டிசம்பர் 21, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு ஆக்சாத் பிரகாஷ் அவர்கள்

Akshat Prakash-Photo by PTI profile

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், விபத்தில் உயிர் காக்கும் கருவி ஒன்றை வடிவமைத்தவரும், மேல்நிலைப்பள்ளி மாணவருமான திரு. ஆக்சாத் பிரகாஷ் அவர்கள். மருத்துவ அறிவியலில் மிகுந்த ஆர்வமிக்க ஆக்சாத் பிரகாஷ் உத்தரப் பிரதேசம் காஜியாபாதை சேர்ந்தவர். டெல்லி இந்திராபுரத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும், 17 வயதாகும் இந்த இளைஞர், கைக்கடிகாரம் போல கையில் அணிந்து கொள்ளும் முதலுதவி சிகிச்சை தரும் ‘தொழில்நுட்ப அணிகலன்’ (wearable technology device) ஒன்றினை வடிவமைத்து, தைவானில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சி – 2015 (Taiwan International Science Fair, 2015) இல் அறிமுகப்படுத்தினார். இக்கருவி செயல்படும்விதத்தைப் பற்றி அறிவியல் கண்காட்சியில் செயல்முறை விளக்கமும் அளித்துள்ளார். ஆக்சாத் பிரகாஷ், ‘ஹெலிக்ஸ்சேஃப்’ (HelixSafe – #HelixSafe on twitter.com) என்று பெயரிட்டுள்ள தனது மருத்துவ கருவிக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளார். காப்புரிமை பெற 2013 இல் இவர் விண்ணப்பித்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வமான காப்புரிமை தகவல் இதழில் (Official Patent Journal, 2015) இச்செய்தி வெளியாகியுள்ளது.

Akshat Prakash-Photo by PTI

விபத்துகள் நிகழும் பொழுது, உயிருக்கு ஊசலாடுபவர்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்கத் துரித கதியில் இயங்கத் தேவை. வீணாக்கும் ஒவ்வொரு பொன்னான வினாடியும் வாழ்வா, சாவா என்ற முறையில் ஒருவரது வாழ்க்கையையே நிர்ணயிக்கும். நகரப்பகுதியில் விபத்து நிகழ்ந்தாலே அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதில் பெருமளவு காலம் விரயமாவதைத் தடுக்க வழி இருப்பதில்லை. ஆளரவமற்ற அத்துவானக்காட்டின் சாலையொன்றில் வாகன விபத்து நிகழ்ந்தால், அதனைக் கண்டு நடவடிக்கை எடுப்பதற்குள் விபத்திற்குள்ளானவர் உடனடி மருத்துவ உதவியின்றி அவரது வாழ்வே முடிந்துவிடலாம்.

இது போன்ற வாகன விபத்து நிகழ்வுகளில் கைகொடுத்து உதவக் கூடியது, விபத்தினால் பாதிக்கப்பட்டவர் கையில் அணிந்திருக்கும் கடிகாரம் போன்ற ஹெலிக்ஸ்சேஃப்-தொழில்நுட்ப அணிகலன். இக்கருவியின் சென்சார் என்ற உணரும் பகுதி விபத்து நிகழ்ந்த நேரத்தில், இக்கருவி அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பைக் கணக்கிட்டு அவரது உடல்நிலையைக் கண்காணிக்கும். அது இயல்புக்கு மாறாக இருந்தால், தானே தேவையான முதலுதவிக்கான மருந்தினை கருவியில் இருக்கும் சிறிய ஊசி உடலுக்குள் செலுத்துவதுடன், அருகாமையில் உள்ள மருத்துவ அவசர சிகிச்சை மையத்திற்கு உடனடித் தகவலும் அனுப்பும்.

இந்த மருத்துவக் கருவியின் மாதிரி வடிவம் ‘அர்டுயினோ டெவெலப்மென்ட் என்விரான்மெண்ட்’, மற்றும் ‘எம்பெடெட் சி’, ‘விஷுவல் பேசிக்’ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது (The prototype has been created with Arduino Development Environment, Heart Rate Sensor and accessories and programmed in Embedded C and Visual Basic). இந்த ‘ஹெலிக்ஸ்சேஃப்’ மருத்துவக் கருவி கண்டுபிடிப்பிற்காக, “சிறந்த கண்டுபிடிப்பை வழங்கிய இந்தியாவின் முதன்மை திறமைசாலிக் குழந்தை” (‘India’s First Whiz Kid’ award for Best Innovation, 2013), என்ற விருதினையும் ஆக்சாத் பிரகாஷ் பெற்றுள்ளார். இந்த விருதினை 2013 ஆண்டு ‘நர்ச்சர் டேலண்ட் அண்ட் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ (Nurture Talent & Computer Society of India) இவருக்கு வழங்கிப் பாராட்டியது. இந்த மருத்துவக் கருவி செயல்படும் முறையைப் பற்றி , ஐ.ஐ.டி. டெல்லி, ஐ.ஐ.டி. மும்பை ஆகிய இந்திய தொழில்நுட்பக் கல்வி பல்கலைக் கழகங்களிலும் ஆக்சாத் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.

Akshat Prakash-Photo by PTI-3

‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ துறை மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை. தற்பொழுது பெரும்பாலும் ஆரோக்கிய வாழ்வினை முன்னிறுத்தும் நோக்கில் உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றின் அளவுகளைக் கண்காணிக்க மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்ற ஆண்டு கலிஃபோர்னியா நிலநடுக்கத்தின் பொழுது, தொழில்நுட்ப அணிகலன் அணிந்திருந்தவர்கள் உறக்கம் தடைப்பட்டு விழிக்க நேர்ந்ததையும், மீண்டும் உறங்கச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது என்பது போன்ற தகவல்களை, தானே சேகரித்து தரவுகளை அனுப்பியது.

Akshat Prakash-Photo by PTI-4

இந்தத் தொழில் நுட்பத்தை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்துவதில் உள்ள ஆதாயம் பற்றி இத்துறை வல்லுநர்கள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். குறிப்பாக மாரடைப்பு, வலிப்பு போன்ற நேரங்களில் உடலில் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ப விரைந்து செயலாற்றி சிகிச்சையைத் துவக்க விரும்பி மருத்துவத் துறையும் இதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. வரும் ஐந்தாண்டுகளில் 2 பில்லியனில் இருந்து 40 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இத்துறை வளரும் என்றும், சிறு கணினிசார் நிறுவனங்கள் இதன் வளர்ச்சியில் அதிகம் பங்கு பெற்றுப் பலனடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு, உடற்பருமன், இதயநோய் எனப் பல்வேறு வகையிலும் உடல்நலம் கண்காணிக்க ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ உதவக்கூடும் எனவும் தெரிகிறது.

முன்னேறும் இத்துறையில் ஒரு பதின்ம வயது பள்ளி மாணவன் இந்தியாவில் முன்மாதிரியாக இருப்பது இந்தியத் தொழில் நுட்ப வளர்ச்சி பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கிறது. கணினி அறிவியலில் தனக்கு மிகவும் ஆர்வம் இருப்பதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் அத்துறையில் ஓர் ஆய்வாளராகப் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாகவும் கூறும் செல்வன் ஆக்சாத் பிரகாஷ்; தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு, சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு நிறைந்த சமுதாயம் உருவாக, மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நல்ல பல கருவிகளைத் தயாரிக்க விரும்புவதாகவும் ‘பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ (PTI-Press Trust of India)விற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். செல்வன் ஆக்சாத் பிரகாஷின் விருப்பங்கள் நிறைவேறி, மக்களுக்குப் பயன்தரும் கருவிகள் பல வடிவமைக்க வல்லமை இதழ் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

மேலும் தொடர்புள்ள தகவலுக்கு:
விபத்தில் உயிர் காக்கும் கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்
http://tamil.thehindu.com/india/விபத்தில்-உயிர்-காக்கும்-கருவியை-கண்டுபிடித்த-பள்ளி-மாணவர்/article8004063.ece
Published: December 18, 2015

 

Beyond Fitbit: The quest to develop medical-grade wearables
http://www.reuters.com/article/us-usa-health-wearables-insight-idUSKBN0U10G120151218
Published: December 18, 2015

 

Wearable Technology is Here: Interoperability will be an issue for this technology, just as it is today for communications and data.
http://www.emergencymgmt.com/emergency-blogs/disaster-zone/wearable-technology-is-here.html
Published: December 18, 2015

 

How The Napa Earthquake Affected Bay Area Sleepers
https://jawbone.com/blog/napa-earthquake-effect-on-sleep/
Published: Aug 25, 2014

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *