இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (174)
– சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள்!
ஆண்டுதோறும் இல்லங்களில் இனிய ஒளியை ஏற்றி துன்பங்களை விரட்டி மகிழ்ந்திருக்கும் அந்தத் தீபத் திருநாள் 2015ம் ஆண்டிலும் வந்து ஓடி மறைந்து விட்டது.
பின்புல நாடுகளில் நாம் விட்டு வந்த பிள்ளைப்பிராயத்து நினைவுகளில் இந்தத் தீபாவளி வகிக்கும் பங்கு மகத்தானது. தீபாவளியை எதிர் நோக்கிக் காத்திருந்த காலங்களும் எம் வாழ்வில் வந்து போயிருக்கின்றன. ஆனால், நாம் புலம்பெயர்ந்த பின்பு பல்வேறு சமூகங்கள் வாழும் ஒரு சூழலில், மாணவனாகக் கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் பகுதிநேர பணிபுரிந்து வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் தீபாவளி வந்து போய்க்கொண்டிருக்கும். ஆனால் நமது வாழ்வு தன் பாணியில் ஓடிக் கொண்டிருக்கும்.
அதன் பின்னால் திருமண பந்தத்தில் புகுந்து, குழந்தை என்று வந்த பின்பு தீபாவளி என்றால் முடிந்த வரைக்கும் ஆலயம் சென்று வருவதே தீபாவளிப் பண்டிகையாக இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் இங்கு வாழும் பெரும்பான்மையான ஆசிய மக்களில், வட இந்திய கலாச்சார சூழலில் இருந்து வந்தவர்கள் தீபாவளியை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டுமின்றி புலம் பெயர்ந்து வாழும் தமிழர் சமுதாய மக்களும் பெருமளவில் வாழ்ந்து வருவதால் அவர்களும் ஆங்காங்கே தமது சமூகப் பின்னணிகளில் தம்மாலான வகையில் இப்பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னால் எனது நண்பர் ஒருவர் ஈழத்தில் வடபகுதியில் அனாதைச் சிறுவர்களின் பராமரிப்புக்காக நிறுவி வரும் ஒரு விடுதிக்கு நிதி சேர்க்கும் முகமாக நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு நானும் சிறிய பங்களிப்புச் செய்திருந்தேன். அந்நிகழ்ச்சிக்காக தமிழக சின்னத்திரைகளில் பிரபல்யமானவர்களாகிய தம்பிகள் தேவகோட்டை இராமநாதன் , ரோபோ ஷங்கர் , பாலாஜி வடிவேலு ஆகியோரின் பங்களிப்புக்கான பணிகளில் எனது பங்கு மிகவும் சிறியதே !
அப்போது அறிமுகமான தம்பிகளில் தம்பி தேவகோட்டை இராமநாதனும் ஒருவர். குறிப்பாக இவர் எனது மானசீகக் குரு கவியரசர் பிறந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதாலும், எனது நல்ல நண்பர்களாகிய அமரர் தமிழ்வாணனின் மைந்தர்கள் லேனா, ரவி தமிழ்வாணன், கவியரசரின் மைந்தன் காந்தி கண்ணதாசன் ஆகியோரின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், செட்டிநாட்டின் பால் எனக்கு உள்ள ஈர்ப்பின் காரணத்தினாலும் அவருடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழகத்தின் நகரத்தார் சமூகம் இலண்டனில் இயக்கிவரும் “இலண்டன் நகரத்தார் சங்க” நிகழ்வொன்றிற்காக இலண்டன் வந்திருந்த தேவகோட்டை இராமநாதன் அவர்கள் என்னை எனது இல்லத்தில் சந்திக்க வந்திருந்தார். அவரை அழைத்து வந்தவர்கள் தம்பிகள் அண்ணாமலை, செந்தில் ஆகிய இருவருமேயாவர். அதனைத் தொடர்ந்து அவ்விரு தம்பிகளுடனான எனது நட்பு தொடர்ந்தது.
தமது அமைப்பில் நடைபெறும் நிகழ்வுகளை எப்போதும் அறியத் தருவார்கள். அப்படித்தான் இம்முறை நவம்பர் மாதம் 14ம் திகதி தமது அமைப்பு வைக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்கள். அவ்வழைப்பின் பிரகாரம் நானும், எனது மனைவியும், நண்பர் ஒருவரும் கடந்த சனிக்கிழமை நாம் வாழும் இடத்திலிருந்து சுமார் 70 மைல்கள் தூரத்தில் இருக்கும் வெல்வின் கார்டன் சிட்டி (Welwyn Garden City) எனும் இடத்தில் உள்ள ஒரு ஹாலில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம்.
செட்டி நாட்டில் நகரத்தார் சமூகத்தினரிடையே நான் கண்டு பிரமிக்கும் பண்புகள் பல. அவற்றில் மிகவும் முக்கியமானது அவர்களின் விருந்தோம்பல் பண்பு என்று கூறினால் அது மிகையாகாது. நான் கலந்து பழகும் கவியரசரின் புதல்வர் காந்தியிடமும், நண்பர்கள் லேனா, ரவி தமிழ்வாணன், வானதி திருநாவுக்கரசு ஐயா ஆகியோருடன் நான் பழகும் போது அவர்கள் என்மீது காட்டும் அதீத அன்பின் மூலம் இது மேலும் ஊர்ஜிதமாகிறது.
அந்த ஹாலில் நான் நுழைந்ததுமே நான் அங்கு எதிர்கொண்டது அவர்கள் ஒவ்வொருவரினதும் வரவேற்புபசாரமே. அங்கு நான் அறிந்திருந்தவர்கள் மிகவும் சொற்பமே! ஆயினும் அவர்கள் அனைவரும் அறியாத ஒருவருக்குக் கொடுத்த உபசாரம் அவர்களின் கலாச்சார பின்னணியின் வலிமையையும், அவர்களின் மண்ணின் பெருமையையும் பறைசாற்றி நின்றது. ஒரு விழா கலாரசிகர்களின் மனதை நிறைப்பதற்கு முன்னால் அவர்களின் வயிறு நிறைவது முக்கியம் எனும் நிலைப்பாட்டில் விழா நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னால் அனைவருக்கும் அற்புதமான அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. செட்டிநாட்டு அருமையான ருசிகர உணவு அனைவரின் பசியையும் ஆற்றியதன் பின்னால் அனைவரும் விழா மண்டபத்தை நிறைத்தனர்.
இளம் சிறார்களின் கலை நிகழ்ச்சியோடு ஆரம்பமாகியது அன்றைய நிகழ்வுகள். பரதநாட்டியம், வயலின், பியானோ என இலண்டன் நகரத்தார் சங்க உறுப்பினர்களின் இளம் சிறார்கள் தமது திறமையைக் காட்டி அனைவரையும் மகிழ்வூட்டினார்கள். அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சி அன்று அங்கே நடைபெற்ற நகைச்சுவையுணர்வோடு சிந்திக்கத் தூண்டிய பட்டிமன்றமாகும். இப்பட்டி மன்றத்திலே நடுவர்களாகப் பங்கேற்க தமிழ்சின்னத்திரைகளில் கோலோச்சும் அற்புத, அபார பேச்சாளர்களான திரு ராஜா அவர்களும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களும் வந்திருந்தார்கள்.
பட்டிமன்றத்தின் தலைப்பு “புலம்பெயர் வாழ்வினில் அதிகமான பளு ஆண்களுக்கா? அன்றி பெண்களுக்கா? “ என்பதுவே. பெண்களுக்கே அதிகமான பளு என வாதாட நான்கு இல்லத்தரசிகளும் (இவர்களில் இருவர் வேலைக்குப் போவோர்) , ஆண்களுக்கே அதிகமான பளு என வாதாட நான்கு இல்லத்தலைவர்களும் பங்கு பற்றினார்கள். பட்டிமன்ற வாதத்தில் ஊறித் திளைத்த இருவர் முன்னால் அங்கு பங்கு பெற்ற பலர் முதன்முறையாகப் பட்டிமன்ற வாதத்தில் ஈடுபடுவது எப்படி எ னும் எண்ணம் நெஞ்சில் நின்றாடியது. அனைவரின் எதிர்பார்ப்பையும், நடுவர்கள் உட்பட ஆனந்த அதிர்ச்சி ஆக்கி மகிழ்வித்தனர்.
ஆம், பங்கு பெற்றுப் பேசிய அனைவரும் பட்டிமன்றத்தில் ஊறித்திளைத்தவர்கள் போன்று அழகாக, எளிமையாக உள்ளத்து உணர்வுகளோடு, நகைச்சுவை கலந்து பேசி நடுவர்களையே அசத்தி விட்டார்கள். இதை நடுவர்களான நண்பர் திரு. ராஜாவும், திருமதி பாரதி பாஸ்கரும் அழகாகப் பாராட்டி உறுதி செய்தமை இங்குக் குறிப்பிடத்தக்கது. திரு. ராஜாவும், திருமதி பாரதி பாஸ்கரும் எதற்காக அவர்களுக்கு இத்தனை பெயரும் புகழும் என்பதை தமது அற்புதமான நகைச்சுவை கலந்த பேச்சுக்களினால் நிரூபித்து மண்டபத்தை கரகோஷத்தினாலும், சிரிப்பொலியினாலும் அதிர வைத்தார்கள்.
நவம்பர் 14ம் திகதி சிறுவர்கள் தினம் என்பதால் அங்கு வந்திருந்த சிறுவர்களை மகிழ்விப்பதற்காக ஒரு சிறுவரை மகிழ்விக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தமை அவர்களின் திட்டமிடும் திறமைக்குச் சான்றாகிறது. கலைநிகழ்ச்சிகள் முடிவுற்றதும் இரவு 7 மணிக்கு மாலைநேர பலகாரங்களோடு காப்பி, தேநீர், குளிர்பானம் ஆகியன பரிமாறி மீண்டும் அனைவரையும் பசியாற்றினார்கள் நகரத்தார் சங்கத்தினர். அதைத்தொடர்ந்து விழாவின் நிறைவாகத் தீபாவளிக்கே உரித்தான வாணவேடிக்கை நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்
இந்நகரத்தார் சங்கத்தின் ஆரம்பக்கால ஸ்தாபகர்களில் ஒருவரான அண்ணன் தியாகராஜன் அவர்களுடனான கலந்துரையாடல் நெஞ்சுக்கு நிறைவையளித்தது. உலகெங்கும் வாழும் தமிழர்களில் இந்நகரத்தார் சமூகம் தாம் வாழுமிடங்களில் கோவில் நிறுவுவதோடு தமது பாரம்பரிய கலாச்சாரப் பின்னணியைப் பாதுகாத்து வருவது தமிழன்னைக்கு சிறப்பளிக்கும் செய்கையாகும்.
தமிழையும், சைவத்தையும் தமது இரு கண்களாகப் போற்றும் இந்நகரத்தாரின் சேவை ஒற்றுமையுணர்வோடு மேன்மேலும் ஓங்கி வளர வாழ்த்தியதோடு ஒரு அற்புத நிகழ்வைக் கண்டுகளித்து நகரத்தார் சங்கத்தினரின் விருந்தோம்பலில் மூழ்கித் திளைக்க சந்தர்ப்பம் அளித்த தம்பிகள் அண்ணாமலை, செந்தில் ஆகியோரை வாழ்த்தி, நன்றி கூறி மனநிறைவோடு இல்லம் திரும்பினோம்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
லண்டன் நகரத்தார் சங்கத்தின் தீபாவளித் திருநாளின் மகழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி வணக்கம்