Advertisements
Featuredஇலக்கியம்பத்திகள்

அவன், அது, ஆத்மா (39)

மீ. விசுவநாதன்

அத்யாயம்: 39

நெறிப்படுத்திய மாமாத் தாத்தா

அவன் அலுவலகத்திற்கு காலையில் எட்டரை மணிக்கே வந்து விட்டான். ஆறுமுகம் என்பவர் அன்று அலுவலகத்தை சுத்தம் செய்து, ஒவ்வொருவரின் நாற்காலி மேசைகளை எல்லாம் துடைத்துக் கொண்டிருந்தார். அவனுக்கான நாற்காலியைத் துடைத்து விட்டு,” தம்பி…இங்க உக்காந்துக்குங்க..ஒம்பது மணிக்குள்ள எல்லாரும் வந்துருவாங்க…” என்று மிகுந்த வாஞ்சையோடு சொன்னார். அன்று வந்திருந்த ஆங்கிலச் செய்தித் தாளையும் படிக்கக் கொடுத்தார்.

அவன் அந்த அலுவலகத்திலும், அதன் உள்ளேயே இருந்த “மெர்குரி டிராவல்ஸ்” அலுவலகத்தையும் சுற்றிப் பார்த்தான். “மெர்குரி டிராவல்ஸ்” அலுவலகத்திற்கு முன்பு ஆனந்த் தியேட்டரும், பத்து கட்டிடங்கள் தள்ளி இருந்த மத்திய நூலகமும் அவனுக்குப் பிடித்திருந்தது. மதிய உணவு வேளையில், சீக்கிரமாகத் தன் உணவை உண்ட பின்பு அருகிலிருந்த மத்திய நூலகத்திற்குச் சென்று தமிழ்ச் செய்தித் தாள்களையும், ஆனந்தவிகடனில் வெளியான சிறுகதையையும் படித்தான். அந்த மேசையில் இருந்த “தாமரை”ப் பத்திரிகையில் வெளியான சிறுகதை ஒன்றும் படித்தான். அது கதைப்பித்தனுடையது. கட்டுரைகள், கதைகளை மறுநாள் படிக்க வேண்டும் என்று அலுவலகத்திற்குப் புறப்பட்டான். தாமரைப் பத்திரிக்கை அவனுக்கு பிடித்திருந்தது. மதிய உணவு நேரம் முடிந்ததும் அலுவலகம் சென்ற அவனிடம்,” சாப்பிடாம எங்க போனாய்..” என்று பி.ஏ.கிருஷ்ணன் கேட்டார். “லைபிரரிக்கு”ப் போயிருந்தேன்” என்றான். “குட்…நல்ல புத்தகங்களப் படி…” என்று முதுகைத் தட்டிக் கொடுத்தார். மதியம் இராமச்சந்திரன், சுப்பிரமணியன் மணிவண்ணனுடன் சேர்ந்து கொண்டு அவன் வேலை செய்தான். சரியாக ஐந்தரை மணிக்கு அலுவலக நேரம் முடிந்தவுடன் வீட்டிற்குப் பறப்பட்டான். அவனுக்கு அந்த அலுவலக வேலை பிடித்திருந்தது. கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்பும் இருந்தது. வருடத்திற்கு முப்பது நாள்கள் விடுமுறையும், அது தவிர பதினைந்து நாள்கள் தனி விடுமுறையும் இருந்தது.

அவனுக்கு நண்பன் குட்டிச்சங்கரும் வேலைக்காகச் சென்னைக்கு வந்திருந்தான். ஒவ்வொரு நாளும் மதியம் தொலைபேசியில் அவனுடன் பேசுவான். மற்றும் ஒரு நண்பன் பிரபுவுக்கு “டன்லப்” நிறுவனத்தில் வேலை கிடைத்ததில் அவனும் சென்னைக்கு வந்திருந்தான். அந்த வருடம் (1973) தீபாவளி அன்று குட்டிச்சங்கர், பிரபுவுடன் அவனும் திருவல்லிக்கேணியில் இருந்த குட்டிச்சங்கரின் பெரியம்மாவின் வீட்டிற்க்குச் சென்றான். அங்கு தீபாவளி இனிப்பான ஒக்காரை, அல்வா, மற்றும் மிக்சர் சாப்பிட்டுவிட்டு நடந்தே மவுன்ட் ரோட்டில் உள்ள சாந்தித் தியேட்டர் வரை நண்பர்களுடன் வந்தான். சாந்தித் தியேட்டரில் சிவாஜி கணேசன் நடித்த “கௌரவம்” வெளியாகி இருந்தது. நல்ல கூட்டம். அவன் நண்பர்களுடன் வீட்டிற்குத் திரும்பி விட்டான். மற்றொரு நாள் அவன் அதே தியேட்டரில் “கௌரவம்” திரைப்படம் பார்த்தான். அவனுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் அது. அவனோடு வேலை செய்யும் இராமச்சந்திரன், கணேசன், சுப்பிரமணியம், கே.தண்டப்பாணி, சிதம்பரம் எல்லோருமே சிவாஜி கணேசனின் ரசிகர்களாக இருந்தனர். மணிவண்ணனுக்கு எம்.ஜி.ஆர். படங்களில் ஆர்வம் அதிகம். மதிய உணவு வேளையில் நல்ல திரைப்படங்களைப் பற்றி நண்பர்கள் அலசுவார்கள். அதில் ஆங்கிலப் படங்களும் இருக்கும்.

அவனது முதல்மாதச் சம்பளமாக ரூபாய் நூற்றி ஐம்பத்தேழு கிடைத்தது. அதை வாங்கிச்சென்று அவனுக்கு தாத்தா, பாட்டியிடம் கொடுத்து நமஸ்காரம் செய்தான். அவனுக்கு அம்மாவழித் தாத்தா அவனது சம்பளப் பணத்திற்கான செலவுகளை ஒரு பைசா விடாமல் ஒரு நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தில் எழுதி வந்தார். அந்தப் புத்தகத்தை அவன் இன்றும் பாதுகாத்து வருகிறான். மாதம் அறுபது ரூபாய்கள் அவனுக்குப் பெற்றோருக்கு அனுப்பி வைப்பார். அறுபது ரூபாய்கள் அவனுக்கான வீட்டுச் செலவுக்கும் வைத்துக் கொள்வார். மாதம் பத்து ரூபாய்கள் அவனது பெயரில் வங்கியில் சேமிப்பும் செய்து தருவார். அவனுக்கு அலுவலகம் சென்று வர “பஸ்பாஸ்” செலவுக்கு மாதம் பதிமூன்றும், வாரம் இரண்டு ரூபாய் அவன்கைச் செலவுக்கும் தருவார். அந்தப் பணத்தில் அவன் நல்ல கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொள்வான். வேர்க்கடலை தினமும் பத்து பைசாவுக்கு வாங்கித்தின்பதும் அவனுக்குப் பிடித்திருந்தது. தினமும் என்ன செலவு செய்தாய் என்று அவனுக்குத் தாத்தா அவனிடம் கேட்ப்பார். அனாவசியமாகச் செலவு செய்ய அனுமதிக்க மாட்டார். அவரது நேர்மையும், கண்டிப்பும் அவனை நல்வழிப் படுத்தியது.

மகாகவி பாரதியாரின் பிறந்ததின விழா

b2cfc883-dd2c-486c-84ae-20c6dfe09749

1973ம் வருடம் டிசம்பர் மாதம் பதினொன்றாம் தேதியன்று பாரதியாரின் பிறந்த தினத்தன்று மெரீனா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அதைத் தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று மயிலாப்பூரில் உள்ள “சாஸ்திரி ஹாலில்” வைத்து கருத்தரங்கமும், கவியரங்கமும் “பாரதி இளைஞர் சங்கம்” சார்பில் நடைபெறும் என்ற அறிவிப்பை அவன் செய்திப் பத்திரிகையில் படித்து விட்டு கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியாரின் சிலையருகில் நின்று கொண்டிருந்தான். காலை எட்டு மணிக்கெல்லாம் ஒவ்வொருவராக வந்தனர். கூட்டம் சேர்ந்ததும் பாரதி இளைஞர் சங்கத்தின் செயலாளர்கள் பாரதி காவலர் கு.ராமமூர்த்தி, பாரதி அடிப்பொடி வி.எஸ்.மணி, வானதிப் பதிப்பகம் திருநாவுக்கரசு, நெல்லை இராஜானந்தம், வி.சா.வாசுதேவன், இராமானுஜம், லயோலாக் கல்லூரி கணிதப் பேராசிரியர் ரங்கராஜன் போன்ற பாரதி பக்தர்கள் பாரதிக்கு மாலை அணிவித்தனர். மற்றவர்கள் மலர்தூவி வணங்கினர். அவனும் மகாகவியின் பாதத்தில் மலர் தூவி வணங்கினான்.

ஊர்வலம் கூட்டம் நடக்கும் மயிலாப்பூர் “சாஸ்திரி ஹாலை” நோக்கிப் புறப்படும் பொழுது, பாரதி காவலர் கு. இராமமூர்த்தி அவனை நோக்கி வந்தார். “தம்பி நீ எங்கிருந்து வராய் ?” என்றார். அவன் மாம்பலத்தில் இருந்து வருகிறேன் என்றான். சொந்த ஊர் எது ? என்றார். அவன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்றான். அதைக் கேட்டதும் அவருக்கு ஒரே குஷி. “எனக்கும் கல்லிடைக்குறிச்சிதான்..பாரதியார் கவிதைகளைப் படி” என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய பாரதியார் படத்தினை அவன் கையில் கொடுத்து,” நீ இந்த பாரதியார் படத்தக் கையில வைச்சுண்டு ஊர்வலத்தோட வா” என்று அவனை ஊர்வலத்தின் முன்பாக நிறுத்தினார். அவனுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. அவன் தினமும் நேசித்து வாசித்துக் கொண்டிருக்கும் பாரதியைத் தன் இரண்டு கைகளாலும் அணைத்தபடி ஊர்வலத்தோடு பாரதி பாடல்களைப் பாடிய படியே நடந்தான். சென்னைக்கு வந்து கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியிலேயே அவனோடு பாரதி அவனை அரவணைத்துக் கொண்டது அவனுக்குப் பெரும் பேறு.

19.11.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க