ரமணி

07. மாதவன் மகிமை

(குறும்பா)

மாதவனின் பேர்சொல்லும் பேறிதே
மாதவத்தின் பலனென்றே ஆவதே
. முற்பிறப்பின் தவமென்றே
. இப்பிறப்பின் நலமென்றே!
வேதனைகள் தீர்த்துவைக்கும் பேரிதே. … 1

சராசரியாம் மனிதனுமே அறியவே
பராசரராம் பட்டரவர் உரையிலே
. மாதவனின் பேர்விளக்கம்
. யாதெனவே வேர்விளக்கம்
பிரார்த்தனையாம் நாமமெனத் தெரியுமே. … 2

மாவென்னும் அட்சரத்தின் மௌனமே
தவென்னும் அட்சரத்தின் தியானமே
. மோனத்தில் உருவற்ற
. தியானத்தைத் தருவிக்க
வவென்னும் அட்சரத்தின் யோகமே. … 3

[பராசர பட்டரின் விஷ்ணு ஸஹஸ்ரநாம உரை]

மதுவித்தை சாதனையில் ஆதவனே
மதுவென்றே சங்கரரின் போதனையே
. உண்ணாத அமுதாகவே
. கண்ணாலே நமதாகவே
அதுவென்னும் பரம்பொருளாம் மாதவனே. … 4

[ஆதிசங்கரரின் சாந்தோக்ய உபநிடத உரை]

ஹரிவம்சம் சொல்லுகின்ற பொருளாமே
பரமாத்ம ஞானத்தின் அருளாமே
. பேரறிவின் போதனையாய்
. வேரெனவே மாதவனாம்
உரையெல்லாம் இப்பொருளில் உருவாமே. … 5

அஞ்சுபுலன் நம்சித்தம் ஆட்கொள்ளும்
சஞ்சரிக்கும் மனதையதன் மேற்தள்ளும்
. வெளியுணர்வில் ஈடுபடும்
. நளிவுள்ளம் பாடுபடும்
தஞ்சமெனப் பலநிலைகள் மேற்கொள்ளும். … 6

[நளிவுள்ளம் = செருக்கினைக் கொள்ளும் உள்ளம்]

புறவுணர்வைக் கட்டுதற்கு மௌனமாம்
அறிவதனில் அமிழ்ந்திருக்க தியானமாம்
. நூலறிவால் ஏற்பட்ட
. வாலறிவின் பாற்பட்டு
பொறியற்று நிலைநிறுத்த யோகமாம். … 7

[வாலறிவு = பேரறிவு, உண்மை]

மாவென்று திருமகளின் பேரதுவே
மாவென்னும் முதலெழுத்தின் வேரதுவே
. செல்வமெலாம் திரமாக
. செல்வதெலாம் அறமாக
வாவென்றால் வரமருளும் சீராமே. … 8

–ரமணி, 19/11/2015, கலி.03/08/5116

உதவி:
மாதவன் என்ற சொற்பொருள்
https://ta.wikipedia.org/wiki/மாதவன்_என்ற_சொற்பொருள்
purAnic encyclopedia: vETTam maNi

*****

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *