அம்மா…..
க.பாலசுப்பிரமணியன்
“சார், நான் ரெடி” டிரைவர் சேகர் வாசலிலிருந்து குரல் கொடுத்தான்.
“இதோ வந்துட்டேன். என்னோட பெட்டி தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்து வண்டியில் வை.. இரண்டு நிமிடத்தில் வந்துடுவேன்..” தன்னுடைய கழுத்தில் தொங்கும் டையை சரி செய்துகொண்டு கண்ணாடி முன் நின்று ஒரு முறை பார்த்துக்கொண்டார். விஸ்வம்.
“சாரு .. நான் கிளம்பிட்டேன். நேரம் ஆச்சு. பத்து மணிக்கு மீட்டிங். நேரத்துக்கு போகணும். இப்போல்லாம் டிராபிக் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கு. அதுவும் அந்த டோல் கேட்தாண்டவே பத்து நிமிடம் ஆகுது. “
” இதோ.. லஞ்ச் பாக்ஸ் ரெடி” என்று சொல்லிக்கொண்டே அவர் மனைவி சாரு சமையல் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
அவருடைய பெயர் விஸ்வநாதன். அனால் எல்லாரும் சுருக்கமாக “விஸ்வம்” என்று அழைப்பதால் அவர் தன்னுடை கையெழுத்தை விஸ்வம் என்றே போடத்தொடங்கினார் அவருடைய ஹோண்டா சிட்டி கார் நன்றாகத் துடைக்கப்பட்டு மின்னிக்கொண்டிருந்தது.
விஸ்வம் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் அவர் காதில் அந்தக் குரல் கேட்டது. “சேகர். என்னப்பா பூனை குரல் கேட்குது.?. கொஞ்சம் சுத்திப் பாரு. வண்டிக்கு அடியிலே பூனை ஏதாவது இருக்குதான்னு..”
புறப்படும் நேரத்தில் பூனையின் குரலா? இன்னிக்கு டெண்டர் மீட்டிங் .. இது என்ன புறப்படும் போது பூனையின் குரல்? மனம் கொஞ்சம் உறுத்தியது..
கீழே குனிந்து வண்டியை ஒரு முறை சுற்றிப்பார்த்த பின் டிரைவர் சேகர் சொன்னார் ” சார். இங்கே ஒண்ணும் இல்லே. பக்கத்திலே எங்கேயாவது இருக்கலாம். “
“இல்லே. சேகர். பின்னாலே தோட்டத்திலே பூனை ஒண்ணு நாலைந்து குட்டி போட்டிருந்தது. ஒரு வாரம் ஆயிடுத்து..அந்தக் குட்டியெல்லாம் இங்கே தான் விளையாடிக் கொண்டிருக்கும். எங்கயாவது மாட்டிக்கப் போகுது.. இன்னொரு தடவை சரியாகப் பாரு..”
மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு சேகர் சொன்னான் ” பார்த்துட்டேன் சார்., இங்கே இல்லை. “
வண்டி கிளம்பியது..அவருடைய ஆபீஸ் கிட்டத்தட்ட பதினைந்து கிலோ மீட்டர். .. ஒரு ஆறு கிலோ மீட்டர் போன பின் மீண்டும் அந்த பூனையின் மெல்லிய குரல்.. அதுவும் ஒரு பயம் கலந்த குரல்..
“சேகர்.. கேட்டியா.. மறுபடியும் பூனையின் குரல்.”
சேகர் சிரித்துக் கொண்டே.. “சார்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்…” வண்டி நகர்ந்தது.
விஸ்வத்தின் மனம் அந்த பைல் உள்ளே இருக்கும் விஷயங்களில் ஈடு படவில்லை…பூனையின் குரல் ஏதோ “அம்மா… அம்மா.. ” என்று அழைப்பது போல்.
காலையில் ஆபீஸ் சென்றடைந்த விஸ்வம் மனம் வழக்கம் போல் இல்லை. அவருடைய உதவியாளர் தன் சக ஊழியரிடம் கூறினார். ” பாஸ் இன்னிக்கு மூட்ல இல்லை.. உள்ளே ஜாக்கிரதையாகப் போ. “
வழக்கமாக ஆறு மணிக்கு மேலும் ஆபீஸ் வேலையில் ஈடு படும் விஸ்வம் இன்று நாலு மணிக்கே கிளம்பி விட்டார். தன்னுடைய உதவியாளரிடம் ” இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு
தன்னுடைய அறையிலிருந்து கிளம்பி வெளியே கார் பார்க்கிங் நோக்கி வந்தார். சீக்கிரமே கிளம்பி விட்ட தன் முதலாளியைப் பார்த்த சேகருக்கு ஆச்சரியமாக இருந்தது.
“சேகர். வண்டியை நல்லா பார்த்துட்டயா ? ” சேகருக்குப் புரிந்தது. அவர் மனம் அந்த பூனையின் குரலைச் சுற்றியே இருக்கிறது என்று.
“சேகர்.. நல்லா கேளு.. இப்பவும் அந்த பூனையின் குரல் மெல்லிசா…கொஞ்சம் கீழே உட்கார்ந்து செக் பண்ணு. “
குனிந்து பின் பக்கச் சக்கரம் பக்கத்தில் உட்கார்ந்த சேகர் ” ஆமாம் சார்.. இங்கே பூனையின் குரல் கேட்குது..” தன்னுடை கையை பின் பக்க டயர் மேல் ஒரு தடவை தடவிப் பார்த்தான். அந்த குரலின் வேகம் அதிகரித்தது.
“சேகர். நீ வண்டியை கவனமாக எடு “
வண்டி வீடு நோக்கிக் கிளம்பியது.. பாதி தூரத்தில் அந்தப் பூனையின் வேதனையும் பயமும் கலந்த குரல் வேகம் அதிகரித்தது…
“சேகர்…வண்டியை பக்கத்திலே எதாவது மெக்கானிக் கடைக்கு எடுத்திண்டு போய் செக் பண்ணு…”
வண்டி அருகிலுள்ள கடைக்குச் சென்றது. அங்கே பின் பக்க சக்கரத்தைக் கழட்டிப் பார்த்த போது அங்கே உள் பாகத்தில் உள்ள ஒரு ரப்பர் மறைவுக்கு மேல் ஒரு சிறிய பூனைக் குட்டி அமர்ந்திருந்தது..
“சனியனே!.. நீ இங்கேயா இருக்கே ” அந்தப் பூனையின் கழுத்தைப் பிடித்துத் தூக்கிய மெக்கானிக் தன் வழக்கமான மொழியிலே அதைத் திட்டினான்.
“நல்ல காலம். அது அடி பட்டு சாகலே. ” விஸ்வத்தின் மனம் குளிர்ந்தது.
அந்தப் பூனைக்குட்டியை தன் கையில் வாங்கிய டிரைவர் சேகர்..”சார். ஒரு ரெண்டு நிமிஷம் டைம் கொடுங்க ..இதை அந்தப் பார்க்கில் கொண்டு விட்டுட்டு வந்துடறேன். “
” அப்போ.. அந்த அம்மா பூனை தேடாதா?” இது விஸ்வம்.
“அது தலைவிதி சார்.. அதுக்கெல்லாம் நம்ம எப்படி சார் கவலைப் படறது?” சேகர் பதிலளித்தான்.
ஒரு நிமிடம் யோசித்த விஸ்வம் :” சேகர். அந்தப் பூனைக்குட்டியை இங்கே குடு . வாங்கி அதை தன்னுடன் பின் சீட்டில் வைத்துக் கொண்ட விஸ்வம்.. ” நீ எவ்வளவு பணம் கொடுக்கணுமோ அதை கொடுத்துட்டு வண்டியை எடு “
வண்டி நகர்ந்தது… விஸ்வத்தின் நினைவும் தான்..
மதுரை அவர் பிறந்து வளர்ந்த ஊர். அழகான சிறிய வீடு. தந்தை பக்கத்து தாசில்தார் ஆபீசில் வேலை பார்த்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள். இவர் தான் கடைக்குட்டி. வீட்டில் செல்லம்!
அன்று வைகையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா.. சித்திரை பௌர்ணமி …லட்சக் கணக்கில் மக்கள் கூட்டம்… குடும்பத்துடன் விழாவிற்கு வந்த இடத்தில் விஸ்வம் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து விட்டார். அப்போது அவருக்கு ஐந்து வயது.
“அம்மா…அம்மா ” என்று அழுது கொண்டே அங்கே அலைந்தது அவருக்குத்தான் தெரியும். அவர் அழுகையைப் பார்த்த பலரும் “பாவம். அம்மாவை விட்டுப் பிரிந்திடுத்து போல இருக்கிறது. ” என்று சொல்லிக்கொண்டு மேலே போனார்கள். அவர்களைப் பார்த்த விஸ்வத்திர்க்கு கோபமாக வந்தது..
எப்படியோ போலீஸ் உதவியோடு அன்று மாலை தன் அம்மாவுடன் சேரும் வரை அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்
வண்டி வீட்டு வாசலில் நின்றது. மெதுவாக அந்தப் பூனைக்குட்டியைத் தூக்கிக்கொண்டு விஸ்வம் நேராக வீட்டின் பின்புறத் தோட்டத்தை நோக்கிச் சென்றார்.. அங்கே அந்த தாய் பூனை தன்னுடைய மற்ற குட்டிகளோடு அமர்ந்திருந்தது.
விஸ்வம் அந்தப் பூனைக்குட்டியை மெதுவாக கீழே இறக்கினார். அந்தத் தாய் பூனை வேகமாக ஓடி வந்து தன்னுடைய நாக்கால் குட்டியை நக்கியது. குட்டியின் முகத்தில் இருந்து ஆனந்தம் கண்ட விஸ்வத்திற்கு அன்று மதுரையில் தன்னுடைய தாயை தான் இறுக்கிக் கட்டிகொண்டது நினைவில் வந்தது. கண்கள் பனித்தன.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx