ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 32
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஏகாந்த வாழ்க்கை
_____________________
“நேற்று நமது ஆத்மாவின் ஆலயங்களை நாமிடித்து வீழ்த்தி அவற்றின் சிதைவுகளில் நமது முன்னோருக்குச் சமாதி கட்டினோம். ஆனால் இன்று நமது ஆத்மாக்கள் புனிதப் பலிப்பீடமாய்க் கடந்த காலப் பிசாசுகள் நெருங்காதபடியும் மரித்தோர் எலும்புகள் தொட முடியாதபடியும் மாறிவிட்டன.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
_____________________
ஏகாந்த வாழ்க்கை
_____________________
என்னரும் சகோதரனே ! நீ
உன் பொன் குன்றின்
மீதமர்ந்து
உல்லாச மாய்ச்
செல்வத்தை அனுபவித்து
களிப்புற்றதை நான்
கண்டிருக்கிறேன் !
பேரளவு சொத்துக்களின்
சேமிப்பில்
பெருமிதம் கொண்டு, நீ
சேர்த்த ஒவ்வொரு
கைப்பிடித் தங்கக் கட்டியும்
பொதுநபர் சிந்தனைக்கும்,
இச்சை களுக்கும்
புலப்படாத
ஓர் இணைப் பென்று
பூரிக்கிறாய் !
_____________________
என் ஞானக் கண்ணில்
உன்னைத் தெரியுது :
போர்ப் படை
நடத்திச் செல்லும் நீ ஓர்
போர் தொடுப் பாளி !
எதிரிகளின் கோட்டை களை
எல்லாம்
தகர்த்து வீழ்த்துவோன் !
மறுமுறை
நோக்கிய போது
பொன்கட்டிப் பேழைகளை
வீணாக்கி வந்தது ஓர்
ஏகாந்த நெஞ்சு !
தாகத்தில் தவித்தது ஓர்
கூண்டுப் பறவை
தண்ணீர்க் கிண்ணம்
காலி யாகி !
_____________________