எம்.ரிஷான் ஷெரீப்

1437820074-4948

மழை வெளி நிலத்தின் பட்சிகள்

ஈர இறகை  உலர்த்தும் புற்பாதையில்

மீதமிருக்கும்  நம் பாதச்சுவடுகள் இன்னும்

 

எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை

மென்குளிரைப் பரப்பியிருக்க

நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்

நடந்து வந்த பாதையது

 

தீவின் எல்லாத் திசைகளிலும்

கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்

அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட

கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்

‘கருமேகக் கூட்டங்களற்ற வானை

ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்

சிரட்டைகளால் செதுக்கப்பட்ட

அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்

இவ்வாறாக

கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு

உன் சேமிப்பில் வந்தது

மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும்

 

புனித ஸ்தல மரமொன்றில்

கடவுளுக்காகத் தொங்க விடப்பட்டிருந்த ஏவல் பொம்மைகள்

வெயிலை வேண்டும் அவர்களது பிரார்த்தனைகளை

பொய்ப்பித்தே வந்தன

 

சூரியனையும் நிலவையும் நட்சத்திரங்களையும்

நேரில் பார்த்திரா அந்த ஊர்வாசிகள்

நம்மிடம் அவை பற்றிக் கேட்டார்கள் இல்லையா

ஆனாலும் அப் பிரதேசத்துக்கும்

அவை தினந்தோறும் வந்தன

மழைத் திரை ஒரு நீர்க்கோடாய்

அவற்றை அவர்களிடமிருந்து மறைத்தது

 

‘விதியில் எழுதப்பட்டவர்கள்,

சமுத்திரத்தில் வழி தவறி

திசைகாட்டி நட்சத்திரத்தைத் தேடித் தொலைந்தவர்கள்

முன்பெல்லாம் அத் தனித் தீவில் கரையொதுங்கினர்’

என்றவர்கள் கூறியதை

நீ குறித்து வைத்துக் கொண்டாய்

 

தொலைதூரம் பறந்து சென்ற

வலசைப் பறவைகள் மட்டுமே கண்டிருந்த வெயிலை

ஒருபோதும் அறிந்திரா அத் தீவின் சிறார்கள்

அதன் நிறத்தை, வாசனையை

அது நம்மைத் தொடும்போது எழும் உணர்வைப் பற்றி

மழை கண்டு ஆனந்தித்திருந்த நம்மிடம் வினவியதும்

‘எவ்வாறு உரைத்தல் இயலும்’ என்றாய்

சிறிதும் கருணையேயற்று

 

ஆவி பறக்கும் உஷ்ணப் பானங்களை அருந்தியபடி

பிரயாணிகள் அனைவரும் சுற்றிப் பார்த்த பின்

அத் தீவை மழையிடம் தனியே விட்டுவிட்டு

கப்பலில் நமது தேசம் வந்து சேர்ந்தோம்

 

ஆனாலும் அன்றிலிருந்து எப்போதும்

நமது மர வீட்டின் தாழ்வாரத்தில்

ஈரத் துளி விழும் சப்தம்

கேட்டுக் கொண்டேயிருக்கிறது இரவிரவாக

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *