Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    4cd8ab6c-4f6a-4d85-b9c1-259a742e0941

    ”மெய்யே அகலாக, மேவுமுயிர் நெய்யாக,
    உய்யும்ஒரே ஆன்மன் ஒளியாக, -பையன்நின்,
    ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத,
    சீரான வாழ்வில் செலுத்து”….கிரேசி மோகன்….

    ”துவமேவ மாதா, துவமேவ பிதா,
    துவமேவ பந்து, தவமும் -துவமேவ,
    என்றிருப்பாய் என்றும் யதுகுலக் கன்றேபோல்
    அன்றவன் கொள்வான் அணைத்து”….கிரேசி மோகன்….

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (7)

    க. பாலசுப்பிரமணியன்

    அனுபவப்பூர்வமாக அறிதலின் முதல் சில படிகள்

    education4

    ஒரு குழந்தை ஏதேனும் ஒரு பொருளை ஆழ்ந்து பார்க்கும் பொழுது அதைப் பற்றி அறிந்துகொள்ள மனதில் ஒரு உந்துதல் ஏற்படுகின்றது. உடனே அதைத் தொடவும் அதைப் பற்றிகொள்ளவும் முயற்சி செய்கின்றது. இது குழந்தை மேற்கொள்ளும் ஒரு ஆக்கபூர்வமான செயல். இதை பற்றி கிளைர் லெர்னெர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார் : ” ஒரு பொருளைப் பார்த்து எடுத்துக்கொள்ளவும் அதை பற்றிக்கொள்ளவும் ஏற்படும் உந்துதல்  குழந்தையின் நோக்கத்தை வெளிப்படுத்தும் செயல் (intentionality ). அது குழந்தையின் வளர்ச்சியில் கவனம், ஆர்வம் மற்றும் ஈடுபாடு என்ற கற்றலுக்குத் தேவையான உள்ளுணர்வுகளுக்கு ஒரு முன்னுரை.”

    ஆகவே குழந்தையின் நோக்கங்களை உருவாக்குவதிலும் சீர்படுத்துவதிலும் தாயின் கவனம் தேவைப்படுகிறது. இதனால் தான் ஒரு தாயை குழந்தையின் முதல் ஆசானாகக் கருதுகின்றனர்.

    ஆகவே எந்தப் பொருளை குழந்தை நாடுகிறதோ அதை சிறுது தூரத்தில் வைத்து அதை குழந்தை எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். குழந்தை காட்டும் ஆர்வம், விருப்பம் மற்றும் உள்நோக்கத்தைப் பாராட்ட வேண்டும். அந்தப் பொருள் பாதுக்காப்பாக இருக்கும் பட்சத்தில் அதை உணருதல் முகர்தல் மற்றும் உருட்டியோ அல்லது திருப்பியோ பார்த்தல் ஆகிய நிகழ்வுகளை ப்   போற்றவேண்டும்.

    குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆர்வமும் உந்துதலும் ஏற்படும் பொழுது அதற்குத் தான் தேடும் அல்லது உணரும் பொருளைப் பற்றிய முன்னறிவும் அனுபவமும் இல்லை. ஆகவே அந்தப் பொருள் பாதுகாப்பானதுதானா இல்லையா என்ற அறிவும் இருப்பது இல்லை. இந்தநேரத்தில் தான் குழந்தைகளுக்கு அதிகமான பாதுக்காப்புத் தேவை. ஆகவே தம் குழந்தைகளின் மேல் தாயாரின் அல்லது வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களின் கவனம்  தேவை. சூடான பொருள்களின் மேல் அறியாமல் கை வைத்தல், சாப்பிடக்கூடாத அல்லது பாதுகாப்பில்லாத பொருள்களின் மேல் கைவைத்தால் போன்ற செயல்கள் அதிகமாக  நடக்க வாய்ப்புண்டு.

    பொதுவாக இவ்வாறு குழந்தைகள் கற்றுக்கொள்ளும் நேரத்தில் பெற்றோர்களின் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் குழந்தைகளைப் பார்த்து “இதைச் செய்யாதே, இப்படிச் செய்யாதே ” என்று செயல்களைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்வர். இது ஒரு சரியான நோக்கு அல்ல. “இப்படிச் செய்யாதே” என்று குழந்தைகளைத் தடுப்பதைவிட இப்படிச்செய்ய வேண்டும் என்ற ஆக்க பூர்வமான நோக்கை கையாளுதல் மிக்க அவசியம். என்பது மனஇயல்  வல்லுனர்கள் வாதம்.

    சில வீடுகளில் மிகச் சிறிய வயதில் இருக்கும் குழந்தைகளை தொலைக்காட்சி முன் பல மணி நேரங்கள் அமர்த்திவிடுகின்றனர். அதைப் பார்க்கும் வரையில் குழந்தைகளால் தங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது என்ற நல்லெண்ணத்தில்! (???). இதைப் பற்றிய ஆராய்சிகள் இதனால் ஏற்படும் தீமைகளை வெகு அழகாக விளக்குகின்றன.

    இளம் வயதில் குழந்தைகளைத் தனியாக தொலைக்காட்சி அனுபவங்களோடு விடுதல் அதனுடைய மன நிலையை மிகவும் பாதிப்பதாக பலதகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வகையான பதிப்புகள் சில நேரங்களில் குழந்தைகளின் உள்ளாழ்ந்த மன நிலையையும் உணர்வுகளையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதன் விரிவான பாதிப்புகளை நாம் தொடர்ந்து பார்ப்போம்..

    Share
  • செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸ் முறிந்து எதிர்காலத்தில் வளையமாய்ச் சுற்றலாம்

    ajay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://youtu.be/4EJjF-M01Dw

    https://youtu.be/4acxA0J8pVU

    https://youtu.be/3W0ENEGvTts

    +++++++++++++++

    செந்நிறக் கோள் செவ்வாயிக்கு
    வக்கிரச் சந்திரன் இரண்டு !
    சுக்கிரன் போல்
    பொரி உருண்டை அல்ல !
    உருளைக் கிழங்கு போல்
    ஒழுங்கீன வடிவமுள்ள
    துணைக் கோள்கள்,
    ஃபோபாஸ், டைமாஸ் !
    பெரியது ஃபோபாஸ்
    சிறியது டைமாஸ்;
    செந்நிறக் கோள்
    தன்னச்சில் சுற்றும் வேகத்தை
    மிஞ்சிடும் ஃபோபாஸ் !
    ஈசா ஏவிய
    செவ்வாய் வேக விண்ணுளவி
    ஃபோபாஸைச் சுற்றி
    விரைவாக்கம் பெற்றிடும்
    ஈர்ப்புச் சுழல் வீச்சில் !
    சுற்றுப் பாதை ஆரம் மெதுவாய்ச்
    சுருங்கிச் சுருங்கி
    நெருங்கி வரும் ஃபோபாஸ்
    முறிந்தொரு நாள்
    செவ்வாய்க் கோளைச் சுற்றும்
    வளைய மாய் மாறித்
    தளத்தில் விழும் !

    +++++++++++++

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

    Mars Future Ring

    நமது பூமியைச் சந்திரன் பேராற்றலுடன் பல்வேறு திசைகளில் இழுத்து கடல் அலை நீட்சி ஆக்குவது போல், செவ்வாய்க் கோளும் தன் சந்திரன் ஃபோபாஸ் மீது அழுத்தி, முறிவை உண்டாக்குகிறது.  காரணம் திணிவு குன்றிய [Low Density] ஃபோபாஸ் சந்திரன் உட்துளைகள் [Porous Moon] கொண்டு பேரளவில் சிதைவு பெற்றுள்ளது. அது முற்றிலும் முறிந்தால், தூள், துணுக்காகி வளையமாய்ச் செவ்வாய்க் கோளைச் சுற்றத் துவங்கும்.

    பெஞ்சமின் பிளாக் & துஷார் மிட்டல் [காலிஃபோர்னியா பல்கலைக் கழகம், பெர்க்கிலி]

    பூமியை விட்டு ஆண்டு தோறும் 3.8 செ.மீ. [1.5 அங்குலம்] வீதம் சந்திரன் விலகிச் செல்லும் போது, ஃபோபாஸ் சந்திரன் செவ்வாய்க் கோளை நோக்கி, ஆண்டு தோறும் 1.8 செ.மீ. [0.75 அங்குலம்] வீதம் நெருங்கிச் செல்கிறது.  அதன் விளைவு ஒன்று ஃப்போபாஸ் முறிந்து சிதறலாம்; அல்லது செவ்வாய்க் கோளில் விழுந்து நொறுங்கலாம்.

    பெஞ்சமின் பிளாக் [காலிஃபோர்னியா பல்கலைக் கழகம், பெர்க்கிலி]

    Phobos and Deimos

    ஃபோபாஸ் போன்ற சந்திரன்கள் முறிவைப் பற்றி ஆய்வுகள் செய்வது, ஆரம்ப கால சூரிய மண்டலக் கோள்கள் உருவாக்கத்தை அறிய உதவும். தூசியும், துணுக்கும் கலந்த எதிர்காலச் செவ்வாய்க் கோள் வளையத்தைப் பூமியிலிருந்து காண முடியுமா என்பது ஐயப்பாட்டில் உள்ளது.  காரணம் தூசிகள் பரிதியின் ஒளியைப் பிரதிபலிப்பதில்லை.  சனிக்கோளின் பனி படர்ந்த வளையங்கள் பரிதி ஒளியைப் பிரதிபலித்துத் தெரிவது போல் ஃபோபாஸ் வளையம் தெரியாது. ஆனால் பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் பார்த்தால், வளையம் உள்ள செவ்வாய்க் கோள் மிக்க ஒளியுடன் காணப்படும்.  பத்து மில்லியன் ஆண்டுகட்குப் பிறகு செவ்வாய் தளத்தில் ஒருவர் நின்று பார்த்தால், ஃபோபாஸ் வளையம் கண்கொளாக் காட்சி அளிக்கும்.

    துஷார் மிட்டல் [காலிபோர்னியா பல்கலைக் கழகம்]

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒத்தமைப்பு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

    Mars & its Moons Sizes

    செவ்வாய்க் கோள் சந்திரன் ஃபோபாஸ் முறிந்து வளையமாய் மாறலாம்.

    இன்னும் 20 அல்லது 40 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாய்க் கோளின் பெரிய சந்திரன் ஃபோபாஸ் மெதுவாய்க் கீழிறங்கி முறிந்து வீழ்ந்துவிடும் அல்லது ஒரு வளையமாகும் என்று 2015 நவம்பர் 25 தேதிப் புவியியல் விஞ்ஞான இயற்கை  [Nature Geoscience] இதழில் வெளியாகியுள்ளது. அதை எழுதியவர் இருவர் :  காலிஃபோர்னியா பல்கலைக் கழகம், பெர்க்கிலியின் பெஞ்சமின் பிளாக், அடுத்தவர் துஷார் மிட்டல்,[Benjamin Black & Tushar Mittal] பட்டப் படிப்பு மாணவர்.  காரணம், திணிவு குன்றிய [Low Density] ஃபோபாஸ் ஆண்டு தோறும் 1.8 செ.மீ. வீதம் [0.75 அங்குலம்] செவ்வாய்க் கோளை நெருங்கி வருகிறது.  பொதுவாக வளையங்கள் புறக்கோளான பூதக்கோள் வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய வாயுக் கோளுக்கு மட்டுமே சூரிய மண்டலத்தில் உருவாகியுள்ளன. பாறைக் கோளான செவ்வாய்க் கோளுக்கு ஒரு வளையம் எதிர்காலத்தில் உருவானால், அதுவே சூரிய மண்டலத்தின் முதன்மை விண்வெளி நிகழ்ச்சியாய் இருக்கும்.

    ஈர்ப்பு விசை இழுப்பில் முறியும் போது ஃபோபாஸின் பெரிய துணுக்குகள் செவ்வாய்க் கோளில் விழும்.  பெரும்பான்மையான தூசி, தூள்கள் யாவும் பல மில்லியன் ஆண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றிப் பிறகு அவையும் தளத்தில் விழும்.  முடிவில் அடுத்த முரண்கோள் டைமாஸ் மட்டும் தனியே செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும்.  ஃபோபாஸ் சந்திரன் போல் நெப்டியூன் புறக்கோளை நெருங்கி வருவது, அதன் சந்திரன் டிரிடான் [Triton] எனப் படுவது.  ஃபோபாஸ் சந்திரன் 680 கி.மீ. [410 மைல்] தூரத்தில் கீழிறங்கி [1.2 Mars Radius] முறிந்தால், உருவாகும் வளையம் செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்றி வரும் என்று கணிக்கப் படுகிறது.  அவ்விதம் உருவாகும் வளையமும் சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் சுற்றிவந்து செவ்வாய்த் தளத்தில் தூசிமய மழையாய்ப் பெய்திடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.

    Roche Limit

    “மனிதன் இதுவரை நுழையாத இடத்துக்கு நாமினித் தைரியமாகப் போக வேண்டும். வால்மீன்கள் ஈர்ப்பு வீச்சைப் பயன்படுத்துவது, வக்கிரக் கோள்களை நெருங்குவது, செவ்வாயின் துணைக் கோளை ஆராய்வது போன்றவை அந்த முயற்சிகள். அங்கே ஓரினத்துவமுள்ள பாறை உள்ளது. உருளைக் கிழங்கு போல் தாறுமாறாக உள்ள ஃபோபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளை 7 மணி நேரத்துக்கு ஒருமுறைச் சுற்றுகிறது. மக்கள் ஃபோபாஸைக் காணும் போது ‘யார் அதை அங்கு வைத்தவர்’ என்று கேட்டால் பிரபஞ்சம் அதை அங்கே விட்டு வைத்தது என்று சொல்லலாம், விரும்பினால் கடவுள் அமைத்து விட்டார் என்றும் கூறலாம்.”

    அமெரிக்க விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin)

    “1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா எழுந்துள்ளது. ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம். ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்துவிடும். செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம். ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்.”

    வில்லியம் பாயின்டன், [William Boynton] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    Relative Size

    செந்நிறக் கோளின் சீர்வடிவற்ற இரண்டு துணைக் கோள்கள்

    1877 இல் செவ்வாய்க் கோளின் இரு துணைக்கோள்களை கண்டுபிடித்து ஃபோபாஸ், டைமாஸ் என்று பெயரிட்டவர் அமெரிக்க வானியல் விஞ்ஞானி அஸாநஃப் ஹால் (Asaph Hall) என்பவர் ஆயினும், அவருக்கும் முன்பே ஜெர்மன் விஞ்ஞானி ஜொஹான்னஸ் கெப்பளர் (Johannes Kepler) (1571–1630) செவ்வாயின் துணைக் கோள்கள் இரண்டு என்று சரியாக முன்னறிவித்தார். அவர் தவறான தர்க்கத்தில் பூதக்கோள் வியாழனுக்கு 4 (?) சந்திரன்கள், பூமிக்கு ஒன்றும் இருப்பதால், செவ்வாயிக்கு இரண்டு சந்திரன்கள் இருப்பது இயற்கை என்று உரைத்தார். ஆயினும் துணைக் கோள் செவ்வாயிக்கு இரண்டு என்று தீர்மானிக்கும் அவரது தர்க்க வாத முறை தவறானது ! துணைக் கோள்கள் ஃபோபாஸ், டைமாஸ் சுற்றி வரும் சுற்று வீதி முறையே 3 & 5 மடங்களவு செவ்வாய்க் கோளின் விட்ட தூரங்கள். சுற்றும் காலங்கள் முறையே 10 & 21.5 மணி நேரங்கள் என்று முதலில் கணிக்கப் பட்டன. பிறகு துல்லியமாகக் கணக்கிட்டதில் சுற்றும் காலம் 7.6 & 30.3 மணி நேரங்கள் என்றும், சுற்றுப் பாதைகள் முறையே 1.4 & 3.5 மடங்களவு செவ்வாய் விட்டங்கள் என்றும் அறிய வந்தது. 1978 அக்டோபர் 19 இல் முதன்முதல் நாசாவின் வைக்கிங் -1 (Viking -1 Space Probe) விண்கப்பல் செவ்வாய்க் கோளைக் கடந்த போது ஃபோபாஸ் துணைக் கோளைப் படமெடுத்தது.

    Mars Reconnaissance Orbiter

    2008 மார்ச் 23 இல் நாசாவின் செவ்வாய்க் கண்காணிப்பு விண்ணுளவி (Mars Reconnaissance Orbiter -MRO) முதன்முதல் செந்நிறக் கோளின் பெரிய சந்திரன் ஃபோபாஸை (Phobos) வண்ணப் படமெடுத்து அனுப்பியது. அடுத்து 2009 பிப்ரவரி 21 இல் சிறிய சந்திரன் டைமாஸின் (Deimos) நிறப்படத்தை எடுத்தது. செவ்வாயின் ஈர்ப்பாற்றலில் சிக்கிக் கொண்ட துணைக் கோள்கள் இரண்டும் கோணலான அல்லது வக்கிரமான விண்கோள்கள் (Irregular Astroids). 1877 ஆம் ஆண்டில் அவை இரண்டும் அமெரிக்க வானியல் விஞ்ஞானி ‘அஸாஃப் ஹால்’ (Asaph Hall) என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டு பெயரிடப்பட்டன. கிரேக்க மொழியில் ·போபாஸ் என்றால் ‘பீதி’ (Panic /Fear) என்றும், டைமாஸ் என்றால் ‘மூர்க்கம்’ (Terror /Dread) என்றும் பொருள். ஒழுங்கற்ற ஃபோபாஸின் அளவு சுமார் : (27 X 22 X 19) கி.மீ. டைமாஸின் அளவு சுமார் ; 15 X12 X10 கி.மீ. அவை இரண்டும் சி-வகைக் கரி இனத்து ஒழுங்கீனக் கோள் (Carbonaceous C type Astroids) வரிசையில் அமைக்கப் படுகின்றன.

    Mars Express Spaceship

    செவ்வாய்த் துணைக் கோள்களின் தனித்துவப் பண்பாடுகள்

    செவ்வாய்க் கோள் தளத்தின் நடுமட்டக் கோட்டிலிருந்து (Equator) அதன் சந்திரன்களைப் பார்த்தால் ஃபோஸ்மாஸ் மூன்றில் ஒருமடங்கு பூமியின் முழுநிலவு போல் தெரிகிறது. நடு மட்ட கோட்டுக்கு வெகு தூரத்திலிருந்து பார்த்தால் ·போபாஸ் சிறியதாய்த் தெரிகிறது. செவ்வாய்க் கோளின் பனித் துருவ முனைகளிலிருந்து பார்த்தால் தொடுவானுக்கு அப்பால் ஃபோபாஸ் தெரிவதில்லை. அதே சமயம் டைமாஸ் ஓர் ஒளிவீசும் விண்மீன் போல் தெரிகிறது. பூராவும் மறைந்து பூமியில் தெரியும் முழுச் சந்திர கிரணம் போல் செந்நிறக் கோளில் கிரகணம் தெரிவதில்லை. செவ்வாய்க் கோள் ஒரு முறைத் தன்னைச் சுற்ற வர 24 மணிநேரம் ஆகிறது. ஃபோபாஸ் மேற்கில் உதித்து கிழக்கில் அத்தமித்து மீண்டும் உதயமாகப் 11 மணி நேரம் ஆகும். ·போபாஸ் ஒருமுறைச் செவ்வாயைச் சுற்றிவர சுமார் ஏழரை மணிநேரம் ஆகிறது. அதன் சுற்று வீதி வேகம் (Orbital Speed) : விநாடிக்கு 2.14 கி.மீ (விநாடிக்கு 1.33 மைல்) ஆனால் புறவீதியில் சுற்றும் டைமாஸ் ஒருமுறைச் செவ்வாய்க் கோளைச் சுற்றி வர சுமார் 30 மணிநேரம் ஆகிறது. இரண்டு துணைக்கோள்களும் பூமியின் நிலவு போல் தனது ஒரே முகத்தைக் காட்டிச் செவ்வாய்க் கோளைச் சுற்றுகின்றன.

    Mars Express Probe

    ஃபோபாஸ் செவ்வாய்க் கோளைவிட அதிவேகத்தில் சுற்றுவதால் அலை விசைகள் (Tidal Forces) மெதுவாகக் குறைந்து சுற்றும் ஆரம் (Orbital Radius) சிறிதாகிக் கொண்டு வருகிறது. ஃபோபாஸின் சுற்றுப் பாதை ஆரம் 100 ஆண்டு களுக்கு 20 மீடர் (66 அடி) குறைகிறது. ஆரம் அந்த வீதத்தில் குறைந்தால் ஃபோபாஸ் 11 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாய்க் கோள்: தளத்தில் வீழ்ந்து நொறுங்கி விடலாம் என்று யூகிக்கப் படுகிறது. அல்லது தூள்தூளாகப் பொடி யாகிச் செவ்வாய்க் கோளின் ஒன்று அல்லது பல வளைய மாகலாம். அதாவது அதன் சுற்று வீதி ஆரம் (Orbital Radius) இப்போது 9380 கி.மீடர் (5830 மைல்.) அது குறைந்து 2000 கி.மீடர் (1200 மைல்) ஆகும் போது, ·போபாஸ் “ரோச் எல்லையைத்” (Roche Limit) தாண்டி விடுகிறது ! புதிய கணக்கீடு செய்ததில் அந்த அழிவுக் காலம் 7.6 மில்லியன் ஆண்டுகளில் எதிர்ப் படலாம் என்று கூறப்படுகிறது.

    எதிர்காலத்தின் ஒரு பொழுதில் அலை விசைகள் படிப்படியாகக் குறைந்து சுற்றும் ஆரம் குன்றி ‘ரோச் எல்லை’ (Roche Limit) கடந்து செவ்வாய்க் கோளில் விழுந்து ஃபோபாஸ் நொறுங்கி விடும் என்று கருதப்படுகிறது. டைமாஸ் துணைக்கோள் ஃபோபாஸை விட மெதுவாக செவ்வாய்க் கோளைச் சுற்றுகிறது. ஆதலால் அதன் விதி ஃபோபாஸ் துணைக்கோள் போல் அழிவுப் பாதையில் இல்லை ! ஃபோபாஸ் டைமாஸைப் போல் 4 மடங்கு வேகத்தில் செவ்வாய்க் கோளைச் சுற்றுகிறது. ஃபோபாஸ் தளத்தி லிருந்து பார்த்தால் செவ்வாய் 6400 மடங்கு பெரிதாகவும், 2500 மடங்கு முழுமதியை விட ஒளிவீசியும் காட்சி தருகிறது.

    Mars Eclipse

    ஈசாவின் செவ்வாய்க் கோள் வேக விண்ணுளவி செய்த பயணம்

    ஈரோப்பியன் விண்வெளித் துறையகம் [European Space Agency (ESA)] ஜூன் 2, 2003 இல் 150 மில்லியன் ஈரோச் [Euro] செலவில் [133 மில்லியன் US டாலர்] தயாரித்து, 240 மில்லியன் மைல் பயணம் செய்ய அனுப்பியது, செவ்வாய் வேகக்கப்பல் [Mars Express with Beagle-2 Lander]. அது செவ்வாய்ச் சுற்றுச்சிமிழ் [Mars Express Orbiter] ஒன்றையும், தள ஆய்வுச்சிமிழ் பீகிள் [Beagle 2 Lander] ஒன்றையும் சுமந்து கொண்டு, ரஷ்யாவின் சோயஸ்-·பிரிகட் ராக்கெட் [Russian Soyuz-Fregat Rocket] ரஷ்யாவின் பைகோனூர் காஸ்மோ டிரோம் [Baikpnur Cosmodrome] ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

    2003 டிசம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க் கோளை 150 மைல் குறு ஆரத்தில் நெருங்கி, ஐரோப்பிய சுற்றுச்சிமிழ் நீள்வட்டத்தில் சுற்றப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சிமிழில் செவ்வாயின் சூழ்மண்டலம், கோளின் அமைப்பு, தளவியல் பண்பு, தள உட்பகுதி ஆகியவற்றை ஆராய ஏழு கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஜெர்மனியின் விரிநோக்கிக் காமிரா [Stereoscopic Camera], பிரான்ஸின் தாதுக்கள் காணும் தளக்கருவி [Mineralogical Mapper], இத்தாலியின் சூழக உளவு கருவி [Atmospheric Sounder], இத்தாலி & ஜெட் உந்து ஆய்வகம் [JPL California] செய்த ரேடார் உளவி [Radar Probe] அவற்றில் குறிப்பிடத் தக்கவை.

    Mars & Moons Location

    பீகிள் மிகவும் சிறிய தள உளவி. 1831 இல் உயிரியல் விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் [Charles Darwin], தகவலைத் தேடி பூமியில் தடம்படாத தளத்துக்குச் செல்லப் பயன் படுத்திய கப்பலின் பெயர் பீகிள்-2 ! அந்தப் பெயரே ஐரோப்பியத் தள உளவிக்கு வைக்கப் பட்டது!  செவ்வாய்த் தளத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்று, பீகிள் உளவு செய்யும். தளத்தில் நிலை பெற்றபின், பீகிள் விண்வெளிக் கோளில் வாழ்ந்த உயிரினம் [Exobiology], தளவியல் இரசாயன [Geochemistry] ஆய்வுகளைச் செய்யும். சுற்றுச்சிமிழ் நான்கு ஆண்டுகள் [2003-2007] தகவல் அனுப்பும் தகுதி வாய்ந்த சாதனங்களைக் கொண்டது.

    முன்பு ஏவிய செவ்வாய்க் கோள் தேடல் பயணங்கள்.

    1971 இல் நாசாவின் மாரினர் -9 (Mariner -9), அடுத்து 1977 இல் நாசாவின் வைக்கிங் -1 (Viking -1), பிறகு 1998 & 2003 ஆம் ஆண்டுகளில் செவ்வாய்க் கோளத் தளப்புளவி (Mars Global Surveyor), அடுத்து 2004, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் ஈசாவின் செவ்வாய் வேக விண்ணுளவி (Mars Express), பின்னர் 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் செவ்வாய் கண்கணிப்புச் சுற்றுளவி (Mars Reconnaissance Orbiter) போன்றவை செவ்வாய்க் கோளையும் அதன் இரண்டு துணைக் கோள்களையும் சுமார் 40 ஆண்டு களாய் ஆராய்ந்து வந்துள்ளன. 2005 வேனிற்காலத்தில் செவ்வாய்த் தளவாகனம் (Spitit Rover) சோதனைகள் செய்தது.

    Colour Image

    1988 இல் ரஷ்யா ஃபோபாஸ் -1 & ஃபோபாஸ் -2 ஆகிய இரண்டு விண்ணுளவிகள் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டன. ரஷ்யன் விண்வெளி ஆணையகம் ஃபோபாஸ் மண்ணிலிருந்து மாதிரியை எடுத்துப் பூமிக்கு மீளும் விண்கப்பல் திட்டம் ஒன்றைத் தயாரித்து வந்தது. அது 2011 ஆம் ஆண்டில் நிறைவேறத் திட்டமிடப் பட்டது. பூமிக்குச் செந்நிறக் கோளின் மாதிரியைக் கொண்டு வரும் முற்போக்குத் திட்டம் அது.  ஆனால் அது நிறைவேறாது ராக்கெட் கடலில் வீழ்ந்தது.  செவ்வாய்க் கோளில் மனிதர் இயக்கும் விண்கப்பல் இறங்கி ஏறுவது மிக மிகச் சிரமான பொறித்துறை நுணுக்கம். அதற்குப் பதிலாக விண்வெளி விமானிகள் ஃபோபாஸில் இறங்கித் தங்குதளம் அமைத்து, அங்கிருந்து செவ்வாயிக்குப் போக முனைவது எளிதாகும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    Deimos & Pobos

    2005 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்கு மீண்டுமோர் விண்கப்பல்

    நாசா [NASA -National Aeronautics & Space Admistration] 2003 இல் செவ்வாய்க் கோளுக்கு சர்வேயர் [Surveyor], ஆடிஸ்ஸி [Mars Odyssey] விண்கப்பல்களை ஏவியது. பிறகு ஈரோப்பில் ஈசா [ESA -European Space Agency] செவ்வாய் எக்ஸ்பிரஸ்ஸை [Mars Express] அதே சமயத்தில் அனுப்பியது. ரோவர் ஊர்திகள் இரண்டும் 2004 ஜனவரியில் அடுத்தடுத்துச் செவ்வாய்த் தளத்தில் தடம் வைத்து நடமாட ஆரம்பித்தன. அதன் பிறகு நாசா 2005 ஆகஸ்டு 12 இல் செவ்வாய் விண்சுற்றிக் கப்பலைச் [Mars Orbiter] செவ்வாய்க் கோளுக்கு ஏவியது. விண்சுற்றி 2006 மார்சில் செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்து, அடுத்து ஆறு ஆண்டு காலங்கள் (2012 வரை) வலம் வரும் ! அப்பயணத்திற்கு நிதித்தொகை ஒதுக்கம்: 720 மில்லியன் டாலர்! முதலிரண்டு காலம் அது செவ்வாய்க் கோளின் துருவப் பனித் தொப்பியின் [Polar Ice Cap] வரலாற்றை அறிய முனைந்தது

    Mars Icy water deposit

    2025 ஆண்டுக்குள் மனிதர் தடம் வைக்கும் முதல் செவ்வாய்ப் பயணம்

    இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் [2025] நாசாவும், ஈசாவும் மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பல்களைத் [Manned Spacecraft] தயாரித்து, செவ்வாய்க் கோளில் தமது தடத்தை வைக்கத் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டு வருகின்றன! அப்பொல்லோ திட்டத்தில் மனிதர் நிலவைத் தொட 250,000 மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தது! ஆனால் பூமியிலிருந்து செவ்வாயின் தூரம் 34 மில்லியன் மைல் முதல் 63 மில்லியன் மைல் வரை வேறுபடுகிறது. திட்டமிடும் விஞ்ஞானிகள் புறப்படும் தேதியைக் கணித்துப் பயண நாட்களைக் குறைக்க நிர்ணயம் செய்ய வேண்டும்! மேலும் செவ்வாய்க் கோளை நெருங்க மனிதர் பல மாதங்கள் பூஜிய ஈர்ப்பில் [Zero Gravity] பயணம் செய்ய வேண்டிய திருக்கும் !

    பரிதியின் தீக்கதிர்கள் தாக்குவதைப் பல மாதங்கள் தாங்கிக் கொள்ள வேண்டியதிருக்கும். அப்பணியை மேற்கொள்ள விஞ்ஞானிகள் தீர்வு செய்ய வேண்டிய பிரச்சனைகள், அனுபவச் சிரமங்கள் அநேகம் ! அநேகம் ! பாதுகாப்பாக அந்தப் பயணத்தைத் துவங்கி நிறைவேற்றத் துணியும் விஞ்ஞானிகளின் மன உறுதியை நாம் மிகவும் மெச்ச வேண்டும். நாசா அல்லது ஈசா செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி, செவ்வாய்த் தளத்தில் தடமிட்ட பிறகு பாதுகாப்பாகப் பூமிக்கு மீட்சி செய்தால், அது நிச்சயம் 21 ஆம் நூற்றாண்டு விண்வெளி வரலாற்றில் ஓர் மகத்தான விஞ்ஞானச் சாதனையாக முதன்மை பெற்றுப் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.

    Solar System Moons

    +++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA,

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)

    11. http://www.usatoday.com/story/news/2015/11/23/mars-moon-ring/76257614/[November 23, 2015]

    12.  http://www.csmonitor.com/Science/2015/1124/Could-Mars-someday-get-its-own-set-of-rings [November 24, 2015]

    13. http://www.theweathernetwork.com/news/articles/future-mars-will-grind-its-largest-moon-into-a-dusty-ring/60295/

    14. http://earthsky.org/space/mars-to-lose-its-largest-moon-gain-a-ring [November 26, 2015]

    15. http://to-isis.beforeitsnews.com/space/2015/11/mars-moon-phobos-will-break-into-rings-like-saturn-2494732.html [November 25, 2015]

    16. http://www.marsdaily.com/reports/Mars_to_lose_its_largest_moon_Phobos_but_gain_a_ring_999.html [November 25, 2015]

    17.  http://www.space.com/24281-mars-moons-phobos-deimos-photos.html  [November 26, 2015]

    ++++++++++++++++++
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (December 12, 2015)

    Attachments area
    Preview YouTube video Will there be a ring in Mars’s future?

    Will there be a ring in Mars’s future?

    Preview YouTube video Mars is Tearing Phobos Apart With Gravity

    Mars is Tearing Phobos Apart With Gravity

    Preview YouTube video In 40 million years, Mars may have a ring (and one fewer moon) moon phobos

    In 40 million years, Mars may have a ring (and one fewer moon) moon phobos
    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 27

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    உலகில் ”வாழும்” உயிர்களாகிய மக்கள் தம் வாழ்நாளுக்குள் அனைவர்க்கும் உதவி, அனைவருடனும் சேர்ந்து வாழும் வாழ்க்கையை ‘இல்வாழ்க்கை’ என்றனர். மனித மனம் புலன்கள் விரும்புவதை அடைந்து மகிழ்வது! ஐம்புலன்களும் விரும்பும் பொருள்களை அடைந்து அனுபவிப்பதே இல்வாழ்க்கையின் இயல்பாகும். இந்தப் புலனாசைகளில் இருந்து விடுபட்டு, வீட்டு நெறியாகிய திருவடிப்பேற்றை விரும்புதலே உயிர் வாழ்க்கையின் நோக்கம் என்பது சான்றோர் கருத்து! உலகநடைமுறை ஒழுங்காக அமைவதற்கு ஏற்ற உதவிகளை இல்லறத்தான் மாத்திரமே செய்வான். புலன்களை அடக்கி, விருப்பங்களைத் துறந்து, மூச்சடக்கி தியானம், யோகம் ஆகியவற்றைப் பயிலும் துறவு நிலை எல்லார்க்கும் எளியதன்று. ஆனால், புலன் இன்பங்களை நன்றாக அனுபவித்து, எல்லை கடவாத அடக்கத்துடன் இல்லறம் நடத்துதலே துறவு நிலையை விடச் சிறந்தது என்கிறார் வள்ளுவர்! இதனை …

    “அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
    போஒய்ப் பெறுவ தெவன்?” (46)

    என்று திருக்குறள் கூறுகிறது! அறத்து ஆற்றின் என்பதற்கு எல்லைகடவாத புலனின்பம் பெற்று வாழும் நெறி என்பது பொருள்! ஆகவே முறைப்பட்ட இல்லற வாழ்வில், முறையான இன்பத்தைத் துய்த்து வாழ்பவன், அதற்குப் புறம்பான ஆசைவயப்பட்டு, அறிவிழந்து காமாந்தகாரனாய் வாழ்வதால் ”உயிர்க்கொல்லி நோயையே” பெறுவான் என்று நாம் புதிய பொருள் கண்டோம்! இதைத் தவிர முன்னரே பரிமேலழகர், புறத்தாற்றின் என்பதற்கு குடும்பத்தை விட்டுக் காட்டிற்குப் போய் வாழும் துறவு நிலை என்று குறித்தார். அத்துறவறத்தில் காட்டுக்குப் போய் ஒருவன் பெறத்தக்கது யாதுமில்லை என்றார். ”இல்லறமல்லது நல்லறமன்று” என்றார் ஔவையார்.

    இல்லறத்தில் வாழ்பவனின் இன்றியமையாத கடமை பிறருக்கு உரிய உதவி புரிவதே என்கிறார் திருவள்ளுவர். அவர் இயல்புடைய மூவர்’ க்கும், புறக்கணிக்கப்பட்டோருக்கும், வறியோருக்கும் தன்பால் வந்துசேர்ந்து மரணமடைந்தார்க்கும் உதவிபுரிவதே இல்லறத்தாரின் சிறந்த கடமை என்கிறார்! அதனை அவர் ,

    ”இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை!”(41) என்ற குறளிலும்,

    ”துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை!”(42) என்ற குறளிலும்

    கூறுகிறார். இவற்றில் ”இயல்புடைய மூவர்” என்று திருவள்ளுவர் குறிப்பதைக் குறித்துச் சில வேறுபட்ட பொருள்கள் கூறப்படுகின்றன! பொதுவாக வாழ்க்கை நிலைகள் என்று நமக்கு முன்னரே வகுத்து வைக்கப் பெற்றவை நான்கு! அவை:
    1) இல்லறம்
    2) பிரம்மச்சரியம்
    3) வானப்பிரத்தம்
    4) சந்நியாசம்
    இவற்றுள் இல்லறத்தில் வாழ்பவன் துணையுடன் மட்டுமே மற்றைய நிலைகளில் இருப்போர் வாழ்வர். ஆகவே, பிரம்மச்சாரி கல்விபயிலத் துணை புரிவதும், வானப்பிரஸ்தர் வீட்டை விட்டு நீங்கி, அல்லது தம் இல்லறக்கடமைகளில் இருந்து விலகி வாழ உதவி புரிவதும், முற்றும் துறந்த துறவிகள் உயிர் வாழத்தக்க உதவிகள் புரிவதும் இல்லறத்தான் செய்யத்தக்க கடமையாகும்!

    இம்மூவரே இயல்புடைய மூவர் என்று பரிமேலழகர் பொருள் கூறுகிறார்! மேலும் மற்றையோர் இயல்பாக நம்முடன் இணைந்து வாழ்பவராகிய தாய், தந்தை, மக்கள் என்ற மூவகையினர் என்றும் பொருள் கூறுகின்றனர்.

    சிலர், தாய் வழியினர் – அதாவது மாமன், சித்தி போன்றோர்; தந்தை வழியினர் – அதாவது பெரியப்பா, சித்தப்பா முதலியோர்; தம் மக்கள் – அதாவது மகன், மகள் ஆகியோர் என்கின்றனர். இப்படியே பார்த்தால் மனைவி மூலம் உறவானவர் என்று மாமனார், மாமியார், மைத்துனர், மைத்துனி என்றும் கூறலாமே! ஆகவே இயல்புடைய மூவர் என்பதை வரையறை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எவ்வாறெனில் இவர்கள் அனைவரும் உறவினர், சுற்றத்தார் என்ற வகையில் அடங்குவர்! இவர்களை வள்ளுவர் ”தான்” என்ற சொல்லில், வேறொரு திருக்குறளில் அடக்குகிறார். அதாவது ,

    “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (43)

    என்ற குறளில் தான் என்றாங்கு என்பதில் தன் உறவினர், சுற்றத்தாரை அடக்குகிறார்! ஆகவே இயல்புடைய மூவர் யாவர்? என்ற வினா வுக்கு விடை காண வேண்டியுள்ளது! சிலர் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகைப் பிரிவினருள், வேளாளராகிய இல்லறத்தார் மற்ற வணிகர், அந்தணர், அரசர் ஆகிய ‘இயல்புடைய மூவ’ருக்குத் துணை புரியலாம் என்று பொருள் கூறுகின்றனர். வேளாளர் மட்டுமே ‘இல்வாழ்வார்’ என்று கூறுதல் இயலாதே? மற்றவர்களிலும் இல்லறத்தார் உள்ளனரே? ஆகவே இக்காலத்தின் இல்வாழ்க்கை நிலை அக்காலத்தை விட வேறுபட்டது!

    அப்படியானால் ”இயல்புடைய மூவர் யாவர்? சிந்திப்போம்! பிரம்மச்சாரிகள் என்ற தம் குழந்தைகளின் படிப்புக் காலம் நிறையும் வரை, பெற்றோர்களே அவர்களின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்கின்றனர்! இல்லறத்தானின் சேமிப்பு என்பதே இவற்றைக் கருதித்தான் ஏற்பட்டது போலும்! அதனால் இயல்புடைய மூவருள் படிக்கும் குழந்தைகளை இணைத்துக் கொள்ளலாம்! இந்த நாளில் மூத்தோரை இல்லறத்தார் பேணுவதில்லை. அவர்கள் பணிபுரிந்த இடமே ஓய்வூதியப் பயனை அளிக்கிறது! அரசும் முதியோர் உதவித் தொகை வழங்குகிறது. ஊழியர்களின் ஓய்வூதியத்தையும் அவர்களின் நிறுவனங்களே ஏற்றுக் கொள்கின்றன! இல்லறத்தானின் சேமிப்பு, என்பதே இவற்றைக் கருதித்தான் ஏற்பட்டது போலும்!

    அந்நாளில் இல்லறத்தான் இடும் உணவை உண்டு வாழும் நிலை பிரம்மச்சாரிக்கும், வானப் பிரஸ்தருக்கும், துறவிக்கும் இருந்தது! இப்போது அப்படியில்லை! இந்நாளில் வானப்பிரஸ்தர் என்ற வகையினர் உதவித்தொகை பெறும் மூத்த குடிமக்களே ஆவர்! அவர்கள் நோய்வாய்ப்பட்டும், முதுமையாலும் தளர்ந்த காலத்தில் இல்லறத்தாரின் பேணுதலை எதிர்பார்க்கின்றனர். ஆகவே அவர்களை, ஓரளவுக்கே இம்மூவருள் இரண்டாமவராக இணைக்கலாம்.

    முற்றும் துறந்த துறவிகள் இல்லறத் தாரின் உதவியை நம்பினால் அவர்களின் துறவுக்குப் பொருளே இல்லை! அத்தகைய சிலர் சமுதாயத்தாரால் வணங்கிப் போற்றப் பெறுகின்றனர். அவர்கள் மடங்களை நிறுவி, மிகுந்த செல்வங்களை, சொத்துக்களாகப் பெற்றுள்ளனர் அத்தகையோர் இல்லறத்தாரை நாடி வந்தால், அல்லது அவர்கள் வாழும் ஊருக்குள் வந்தால், இல்லறத்தார் வணங்கிப் போற்றலாம்! இவர்கள் இல்லறத்தாரையே நம்பி வாழ்கின்றவர்கள் என்று கருதலாகாது!

    இனி, இயல்புடைய மூவர் முழுவதுமாக இல்லறத்தாரையே நம்பி இருக்கும் நிலையில் இருக்க வேண்டும். ஆகவே, பெற்ற குழந்தைகள், நலிந்த முதியோர்கள், ஓரளவுக்கு வாழ வழியற்ற இரவலர் ஆகியோரை இக்காலத்திற்கு ஏற்றவாறு வள்ளுவர் கூறும் இயல்புடைய மூவராக ஏற்றுக் கொள்ளலாம்! இனி அக்குறட்பாவைக் காண்போம்!

    “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை!” (41)

    இந்தப் புதிய பொருளும் பரிமேலழகரின் உரையை ஒட்டியே அமைந்துள்ளது! இது பரிமேலழகரின் உரைத்திறம் காலங்கடந்து விளங்குவதைக் காட்டுகிறது!

     

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    463a9649-e848-426b-bbad-c54e755a1555

    GO GO கோ கண்ணன் மாட்டை வேண்டுகிறான்
    பாரதி பல்லக்கு ஊர்வலத்தில் தோள் கொடுக்க….

    ”’கண்ணிமைக்கும் நேரம் கவிகொட்டும் பாரதியார்க்(கு),
    இன்னிக்குப் பல்லக்கு இல்லத்தில், -மன்னிப்பாய்,
    இன்றுபோய் நாளைவா, இல்லை எழுதிடுவார்,
    ”கண்ணனோர் கள்ளன்” கவி”….கிரேசி மோகன்….
    ”கண்ணனென் கள்ளன்”

    Share
  • போய்விடாதே…!

    –செண்பக ஜெகதீசன்

    உயிர்த்தெழுந்த மனிதநேயத்தை,
    மீண்டும்
    சிலுவையில் அறையத்துடிக்கும்
    அரசியலார்…!

    மனிதநேயமே,
    பேய்மழை வெள்ளத்தில்
    பெருகி வந்ததுபோல்,
    பணவெள்ளத்தில்
    பொலிவிழந்து போய்விடாதே…!

    Share
  • மகாகவி பிறந்த நாள்!

    – சுரேஜமீ

    கம்பனும்
    வள்ளுவனும்                                                   barathiyar
    இளங்கோவும்
    கலந்து பேசி
    தமிழ்த் தாயின்
    முன்தோன்றி
    ஒரு வரம் 
    வேண்டினர்!

    தூங்கும் 
    தமிழினத்தை 
    துயிலெழுப்ப,
    தூரிகையைத்
    தட்டி எடு என்று!

    தானே கருவாகி
    தரணியில்
    அவதரித்தாள்;
    பாரதி எனும்
    உருவெடுத்தாள்;
    தமிழென்னும்
    அமுது படைத்தாள்;
    குயில்கூடத் தமிழ்
    பாடியது,
    அவன் குரல் கேட்டு!
    மரம், செடி, கொடிகளெல்லாம்
    இசை பாடியது
    அவன் தமிழ் “பா” க்கு!
    தமிழன் தலை 
    நிமிர்ந்தான்!
    தரணியில் இனி 
    எவர்க்கும் யாம் 
    அடிமை இல்லையென்று!

    அந்நாள் இந்நாள்!
    அவதாரத் திருநாள்!

    வாழ்க தமிழ்! வளர்க பாரதி புகழ்!!    

     

    Share
  • வானத்தைவிடப் பரந்து விரிந்தது

    – தேமொழி.

     

    வானத்தைவிடப் பரந்து விரிந்தது

    கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன்
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

    எல்லையற்ற கற்பனைத் திறனில்
    நீலவானைவிடப் பரந்து விரிந்தது
    அருகருகே வைத்து ஒப்பிட்டால்
    மூளையின் ஆற்றலுக்கு உட்பட்டு
    அதனுள் அடங்கிவிடும் பரந்தவானமும்

    அளவற்ற கற்கும் ஆற்றலில்
    நீலக்கடலை விடவும் ஆழமானது
    ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டால்
    மூளை ஒரு கடற்பஞ்சென உறிஞ்சிட
    வாளிக்குள் ஒடுங்கிவிடும் ஆழ்கடலும்

    நிகரற்ற படைப்பாற்றல் தகுதியில்
    ஒப்பற்ற கடவுளின் சக்திக்குச் சமம்
    எடைக்கு எடை ஒப்பிடுகையில்
    மூளை கடவுளைவிட மாறுபடுமெனில் அது
    இசையின் சந்தங்களென வேறுபடுவதே

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    emily-dickinson-everett
    The Brain—is wider than the Sky—

    – Emily Dickinson

     

    The Brain—is wider than the Sky—
    For—put them side by side—
    The one the other will contain
    With ease—and You—beside—

    The Brain is deeper than the sea—
    For—hold them—Blue to Blue—
    The one the other will absorb—
    As Sponges—Buckets—do—

    The Brain is just the weight of God—
    For—Heft them—Pound for Pound—
    And they will differ—if they do—
    As Syllable from Sound—

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (177)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    அவசரமான வாழ்க்கை. அல்லோலப்படும் பரபரப்பு. எதையோ தேடிக் கொண்டு கண்முன்னே இயற்கை தந்த இனிய வனப்புகளை அனுபவிக்கக் கூட நேரமின்றி கையிலிருப்பதைத் தொலைத்துக் கொண்டு இந்த 2015ம் ஆண்டில் மனித இனம் எதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது ?

    அன்று காடுகளில் வாழ்ந்த ஆதி மனிதனுக்கும் இன்று நவநாகரீக உடையணிந்து வசதிகளின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய மனிதனுக்கும் ஆகாயமளவிற்கு விரிந்து கிடக்கும் வித்தியாசம். ஆனால் இந்த வித்தியாசம் எமக்கு அளித்திருக்கும் அனுகூலத்தின் மூலம் நாம் எதைச் சாதித்துக் கொண்டிருக்கிறோம், அன்றி எத்தகையதோர் எதிர்காலத்தை எமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கிறோம் ?

    மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கேள்விகள்.

    தனிமனிதனாகத் தனது சுயதேவைகளுக்காக மற்றையோரின் உணர்வுகளை மிதித்து வாழ்ந்த ஆதி மனிதன் நாகரீகமடைந்தேன் என்று கூட்டமாக, சமூகமாக, சமுதாயமாக வாழ்ந்து இன்று மீண்டும் தனிமனித தேவைகளுக்காக அடுத்தவரின் உணர்வுகளை மிதித்து வாழும் நிலைக்கு வந்து விட்டானோ என்று எண்ணும் வகை எமைச் சுற்றிப் பல நிகழ்வுகள் நிகழ்கின்றன.

    அதேநேரம் இயற்கையின் அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் போது சமுதாய உணர்வுகள் மேலோங்கப் பணியாற்றும் நிலைகளையும் பார்க்கின்றோம். நெஞ்சில் சிறிதாக ஓர் ஆறுதல். மனிதாபிமானம் ஆங்காங்கே பச்சையாக இருக்கும் நிலை கண்டு ஒரு தெம்பு உருவாகிறது. பின் எதற்காக உனக்கிந்த கேள்விகளும், தடுமாற்றமும் என உங்கள் கேள்வியில் தொங்கியிருக்கும் நியாயம் எனக்குப் புரிகிறது.

    இயற்கை எம்மீது தொடுக்கும் போர்கள் ஒருபுறமிருக்கட்டும். அதற்கு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆனால் மனிதன், மனிதன் மீது தொடுக்கும் போர்களும், அப்போர்களினால் அல்லலுற்று அவதியுறும் சக மானிடரும், அப்போருக்கான காரணங்களை புரிந்து கொள்ள முடியாத ஒரு விரக்தியுமே எனது கேள்விகளுக்குக் காரணம்.

    நாம் யாருமே யாராக, யாருக்கு குழந்தையாகப் போகிறோம் என்று கேட்டுப் பிறப்பதில்லை. அதே போல தமக்கு யார் குழந்தையாக வர வேண்டும் என்று எம்மைப் பெற்றவர்களும் கேட்டுப் பெறுவதில்லை. நிலத்தைப் பெற்றோர் பதப்படுத்த எமக்கும் மேலே எமக்கும் புரியாத ஒரு சக்தி விதையைத் தூவுகிறது. துளிர்த்துச் செடியாகி மரமாகி “நான்” வளர்ந்து விட்டேன் எனும் இறுமாப்புடன் செயல்படத் துவங்குகிறோம். அங்கேதான் நாம் எமது வித்தியாசங்களுக்குள் எம்மைப் புதைத்துக் கொள்கிறோம். ஒரு குழந்தையாக மண்ணில் விழும் போது எந்த அடையாளமும் இல்லாமல் அவதரித்து விட்டு நம்மை இனம், மதம், மொழி, நிறம் எனும் வேற்றுமைகளுக்குள் சிக்க வைத்து விடுகிறோம்.

    மதம் என்பது மனிதனின் மன ஒட்டங்களைச் சீர்ப்படுத்தி ஓர் தெளிவான கண்ணோட்டத்துடன் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வைப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. எந்த ஒரு மதமுமே தம்முடைய மதமே உலகில் சிறந்தது என்றும் மற்றைய மதங்களைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்றோ போதிப்பதில்லை. அனைத்து மதங்களின் அடிப்படையும் அன்புதான். மதங்களின் வழி நடக்கும் சிலர் தமது மனதின் ஆக்ரோஷங்களை மதத்தின் அடிப்படையில் நியாயப்படுத்த முயல்வதினால் அம்மதங்களைச் சேர்ந்த அனைவரையும் குற்றவாளிகளாகக் கருத முடியாது. எமது மதத்தின் அன்றி மொழியின் பெருமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக மற்றொரு உயிரைக் காவு கொள்வது எவ்வகையில் மதத்திற்கோ அன்றி மொழிக்கோ பெருமை சேர்க்கும் ?

    இன்றைய உலகில் பயங்கரவாதம் எனும் பெயரால் நாம் எமது மதத்திற்கோ அன்றி மொழிக்கோ பாதுகாப்பளிக்கப் போகிறோம் என்று எண்ணுவது என்றுமே எம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லாது. மாறாக மனிதர்களுக்கிடையில் வேற்றுமையையும், விரோத மனப்பான்மையையும், அமைதியின்மையுமே தோற்றுவிக்கும்.

    சமீபத்தில் பிரான்ஸிலும், அமெரிக்காவிலும் நடைபெற்ற மனிதப் படுகொலைகள் அந்நாட்டு மக்களிடையே தேவையற்ற சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளது. தவிர நிறவெறி, மொழிவெறி, மதவெறி கொண்ட அந்நாட்டுத் தேசியவாதிகளின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையிலேயே இந்நிகழ்வுகள் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. பிரான்ஸில் வேற்றின மக்களுக்கெதிராகக் குரல் கொடுக்கும் தேசவாதக் கட்சி அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைக் கைப்பற்றியுள்ளது. இது அங்குள்ள மிதவாத அரசியல்வாதிகளை அச்சமடைய வைத்ததுடன் அந்நாட்டுப் பல்லின கலாச்சார வாழ்வுமுறையை குலைக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல அமெரிக்காவில் தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளராகிய டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தைக் காரணம் காட்டி இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த எவரையும் ஐக்கிய அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

    இத்தகைய மதவாதக் கருத்துக்கள் உலகை எந்த இலக்கை நோக்கி இழுத்துச் செல்லப் போகிறது என்பதே கேள்வி. மனதுக்கு ஆறுதல் தரும் செய்தி இவரது இந்த அர்த்தமற்ற வாதம் அமெரிக்காவில் இவரது கட்சியைச் சேர்ந்த பலராலும் வன்மையாகக் கண்டிக்கப் பட்டுள்ளது. பல உலக முன்னணி அரசியல் தலைவர்கள் இத்தகைய அர்த்தமற்ற கருத்துக்கள் எதுவித பலனுமளிக்காது என்று மிகவும் பலமான கண்டனங்களை இந்நபருக்கெதிராக முன்வைத்துள்ளார்கள். இங்கிலாந்தில் இவர் லண்டனுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது எனும் மகஜர் ஒன்றை அரசாங்கத்தின் இணையத்தளத்தினூடாக   500,000   கையெழுத்துக்களுடன் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

    மதப்பிரிவினையைத் தூண்டி மக்களுக்கிடையே நிலவி வரும் புரிந்துணர்வுக்கு பங்கம் விளைவிக்கும் இம்மனிதருக்கெதிராக பல பாகங்களில் இருந்து பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களால் எதிர்ப்புக் கிளர்ந்துள்ளது. அனைத்து மதமும் அன்பின் அடித்தளத்தில் அமைந்தது எனும் கருத்தினை மக்கள் ஆதரித்து ஒன்றிணைவது இத்தகைய ஒரு அறிவிலியின் அர்த்தமில்லாக் கருத்து என்பது ஒருவகை நன்மை எனலாம்.

    மனிதன் மனிதனாக வாழ்வது மற்றைய மனிதனையும் தன்னைப் போல எண்ணுவது ஒன்றின் மூலமே என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

    ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Check for Updates >>> https://petition.parliament.uk/petitions/114003

    Block Donald J Trump from England

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.சக்திதாசன்

    Share
  • மழைப்பேச்சு!

     

    ஷைலஜா

    nandi_2623696f

    யாகங்கள் பல செய்தீர் உங்கள்மன
    சோகம் நீங்கிடவேண்டுமென்றே
    தாகம் தணிக்க வந்தேன் தவறா?

    கண்ணுக்கு எட்டாத்தொலைவில்
    காணாபொருள்போலிருந்தேன்
    காட்சிகொடுத்ததும் தவறா?

    கோடிக்குரல் அழைத்தால்
    தேடிவருவது தெய்வகுணம்
    ஓடிவந்ததும் தவறா?

    என்பாதைஅத்தனையும்
    எங்கும் அடைத்துவிட்டீர்
    எப்படியோ வந்ததும் தவறா?

    என்குணம் எதிலும் அடங்கும்
    என்பது தெரிந்திருந்தும்
    ஏரிகுளங்களை அழித்தது தவறு

    இல்லாத பொழுதினில் ஏங்குவதும்
    வருகின்றபொழுதினில் சேமிக்காததும்
    வாழும் மனிதன் செய்யும் தவறு

    இயற்கையின் கொடைதன்னை
    இயன்றவரை அழிப்பதுதான்
    இன்றைய மனிதனின் தவறு

    பொறுத்ததுபோதுமென்றுதான்
    பொங்கி எழுந்து வந்தேன்
    புரிந்ததா உங்கள் தவறு?

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 38

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

     

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    “எழுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நான் அருகில் சென்ற போது, குகைக்குள் நுழையும் ஒரு சுதந்திரப் பூச்சியைப் போல் உன்னைக் கண்டேன் ! ஏழு நிமிடங்களுக்கு முன்பு நீ என் பளிங்குக் கண்ணாடி ஜன்னல் வழியே போவது என் கண்களில் பட்டது. அப்போது மரணம் உனக்கு மேல் தொங்கி நிற்க, அடிமைச் சங்கிலிக் கட்டிய குறுகிய சந்துக்கள் வழியே நீ மனிதனாய்ப் போய்க் கொண்டிருந்தாய்.”
    கலில் கிப்ரான் (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
    ___________________

    விடுதலை அழைக்கிறது
    நம்மைத் தனது
    மேடைக்கு !
    அங்கே நின்று
    அவளது செழித்த ஒயினையும்
    அறுசுவை உணவையும்
    சுவைக் கிறோம் !
    ஆனால் நாமந்த பீடத்தில்
    அமரும் போது
    பகற் கொள்ளை அடித்து
    பசியைப் போக்க
    வயிறு புடைக்கத் தின்கிறோம்
    ___________________

    இயற்கை அன்னை தன்
    கரம் நீட்டி நம்மை எல்லாம்
    வரவேற்பாள்
    தனது எழிலை நாம்
    அனுபவிக்க
    வேண்டு மென்று !
    ஆனால் நாமெல்லாம்
    அஞ்சி நடுங்குவோம்
    அவளது மௌனத்தைக் கண்டு !
    நெருக்க மான
    நகருக்கு ஓடுவோம்
    நாமெல்லாம்
    ஓநா யிக்கு அஞ்சி
    ஒதுங்கும்
    ஆட்டு மந்தை போல் !
    ___________________

    சத்தியம் அழைக்கிறது
    நம்மை யெல்லாம்
    குழந்தையின்
    களங்க மிலாப்
    புன்னகை யோடு
    கவர்ச்சிக்
    காதலியின் முத்த மோடு !
    ஆயினும் நாமெல்லாம்
    அதன் அன்பு முகத்தில் அறைவோம்
    கதவைச் சாத்தி !
    பகைவன் போல் எதிர்த்து
    நகைப்போம் !
    ___________________

    Share
  • நிவாரணம்

    –தமிழ்த்தேனீ.

    நிவாரணத் தொகை என்பது இழப்பீட்டுத் தொகை அல்ல.

    குறிப்பாக மேல் நாடுகளில் காப்பீட்டு நிறுவனங்கள் அளிப்பது போல் கண் போனால் இவ்வளவு, கால் போனால் இவ்வளவு, விரல் போனால் இவ்வளவு என்று தரம் பிரித்து அதற்கேற்ற இழப்பீட்டுத் தொகையை அளிப்பது போல் அல்ல (நம் நாட்டில் இல்லை) நிவாரணத் தொகை என்பது.

    தலைவலி வந்தால் அளிக்கும் ஒரு மாத்திரை போன்றது நிவாரணத் தொகை. அதைத் தலைவலிக்கேற்ப அதிகப்படுத்தலாம் குறைக்கலாம். ஆனால் தலைவலியின் மூலகாரணத்தை அறியச் செய்யவேண்டிய மருத்துவ ஆராய்ச்சிகளை முழுவதும் முடித்து அந்த மூலகாரணத்துக்கேற்ப மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ அளிப்பது போன்றது இழப்பீட்டுத் தொகை.

    தற்போதைய நிலையில் முழு வீடு, வீட்டில் உள்ள அத்துணைப் பொருட்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு ஆண்டு காலமாக காப்பீட்டுத் தொகையாக மக்கள் அளித்தவற்றைக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு சதவிகிதம் கூட திருப்பித் தராமல் பொருளீட்டினர்.

    ஆனால் இன்றைய இயற்கைப் பேரிடரினால் ஏற்பட்ட இழப்புகளுக்குக் காப்பீட்டு நிறுவனங்கள் இவ்வளவு வருடங்கள் ஈட்டிய தொகை முழுவதும் செலவழித்தாலும் அது ஈடாகாது. ஆகவே காப்பீட்டு நிறுவனங்கள் என்ன செய்து ஈடுகட்டப் போகிறார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.

    denver-flood-restoration-servicesஎன் நண்பரின் சகோதரியார் முடிச்சூர் சாலையில் இருந்த வீட்டில் அவருடைய குளிர்சாதனக் கருவி, விலை உயர்ந்த தொலைக் காட்சிப் பெட்டி, இரண்டு கார்கள், மேலும் பல விலை உயர்ந்த மின்சார சாதனங்கள், மேலும் நகைகள் உட்பட அவர்களுக்கு இழப்பு ஐந்து இலட்சம்‌ ரூபாய்கள்.

    யார் கொடுப்பார்கள் இந்த இழப்பீட்டுத் தொகையை ?
    ஒரு வீட்டுக்கே ஐந்து இலட்சம் ரூபாய்கள் என்றால் நகரம் முழுவதும் பாதிக்கப் பட்டோருக்கு எவ்வளவு கோடிகள் செலவாகும் என்று எண்ணிப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது

    ஆனால் விலை மதிப்பில்லாத உறவுகளை, உறவுகளின் உயிரையே அளித்துவிட்டுக் கதறும் மக்களுக்கு நிவாரணத் தொகையோ இழப்பீட்டுத் தொகையோ எவ்வளவு அளித்தாலும் ஈடாகுமா உயிருக்கு.

    உயிரின் விலை என்ன? உறவின் விலை என்ன இதற்கெல்லாம் எப்படி ஈடுகட்ட முடியும்?
    மனிதன் தான் முக்கியம். எவ்வளவு பொருட்கள் போனாலும் மனம் தளராதீர்கள். மனிதன் உயிரோடு இருந்தால் கடினமே என்றாலும் எப்படியேனும் கஷ்டப்பட்டு மறுபடியும் பொருளீட்டலாம்.

    ஆனால் விலை மதிப்பில்லாத மனிதரின் உயிர் போனால் அதை ஈடுகட்டவே முடியாது. ஆகவே இழந்த பொருட்களை எண்ணி இதயத்தை பலகீனப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

    “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
    உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே”
    என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறியதை நினைவில் வைத்துக்கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டு வாழவேண்டும் வேறு வழியில்லை.

    உலகில் பணம் பொருட்கள் ஆகிய எல்லாவற்றையும் விட உயிர் பிரதானமானது ஆகவே உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லுங்கள்.

    காலுக்குச் செருப்பில்லையே என்று கவலைப் படுவோர் காலை இழந்தோரைப் பார்த்து தேறுதல் கொள்ள வேண்டியதுதான்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    படம் உதவி: http://www.elitewaterdamage.com/flood-cleanup/

    Share
  • தெய்வ தரிசனம்

    க.பாலசுப்ரமணியன்

    images

    எத்தனை வடிவங்கள் எடுத்தாய் இறைவா!

    பார்க்குமிடமெல்லாம் நீ படர்ந்திருக்க

    பத்து உருவினில் உன்னைச் சிறைப்பிடித்தல்

    பழுக்காத சிந்தனையின் பேதமையன்றோ !

     

    தோளிரண்டில் தன் செல்வங்களைச் சுமந்துநின்ற

    தந்தையின் அன்பினிலே உனைக் கண்டேன்  !

    தூங்காமல் தாயருகில் இரவெல்லாம் துணையிருந்து

    தேறுதல் சொன்ன மகனிடம் உனைக்கண்டேன் !

     

    காலமெல்லாம் துன்புறத்திக் கதறவிட்ட மனைவியினைக்

    கனிவாக அணைத்திட்ட கணவனிடம் உனைக்கண்டேன்!

    நட்டாற்றில் தள்ளாடும் நண்பனின் குடும்பத்தை

    நலமாகத் தன்வீடு அழைத்திட்ட நட்பினில் உனைகண்டேன்!

     

    தன்பசியைத் தன்னுள் அடக்கி ஊர்பசிக்கு உணவுதேடி

    உழைத்திட்ட உள்ளத்தில் உனைக்கண்டேன் !

    கடன்வாங்கி வைத்திருந்தக் கையிருப்பைக்

    கலங்காமல் கொடுத்திட்டகண்ணொளியில் உனைக்கண்டேன்

     

    சுமைதூக்கும் தோள்களில் உனைக்கண்டேன்

    சுவையாகச் சமைக்கின்ற கைகளில் உனைக்கண்டேன்

    சோர்வின்றி உழைக்கின்ற உடலில் உனைக்கண்டேன்

    சோதனையைச் சுமந்திட்டநெஞ்சங்களில் உனைக்கண்டேன்!

     

    கண்ணீரைத் துடைக்கின்ற விரல்களில் உனைக்கண்டேன்

    கைகொடுத்து உயிர்காத்த கருணையில் உனைக்கண்டேன்

    களைப்பின்றி சேவைசெய்யும் இளைஞனில் உனைக்கண்டேன்

    கலையாது  தலைதூக்கி நின்ற மனிதத்தில்  உனைக்கண்டேன் !

    Share
  • வளவன் கனவு (23)

    சு.கோதண்டராமன்

    அப்பரும் ஆளுடைய பிள்ளையும்

    vallavan-kanavu

    வளவன் கனவு – பகுதி 22

    அப்பர்தாம் எங்குற்றார் இப்பொழுதென் றருள்செய்யச்
    செப்பரிய புகழ்த்திருநாவுக்கரசர் செப்புவார்
    ஒப்பரிய தவஞ்செய்தேன் ஆதலினால் உம்மடிகள்
    இப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான்என்றார்.

                                  -சேக்கிழார்

     

    இவர் பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகர். அவர் பழுத்து முதிர்ந்தவர்.

    இவர் வேதியர் குலத்தவர். அவர் வேறு குலத்தவர்.

    இவர் தந்தையின் தோள் மீதும் பல்லக்கிலும் அமர்ந்தே பயணம் செய்தவர். அவர் கால்நடையாகவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசித்தவர்.

    இவர் வேத வேதாங்கங்களை ஓதாது உணர்ந்தவர். அவர் வேறு சமயத்து நூல்களை ஓதி அவற்றின் பயனின்மையை உணர்ந்து துறந்தவர்.

    இவர் பிறக்கும்போதே சமணத்தை ஒழிப்பதே எனது குறிக்கோள் என முழங்கியவர். அவர் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து கெட்டேனே என்று வருந்தியவர்.

    இவர் இளமைக்கே உரிய துடிப்பும் பதட்டமும் கொண்டவர். அவர் அனுபவத்தால் பெற்ற பணிவும் கனிவும் கொண்டவர்.

    இவர் ஆனந்தமே வடிவானவர். அவர் தன் கடந்த கால வாழ்க்கையை நினைந்து கழிவிரக்கம் கொள்பவர்.

    இவர் குழந்தைக்கே உரிய இயல்புடன் ஓடும் நதி, பாடும் குயில், முரலும் வண்டு, துள்ளும் மீன் என்று எல்லாவற்றிலும் உள்ள இன்பத்தை ரசிப்பவர். அவர் மனிதப் பிறவி துன்ப மயமானது என்ற கொள்கையில் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்துவிட்டுக் கடைசியில் இவ்வுலகம் இன்பமானது, இறைவனின் திருவுருவைக் காணப் பெற்றால் எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று உணர்ந்தவர்.

    இவர் இறைவனின் உருவத்தைப் பலவாறாக வர்ணித்துக் கேட்பவர் மனதில் அந்த வடிவத்தைப் பதியச் செய்தவர். அவர் நீரிலும் நிலத்திலும் விண்ணிலும் தீயிலும் காற்றிலும் இறைவனைக் கண்டு மகிழ்ந்து மற்றவர்க்கும் காட்டியவர்.

    சிவனடியாரை எந்தக் கோளும் நாளும் துன்புறுத்த முடியாது என்னும் அசைக்க முடியாத சிவபக்தி உடையவர் இவர். கோள்கள் மனிதனுக்குத் தீங்கிழைக்க வல்லன என்ற சராசரி மானிடரின் நம்பிக்கைகளை ஏற்றவர் அவர்.

    இருவரையும் இணைத்தது சிவம். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதால் பரகதி கெடாது என்பதில் இருவரும் ஒன்றுபட்டனர். ஊர் ஊராகச் சென்று வேத நெறியைப் பரப்புவதில் ஒன்றுபட்டனர். சிவனைப் போற்றும் தமிழோடு பாடல் இசைத்து மக்களைக் கவர்வதில்  இருவரும் ஒன்றுபட்டனர்.

    இருவரும் ஒருவரை ஒருவர் காண விரும்பினர்.

    இடம் – பூந்துருத்தி.

    அப்பர் அங்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட ஆளுடைய பிள்ளை, பல்லக்கில் இருந்தபடியே “அப்பர் எங்கு இருக்கிறார்?” என்று வினவ, பல்லக்கின் அடியிலிருந்து குரல் கொடுத்தார் அப்பர், “தங்களைத் தாங்கும் பேறு பெற்று இங்கு உள்ளேன்.”

    “அடடா, என்ன அபசாரம்! இவ்வளவு பெரிய சிவத் தொண்டர் என்னைச் சுமப்பதா?” என்று இளையவர் கீழே குதித்துப் பெரியவர் காலில் விழ, அதற்கு முன், “இறைவனால் ஞானப்பால் ஊட்டப் பெற்றவர் முன் நான் மிக மிகத் தாழ்ந்தவன்” என்று கூறி அவர் இவர் காலில் விழ எங்கும் உணர்ச்சி மயம். கூடியிருந்த அன்பர்கள் கண்ணீர் வழிய அவர்களது அன்பைப் போற்றினர்.

    அங்கு வயது கரைந்தது. சாதி மறைந்தது. செல்வத்திற்கு மதிப்பில்லை. கல்வியைக் கவனிப்பார் இல்லை. எங்கும் சிவம் ஒன்றே நிறைந்தது.

    இருவரும் சேர்ந்தே மறைக்காடு என்னும் தலத்திற்குப் போனார்கள். வேதங்கள் இறைவனைப் பூசித்த பெருமை உடைய பழம்பதி. வேதியராகப் பிறக்காவிடினும் வேத நெறியில் பற்றுக் கொண்ட அப்பர் அவ்வூர்க் கோவிலில் வேதங்களால் அடைக்கப்பட்டிருந்த கதவைத் திறக்குமாறு ஒரு பதிகம் பாடினார். கதவு திறந்தது. ஞான சம்பந்தர் பார்த்தார். வேதங்களை ஓதி அவ்வழியே முத்தி அடைதல் எல்லோர்க்கும் எளிதல்ல. எல்லோர்க்கும் எளிதான வழியான நமச்சிவாய மந்திரம் இருக்க, கடுமையான வழிகளைத் திறந்து விடுவதால் மக்கள் சமயத்தைக் கண்டு அஞ்சி ஓட ஏதுவாகும் என்று கருதி அக்கதவு மூடுமாறு பாடினார்.

    Share
  • மனிதனுக்கு மதம் தேவையா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மனிதனுக்கு மதம் தேவையா இல்லையா என்ற வாதம் எப்போதுமே நடந்துகொண்டிருக்கிறது.  இப்போது பல மதங்களைச் சேர்ந்தவர்களும் தாங்கள் செய்யும் அராஜகச் செயல்களுக்குத் தங்கள் மத நூல்களில் கூறப்பட்டிருக்கும் அறவுரைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு தங்களுடைய செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

    1995 நவம்பர் மாதம் நான்காம் தேதி இஸ்ரேல் பிரதம மந்திரியாக இருந்த இட்சக் ரபீன் என்பவரை யூத மத வெறியன் இகால் அமீர் சுட்டுக் கொன்றான்.  இந்தக் கொடிய சம்பவம் நடந்து இருபது வருடங்கள் ஆகின்றன.  அவனுக்கு அந்தக் கொலையில் உடந்தையாக இருந்த அவனுடைய சகோதரன் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை ஆகியிருக்கிறான்.  அவனோ அவனுடைய சகோதரனோ இன்றளவும் தாங்கள் செய்த தவறுக்கு மனம் வருந்தவில்லை.  தங்கள் யூத மத வேதமான தோராவின் விளக்க உரையான டால்முடில்  (Talmud)  யூதர்களுக்குத் தீங்கு செய்பவர்களின் உயிர்களைப் பறிப்பதற்கு யூதர்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறதாம்.  ஆஸ்லோ ஒப்பந்தத்தில் ரபீன் கையெழுத்திட்டதால் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான வெஸ்ட் பேங்கில் குடியமர்த்தப்பட்ட இஸ்ரேலிய யூதர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதன் மூலம் கஷ்டத்திற்கு உள்ளாவார்களாம்.  அதனால் அதற்குக் காரணமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரபீன் இந்த மதவாதிகளால் கொல்லப்படுவது தவறில்லையாம்!  இது இந்த இரண்டு சகோதரர்களின் வாதம்.  அதே தோராவில்தான் ‘நீ மற்றவர்கள் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படி மற்றவர்களை நீ நடத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறது.  இந்த இரண்டு சகோதரர்களும் அதை மறந்துவிட்டார்கள்.  தோராவின் விளக்க உரையான டால்முடில் அப்படிக் கூறியிருக்கிறதா என்று தெரியவில்லை.  விளக்க உரை எழுதுபவர்கள் மூலத்தில் உள்ளதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம்.  அந்த விளக்க உரைகளை எப்படி அப்படியே எடுத்துக்கொள்ள முடியும்?  யூத மத வெறியர்களின் குருட்டுப்புத்திக்கு இது ஒரு உதாரணம்.

    சிரியாவிலும் ஈராக்கிலும் சுன்னி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு ஒரு ராஜ்ஜியம் உருவாக வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். பலரைப் பலிவாங்கிக்கொண்டிருக்கிறது.  அல்லாவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் நிரீஸ்வரவாதிகள் என்று கூறிக்கொண்டு இஸ்லாம்மதத்தைச் சேராதவர்களைக் கொல்லுவதுதான் அந்த மதத்திற்குத் தாங்கள் செய்யும் சேவை என்று நினைக்கிறது.  மதத்தின் பெயரால் இவர்கள் செய்யும் அராஜகச் செயல்களுக்கு மதத்தைக் காரணம் காட்டுகிறார்கள்.  டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி கலிஃபோர்னியாவில் கொலைவெறியில் ஆடிய இருவரில் மனைவி ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு சமூக வலைதளம் ஒன்றில் தன் விசுவாசத்தைத் தெரிவித்து எழுதியிருக்கிறார்.  அவர்களுடைய மதத்திற்கு அவர்கள் இப்படிச் சேவை செய்கிறார்களாம்.  இது எவ்வளவு பெரிய மத மடமை!

    சென்ற நவம்பர் மாதக் கடைசியில் அமெரிக்க மாநிலமான கொலராடோவில் உள்ள கொலராடோ ஸ்ப்ரிங்க்ஸ் (Colorado Springs) என்னும் நகரிலுள்ள ‘திட்டமிடும் பெற்றோர்’ (Planned Parenthood) என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு கட்டடத்திற்குள் நுழைந்து ஒருவன் சரமாரியாகச் சுட்டதில் மூன்று பேர் உயிர் இழந்திருக்கிறார்கள், ஏழு பேர் காயமடைந்திருக்கிறார்கள்.  காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவர்களிடம் சரணடைந்திருக்கிறான்.

    இவனுக்கு ஏன் அந்த அமைப்பின் மீது அத்தனை கோபம்?  இந்த அமைப்பு பெண்களுக்குத் திட்டமிட்டுக் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனைகள் வழங்குவதோடு பெண்கள் விரும்பினால் அவர்கள் கருச்சிதைவு செய்துகொள்வதற்கும் உதவுகிறது.  இந்த அமைப்பு கிறிஸ்தவர்களின் வேதப் புத்தகமான பைபிளில் கூறப்பட்டிருப்பதற்கு மாறாகப் பெண்களுக்குக் கருச்சிதைவு செய்வதாகவும் அப்படிச் செய்த கருக்களின் பகுதிகளை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கு விற்பதாகவும் கூறி ‘இனி சிசுக்களின் உடல் பகுதிகள் விற்பனைக்கு கிடைக்காது’ என்று கூவியிருக்கிறான்.  பைபிளில் தடைசெய்யப்பட்டிருக்கும் விஷயங்களை ஆதரிப்பதாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் இவன் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் மூன்று பெண்களை மணந்திருக்கிறான்; அவர்களைப் பல வகையாகத் துன்புறுத்தியிருக்கிறான்; அவர்களோடு குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும்போதே மற்றப் பெண்களோடு உறவு வைத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறான்.  உலகம் சீக்கிரமே அழியப் போவதாகவும் தான் யேசுவின் மேல் அழியாத பற்றும் நம்பிக்கையும் வைத்திருப்பதால் உலகம் அழிந்த பிறகு தான் எப்போதுமே யேசுவின் அருகில் இருக்கப்போவதாகவும் கூறிக்கொண்டிருந்திருக்கிறான்.  என்னே இவனுடைய அறியாமை!

    இந்தியாவில் இந்து மத சாமியார்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் இந்து மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள்தான் மோட்சம் பெறுவார்கள் என்பதுபோல் பேசுவதைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இதில் பசுவைக் கும்பிடுவதும் ஒன்று.  பசுவைக் கொல்லக் கூடாது என்று கூறுபவர்கள் எருமைகளைக் கொல்வது பாவம் இல்லை என்கிறார்கள்.  எருமை என்ன பாவம் செய்தது?  அதைக் கொல்லும்போது அதற்கு மட்டும் வலிக்காதா?  அதுவும்தானே மனிதனுக்குத் தேவையான பாலைக் கொடுக்கிறது?

    எல்லா மதங்களும் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்றுதான் கூறும்.  மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை என்றுதான் எல்லா மதங்களும் போதிக்கும்.  ‘அடித்துப் புசி’ என்று பைபிளில் கூறியிருப்பதாக என்னுடைய கிறிஸ்தவப் பள்ளித்தோழி ஒருத்தி கூறுவாள்.  அன்பே உருவானவராக, இடையனாகச் சித்தரிக்கப்படும் யேசு மிருகங்களை அடித்துப் புசிக்கச் சொல்லியிருப்பாரா?  நிச்சயமாகச் சொல்லியிருக்க மாட்டார்.

    அமைதி தவழும் புத்தர் சிலையைப் பார்த்தாலே அவர் கற்பித்த கொல்லாமைதான் நம் நினைவிற்கு வருகிறது.  அவர் பெயரில் வழங்கும் மதத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டு மியான்மாரில் அங்கு  வாழும் முஸ்லீம்களுக்கு எதிராகச் செய்யும் வன்முறைச் செயல்களும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அங்கு வாழும் புத்த மதத்தைத் தழுவும் சிங்களர்கள் செய்யும் அராஜகச் செயல்களும் புத்தரை உண்மையிலேயே பின்பற்றுகிறார்களா என்று நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

    மத போதனைகள், மதக் கோட்பாடுகள், மதச் சடங்குகள் இல்லாமலேயே இறைவனை வழிபடலாம்.  மனிதர்களிடையே நல்லிணக்கத்திற்கு உதவாத மதங்களை மனித இனம் தூக்கி எறிந்துவிட்டு இறைவனை வழிபடலாம்.  ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பார்கள்.  அந்த தேவனை வழிபடுவதற்கு மதங்கள் ஏன், மதச் சடங்குகள் ஏன்?,

    Share