காற்றில் மிதக்கும் இறகு
-மெய்யன் நடராஜ்
உயிரின் கிளையில்
உட்கார்ந்திருந்த
எண்ணப் பறவை தன்னை
உலுப்பிக்கொண்டு இறக்கைகளை
உதறியபோது அது நடந்தது
தாய்ப் பறவையைப் பிரிந்து
தன்னிச்சையாய்ப் பறக்க எத்தனிக்கும்
சேய்ப் பறவையின் முனைப்போடு
தவறுதலாய் உதிர்ந்துகொண்ட
அந்த இறகு!
வானத்தின் புது விருந்தாளியாய்
வரவேற்கப்பட்டுச் சுதந்திரமாய்
அந்தரத்தில் கட்டுப்பாடுகளற்ற
முகில்களின் குடும்ப அங்கத்தினராகி
இருப்பின்றி அலைந்தது
பசி மறந்து
பட்டினி தொலைத்து
நாளையைப் பற்றிய
கவலைகளை உதிர்த்து
ஜனனம் மரணம் பற்றிய
பயம் உதறிப் பிறவியின்
பயனடைந்த பயணத்தில்
சிலாகித்துக் கொண்டது
சிங்கத்தை வென்ற
சிறுநரியாய்!
நாளொன்றில் மட்டுமே
நாடெங்கும் கொடியேற்றிக்
கொண்டாட்டங்கள் என்று
கொண்டாடுவோர் கூட்டத்தினைப்
பார்ப்பதற்குக் காவலர்களால்
அனுமதி பெறப்பட்டபின்னே
அந்த வட்டத்துக்குள்
சுதந்திரமாகத் திரியக் கூடிய
எமது சுதந்திர தினத்தைப் போலன்றி
எல்லைகற்ற திசைகள் மறந்த
சுதந்திரக் காற்றைச்
சுவாசித்த சுதந்திரத்தின்
சுதந்திரமான சுதந்திரத்தின்
சுகவாசத்தின் வாசனை
முகர்ந்தபடி கூத்தாடியது
அந்த இறகு!
தெளிந்த நீரில்
முட்டையிட்டு இனவிருத்திச்
செய்கின்ற ’டெங்கு’ கொசுக்களின்
கூடாரம் தாங்கிய குடிசையோரச்
சுகாதாரக் கேடுகள் ஆராயாமல்
வாங்கும் சம்பளத்துக்குத்
துரோகம் செய்யும்
அசமந்தப் போக்குடைய
அரச அதிகாரியாகவும் இல்லாமல்
கொள்ளைக் காரர்களுக்கு
வழிவிட்டுக் கொடுத்துக்
குடும்பஸ்தர்களிடமும்
ஏழை வாகன சாரதிகளிடமும்
கைக்கூலி வாங்கிச்
சம்பளப் பணத்தைச்
சேமிப்பில் போடும்
காவல் துறையாக இல்லாமலும்
ஆட்சி பீடத்தில்
அமர்ந்திருப்போர் புரிகின்ற
அட்டூழியங்களுக்கு
ஒத்து ஊதிக்கொண்டு
பதவியைக் காப்பாற்றிக்
கொண்டிருக்கும்
உயர் அதிகாரிகளாக இல்லாமலும்
ஊர்ப் பணத்தைக்
கொள்ளை அடித்து
வெள்ளையாக்கி வெளிநாட்டில்
சொகுசுவாழ்க்கை அமைத்துக் கொள்ளும்
ஊழல் நிறைந்த
அரசியல் வாதியாக இல்லாமலும்
சமூக அவலங்களைக்
கண்டும் காணாமல்
சகிப்பு வாழ்க்கை நடாத்தும்
சாதாரணப் பொது மக்களாய் இல்லாமலும்
ஒருவேளைச் சோற்றுக்காய்
ஊரெங்கும் சுற்றித் திரிந்து
வெளியே தெரியாமல்
பட்டினிக் கிடக்கும்
நடுத்தர வர்க்கமாய் இல்லாமலும்
கஞ்சா கடத்திக்
கள்ளச்சாராயம் காய்ச்சித்
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை
உயர்மட்ட அனுமதியோடு
அந்தரங்கமாய் விற்று
ஆதாயம் தேடலுக்காய்ச்
சமூகம் அழிக்கும்
பாதாள உலகத்தினராய் இல்லாமலும்
பொதுநலம் என்னும்
தொலைநோக்கோடு
ஆரம்பிக்கப்பட்டு முடிவில்
பணம் காய்க்கும் மரமாக
மாறிப்போகின்ற
பள்ளிக்கூடமாகவோ
மருத்துவமனையாகவோ இல்லாமலும்
பச்சிளங் குழந்தைகளையும்
உடற்பசிக்காய் உருக்குலைக்கும்
கொடுங் காமுகர்களாய் இல்லாமலும்
விஞ்ஞான வளர்ச்சி என்னும் பேரில்
அயல் வீட்டானைக்கூட மறந்து
கணினிக்குள்ளும்
கைப் பேசிக்குள்ளும்
தம்மை மறந்து மூழ்கிக் கிடக்கும்
இன்றைய இளைய
சமுதாயத்தைப்போல் அல்லாமலும்
ஒரு சமாதானத் தேவதையின்
மனதோடு கூத்தாடிக் கூத்தாடிச்
சிதைவுகளற்ற பிரபஞ்சமொன்றின்
கதவுகள் திறந்து உள்ளே சென்று
நிசப்தங்களின் மிக நேர்த்தியான
தொழில் நுட்பத்தினால்
செய்யப்பட்ட அரியணையில்
அமர்ந்துகொண்டு
மௌனப் புரட்சியால் ஓர்
ஏகாந்த யுத்தம் செய்தது!
அந்த ஏகாந்த யுத்தத்தின் நடுவே
மலைகள் தகர்ந்து
கடலில் வீழ்ந்த பேரிரைச்சலாய்
ஒரு முரட்டு மிருகம்
குருட்டுத் தனமாய் மோத…
அமாவாசை இரவொன்றில்
கருங்குரங்கொன்றை
ஒளி பாய்ச்சாப்
புகைப்படக் கருவியினால்
படம்பிடித்த வெற்றிக் கேடயத்தை
வாங்கிக் கொண்ட சோகத்தில்
சுருண்டு வீழ்ந்தது இறகின் பயணம்!
இனி ஒருநாள்
விலங்கு போர்த்திய
மனிதம் அதை எடுத்துக்
காது குடைந்து கழிவில் வீசலாம்!