–முனைவர் மா.சியாமளாதேவி.

tholkaapiyar
தொல்காப்பியம் தமிழில் இன்று கிடைக்கப்பெறும் நூல்களுள் மிகவும் பழமையானது. அதில் காணப்பெறும் சில வழக்காறுகள், இலக்கணக்கூறுகள், வாழ்க்கை மரபுகள் சங்க இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டன என்பது, இன்று பலரும் ஒப்ப அறிந்த முடிபாகும். இதனால் அது ‘தமிழின் முதனூல்’ என்று போற்றப்படுகின்றது. மூவாயிரம் ஆண்டு பழமையுடையதாயினும், இன்றும் அதன் ஆளுமைத் தமிழ் மொழியில் பெரும்பகுதி நிலைத்து நிற்கிறது.

நூலின் காலம்:
எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல, இந்நூல் தோன்றுவதற்கு முன்பே இலக்கியங்கள் பல இருந்திருத்தல் வேண்டும். அவை காலப்போக்கில் இறந்துபட்டிருக்கலாம். இத்தகைய நூல்களில் பெயர்களையும், பகுதிகளையும் பிற்கால உரையாசிரியர்கள் மேற்கோளாகக் குறிப்பிடுவது, மேற்கூறிய கருத்தையே வலியுறுத்தும் சான்றாக உள்ளது. தொல்காப்பியர் தமக்கு முன் விளங்கிய ஆசிரியர்களின் நெறியையே தாம் எடுத்துரைப்பதாகக் கூறுகிறார். தொல்காப்பியர் தம் நூலில், சற்றொப்ப 260 இடங்களில் தமக்கு முன்பு இருந்த அல்லது தம் காலத்தில் வாழ்ந்த இலக்கண ஆசிரியர்கள் பலரைப் பலவாறு குறிப்பிட்டுள்ளார். நூலின் இடையே,
‘என்ப’- ‘என்மனார்’- ‘மொழிப’-
‘யாப்பென மொழிப யாப்பறி புலவர்’-
‘தோலென மொழிப தொன்மொழிப் புலவர்’

என ஆங்காங்கு கூறிச்செல்வதாலும், ‘ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ என்றும் தமக்கு முற்பட்ட இலக்கிய மரபைக் குறிப்பிடுவதாலும், அவருக்கு முன்பே பற்பல இலக்கண நூல்களும் இருந்திருக்க வேண்டுமெனத் துணிந்துரைக்க முடிகிறது.

“தொல்காப்பியப் பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற தொடர் வடமொழியின் இலக்கணத்தில் வல்லுநரான பாணினியைக் குறிப்பிடாமல் அதற்கும் முந்தைய இந்திர வியாகரணத்தைப் பற்றிக் குறிப்பதால் பாணினிக்கும் (கி.மு.4ஆம் நூற்.) முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது புலப்படுகின்றது”1

“மறைமலையடிகள், வெள்ளைவாரணார் போன்றோர் இறையனார் களவியல் உரைவழி நின்றும் அகச்சான்று, புறச்சான்று வழி நின்றும் தொக்காப்பியர் காலம் கி.மு.5000 ஆண்டுகட்கு முற்பட்டது என்றும் கூறுகின்றார்”2

தொல்காப்பியம் தோன்றிய காலத்தைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் பலவுண்டு. ஆண்டிலே முற்பட்டதென்று கூறுவோர் பலர். பிற்பட்டதென்று கூறுவோர் சிலர்.

1. “வேதவியாசர் காலத்திற்கு முன்னே தொல்காப்பியம் செய்யப்பட்டது. இன்றுள்ள இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் எழுதப்படுவதற்கு முன்னே தொல்காப்பியம் எழுதப்பட்டது.”

2. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. இந்த முத்தமிழ்ச்சங்க வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றைக் கொண்டு கணக்கிட்டால் சற்றொப்ப 1300 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது தொல்காப்பியம் என்று முடிவு கட்டலாம்.

3. தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று கூறுவோர் உள்ளனர். தொல்காப்பியத்தில் கார்காலம் முதலில் கூறப்பட்டிருகின்றது. ஆதலால் இந்நூல் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக வழங்கிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுவே தொல்காப்பியம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொன்றியது என்போர் காட்டும் காரணமாகும்.

4. மக்கள் இரும்பு, பொன் முதலிய உலோக வகைகளைக் கண்டுபிடித்தகாலம் கி.மு.5000 க்குப்பின் என்பர். தொல்காப்பியத்திலே உலோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதலால் அதன் காலம் கி.மு. 5000த்திற்கும் பிற்பட்டதுதான் என்பதில் ஐயம் இல்லை என்பர்.

5. தொல்காப்பிய காலம் 2400 ஆண்டுகளுக்கு முன்னென்று மொழிவோரும் உள்ளனர். பாணினி இலக்கணத்திற்கு முன்னேயிருந்த ஐந்திர இலக்கணத்தைப் படித்தவர் தொல்காப்பியர். ஆகவே, தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முன்னே வாழ்ந்தவர். பாணினியின் காலம் கி.பி.4ஆம் நூற்றாண்டு, தொல்காப்பியர் கி.பி.4ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தவர். இந்தக் கணக்கு உண்மையானால் தொல்காப்பியம் 2400 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியதாகும்.

6. தொல்காப்பியம் கி.பி.2ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது.1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்தான் தொல்காப்பியம்; இதற்கு ஆதரவு உண்டு என்போரும் உள்ளனர். இவ்வாறு கூறுவோர் சிறுபான்மையினர்.

7. எந்த வகையில் பார்த்தாலும் தொல்காப்பியம் கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும். ஆகையால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலேயன்றி பிற்பட்ட நூலில்லை என்போரும் பலர். இது தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிடும் பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதோர் முடிவு என்பர் சாமி. சிதம்பரனார்.”3 மேலும்,

“சுந்தரமூர்த்தி தொல்காப்பியக் காலத்தைப் பற்றி, சங்க இலக்கிய மொழி நிலையையும் தொல்காப்பிய மொழி நிலையையும் வைத்துப் பார்க்கின் இது சங்க இலக்கியங்களுக்கு முன்னர் எழுந்திருக்க வேண்டும் என்று கி.மு.மூன்றாவது நூற்றாண்டுப் பகுதியை ஒட்டிய காலப் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்றும் எண்ணுவர். சங்க இலக்கியங்கள் கி.மு. இரண்டாவது நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் பல நிலைகளில் தோன்றியுள்ளன அவர் எண்ணம்” என்று கூறுகிறார்.

சான்றெண்:
1.சண்முக.செல்வகணபதி. மொழி வரலாறும் மொழி இயலும்.,ப.1
2.சி.பாலசுப்பிரமணியன்., தமிழ் இலக்கிய வரலாறு.,ப.18
3.சாமி.சிதம்பரனார். தொல்காப்பியத்தமிழர்., பக்.6-10
4. Sundaramurthi, Early Literary Theories inTamil., pg.3-7

துணை நூற்பட்டியல்:
1.செல்வகணபதி.சண்முக.,
மொழிவரலாறும் மொழி இயலும்.,
பழனி; சிட்டிப்பதிப்பகம்
மு.பதி.2002

2.சிதம்பரனார்.சாமி.,
தொல்காப்பியத் தமிழர்.,
சென்னை; நியூசெஞ்சூரி புக் ஹவுஸ்.,
மு.பதி.2002

3.பாலசுப்பிரமணியன்.சி.
தமிழ் இலக்கிய வரலாறு.,
சென்னை; மனமலர்ப் பதிப்பகம்.,
மு.பதி.2003.

4.Sundaramurthy.G.,
Early Literary theories in Tamil.,
Chennai; sarvoday ilakkiya pannai.,
F.E.1947

முனைவர் மா.சியாமளாதேவி,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை, அ.வ.அ. கல்லூரி,
மன்னன்பந்தல், மயிலாடுதுறை

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தொல்காப்பியத்தின் காலம்

  1. பொதுவாகவே, இலக்கிய இலக்கணங்களின் கால ஆராய்ச்சியில் என் நேரத்தைச் செலவிடுவதில்லை. இப்போதிருக்கும் நாம் எவருமே அன்றைக்கு இருந்ததில்லை (முன்பிறவியில் என்று அமைந்திருந்தாலொழிய). ஆனாலும் … ‘இந்த நூல் இந்தக்காலத்தில் உருவானது’ என்பது-போன்ற திட்டவட்டமான கூற்றெல்லாம் என்னைக் கவருவதில்லை. ஆகவே, இந்தக் ‘கால’ ஆய்விலிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.

    “தொல்காப்பியப் பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற தொடர் வடமொழியின் இலக்கணத்தில் வல்லுநரான பாணினியைக் குறிப்பிடாமல் அதற்கும் முந்தைய இந்திர வியாகரணத்தைப் பற்றிக் குறிப்பதால் பாணினிக்கும் (கி.மு.4ஆம் நூற்.) முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது புலப்படுகின்றது”1 

    … மேற்கண்டது-போல் சொல்லுவதற்கு என்ன அடிப்படை? ஐந்திர வியாக்கிரணம் இயற்றியவனும் அஷ்டாத்யாயீயை இயற்றிய பாணினியும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களில்லை என்ற குறிப்பு ஏதாவது இருக்கா?

    ஒரே காலத்தில் வாழ்ந்த பலருடைய கொள்கைகளை/கருத்துகளை மக்கள் பலரும் தத்தமக்கு ஏற்றவாறு பிடித்துச்  சென்றதால்தானே பலவேறு இலக்கிய/இலக்கண உரைகள் உருவாயின?!

    சிந்திக்கவும்.

    வாழ்த்துடன்,
    ராஜம்

    http://www.letsgrammar.org
    http://mytamil-rasikai.blogspot.com
    http://viruntu.blogspot.com 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *