மரணவீட்டில் நிகழந்ததைப் போலவே நெஞ்சிலடித்துக்கொண்டு அம்மா சத்தமிட்டு அழத்தொடங்கினாள். வயல்வேலைக்கென வந்திருந்த எல்லோரும் போல தீயை அணைப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். பெரும் உஷ்ணம் கிளப்பி எரியும் நெருப்புக்கு உதவியாகக் காற்றும் அது இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தது.

    வயற்காடு எரிந்ததில் பெரும் நஷ்டமும் கடனும் அவர்களைச் சூழ்ந்தது. பலத்த யோசனையோடு சில நாட்களை வீட்டில் கழித்தவனிடம் நகரத்துக்கு வேலை தேடிப் போவது நன்றாக இருக்குமென அம்மா சொன்னாள். உழைக்கும் பணத்தை வீண்செலவு செய்யாமல் அவளுக்கு அனுப்பிவைக்கும் படியும், சீட்டுப்பிடித்துச் சேமித்து அவள் எப்படியாவது கடன்களையெல்லாம் அடைத்துவிடுவதாகவும் அவனுக்கு இரவு உணவிட்டபோது அவள் சொன்னாள். அவளது முடிவு அவனுக்கு எவ்வித வருத்தத்தையும் தரவில்லை. எப்படியாவது கடன் தொல்லைகளிலிருந்து மீண்டு, அவனது மாமா பெண் கோமதியை மணமுடிக்கும் ஆசை அவன் மனதுக்குள் ஒளிந்திருந்தது. அப்பாதான் முதன்முறையாக அவன் பார்க்க ஒரு குழந்தையைப் போல அழுதார். அம்மாவிடம் தன்னைத் தனியே விட்டுப்போகாதே என்பதுபோல மன்றாட்டமான பார்வையை அவனது விழிகளில் ஓட விட்டார். இறுதியாக அவன் நகரத்துக்கெனப் புறப்பட்ட நாளில் தலைதடவி, அவனது நெற்றியில் முத்தமிட்டு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். அம்மா வீட்டுப் படலை வரை கூட வந்தாள். அத்தை வீடு அங்கே அனாதையாகக் கிடக்கிறதெனவும் அதனை அவன் பெயருக்கு எப்படி மாற்றுவதெனவும் நகரத்தில் யாராவது தெரிந்த வக்கீல்களிடம் கேட்டுத் தெரிந்து வரும்படி அவளையும் அவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் கேட்காவண்ணம் மெதுவான குரலில் சொன்னாள். அவர்களிருவரையும் அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழிகளையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த வெக்கை நிறைந்த மதியப்பொழுது வெயில் அவனது மோதிரத்தை வழமை போலவே மின்னச் செய்தபடி ஊர் முழுதும் திரிந்தது.

    நகரத்துக்குப் போய் அவனுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பனிடம் சொல்லி எப்படியோ வேலை வாங்கிவிட்டான். அவனது அறையிலேயே தங்கிக்கொண்டான். அதன்பிறகும் மோதிரத்தை உற்றுக் கவனிக்கவோ, அதன் அழகினை ரசிக்கவோ அவனுக்கு நேரமே கொடுக்காதபடி ஏதேனும் தீய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருந்தன. ஒருநாள் வீட்டில் அவன் ஆசையாக வளர்த்த புறாக்களெல்லாம் கூண்டைவிட்டுப் பறந்துபோய்விட்டதாகத் தகவல் வந்தது. தொடர்ச்சியாக தினம் தினம் ஊரிலிருந்து இதுபோல ஏதேனுமொரு தீய செய்தி அவனுக்கு எட்டியபடி இருந்தபோதுதான் அவனது நண்பன் விரல்களில் மின்னிய புது மோதிரம் குறித்து வினவினான். அப்பொழுதுதான் அவனும் அதுபற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டான். ஒருவேளை எல்லா நிகழ்வுகளுக்கும் தான் அணிந்திருக்கும் மோதிரம்தான் காரணமாக இருக்கக் கூடுமோ என எண்ணத் தொடங்கினான். நடந்த நிகழ்வுகளைக் கோர்வையாக மனதிலே ஓட்டிப்பார்த்தான். ஊருக்குப் போய் ஒருநாள் அம்மாவிடம் இது குறித்து விசாரிக்கவேண்டுமென எண்ணி அப்படியே உறங்கிப்போனான். அன்று இரவுவேலைக்கெனப் போன நண்பன் விபத்தில் இறந்தசெய்தி விடியமுன்னர் வந்து சேர்ந்தது.

    பிணத்தை எடுத்துக்கொண்டு நண்பனின் ஊருக்குப்போய் அருகிலிருந்து எல்லாக் காரியங்களும் செய்து முடித்தான். நகரத்துக்கு தனது அறைக்குத் தனியாக வந்தபொழுது கொடியில் காய்ந்துகொண்டிருந்த நண்பனின் சட்டை கண்டு வெடித்தழுதான். சத்தமிட்டு அழுதான். அத்தையின் மரண வீட்டிலும் வயற்காடு பற்றியெரிகையிலும் சத்தமிட்டழுத அம்மாவைப் போலவே கண்ணீரும், திறந்திருந்த வாய்வழியே எச்சிலும் வடிய வடிய கதறிக்கதறி அழுதான். அழுகையெல்லாம் ஓய்ந்தபோது அறையினைப் பெரும் மௌனம் சூழ்ந்ததை உணர்ந்தான். வாழ்க்கை குறித்து முதன்முதலாக அச்சப்பட்டான். அடுத்தநாள் விடிகாலையிலேயே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்து விபரம் சொல்லி தான் ஊருக்கே வந்துவிடுவதாக மீண்டும் அழுதான். கடனில் பாதி அடைக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் சில மாதங்கள் பொறுத்து ஊருக்கு வரும்படியும் அம்மா சொன்னாள். அப்பா திரும்பவும் இருமுறை வழுக்கிவிழுந்ததாகவும் கால் வீங்கி நடமாடவே முடியாமல் படுத்தே இருப்பதாகவும், தினந்தோறும் காலுக்கு எண்ணெய் தடவிவருவதாகவும் சொன்னாள். மறக்காமல் அன்றும் அத்தையின் வீடு பற்றி நினைவூட்டினாள். அவனுக்கு உடனே அப்பாவைப் பார்க்கவேண்டும் போலவும் கோமதியோடு ஏதேனும் பேசவேண்டும் போலவும் இருந்தது.

    கோமதிக்கும் அவன் மேல் காதலிருந்ததை அவன் அறிவான். இரு தங்கைகளோடும் அவள் தண்ணீர் எடுத்து வரும் வேளையில் இவன் தேனீர்க் கடையருகில் நின்றிருப்பான். அவள் ஓரக்கண்ணால் பார்த்து, பின்னலிலிருந்து தானாக உதிரும் ஒரு பூவைப் போல ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போவாள். சில அடித்தூரம் சென்று திரும்பிப்பார்த்து மீண்டும் ஒரு சிரிப்பைத் தருவாள். நேர்மோதும் பார்வைகளிலும் சிந்திய புன்னகைகளிலும் சொந்தக்காரர்களென்ற உறவையும் மீறி காதலின் தவிப்பு மிகைத்திருந்ததை இருவரும் அறிந்திருந்தனர். அவளுக்கு அவளது அப்பாவைப் போலவே சிரித்த முகம். எப்பொழுதும் சிரிப்பினை ஒரு உண்டியலைப்போல வாய்க்குள் அடக்கிவைத்திருப்பாள். அவன் அத்தை வீட்டிலிருந்து நிரந்தரமாக வீட்டுக்கு வந்தபோது துக்கம் விசாரிக்க வந்திருந்த அவளது அப்பா, அம்மா, தங்கைகளோடு அவளையும் கண்டான். அடையாளமே கண்டுகொள்ள முடியாத அளவுக்கு அழகாக வளர்ந்திருந்தாள். அவன் அவளுடன் சிறுவயதுகளில் ஒன்றாக விளையாடியதைத் தவிர பெரியவளானதும் எதுவும் பேசியதில்லை. அவன் அவளைப் பெண்கேட்டுப் போனால் மறுக்காமல் மாலை மாற்றிக் கூட அனுப்பிவைக்கும் அளவுக்கு மரியாதையும் அன்பும் நிறைந்த அவனது மாமா குடும்பம் வசதிகளேதுமற்றது.

    அவனது அறைநண்பர்களாக புதிதாக இருவர் வந்து சேர்ந்தனர். ஒரு சின்ன அறைக்குள் மூவராக அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அதிலொருவன் சற்று வயதானவன். ஓயாமல் வெற்றிலை மென்று ஒரு சொம்பு வைத்து அதில் துப்பிக் கொண்டே இருந்தான். துப்புகையில் தெறிக்கும் சிறு சிவப்புத் துளிகள் சுவரெல்லாம் நவீன ஓவியங்களை வரைந்திருந்தன. அவன் பேசும்போது மேலுதடும் கீழுதடும் வெற்றிலைச் சாற்றினை வழியவிடாமலிருக்கப் பல கோணங்களில் வளைந்தன. மற்றவன் கண்களின் கருமணிகளைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடி அணிந்திருந்தான். நகரும் ஒவ்வொரு கணமும் ஏதேனும் செய்துகொண்டே இருந்தான். அறையின் மூலையில் நன்றாக இருந்த ரேடியோவைக் கழற்றி மீண்டும் பூட்டி உடைத்து வைத்தான். தினமும் தவறாது டயறி எழுதினான். மாநகரக் குப்பைகளிலிருந்து ஏதேனும் உடைந்த பொருட்களை, பொம்மைகளை எடுத்துவந்து பொருத்த முயற்சித்தான். பத்திரிகைகள் வாங்கி அதில் ஒரு வரி கூட விடாமல் படித்து குறுக்கெழுத்து, சுடோகு நிரப்பினான். சிலவேளை தூங்கினான். தினமும் மறக்காமல் அவ் வயதானவனோடு சண்டை பிடித்தான். அவ் இருவரும் ஒருவரையொருவர் குற்றங்கள் கண்டு சத்தமாகச் சண்டை பிடித்துக்கொண்டார்கள். எல்லாம் ஓய்ந்தபின்னர் இருவரும் திரும்ப ஒற்றுமைப்பட்டு ஒன்றாகவே சாப்பிடவும் போனார்கள். இன்னும் சில மாதங்கள்தானே இவ்வறையில் இருக்கப்போகிறோமென அவன் மட்டும் இதையெல்லாம் அமைதியாக ஒதுங்கிப் பார்த்திருப்பான். இவ்வளவு நாளும் தீய செய்திகளாகக் கொண்டுவந்த மோதிரம் இப்பொழுது தனது நிம்மதிக்கே சாபமென ஒரு கண்ணாடிக்காரனையும் வயதானவனையும் அழைத்துவந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

    அன்றையநாள் அவனுக்கு வந்த செய்தி அவனை முழுவதுமாக உடைத்துப் போட்டுவிட்டது. யாரிடமோ அவனது தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி என்றுமே அவனுடன் பேசியிராத கோமதி அன்று அவனைத் தொலைபேசியில் அழைத்து அழுதழுது விடயம் சொன்னாள். அவளுக்கு சில தினங்களுக்கு முன்னர் அவசரமாகத் திருமணம் ஆகிவிட்டதாம். அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்தது அவனது அம்மாதானாம். இறுதியாக அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கவேண்டுமெனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள். கேட்டுக்கொண்டு நின்றிருந்தவனுக்குத் தரை பிளந்து, அப்பிளவு வழியே முடிவேதுமற்ற ஆழக்குழியொன்றுக்குள் தான் விழுவதைப் போல உடல் பதறியது. அவனால் நம்பமுடியவில்லை. செய்தி கொண்டுவந்தவள் அவனது நம்பிக்கைக்குரியவள்.

    அவனது ஊரிலிருந்து வந்து அங்கு ஹோட்டலொன்றில் வேலை செய்துவரும் குட்டியிடமும் இதுபற்றிக் கேட்டுப்பார்த்தான். குட்டி பொய் சொல்லமாட்டான். அதுவும் அவனதும் கோமதியினதும் காதலைக் குறித்து ஏதும் தெரியாதவன் மிகச் சாதாரணமாக, ஊரில் வெக்கை அதிகமெனச் சொல்வதைப் போலத்தான் இது குறித்தும் அவனிடம் சொன்னான். இவனுக்குள் இடி விழுந்ததைப் போல இருந்தது. இவனது காதலைப் பற்றி அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். கோமதியைப் பற்றி அவ்வப்போது அம்மாவிடம்தான் ஏதேனும் அவளுக்கு விளங்காவண்ணம் விசாரித்துக்கொள்வான். நம்பிக்கைத் துரோகம் செய்தது தனது அம்மாதானா என்பதனை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நாளைக் காலை தொலைபேசியிலழைத்து விசாரிக்கவேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டான்.

    அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. சத்தமிட்டுப் பெரிதாக அழவேண்டும் போல இருந்தது. காதல் உடைந்து போன துயரம். மலைமலையாகச் சேர்த்து வைத்திருந்த நம்பிக்கைகள் மண்மேடெனச் சரிந்த அவலம். இருவருமாக எதிர்பார்த்திருந்த எதிர்கால வாழ்க்கையினை பெரிதாக வந்து அடித்துப்போன காட்டாற்றுப் பெருவெள்ளம். உழைக்கவும் கடனடைக்கவுமென அவனை ஊரிலிருந்து அகற்றிவிட்டு எல்லாமும் நடாத்திய அம்மாவின் துரோகம். எல்லாம் விழிநீரோடு சிந்தியும் கரைந்தும் போக வேண்டும். அவனுக்கு அழ வேண்டும். அதற்கு அந்த அறை சாத்தியப்படவில்லை.

    அந் நள்ளிரவில் எழுந்து கடற்கரைப்பக்கமாக நடக்கத் தொடங்கினான். கோமதியுடனான காதல் நினைவுகள் ஒரு பெரும் சுமையினைப் போல அழுத்த கால்கள் தள்ளாடத் தள்ளாட அலைகளருகில் வந்து நின்றான். கால் நனைத்த அலைகளோடு, அவற்றின் பெரும் ஓசையோடு, யாருமற்ற அவ் வெளியில் ஓவென்று கதறியழுதான். அத்தைக்காக, அப்பாவுக்காக, நண்பனுக்காக அழுத பல விழிகளைக் கண்டிருக்கிறான். அதுபோல தனது சோகங்களெல்லாம் இரு விழித் துவாரங்கள் வழியேயும் இறங்கிப் போய்விடாதாவென்ற ஏக்கத்தோடு அவன் அழுதான். திறந்திருந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. நாவில் உப்புச்சுவை வந்து மோதி ஒட்டிக்கொண்டது. அக் கடலையே விழுங்கிவிடும் அளவுக்கு பெரிதாக தாகமெடுத்தது. அப்படியே உட்கார்ந்தான். நழுவிவந்த அலைகள் அவனது இடைவரை நனைத்துச் சென்றன. கைக்கு அகப்பட்ட மணலை வாரியெடுத்து கடலைச் சபித்து எறிந்தான். அதுவரை அக்கடல் கண்டிருக்கும் அத்தனை கோமதிகளையும் அழைப்பதைப் போல கோமதீ… எனப் பெரிதாகச் சத்தமிட்டழுதான். மணலோடு விரலில் இடறிய மோதிரம் நீர்பட்டு நிலவொளியில் மின்னி அவனது பார்வையில் குவிந்தது. எல்லாம் உன்னால்தான் என்பதுபோல ஏதோ ஒரு வெறி உந்தித்தள்ள விரலில் இறுகியிருந்த மோதிரத்தை மணலுரசித் தோலில் இரத்தம் கசியக் கசியக் கழற்றி எடுத்து உள்ளங்கையில் வைத்து வெறுப்பாகப் பார்த்து அதற்குத் தூ எனத் துப்பினான். பின்னர் கடலுக்குள் வீசியெறிந்தான். அவனது மகனது அல்லது மகளது இருபத்து மூன்று வயது வரை காத்திருக்க முடியாமல் போன சோகத்தோடு கறுப்பும் வெள்ளையுமான வைரங்களும், அலங்காரங்களுடனுமான வெள்ளியும் உப்பு நீரின் ஆழத்துக்குள் புதைந்தது. முந்தைய நள்ளிரவில் அம்மா செத்துப் போனதாக அடுத்த நாள் காலையில் அவனுக்குச் செய்தி வந்தது.

    Share