புலவர் இரா. இராமமூர்த்தி.

உலகில் ”வாழும்” உயிர்களாகிய மக்கள் தம் வாழ்நாளுக்குள் அனைவர்க்கும் உதவி, அனைவருடனும் சேர்ந்து வாழும் வாழ்க்கையை ‘இல்வாழ்க்கை’ என்றனர். மனித மனம் புலன்கள் விரும்புவதை அடைந்து மகிழ்வது! ஐம்புலன்களும் விரும்பும் பொருள்களை அடைந்து அனுபவிப்பதே இல்வாழ்க்கையின் இயல்பாகும். இந்தப் புலனாசைகளில் இருந்து விடுபட்டு, வீட்டு நெறியாகிய திருவடிப்பேற்றை விரும்புதலே உயிர் வாழ்க்கையின் நோக்கம் என்பது சான்றோர் கருத்து! உலகநடைமுறை ஒழுங்காக அமைவதற்கு ஏற்ற உதவிகளை இல்லறத்தான் மாத்திரமே செய்வான். புலன்களை அடக்கி, விருப்பங்களைத் துறந்து, மூச்சடக்கி தியானம், யோகம் ஆகியவற்றைப் பயிலும் துறவு நிலை எல்லார்க்கும் எளியதன்று. ஆனால், புலன் இன்பங்களை நன்றாக அனுபவித்து, எல்லை கடவாத அடக்கத்துடன் இல்லறம் நடத்துதலே துறவு நிலையை விடச் சிறந்தது என்கிறார் வள்ளுவர்! இதனை …

“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்?” (46)

என்று திருக்குறள் கூறுகிறது! அறத்து ஆற்றின் என்பதற்கு எல்லைகடவாத புலனின்பம் பெற்று வாழும் நெறி என்பது பொருள்! ஆகவே முறைப்பட்ட இல்லற வாழ்வில், முறையான இன்பத்தைத் துய்த்து வாழ்பவன், அதற்குப் புறம்பான ஆசைவயப்பட்டு, அறிவிழந்து காமாந்தகாரனாய் வாழ்வதால் ”உயிர்க்கொல்லி நோயையே” பெறுவான் என்று நாம் புதிய பொருள் கண்டோம்! இதைத் தவிர முன்னரே பரிமேலழகர், புறத்தாற்றின் என்பதற்கு குடும்பத்தை விட்டுக் காட்டிற்குப் போய் வாழும் துறவு நிலை என்று குறித்தார். அத்துறவறத்தில் காட்டுக்குப் போய் ஒருவன் பெறத்தக்கது யாதுமில்லை என்றார். ”இல்லறமல்லது நல்லறமன்று” என்றார் ஔவையார்.

இல்லறத்தில் வாழ்பவனின் இன்றியமையாத கடமை பிறருக்கு உரிய உதவி புரிவதே என்கிறார் திருவள்ளுவர். அவர் இயல்புடைய மூவர்’ க்கும், புறக்கணிக்கப்பட்டோருக்கும், வறியோருக்கும் தன்பால் வந்துசேர்ந்து மரணமடைந்தார்க்கும் உதவிபுரிவதே இல்லறத்தாரின் சிறந்த கடமை என்கிறார்! அதனை அவர் ,

”இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை!”(41) என்ற குறளிலும்,

”துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை!”(42) என்ற குறளிலும்

கூறுகிறார். இவற்றில் ”இயல்புடைய மூவர்” என்று திருவள்ளுவர் குறிப்பதைக் குறித்துச் சில வேறுபட்ட பொருள்கள் கூறப்படுகின்றன! பொதுவாக வாழ்க்கை நிலைகள் என்று நமக்கு முன்னரே வகுத்து வைக்கப் பெற்றவை நான்கு! அவை:
1) இல்லறம்
2) பிரம்மச்சரியம்
3) வானப்பிரத்தம்
4) சந்நியாசம்
இவற்றுள் இல்லறத்தில் வாழ்பவன் துணையுடன் மட்டுமே மற்றைய நிலைகளில் இருப்போர் வாழ்வர். ஆகவே, பிரம்மச்சாரி கல்விபயிலத் துணை புரிவதும், வானப்பிரஸ்தர் வீட்டை விட்டு நீங்கி, அல்லது தம் இல்லறக்கடமைகளில் இருந்து விலகி வாழ உதவி புரிவதும், முற்றும் துறந்த துறவிகள் உயிர் வாழத்தக்க உதவிகள் புரிவதும் இல்லறத்தான் செய்யத்தக்க கடமையாகும்!

இம்மூவரே இயல்புடைய மூவர் என்று பரிமேலழகர் பொருள் கூறுகிறார்! மேலும் மற்றையோர் இயல்பாக நம்முடன் இணைந்து வாழ்பவராகிய தாய், தந்தை, மக்கள் என்ற மூவகையினர் என்றும் பொருள் கூறுகின்றனர்.

சிலர், தாய் வழியினர் – அதாவது மாமன், சித்தி போன்றோர்; தந்தை வழியினர் – அதாவது பெரியப்பா, சித்தப்பா முதலியோர்; தம் மக்கள் – அதாவது மகன், மகள் ஆகியோர் என்கின்றனர். இப்படியே பார்த்தால் மனைவி மூலம் உறவானவர் என்று மாமனார், மாமியார், மைத்துனர், மைத்துனி என்றும் கூறலாமே! ஆகவே இயல்புடைய மூவர் என்பதை வரையறை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எவ்வாறெனில் இவர்கள் அனைவரும் உறவினர், சுற்றத்தார் என்ற வகையில் அடங்குவர்! இவர்களை வள்ளுவர் ”தான்” என்ற சொல்லில், வேறொரு திருக்குறளில் அடக்குகிறார். அதாவது ,

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (43)

என்ற குறளில் தான் என்றாங்கு என்பதில் தன் உறவினர், சுற்றத்தாரை அடக்குகிறார்! ஆகவே இயல்புடைய மூவர் யாவர்? என்ற வினா வுக்கு விடை காண வேண்டியுள்ளது! சிலர் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகைப் பிரிவினருள், வேளாளராகிய இல்லறத்தார் மற்ற வணிகர், அந்தணர், அரசர் ஆகிய ‘இயல்புடைய மூவ’ருக்குத் துணை புரியலாம் என்று பொருள் கூறுகின்றனர். வேளாளர் மட்டுமே ‘இல்வாழ்வார்’ என்று கூறுதல் இயலாதே? மற்றவர்களிலும் இல்லறத்தார் உள்ளனரே? ஆகவே இக்காலத்தின் இல்வாழ்க்கை நிலை அக்காலத்தை விட வேறுபட்டது!

அப்படியானால் ”இயல்புடைய மூவர் யாவர்? சிந்திப்போம்! பிரம்மச்சாரிகள் என்ற தம் குழந்தைகளின் படிப்புக் காலம் நிறையும் வரை, பெற்றோர்களே அவர்களின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்கின்றனர்! இல்லறத்தானின் சேமிப்பு என்பதே இவற்றைக் கருதித்தான் ஏற்பட்டது போலும்! அதனால் இயல்புடைய மூவருள் படிக்கும் குழந்தைகளை இணைத்துக் கொள்ளலாம்! இந்த நாளில் மூத்தோரை இல்லறத்தார் பேணுவதில்லை. அவர்கள் பணிபுரிந்த இடமே ஓய்வூதியப் பயனை அளிக்கிறது! அரசும் முதியோர் உதவித் தொகை வழங்குகிறது. ஊழியர்களின் ஓய்வூதியத்தையும் அவர்களின் நிறுவனங்களே ஏற்றுக் கொள்கின்றன! இல்லறத்தானின் சேமிப்பு, என்பதே இவற்றைக் கருதித்தான் ஏற்பட்டது போலும்!

அந்நாளில் இல்லறத்தான் இடும் உணவை உண்டு வாழும் நிலை பிரம்மச்சாரிக்கும், வானப் பிரஸ்தருக்கும், துறவிக்கும் இருந்தது! இப்போது அப்படியில்லை! இந்நாளில் வானப்பிரஸ்தர் என்ற வகையினர் உதவித்தொகை பெறும் மூத்த குடிமக்களே ஆவர்! அவர்கள் நோய்வாய்ப்பட்டும், முதுமையாலும் தளர்ந்த காலத்தில் இல்லறத்தாரின் பேணுதலை எதிர்பார்க்கின்றனர். ஆகவே அவர்களை, ஓரளவுக்கே இம்மூவருள் இரண்டாமவராக இணைக்கலாம்.

முற்றும் துறந்த துறவிகள் இல்லறத் தாரின் உதவியை நம்பினால் அவர்களின் துறவுக்குப் பொருளே இல்லை! அத்தகைய சிலர் சமுதாயத்தாரால் வணங்கிப் போற்றப் பெறுகின்றனர். அவர்கள் மடங்களை நிறுவி, மிகுந்த செல்வங்களை, சொத்துக்களாகப் பெற்றுள்ளனர் அத்தகையோர் இல்லறத்தாரை நாடி வந்தால், அல்லது அவர்கள் வாழும் ஊருக்குள் வந்தால், இல்லறத்தார் வணங்கிப் போற்றலாம்! இவர்கள் இல்லறத்தாரையே நம்பி வாழ்கின்றவர்கள் என்று கருதலாகாது!

இனி, இயல்புடைய மூவர் முழுவதுமாக இல்லறத்தாரையே நம்பி இருக்கும் நிலையில் இருக்க வேண்டும். ஆகவே, பெற்ற குழந்தைகள், நலிந்த முதியோர்கள், ஓரளவுக்கு வாழ வழியற்ற இரவலர் ஆகியோரை இக்காலத்திற்கு ஏற்றவாறு வள்ளுவர் கூறும் இயல்புடைய மூவராக ஏற்றுக் கொள்ளலாம்! இனி அக்குறட்பாவைக் காண்போம்!

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை!” (41)

இந்தப் புதிய பொருளும் பரிமேலழகரின் உரையை ஒட்டியே அமைந்துள்ளது! இது பரிமேலழகரின் உரைத்திறம் காலங்கடந்து விளங்குவதைக் காட்டுகிறது!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *