Blog

  • படக்கவிதைப் போட்டி 39-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிஓவியம் திரு. ராகுலுடையது. அதனைத் தேர்வு செய்தவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் வல்லமை இதழின் நன்றிக்கு உரியவர்கள்.

    a guy with a fire cracker

    கையிலே பூத்திரியிருந்தும் முகம் பூத்திருக்கவில்லையே இந்தச் சிறுவனுக்கு.  ஏன்?

    இதுகுறித்துச் சிந்திப்பதற்குத்தான் நம் கவிஞர் பெருமக்கள் இருக்கின்றார்களே…எனவே இவ்வேலையை அவர்களிடம் விட்டுவிடுகின்றேன்!

    எமக்குத் தொழில் அவர்களின் கவிதையை வாசித்து மகிழ்தலும், மதிப்பீடு செய்தலுமே அல்லவா? இதோ அப்பணியில் இறங்குகின்றேன்!

    புகையிலே மனத்திற்கு மகிழ்வளிக்கும் நல்ல புகை எது வாழ்விற்கே பகையாகும் தீய புகை எது என்று அழகாய்ப் பட்டியலிட்டுள்ளார் திருமிகு. வனிதா.

    தாயோ மனைவியோ
    சமைக்கும்போது
    புகை வந்தால்
    புகை நல்லது 

    தேவை இல்லாத
    குப்பைகளை ஏறிக்கும்
    வரும் புகை
    வீடையும் நாட்டை
    சுத்தமாக்கும் புகை 

    தீபாவளிக்கு  வெடிக்கும்
    பட்டாசின் புகை
    அனைவருக்கும் தருவது
    மகிழ்ச்சியின் புன்னகை   

    ஆனால்…
    நீ  உன் வாயில்
    புகைக்கும் புகை
    உனக்கும்
    உன் வீட்டுக்கும் நாட்டுக்கும்
    கேடு  புகை
    அப்புகை
    உன்  உயிரையும்
    உன் உடலையும்
    சுடுகாட்டில் எரிக்கும் புகையாக
    மாறிடக்கூடாது.

    ***

    வெளிச்சத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அடையாளப்படுத்துகின்றனர். அவ்வகையில், இரவுக்குள் ஓர் இரவு திரைவிலக்கிக் காட்டுவதில்தான் தெரிகின்றது என் வெளிச்சம் என்கிறார் திரு. கவிஜி. 

    நினைக்காத போதும்
    மறக்கத்தான்
    முடியவில்லை
    மனநிலை பிறழ்ந்தவன்
    சூட்சுமம்…

    தொடர்ந்து
    பேசிக் கொண்டேயிருக்கும்
    மொழிக்குள்
    மௌனமாய் நிர்வாணம்
    சுமக்கிறது நிழல்…

    சுற்றும் முற்றும்
    பார்க்க முடியாத தருணத்தை
    வேலிக்குள் தவழவிடும்
    குதர்க்கம் தாக்கும்
    தர்க்கம்…

    காற்றேயில்லாத போதும்
    தூற்றிக் கொள்ளும்
    ஜடங்களின் இருண்மைக்குள்
    இயலாத சக்கரமாய்
    புது ஏக்கம்…

    இதோடு முடிகிறதாய்
    நினைக்கும் இரவுக்குள்
    ஓர் இரவு
    திரை விலக்கி
    காட்டுவதில் தெரிகிறது
    என் வெளிச்சம்…!

    *** 

    ’இருளில் இருளைத் தேடும் காற்றாயிராதே! உன் மனவானில் நம்பிக்கைக் கதிர்கள் எழும்வரை வாழ்க்கை விடியாதே!’ என்கிறார் திரு. சிவசங்கர்.

    உறங்கிடும்
    இரவுக்கும்
    பகலுக்கும்
    இடையினில்
    நடந்திடும்
    திகம்பரக்
    காட்சிகள்
    எதையுமே
    நம்மால்
    வெளிச்சங்கள்
    இன்றிக் 
    கண்டிடத்
    தெரியாதே! 

    தெரியாக்
    குழப்பங்கள்
    மனதினில்
    சூழ்ந்திட
    விளக்கங்கள்
    தேடித்
    திரிபவன்
    போலே
    இருளினில் 
    இருளைத் 
    தேடி நீ
    காற்றாய்
    அலையாதே!

    […]

    முடிவிலாத்
    துன்பங்கள்
    தாங்கிடும்
    உனக்குள்
    இருக்கும்
    பிரபஞ்ச
    வானில்
    துளிர்விடத்
    தொடங்கிடும்
    நம்பிக்கைக்
    கதிர்கள்
    எழும்வரை
    விடியாதே!

    […]

    தவறிடும்
    காரியம்
    நிகழ்ந்திடும்
    போதிலும்
    சுடரொளி
    போலே
    இயங்கிடு
    வாழ்வின்
    இருளதை
    வென்றிடு
    அதுவரை
    இரவினில்
    உறங்காதே!…

    *** 

    பசி போக்கும் புகை; பகையாகும் புகை; அலறவைக்கும் புகை; வாழ்க்கையை அறியவைக்கும் புகை எனப் புகையின் பல்வேறு அவதாரங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன். 

    புகை பகையாகி
    புற்று நோயாகும்
    பூரித்து நீ இழுத்தால்!

    புகைப் பசிபோக்கும்
    பூனைத் தூங்கிய
    அடுப்பிலிருந்து
    வெளிவரும்போது

    புகை அலறவைக்கும்
    கூறையிலிருந்து
    கூப்பிடும்போது!

    புகை ஆசானாகி
    நிலையாமை போதிக்கும்
    மயானத்திலிருந்து
    மூண்டெழும்போது!

    புகை மகிழ்வாக்கும்
    தன்னுள் புதைந்த
    ஏழைச் சிறாரின்
    உழைப்பைப் பூத்தெறியாய்
    உமிழும்போது!

    நெருப்பின்றி புகையாது
    நேற்றையப் பழமொழி
    பகையாலேயேப் புகையும்
    நெஞ்சங்களின் காலமிது

    புகை
    நல்லதா கெட்டதா
    புலப்படும்
    இடத்தை வைத்தேத்
    தீர்மானிக்கப்படுகிறது!

    *** 

    மத்தாப்பை விலைகொடுத்து வாங்கும் பணம்படைத்தவனைவிட, வழியில் கண்டெடுத்து எரியவிடும் எளியவன் அதிக மகிழ்ச்சியடைகின்றான் என்பது திரு. செண்பக ஜெகதீசனின் எண்ணம். 

    விலைகொடுத்து வாங்கி
    வெடிப்பவனுக்கு
    வராத மகிழ்ச்சி
    வந்துவிடுகிறது,
    வழியில் கிடைத்த
    பாதி எரிந்த மத்தாப்பை
    எரியவிடும் ஏழைக்கு…!

    *** 

    ’வறுமையில் நீ வாடினாலும், மத்தாப்புக் கொளுத்தும் உன் கண்களில் தெரியும் ஒளி, உன் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது!’ என்று இச்சிறுவன் குறித்து மதிப்பீடு செய்கின்றார் திரு. க. கமலகண்ணன். 

    புகையின் மேகங்களுக்கு நடுவே நீ
    வறுமையின் வாழ்க்கைக்கு நடுவே நீ
    எண்ணங்களிலும் செயல்களிலும் தீர்க்கம்
    மாறப்போகும் உன் வாழ்க்கையே சொர்க்கம்
    உடம்புக்
    களைத்த போதும்
    உழைப்புச் சளைத்த போதும்
    விழாக் கோலத்தில் உருக்கமாய்
    ஒளிர்வது மத்தாப்பு மட்டுல்ல
    அசராமல் பார்க்கும் உன் கண்களும்தான்!

    *** 

    ’ஊரெல்லாம் கேட்கும் வெடிச்சத்தத்தில் எங்கள் வயிறுபோடும் பசிச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை; இருள் மண்டிக்கிடக்கும் எங்கள் இல்லம் தற்காலிகமாய் ஒளிபெறுவது யாரோ கிழித்துப்போட்ட மத்தாப்பின் கணநேர வெளிச்சத்தில் மட்டுமே!’ என, கல்விக்கனவுகளைச் சுமந்து திரியும் ஏழைச்சிறுவன் ஒருவனின் ஏக்கத்தை ஆழமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    எங்கள் அவதரிப்பு
    புவியில் போராடத்தான்
    உயிரைப்பணயம் வைத்து
    உழைக்கிறோம்
    கந்தகத்தையும் பாஸ்பரஸையும்
    கையில்பூசிக்கொண்டு
    சிறார்களைவேலைக்குப்
    பயன் படுத்தக்கூடாதென்று
    சட்டம் இருந்தாலும்
    சட்டத்தை சட்டை செய்யாதவர்கள்
    இருக்கும் வரை எங்கள்
    குடும்ப வண்டிக்கு பழுதில்லை
    […]
    ஊரெங்கும் கேட்கும் வெடிச் சத்தத்தில்
    எங்கள் வெறும் வயிறு
    போடும் சத்தம் காணாமல் போகும்
    இருள் மண்டி கிடக்கும் எங்கள்
    இல்லத்தில் யாரோ எறித்துப்போட்ட
    மீதமான கம்பி மத்தாப்பின்
    ஒளியில் ஏற்படும்
    தற்காலிக வெளிச்சம் மட்டுமே
    மீதி நேரம் வீடும் வயிறும்
    புகைச்சலில் போராடும்
    என் போன்ற சிறார்கள்
    நன் முறையில் பள்ளிபோக
    நான் மட்டும் வெடிக்கிடங்கில்
    என் பள்ளிக்கனவுகள்
    எப்போது விடியும்?

    *** 

    ’கருகும் கந்தகப் பூக்களால் எங்கள் வாழ்வும் அவ்வப்போது கருகினாலும், தன்னம்பிக்கை எனும் ஒளியை நாங்கள் என்றும் இழக்கவில்லை’ எனும் நம்பிக்கை நாயகனை நம்கண்முன் நிறுத்துகின்றார் திரு. இளவல் ஹரிஹரன். 

    ஒற்றைக் கம்பியில்
    ஒளிரும் சுடரில்
    ஒருநாள் பசியோ
    தீர்ந்திருக்கும்……..

    கலையும் புகையில்
    தெரியும் கனவுகள்
    மெல்ல….மெல்லக்
    கலைந்திருக்கும்……

    கந்தகப் பூக்கள்
    கருகும் வாடையில்
    அகால மரணம் திடீரென
    வாழ்வை ஒழித்திருக்கும்……..

    இருந்தும் என்ன……
    இழக்கா தன்னம்பிக்கை
    இருக்கும் வாழ்வை
    சுடராய் வெளிச்ச ஒளிகொடுக்கும்

    ***

    கவிதை மத்தாப்புக் கொளுத்திக் கருத்துக்களை அழகான ஒளிச்சிதறல்களாய்த் தந்திருக்கும் கவிஞர் பெருமக்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்.

    அடுத்து நாம் காணவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை! 

    ”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்கிறது புறநானூறு. ஆனால் கல்விச்செல்வத்தை உறுபொருள் கொடுத்துப் பெறுவதென்பது ஏழை எளியோர்க்குச் சாத்தியப்படுவதாய் இல்லையே…என் செய்வது? அதனால்தான் அவர் வீட்டுப் பிள்ளைகள் மத்தாப்பாய்ச் சிரித்துக்கொண்டு மகிழ்வோடு கல்விகற்கும் வயதில் கந்தகத் தொழிற்சாலைகளில் வேலைசெய்து கருகிப் போகின்றனர். ’அச்சிறார்களின் இருண்ட வாழ்க்கையில் விளைவதே வெளிச்சம் தரும் வண்ண மத்தாப்புக்கள்’ எனும் கவிதையொன்றில் என் நெஞ்சம் நெகிழ்ந்தது! 

    உன் மத்தாப்பு சிரிக்கும் ஒவ்வொரு பொழுதும்
    பட்டாசுத் தொழிற்சாலைகளில் புகைந்து
    கொண்டுதானிருக்கிறது
    குழந்தைத் தொழிலாளர்களின்
    எதிர்காலம் .

    ஒருசிலரின்
    வண்ணமயமான வேடிக்கைகளுக்கு
    பல சிறுவர்களின் இருண்ட வாழ்க்கை
    துணை போகின்றன என்பது கண்கூடு.

    நமது புன்னகைக்கு
    அவர்களின் கண்ணீரே
    அடித்தளமிடுகிறது 

    மத்தாப்புக்களின்
    தலையில் தீ வைக்கும்போது
    அது பல ஏழை சிறார்களின்
    எதிர்காலத்தின் மேல் வைக்கப்படும்
    கொள்ளி என்பதை உணர்ந்தால் போதும்
    வெளியே புகையும் அதுஇனி
    உன் உள்ளே புகையும் 

    வாண வேடிக்கைக்குள் காணாமல்போகும் இளஞ்சிறாரின் வாழ்க்கையை இதயபூர்வமாய்ப் பதிவுசெய்திருக்கும் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

    *** 

    மத்தாப்பைக் கையிலேந்தி அதனுள் ஒளிந்திருக்கும் வேதனையான வாழ்வியல் உண்மைகளைச் சிந்தித்துச் சிந்தை நைந்துகொண்டிருக்கும் சிறுவன் ஒருவனைத் தன் கவிதையில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. தாரமங்கலம் வளவன்.

    எரியும் இந்த மத்தாப்பை யார் செய்திருப்பார்..
    என்னைப் போல் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும்
    மற்றுமொரு சிறுவனா…

    எரிவது என்ன.. மத்தாப்பா..
    இல்லை.. என் அம்மாவைப் போன்ற தாய்களின் வயிறா..

    ஓடித் திரிந்து பாடம் கற்கும் வயதில்
    நான் உழைத்து தினம் கொண்டு வரும் சொற்ப கூலி,
    டாஸ்மாக்கில் கரைந்து போகும்
    என் அப்பாவின் கூலிக்கு பதிலாகுமா..

    நாளெல்லாம் உழைத்து
    பணத்துடன் வீட்டுக்கு வரவேண்டிய அப்பா
    போதையுடன் வரும் போது
    நான் என்ன செய்ய வேண்டும்..
    யோசிக்கிறேன்..

    தொலைத்தது என்ன…
    எங்களைப் போன்றோரின் எதிர்காலமா..
    அது இந்த மத்தாப்பு வெளிச்சத்தில் கிடைக்குமா..

    இன்று மட்டும் தான் எனக்கு
    விடுமுறை..
    நாளைக்கு நான் வேலைக்கு
    போயாக வேண்டும் என்பதால்
    எல்லாவற்றையும் மறந்து விட்டு
    இன்று தீபாவளியை மகிழ்ச்சியாய்
    கொண்டாடுவதா..
    யோசிக்கிறேன் நான்.. 

    இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவிக்கின்றேன். 

    கவிஞர்கள் அனைவருக்கும் மீண்டும் என் வாழ்த்தும் பாராட்டும்!  

     

    Share
  • அம்மா…..

    க.பாலசுப்பிரமணியன்

    “சார்,  நான் ரெடி” டிரைவர் சேகர் வாசலிலிருந்து குரல் கொடுத்தான்.

    “இதோ வந்துட்டேன். என்னோட பெட்டி தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்து வண்டியில் வை.. இரண்டு நிமிடத்தில் வந்துடுவேன்..” தன்னுடைய கழுத்தில் தொங்கும் டையை சரி செய்துகொண்டு கண்ணாடி முன் நின்று ஒரு முறை பார்த்துக்கொண்டார். விஸ்வம்.

    “சாரு .. நான் கிளம்பிட்டேன். நேரம் ஆச்சு. பத்து மணிக்கு மீட்டிங். நேரத்துக்கு போகணும். இப்போல்லாம் டிராபிக் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கு. அதுவும் அந்த டோல் கேட்தாண்டவே பத்து நிமிடம் ஆகுது. “

    ” இதோ.. லஞ்ச் பாக்ஸ் ரெடி” என்று சொல்லிக்கொண்டே அவர் மனைவி சாரு சமையல் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

    அவருடைய பெயர் விஸ்வநாதன். அனால் எல்லாரும் சுருக்கமாக “விஸ்வம்” என்று அழைப்பதால் அவர் தன்னுடை கையெழுத்தை விஸ்வம் என்றே போடத்தொடங்கினார் அவருடைய ஹோண்டா சிட்டி கார் நன்றாகத்  துடைக்கப்பட்டு மின்னிக்கொண்டிருந்தது.

    விஸ்வம் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் அவர் காதில் அந்தக் குரல் கேட்டது. “சேகர். என்னப்பா பூனை குரல் கேட்குது.?. கொஞ்சம் சுத்திப் பாரு. வண்டிக்கு அடியிலே பூனை ஏதாவது இருக்குதான்னு..”

    புறப்படும் நேரத்தில் பூனையின் குரலா? இன்னிக்கு டெண்டர் மீட்டிங் .. இது என்ன புறப்படும் போது  பூனையின் குரல்? மனம் கொஞ்சம் உறுத்தியது..

    கீழே குனிந்து வண்டியை ஒரு முறை சுற்றிப்பார்த்த பின் டிரைவர் சேகர் சொன்னார் ” சார். இங்கே ஒண்ணும் இல்லே. பக்கத்திலே எங்கேயாவது இருக்கலாம். “

    “இல்லே. சேகர். பின்னாலே தோட்டத்திலே பூனை ஒண்ணு  நாலைந்து குட்டி போட்டிருந்தது. ஒரு வாரம் ஆயிடுத்து..அந்தக் குட்டியெல்லாம் இங்கே தான் விளையாடிக் கொண்டிருக்கும். எங்கயாவது மாட்டிக்கப் போகுது.. இன்னொரு தடவை சரியாகப் பாரு..”

    மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு சேகர் சொன்னான் ” பார்த்துட்டேன்  சார்., இங்கே இல்லை. “

    வண்டி கிளம்பியது..அவருடைய ஆபீஸ் கிட்டத்தட்ட பதினைந்து கிலோ மீட்டர். .. ஒரு ஆறு கிலோ மீட்டர் போன பின்  மீண்டும் அந்த பூனையின் மெல்லிய குரல்.. அதுவும் ஒரு பயம் கலந்த குரல்..

    “சேகர்.. கேட்டியா.. மறுபடியும் பூனையின் குரல்.”

    சேகர் சிரித்துக் கொண்டே.. “சார்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்…” வண்டி நகர்ந்தது.

    விஸ்வத்தின் மனம் அந்த பைல் உள்ளே இருக்கும் விஷயங்களில் ஈடு படவில்லை…பூனையின் குரல் ஏதோ “அம்மா… அம்மா.. ” என்று அழைப்பது போல்.

    காலையில் ஆபீஸ் சென்றடைந்த விஸ்வம் மனம் வழக்கம் போல் இல்லை. அவருடைய உதவியாளர் தன் சக ஊழியரிடம் கூறினார். ” பாஸ் இன்னிக்கு மூட்ல இல்லை.. உள்ளே ஜாக்கிரதையாகப் போ. “

    வழக்கமாக ஆறு மணிக்கு மேலும் ஆபீஸ் வேலையில் ஈடு படும் விஸ்வம் இன்று நாலு மணிக்கே கிளம்பி விட்டார். தன்னுடைய உதவியாளரிடம்  ” இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு

    தன்னுடைய அறையிலிருந்து  கிளம்பி வெளியே கார் பார்க்கிங் நோக்கி வந்தார். சீக்கிரமே கிளம்பி விட்ட தன் முதலாளியைப் பார்த்த சேகருக்கு ஆச்சரியமாக இருந்தது.

    “சேகர். வண்டியை நல்லா  பார்த்துட்டயா ? ”  சேகருக்குப்  புரிந்தது. அவர் மனம் அந்த பூனையின் குரலைச் சுற்றியே இருக்கிறது என்று.

    “சேகர்.. நல்லா கேளு.. இப்பவும் அந்த பூனையின் குரல் மெல்லிசா…கொஞ்சம் கீழே உட்கார்ந்து செக் பண்ணு. “

    குனிந்து பின் பக்கச் சக்கரம் பக்கத்தில் உட்கார்ந்த சேகர்  ” ஆமாம் சார்.. இங்கே பூனையின் குரல் கேட்குது..” தன்னுடை கையை பின் பக்க டயர் மேல் ஒரு தடவை தடவிப் பார்த்தான். அந்த குரலின் வேகம் அதிகரித்தது.

    “சேகர். நீ வண்டியை கவனமாக எடு “

    வண்டி வீடு நோக்கிக் கிளம்பியது.. பாதி தூரத்தில் அந்தப் பூனையின் வேதனையும் பயமும் கலந்த குரல் வேகம் அதிகரித்தது…

    “சேகர்…வண்டியை பக்கத்திலே எதாவது மெக்கானிக் கடைக்கு எடுத்திண்டு போய் செக் பண்ணு…”

    வண்டி அருகிலுள்ள கடைக்குச் சென்றது.  அங்கே பின் பக்க சக்கரத்தைக் கழட்டிப் பார்த்த போது அங்கே உள் பாகத்தில் உள்ள ஒரு ரப்பர் மறைவுக்கு மேல் ஒரு சிறிய பூனைக் குட்டி அமர்ந்திருந்தது..

    “சனியனே!.. நீ இங்கேயா இருக்கே ” அந்தப் பூனையின் கழுத்தைப் பிடித்துத் தூக்கிய மெக்கானிக் தன் வழக்கமான மொழியிலே அதைத் திட்டினான்.

    “நல்ல காலம். அது அடி பட்டு சாகலே. ” விஸ்வத்தின் மனம் குளிர்ந்தது.

    அந்தப் பூனைக்குட்டியை தன் கையில் வாங்கிய டிரைவர் சேகர்..”சார். ஒரு ரெண்டு நிமிஷம் டைம் கொடுங்க ..இதை அந்தப் பார்க்கில் கொண்டு விட்டுட்டு வந்துடறேன். “

    ” அப்போ.. அந்த அம்மா பூனை தேடாதா?”  இது விஸ்வம்.

    “அது தலைவிதி சார்.. அதுக்கெல்லாம் நம்ம எப்படி சார் கவலைப் படறது?” சேகர் பதிலளித்தான்.

    ஒரு நிமிடம் யோசித்த விஸ்வம்  :” சேகர். அந்தப் பூனைக்குட்டியை இங்கே குடு . வாங்கி அதை தன்னுடன் பின் சீட்டில் வைத்துக் கொண்ட விஸ்வம்.. ” நீ எவ்வளவு பணம் கொடுக்கணுமோ அதை கொடுத்துட்டு வண்டியை எடு “

    வண்டி நகர்ந்தது… விஸ்வத்தின் நினைவும் தான்..

    மதுரை அவர் பிறந்து வளர்ந்த ஊர். அழகான சிறிய வீடு. தந்தை பக்கத்து தாசில்தார் ஆபீசில் வேலை பார்த்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள். இவர் தான் கடைக்குட்டி. வீட்டில் செல்லம்!

    அன்று வைகையில் அழகர் ஆற்றில்  இறங்கும் திருவிழா.. சித்திரை பௌர்ணமி …லட்சக் கணக்கில் மக்கள் கூட்டம்… குடும்பத்துடன் விழாவிற்கு வந்த இடத்தில் விஸ்வம் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து விட்டார். அப்போது அவருக்கு ஐந்து வயது.

    “அம்மா…அம்மா ” என்று அழுது கொண்டே அங்கே அலைந்தது அவருக்குத்தான் தெரியும். அவர் அழுகையைப் பார்த்த பலரும்  “பாவம். அம்மாவை விட்டுப் பிரிந்திடுத்து போல இருக்கிறது. ” என்று சொல்லிக்கொண்டு மேலே போனார்கள். அவர்களைப் பார்த்த விஸ்வத்திர்க்கு கோபமாக வந்தது..

    எப்படியோ போலீஸ் உதவியோடு அன்று மாலை தன் அம்மாவுடன் சேரும் வரை அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்

    வண்டி வீட்டு வாசலில் நின்றது.  மெதுவாக அந்தப் பூனைக்குட்டியைத் தூக்கிக்கொண்டு விஸ்வம் நேராக வீட்டின் பின்புறத் தோட்டத்தை நோக்கிச் சென்றார்.. அங்கே  அந்த தாய் பூனை தன்னுடைய மற்ற குட்டிகளோடு அமர்ந்திருந்தது.

    விஸ்வம் அந்தப் பூனைக்குட்டியை மெதுவாக கீழே இறக்கினார். அந்தத்  தாய் பூனை வேகமாக ஓடி வந்து தன்னுடைய நாக்கால்  குட்டியை நக்கியது. குட்டியின் முகத்தில் இருந்து ஆனந்தம் கண்ட விஸ்வத்திற்கு  அன்று மதுரையில் தன்னுடைய தாயை தான்  இறுக்கிக் கட்டிகொண்டது நினைவில் வந்தது. கண்கள் பனித்தன.

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    e0a902f0-675a-4ba7-8dd5-4066c120cf5b

    ”நின்றான், கிடந்தான்பின், சென்றாயர் பாடியில்
    குன்றாய் அமர்ந்து குழலூதி , -அன்று
    பசுக்களை மேய்த்தவன், பாரதம் செய்ய
    இசைக்கின்றான் கீதையை இன்று’’….கிரேசி மோகன்….

    Share
  • துல்லிய ஒப்பற்ற நவீனப் போலிப் பூதக் கணினி வடிவமைப்பு முறையில் பிரபஞ்சப் படிப்படித் தோற்ற வளர்ச்சி ஆய்வுகள்

     

    Hydrodynamic Simulation

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++

    பிரபஞ்சப் பெரு வெடிப்பில்
    பொரி உருண்டை சிதறித்
    துகளாகித்
    துண்டமாகிப் பிண்டமாகித்
    துணுக்காகிப்
    பிண்டத்தில் பின்னமாகி
    அணுவாகி,
    அணுவுக்குள் அணுவான
    பரமாணு வாகித்
    திரண்டு
    பல்வேறு மூலகமாய்ப் பின்னி
    மூலக்கூறாகி
    தொடர்ப் பிளவில்
    பேரளவுச் சக்தி வெளியேற்றி
    நுண்துகள்கள் பிணைந்து
    பேரொளி வீசிப்
    பிரமாண்டப் பிழம்பாகி,
    விண்மீன்களாகி
    பால்மய வீதியாகி, அதனுள் நீந்தும்
    பரிதி மண்டலமாகிக்
    கோள்கள்
    பம்பரமாய்ச் சுழலும் பந்துகளான,
    பிரபஞ்சத் தோற்ற
    வளர்ச்சியைக் கணினிப் போலி
    வடிவமைப்பாய்
    விஞ்ஞானிகள் படைத்து,
    விந்தை புரிகிறார் !

    +++++++++++

    Magneticum Pathfinder

    முதன்முறையாக பிரபஞ்சத்தின் பல்வேறு பண்பாட்டு உடன்பாடுகளை விளக்கமாகப் போலிக் கணினி வடிவமைப்புகள் [Computer Simulations] மூலமாக, நாசாவின் ஹப்பிள், பிளாங்க் விண்ணோக்கிகள் வழியே காணப் பெற்ற பேரளவு வானியல் தள ஆய்வுகளுடன் [Large-Scale Astronomical Surveys] ஒப்புநோக்க உதவி புரிந்தன.   இவ்விதம் காந்தப் பங்கு வழிமுறை [Magneticum Pathfinder] கணினி மூலமாகப் பிரபஞ்சவியல் [Cosmology] விஞ்னானத்தில் புதிய யுகத்தைத் துவக்கி வைத்தது.  இப்பணி பத்தாண்டு ஆராய்ச்சி மேம்பாடுகளில் சாதிக்கப் பட்டது.  இந்த திட்டப் பிரச்சனையின் மிகப் பெரும் சவால், போலி வடிவமைக்கும், வானியல் பௌதிக மாடலுக்கும் ஏற்ற தனிக்குறியீடுத் [Code] தேர்ச்சியே. அக்குறியீடு மாறிடும் தொழிநுணுக்கம், சாதனங்களுக்கு ஏற்ப வேறுபட வேண்டும்.
    கிளாவுஸ் டோலாக்  [கோட்பாடு வானியல் பௌதிக விஞ்ஞானி] [LMU Ludwig Maximilians University Munich, Germany]

    building-blocks-of-the-universe1.jpg 

    புலப்படும் பிரபஞ்சப் பிண்டத்தின் தனித்துவ கணினி நீர்மைத் துடிப்பு போலி வடிவமைப்பு [Computer Hydrodynamic Simulation]

    நவீனப் பிரபஞ்சவியலில் [Cosmology] பெருவெடிப்பு பிரபஞ்சத் துவக்கம், பிண்டப் படைப்பு, காலவெளித் தோற்றம் ஆகியவை 13.8 பில்லியன் ஆண்டுக்கு முன்பு உருவாகி இருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது. அதுமுதல் வாயு, தூசி, விண்மீன்கள் பின்னிப் பிணைத்துக் கண்ணுக்குத் தெரியும் பில்லியன் கணக்கான காலக்ஸி [ஒளிமந்தைகள்] அமைப்புகள், ஈர்ப்பு விசை கொண்டுள்ள அண்டக் கோள்கள், அவற்றின் நடுவே உள்ள பேரசுர வல்லமை கொண்ட பெருநிறைக் கருந்துளைகள் [Supermassive Black Holes] போன்றவை எல்லாம் பிரபஞ்சம் ஆரம்ப நிலையில் இருந்த போது எப்படி உருவாயின ? இதற்குப் பதில் கூற வானியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சவியல் போலி வடிவமைப்பு [Cosmological Simulations] முறைகளைப் பூதக் கணினிகள் மூலம் ஆராய வேண்டிய தாயிற்று.  அதாவது நமது பிரபஞ்சத்தைப் பற்றிய நமது பல பில்லியன் ஆண்டு கால விஞ்ஞான அறிவை உன்னதக் கணினிகள் மூலம் பெருங்கணித மாடல்களாக [Huge Mathematical Models] மாற்றி விட்டார்.

    Computer simulation -1

    இந்த விஞ்ஞானத் திட்டம்தான் காந்தப் பங்கு வழிமுறைத் திட்டம் [Magneticum Pathfinder Project]  எனப்படுவது.  திட்டக் குழுத் தலைமை விஞ்ஞானி மியூனிக் பல்கலைக் கழகத்தின் கிளாவுஸ் டோலாக்  [Klaus Dolag (LMU) Ladwig Maximilians University Munich, Germany].  அவர் எடுத்துக் கொண்ட மூன்று பிரபஞ்ச உறுப்புகள் : கருஞ்சக்தி, கரும்பிண்டம், காணும் பிண்டம் [Dark Energy, Dark Matter & Visible Matter].  

    அவர் பின்பற்றிய மூன்று இயற்கை இயக்கங்கள் :

    1. புலப்படும் பிண்டம் சுழற்சியில் குவிந்து விண்மீன்கள் உருவாவது.
    2. தோற்ற வளர்ச்சியில் சுற்றியுள்ள பிண்டம் சூரியப் புயல்களில் சூடாகி சூப்பர்நோவா வெடிப்பில் பல்வேறு மூலகங்கள் [Chemical Elements] உண்டாவது.
    3. பூதத் திணிவு கருந்துளைகள் பின் விளைவால் பேரளவு சக்தியை வெளியேற்றுவது.

    மிக விளக்கமான பேரளவுப் போலி வடிவமைப்புச் சதுரம் 12.5 பில்லியன் ஒளியாண்டு தூரத்தைக் கொண்டது. இப்பணி செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் எடுத்தன.  இதுவரை இத்தகைய பேரளவு விண்வெளியை யாரும் கணினிப் போலி வடிவில் காட்டியதில்லை.  இந்த அசுரச் சாதனை செய்து முடிக்க  விஞ்ஞானிகளுக்குப் பத்தாண்டுகள் பிடித்தன.

    +++++++++++++++++++

    six-types-of-quarks.jpg

    புரிந்தும் புரியாத பிரபஞ்சப் புதிர்கள் !

    அது விட்டுப் போவ தில்லை இன்னும் !
    அதை உணர்வேன், ஆனால் புரிவ தில்லை !
    கையில் பற்றவும் முடிய வில்லை !
    மறந்து போகவும் இயல வில்லை !
    அது முழுவதும் அகப் பட்டால்
    அளக்க முடிய வில்லை என்னால் !

    ரிச்சர்டு வாக்னர், ஜெர்மன் இசைக்கலைஞர் [Richard Wagner (1813-1883)]

    மாபெரும் சக்தி வாய்ந்த மிக நுண்ணிய துகள்கள்தான் பிரபஞ்சத்தின் பெரும்பான்மைச் சக்தி இயக்கங்கள் பற்றிய வினாக்களுக்கு விடை அளிக்கின்றன.

    ஸ்காட் வேக்லி, (Scott Wakely) துணைப் பேராசியர், சிகாகோ பல்கலைக் கழகம். (2006)

    இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே புரோட்டான்களும், நியூட்ரான்களும்தான் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட மூலாதாரப் பரமாணுக்கள் (Subatomic Particles).  அவை கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அவைதான் அணுவின் பிளக்க முடியாத மூலப் பரமாணுக் களாய்க் கருதப்பட்டன.  1960 ஆண்டுகளில் அவற்றுக்கும் நுட்பமான துகள்களால் பரமாணுக்கள் உருவாகியுள்ளன என்று அறியப் பட்டது.  புதுமுறைச் சோதனைகள் மூலம் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் உறுதியற்ற உள்ளமைப்பை இப்போது அழுத்தமாய்ச் சொல்ல முடிகிறது.

    கிளாஸ் ரித் & ஆன்டிரியா சேஃபர் (Klaus Rith & Andreas Schafer)

    நுண்துகள் பௌதிகத்தின் நிலை பெற்ற மாதிரி விதி (The Standard Model of Particle Physics) விஞ்ஞான வரலாற்றில் வெற்றியின் உச்சத்திலும், அதைத் தாண்டிய முன்னேற்ற துவக்கத்திலும் கால அச்சின் மீது ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது !

    கார்டன் கேன், (Goron Kane) பௌதிகப் பேராசிரியர், மிச்சிகன் பல்கலைக் கழகம்.

    உன்னத இழை நியதி பிரபஞ்ச இயக்க நெறியைக் கூறுகிறது

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் “பொது ஒப்பியல் நியதி” (General Theory of Relativity) அண்டங்களின் ஈர்ப்புவிசை தோற்ற அமைப்பை விளக்கும் போது, பிரபஞ்சத்தின் கால-வெளி உண்டாக்கும் வளைவே (Space-Time Curvature) ஈர்ப்பு விசையுடன் தொடர்பு கொள்வதாய்க் கூறுகிறது.

    நுண்ணிய அணு வடிவைக் கட்டுப்படுத்தும் பிரபஞ்சத் “குவாண்டம் யந்திர விதியில்” (Quantum Mechanics) ஆட்சி செய்பவை அலைகளா அல்லது துகள்களா என்னும் விஞ்ஞானக் கருத்தில் உள்ள உறுதியின்மை இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.

    “குளுவான்” அல்லது ஒட்டுவான் (Gluon) என்பது அணுவுக்குள்ளே பரமாணுக்களை (Subatomic Particles) ஒன்றாகக் கட்டிப் பிணைத்திருக்கும் ஒருவித வலுவான அணுக்கரு விசை (Nuclear Force) என்னும் புதிய கருத்தை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.

    மிக்க மூலாதாரமான இயற்கை நுண்துள்களின் (Electrons & Quarks) இயக்கப்பாடுகளுக்கு 1960 -1970 ஆண்டுகளில் ஒரு “நிலை பெற்ற இயக்க மாதிரி நியதியை” (Theory of Interactions – Standard Model) விஞ்ஞானிகள் விரிவாக்கினார்கள்.  ஆனால் அந்த மாதிரி நியதி ஈர்ப்பாற்றலைப் பற்றி இன்னும் விளக்க முடியாத நிலையில்தான் உள்ளது.

    பிரபஞ்சம் மற்றும் நுண்ணணு இயக்கங்களை ஒருங்கே விளக்கும் ஓர் “ஐக்கிய நியதி” (A Unified Theory of the Universe) துகள் வடிவில்லாத ஒற்றைப் பரிமாணம் கொண்ட “இழை நியதியாக” (One Dimensional Filament – The String Theory) எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் இந்த நூதன இழை நியதி ஒவ்வாத பொது ஒப்பியல் நியதியையும், குவாண்டம் யந்திர விதியையும் ஒருங்கே இணைக்கிறது.

    பிரபஞ்ச ஐக்கிய நியதிக்கு வழியிடும் உன்னத இழை நியதி  

    உன்னத இழை நியதி (Superstring Theory) பெருவெடிப்புக்கு முந்தய சில அடிப்படை விளைவுகளையும் விளக்க உதவுகின்றது !  ஒற்றை நியதியில் இழை நியதி பராமாணுக்கள், அடிப்படை இயற்கை உந்துவிசைகள் (Particles & Fundamental Forces of Nature) யாவும் உன்னத சீரான நுண்ணிழைகளின் அதிர்வுகள் (Vibrations of Tiny Supersymmetric Strings) என்று தெளிவாகக் கூறுகிறது.  பரமாணுக்களின் அணுக்கூண்டில் இயங்கும் “நுண்துகள் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) தன்மைகளை விளக்கும் மகிமை கொண்டது இந்த உன்னத இழை நியதி !  இது ஏறக்குறைய உயிரியல் பிறவி மூலமான “டியென்னே” (DNA) போன்றது பிரமஞ்சத்தின் ஒற்றை உன்னத இழை நியதி என்று வைத்துக் கொள்ளலாம் !

    புரட்சிகரமான இந்த இணைப் பிரபஞ்சக் கோட்பாடு எப்போது உதயமானது என்னும் கேள்வி எழுகிறது இப்போது !  உன்னத இழை நியதி, பெருவெளி, கருமைப் பிண்டம் (Superstring Theory, Hyperspace & Dark Matter) ஆகிய புதிய கோட்பாடுகள் எழுதப்பட்டதும் பௌதிக விஞ்ஞானிகள் பிரமஞ்சத்தின் விஞ்ஞானத்தை விளக்க நாமறிந்த நான்கு காலவெளிப் பரிமாணங்கள் மட்டும் போதா வென்றும், அவை மெய்யாகப் பதினொன்று எண்ணிக்கைகள் என்றும் உணர்ந்தார்கள் !  அவ்வித முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்ததும், அடுத்தோர் முடிவும் உதயமானது !  அதாவது நாமறிந்த பிரபஞ்சமானது எண்ணிற்ற “சவ்வியல் குமிழிகளில்” (Membraneous Bubbles) ஒன்றானது !  சவ்வுக் குமிழிகள் பதினொன்றாம் பரிமாணத்தில் கொந்தளிக்கும் போது அலைகள் எழுகின்றன !

    fig-3-fundamental-particles.jpg

    பிரபஞ்சத்தின் புதிய அடிப்படைத் துகள்களும் அவற்றின் பிணைப்புகளும்

    விண்வெளியில் மினுமினுக்கும் எண்ணிலா விண்மீன்கள் முதலாக நமது மூலாதார டியென்னே (DNA) அணுக்கள் வரை, அனைத்துப் பிண்டங்களும் (Matter) குறிப்பிட்ட சில அடிப்படைத் துகள்களைக் (Fundamental Particles) கொண்டவை.  பிளக்க முடியாது எனக் கருதப்பட்ட அணுக்கருவின் புரோட்டானும், நியூட்ரானும் மிக நுண்ணிய குளுவான்கள் கொண்டவை என்று அறியப்பட்டது.  மூலாதாரமான அந்த நுண்துகள்களை மேலும் பிளக்க முடியாது.  அவை புரோட்டான், நியூட்ரான் போலத் தனித்துக் காணப்படாதவை. பிரித்து எடுக்க முடியாதவை.  1960 ஆம் ஆண்டுக்கு முன்பு விஞ்ஞான மேதைகள் ரூதர்ஃபோர்டு (1871-1937), நீல்ஸ் போஹ்ர் (1885-1962) ஆகியோர் முன்னோடிகளாய் விளக்கிய அணு அமைப்பின் உட்கருவில் புரோட்டான்

    ​​

    களும், நியூட்ரான்களும் உள்ளன வென்றும், அவற்றை எலெக்டிரான்கள் சுற்றி வருகின்றன வென்றும் கூறினார்கள்.  அதாவது எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை அணுவின் பிளக்க முடியாத அடிப்படைத் துகள்கள் என்று ஒருகாலத்தில் கருதினார்கள்.  அந்தப் பூர்வீகக் கருத்து 1960 ஆண்டுகளில் மாறிவிட்டது.

    1960-1970 ஆண்டுகளில் அடிப்படைத் துகள்கள் பற்றிய பூர்வீக அணுவியல் அமைப்புச் சித்தாந்தம், பின்னால் வந்த விஞ்ஞானிகளால் திருத்தப் பட்டது.  பிரபஞ்சத்தின் புதிய அடிப்படைத் துகள்களில் முதலாகக் “குவார்க்குகள்”  (Quarks) என்பவை அறியப் பட்டது.  குவார்க்குகளை அசுர வலுவுடன் பிணைத்துள்ள “குளுவான்” (Gluon) பற்றி அறியப்பட்டது.  ஆறு வகையான குவார்க்குகள் இருப்பது தெரிய வந்தது.  அதாவது குவார்க்குகள் << மேல், கீழ், நளினம், நூதனம், உச்சம், நீச்சம் >> (Up, Down, Charm, Strange, Top, Bottom) என்று ஆறு விதத்தில் நினைவில் நிற்கும் எளிய பெயர்களில் குறிப்பிடப் பட்டன.  பளுவின்றி மெலிந்த குவார்க்குகள் “மேல்,” “கீழ்” என்று இரு விதத்தில் இருப்படுபவை.  குவார்க்குகள் இரண்டும் பொதுவாக அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றில் இருப்பவை.

    from-atom-to-quarks.jpg

    பிரபஞ்சத்தில் குவார்க்குகள் வலுமிக்க விசையால் (Strongest Force) ஒன்றை ஒன்று இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டுள்ளன.  அதாவது குவார்க்குகள் தனியாக இருக்க மாட்டா !  ஒரு குவார்க் மற்ற குவார்க்குடன் வலுவுள்ள விசையால் பரமாணுக்களுக்குள் எப்போதும் இணைந்தே இருப்பது.  அந்த வலுவான விசை குளுவான் அல்லது ஒட்டுவான் (Gluon) என்று அழைக்கப் படுகிறது. அப்படிப்பட்ட அடிப்படைத் துகள்களால் கட்டப் பட்டவையே இந்த பிரபஞ்சமும் அதன் உள்ளே நகரும் கோடான கோடிப் பிண்டப் பொருட்களும் என்பது அறியப்படுகிறது.  அத்தகைய மூலாதாரக் குவார்க்கையும் அவற்றைப் பிணைத்துள்ள அசுர வலுவான விசையையும் ஆழ்ந்து அறிவதே இப்போது விஞ்ஞானிகளின் பிரதமக் குறிக்கோளாக உள்ளது.  பூமியின் மீது பொழிந்து விழும் அகிலக் கதிர்களில் (Cosmic Rays) ஏராளமான அடிப்படைத் துகள்கள் உள்ளன !  அவற்றில் 90% புரோட்டான்கள், எலெக்டிரான்கள்.  அவற்றைத் தவிர மேஸான், நியூட்ரினோ, பாஸிட்ரான், மியூவான், சியான் போன்றவையும் விழுகின்றன.

    aj

    தற்போதிருக்கும் விஞ்ஞானக் கருவிகளால் அளக்க முடியாதபடிக் குவார்க்குகள் மிக மிக நுண்ணியவை.  அவற்றின் பளுவை நிறுக்க முடியாது.  குவார்க்குகளைப் பிரிக்க முடியாது.  ஒரு புரோட்டானைப் பிளக்க முயலும் போது, குவார்க்குகள் பத்து டன் விசை வலுவுடன் ஒட்டிக் கொள்கின்றன.  அவை மிக நுட்பமாக இருப்பதால் புரோட்டானுள் பில்லியனில் ஓரளவான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.  புரோட்டான் பளுவிலும் மிகச் சிறிய விகிதமாகக் குவார்க் உள்ளது.  புரோட்டானில் குவார்க்குகள் அடைத்துக் கொண்ட சிற்றிடம் போகக் காலியாகக் கிடக்கும் இடத்தில் இருப்பதென்ன என்னும் வினா எழுகிறது.  அந்தக் காலி மனையில்தான் குளுவான் எனப்படும் பிசின் குவார்க்குகளைப் பிணைக்கும் ஒட்டு விசையாக நிரப்பிக் கொண்டுள்ளது !  அத்தகைய குவார்க், குளுவான் பிசினே பிரபஞ்சத்தின் 98% பளுவாகவும் பரவியுள்ளது !  இயற்கை யானது கோடான கோடி முறைகளில் பளுவில்லா குவார்க்கு களையும், வலுவான குளுவான்களால் பிணைத்து பிரபஞ்சத்தைப் படைத்துள்ளது !

    fundamental-particles-chart.jpg

    (தொடரும்)

    *****************************

    Image Credits : Scientific American (May 2003)

    தகவல்:

    1.  Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2.  National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3.  National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4.  Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku  (2005)

    10. 50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11  Astronomy Magazine – What Particle Physics Says about the Universe By: Scott Wakely (September 2006)

    12  Scientic American – ” The Mystery o Nucleon (Protons & Neutrons) Spin ”  By : Klaus Rith & Andreas Schafer (July 1999)

    13  Scientific American ” The Dawn of Physics Beyond the Standard Model ” By : Gordon Kane Professor of Physics, University of Michigan  (February 20, 2006)

    14.  https://idw-online.de/en/news639908  [October 21, 20125]

    15.  http://magneticum.org/   [October 21, 2015]

    16.  http://www.universe-cluster.de/public-outreach/press-releases/mitteilung/article//Magneticum-Pathfinder-The-evolution-of-the-universe-in-an-unmatched-precision/?  [October 21, 2015]

    17.  http://www.magneticum.org/simulations.html  [September 3, 2015]

    18.  http://www.azoquantum.com/News.aspx?newsID=3925  [October 23, 2015]

    19.  http://myinforms.com/en/a/17961379-magneticum-pathfinder-evolution-of-the-universe-in-unmatched-precision/  [October 21, 2015]

    20.  http://www.supercomputingonline.com/latest/58908-dolag-builds-largest-simulation-within-the-magneticum-pathfinder [October 22, 2015]

    21.  www.dailygalaxy.com/my_weblog/2015/11/new-insights-into-subatomic-particles-could-change-how-we-understand-the-formation-of-the-universe.html?  [November 20, 2015]

    *******************************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  November 21, 2015

    Share
  • ஏழாவது ஊதியக் குழுவின் அறிவிப்பும், இந்தியப் பொருளாதாரத் தாக்கமும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    தற்பொழுது அரசு நிறுவியுள்ள ஏழாவது ஊதியக்குழு தன்னுடைய பரிந்துரைகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு 16 % சம்பள விகிதமும், வீட்டுப்படி மற்றும் மற்ற படிகள் மூலமாகவும் ஒவ்வொருவருக்கும் 23.55 % அதிகப்படியாக தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆண்டொன்றிற்கு அரசாங்கத்திற்கு சுமாராக 1.02 இலட்சம் கோடி ரூபாய் அதிகமாக சுமை சுமத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கு உண்மையில் இது நல்ல செய்திதான். விலைவாசிகள் எகிறியிருக்கும் இந்த காலகட்டத்தில் மத்தியதர மக்களுக்கு இப்படி சம்பள உயர்வு கிடைப்பது பெருமகிழ்ச்சியளிக்கக்கூடிய விசயம்தான். ஆனால் இதனால் பயனடையப்போவது, இந்திய மக்கள் தொகையில் மிகச்சில சதவிகிதங்களே உள்ளவர்கள் மட்டுமே. அரசு ஊழியர்களுக்காக அளிக்கப்படக்கூடிய இந்தப் பணச் சுமையால் இந்தியாவினுடைய பண வீக்கம் மேலும் அதிகரிக்க உறுதி செய்யப்படுகிறது. ஒரு புறம் நிதியமைச்சகம் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தப்போவதாகக் கூறிக்கொண்டே மறுபுறம் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஒரு சில சதவிகித மக்களுக்காக 90 சதவிகிதத்திற்கு மேல் உள்ள பொது மக்களுக்கு மேலும் பண வீக்கத்தைத் தலையில் சுமத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்? ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு கமிஷன் நியமித்து அது மத்திய ரிசர்வ் வங்கிக்கும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களுடைய அறிக்கைகளை சமர்ப்பித்து அதன் மூலமாக ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்தினாலே இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும். சீனர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து தங்களுடைய நாணயத்தின் மதிப்பைக் குறைத்ததன் மூலம் ஏற்பட்ட தாக்கத்தை சரிசெய்ய இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசின் மத்திய முக்கிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மேலாண்மை அதிகாரி இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இன்று நாணய மதிப்பீட்டுச் சந்தையில் டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு சரிந்து 66 ரூபாயைக் கடந்துவிட்டது. ரூபாயின் மதிப்பைக் கூட்ட வேண்டிய ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும், இது தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் பணவீக்கத்தை அதிகப்படுத்தக்கூடிய இந்த ஏழாவது பே கமிஷனின் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. விமானப் போக்குவரத்துத் துறை அதிகம் பயன்படுத்தக்கூடிய எரிபொருள் செலவைக் குறைத்து அந்தத் துறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்ற அரசு இயற்கை எரிவாய்வு பெட்ரோலிய திரவ எரிவாய்வு மற்றும் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையைக் குறைக்க வேண்டிய நேரத்தில் அதிகரித்திருப்பது வருந்தத்தக்க விசயம். பேரல் ஒன்றுக்கு 45 டாலருக்கும் கீழ் இருக்கக்கூடிய இன்றைய நிலையில் பெட்ரோலியப் பொருட்கள் பன்மடங்கு விலை குறைக்க வேண்டிய நேரத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை அதிகப்படுத்தியுள்ளன. தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துள்ளது. ஆனால் ரூபாயின் மதிப்போ குறைந்து கொண்டே வருகிறது. அரசு ரூபாயின் மதிப்பை அதிகரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று அறிய மக்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள். இந்த 1 இலட்சம் 2 இலட்சம் கோடி ரூபாய்களை ஏற்றுமதித் துறைக்கோ அல்லது உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கோ பயன்படுத்தினால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்படும். அத்தோடு இதனுடைய பயன் அனைத்து மக்களுக்கும் சென்றடையும்.

    Share
  • எங்களை மன்னித்துவிடு அன்புச் செல்வமே !

    எஸ் வி வேணுகோபாலன்

    Child-Abuse

    எங்களை மன்னித்துவிடு அன்புச் செல்வமே, சையத் சைனாப் ஃபாத்திமா ஜாஃப்ரி, எங்களை மன்னித்துவிடு! இந்த முறை ஹைதராபாத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் லிஃப்ட் இடைவெளியில் வைத்து உன்னைப் பறிகொடுத்தோம். ஒரு தாயின் கண்ணெதிரே – துடித்துக் கதறும் தாத்தாவின் அதிர்ச்சி மிகுந்த தருணங்களுக்கு இடையே உயிரற்ற உன் உடலை, ஏதோ உன்னையே மீட்டெடுப்பது போன்ற எதிர்பார்ப்போடு வலியோடும், வேதனையோடும் எடுத்துக் கிடத்தும் காட்சியைக் கண்ணுறவும் நெஞ்சுரம் கொண்டிருந்த என்னைப் போன்ற பாவிகளை மன்னித்து விடு, எங்கள் கள்ளம் கபடமற்ற இளம் தேவதையே.. புத்தக அலமாரியை சுவரில் பொருத்தி ஆணி அடிக்கையில் அல்லது மூட வராத சன்னல் கதவை இழுத்துச் சார்த்துகையில் நாமறியாமலே நசுங்கிச் செத்துப் போகும் பல்லியைப் பின்னர் கண்டெடுக்கையில் பதறிப் போகும் உள்ளங்கள், மூன்றரை வயதுப் பிஞ்சுக் குழந்தையின் துடிப்பு மிக்க இயக்கத்தை ஓர் எந்திரம் சட்டென்று முடிவுக்குக் கொண்டு வருவதை எப்படி எதிர்கொள்ளும், எங்கள் கண்ணே…

    முதன்முதலாக பிறப்புச் சான்றிதழ் வாங்கும்போதே, குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று யோசிக்கும் இந்த சபிக்கப்பட்ட வாழ்க்கையை மன்னித்துவிடு, ஜாஃப்ரி ! நவீன போட்டிக் களத்தில், ஒரேயொரு முதலிடத்திற்கான விபரீத ஓட்டப் பந்தயத்தில் குழந்தைகளை சாவி கொடுத்து இறக்கிவிடும் எங்களை மன்னித்துவிடு, கண்மணி. இல்லாவிட்டால், 2009ல் புது தில்லியில் 11 வயது ஷானூவை ஒரே ஓர் எழுத்துப் பிழைக்கு வேகாத வெயிலில் தலைமீது செங்கற்களைச் சுமந்து நிற்குமாறு தண்டனை கொடுத்து மயங்கி விழுந்து சாகக் கொடுத்திருப்போமா, பாவிகள்! 2007ல் ஆமதாபாத் மாநகரில் பத்து நிமிடம் தாமதமாகப் பள்ளிக்கு வந்ததற்கு பெரிய விளையாட்டு மைதானத்தை பத்து முறை சுற்றி வரச்சொல்லி மிரட்டி அனுப்பி ஐந்தாவது சுற்றிலேயே மிலான் தாணா மயங்கி மடிந்து விழக் கண்டிருப்போமா…. எச்சரிக்கையற்ற நிலையில் பராமரிக்கப்படும் நீச்சல் குளத்திலும், அலட்சியமாக கையாளப்படும் பள்ளி வாகனத்திலும் பிள்ளைகளைப் பறிகொடுப்போமா எங்கள் தங்கமே…

    குழந்தைகள் மீது உரிமை கொண்டாடப் பழகி இருக்கும் சமூகத்திற்குக் குழந்தைகளுக்கான உரிமைகள் இருப்பது தெரியாது என்பதை மன்னித்துவிடு ஜாஃப்ரி! தூய்மையான குடி நீரோ, கழிப்பறையோ, விளையாட்டுத் திடலோ, அன்பான கல்விச் சூழலோ, அரவணைப்பான காற்றுவெளியோ உத்தரவாதம் செய்யாமலே அடுத்த நூற்றாண்டுக்கான கல்வி நிலையங்களாக அறிவிப்போரை நம்பிக் குழந்தைகளைக் காவு கொடுப்போரை மன்னித்துவிடு ஜாஃப்ரி!

    ஆபத்துகளை தவிர்க்கவோ, விபத்துகளை எதிர்கொள்ளவோ வக்கில்லாமல் இருந்து கொண்டு, எந்த கோர மரணத்தையும், எதிர்பாரா விபத்து என்று சொல்லித் தப்பிக்கவும், நஷ்ட ஈடு வேண்டுமானால் கொடுத்துவிட்டுப் போகிறோம், அதற்கென்ன என்று அராஜகத் திமிரோடு வாதம் செய்யவும், இதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்துவிட்டு அடுத்த வேலைக்குப் போகவும் துணிச்சல் கொண்டு திரிய அனுமதிக்கும் எங்கள் அரசியல், பண்பாட்டுச் சூழலை மன்னித்துவிடு ஜாஃப்ரி! மருத்துவரை அழைக்குமுன் வழக்கறிஞர்களை நாடவும், ஆடிட்டர்களை ஆலோசிக்கவும், அதிகாரவரிசையில் நெருக்கமான புள்ளிகளை உடனே துணைக்கு அழைக்கவுமான வசதியில் மிதப்போரிடம் கல்வி ஒப்புக் கொடுக்கப்பட்டிருப்பதை மன்னித்து விடு ஜாஃப்ரி!

    இலக்குகளை வைத்து நடக்கிறது எங்கள் தாராளமய பொருளாதாரம். விற்பனைப் பொருள்கள், சரக்குகள், உருப்படிகள் என்று புதிய பெயர்கள் சூட்டப்படும் ஆடுகளத்தில், ‘பார்கோட்’ ஒட்டப்பட்டிருக்கும் இன்னொரு உருப்படி தான் குழந்தையும். வேகமான உணவு, வேகமான பயணம், வேகமான வாழ்க்கை என்றான உலகில், குழந்தைகளின் வளர்ச்சி மைல்கற்களை இப்போது வேகமாக ஊன்ற வேண்டியதை மன்னித்துவிடு ஜாஃப்ரி! இரண்டரை அல்லது மூன்று வயதில் பள்ளிக்குச் செல்லத் தொடங்குவதே எங்களுக்கு கொஞ்சம் தாமதம் போலாகி விட்டதை மன்னித்துவிடு ஜாஃப்ரி! இரண்டிரண்டு படிக்கட்டுகளாகத் தாவி ஏறும் வயதில், இரண்டிரண்டு வகுப்புகளாக விரைந்து முடித்துவிடக் கூடாதா என்று நாங்கள் பேரார்வத்தோடு எதிர்பார்ப்பதை மன்னித்துவிடு ஜாஃப்ரி!

    அறைந்து நசுக்கப்பட்டிருக்கும் உன் மென்மையான நாசி மீது உறைந்து மின்னும் இரத்தத்தின் துளிகளில் பிரதிபலிக்கிறது எங்களது கையாலாகத் தனம். பறிக்குமுன் வாடி விழும் வெள்ளை மலர்போல் எங்கள் நெஞ்சு துடிக்கக் கிடக்கும் எங்கள் முழுமதியே, ஜாஃப்ரி, மன்னித்து விடு எங்களை!

    *************

    Share
  • அறிந்துகொள்வோம் – 25 (’மனோன்மணீயம்’ பெ. சுந்தரம் பிள்ளை)

    -மேகலா இராமமூர்த்தி

    சுந்தரத் தமிழால் சிந்தை கவர்ந்தவர்!

    ’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்றார் பாவேந்தர். அந்த அமுதத்தமிழின் சுவையினை முக்கனிகள்போல் மூன்றாய் வகைப்படுத்தினர் நம் முன்னோர். அவை முறையே இயல், இசை, கூத்து எனும் நாடகம் ஆகியவை. ஓசை நயத்தோடு கூடிய பாக்களாகவும், செய்யுளாகவும் பரிமளித்த தமிழ், பின்பு மெல்ல மெல்ல உரைநடையையும் (இயற்றமிழ்) தனக்குள் உள்வாங்கிக்கொண்டது. செய்யுளின் இடையிடையே உரைநடையும் விரவிவரும் பாங்கை ’உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனும் பெயரான் அழைத்தனர் தண்டமிழ்ப் புலவோர். தமிழின் மற்றொரு பிரிவான நாடகம், உரையும் பாட்டும் விரவிய கூத்தாகும்.

    கண்ணுக்கும் கருத்துக்கும் ஒருங்கே விருந்தளிக்கும் அருங்கலையாம் நாடகக்கலையின் இலக்கணங்களை ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் எண்வகைச் சுவைகளாய் மெய்ப்பாட்டியலில் விளக்கிச் செல்கின்றது. நாடகத்திற்கான இலக்கணங்களைச் செப்புகின்ற இலக்கண நூல்கள் பலவும் அன்றிருந்தன என்பதைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் நமக்கு அறியத்தருகின்றார். அகத்தியம், சயந்தம், குணநூல், கூத்தநூல், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், செயிற்றியம் முதலியவை அவற்றில் சில. இவற்றில் ஒன்றுகூட இன்று கிடைக்காமல் போய்விட்டது வருந்தத்தக்கது. நாடக நூல்களைப் பேணாது தொலைத்தது போன்றே நாடகக்கலையையும் புரக்காது விடுத்தனர் நம் தமிழ்மக்கள்.

    இவ்வாறு பல்லாண்டு காலமாய்த் தாழ்வுற்று வரவேற்பின்றிப் பாழ்பட்டு நின்ற நாடகக்கலைக்குப் புத்துயிரூட்டி அதனை மிடுக்காய் நடைபயிலவைத்த பெருமைக்குரியவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆவார். கேரளாவிலுள்ள ஆலப்புழையில் 1855-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் நாள், பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள் இணையருக்கு இணையற்ற மகனாய்த் தோன்றினார் சுந்தரனார். சைவ சமய வழிபாட்டு நூல்களான தேவாரம், திருவாசகம் முதலியவற்றைத் தம் தந்தையிடம் இளமையிலேயே கற்றுத் தேர்ந்தார்.

    கல்வியிலும் சிறந்துவிளங்கிய அவர், தத்துவத் துறையில் முதுகலைப் பட்டம்பெற்றுத் திருவனந்தபுரத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் (The Maharaja’s College) தத்துவத்துறைப் பேராசிரியராய்ப் பணியாற்றினார்.

    sundarampillaiதம் மாணாக்கர் பலரும் ஆங்கில நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்மீது பெருங்காதல் கொண்டு அவற்றைப் படித்தும் நடித்தும் இன்புறக்கண்ட சுந்தரனார், செந்தமிழிற் சிறந்ததோர் நாடகமியற்றித் நந்தமிழில் நாடக நூல்கள் இல்லையெனும் குறைகளையத் தீர்மானித்தார். அதற்கு ஏற்றதோர்க் கதையினை அவர் சிந்தித்திருந்த வேளையில், புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியரும், அரசியல்வாதியுமான லிட்டன் பிரபு (Edward George Earle Bulwer Lytton) 1866-இல் இயற்றிய ’The Lost Tales of Miletus’ எனும் நூல் அவர் நினைவுக்கு வந்தது. அந்நூலுக்கு ’The Secret Way’ எனும் மற்றொரு பெயருமுண்டு. அதனையே தெள்ளுதமிழ்க் காப்பியமாய்த் தீட்டத் துணிந்தார் சுந்தரனார். அவ்வாறு மலர்ந்ததே ‘மனோன்மணீயம்’ எனும் புகழ்வாய்ந்த நாடகத் தமிழ்நூல். 1891-ஆம் ஆண்டில், எளிய செய்யுள் நடையில், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட இந்நூல், தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுக்கு ஈடான இலக்கியச் சுவையும், செறிவான நடையும் கொண்டு கற்பாரைக் காந்தமெனக் கவர்கின்றது.

    கதைகளை நாடகங்களாக அமைப்பதற்கென்று சில இலக்கண மரபுகள் உண்டு. ஆம், நாடகம் எழுதவேண்டுமானால், கதையை ஐந்து பிரிவுகளாய்ப் பிரிக்கவேண்டும். அப்பிரிவுகளுக்கு ’அங்கம்’ என்று பெயர். இதனைச் ’சந்தி’ என்றும் கூறுவர். முதல் சந்தியை ’முகம்’ (The Exposition) என்றும், இரண்டாம் சந்தியைப் ’பிரதிமுகம்’ (Rising Action) என்றும், மூன்றாம் சந்தியைக் ’கருப்பம்’ (The Climax)  என்றும், நான்காம் மற்றும் ஐந்தாம் சந்திகளை முறையே விளைவு, துய்த்தல் (Falling Action  & Resolution) என்றும் வகைப்படுத்துவர். வடமொழி நாடகங்களும், உலகப்புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் இவ்வாறு ஐந்து அங்கங்களாகவே பகுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இனி, மனோன்மணீயம் குறித்த சிறு அறிமுகத்தையும்  அதில் இடம்பெற்றுள்ள  சுவையான பகுதிகள் சிலவற்றையும் பார்ப்போம்.

    ஜீவகவழுதி என்னும் சூதுவாதறியாத பாண்டிய மன்னன்; தவசீலரும் ஜீவகனின் நலம் நாடுபவருமான குலகுரு சுந்தர முனிவர் (இவரைத் தன்னுடைய குருவான கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளைப் பிரதிபலிக்கும் பாத்திரமாய்ச் சுந்தரம் பிள்ளை அமைத்துள்ளார்); நற்சிந்தனைகளும், நல்லழகும் வாய்ந்த மன்னனின் ஒரே மகளும், காவியத் தலைவியுமான மனோன்மணி; சேர மன்னனும், மனோன்மணியின் கனவில் தோன்றிய காதலனுமான புருடோத்தமன்; மனோன்மணியின் அறிவார்ந்த தோழி வாணி; வாணியின் தந்தையும் பொருளாசை மிக்கவருமான சகடர்; நயவஞ்சகமும், நாவன்மையும் படைத்த ஜீவகனின் அமைச்சன் குடிலன்; கொடிய குணங்களில் தந்தைக்குச் சற்றும் குறையாத குடிலனின் மகன் பலதேவன்; சுத்தவீரமும், அரசன்பால் பேரன்பும், நகைச்சுவையுணர்வும் நிரம்பிய நாராயணன்; வாணியை மட்டுமல்லாது இயற்கையையும், உயிரினங்களையும் சேர்த்தே நேசிக்கும் நடராசன் எனப் பல்வேறு கதைமாந்தர்களைக் கொண்டு புனையப்பட்ட அழகிய காவியமிது!

    நடராசன் வாயிலாய் இயற்கையின் சிறப்பை, அதிலுள்ள சிற்றுயிர்களும் மற்றையோர்க்குப் பயனாகுந் தன்மையை தெற்றென விளக்கியுள்ளார் நூலாசிரியர். சான்றாக, ’நாகப்பூச்சி’ எனப்படும் நாங்கூழ்ப்புழுவொன்றைக் கண்ணுறும் நடராசன், அதன் மாண்புகளை, உழவர்க்கு அது செய்யும் ஒப்பற்ற தொண்டை விளக்கும் வரிகள் நம் மனங்கவர்வன. 

    அவ்வரிகள்… 

    ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு
    ஓவாப் பாடே உணர்வேன்! உணர்வேன்!
    உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்
    உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ!
    எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை!
    விடுத்தனை யிதற்கா எடுத்தஉன் யாக்கை
    உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய
    விழுமிய சேறாய் வேதித் துருட்டி
    வெளிக்கொணர்ந் தும்புகழ் வேண்டார் போல
    ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்!
    இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல்
    எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும்
    குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப்
    புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை?
    ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள? 

    மனோன்மணீயத்தின் உரையாடற் பகுதிகள் கற்பார் உள்ளத்தைக் களிகொள்ளச் செய்பவை. ’புத்தியே சகல சக்தியும்’ என்று இறுமாப்போடு இயம்பும் குடிலன், ‘பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்’ (இதனையே நாட்டார் வழக்கில் பிடித்தால் பிள்ளையார்; விட்டால் சாணம் என்பர்) என்றொரு பழமொழியைக் கூறி நாட்டுமக்களின் இயல்பை மொழிவதும், நன்மை தீமை என்று நவிலப்படுவதெல்லாம் அறியார் கூறும் வெறுமொழிகளே; அவை
    ’பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப் பூச்சி பூச்சி  என்பது போலாம்’ (பால் என்று அழும் பிள்ளையை அச்சுறுத்தப் பூச்சி பூச்சி என்று கூறுவது) என்று மற்றொரு பழமொழியைக் கூறி நம்மை வியப்பிலாழ்த்துவதும் சுந்தரனாரின் சுந்தரத் தமிழ்செய்யும் சாலவித்தையே!

    அதுபோல், நாஞ்சில் நாட்டின் நன்செய் வளத்தை மனோன்மணீயம் விவரிக்கும் பாங்கு, சங்கநூலான பத்துப்பாட்டின் பல நூற்பகுதிகளின் பிழிவாய்த் தோற்றமளிக்கின்றது.

    இந்நூலில், இடைப்பிறவரலாக இடம்பெறும் ’சிவகாமி சரிதை’ எனுங் கதை படித்துச் சுவைக்கவேண்டிய மற்றோர் இனிய பகுதி. இஃது, ஆங்கிலக் கவிஞர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith) எழுதிய ’The Vicar of Wakefield’ (வேக்ஃபீல்டு பாதிரியார்) எனும் நூலிலுள்ள கிளைக்கதையான ’Edwin and Angelina, A Ballard’ என்பதன் தழுவலாகும். Edwin-ஐச் சிதம்பரனாகவும், Angelina-வைச் சிவகாமியாகவும் மாற்றியுள்ளார் சுந்தரம் பிள்ளை. ஆங்கில நூலின் தழுவலாயினும், தமிழ் மரபையொட்டியே கதை அமைக்கப்பட்டிருக்கின்றது. கதைக்குள் மற்றொரு கதையாய்த் திகழும் இச்சிவகாமி சரிதை, தீம்பலாவில் பெய்த நறுந்தேனாய்த் தித்திக்கின்றது.

    மனோன்மணீயம் காப்பியத்தை சுவைத்தறியாதவர்கூட அதில் இடம்பெற்றுள்ள ’நீராருங் கடலுடுத்த’ எனத்தொடங்கும்  தமிழ்த் தெய்வ வணக்கத்தை நன்கறிவர். அப்பாடலையே தமிழகஅரசு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாய்ப் பாடநூல்களில் அச்சிட்டுள்ளது. ஆயினும், முழுப்பாடலும் தரப்படாமல் பாடலின் அடிகள் அங்குமிங்குமாய்க் கத்தரிக்கப்பட்டு இணைக்கப்பட்ட பாடலையே நாம் பாடநூல்களில் பயில்கின்றோம்.

    ஆதலால் பாடநூலில் இடம்பெறாத, அப்பாடலின் சிறந்த அடிகள் சிலவற்றை ஈண்டுக் காண்போம்.

    ”ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
    சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துவமே”
    என ஆரியமொழிபோல் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து போகாமல், சீரிளமையோடு என்றும் திகழும் தமிழின் தகைமையைப் போற்றுகின்றார் ஆசிரியர்.

    தமிழ்நூல்களின் தொகுப்பான பத்துப்பாட்டைக் கற்று அதனிடத்துப் பற்றுக் கொண்டோர், எள்ளளவும் பொருட்செறிவோ, இலக்கணமோ இலாத பிற (கவிஞர்களின்) கற்பனைகளில் தம் உளத்தைச் செலுத்துவரோ?

    வள்ளுவப் பேராசானின் திருக்குறளைக் கசடறக் கற்றோர், சமநீதியற்றதாய், குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுவாதி சாத்திரங்களை மறந்தும் நினைப்பரோ? என்றெல்லாம் அறிவுசால் வினாக்களை அடுக்கடுக்காய் எழுப்பி தமிழ்நூல்களின் தன்னேரிலாச் சிறப்பையும், அவை வலியுறுத்தும் செவ்விதான அறக்கோட்பாட்டையும் அங்கை நெல்லியென நமக்குணர்த்துகின்றார்.

    பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
    எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே?

    வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
    உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?

    மனோன்மணீயமல்லாது, சுந்தரனார் வேறுபல சிறந்த நூல்களும் படைத்துள்ளார். சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம், (பத்துப்பாட்டு குறித்து எழுதப்பட்ட) தமிழரின் வாழ்க்கைச் சித்திரங்கள் பத்து (The Ten Tamil Idylls), திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் காலஆராய்ச்சி (The Early Sovereigns of Travancore), தமிழிலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் (Some Milestones in the History of Tamil Literature) போன்றவை அவற்றில் அடங்கும்.

    கற்றுத் துறைப்போகிய தமிழ்ச்சான்றோர் அனைவராலும் பாராட்டப்பெறும் ஒப்புற்ற நாடக நூலான மனோன்மணீயத்தை யாத்த சுந்தரனார், தம்மைக் குறித்தும், தம்நூல் குறித்தும் செப்பும் மொழிகள் பின்வருமாறு:

    ”தமிழன்னையே! என்றும் நின்னைப் புகழ்ந்தேத்தும் பெருமைமிகு மக்கள் பற்பலர் உளர். அவர்களுள் நின் பழம்பணியைப் புதுக்கியும், சிறப்புமிக்க நால்வகைக் கவிகளால் புதுப்பணிகள் செய்தும் நிற்பவர் புகழோடு நிற்கட்டும்!

    நின் புதல்வர்களாகிய புலவர்பெருமக்களுள் அடியேன் கடையேன்; அறியாச் சிறியேன். மலையாள நாட்டைக் குடியிருப்பாய் உடையேன். ஆயினும், எனக்கும் நீ தாயென்னும் தன்மையால், என் உள்ளத்தே ஊறிய பேராசையால், என் உழைப்பு ஒன்றையே தகுதியாய்க் கொண்டு இந்நாடக நூலை (மனோன்மணீயம்) இயற்றியுள்ளேன். அன்னாய்! இந்நூல் மிகவும் வெள்ளிது (சிறுமையானது); எனினும் உன்னுடைய கணைக்கால் சிறுவிரலுக்கேற்ற அணியாக (மெட்டி) இதனை ஏற்றுக்கொள்வாயாக!”

    நிற்புகழ்ந்  தேத்துநின்  நெடுந்தகை  மைந்தர்
    பற்பலர்  நின்பெரும்  பழம்பணி  புதுக்கியும்
    பொற்புடை  நாற்கவிப்  புதுப்பணி  குயிற்றியும்
    நிற்பவர்  நிற்க  நீபெறும்  புதல்வரில்
    அடியேன்  கடையேன்  அறியாச்  சிறியேன்
    கொடுமலை  யாளக்  குடியிருப்  புடையேன்
    ஆயினும்  நீயே  தாயெனுந்  தன்மையின்
    மேயபே  ராசையென்  மீக்கொள  ஓர்வழி
    உழைத்தலே  தகுதியென்  றிழைத்தவிந்  நாடகம்
    வெள்ளிய  தெனினும்  விளங்குநின்  கணைக்காற்கு
    ஒள்ளிய  சிறுவிர  லணியாக்
    கொள்மதி  யன்பே  குறியெனக்  குறித்தே. 

    கரும்பனைய நூல்யாத்த பெரும்புலவர் சுந்தரனாரின் பணிவும் சால்பும் ’பெருக்கத்து வேண்டும் பணிதல்’ எனும் குறளமுதை நமக்கு நினைவூட்டுகின்றன.

    தத்துவ அறிஞராகவும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளராகவும், வாடிக்கிடந்த நாடகக் கலையைத் தேடி நீர்வார்த்த நற்புலவராகவும் விளங்கிய சுந்தரனார், கல்வெட்டாராய்ச்சியாளராகவும் முத்திரைபதித்த வித்தகர். இத்துணைத் திறன்களை மொத்தமாய்க் கொண்டிருந்த சுந்தரம் பிள்ளையவர்கள், இத்தரை தனிலே நெடுநாள் வாழ்ந்திருந்தால் பத்தரைப் பசும்பொன்நிகர் காப்பியங்கள் எத்தனையோ படைத்துத் தன்னருந் தமிழன்னையைத் தாங்கொணாப் பூரிப்பில் திளைக்கச் செய்திருப்பார். அந்தோ! நம் நற்றவக்குறைவே அவர் தமது 42-ஆம் அகவையிலேயே அவனிவிட்டு அகன்றது!

    எனினும், மனிதனின் பெருமை அவன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதிலா இருக்கின்றது? இல்லையே…எத்தகைய வாழ்வு வாழ்ந்தான் என்பதில்தானே சிறக்கின்றது. அவ்வகையில், ’தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் வள்ளுவத்திற்கேற்பத் தாம் தோன்றிய துறைகளிலெல்லாம் புகழொடு தோன்றிய சுந்தரனார், தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் தலையாயவர் என்பதில் ஐயமில்லை.

    *** 

    துணைசெய்த தளங்கள்:

    https://ta.wikipedia.org/wiki/பெ._சுந்தரம்_பிள்ளை

    http://siragu.com/?p=17727

    http://www.vallamai.com/?p=45923

     

    Share
  • கனவிலோர் கனவு

    – தேமொழி

     

    கனவிலோர் கனவு

    கவிதை மூலம் – எட்கர் ஆலன் போ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

    நெற்றியிலிடும் முத்தத்தை ஏற்றுக்கொள்
    உன்னைப் பிரியும் இவ்வேளையில்
    நானும் ஒப்புக்கொள்கிறேன்
    நீ சொன்னதில் தவறில்லையென
    எனது வாழ்வே ஒரு கனவுதான்
    என் நம்பிக்கையும் பறந்தோடிவிட்டால்
    ஓரிரவிலோ, ஒரு நாளிலோ
    பார்வையொன்றிலோ, அது இல்லாமலோ
    அதனால் ஏதேனும் குறைவா?
    நாம் பார்த்ததும், பார்ப்பதெல்லாம்
    வெறும் கனவில் ஓர் கனவல்லவா?

    ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகள்
    மோதும் கரையில் நான் நிற்கையில்
    என் கைப்பிடியில் இருக்கும்
    பொன் மணல் துகள்களின்
    அளவோ மிகவும் கொஞ்சம்,
    அதுவும் நான் அழ அழ என்
    விரலிடுக்கின் வழி நழுவுகிறதே
    கடவுளே! என்னால் அவற்றை
    இறுகப் பிடிக்க முடியாதா?
    கடவுளே! இரக்கமற்ற அலையிடமிருந்து
    ஒன்றையேனும் என்னால் காப்பாற்ற இயலாதா?
    நாம் பார்த்ததும் பார்ப்பதெல்லாம்
    வெறும் கனவில் ஓர் கனவுதானா?
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    Edgar-Allan-Poe-230x300

    A Dream Within a Dream

    – Edgar Allan Poe

    Take this kiss upon the brow!
    And, in parting from you now,
    Thus much let me avow—
    You are not wrong, who deem
    That my days have been a dream;
    Yet if hope has flown away
    In a night, or in a day,
    In a vision, or in none,
    Is it therefore the less gone?
    All that we see or seem
    Is but a dream within a dream.

    I stand amid the roar
    Of a surf-tormented shore,
    And I hold within my hand
    Grains of the golden sand—
    How few! yet how they creep
    Through my fingers to the deep,
    While I weep- while I weep!
    O God! can I not grasp
    Them with a tighter clasp?
    O God! can I not save
    One from the pitiless wave?
    Is all that we see or seem
    But a dream within a dream?

     

    Edgar Allan Poe - A Dream Within A Dream

    Share
  • எல்லாமே கணக்குதாங்க….. !

    பவள சங்கரி

    கி.மு. 569ல் கிரேக்கத்தின் சமோஸ் தீவில் பிறந்தவர் பித்தகோரசு  (Pythagoras of Samos). நரம்பிசைக் கருவியான மகர யாழ் இசைப்பதில் வல்லவரான இவர் இசைஞர் மட்டுமல்ல கவிஞரும்கூட. கணிதம், தத்துவஇயல், வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கி.மு. 535 ம் ஆண்டு வாக்கில் சாமோஸ் தீவிலிருந்து எகிப்து சென்ற பித்தகோரசு, அங்கு ஆயகலைகளைக் கற்றார்.

    apg

    2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பித்தகோரசின் நம்பிக்கைகள் மற்றும் உயரிய தத்துவங்கள் இன்றளவிலும் நம் வாழ்க்கைக்கு இயல்புடையதாகவே இருப்பது ஆச்சரியம்தான் இல்லையா…

    உலகில் அனைத்துமே எண்கள்தான். கணிதமே அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் அடிப்படை. வடிவியல் கணிதப் படிப்பின் உயர் வடிவம். கணிதம் மூலமாக இந்த பூவுலகை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

    மூளையில் உறைவதுதான் ஆன்மா. அழிவில்லாத அது ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிருக்கு என மாறி பிறப்பறுத்து தூய்மை
    அடைகிறது. கணிதமும், இசையும் மட்டுமே ஆன்மாவை தூய்மைப்படுத்த வல்லவை.

    இந்த எண்களுக்கும் ஆளுமை, பண்புகள், வலிமை, பலவீனங்கள் போன்ற அனைத்தும் உண்டு என்கிறார்.

    இந்த பிரபஞ்சம், ஆண்-பெண், , வெப்பம்-குளிர்ச்சி, ஈரப்பதம்-வறட்சி, ஒளி-இருள், மென்மையானது-கனமானது, வேகமானது-மெதுவானது
    என எதிர்மறைகளின் இடைச்செயல்பாட்டை (interaction of opposites) பொறுத்தது.

    சிந்திக்கத்தக்கவை அல்லவா.

    Share
  • காற்றில் மிதக்கும் இறகு

    -மெய்யன் நடராஜ்

    உயிரின் கிளையில்
    உட்கார்ந்திருந்த
    எண்ணப்  பறவை தன்னை
    உலுப்பிக்கொண்டு இறக்கைகளை
    உதறியபோது அது நடந்தது

    தாய்ப் பறவையைப் பிரிந்து
    தன்னிச்சையாய்ப் பறக்க எத்தனிக்கும்
    சேய்ப் பறவையின் முனைப்போடு
    தவறுதலாய் உதிர்ந்துகொண்ட
    அந்த இறகு!

    வானத்தின் புது விருந்தாளியாய்
    வரவேற்கப்பட்டுச் சுதந்திரமாய்
    அந்தரத்தில் கட்டுப்பாடுகளற்ற
    முகில்களின் குடும்ப அங்கத்தினராகி
    இருப்பின்றி அலைந்தது

    பசி மறந்து
    பட்டினி தொலைத்து
    நாளையைப் பற்றிய
    கவலைகளை உதிர்த்து                               feather
    ஜனனம் மரணம் பற்றிய
    பயம் உதறிப் பிறவியின்
    பயனடைந்த பயணத்தில்
    சிலாகித்துக் கொண்டது
    சிங்கத்தை வென்ற
    சிறுநரியாய்!

    நாளொன்றில் மட்டுமே
    நாடெங்கும் கொடியேற்றிக்
    கொண்டாட்டங்கள் என்று
    கொண்டாடுவோர் கூட்டத்தினைப்
    பார்ப்பதற்குக் காவலர்களால்
    அனுமதி பெறப்பட்டபின்னே
    அந்த வட்டத்துக்குள்
    சுதந்திரமாகத் திரியக் கூடிய
    எமது சுதந்திர தினத்தைப் போலன்றி
    எல்லைகற்ற திசைகள் மறந்த
    சுதந்திரக் காற்றைச்
    சுவாசித்த சுதந்திரத்தின்
    சுதந்திரமான சுதந்திரத்தின்
    சுகவாசத்தின் வாசனை
    முகர்ந்தபடி கூத்தாடியது
    அந்த இறகு!

    தெளிந்த நீரில்
    முட்டையிட்டு இனவிருத்திச்
    செய்கின்ற ’டெங்கு’ கொசுக்களின்
    கூடாரம் தாங்கிய குடிசையோரச்
    சுகாதாரக் கேடுகள் ஆராயாமல்
    வாங்கும் சம்பளத்துக்குத்
    துரோகம் செய்யும்
    அசமந்தப் போக்குடைய
    அரச அதிகாரியாகவும் இல்லாமல்

    கொள்ளைக் காரர்களுக்கு
    வழிவிட்டுக் கொடுத்துக்
    குடும்பஸ்தர்களிடமும்
    ஏழை வாகன சாரதிகளிடமும்
    கைக்கூலி வாங்கிச்
    சம்பளப் பணத்தைச்
    சேமிப்பில் போடும்
    காவல் துறையாக இல்லாமலும்

    ஆட்சி  பீடத்தில்
    அமர்ந்திருப்போர் புரிகின்ற
    அட்டூழியங்களுக்கு
    ஒத்து ஊதிக்கொண்டு
    பதவியைக் காப்பாற்றிக்
    கொண்டிருக்கும்
    உயர் அதிகாரிகளாக இல்லாமலும்

    ஊர்ப் பணத்தைக்
    கொள்ளை அடித்து
    வெள்ளையாக்கி வெளிநாட்டில்
    சொகுசுவாழ்க்கை அமைத்துக் கொள்ளும்
    ஊழல் நிறைந்த
    அரசியல் வாதியாக இல்லாமலும்

    சமூக அவலங்களைக்
    கண்டும் காணாமல்
    சகிப்பு வாழ்க்கை நடாத்தும்
    சாதாரணப் பொது மக்களாய் இல்லாமலும்

    ஒருவேளைச் சோற்றுக்காய்
    ஊரெங்கும் சுற்றித் திரிந்து
    வெளியே தெரியாமல்
    பட்டினிக் கிடக்கும்
    நடுத்தர வர்க்கமாய் இல்லாமலும்

    கஞ்சா கடத்திக்
    கள்ளச்சாராயம் காய்ச்சித்
    தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை
    உயர்மட்ட அனுமதியோடு
    அந்தரங்கமாய் விற்று
    ஆதாயம் தேடலுக்காய்ச்
    சமூகம் அழிக்கும்
    பாதாள உலகத்தினராய் இல்லாமலும்

    பொதுநலம் என்னும்
    தொலைநோக்கோடு
    ஆரம்பிக்கப்பட்டு முடிவில்
    பணம் காய்க்கும் மரமாக
    மாறிப்போகின்ற
    பள்ளிக்கூடமாகவோ
    மருத்துவமனையாகவோ இல்லாமலும்

    பச்சிளங் குழந்தைகளையும்
    உடற்பசிக்காய் உருக்குலைக்கும்
    கொடுங் காமுகர்களாய் இல்லாமலும்

    விஞ்ஞான வளர்ச்சி என்னும் பேரில்
    அயல் வீட்டானைக்கூட மறந்து
    கணினிக்குள்ளும்
    கைப் பேசிக்குள்ளும்
    தம்மை மறந்து மூழ்கிக் கிடக்கும்
    இன்றைய இளைய
    சமுதாயத்தைப்போல் அல்லாமலும்

    ஒரு சமாதானத் தேவதையின்
    மனதோடு கூத்தாடிக் கூத்தாடிச்
    சிதைவுகளற்ற பிரபஞ்சமொன்றின்
    கதவுகள் திறந்து உள்ளே சென்று
    நிசப்தங்களின்  மிக நேர்த்தியான
    தொழில் நுட்பத்தினால்
    செய்யப்பட்ட அரியணையில்
    அமர்ந்துகொண்டு
    மௌனப் புரட்சியால் ஓர்
    ஏகாந்த யுத்தம் செய்தது!

    அந்த ஏகாந்த யுத்தத்தின் நடுவே
    மலைகள் தகர்ந்து
    கடலில் வீழ்ந்த பேரிரைச்சலாய்
    ஒரு முரட்டு மிருகம்
    குருட்டுத் தனமாய் மோத…

    அமாவாசை இரவொன்றில்
    கருங்குரங்கொன்றை
    ஒளி பாய்ச்சாப்
    புகைப்படக் கருவியினால்
    படம்பிடித்த வெற்றிக் கேடயத்தை
    வாங்கிக் கொண்ட சோகத்தில்
    சுருண்டு வீழ்ந்தது இறகின் பயணம்!

    இனி ஒருநாள்
    விலங்கு போர்த்திய
    மனிதம் அதை எடுத்துக்
    காது  குடைந்து கழிவில் வீசலாம்!

     

     

    Share
  • நெளிவு சுழிவு…..

    சச்சிதானந்தம்

     

    நெளிவு சுழிவு தெரிந்து கொண்டேன், வாழ்க்கையின்

    நெளிவு சுழிவு தெரிந்து கொண்டேன்,

    தெளிவை மனதில் உணர்ந்து விட்டேன், புதுப்

    பொலிவை கண்களில் அடைந்து விட்டேன்,

    கொலுவில் வைத்த பொம்மையைப் போல்,

    குறட்டை விட்டுத் தூங்கியதால்,

    கனவில் கூட தோல்வியையே,

    காட்சியாகக் கண்டு வந்தேன்,

    கடவுள் வந்து இடை இடையே ,

    என்னைத் தட்டி எழுப்பி விட்டான்,

    எழுந்து அவனை அனுப்பிவிட்டு

    மீண்டும் படுத்துத் தூங்கி விட்டேன்!

    மருந்தைப் போல் வாழ்க்கையையே,

    விருப்பமின்றி வாழ்ந்து வந்தேன்,

    மறந்தும் கூட உழைப்பதற்கு,

    முயற்சி செய்ய மறந்து விட்டேன்!

    இருந்த இடத்தில் எல்லாம் வந்து

    சேரும் என்று இருந்து விட்டேன்!

    அப்படி இருந்ததாலே, இருந்ததையும்

    இழந்துவிட்டுத் தவித்து நின்றேன்!

    இழந்த போது இதயத்திற்குள்

    இறைவனைக் கண்டேன்!

    கண்டவுடன் வாழ்க்கையின்,

    நெளிவு சுழிவு தெரிந்து கொண்டேன்!

    தெளிவை மனதில் உணர்ந்து கொண்டேன்! புதுப்

    பொலிவைக் கண்களில் அடைந்து விட்டேன்!

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 24

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    இல்லற வாழ்க்கைக்குச் செல்வம் இன்றியமையாதது. இந்தச்செல்வத்தை ஈட்டுவதற்குப் பற்பல வழிகள் உள்ளன. தம் நிலத்தில் தாமே உழுது பயிர்செய்து தேவையான உணவைச் சமைத்துக்கொள்ளலும், மற்ற தொழில்களால் ஆடை, வீடு போன்ற வற்றை உருவாக்கி, உலகநடையறிந்து ஒப்புரவு செய்து வாழ்தலும் செல்வம் சேர்த்தலின் சமுதாய நடவடிக்கை ஆகும். அவ்வகையில் ஒருவனது உழைப்பினால் பன்மடங்கு விளைச்சல் நிகழுமானால் அதனை உரிமை கருதித் தாமே சேர்த்து வைத்துக் கொள்வதால் தனிமனிதன் செல்வம் அதாவது சொத்து உருவாகின்றது. இது மக்களுக்கிடையே போட்டியை உருவாக்கி செல்வம் சேர்த்தல் என்னும் ஆசையை வளர்த்து விடுகிறது. அதனால் நாட்டில் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு உருவாகின்றது. இதனை நன்கு ஆராய்ந்த திருவள்ளுவர்,

    “இருவே றுலகத் தியற்கை திருவேறு
    தெள்ளியர் ஆதலும் வேறு”(374)

    என்று பாடுகிறார்! உலகநடைமுறைக்கு உதவுவதற்காகவே செல்வம் என்பதை எல்லாரும் உணர்வதில்லை. அறம் செய்வதற்காகவும், அதனால் வரும் இன்பத்தைத் துய்ப்பதற்காகவும், பொருள் ஈட்டவேண்டும் என்பதை அறிந்து கொண்டு ஈட்டிய பொருளை அறச் செயல்களுக்காகவே பயன்படுத்தல் வேண்டும். ஆனால் அறிவுடையாரிடத்தில் வறுமையும், அறிவிலாரிடத்தில் செல்வமும் விதியின் விளைவாகச் சேர்ந்து விடுகின்றன. இந்நிலையில் செல்வர்களைக் கண்டு வறியோர் பொறாமை கொள்கின்றனர். இந்தப் பொறாமை மிகப்பெரிய தீமையாகும்!

    பொறாமையைத் திருவள்ளுவர் அழுக்காறு என்ற சொல்லால் குறிக்கின்றார். அழுக்காறு என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் அயலாருக்கு உண்டாகும் நன்மைகளைக் கண்டு மனம் பொறாதிருத்தல் என்று பொருள் கூறுகிறார். பொறையுடைமைக்கு மறுதலையாகும் இது! இந்த அழுக்காறு ஒருவனின் செல்வத்தை அழித்து, அவனை மீளா நரகில் ஆழ்த்தி விடும், என்கிறார் திருவள்ளுவர்.

    “பிறர் செல்வத்தைப் பார்த்துப் பொறாமைப் பட்டவன் வாழ்ந்ததும் இல்லை; பொறாமை இல்லாத செல்வன் அடைந்த வளர்ச்சி குறைவு பட்டதும் இல்லை”, என்கிறார் வள்ளுவர். ஆகவே ஒருவன் எந்த சிறப்பைப் பெற்றாலும் அடுத்தவன் பெற்ற சிறப்பைக் கண்டு மனமகிழ்ச்சி அடையவேண்டும்! அச்செயல் அவனைப் பற்றிய நல்லெண்ணத்தை வளர்க்கும்! இந்தச் சூழ்நிலையில், அழுக்காறு மிக்கவன் யாதோ ஒரு காரணத்தால் செல்வவளத்துடன் திகழ்வதும், பொறாமையற்ற நல்லவன் யாதோ ஒரு காரணத்தால் வறுமை யில் உழல்வதும் நிகழ்ந்து விடுகின்றன. இப்போதும் நாட்டில் தீயவன் செல்வம் மிக்கவனாகவும், நல்லவன் ஏழையாகவும் இருப்பதைக் காண்கிறோம். இதனைத் திருக்குறள்,

    “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    செவ்வியான் கேடும் நினைக்கப் படும்” (169)

    என்று பாடுகிறது.

    இதற்குக் காரணம் அவரவர் முன்வினைகளே என்று திருக்குறளின் உரையாசிரியர்கள் அனைவரும் கூறுகின்றனர். பரிமேலழகர் இதற்கு ஆதாரமாக பழைய இலக்கிய எடுத்துக் காட்டினையும் கூறுகிறார். கோவலன் வறுமை அடைந்து மதுரை நகர் நோக்கி வருகிறான்; அவனைக்கண்ட புகார் நகரத்து மறையவன் ஒருவன் “நீ இந்தப் பிறவியில் யானறிய அறச் செயல்களை மட்டுமே செய்துள்ளாய்; ஒருவேளை நீ முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனை இப்போது அனுபவிக்கிறாயோ ?”

    “இம்மைச் செய்தன யானறி நல்வினை!
    உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்து இத்
    திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
    விருத்தகோபால “

    என்று கேட்பதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது! ஆகவே பிறர்பொருளைக் கண்டு பொறாமைப் படாதவன் வறுமை அடைந்தால், அதற்கு அவன் செய்த முன்வினை காரணமாக இருக்குமோ என்று சான்றோர் ஆராய்வர் என்பது புலனாகிறது. அத்துடன் பொறாமைப் பட்டுத் தீய எண்ணத்துடன் வாழ்பவன் பெருஞ்செல்வம் பெற்றால் அதுவும் அவன் செய்த முன்வினையின் பயனே என்று சான்றோர்கள் கருதி ஆராய்வர் என்கிறார். ஒருவன் செய்த முன்வினையை எவ்வாறு ஆராய்வது? எதற்கும் முன்வினைதான் காரணமாக இருக்குமோ என்று கருதல் அளவையால்(அனுமானத்தால்) ஐயுறுவது வேறு; ஆராய்ந்து பார்ப்பது வேறு அல்லவா?

    “இவ்வூனெடுத்த
    பின்செய்த தீவினை யாதொன்றுமில்லை பிறப்பதற்கு
    முன்செய்த தீவினையோ இங்கன் வந்து மூண்டதுவே!”

    என்று பட்டினத்தார் பாடியுள்ளார். இவை இரண்டும் அனுமானம் தானே தவிர இந்தச் செயலின் பயனாக இது வந்தது என்று காரண- காரியத் தொடர்பு காட்டி அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாது! ஆகவே இத்திருக்குறளில் “நினைக்கப் படும்” என்ற தொடருக்குப் புதியவகையில் பொருள் கூறலாமே என்று தோன்றுகிறது. ஒருவன் பிறரால் பெருந்துன்பம் அடைந்து, அதனைத் தாங்க இயலாமல் கண்ணீர் விடுவானானால், அந்தக் கண்ணீரே துன்பம் செய்தவனின் எல்லாவளங்களையும் தேய்த்து அழித்துவிடும் என்ற பொருளில் திருவள்ளுவர் ,

    “அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை”(555)

    என்று பாடுகிறார். இப்பாடலில் காரண காரியத் தொடர்பு சரியாக உள்ளது. அதனால் நாம் நன்றாகச் சிந்தித்தபின் எடுக்கும் முடிவு சரியாக அமைகிறது. அதுபோலவே, ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கத்தையும், செவ்வியான் வறுமையையும், காரண காரியத் தொடர்பு படச் சிந்திக்க வேண்டியவர்கள் ஆராய்ந்து, நினைந்து பார்த்தால் இதன் காரணம் புலப்பட்டுவிடும். இதனைச் சான்றோர்களோ, அரசோ சிந்தித்தால், அதாவது “நினைக்க”, இவரது வறுமையும் அவரது ஆக்கமும் உரிய நடவடிக்கையால் மாறும் அதாவது ‘படும்’ என்று பொருத்தமாகவே பொருள்கொள்ளலாம்! ஆகவே ‘நினைக்க’, ‘படும்’ என்ற சொற்களின் ஆழமான புதிய பொருள் நமக்கு மகிழ்ச்சியையே தருகிறது! இவ்வகையில்,

    “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும் “

    என்ற திருக்குறள் உரிய அழுத்தம் பெற்றுப் புதிய விளக்கம் தருகிறது.

    Share
  • தெய்வ தரிசனம்: 07. மாதவன் மகிமை

    ரமணி

    07. மாதவன் மகிமை

    (குறும்பா)

    மாதவனின் பேர்சொல்லும் பேறிதே
    மாதவத்தின் பலனென்றே ஆவதே
    . முற்பிறப்பின் தவமென்றே
    . இப்பிறப்பின் நலமென்றே!
    வேதனைகள் தீர்த்துவைக்கும் பேரிதே. … 1

    சராசரியாம் மனிதனுமே அறியவே
    பராசரராம் பட்டரவர் உரையிலே
    . மாதவனின் பேர்விளக்கம்
    . யாதெனவே வேர்விளக்கம்
    பிரார்த்தனையாம் நாமமெனத் தெரியுமே. … 2

    மாவென்னும் அட்சரத்தின் மௌனமே
    தவென்னும் அட்சரத்தின் தியானமே
    . மோனத்தில் உருவற்ற
    . தியானத்தைத் தருவிக்க
    வவென்னும் அட்சரத்தின் யோகமே. … 3

    [பராசர பட்டரின் விஷ்ணு ஸஹஸ்ரநாம உரை]

    மதுவித்தை சாதனையில் ஆதவனே
    மதுவென்றே சங்கரரின் போதனையே
    . உண்ணாத அமுதாகவே
    . கண்ணாலே நமதாகவே
    அதுவென்னும் பரம்பொருளாம் மாதவனே. … 4

    [ஆதிசங்கரரின் சாந்தோக்ய உபநிடத உரை]

    ஹரிவம்சம் சொல்லுகின்ற பொருளாமே
    பரமாத்ம ஞானத்தின் அருளாமே
    . பேரறிவின் போதனையாய்
    . வேரெனவே மாதவனாம்
    உரையெல்லாம் இப்பொருளில் உருவாமே. … 5

    அஞ்சுபுலன் நம்சித்தம் ஆட்கொள்ளும்
    சஞ்சரிக்கும் மனதையதன் மேற்தள்ளும்
    . வெளியுணர்வில் ஈடுபடும்
    . நளிவுள்ளம் பாடுபடும்
    தஞ்சமெனப் பலநிலைகள் மேற்கொள்ளும். … 6

    [நளிவுள்ளம் = செருக்கினைக் கொள்ளும் உள்ளம்]

    புறவுணர்வைக் கட்டுதற்கு மௌனமாம்
    அறிவதனில் அமிழ்ந்திருக்க தியானமாம்
    . நூலறிவால் ஏற்பட்ட
    . வாலறிவின் பாற்பட்டு
    பொறியற்று நிலைநிறுத்த யோகமாம். … 7

    [வாலறிவு = பேரறிவு, உண்மை]

    மாவென்று திருமகளின் பேரதுவே
    மாவென்னும் முதலெழுத்தின் வேரதுவே
    . செல்வமெலாம் திரமாக
    . செல்வதெலாம் அறமாக
    வாவென்றால் வரமருளும் சீராமே. … 8

    –ரமணி, 19/11/2015, கலி.03/08/5116

    உதவி:
    மாதவன் என்ற சொற்பொருள்
    https://ta.wikipedia.org/wiki/மாதவன்_என்ற_சொற்பொருள்
    purAnic encyclopedia: vETTam maNi

    *****

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (174)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள்!

    ஆண்டுதோறும் இல்லங்களில் இனிய ஒளியை ஏற்றி துன்பங்களை விரட்டி மகிழ்ந்திருக்கும் அந்தத் தீபத் திருநாள் 2015ம் ஆண்டிலும் வந்து ஓடி மறைந்து விட்டது.

    பின்புல நாடுகளில் நாம் விட்டு வந்த பிள்ளைப்பிராயத்து நினைவுகளில் இந்தத் தீபாவளி வகிக்கும் பங்கு மகத்தானது. தீபாவளியை எதிர் நோக்கிக் காத்திருந்த காலங்களும் எம் வாழ்வில் வந்து போயிருக்கின்றன. ஆனால், நாம் புலம்பெயர்ந்த பின்பு பல்வேறு சமூகங்கள் வாழும் ஒரு சூழலில், மாணவனாகக் கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் பகுதிநேர பணிபுரிந்து வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் தீபாவளி வந்து போய்க்கொண்டிருக்கும். ஆனால் நமது வாழ்வு தன் பாணியில் ஓடிக் கொண்டிருக்கும்.

    அதன் பின்னால் திருமண பந்தத்தில் புகுந்து, குழந்தை என்று வந்த பின்பு தீபாவளி என்றால் முடிந்த வரைக்கும் ஆலயம் சென்று வருவதே தீபாவளிப் பண்டிகையாக இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் இங்கு வாழும் பெரும்பான்மையான ஆசிய மக்களில், வட இந்திய கலாச்சார சூழலில் இருந்து வந்தவர்கள் தீபாவளியை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டுமின்றி புலம் பெயர்ந்து வாழும் தமிழர் சமுதாய மக்களும் பெருமளவில் வாழ்ந்து வருவதால் அவர்களும் ஆங்காங்கே தமது சமூகப் பின்னணிகளில் தம்மாலான வகையில் இப்பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள்.

    சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னால் எனது நண்பர் ஒருவர் ஈழத்தில் வடபகுதியில் அனாதைச் சிறுவர்களின் பராமரிப்புக்காக நிறுவி வரும் ஒரு விடுதிக்கு நிதி சேர்க்கும் முகமாக நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு நானும் சிறிய பங்களிப்புச் செய்திருந்தேன். அந்நிகழ்ச்சிக்காக தமிழக சின்னத்திரைகளில் பிரபல்யமானவர்களாகிய தம்பிகள் தேவகோட்டை இராமநாதன் , ரோபோ ஷங்கர் , பாலாஜி வடிவேலு ஆகியோரின் பங்களிப்புக்கான பணிகளில் எனது பங்கு மிகவும் சிறியதே !

    அப்போது அறிமுகமான தம்பிகளில் தம்பி தேவகோட்டை இராமநாதனும் ஒருவர். குறிப்பாக இவர் எனது மானசீகக் குரு கவியரசர் பிறந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதாலும், எனது நல்ல நண்பர்களாகிய அமரர் தமிழ்வாணனின் மைந்தர்கள் லேனா, ரவி தமிழ்வாணன், கவியரசரின் மைந்தன் காந்தி கண்ணதாசன் ஆகியோரின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், செட்டிநாட்டின் பால் எனக்கு உள்ள ஈர்ப்பின் காரணத்தினாலும் அவருடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து தமிழகத்தின் நகரத்தார் சமூகம் இலண்டனில் இயக்கிவரும் “இலண்டன் நகரத்தார் சங்க” நிகழ்வொன்றிற்காக இலண்டன் வந்திருந்த தேவகோட்டை இராமநாதன் அவர்கள் என்னை எனது இல்லத்தில் சந்திக்க வந்திருந்தார். அவரை அழைத்து வந்தவர்கள் தம்பிகள் அண்ணாமலை, செந்தில் ஆகிய இருவருமேயாவர். அதனைத் தொடர்ந்து அவ்விரு தம்பிகளுடனான எனது நட்பு தொடர்ந்தது.

    தமது அமைப்பில் நடைபெறும் நிகழ்வுகளை எப்போதும் அறியத் தருவார்கள். அப்படித்தான் இம்முறை நவம்பர் மாதம் 14ம் திகதி தமது அமைப்பு வைக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்கள். அவ்வழைப்பின் பிரகாரம் நானும், எனது மனைவியும், நண்பர் ஒருவரும் கடந்த சனிக்கிழமை நாம் வாழும் இடத்திலிருந்து சுமார் 70 மைல்கள் தூரத்தில் இருக்கும் வெல்வின் கார்டன் சிட்டி (Welwyn Garden City) எனும் இடத்தில் உள்ள ஒரு ஹாலில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம்.

    செட்டி நாட்டில் நகரத்தார் சமூகத்தினரிடையே நான் கண்டு பிரமிக்கும் பண்புகள் பல. அவற்றில் மிகவும் முக்கியமானது அவர்களின் விருந்தோம்பல் பண்பு என்று கூறினால் அது மிகையாகாது. நான் கலந்து பழகும் கவியரசரின் புதல்வர் காந்தியிடமும், நண்பர்கள் லேனா, ரவி தமிழ்வாணன், வானதி திருநாவுக்கரசு ஐயா ஆகியோருடன் நான் பழகும் போது அவர்கள் என்மீது காட்டும் அதீத அன்பின் மூலம் இது மேலும் ஊர்ஜிதமாகிறது.

    அந்த ஹாலில் நான் நுழைந்ததுமே நான் அங்கு எதிர்கொண்டது அவர்கள் ஒவ்வொருவரினதும் வரவேற்புபசாரமே. அங்கு நான் அறிந்திருந்தவர்கள் மிகவும் சொற்பமே! ஆயினும் அவர்கள் அனைவரும் அறியாத ஒருவருக்குக் கொடுத்த உபசாரம் அவர்களின் கலாச்சார பின்னணியின் வலிமையையும், அவர்களின் மண்ணின் பெருமையையும் பறைசாற்றி நின்றது. ஒரு விழா கலாரசிகர்களின் மனதை நிறைப்பதற்கு முன்னால் அவர்களின் வயிறு நிறைவது முக்கியம் எனும் நிலைப்பாட்டில் விழா நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னால் அனைவருக்கும் அற்புதமான அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. செட்டிநாட்டு அருமையான ருசிகர உணவு அனைவரின் பசியையும் ஆற்றியதன் பின்னால் அனைவரும் விழா மண்டபத்தை நிறைத்தனர்.

    101

    102

    103

    இளம் சிறார்களின் கலை நிகழ்ச்சியோடு ஆரம்பமாகியது அன்றைய நிகழ்வுகள். பரதநாட்டியம், வயலின், பியானோ என இலண்டன் நகரத்தார் சங்க உறுப்பினர்களின் இளம் சிறார்கள் தமது திறமையைக் காட்டி அனைவரையும் மகிழ்வூட்டினார்கள். அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சி அன்று அங்கே நடைபெற்ற நகைச்சுவையுணர்வோடு சிந்திக்கத் தூண்டிய பட்டிமன்றமாகும். இப்பட்டி மன்றத்திலே நடுவர்களாகப் பங்கேற்க தமிழ்சின்னத்திரைகளில் கோலோச்சும் அற்புத, அபார பேச்சாளர்களான திரு ராஜா அவர்களும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களும் வந்திருந்தார்கள்.

    பட்டிமன்றத்தின் தலைப்பு “புலம்பெயர் வாழ்வினில் அதிகமான பளு ஆண்களுக்கா? அன்றி பெண்களுக்கா? “ என்பதுவே. பெண்களுக்கே அதிகமான பளு என வாதாட நான்கு இல்லத்தரசிகளும் (இவர்களில் இருவர் வேலைக்குப் போவோர்) , ஆண்களுக்கே அதிகமான பளு என வாதாட நான்கு இல்லத்தலைவர்களும் பங்கு பற்றினார்கள். பட்டிமன்ற வாதத்தில் ஊறித் திளைத்த இருவர் முன்னால் அங்கு பங்கு பெற்ற பலர் முதன்முறையாகப் பட்டிமன்ற வாதத்தில் ஈடுபடுவது எப்படி எ னும் எண்ணம் நெஞ்சில் நின்றாடியது. அனைவரின் எதிர்பார்ப்பையும், நடுவர்கள் உட்பட ஆனந்த அதிர்ச்சி ஆக்கி மகிழ்வித்தனர்.

    ஆம், பங்கு பெற்றுப் பேசிய அனைவரும் பட்டிமன்றத்தில் ஊறித்திளைத்தவர்கள் போன்று அழகாக, எளிமையாக உள்ளத்து உணர்வுகளோடு, நகைச்சுவை கலந்து பேசி நடுவர்களையே அசத்தி விட்டார்கள். இதை நடுவர்களான நண்பர் திரு. ராஜாவும், திருமதி பாரதி பாஸ்கரும் அழகாகப் பாராட்டி உறுதி செய்தமை இங்குக் குறிப்பிடத்தக்கது. திரு. ராஜாவும், திருமதி பாரதி பாஸ்கரும் எதற்காக அவர்களுக்கு இத்தனை பெயரும் புகழும் என்பதை தமது அற்புதமான நகைச்சுவை கலந்த பேச்சுக்களினால் நிரூபித்து மண்டபத்தை கரகோஷத்தினாலும், சிரிப்பொலியினாலும் அதிர வைத்தார்கள்.

    நவம்பர் 14ம் திகதி சிறுவர்கள் தினம் என்பதால் அங்கு வந்திருந்த சிறுவர்களை மகிழ்விப்பதற்காக ஒரு சிறுவரை மகிழ்விக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தமை அவர்களின் திட்டமிடும் திறமைக்குச் சான்றாகிறது. கலைநிகழ்ச்சிகள் முடிவுற்றதும் இரவு 7 மணிக்கு மாலைநேர பலகாரங்களோடு காப்பி, தேநீர், குளிர்பானம் ஆகியன பரிமாறி மீண்டும் அனைவரையும் பசியாற்றினார்கள் நகரத்தார் சங்கத்தினர். அதைத்தொடர்ந்து விழாவின் நிறைவாகத் தீபாவளிக்கே உரித்தான வாணவேடிக்கை நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்

    இந்நகரத்தார் சங்கத்தின் ஆரம்பக்கால ஸ்தாபகர்களில் ஒருவரான அண்ணன் தியாகராஜன் அவர்களுடனான கலந்துரையாடல் நெஞ்சுக்கு நிறைவையளித்தது. உலகெங்கும் வாழும் தமிழர்களில் இந்நகரத்தார் சமூகம் தாம் வாழுமிடங்களில் கோவில் நிறுவுவதோடு தமது பாரம்பரிய கலாச்சாரப் பின்னணியைப் பாதுகாத்து வருவது தமிழன்னைக்கு சிறப்பளிக்கும் செய்கையாகும்.

    தமிழையும், சைவத்தையும் தமது இரு கண்களாகப் போற்றும் இந்நகரத்தாரின் சேவை ஒற்றுமையுணர்வோடு மேன்மேலும் ஓங்கி வளர வாழ்த்தியதோடு ஒரு அற்புத நிகழ்வைக் கண்டுகளித்து நகரத்தார் சங்கத்தினரின் விருந்தோம்பலில் மூழ்கித் திளைக்க சந்தர்ப்பம் அளித்த தம்பிகள் அண்ணாமலை, செந்தில் ஆகியோரை வாழ்த்தி, நன்றி கூறி மனநிறைவோடு இல்லம் திரும்பினோம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 32

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    ஏகாந்த வாழ்க்கை
    _____________________

    “நேற்று நமது ஆத்மாவின் ஆலயங்களை நாமிடித்து வீழ்த்தி அவற்றின் சிதைவுகளில் நமது முன்னோருக்குச் சமாதி கட்டினோம். ஆனால் இன்று நமது ஆத்மாக்கள் புனிதப் பலிப்பீடமாய்க் கடந்த காலப் பிசாசுகள் நெருங்காதபடியும் மரித்தோர் எலும்புகள் தொட முடியாதபடியும் மாறிவிட்டன.”
    கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
    _____________________

    ஏகாந்த வாழ்க்கை
    _____________________

    என்னரும் சகோதரனே ! நீ
    உன் பொன் குன்றின்
    மீதமர்ந்து
    உல்லாச மாய்ச்
    செல்வத்தை அனுபவித்து
    களிப்புற்றதை நான்
    கண்டிருக்கிறேன் !
    பேரளவு சொத்துக்களின்
    சேமிப்பில்
    பெருமிதம் கொண்டு, நீ
    சேர்த்த ஒவ்வொரு
    கைப்பிடித் தங்கக் கட்டியும்
    பொதுநபர் சிந்தனைக்கும்,
    இச்சை களுக்கும்
    புலப்படாத
    ஓர் இணைப் பென்று
    பூரிக்கிறாய் !
    _____________________

    என் ஞானக் கண்ணில்
    உன்னைத் தெரியுது :
    போர்ப் படை
    நடத்திச் செல்லும் நீ ஓர்
    போர் தொடுப் பாளி !
    எதிரிகளின் கோட்டை களை
    எல்லாம்
    தகர்த்து வீழ்த்துவோன் !
    மறுமுறை
    நோக்கிய போது
    பொன்கட்டிப் பேழைகளை
    வீணாக்கி வந்தது ஓர்
    ஏகாந்த நெஞ்சு !
    தாகத்தில் தவித்தது ஓர்
    கூண்டுப் பறவை
    தண்ணீர்க் கிண்ணம்
    காலி யாகி !
    _____________________

    Share