புலவர் இரா. இராமமூர்த்தி.

இல்லற வாழ்க்கைக்குச் செல்வம் இன்றியமையாதது. இந்தச்செல்வத்தை ஈட்டுவதற்குப் பற்பல வழிகள் உள்ளன. தம் நிலத்தில் தாமே உழுது பயிர்செய்து தேவையான உணவைச் சமைத்துக்கொள்ளலும், மற்ற தொழில்களால் ஆடை, வீடு போன்ற வற்றை உருவாக்கி, உலகநடையறிந்து ஒப்புரவு செய்து வாழ்தலும் செல்வம் சேர்த்தலின் சமுதாய நடவடிக்கை ஆகும். அவ்வகையில் ஒருவனது உழைப்பினால் பன்மடங்கு விளைச்சல் நிகழுமானால் அதனை உரிமை கருதித் தாமே சேர்த்து வைத்துக் கொள்வதால் தனிமனிதன் செல்வம் அதாவது சொத்து உருவாகின்றது. இது மக்களுக்கிடையே போட்டியை உருவாக்கி செல்வம் சேர்த்தல் என்னும் ஆசையை வளர்த்து விடுகிறது. அதனால் நாட்டில் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு உருவாகின்றது. இதனை நன்கு ஆராய்ந்த திருவள்ளுவர்,

“இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு”(374)

என்று பாடுகிறார்! உலகநடைமுறைக்கு உதவுவதற்காகவே செல்வம் என்பதை எல்லாரும் உணர்வதில்லை. அறம் செய்வதற்காகவும், அதனால் வரும் இன்பத்தைத் துய்ப்பதற்காகவும், பொருள் ஈட்டவேண்டும் என்பதை அறிந்து கொண்டு ஈட்டிய பொருளை அறச் செயல்களுக்காகவே பயன்படுத்தல் வேண்டும். ஆனால் அறிவுடையாரிடத்தில் வறுமையும், அறிவிலாரிடத்தில் செல்வமும் விதியின் விளைவாகச் சேர்ந்து விடுகின்றன. இந்நிலையில் செல்வர்களைக் கண்டு வறியோர் பொறாமை கொள்கின்றனர். இந்தப் பொறாமை மிகப்பெரிய தீமையாகும்!

பொறாமையைத் திருவள்ளுவர் அழுக்காறு என்ற சொல்லால் குறிக்கின்றார். அழுக்காறு என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் அயலாருக்கு உண்டாகும் நன்மைகளைக் கண்டு மனம் பொறாதிருத்தல் என்று பொருள் கூறுகிறார். பொறையுடைமைக்கு மறுதலையாகும் இது! இந்த அழுக்காறு ஒருவனின் செல்வத்தை அழித்து, அவனை மீளா நரகில் ஆழ்த்தி விடும், என்கிறார் திருவள்ளுவர்.

“பிறர் செல்வத்தைப் பார்த்துப் பொறாமைப் பட்டவன் வாழ்ந்ததும் இல்லை; பொறாமை இல்லாத செல்வன் அடைந்த வளர்ச்சி குறைவு பட்டதும் இல்லை”, என்கிறார் வள்ளுவர். ஆகவே ஒருவன் எந்த சிறப்பைப் பெற்றாலும் அடுத்தவன் பெற்ற சிறப்பைக் கண்டு மனமகிழ்ச்சி அடையவேண்டும்! அச்செயல் அவனைப் பற்றிய நல்லெண்ணத்தை வளர்க்கும்! இந்தச் சூழ்நிலையில், அழுக்காறு மிக்கவன் யாதோ ஒரு காரணத்தால் செல்வவளத்துடன் திகழ்வதும், பொறாமையற்ற நல்லவன் யாதோ ஒரு காரணத்தால் வறுமை யில் உழல்வதும் நிகழ்ந்து விடுகின்றன. இப்போதும் நாட்டில் தீயவன் செல்வம் மிக்கவனாகவும், நல்லவன் ஏழையாகவும் இருப்பதைக் காண்கிறோம். இதனைத் திருக்குறள்,

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
செவ்வியான் கேடும் நினைக்கப் படும்” (169)

என்று பாடுகிறது.

இதற்குக் காரணம் அவரவர் முன்வினைகளே என்று திருக்குறளின் உரையாசிரியர்கள் அனைவரும் கூறுகின்றனர். பரிமேலழகர் இதற்கு ஆதாரமாக பழைய இலக்கிய எடுத்துக் காட்டினையும் கூறுகிறார். கோவலன் வறுமை அடைந்து மதுரை நகர் நோக்கி வருகிறான்; அவனைக்கண்ட புகார் நகரத்து மறையவன் ஒருவன் “நீ இந்தப் பிறவியில் யானறிய அறச் செயல்களை மட்டுமே செய்துள்ளாய்; ஒருவேளை நீ முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனை இப்போது அனுபவிக்கிறாயோ ?”

“இம்மைச் செய்தன யானறி நல்வினை!
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்து இத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோபால “

என்று கேட்பதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது! ஆகவே பிறர்பொருளைக் கண்டு பொறாமைப் படாதவன் வறுமை அடைந்தால், அதற்கு அவன் செய்த முன்வினை காரணமாக இருக்குமோ என்று சான்றோர் ஆராய்வர் என்பது புலனாகிறது. அத்துடன் பொறாமைப் பட்டுத் தீய எண்ணத்துடன் வாழ்பவன் பெருஞ்செல்வம் பெற்றால் அதுவும் அவன் செய்த முன்வினையின் பயனே என்று சான்றோர்கள் கருதி ஆராய்வர் என்கிறார். ஒருவன் செய்த முன்வினையை எவ்வாறு ஆராய்வது? எதற்கும் முன்வினைதான் காரணமாக இருக்குமோ என்று கருதல் அளவையால்(அனுமானத்தால்) ஐயுறுவது வேறு; ஆராய்ந்து பார்ப்பது வேறு அல்லவா?

“இவ்வூனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்றுமில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினையோ இங்கன் வந்து மூண்டதுவே!”

என்று பட்டினத்தார் பாடியுள்ளார். இவை இரண்டும் அனுமானம் தானே தவிர இந்தச் செயலின் பயனாக இது வந்தது என்று காரண- காரியத் தொடர்பு காட்டி அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாது! ஆகவே இத்திருக்குறளில் “நினைக்கப் படும்” என்ற தொடருக்குப் புதியவகையில் பொருள் கூறலாமே என்று தோன்றுகிறது. ஒருவன் பிறரால் பெருந்துன்பம் அடைந்து, அதனைத் தாங்க இயலாமல் கண்ணீர் விடுவானானால், அந்தக் கண்ணீரே துன்பம் செய்தவனின் எல்லாவளங்களையும் தேய்த்து அழித்துவிடும் என்ற பொருளில் திருவள்ளுவர் ,

“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”(555)

என்று பாடுகிறார். இப்பாடலில் காரண காரியத் தொடர்பு சரியாக உள்ளது. அதனால் நாம் நன்றாகச் சிந்தித்தபின் எடுக்கும் முடிவு சரியாக அமைகிறது. அதுபோலவே, ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கத்தையும், செவ்வியான் வறுமையையும், காரண காரியத் தொடர்பு படச் சிந்திக்க வேண்டியவர்கள் ஆராய்ந்து, நினைந்து பார்த்தால் இதன் காரணம் புலப்பட்டுவிடும். இதனைச் சான்றோர்களோ, அரசோ சிந்தித்தால், அதாவது “நினைக்க”, இவரது வறுமையும் அவரது ஆக்கமும் உரிய நடவடிக்கையால் மாறும் அதாவது ‘படும்’ என்று பொருத்தமாகவே பொருள்கொள்ளலாம்! ஆகவே ‘நினைக்க’, ‘படும்’ என்ற சொற்களின் ஆழமான புதிய பொருள் நமக்கு மகிழ்ச்சியையே தருகிறது! இவ்வகையில்,

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் “

என்ற திருக்குறள் உரிய அழுத்தம் பெற்றுப் புதிய விளக்கம் தருகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.