Blog

  • படக்கவிதைப் போட்டி 36-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்தவாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருப்பவர் திரு. எல். சரவணன். இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமை தன் நன்றியை நவில்கின்றது.

    Dissolving Ganesa

    தனதடி தொழும் அடியார்தம் இடர்களைவதில் இணையற்றவர் கணேசர்! ஐந்து கரமும், ஆனை முகமும், இந்தின் இளம்பிறை எயிறும், தொந்தி வயிறும் கொண்ட அவரைப் பணியப் பாவம் ஓடும்; ஞானம் கூடும் என்பது நம் மக்களின் நெடுநாளைய நம்பிக்கை!

    கடலில் கரையும் கணபதி சிலைக்கு அருமையான கவிதைப் படையல் செய்துள்ளனர் ஆற்றல்மிகு நம் கவிஞர் பெருமக்கள்! அப்படையலை நாமும் சிறிது சுவைத்துவிட்டு வருவோம் புறப்படுங்கள்!

    ***
    செய்த பாவம் போதாதென்று நம் மக்கள் கணபதி சிலையைக் காலால் உதைத்துக் கடலில் கரைக்கும் பாவத்தைவேறு செய்யத் தொடங்கிவிட்டனர்; அதனால்தான் கணேசனார் கரையாமல் கரையேறுகின்றாரோ? என்று வினவுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    விண்ணுக்கும்
    மண்ணுக்கும்
    முதல்வன் நீ
    மண்ணில் பிறந்தவை
    மண்ணிலேயே
    மறையும் என்ற
    தத்துவத்தை உணர்த்த
    தண்ணீரில் கரைக்கிறோம்
    பண்ணும் பாவங்கள்
    போதாதென்று
    உன்னை உதைத்தும்
    தள்ளியும் விடுகின்றனர்
    கடலிலுனுள்
    கற்றூணை பூட்டியோர்
    கடலிற்பாய்ச்சினும்
    நற்றுணையாவது
    நமசிவாயவே என நீ
    கரையாமல் கரையேறி நிற்பது கூட
    பாவங்களிருந்து
    எங்களை கரையேற்றத்தானோ?

    ***
    எளிமைவிரும்பியான கணேசனின் அருள்பெறப் பகட்டுவழிபாடு தேவையில்லை என எடுத்தியம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன். 

    மண்ணில் மாவில் மஞ்சளிலும்
    மாட்டுச் சாணி எதிலெனிலும்,
    எண்ணம் போல வடிவுபெறும்
    எங்கள் யானை முகத்தவனே,
    புண்ணியம் என்றே நினைத்துபல
    பகட்டைச் சேர்த்தார் வழிபாட்டிலே,
    தண்ணீர் நிலைகளில் கரைத்தாலும்
    தாங்கியே அருள்வாய் விநாயகனே…!

     ***
    விநாயக சதுர்த்தியின் வரலாற்றை எழிலாய் விளக்கியுள்ளார் தன் கவிதையில் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

    விரதம் முடிய, பார்வதியே
    விரவல் செய்தார் கடலிலுன்னை.
    பரதத்துவம் பாதத்தில் மிதிபடாமல்
    சிரத்தையாயுன்னை நோன்பு இறுதியில்
    பரவையில் போட கரைகிறாய்
    பூமியில் அவதரித்த நாமிறுதியில்
    பூமிக்கேயென்ற தத்துவம் கூறும்
    பூதல உருவாய்  நீயிங்கு!

    பஞ்சமா பாதகங்களை மானுடம்
    அஞ்சாது செய்வதை  தொலைக்க
    நெஞ்சத்தால் உணர்ந்து கரைக்க
    தஞ்சம் நீயென அடையாளமாகிறாய்.
    தளர்வற்ற மாசறு மனம்
    அளவற்று  நீள அருள்வாய்!
    வளர்பிறைச் சதுர்த்தி ஆவணியில்
    வரம் தா ஆனைமுகத்தோனே!

    ( விரவல் – கலத்தல்;  பரதத்துவம் – பரம்பொருள்;  பரவை – கடல்.)

    ***
    நீரில் கரையும் விநாயகருக்கு நம் மனங்கரைகின்ற வகையில், கருத்துள்ள கவிதைகளைக் காணிக்கையாக்கியுள்ள கவிஞர்களே! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

    புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
    வாய்மையாற் காணப் படும்
    என்றார் வான்புகழ் வள்ளுவர். ”மெய்யழுக்கை நீக்குதற்கு நம் மக்கள் தரும் முக்கியத்துவத்தைத் தம் மனஅழுக்கை நீக்குதற்கும் தரவேண்டும் என்பதை விநாயகப் பெருமானே விளக்கவேண்டும்” எனும் கருத்தமைந்த பாடல் என்  சிந்தை கவர்ந்தது.

    கையில் இருக்கின்றக் காசைக் கரைத்துமே
    மெய்யில் இருக்கும் அழுக்கினைப் – பொய்யாய்
     
    மறைக்கின்ற மாந்தர் மனத்தழுக்கை நீக்க
    இறைவா கரைந்து விளக்கு. 

    தண்ணீர்க் கரையில் தனியாக நீகரைந்து
    கண்ணீர் குளிக்கின்ற மக்கள்  – மண்ணில்
    எதிர்பார்த்து ஏங்கும் அமைதிக்கு நல்ல
    பதிலொன்று தந்து விடு. 

    நம்பிக்கை இல்லா தவறை விடு உனை
    நம்பிக் கரைப்போர் நலம்வாழத் – தும்பிக்கை
    நாயகனே நீயும் துணைசெய்! வீண்வாதப்
    பேயகற்றி விட்டு விடு. 

    மூடநம் பிக்கை எனஇகழும் வாய்களினை
    மூடவிடு போதும் எதிலுமே  தேடலின்றிக்
    குற்றம் குறைகாணும் கோமாளிக் கூட்டம்தம்
    குற்றம் உணர்த்துக் கரைந்து. 

    இறைவனிடம் நல்ல கோரிக்கைகளை முன்வைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***
    ”மனிதா! நீ செய்யும் தப்புக்களை மூடிமறைத்து ஒப்புக்கு எனக்கு விழா எடுப்பதனால் நானுனக்கு அருள்செய்துவிடுவேன் என்றா எண்ணுகின்றாய்? ஒருநாளும் இல்லை! உன் தவறுகள் உன் பரம்பரையையே அழிக்குமுன் திருந்திவிடு!”என்று இறைவன் கணேசனார் இதோபதேசம் செய்கின்றார் ஒரு கவிதையில்!

    பாவத்தில் கரையாதே
    எத்தனை
    கோடி இன்பம் வைத்தேன்
    ஓ மனிதா!
    அத்தனையையும் தொலைத்து
    புத்தியின்றி நீ செய்யும்
    காரியங்கள்தான் எத்தனை?

    களவு பல செய்து
    ஈட்டிய பொருளின் பகுதியை
    எனக்கும் காணிக்கையாக்கி
    கற்பூரமேற்றுகிறாய்!

    உழைப்பவரை  மிதித்துவிட்டு
    நீ மட்டும் உயரப் பார்க்கிறாய்
    உயரே நான் இருப்பதை
    மறந்து போகிறாய்!

    ஊழலில் திளைத்து
    ஊரையே சீரழிக்கிறாய்
    தேவாலயங்கள் கட்டி
    அதையும்
    வியாபாரம் ஆக்குகிறாய்

    தினந்தோறும்
    நீ என்முன்
    படைக்கும் பாவம் கரைக்க
    ஆண்டுக்கு ஒருமுறை
    கடலில் கரைகிறேன்
    நீ செய்யும் பாவங்களில்
    உன் பரம்பரையே
    கரைந்துவிடும் என்பதை மட்டும்
    கவனத்தில் கொள்!

    திரு. கொ.வை. அரங்கநாதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவுசெய்துள்ளேன்.

    உற்சாகத்துடன் படக்கவிதைப் போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் என் நன்றி!

     

    Share
  • அணுப்பிணைவு மின்சக்தி நிலையத்தை கதிரியக்கக் கழிவின்றி நிதிச் சிக்கனத்தில் இயக்கலாம் ​

    Fusion Power Plant -1

    பிண்டமும் சக்தியும் ஒன்றெனக்
    கண்டவர் ஐன்ஸ்டைன்
    கணிதச் சமன்பாடு மூலம் !
    பிளவு சக்தி யுகம் மாறி
    பிணைவு சக்தி நுழையப் போகுது
    கதிரியக்கக் கழிவின்றி
    புவி விளக்கேற்ற  !
    இயல்பாகவே
    தேய்ந்து மெலியும் ரேடியம்
    ஈயமாய் மாறும் !
    யுரேனியம் சுயப் பிளவில்
    ஈராகப் பிளந்து
    வெப்பசக்தி உண்டாகும் !
    பேரளவு உஷ்ணத்தில்
    சூரியன் போல் கன ஹைடிரஜன் 
    நீரக ஏகமூல வாயுக்கள் 
    சீராக அழுத்தத்தில் 
    இணைந்து
    பிணைவுச் சக்தி
    புது யுகத்தில் மின்சக்தி பரிமாறும்
    கதிரியக்க மின்றி !

    ++++++++++++++++

    அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செய்வதே தற்போதைய மனித இனத்தை நோக்கியுள்ள மிக முக்கிய விஞ்ஞானச் சவாலாகும்.  அதனால் கிடைக்கும் பரிசு, வெகுமதி அளவு பேரளவாகும்.  அது வரையறை இல்லாத, மாசுகளற்ற, மலிவான, பாதுகாப்பான எரிசக்தி படைப்பாகும் .   அது பல நூற்றாண்டுகளாய் மனித வளர்ச்சிக்கு மின்சக்தி பரிமாறி வரும். அதைப் பேராசிரியர் ஸ்டீவ் கௌலி [Professor Steve Cowley] போன்ற விஞ்ஞானிகளால்தான் சாதிக்க முடியும்.  அந்த மின்சக்தி நிலையங்கள் நிச்சயம் உலக மானிடத்தைக் காக்கும். அணுப்பிணைவு மின்சக்திப் பொறி நுணுக்க நிலையங்களை வாணிப ரீதியாக விருத்தி செய்து, கூடுமான அளவு விரைவில் நிறுவனம் செய்வது அவரது கடமை நெறி.   அவை இல்லாது போனால் நமது மனித இனம் இந்நூற்றாண்டு முடிவுக்குள் மிக்க இடரில் மூழ்கித் துயரடையும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

    ஸ்டீஃபன் ஹாக்கிங் & பிரையன் காக்ஸ்  [பிரிட்டீஷ் விஞ்ஞானப் பேராசிரியர்கள்] 

    Fusion heat and desalination

    பிணைவு சக்தியின் பயன்கள்

    நாங்கள் ஐயத்துக்கு இடமின்றி, சில அனுமானங்களை முன்னெடுத்துக் கொள்ள வேண்டிய தாயிற்று.  ஆனால் எமது முன்னறிப்பு அணுப்பிணைவு மின்சக்தி, அணுப்பிளவு மின்சக்தியை விட நிதிச் செலவு மிக்கதாய் இருக்காது என்று எங்களால் உறுதியாகக் கூற முடியும்.   இந்த ஆய்வு அறிவிப்பு திட்ட அமைப்புக் குழுவினருக்கும், தனித்துறை வாணிபருக்கும், ஏதுவாக அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் நிறுவ முன்வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்.  உலகில் நிலக்கரி, எரிவாயு மற்றும் அணுப்பிளவு, அணுப்பிணைவு [Fisson & Fusion] நிலையங்கள்தான் உறுதியான அடிப்பளு மின்சக்தியைப் [Base-Load Power] பரிமாறும் தகுதி பெற்றவை.  பிணைவு நிலையங்கள் பொறி நுணுக்கச் சவால்களால், நிச்சயமற்றுப் பெருநிதி செலவழித்துக் கட்ட இயலாது என்று இதுவரை ஒதுங்கினார்.

    பேராசிரியர் டாமையன் ஹாம்சயர் [Lead Scientist, Durham University, U.K.]  

    Tokamac Model

    பிணைவு மின்சக்தி நிலையங்கள் நிதிச் சிக்கன முறையில் நிறுவலாம். 

    2015 அக்டோபர் 7 ஆம் தேதி எதிர்கால உலக மின்சக்தி உற்பத்திக்குக் கதிரியக்கக் கழிவற்ற பிணைவு அணுமின் நிலையங்களைச் [Fusion Power Plants] சிக்கனச் செலவில் அமைத்து இயக்கலாம் என்று பிரிட்டன் டுரம் பல்கலைக் கழக ஆய்வாளரும், ஆக்ஸ்ஃபோர்டுஸையர் குலாம் மையத்து [Durham University & Culham Centre for Fusion Energy in Oxfordshire] பிணைவு சக்தி ஆய்வாளரும் புது அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இது சமீபத்தில் முதன் முதலாக உயர்கடத்திப் பொறிநுணுக்கத்தில்  [Superconductor Technology] பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் செய்து காட்டிய மேம்பாட்டு விளைவால் ஏற்பட்ட பயனே. கடந்த 60 ஆண்டு காலமாக இயங்கி வரும் அணுப்பிளவு நிலையங்களுக்கு [Fission Power Stations] ஒப்பாகச் சிக்கன முறையில் கட்டுமானம், இயக்கம், பராமரிப்பு, நிலைய அடக்கம் [Decommissioning] யாவும் செய்ய முடியும் என்று முதன்முதல் பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் பிணைவுப் பொறி நுணுக்க அமைப்பிதழில் [Journal of Fusion Engineering Design] அறிவித்துள்ளார்.

    பாதுகாப்பான பிணைவு மின்சக்தி நிலையங்களால் அனுதினம் பிளவு நிலையங்கள் போல் கதிரியக்கக் கழிவுகள் வெளிவரா.  அதற்குப் பயன்படும் மூல ஹைடிரஜன் ஏகமூல எரிவாயுக்கள் [Hydrogen Isotopes – Deuterium & Tritium] மலிவான விலையில் ஏராளமாய்க் கிடைக்கிறது.  கடந்த 50 ஆண்டு காலமாக உலக நாடுகள் ஐரோப்பா, ஜப்பான், சைனாவில் அணுப்பிணைவு சக்தி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அணுப்பிணைவு நிலையங்களில் லேசர் மூலம் ஒளிப் பிழம்பை [Plasma] 100 மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியம் & டிரிடியம் வாயுக்களைச் சூடாக்கி அழுத்தி பிணையச் செய்து பேரளவு வெப்ப சக்தியை உண்டாக்குகிறார்.

    ITER nuclear fusion

    பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் ‘ஐடியார்” எனப்படும் அகில உலக நாட்டு வெப்ப அணுக்கரு சோதனை அணுமின் உலை  [ITER – International Thermo- Nuclear Experimental Reactor] கட்டுமானமாகி 2020-2025 ஆண்டுகளில் இயங்கப் போகிறது.  ஐடியார் உலைக்கு மூலாதார அமைப்பு ‘டோகமாக்’ [TOKAMAK] எனப்படும் பிளாஸ்மா சூட்டுக் காந்த வளையம்.  இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளில் இந்தப் பொறிநுணுக்கம் வெற்றி அடைந்துவிடும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

    அணுப்பிணைவு முயற்சியில் தவிர்க்க வேண்டிய தடைகள் & பிரச்சனைகள்

    லேஸர் கதிர்கள் தாக்கிப் பேரளவு உஷ்ணத்தில் [100 மில்லியன் டிகிரி C] டியூட்டிரியம், டிரிடியம் வாயுக்கள் அழுத்தமாகிப் பிணையும் போது, புதிய மூலகம் ஹீலிய வாயும், நியூட்ரானும், பேரளவு இயக்க சக்தியும் [Kinetic Energy] விளைவில் உண்டாகுகின்றன.  முதல் பிரச்சனை, டோகாமாக் காந்த வளையம் அதி உஷ்ணத்தில், இத்தகைய தீவிர நியூட்ரான்கள் தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடிவ தில்லை.  சோதனை புரியும் ஜெட் டோகாமாக் [JET TOKAMAK] கடந்த18 மாதங்களாக பழுதடைந்த 4500 கரிக் கவசத் தட்டுகளை நீக்க நிறுத்தப் பட்டுள்ளது.  நியூட்ரான் அடித் தடுப்புக்கு [Neutron Resilient] ஏற்ற புதுக் கவசத் தட்டுகள் பெரிலியம் & டங்ஸ்டன் உலோகங்களால் செய்யப் பட்டு இப்போது நிறுவப் படுகின்றன.  இவை எத்துணை காலம் நீடிக்கும் என்பது அடுத்த சோதிப்புக்குப் பிறகுதான் தெரியும்.

    Fusion Power Progress

    சூரியனைப் போன்ற 20 மடங்கு கனலில் பூமியைப் போன்ற 1000 மடங்கு காந்த தளத்தில், பிளாஸ்மா கொந்தளிப்பை எப்படி டோகாமாக் வளையத்தில் நியூட்ரான்கள் தாக்கி முறிக்காது, நீடித்த காலம் கட்டுப் படுத்துவது என்பதே இப்போதைய விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது.   15 பில்லியன் ஈரோ நாணயச் செலவில் [சுமார் 15 பில்லியன் டாலர்] கட்டப்படும் சோதனை ஐடியார் 50 MW ஆற்றல் செலவாகி 2019 ஆம் ஆண்டிலே 500 MW ஆற்றலில் வேலை செய்யத் துவங்கி வெற்றியோ தோல்வியோ நிலைநாட்டும்.

    நாங்கள் செய்யப் போவது இதுதான்:  ஒரு கட்டுப்பாட்டு முறையில் எரிக்கரு வில்லைச் சிமிழின் [Deuterium – Tritium Pellet [D-T Pellet]  Fuel Capsule] வெளிப்புற கவசத்தை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் உடைப்பதே எங்கள் முயற்சி.   அப்படிச் செய்யும் போது எரிக்கரு வில்லை [D-T Pellet]  அழுத்தம் அடைந்து, சரியான கட்டத்தில் அணுப்பிணைவு இயக்கம் தூண்டப்படும்.

    ஜான் எட்வேர்ட்ஸ்  [Associate Director, NIF National Ignition Facility for Fusion Power]  

    எக்ஸ்ரே கதிர்கள் தூண்டும் அணுப்பிணைவு முறையில் தீர்க்கப் பட வேண்டிய  ஒரு பெரும் இடையூறு : எருக்கருச் சிமிழ் முதிரா நிலையில் முன்னதாய் முறிந்து போய் [Premature Breakdown] விடுவது.   ஆற்றல் மிக்க எக்ஸ்ரே கதிர்களின் அடர்த்தி காலிச் சிமிழி குறியில் [Hohlraum –> Hollow Room]  தேவையான அழுத்தம் உண்டாக்கி அணுப் பிணைவைத் தூண்டுகிறது.

    ஜான் எட்வேர்ட்ஸ்  [Associate Director, NIF National Ignition Facility for Fusion Power]  

    Fusion power -4

    பிண்டம் ! சக்தி ! அணுப்பிணைவுச் சக்தி !

    இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் !  அதுபோல், அமைதிக் காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தியை உற்பத்தி செய்யப் போகிறார்கள்.

    கட்டுரை ஆசிரியர்

    “அணுசக்தி ஆற்றல் உற்பத்தியில் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறைப்பாடு சூழ்வெளிப் பசுமைப் பண்பாடு மின்சாரமாகக் கருதப்படுகிறது. அது அணுப்பிளவு (Nuclear Fission) முறைப்பாடை விட சூழ்வெளித் துர்மாசுக்கள் மிகவும் குறைவானது.”

    ஜாப் வாண்டர் லான் – நெதர்லாந்து எரிசக்தி ஆய்வு மையம். (June 28, 2005)

    அணுப்பிணைவுச்  சோதனையில் செய்த ஒரு பெரும் சாதனை

    காலிஃபோர்னியாவின் வாரென்ஸ் லிவர்மோர் தேசீய சோதனைக் கூடத்தில்   [Dept of Energy’s Lawrence Livermore National Lab]  [National Ignition Facility- NIF]    ஆராய்ச்சியாளர்கள்  அணுபிணைவு சக்தி வெளியீட்டில் ஒரு நூதனச் சாதனையைச் சோதனையின் போது செய்து காட்டினர்.   தேசீய அணுப்பிணைவுத் தூண்டல்  யந்திரத்தில் [National Ignition Facility – NIF]  ஒருமித்த ஆற்றல் மிக்க 192  லேசர் ஒளிக்கதிர்களை உண்டாக்கி  [1.8 மெகா ஜூல்ஸ் சக்தியில்] (megajoules of energy) முதன்முதல் 500 டெட்ரா வாட்ஸ் மின்சார ஆற்றலை [tetrawatts power – 10^12 watts] உருவாக்கினர்.   இந்த அசுர மின்னாற்றல் ஒரு கணத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் மொத்த மின்சார யூனிட்டுகளை விட 1000 மடங்கு ஆகும்.  அதாவது பூமியிலே ஒரு குட்டிச் சூரியனை முதன்முதல் உண்டாக்கி விட்டார்.

    சூரியன் போல் அணுப்பிணைவு நியதியில் பேரளவு வெப்ப சக்தி வெளியாக்கச் செய்யும் சோதனையில் முதன்முதல் சுயமாய்ப் அணுப்பிணைவுத் தொடரியக்கம் நீடிக்கச் செய்து பேரளவு மின்னாற்றலை உற்பத்தி செய்தனர்.  இவ்வரிய தகவல் செய்தி,  பிளாஸ்மா ஒளிப் பிழம்பு பௌதிக இதழில்  [Journal Physics of Plasmas] சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது.   ஆயினும் அணுப்பிணைவு மின்சக்தி  உற்பத்தி வாணிப நிலைக்கு வர,  இன்னும் மூன்று முக்கிய இடையூறுகள் தீர்க்கப்பட வேண்டும்.

    Indian fusion program

    சுய நீடிப்பு அணுப்பிணைவு இயக்க சக்திக்கு நேரும் மூன்று இடையூறுகள் :

    1.  விசைகள் சமநிலைப்பாடு [Equilibrium of Forces]  :

    பிளாஸ்மா  ஒளிப் பிழம்பு மீது இயங்கும் உந்துவிசைகள் சமநிலைப் படவேண்டும்.  இல்லாவிட்டால் பிளாஸ்மா ஓரினத் தன்மையின்றி முறிந்து போகும்.   இந்த விசைச் சமன்பாடு இழப்பு முதல் இடையூறு.   அதற்கு முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement] ஓர் விதிவிலக்கு.   அதனில் பௌதிக இயக்கம் பிளாஸ்மா முறிவதற்குள் விரைவாக நிகழ வேண்டும்.

    2.  பிளாஸ்மா நீடிப்பு  [Plasma Stability] :

    பிளாஸ்மா ஒருமைப்பாடு சிறு ஏற்ற இறக்கம், குறைவு நிறைவு செய்யப் பட்டு  முதல் வடிவத்துக்கு மீள வேண்டும்.   இல்லா விட்டால் பிளாஸ்மாவில் தவிர்க்க முடியாத பாதிப்புகள் நேரிடும்.   பிறகு அந்த தவறு செங்குத்தாக ஏறி பிளாஸ்மா முற்றிலும் அழிந்து போகும்.

    3.   துகள்கள் போக்கு  [Transport of Particles] :

    துகள்கள் இழப்பு பாதைகள் பூராவும் மிகவும் குறைய வேண்டும்.    அதைக் கசிய விடாமல் காப்பது முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement].

    அணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில் வாணிப நிலைக்கு விரைவில் வரலாம் அல்லது சற்று நீடிக்கலாம்.  எப்படியும் 2050 ஆண்டுக்குள் அணுப்பிணைவு மின்சக்தி வர்த்தக ரீதியில் மி விளக்குகளை ஏற்றிவிடும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

    ajay

    “சூழ்வெளிக் காலநிலை மாற்றாமல் பேரளவு மின்சக்தி ஆக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு முயற்சியில் அணுப்பிணைவுச் சக்தி விருத்தி அடையப் பிரான்சில் விரைவாகக் கட்டப் போகும் அகில நாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) ஒரு பெரும் வரலாற்று மைல் கல்லாகக் கருதப்படுகிறது.”

    பேராசிரியர் கிரிஸ் லிவெல்லின் ஸ்மித் (UK Atomic Energy Agency) (June 28, 2005)

    “அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமான வேலைகள் 2005 ஆண்டு இறுதியில் துவங்கும். திட்டத்தின் பொறித்துறை நுணுக்க விளக்கங்கள் யாவும் இப்போது முடிவாகி விட்டன. அகில நாடுகளின் முழுக் கூட்டுழைப்பில் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) பூரணமாகி இத்திட்டம் முன்னடி வைப்பதில் நாங்கள் பூரிப்படைகிறோம்.”

    பையா ஆரன்கில்டே ஹான்ஸன் (European Commission) (June 28, 2005)

    “கடந்த 15 ஆண்டுகளாக அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைத் (ITER) திட்ட அமைப்பில் பங்களித்து அது நிறுவனமாகச் சிக்கலான உடன்பாடுகளில் உதவி செய்தது குறித்து, அணுசக்திப் பேரவை (IAEA) பெருமகிழ்ச்சி அடைகிறது. மேலும் பரிதியை இயக்கும் மூலச்சக்தியான அணுப்பிணைவுச் சக்தியை விஞ்ஞானப் பொறியியல் சாதனங்களால் பூமியில் உற்பத்தி செய்யக் கூடுமா என்று ஆராயும் அத்திட்டத்துக்கும் அணுசக்தி பேரவை தொடர்ந்து உதவி புரியும்.”

    வெர்னர் புர்கார்ட் (Deputy Director General & Haed IAEA Nuclear Science and Applications) (June 28, 2005)

    “அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) கூடிய விரைவில் இயங்க ஆரம்பித்து உலக மாந்தர் அனைவருக்கும் எதிர்காலத்தில் மின்சக்தி அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.”

    நரியாக்கி நகயாமா (ஜப்பான் விஞ்ஞான அமைச்சர்) (June 28, 2005)

    பிரான்சில் புது அணுப்பிணைவு மின்சக்திச் சோதனை நிலையம்

    முதல் அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமானத் திட்டத்தில் ஜப்பான் தேசம் கடுமையாகப் போட்டி யிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றது பிரான்ஸ். அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) அடுத்தபடி வெப்ப அணுக்கருச் சோதனை நிலைய அமைப்பே நிதிச் செலவு மிக்க (12 பில்லியன் டாலர் திட்டம்) ஓர் திட்டமாகக் கருதப் படுகிறது ! வெப்ப அணுக்கருச் சக்தி எனப்படுவது பரிதி ஆக்கும் அணுப்பிணைவுச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இதுவரைச் சூழ்வெளியை மாசுபடுத்திய அணுப்பிளவு, நிலக்கரி போன்ற பூதள எருக்கள் (Fission & Fossil Fuels) போலின்றி ஒப்புநோக்கினால் பேரளவு தூயதானது அணுப்பிணைவுச் சக்தியே (Fusion Energy) !

    Fusion Reactor -1

    பதினெட்டு மாதங்கள் தர்க்கத்துக்கு உள்ளாகி முடிவாக ஜூன் 28 2005 ஆம் தேதி மாஸ்கோவில் ஆறு உறுப்பினர் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) உடன்பட்டு அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலையைக் [International Thermonuclear Experimental Reactor (ITER)] கட்டுமிடம் பிரான்ஸாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ITER திட்டத்தின் முக்கிய பங்காளர்கள் ஈரோப்பியன் யூனியன் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, டென்மார்க், ஆஸ்டியா, நெதர்லாந்து, போலந்து, ஸ்வீடன். . . ), ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா). நிதிப் பங்களிப்பில் ஈரோப்பியன் யூனியன் 50% தொகை அளிப்பை மேற்கொண்டது. பிரான்ஸில் இடத்தேர்வு : மார்சேல்ஸ் நகருக்கு 60 கி.மீ. (37 மைல்) தூரத்தில் இருக்கும் “கடராச்சே அணுவியல் ஆராய்ச்சி மையம்” (Cadarache in France).

     

    அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையத்தின் விபரங்கள்

    வியன்னாவில் இருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவை தலைமை அகத்தில் நீண்ட காலக் குறிக்கோள் திட்டமான அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தின் முன்னடி வைப்பு 2005 ஜூன் 28 ஆம் தேதியில் ஒரு பெரும் விஞ்ஞானச் சாதனையாக வெற்றிவிழாக் கொண்டாடப் பட்டது ! அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப் பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது ! அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் ! பன்னாட்டுப் பொறித்துறை வல்லுநர்கள் ! இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் ! அதுபோல், அமைதி காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறார்கள் !

    அணுப்பிணைவுச் சோதனை நிலையம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.

    — நிலைய மின்சார உற்பத்தி : 500 MW
    — நியூட்ரான் சக்தி : 14 MeV (Million Electron Volt).
    — காந்த மதில் ஆற்றல் தகுதி : 0.57 MW/Square meter
    — பிளாஸ்மா (கனல் பிழம்பு) பெரு ஆரம் : 6.2 மீடர்.
    — பிளாஸ்மா (கனல் பிழம்பு) குறு ஆரம் : 2.0 மீடர்
    — பிளாஸ்மா மின்னோட்டம் : 15 MA (Million Amps)
    — பிளாஸ்மா கொள்ளளவு : 837 கியூபிக் மீடர்.
    — வளையத்தின் காந்த தளம் 6.2 மீடரில் 5.3 T (Toroidal Field)
    — நிலைய யந்திரங்கள் இயக்கத் தேவை : 78 MW
    — நிலையத் திட்டச் செலவு : 15 பில்லியன் டாலர் (2015 நாணய மதிப்பு)

    ++++++++

    அணுப்பிணைவுச் சக்தி எப்படி உண்டாகிறது ?

    சூரியனிலும் சுயவொளி விண்மீன்களிலும் ஹைடிரஜன் வாயுவை மிகையான ஈர்ப்பு விசை அழுத்தத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பிளாஸ்மா நிலையில் (கனல் பிழம்பு) இணைத்து அணுப்பிணைவுத் தொடரியக்கத்தில் ஹீலிய வாயும் வெப்பச் சக்தியும் வெளியாகின்றன. அந்த வெப்ப மோதலின் விளைவில் உயர்சக்தி நியூட்ரான்களும் (High Energy Neutrons) எழுகின்றன ! ஹைடிரன் ஏகமூலங்களான (Isotopes of Hydrogen) டியூடிரியம் & டிரிடியம் (50% Deuterium & 50% Tritium) அணுப்பிணைவு எருக்களாகப் பயன்படுகின்றன. ஹைடிஜன், டியூடிரியம், டிரிடியம் மூன்று வாயுக்களின் அணுக்கருவிலும் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. ஆனால் டியூடிரியத்தில் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் உள்ளன. டிரிடியத்தில் ஒரு புரோட்டானும், இரண்டு நியூட்ரான்களும் இருக்கின்றன. அவை பேரளவு உஷ்ணத்தில் (100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) பிளாஸ்மாவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியமாகின்றன. அந்த உஷ்ணம் பரிதியின் உட்கரு உஷ்ணத்தை விட 10 மடங்கி மிகையானது !

    அணுப்பிணைவுக்கு அத்தகைய மிகையான உஷ்ணம் ஏன் தேவைப் படுகிறது ? பரிதியின் வாயுக் கோளத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணம் உண்டாவதற்கு அதன் அசுர ஈர்ப்புச் சக்தி அழுத்தம் கொடுக்கிறது. அந்த உஷ்ணத்தில் அணுக்கருக்கள் ஒன்றை ஒன்று இழுத்துச் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் மனிதர் உண்டாக்கும் அணுப்பிணைவு உலையில் அத்தகைய அழுத்தம் ஏற்படுத்த முடியாததால் அணுப்பிணைவை உண்டாக்க சூரியனைப் போல் பத்து மடங்கு உஷ்ண நிலை [100 மில்லியன் டிகிரி C.] தேவைப்படுகிறது. அந்த அழுத்தத்தை எப்படி உண்டாக்குவது ?

    1. வாகன எஞ்சின் போல் பிஸ்டன் மூலம் வாயுக்களில் அழுத்தம் உண்டாக்கி வாயுக்களில் உஷ்ணத்தை அதிகமாக்கலாம்.

    2. மின்சார ஓட்டத்தை ஏற்படுத்தி வாயுக்களில் உஷ்ணப் படுத்தலாம்.

    3. வாயுக்களை ஓர் அரணுக்குள் உயர்சக்தி நியூட்ரான்களால் தாக்கி உஷ்ணத்தை மிகையாக்கலாம்.

    4. நுண்ணலைகள் (Microwaves) மூலம் அல்லது லேஸர் கதிர்களால் (Laser Beams) வாயுக்களில் உஷ்ணத்தை மிகைப்படுத்தலாம்.

    மூன்று முறைகளில் பிளாஸ்மா கனல் பிழம்பை உண்டாக்கலாம்:

    1. பிளாஸ்மா அரண் (Plasma Confinement) (பரிதி, விண்மீன்களில் உள்ளதுபோல்)

    2. முடத்துவ முறை (Inertial Method).

    3. காந்தத் தளமுறை (Magnetic Method).

    சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!

    சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K! சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா ?

    1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது! ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான்! ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது!

    அணுப்பிணைவை ஆய்வுக் கூடத்தில் எவ்வாறு ஆக்குவது ?

    ஹைடிரஜன் வாயுவுக்கு இரண்டு ‘ஏகமூலங்கள்’ [Isotopes] உள்ளன. ஒன்று டியூட்டிரியம் [Deuterium], மற்றொன்று டிரிடியம் [Tritium]. ஏகமூலங்கள் என்பவை, ஒரே புரோட்டான் [Proton] எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான் [Neutrons] எண்ணிக்கை யுள்ள மூலகங்கள் [Elements]. ஏகமூலங்கள் ஒரே மின்னீர்ப்பு [Electric Charge] மேவி, வெவ்வேறு அணுப்பளுவைக் [Atomic Mass] கொண்டவை. மூலகங்களின் அணிப் பட்டியலில் [Periodic Tables of Elements], ஏகமூலங்கள் யாவும் ஒரே இல்லத்தில் இடம் பெறுபவை. டியூட்டிரியம் மூலஅணு [Molecule] நீரில் 7000 இல் ஒன்றாக இயற்கையில் இருப்பதை, ரசாயன முறையில் பிரித்து எடுக்க வேண்டும். டிரிடியம் கனநீர் யுரேனிய அணு உலைகள் [Heavy Water Uranium Reactors] இயங்கும் போது, கனநீரில் உண்டாகிறது. கனடாவில் இயங்கும் காண்டு [CANDU] அணு உலைகளில் நிறைய கனநீரும், டிரிடியமும் இருப்பதால், பிணைவுச் சக்தி ஆய்வுக்குத் தேவையான எளிய வாயு மூலகங்கள் [Light Elements] கனடாவில் எப்போதும் கிடைக்கின்றன. ஆராய்ச்சி முறையில் பயன் படுத்திய போது, எளிய மூலகங்களான ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் ஆகியவற்றில், [டியூட்டிரியம் + டிரிடியம்] வாயு இணைப்பே அதிக வெப்ப சக்தியை ஈன்றதால், உலகில் பல நாடுகள் அணுப் பிணைவு உலையில், அவ்விரண்டு வாயுக்களையே எரிப் பண்டங்களாய் உபயோகித்து வருகின்றன. இந்த இயக்கம் தூண்டுவதற்கு வேண்டிய உஷ்ணம், 80 மில்லியன் டிகிரி C.

    டியூட்டிரியம் +டிரிடியம் –> ஹீலியம் +நியூட்ரான் +17.6 MeV சக்தி Deuterium +Tritium –> Helium +Neutron +17.6 MeV Energy

    இருபதாம் நூற்றாண்டில் உருவான மிக மேம்பட்ட ஆய்வுப் பிணைவு உலை [Fusion Reactor] ‘டோகாமாக்’ [Tokamak] என்பது, காந்தக் கம்பிகள் சுற்றப் பட்டு டோனட் [Donut] வளையத்தில் அமைந்த ஒரு பிரம்மாண்ட மான மின்யந்திரம். ‘டோகாமாக் ‘ என்பது ரஷ்யச் சுருக்குப் பெயர். அதன் பொருள்: வளை காந்தக் கலம் [Toroidal Magnetic Chamber]. அதனுள்ளே பேரளவு காந்தத் தளத்தைக் கிளப்பி பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் மின்னியல் வாயுப் பிழம்பை [Plasma] உண்டாக்கி வளையச்சுவர் கடும் வெப்பத்தில் உருகிப் போகாமல் உள்ளடக்க வேண்டும்! இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை! பிண்டம் நான்கு வித வடிவுகள் [Four States of Matter] கொண்டது. திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas & Plasma]. வாயு அதிக உஷ்ணத்தில் நேர், எதிர் மின்னிகளாய்ப் [Positive, Negative Ions] பிரிந்து பிழம்பு வடிவாக மாறி மின்கடத்தி [Electrical Conductor] யாகிறது. பிணைவுச் சக்தியை மூலமாகக் கொண்டு இயங்கும் மின்சக்தி நிலையத்தில், ஹீலிய வாயு பிழம்பின் வெப்பப் போர்வையாகவும், கடத்தியாகவும் [Helium Blanket for Plasma & Heat Transport Medium] பயன் ஆகலாம். சூடேரிய ஹீலிய வாயு வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நீராவியை உண்டாக்கி டர்பைன் ஜனனியை [Turbine Generator] ஓட்டச் செய்யலாம். அமெரிக்காவின் மிகப் பெரும் ஆய்வு டோகாமாக், நியூ ஜெர்ஸி பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.

    மூன்று வித முறைகளில் அனல் பிழம்பை அரணிட்டு [Plasma Confinement] அணுப்பிணைவு இயக்கம் நிகழ்த்தலாம். முதலாவது முறை ‘ஈர்ப்பியல் அரண் பிணைப்பு ‘ [Gravitational Confinement Fusion]. இம்முறைக்கு சூரிய, சுடரொளி விண்மீன்களில் இயங்கும் பேரளவு உஷ்ணம், வாயுப் பேரழுத்தம் தேவைப் படுகிறது. மனிதனால் இவற்றைப் பூமியில் சாதிக்க முடியாது! அடுத்தது, ‘காந்தவியல் அரண் பிணைப்பு’ [Magnetic Confinement Fusion]. ஆய்வுக் கூடத்தில் இது சாத்திய மானது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி முறைக்கு உலகெங்கும் பயன் படுகிறது. இம்முறையில் உருவானதுதான் டோகாமாக் [Tokamak] யந்திரம். அனல் பிழம்பு நீடிக்க, மூன்று முக்கிய நிபந்தனைத் தொடர்புகள் பொருந்த வேண்டும்: உஷ்ணம், காலம், அடர்த்தி [Temperature, Time & Density]. 200 மில்லியன் டிகிரி உஷ்ணப் பிழம்பு சில வினாடிகள் நீடிக்க, வாயு அடர்த்தி ஓரளவு தேவை. இந்த உறவை ‘லாசன் நியதி ‘ [Lawson Criterion] என்று கூறுவர். மூன்றாவது முறை: ‘முடவியல் அரண் பிணைப்பு’ [Inertial Confinement Fusion]. இதில் லேசர் வீச்சுக் கதிர்களைப் [Laser Beams] பாய்ச்சி உள்வெடிப்பு [Implosion] நிகழ்த்தி அனல் பிழம்பு உண்டு பண்ணிப் பிணைப்பு சக்தி ஏற்படுத்துவது. இம்முறை பெரும்பாலும் அணு ஆயுதம் [Nuclear Weapons] தயார் செய்ய, யுத்த விஞ்ஞானிகளுக்குப் பயன் படுகிறது.

    அணுப்பிணைவுச் சக்தியின் நிறைபாடுகள்! குறைபாடுகள்!

    பிணைவுச் சக்தி பிளவுச் சக்தியை விட பல முறைகளில் மேன்மை யுற்றது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிர் இனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] அதிக அளவு இல்லை! பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே! அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது! பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை! அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங் களுக்குத் தீங்கு தருவன அல்ல! அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை! பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது! மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி வாயுக்கள் ஹைடிரஜன், டியூட்டிரியம் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கிறது. எதிர் காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வாயு எரி பொருளுக்குப் பஞ்சமே இருக்காது!

    ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன! கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது! அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது! அதன் விளைவு களையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும்! விசை மிக்க மின்காந்த அமுக்கமும், வேறுபாடு மிக்க கடும் உஷ்ண ஏற்ற இறக்கத்தால் நேரும் வெப்ப அழுத்தமும், அதி உக்கிர நியூட்டிரான் கணைத் தாக்குதலால் நிகழும் அடியும், தாங்கிக் கொண்டு நீண்ட காலம் உறுதியாக இயங்கும், நிலையச் சாதனங்களைக் கண்டு பிடிப்பது சிரமான முயற்சி.

    அணுப்பிணைவு சக்தி உற்பத்தியின் மேம்பாடுகள்!

    அணுப்பிணைவு உலைகளுக்கு வேண்டிய எரு உலக நீர்வளத்தில் எண்ணிக்கை யற்ற அளவு உள்ளது. பேரளவு ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு சக்தி நிலையங்களை அமைப்பது சாத்திய மாகும். மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்கும் தேவையானது சிறிதளவு எருதான்! உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம்! பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம்! அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா! பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்று விடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை! பிணைவு அணு உலையில் எழும் நியூட்ரான்கள் விரைவில் தீவிரத்தை இழப்பதால் பாதகம் மிகக் குறைவு. உலையின் மற்ற பாகங்களை நியூட்ரான் தாக்குவதால் எழும் இரண்டாம் தர கதிர்வீச்சுகளைக் கவசங்களால் பாதுகாப்பது எளிது. கதிர்ப் பொழிவுகளால் சூழ்மண்டல நாசம், நுகரும் காற்றில் மாசுகள் விளைவு போன்றவை ஏற்படுவதில்லை!

    வெப்ப அணுக்கரு நிலையத்தை எதிர்த்து கிரீன்பீஸ் வாதிகள் கூக்குரல் !

    ஒரு கிலோ கிராம் அணுப்பிணைவு எருக்கள் (Fusion Fuel Deuterium +Tritium) 10,000 டன் நிலக்கரிக்குச் (Fossil Fuel) சமமான எரிசக்தி அளிக்கும் ! இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது ! அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா ! சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் ! அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செயல் முறைக்கு ஒவ்வாதது என்று தமது நம்பிக்கை இல்லாமையை அவர் தெரிவித்தார். “12 பில்லியன் டாலரில் 10,000 மெகாவாட் கடற்கரைக் காற்றாடிகள் மூலம் தயாரித்து 7.5 மில்லியன் ஐரோப்பிய மக்களுக்கு மின்சாரம் பரிமாறலாம்,” என்று அகில நாட்டு கிரீன்பீஸ் பேரவையைச் சேர்ந்த ஜான் வந்தே புட்டி (Jan Vande Putte) கூறினார். “உலக நாடுகளின் அரசுகள் பணத்தை வீணாக விஞ்ஞான விளையாட்டுச் சாதனங்களில் விரையமாக்கக் கூடாதென்றும், அவை ஒருபோதும் மின்சக்தி அனுப்பப் போவதில்லை என்றும், 2080 ஆம் ஆண்டில் குவிந்து கிடக்கும் “மீள் பிறப்பு எரிசக்தியைப்” (Renewable Energy) பயன்படுத்தாமல் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் பறைசாற்றினர்.

    ++++++++++++++++++++++++++++++

    தகவல்

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)
    20 IAEA Report – France to Host ITER International Nuclear Fusion Project (June 28, 2005)
    21 IAEA Report Focus on Fusion By : IAEA Staff
    22 IAEA Report – Fusion : Energy of the Future By : Ursula Schneider IAEA Physics Section
    World Atom Staff Report.
    23 BBC News : France Gets Nuclear Fusion (Experimental) Plant.
    24 World : France Chosen to Host Experimental Fusion Reactor Project By : Breffni O’Rourke(June 28, 2005).
    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203101&format=html(அணுப்பிணைவுச் சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி)
    26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303172&format=html(இருபது ஆண்டுகளில் அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி)
    27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40508052&format=html (21 ஆவது நூற்றாண்டின் அணுப்பிணைவுச் சக்தி ஆற்றலுக்கு லேஸர் கதிர்கள்)
    28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40709271&format=html(கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப்பிணைவு மின்சக்தி நிலையம்)

    29.  http://www.popularmechanics.com/science/energy/next-generation/is-fusion-power-finally-for-real  [June 21, 2011]

    29 (a)  http://ens-newswire.com/2013/03/28/japan-turns-from-nuclear-fission-to-nuclear-fusion/  [March 28, 2013]

    30.  http://world-nuclear.org/info/Current-and-Future-Generation/Nuclear-Fusion-Power/#.UkceJNNza9I  [August, 2013]

    31.  http://www.opli.net/opli_magazine/eo/2013/laser-fusion-experiment-yields-record-energy-at-llnl.aspx  [August 26, 2013]

    32.  http://en.wikipedia.org/wiki/National_Ignition_Facility   [September 17, 2013]

    32(a)  http://www.theguardian.com/environment/2011/aug/23/fusion-power-is-it-getting-closer  [August 23, 2011]

    33.  http://en.wikipedia.org/wiki/Fusion_power   [September 27, 2013]

    34.  http://www.world-nuclear.org/info/Current-and-Future-Generation/Nuclear-Fusion-Power/  [October 2014]

    35.  Fusion reactors ‘economically viable’ say experts  [October 7, 2015]

    36.  https://en.wikipedia.org/wiki/Fusion_power  [October 26, 2015]

    37.  http://www.bing.com/images/search?q=Fusion+nuclear+power+plants&qpvt  [2015]

    38.  http://www.futuretimeline.net/blog/2015/10/8.htm#.VjJ3G_mrRuk  [October 8, 2015]

    +++++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  October 31, 2015

    https://jayabarathan.wordpress.com/

    Attachments area
    Preview YouTube video Nuclear fusion within reach | Michel Laberge | TEDxKC

    Nuclear fusion within reach | Michel Laberge | TEDxKC

    Preview YouTube video ITER – nuclear fusion power plant prototype

    ITER – nuclear fusion power plant prototype

    Preview YouTube video Focus Fusion: The Fastest Route to Cheap, Clean Energy

    Focus Fusion: The Fastest Route to Cheap, Clean Energy

    Preview YouTube video The Energy Challenge and the Case for Fusion

    The Energy Challenge and the Case for Fusion

    Preview YouTube video LIFE: Laser Initial Fusion Energy System

    LIFE: Laser Initial Fusion Energy System

    Preview YouTube video Thermonuclear fusion versus Murphy’s Law

    Thermonuclear fusion versus Murphy’s Law

    Preview YouTube video Koho – Changing Banking In Canada

    Koho – Changing Banking In Canada

    Preview YouTube video Fusion Energy: Utopian or Practical?: Andrew Zwicker at TEDxSaintPetersUniversity

    Fusion Energy: Utopian or Practical?: Andrew Zwicker at TEDxSaintPetersUniversity

    Preview YouTube video ITER Fusion Power Plant Assembly in France

    ITER Fusion Power Plant Assembly in France

    Preview YouTube video Lockheed Martin: Compact Fusion Research & Development

    Lockheed Martin: Compact Fusion Research & Development
    Share
  • ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….

     கிரேசி மோகன்

    images
    ———————————————————–

    ”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு,
    பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ,
    தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி
    ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”…….

    ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே,
    தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ,
    மாலோலன் தங்காய், மனோன்மணி கண்ணுறங்கு,
    காலேல கண்மலர்ந்து கா

    கா -காப்பாய்….

    பொற்கரத்தில் மாலையும், புத்தகமும் ஏந்தியவா(று)
    அற்புதங்கள் செய்ய அலைந்தனையே, -கற்பகமே,
    கண்ணுறங்கு பாலேலோ,கால்வலிக்கப் போகிறது,
    பண்ணுறங்கப் பாடுமெனைப் பார்

    ஈசனிரு கண்ணை இறுகநீ மூடியதால்,
    தேசம் இருண்டதே தேவியே ! -வீசிடும்
    கண்ணிமைகள் பொத்தியதி காலை எழந்திடலாம்,
    பெண்ணிமய பாலா படு

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: கடலுள்ளும் காண்பவே நன்கு

    ஒல்லாத வின்றி உடையார் கருமங்கள்
    நல்லவாய் நாடி நடக்குமாம் – இல்லார்க்
    கிடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!
    கடலுள்ளும் காண்பவே நன்கு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஒல்லாத இன்றி, உடையார் கருமங்கள்
    நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு
    இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!
    கடலுள்ளும் காண்பவே, நன்கு.

    பொருள் விளக்கம்:
    இயலாமல் போனது என்று (தடையேதும்) இல்லாமல், செல்வந்தரின் காரியங்கள் நல்ல முறையில் இனிதே நடந்தேறும். பொருள் இல்லாதவருடைய செயல்கள் துன்பமாகவே முடியும். சிறந்த நீர்வளம் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, (பொருள் உள்ளவர்) கடல்தாண்டி சென்றாலும் காரியத்தில் நன்கு வெற்றி காண்பார்.

    பழமொழி சொல்லும் பாடம்: பொருள் உடையவர் தொடங்கும் காரியங்கள் தடையின்றி நன்கே முடியும். காரியத்தின் வெற்றி தோல்விக்கு பொருளாதார நிலை காரணமாக அமைகிறது. இதனையே வள்ளுவர்,

    பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று. (குறள்: 753)

    பொருள் என்ற அணையாவிளக்கைப் பெற்றிருப்பவரால், எந்த தேசத்திற்குச் சென்றாலும் இருள் என்ற துன்பத்தை பொருளால் விரட்டி வெற்றி காண முடியும் என்கிறார்.

    Share
  • அறிந்துகொள்வோம் – 22 (சிந்தனையாளர் ரூசோ)

    -மேகலா இராமமூர்த்தி

    இருபுரட்சிகளுக்கு வித்திட்ட ஒருவர்!

    சமூகம் என்ற மக்கள்தொகுதியின் சிந்தனையானது காலந்தோறும் சிறிதளவேனும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றது. ’பழையன கழிதலும் புதியன புகுதலும்’ காலவோட்டத்தில் இயல்பானதே. ஆனால் இம்மாற்றங்கள் நல்லனவாகவும், மக்களுக்கு நன்மை பயப்பனவாகவும் இருப்பின் வரவேற்கத்தக்கவையே. இவை மெல்லவும் நிகழலாம்; புரட்சியெனும் மக்களெழுச்சி மூலம் ஒல்லையாகவும் நடந்தேறலாம்.

    சமூக மறுமலர்ச்சிக்குக் காரணமாயிருக்கும் இத்தகைய புரட்சிகள் பூக்கவேண்டுமாயின் அதற்கான உந்துவிசையாக யாரேனும் அல்லது எவையேனும் இருத்தல் அவசியம். அவ்வகையில் தம் எழுத்துக்கள் மூலம் ஒரு புரட்சிக்கு…இல்லையில்லை இருபுரட்சிகளுக்கு வித்திட்டார் ஓர் சிந்தனையாளர். அவர்தான் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவில் (Geneva) பிறந்து பின்னர் பிரான்சில் வாழ்ந்து மறைந்த ழாJean-Jacques_Rousseauன் ழக்கே ரூசோ (Jean Jacques Rousseau).

    1712-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் நாள் பிறந்த ரூசோ, பிறந்த பத்தாம் நாளே தாயைப் பறிகொடுத்தார். கதவை மூடிய இறைவன் சன்னலைத் திறப்பான் என்ற மக்கள் நம்பிக்கைக்கேற்ப, தாயில்லாப் பிள்ளையாய் ஆனபோதிலும் தன் அருமை அத்தையால் (தந்தை ஐசக் ரூசோவின் சகோதரி) பரிவோடும் பாசத்தோடும் வளர்க்கப்பட்டார் ரூசோ. இளம்வயதில் அத்தையின் பராமரிப்பில் வளர்ந்ததாலோ என்னவோ மிகவும் மென்மையான உள்ளமும் பிறரின் துன்பங்கண்டு துவளும் குணமும் ரூசோவிடம் இயல்பாகவே அமைந்துவிட்டன.

    பள்ளிக்கு ஒழுங்காகச் சென்று கல்வி கற்றதில்லை ரூசோ; ஆனாலும் எப்படியோ தன் 7 வயதிற்குள்ளாகவே பிரெஞ்சு மொழியில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டிருந்தார் அவர். (ரூசோவின் மூதாதையர் பிரான்சிலிருந்து ஜெனிவாவுக்குச் சென்று குடியேறியவர்கள்). பிள்ளைப் பருவத்திலேயே உலக இலக்கியங்கள், இதிகாசங்கள் முதலியவற்றையெல்லாம் தன் தந்தையோடு சேர்ந்து படித்துமுடித்துவிட்டார் ரூசோ என்று கூறப்படுகின்றது. அவருடைய பத்தாவது வயதில் அவர்தந்தை ஐசக்குக்கும் சில அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் அவரின் தந்தையார் ஜெனிவாவைவிட்டே வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆதலால், தன்மகன் ரூசோவை அவனுடைய அம்மான் (maternal uncle) பெர்னார்ட் (Bernard) என்பவரிடம் ஒப்படைத்துச் சென்றார் ரூசோவின் தந்தை.

    அம்மான் மகனும், ரூசோவும் சிலகாலம் ஒரு பாதிரியாரிடம் அவர் இல்லத்தில் தங்கிக் கல்வி பயின்றுவந்தனர். அங்கு ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனையால் கல்வியைத் தொடரமுடியாமல் மீண்டும் வீடு திரும்பிவிட்டனர் இருவரும். கொஞ்சநாட்கள் அம்மான் மகனோடு விளையாடிக்கொண்டும் அங்குமிங்கும் திரிந்துகொண்டும் இருந்தார் ரூசோ. வேலையேதுமில்லாமல் எத்தனை காலத்திற்கு ரூசோவை வீட்டில் வைத்துக்கொண்டிருப்பது என்றெண்ணிய அம்மான், ஆபெல் டுகோமான் (Abel Ducommon) என்ற சிற்பியிடம் ஐந்துவருட ஒப்பந்த அடிப்படையில் ரூசோவை வேலைபழகச் சேர்த்துவிட்டார். ஆனால், டுகோமான் மிகவும் கறாராகவும் கெடுபிடிகள் அதிகம் செய்பவனாகவும் இருந்தது சுயேச்சையாகவும், சுதந்திரப் பிரியராகவும் நடந்துகொள்ளும் ரூசோவுக்குச் சரிப்பட்டுவரவில்லை. போதாக்குறைக்கு, வேலைக்குச் சிறிது காலந்தாழ்த்தி வந்தாலும் கடுமையாகத் தண்டிப்பவனாக இருந்தான் அச்சிற்பி.

    இவ்வாறு சிலமுறை அச்சிற்பியிடம் தண்டனைபெற்ற ரூசோவுக்கு அவ்வேலையும் அடிமைவாழ்வும் சிறிதும் பிடிக்கவில்லை. ஆகவே, தன்னுடைய 16-ஆவது வயதில் ஜெனிவாவை விட்டு வெளியேறிய அவர், கால்போனபோக்கில் சுற்றி இறுதியாய் இத்தாலிக்கு வந்துசேர்ந்தார். அங்கே உதிரிவேலைகள் பல செய்துகொண்டும் சாலையோரங்களிலும் மரத்தடியிலும் உறங்கியும் காலங்கழித்துவந்தார். இடையில் இசைப்பயிற்சி பெற்று இசையாசிரியராகவும் சிலகாலம் பணியாற்றினார். ஒரு கிரேக்கப் பாதிரியாரின் அந்தரங்கச் செயலாளராகச் சிலஆண்டுகள் வேலை செய்தார்.

    செய்யாத வேலைகள் இல்லை என்று கூறுமளவுக்குப் பலதரப்பட்ட பணிகளை அவர் மேற்கொண்டாலும் எதிலும் நிலைத்துநிற்கவில்லை. இயற்கையை இரசிப்பதையும் அதில் இறைவனைக் காண்பதையும், கற்பனைகளில் சஞ்சரிப்பதையும் தம் குணங்களாகக் கொண்டிருந்த ரூசோ, எங்கும்தங்காமல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்தது குறித்துத் தன் வாழ்வில் ஒருபோதும் வருந்தியதாகத் தெரியவில்லை. வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்ந்து அனுபவித்தவர் அவர்.

    ஒருகட்டத்தில் இத்தாலி வாழ்க்கை போதும் என்ற முடிவுக்கு வந்த ரூசோ கிளம்பினார் பாரீஸ் மாநகரை நோக்கி! அப்போது அவருடைய வயது முப்பது. அங்கே ஓட்டல் ஒன்றில் தெரேஸே லெவாஷீர் (Therese Le Vasseur) என்ற பெண்ணைச் சந்தித்தார். இருவருக்கும் காதல் பிறந்தது. அப்பெண்ணைத் தன் துணைவியாக ஏற்றுக்கொண்டார். ரூசோவின் வாழ்வில் எத்தனையோ துயரங்களும் தோல்விகளும் நண்பர்களின் நம்பிக்கை துரோகங்களும் தொடர்ந்தபோதிலும் இறுதிவரை அவருக்குத் துணையாய் நின்றது இப்பெண்மணி மட்டுமே.

    ”எழுதப்படிக்கத் தெரியாத பெண்ணாயிருந்தாலும் உலகஅறிவு நிரம்பப்பெற்றவள் தெரேஸே; மிகவும் நாகரிகமாக நடக்கத்தெரிந்தவளாகவும், எனக்குத் துன்பம்வந்த காலத்துத் தாங்கும் தூணாகவும், எனக்குப் புலப்படாத விஷயங்கள் பலவற்றைத் தான் எளிதில் விளங்கிக்கொண்டு எனக்கும் விளக்கிச்சொல்பவளாகவும் அவள் இருந்தாள்” என்று தன் துணைவியைப்பற்றி மிகவும் உயர்வாகத் தன்னுடைய சுயசரிதையில் (The Confessions – an autobiographical book by Rousseau) குறிப்பிடுகின்றார் ரூசோ. மனைத்தக்க மாண்புடையளாய்த் திகழ்ந்து தன் காதற்கணவன் அயலார்முன் பீடுநடைபோட இவ்வம்மையார் காரணமாயிருந்திருக்கின்றார் என்பது இதனால் தெளிவாகின்றது.

    மிகச்சாதாரணமாய்ச் சென்றுகொண்டிருந்த ரூசோவின் வாழ்வில் திடீரென்று ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது; அவர் புகழ் எங்கும் பரவியது. மக்கள் அவரைக் கொண்டாடத் தொடங்கினர். இதற்கெல்லாம் காரணமாக அமைந்த ஒரு நிகழ்வு 1749—ஆம் ஆண்டு நடந்தது.

    அது என்ன?

    ஒருநாள் பாரீஸின் சாலையொன்றில் பிரெஞ்சுப் பத்திரிகை ஒன்றை வாசித்தப்படியே சென்றுகொண்டிருந்தார் ரூசோ. அதில் டிஜோன் இலக்கியக்கழகத்தார் (Academy of Dijon)  நடத்துவதாக ஒரு கட்டுரைப் போட்டி வெளியாகியிருந்தது. ”கலைகளும் அறிவியலும் வளர்ச்சியடைந்திருப்பதால் மனிதனின் ஒழுக்கம் உயர்வடைந்திருக்கிறதா?” என்பதுதான் தலைப்பு. இதனைக் கண்டதும் ரூசோவின் உடலில் புதுரத்தம் பாய்ந்தது; மூளை சூடேறியது. இந்தத் தலைப்புக் குறித்து எழுதுவதற்கான கருத்துக்கள் அவர் உள்ளத்துள் வெள்ளமெனப் பாய்ந்தன. உணர்ச்சிப்பெருக்கில், சிலநிமிடங்கள் நட்ப்பதை நிறுத்திவிட்டுச் சாலையோரமாய் அமர்ந்துவிட்டார். பின் தன் எண்ணங்களையெல்லாம் எழுத்தாய்வடித்துப் போட்டிக்கு அனுப்பினார்.

    அக்கட்டுரைப் போட்டியில் மொத்தம் பதினைந்து பேர் கலந்துகொண்டனர். அதில் முதல்பரிசை வென்றார் ரூசோ. அவருடைய கட்டுரை புத்தகமாக (Discourse on the Sciences and the Arts) வெளிவந்து அவருக்கு மிகுந்த புகழை பிரான்சிலும் வெளிநாடுகளிலும் பெற்றுத்தந்தது. இலக்கிய உலகில் அசைக்கமுடியாத ஓரிடத்தை இப்புத்தகத்தின் மூலம் ரூசோ அடைந்தார். அதுமட்டுமா? ஐரோப்பிய மக்களிடையே மிகப்பெரும் மனக்கிளர்ச்சியை இந்நூல் தோற்றுவித்தது எனலாம்.

    பிரான்சின் பிரபுக்களும் சீமாட்டிகளும் ரூசோவின் எழுத்துக்களைக் கொண்டாடத் தொடங்கினர். தங்களுடைய ஆடம்பரக் குடில்களில் அவரைத் தங்குமாறு இறைஞ்சினர். அவர்களின் அன்புக்காக, அத்தகைய ஆடம்பரக் குடில்களில் சிலகாலம் ரூசோ தங்கினார் என்றாலும், அவர்மனம் என்றும் எளிமையையும் சுதந்திரத்தையுமே விரும்பிற்று. ஆகவே அவர்களிடமிருந்து விடைபெற்று, சிறிய, காற்றோட்டமில்லாத இருண்டவீடு ஒன்றில் தங்கினார் அவர். அங்கே அவரோடு எலிகளும் வாசம்செய்தன. அவ்வில்லத்தில் இருந்தபோதுதான் 1762-இல் உலகையே புரட்டிப்போட்ட ’சமுதாய ஒப்பந்தம்’ (The Social Contract) எனும் அரசியல் நூலையும், ’எமிலி அல்லது கல்வி’ (Emile, or On Education) எனும் கல்விகுறித்த நூலையும் அவர் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வசித்த அந்த இருண்ட வீடு, அவருடைய அறிவொளியால், அரிய ஆக்கங்களால் தானும் ஒளிபெற்றது என்றே கூறவேண்டும்.

    குழந்தைகளுக்குக் கல்வி எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும் என்பதை வெகுசிறப்பாக விளக்கியிருக்கும் நூல் எமிலி. ஐரோப்பாவின் புதிய கல்விக் கொள்கைகளுக்கெல்லாம் முன்னோடியாய்த் திகழ்வது இந்நூலே. (பின்னாளில் பெரிதும் போற்றப்பட்டாலும், எழுதப்பட்ட காலத்தில் மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்தித்த எமிலி, பிரெஞ்சு அரசாங்கத்தால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது; இந்நூலால் ரூசோ பிரான்ஸைவிட்டே வெளியேறவேண்டிய அவலநிலைக்கு ஆளானார் என்பது வேதனையோடு இங்கே நினைவுகூரப்படவேண்டிய ஒன்றாகும்.)

    எமிலி நூலிலிருந்து சில கருத்துக்கள்…

    குழந்தைக்கு முதன்முதலில் கல்வி போதிப்பவள் தாய்தான். ஆகையால் அவள் கெட்டபழக்கவழக்கங்களிலிருந்து குழந்தைகளைக் காத்து அவர்களுக்குச் சரியான முறையில் கல்விகற்பிக்க வேண்டும்.

    தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வதெப்படி என்பதைப் பெற்றோர் தம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். சுகத்தையும் சோகத்தையும் வளமையையும் வறுமையையும் ஒன்றுபோலத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மையைக் குழந்தைகளிடம் பெற்றோர் ஏற்படுத்துவதும், எளிய உடைகளையும், உண்டிகளையும் அவர்களுக்குப் பழக்கப்படுத்துவதும் மிகவும் அவசியமானது.

    பெண்களைப் பெண்களாகவே வளருங்கள்; அவர்களை ஆண்களை வளர்ப்பது போல் வளர்த்தல் (like a tomboy) அவர்களுக்கும் கெடுதல்; வளர்க்கின்ற பெற்றோருக்கும் கெடுதல்.

    இதுபோன்ற பல நல்லகருத்துக்களைத் தன்னுடைய எமிலியில் வெளிப்படுத்தியிருக்கின்றார் ரூசோ.

    ரஷ்யாவின் புகழ்பெற்ற இலக்கியமேதையான லியோ டால்ஸ்டாய் (One of the most acclaimed Russian writers) ரூசோவின் பரமரசிகராவார். ரூசோவின் வடிவம் பொறித்த பதக்கத்தை (Pendant) எப்போதும் தன்கழுத்தில் அணிந்திருந்தார் அவர் என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல், எமிலி எனும் கல்வி நூலில் ரூசோ குறிப்பிட்டிருக்கும் வகையில்தான் தன் குழந்தைகளுக்குக் கல்விப்பயிற்சியையும் அவர் அளித்தார் என்று தெரியவருகின்றது.

    அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி எனும் இருபெரும் புரட்சிகளுக்கு வித்திட்ட தனிப்பெரும் சிந்தனையாளராய்க் கருதப்படுகின்றார் ரூசோ.

    எப்படி என்கிறீர்களா?

    இங்கிலாந்திலிருந்து (புரட்சிகரமாய்ப்) பிரிந்துவந்த அமெரிக்கா தன் சுதந்திரப் பிரகடனத்தை 1776-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் வெளியிட்டது. அச் சுதந்திரப் பிரகடனத்தின் வாசகங்களாவன:

    ”எல்லா மனிதர்களும் பிறக்கும்போது சமமாகவே பிறக்கின்றார்கள்; அப்படிப் பிறக்கும்போதே படைப்புக் காரணரான (சிருஷ்டிகர்த்தர்) கடவுள் அவர்களுக்குப் பிறரிடம் தொடர்புபடுத்தமுடியாத சில உரிமைகளை அளிக்கின்றார். இவ்வுரிமைகளில் உயிர்வாழ்தல், சுதந்திரமாயிருத்தல், மகிழ்ச்சியான வாழ்வை நாடிச்செல்லுதல் ஆகியவை சேர்ந்திருக்கின்றன.” (All men are created equal, that they are endowed by their Creator with certain unalienable Rights, that among these are Life, Liberty and the pursuit of Happiness – United States Declaration of Independence).

    இதுபோன்றே, 1789-ஆம் ஆண்டு ஆகஸ்டு 4-ஆம் தேதி கூட்டப்பட்ட பிரெஞ்சு தேசியசபையில் மனித உரிமைகள் குறித்த சாசனமொன்று வெளியிடப்பட்டது. அதிலுள்ள மூன்று பிரிவுகளாவன:

    1.மனிதர்கள் பிறக்கின்றபோது உரிமையோடும் சமமாகவும் பிறக்கின்றார்கள். அவ்வாறே வாழ்கின்றார்கள். ஆகையால் அவரவர் உபயோகத்தைப் பொறுத்துச் சமுதாயத்தில் வேற்றுமைகள் இருக்கலாம்.

    2.மனிதனுடைய இவ்வுரிமைகளைக் காப்பாற்றுவதுதான் எல்லா அரசியல் கட்சிகளின் நோக்கமாகும். சுதந்திரம், சொத்து, பாதுகாப்பு, அடக்குமுறையை எதிர்த்துநிற்றல் ஆகியவையே இவ்வுரிமைகளாகும்.

    3.அரசுக்கு மூலகாரணமாக இருப்பது மக்கள்சக்தியே; இம் மக்கள்சக்தியிலிருந்து தெளிவாய்ப் பிறவாத எந்த அதிகாரத்தையும் தனிப்பட்ட மனிதரோ, அல்லது தனிப்பட்ட மனிதர்கள் அடங்கிய ஒரு சங்கமோ பிரயோகிக்கக் கூடாது.

    நாம் மேலேகண்ட இரு(நாடுகளின்) சுதந்திரப் பிரகடன வாசகங்களும் சீர்திருத்தச் சிந்தனையாளர் ரூசோவின் ’சமுதாய ஒப்பந்தம்’ எனும் அரசியல் நூலிலிருந்து எடுக்கப்பட்டவையே.

    இப்போது சொல்லுங்கள்…! இருபெரும் புரட்சிகளுக்குக் கால்கோள் இட்டவர் ரூசோ என்பது உண்மைதானே?

    மிக எளிய குடும்பத்தில் பிறந்து, பல தோல்விகளையும் வலிகளையும் வாழ்வில் சுமந்து, நாடோடியாய்த் திரிந்துகொண்டிருந்த ரூசோ, தன்னுடைய ஆழ்ந்த அறிவாலும் சிந்தனைச் செழுமையாலும் உலகவரலாற்றில் ஓர் உயரிய இடத்தைப்பெற்று, அவருக்குப்பின் பல்வேறு நாடுகளில் தோன்றிய அறிஞர்பெருமக்களான டால்ஸ்டாய், இம்மானுவல் காந்த் (Immanuel Kant , a German philosopher), ஷெல்லர் (Friedrich Schiller, a great German philosopher, poet, etc.) போன்றவர்களுக்கெல்லாம் ஆசானாய், வழிகாட்டியாய்த் திகழ்ந்திருக்கின்றார் என்பது போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியதன்றோ?

    எவனொருவன் தனக்காகச் சிந்திக்காது, வாழாது பிறருக்காக அனைத்தையும் செய்கின்றானோ அவன் மானுட சமுதாயத்தால் வானுறை தெய்வத்திற்கு இணையாய்க் கொண்டாடப்படுவான் என்பதற்குச் சிந்தனையாளர் ரூசோ சிறந்ததோர் சான்றாய்த் திகழ்கின்றார்.

    ***

    கட்டுரைக்கு உதவியவை:

    1. https://en.wikipedia.org/wiki/Jean-Jacques_Rousseau
    2. http://www.britannica.com/biography/Jean-Jacques-Rousseau
    3. ரூசோ – சாமிநாத சர்மா

     

     

    Share
  • வளவன் கனவு (22)

    சு. கோதண்டராமன்

     வெற்றி யாத்திரை

    vallavan-kanavu121

    ஆதியன் ஆதிரையன் அயன் மாலறி தற்கரிய
    சோதியன் சொற்பொருளாய்ச் சுருங் காமறை நான்கினையும்
    ஓதியன் உம்பர்தங்கோன் உல கத்தினுள் எவ்வுயிர்க்கும்
    நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே

    -சம்பந்தர்

    செய்தி வாய்மொழியாகவே அக்கம் பக்கத்து ஊர்களுக்குப் பரவியது. அரைக் காத தூரத்தில் பகவதி அம்மையாரின் பிறந்த ஊரான நனிபள்ளியில்* அச்செய்தி கேட்டதும், அவரது பெற்றோர்கள் தங்கள் பேரனை நினைத்துப் பெருமிதம் அடைந்தனர். அவனைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டனர். உடனே தங்கள் மகன் சம்பந்த சரணாலயனை அனுப்பிக் குழந்தையை அழைத்து வரச் செய்தனர். அவ்வூரைச் சேர்ந்த வேறு பலரும் அவருடன் சேர்ந்துகொண்டனர்.

    செய்தி ஊர் ஊராகப் பரவி பழையாறையில் இருந்த அரசன் புண்ணிய வளவனையும் எட்டியது. ‘காழிப்பதியில் ஒரு மகான் தோன்றுவார் என்று என் தாத்தாவின் தாத்தா சொல்லி வந்தது உண்மையாகிவிட்டது. அதனால்தான் ஆழிப் பேரலை இந்த நகரை அழிக்கவிடாமல் இறைவன் காப்பாற்றி இருக்கிறான். இந்த மகானை நான் உடனே தரிசிக்க வேண்டும். அரசன் என்ற முறையில் போனால் மக்கள் என்னைத்தான் கவனிப்பார்கள். நானும் இக்குழந்தை மகானின் தொண்டர்களில் ஒருவனாக மறைந்து நின்று தரிசித்துவிட்டு வருவேன்’ என்று சொல்லிக் கொண்டார்.

    முதல் அமைச்சரிடம் மட்டும் ரகசியமாகச் சொல்லிவிட்டு மாறுவேடமணிந்துகொண்டு ஒரு குதிரையில் சென்றார். வழி நெடுக மக்கள் இந்தக் குழந்தை பாடுவதைப் பற்றியே வியந்து பேசுவதைக் கேட்டார். காவிரிக்கரையை அடைந்ததும் அங்கு மக்கள் பேசிக் கொள்வதிலிருந்து நனிபள்ளி என்ற இடத்தில்  பெருமான் வந்திருப்பதை அறிந்தார். அங்கு ஊருக்கு வெளியே இருந்த ஒரு தோப்பில் குதிரையிலிருந்து கீழே இறங்கி நடந்து சென்றார்.

    கோயிலை அடைந்தார். அங்கே மக்கள் கூடி இருந்தார்கள். சற்று நேரத்தில் சிவபாத இருதயர் தோளில் ஆரோகணித்து ஞானசம்பந்தப் பெருமான் வந்தார். கூடவே ஏடும் எழுத்தாணியும் கொண்டு மாமன் சம்பந்த சரணாலயர் வந்தார். வரும்போதே மக்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவா என்று கோஷம் எழுப்பினர். குழந்தை மகான் தாளத்தைத் தட்டிக் கொண்டு பியந்தைக் காந்தாரப் பண்ணில் பாடத் தொடங்கினார். கூட்டத்தில்  ஒருவராக அமர்ந்து அரசர் கேட்டார். மெய் மறந்தார். பத்துப் பாடல்கள் முடிந்ததும் அருகில் இருந்தவர்கள் பேசத் தொடங்கியதையும் அரசர் கவனித்தார்.

    “என்ன அழகான இயற்கை வருணனை! நமது ஊர் இவ்வளவு அழகாக இருக்கிறது என்பது இவர் மூலம்தான் தெரிகிறது. தேரைகள் ஆரைக் கொடிகளை மிதித்துத் துள்ள, அதனைக் கண்ட வாளை மீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும் ஊர். இது போல் நாம் யாராவது இந்த ஊரின் அழகை ரசித்திருக்கிறோமா?” என்றார் ஒருவர்.

    “இதுவரையில் இந்த ஊரை அழகற்ற பாலைவனம் என நினைத்திருந்தோம். இதன் நெய்தல் வளம் இப்பொழுதுதான் வெளிப்பட்டிருக்கிறது” என்றார் மற்றவர்.

    “விதி முறைப்படி நீராடி, அர்க்கியம் தரும் அந்தணர்கள் வாழும் ஊர் என்று ஊரில் குடியிருப்போரின் சிறப்பையும் போற்றுகிறது பாருங்கள். இந்த மாதிரிப் பாடுவதற்கு நான்கு வேதம் ஆறு சாஸ்திரம் கற்றிருந்தால் கூட முடியாது, இந்த வயதிற்குள் இக்குழந்தை எங்கே கற்றது?” என்று சிலர் பேசிக் கொண்டனர்.

    அவர்கள் கூறுவதை எதிரொலிப்பது போல் கடைசிப் பாட்டு வந்தது.

    “காழிப் பதியில் நால்வேத, ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதுங்கள். இறைவனை நினையுங்கள். வினைகள் கெடும். இது நமது ஆணையாகும்.”

    “அடா, அடா, என்ன தன்னம்பிக்கை! ஆணையிட்டுச் சொல்கிறாரே!” என்று வியந்தனர்.

    அரசர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு குழந்தை மகானை மனதால் வணங்கி விட்டுச் சத்தமில்லாமல் வெளியேறினார். குதிரை மேல் பயணிக்கும் போது யோசனை செய்துகொண்டே போனார். ‘எதனால் இந்த மகானை நாடி இவ்வளவு கூட்டம் வருகிறது? அவர் குழந்தை என்பதாலா, இறைவனின் சிறப்பையும் அவன் படைத்த இயற்கை அழகையும் அழகிய சொற்களால் போற்றும் அவரது தமிழ்ப் புலமையினாலா, இசை இனிமையாலா, யானையை எதிர்க்கும் சிங்கக் குட்டி என சமணத்தைச் சாடும் துணிச்சலாலா அல்லது இவை எல்லாவற்றின் கலவையாலா? அல்லது இவற்றிற்கு அப்பால் வேறு ஏதாவது உள்ளதா?’ என்று சிந்தித்துக்கொண்டே சென்றார்.

    தலைநகர் வந்ததும் முதல் வேலையாகத் தலைமை அமைச்சரைக் கூப்பிட்டுத்தான் கண்டதைச் சொன்னார். “தர்மத்துக்குக் கேடு நேரும்போதெல்லாம் நான் பிறப்பேன் என்று கண்ணன் கூறியது உண்மைதான். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் அவந்தி தேசத்தில் சைவத்தை நிலைநாட்டிச் சமணத்தை வேரறுத்த லகுலீசர், இப்பொழுது அதே நோக்கத்துக்காக, சோழநாட்டில் அவதரித்துள்ளார். வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நமச்சிவாய மந்திரம் என்று லகுலீசர் சொன்னதையே இவரும் சொல்கிறார். வேள்விகள் செய்வோர் செய்யட்டும், முடியாதவர் வேத மந்திரங்களைக் கூறித் துதிக்கட்டும், அதுவும் இயலாதவர் நமச்சிவாய மந்திர ஜபமாவது செய்யட்டும் அல்லது நான் உரைத்த தமிழ்ப் பாடல்களை ஓதினால் போதும் என்கிறார். எதைச் செய்தாலும் இறை அன்புதான் முக்கியம், காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்குதல்தான் உண்மையான சிவநேசம் என்று கூறுகிறார்.

    “நாமாலை சூடியும் பூமாலை புனைந்தும் இறைவனை ஏத்துங்கள், வினை போகும் என்ற அம்மையாரின் கருத்தை இவர் எதிரொலிக்கிறார்.  இறை அன்பு இல்லாதவர்களை மட்டும்தான் சாடுகிறார். இதுவே பல தரப்பு மக்களையும் இவர்பால் ஈர்க்கிறது. எப்படியோ சிவன் சோழநாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு எந்நாட்டவர்க்கும் இறைவனாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளத் திருவுள்ளம் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை. என் குல முன்னோன் செந்தீ வளவனின் கனவு பலித்துவிட்டது.”

    அமைச்சர் கூறினார், “வேத வேதாங்கங்களைக் கற்றவர்கள் வீடு வீடாகச் சென்று எவ்வளவு பிரசாரம் செய்தாலும் அது ஒரு சில மக்களையே சென்றடையும். பெரும்பாலான பாமர மக்களை விந்தைச் செயல்கள்தாம் ஈர்க்கும். இவர் மூன்று வயதில் செய்யுள் புனைவது ஒரு விந்தை. அதை இசையோடு பாடுவது இன்னொரு விந்தை. இவர் இன்னும் பல செய்வார் என்று தோன்றுகிறது. அதனால் மக்கள் சமுதாயம் முழுவதும் அவர் வசப்படும்.”

    “இளங்கன்று பயமறியாது என்றபடி, கொஞ்சமும் அச்சமில்லாமல் சமணர்களைத் தாக்குகிறார். அவர்களால் அவருக்குத் தீங்கு வரும் வாய்ப்பு உண்டு. அவர் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் மறைமுகமாக அவருக்குப் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நேற்று நான் அவரைத் தரிசித்த நனிபள்ளியில் உள்ள கோயிலின் கருவறையை விரிவுபடுத்தி யானை சுற்றிவரும் அளவுக்குப் பெரிதாக அமைத்து அதன் மேல் ஒரு சிறப்பான வேலைப்பாடு உள்ள விமானம் அமைக்க வேண்டும். அவர் காலடி பட்ட எல்லா ஊர்களும் திரு என்ற அடைமொழி சேர்த்து அழைக்கப்பட வேண்டும். அவர் பிறந்த காழி மிகவும் புண்ணியம் செய்த மண். அது  இனி சீர்காழி என்று அழைக்கப்பட வேண்டும்” என உத்திரவிட்டார் அரசர்.

    ———————————————- —————————————————— ————————-

    * இன்றைய பெயர் புஞ்சை

    தொடரும்

    Share
  • இறைவனை அடையும் மார்க்கம்

    — மு.கோபி சரபோஜி.

    திண்ணன் என்ற வேடவ குலத்தைச் சேர்ந்த இளைஞன் நண்பர்களோடு வேட்டைக்குச் சென்ற இடத்தில் மலையின் மீது இருந்த சிவலிங்கத்தைப் பார்த்து உள்ளம் உருகிப் போனான். யாருமில்லாத இந்தக் காட்டில் உறைந்திருக்கும் இறைவனை யார் பாதுகாப்பது? உணவு தருவது? என்று நினைத்தவன் தானே அவ்விரு காரியங்களையும் செய்ய முடிவெடுத்தான். இறைவனை அபிஷேகம் செய்வதற்கு வேண்டிய நீரை வாயிலும், அழகிய மலர்களைத் தலையிலும், தன் நண்பர்களோடு சமைத்த பன்றி இறைச்சியைக் கையிலும் ஏந்தி வந்து இறைவனுக்குப் படைத்தான். இரவெல்லாம் கண் விழித்துக் காவல் இருந்தவன் காலையில் நீராடச் சென்றான். தினந்தோறும் பூஜை செய்ய வரும் சிவகோசரியார் இறைவனுக்கு இறைச்சி படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அபச்சாரம்….அபச்சாரம் எனக் கூறிக் கொண்டே எல்லாவற்றையும் சுத்தம் செய்து அபிஷேகம் செய்து விட்டு இல்லம் திரும்பினார். மறுநாளும் அப்படி இருப்பதைக் கண்டு இதைச் செய்தவர் யார்? எனக் காட்டும் படி இறைவனிடம் முறையிட்டார்.

    Kannappaஅன்பினால் தன்னைக் கட்டும் பக்தனின் வழிபாட்டைக் காலையில் மறைந்திருந்து பார்க்கும் படி அவர் கனவில் வந்து சொல்லிச் சென்ற இறைவன் மறுநாள் திண்ணனுக்காகக் காத்திருந்தார். வழக்கம் போலப் பன்றி இறைச்சி சகிதம் வந்தவன் சிவலிங்கத்தின் ஒருபக்கக் கண்ணில் இருந்து இரத்தம் வடிவதைக் கண்டு பதறிப்போனான். தன் கையால் நிறுத்த முயன்றான். முடியவில்லை, பச்சிலைகளைப் பறித்து வந்து ஒற்றி எடுத்தான். பலனளிக்கவில்லை. சட்டெனக் கையில் வைத்திருந்த வில்லால் தன் கண்களில் ஒரு கண்ணைத் தோண்டி எடுத்து இரத்தம் வடிந்து கொண்டிருந்த கண் மீது அப்பினான். இரத்தம் நின்று விட்டது. ஆனந்தம் அடைந்தான். இன்னும் அவனைச் சோதித்துப் பார்க்க நினைத்த இறைவன் அடுத்த கண்ணில் இருந்து இரத்தம் வடித்தார். இம்முறை பதறாத திண்ணன் அடையாளம் காண வசதியாகத் தன் கால் கட்டைவிரலை இரத்தம் வடிந்த கண்ணின் மீது வைத்துக் கொண்டு தன்னுடைய இன்னொரு கண்ணையும் வில்லால் தோண்டி எடுக்க முயன்றான். பக்தனின் அன்பைக் கண்டு பதறிப்போன இறைவன் நிறுத்து கண்ணப்ப என்ற குரலோடு அவன் முன் தோன்றி ஆசி வழங்கினார். அன்பினால் செய்யும் பக்தி எதுவானாலும் அது தனக்கு உகந்தது என்பதை சிவகோசாரியாருக்கு மட்டுமல்ல உலகிற்கும் இறைவன் உணர்த்திக் காட்டினான். திண்ணன் கண்ணப்ப நாயனாராய் அறுபத்து மூன்று நாயன் மார்களுள் ஒருவராய் புகழ் பெற்றார். அவரைப் போல நாம் நம் கண்களை எல்லாம் இறைவனுக்குத் தர வேண்டியதில்லை. எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று பிரார்த்திக்காமல் இருந்தாலே போதும்!

    பிரார்த்தனை செய்வதால் மனமானது கடவுளிடம் ஐக்கியமாகிறது. அதன்வழி கிடைக்கும் இறை சக்தியும், மனதின் ஆன்ம சக்தியும் ஒன்று சேரும் போது நம் மனதின் அடித்தளத்தில் இருக்கக் கூடிய உள்ளக்கிடக்கைகள் வெளிப்பட்டு மனமானது தூய்மை அடைகிறது. நம்முடைய மனதைச் செம்மையாக்கிக் கொள்வதற்கான வழிகளை வேண்டுவது மட்டுமே பிரார்த்தனையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

    பிரார்த்தனையின் இன்னொரு வடிவம் “பஜனை”! ”பஜ்” என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. பஜ் என்றால் ”அடைக்கலமாதல்”, “துணையால் சந்தோசமடைதல்” என்று பொருள். பஜனையைக் குறிக்கக் கூடிய கீர்த்தனைகள், சங்கீதங்கள், மந்திர ஜபங்கள், இறைநாமம் பாடுதல் ஆகியவற்றின் மூலம் இறைவனை நாடிச் செல்லும் போது நமக்குள் இருக்கும் அகந்தை, அகங்காரம் ஆகியவை தானே அகன்று விடுகிறது. ”அகங்காரம் தொலைத்து ஆலயம் நுழை” என்றார்கள். அப்படி நுழைகிறோமா? இறைவனைச் சேவிக்கச் செல்லும் சமயங்களில் கூட அதிகாரம், அந்தஸ்து போன்ற பகட்டுத்தனங்களைக் காட்டிக் கொண்டு வரிசை பிடிக்கிறோம். இவற்றை இறைவன் ஒரு போதும் விரும்புவதில்லை. அவனின் விருப்பமின்மையை நாமும் உணர்வதில்லை. அதனால் தான் இறைவனை அணுகுவதற்கான எளிய வழிகளை எல்லாம் சிக்கலான மதச்சடங்குகளாகவும், வழிபாட்டு முறைகளாகவும் மாற்றிக் கொண்டு அவஸ்தைகளுக்கு உள்ளாகி நிற்கிறோம்.

    இவ்விரு வழிகள் தவிர இறைவனை அடைய ஞானிகளும், ரிஷிகளும் உருவாக்கிக் காட்டிய இன்னொரு எளிய மார்க்கம் அன்பு! ”அன்பே கடவுள்” என்கிறார் திருமூலர். அவரின் வாக்கை உலகிற்கு உய்ப்பித்துக் காட்டியவர் பிள்ளையார்!

    பக்தன் ஒருவனின் வழிபாட்டிற்குப் பிள்ளையார் உருவம் தேவைப்பட்டது, தன் கையில் இருந்த வெல்லத்தைப் பிள்ளையாராய் பிடித்து வைத்தான். அவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவரும் அதில் உறைந்தார். கையிலிருந்த வெல்லத்தைப் பிள்ளையாராக்கி விட்டதால் நிவேதனம் செய்ய அவனிடம் ஏதுமில்லாமல் போனது, இறை வழிபாட்டில் நிவேதனம் செய்தல் முக்கியம். அவரையே கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்தான். திண்ணனின் அன்போடு கொடுத்த பன்றி இறைச்சியை சிவபெருமான் ஏற்றதைப் போல தன் பக்தனின் அன்பையும் பிள்ளையார் ஏற்றதன் அடையாளமாகப் ”பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்ற பழமொழி உருவானது.

    இறைவனிடம் அன்பு செலுத்தும் போது அதில் அர்ப்பணிப்பு உணர்வு இருக்க வேண்டும். அதற்குப் பற்றற்று இருக்கப் பழக வேண்டும். பற்றுக்கு அடிமையான மனதில் கிளர்ந்தெழும் ஆசைகள் துன்பங்களை உற்பத்தி செய்த படியே இருக்கின்றன, அதனால் தான் “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்றார் புத்தர். சுட்டது போலும் விட்டது ஆசை என்று அருணகிரிநாதர் கூறுவதைப் போல ஆசைகளைத் தூண்டும் பற்றை விட வேண்டும். சட்டென எப்படி விடுவது?. பருந்து ஒன்று மூக்கில் ஒரு மீனைக் கவ்விச் சென்றது, அம்மீனைப் பறிப்பதற்காகச் சில காகங்கள் அந்தப் பருந்தைச் சுற்றிலும் ஆரவாரம் செய்தன. தொடர்ந்து பறக்க முடியாதவாறு அவை குறுக்கும், நெடுக்குமாய் பின் தொடர்ந்த படியே இருந்தன. தொந்தரவு பொறுக்க முடியாத பருந்து மீனை அங்கேயே போட்டதும் காகங்கள் பருந்தைத் தொந்தரவு செய்யவில்லை. தன் போக்கில் பருந்து பறந்து சென்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன இந்தக் கதையில் வரும் பருந்து மீனை விட்டதைப் போல பற்றுக்களை விடப் பழகினால் அந்தக் கணமே நம்மாலும் துன்பங்களிலிருந்து விடுபட முடியும். நாம் எப்பொழுதாவது அப்படி விடுபட முயன்று இருக்கிறோமா?

    Share
  • தினமலர் பத்திரிக்கை பள்ளி அளவில் நடத்திய போட்டிகளில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்

    child1

    child

    மாணவர்கள் மனதில் கலாம் என்ற தலைப்பில் தினமலர் பத்திரிக்கை 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய போட்டியும்,6-12 வகுப்பு மாணவர்களுக்கு கலாம் கண்ட இந்தியா என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் அறிவித்தது.அதனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் பெருவாரியாக பங்கேற்று தங்கள் படைப்புகளை அனுப்பி வைத்தனர்.பங்கேற்ற மாணவ,மாணவிகளையும் , இதற்கான ஏற்பாடுகளை செய்த ஆசிரியை திருமதி. முத்து மீனாள் அவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டினார்.

    Share
  • எழுத்தாளர்கள் சந்திப்பு

    சுப்ரபாரதி மணியன்
    நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா )

    ஒருங்கிணைப்பு:
    இலக்கிய அமர்வுகள் : இளஞ்சேரல்
    குறும்பட, ஆவணப்பட அமர்வுகள்: அமுதன்
    சுற்றுச்சூழல் அமர்வுகள் : சேவ் அலோசியஸ்

    இரு தின உணவு, சனி இரவு தங்கல் ( 40 பேருக்கு மட்டும்)
    விபரங்களுக்கு: கா. ஜோதி ( 90255 26279)
    பதிவுக்கு ; subrabharathi@gmail .com ல் மின்னஞ்சல் அனுப்பவும்
    நுழைவுக்கட்டணம் : ரூ 100 மட்டும்

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 21

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    எல்லாவுயிர்களும் பிறந்தநாள் முதல் மனித உயிர் உடலின் புலன்கள் செலுத்திய வழியில் எதையும், கண்டு, கேட்டு, உண்டு, மோந்து, தொட்டு ஐம்புலன்களால் அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயல்படுகின்றது. ஐம்புலன்களாகிய அறிதற் கருவிகளால் தன்னைச் சூழ்ந்த உலகை மனிதன் அறிகிறான்; கண்ணால் கண்டறியத்தக்க காட்சிகளையும், காதால் கேட்டறிதற்கு உரிய கருத்துக்களையும் அறிந்து கொள்ளும் முறையைத் திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் தெளிவாக விளக்குகிறார்! அவை,

    ”எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு!” (355)

    ”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு!” (423)

    என்பனவாகும்! இவை முறையே மெய்யுணர்தல், அறிவுடைமை ஆகிய இரண்டு அதிகாரங்களில் இடம் பெற்றுள்ளன! உலகில் கண்ணில் படும் பொருள்களின் ஊடே இறைவனின் இருப்பை நுட்பமாக அறிந்து கொண்டு, அதனை மதித்துப் போற்றுதல் மனித குலத்தின் கடமையாகும்! இதனையே ,’மெய்ப்பொருள் காண்பது’ என்கிறார் வள்ளுவர். அவ்வாறே யார் எதனைச் சொன்னாலும் அதன் அடிப்படைக் கருத்தை அறிந்து கொள்வதை ”மெய்ப்பொருள் காண்பது” என்கிறார்! ஒன்று கண்ணுக்குப் புலனாவது; மற்றொன்று செவிக்குப் புலனாவது! இவ்வகையில் திருவள்ளுவர் கூறிய கருத்துக்களின் மெய்ப்பொருளைக் கண்டவர்களுள் சிறந்தவர் பரிமேலழகர்! அவர் கண்ட பொருள் காலமாறுபாட்டுக்கு இசைந்தே இருந்தாலும், இக்காலத்துக்கேற்ற வகையில் புதிய பொருளைக் கண்டு மகிழலாமே என்ற எண்ணத்தின் விளைவாகவே இத்தொடர் அமைகிறது!

    அவ்வகையில் புதிய விளக்கங்களுக்கு குறட்பாக்கள் இடங்கொடுத்து விளங்குவது கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி எனக்குள் பூக்கிறது! சில குறட்பாக்களுக்கு அந்தக்கால உரையாசிரியர்கள் எழுதிய உரைகளை செழுமைப் படுத்தவே இந்தப் புதிய பொருள் விளக்கம் வருகிறது!

    இன்று நாம் காணவிருக்கும் திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை சற்று வேறுபாட்டுடன் இருப்பதை நாம் காணலாம்! அதனைப் பகுத்தறிவாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல் விமரிசனம் செய்கின்றார்கள்! அந்தக் குறட்பா யாது? அதுதான்,

    ”தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று ! ” (236)

    என்ற பாடலாகும்! மக்களைப் பிறக்கின் ஒருவர், புகழோடு வாழ்வதற்குரிய குணங்களோடு பிறக்க! அத்தகைய குணங்களைப் பெறா விட்டால், மக்களாய்ப் பிறக்காமல் விலங்காய்ப் பிறத்தலே நன்று! என்பது பரிமேலழகர் உரை! இவ்வுரையைப் படித்தால், ஒருவர் தாம், இன்ன இடத்தில் இவ்வாறுதான் பிறக்க வேண்டும் என்று எண்ணிப் பின்எப்படிப் பிறப்பது? அவ்வாறு பிறக்கும் போதே புகழுக் குரிய குணத்தோடு எவ்வாறு பிறப்பது? இவ்வாறு பலவினாக்கள் நம் மனத்துள் எழும்! ஆகவே இவ்வுரைக்கு மேலும் விளக்கம் கிட்டினால்தான் இதனைப் புரிந்துகொள்ள முடியும்! அந்த உரையை, ‘நாம் பிறந்துவிட்டால், ஏன் பிறந்தோம் என்று அறிந்துகொண்டு, அதற்கேற்பப் புகழுக்குரிய நற்குணத்துடன் வாழ்ந்து, நற்செய்கைகளைப் புரிந்து உலகோர்முன் தோன்ற வேண்டும்! அவ்வாறு பிறப்பின் பயனை ஒருவன்முயன்று அடையாவிட்டால், அவன் விலங்காகத் தோன்றியிருந்தாலும் தவறில்லை’, என்று விளக்கம் கூறலாம்!

    புகழ்பட வாழாதார் பற்றி அடுத்த குறட்பாவே கூறுகிறது! தன்னைப் பிறர் புகழ்ந்து போற்றுமாறு வாழ்வதற்கே ஒருவன் பிறக்க வேண்டும்! அவ்வாறின்றிப் பிறர் இகழுமாறு வாழ்பவன் தன்னையே நொந்து கொள்ள வேண்டும்! என்பது அக்குறளின் பொருள்! ஆகவே பிறந்தவன் தன் பிறப்பின் காரணத்தை விரைவில் புரிந்துகொண்டு புகழ்பட வாழவேண்டும். இவ்வாறு விளக்கம், கூறினால் ஒருவாறு அக்குறளின் பொருளைப் புரிந்து கொள்ளலாம்!

    தோன்றின் என்ற சொல்லுக்கு, உலகினர் பார்வையின் முன்னே தோன்றின் என்றும், உலகோர் எதிர்பார்க்கும் காலத்தில் தோன்றின் என்றும் பொருள் கொள்ளலாம்! சங்க இலக்கியத்தில், ”உன் மகன் எங்கே?” என்று கேட்டபோது, ஓர் தாய் கூறு கிறாள் … ”ஈன்ற வயிறோ இதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே !” என்கிறாள்! அவன் வீரம், தேசத்தார் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் சிறந்து விளங்க, அவன் அங்கேதான் ”தோன்றுகிறான்” என்கிறாள் தாய்! சிலப்பதிகாரத்தில் கண்ணகியும்,கோவலனும் பிறந்த நாள், நேரம் குறிக்கப் பெற வில்லை! கதையின் ஆரம்பத்தில், அனைவரும் எதிர்பார்க்கும் காலத்தில் மணவறையில் அவர்கள் மக்கள் முன் ”தோன்றினர்”! அவ்வாறு தோன்றும் போதே ,

    ”போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
    தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்
    மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
    காதலாள்” என்ற அறிமுகத்துடன் தோன்றுகிறாள்!

    அடுத்துக் கோவலனும் மணமகனாகத்தான் ”தோன்றினான்”! அவன் தோன்றும் காட்சி,

    ”மண் தேய்த்த புகழினான்; மதிமுக மடவார்தம்
    பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
    கொண்டேத்தும் கிழமையானாகவே ”தோன்றினான்!

    இவை இவர்களின் பிறப்பைக் குறிக்காமல் படிப்போர் எதிர்பார்க்கும் பொழுது, பொதுமன்றில் ”தோன்றி”யதைக் குறிக்கின்றன!

    பிற்காலத்தில் அண்மையில் காஞ்சி மகா பெரியவர்களைப் பற்றி, நெமிலி எழில்மணி எழுதிய பாடலில் ,

    ”கலவையில் ஒருநாள் பேரொளி பிறந்தது
    காஞ்சிப் பெரியவராய் குருவெனச் சிறந்தது!”

    என்று எழுதி விட்டாராம்! அது சீர்காழி கோவிந்தராஜனால் பாடப் பெற்று, ஹெச் எம் வி ஒலித் தகட்டில் வெளிவந்து பரவி விட்டது! அதன் பின் ஒருநாள் அக்கவிஞர் ”விழுப்புரத்தில் அவதரித்த சுவாமிகளைக் கலவையில் பிறந்தது , என்று தவறாக எழுதி விட்டேனே! ” என்று வருந்தினாராம்! உடனே காஞ்சிமடத்தைச் சேர்ந்த ஒருவர், ”சுவாமிகள் விழுப்புரத்தில் பிறந்தாலும், காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள கலவை என்ற ஊரில்தானே, சர்வக்ஞபீடம் ஏறி குருவாகத் ”தோன்றினார்?” அதனால் அவர் கலவையில் ”ஜோதிஸ்வரூப”மாகப் பிறந்தார் என்றது சரியே!” என்றாராம். ஆகவே காஞ்சி மகா பெரியவர்கள் விழுப்புரத்தில் பிறந்தாலும் ,காஞ்சியில்தான் தோன்றினார் என்பதைப் புரிந்து கொண்டேன்! அதனால் நான் எழுதிய ”திருக்குறளும் தெய்வத்தின் குரலும்” என்ற நூலில், பிறர் மிகவும் எதிர்பார்க்கும் பொழுதில், மக்கள் முன் பொதுவில் காட்சி தந்த நிகழ்ச்சியை, அவர் புகழோடு தோன்றினார் என்று குறிப்பிட்டு,

    ”தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று ”

    என்ற திருக்குறளுக்குப் பொருத்தமான விளக்கம் கிட்டிவிட்டது” என்று எழுதியுள்ளேன்!

    சிறந்த ஆசிரியர், சிறந்த அறிஞர் போன்றோர் தம் சாதனைகளால் புகழ் பெறும்போது, அவர்கள் பணிபுரிந்த இடங்களில் தான் அவர்களின் தோன்றியதாகக் கருதப் பெறுவர்! நம் மேனாள் குடியரசுத்தலைவர், டாக்டர். அப்துல் கலாம், ஏவுகணைப் பணியில் ஈடுபட்டு, அந்தத்துறையில் புகழ் மிக்கவராய்த் தோன்றிய போதுதான், குடியரசுத் தலைவர் பதவி கிட்டியது! பின்னர்தான் அவர் பிறந்த இடம், நாள் ஆகியவை மக்களின் கவனத்துக்கு வந்தன! பராசக்தி படத்திற்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதியும், அவர் எழுதிய வசனங்களை உணர்ச்சியுடன் பேசிய சிவாஜி கணேசனும் பிறந்து நெடுங்காலம் கழிந்த பின்னர், அந்தப் படம் வெளிவந்த காலத்தில் தானே மக்கள் முன் ”தோன்றினர்?”

    ‘ஒருவன் பிறந்தபின், என்றேனும் ஒருநாள் மக்கள் எதிர்பார்க்கும் வேளையில், அவர்கள்முன்னே ”தோன்றுதலை” மனக்கண்ணில் கண்டே , திருவள்ளுவர் ” தோன்றிற் புகழோடு தோன்றுக!” என்று பாடினாரோ’ என்ற புதிய விளக்கம் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது! ”மெய்ப்பொருள் காண்பதறிவு!”அல்லவா?

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 26

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

     

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    இயற்கையும், மனிதனும்
    ______________
    “நேற்று இரவின் பயத்துக்கும், பகலின் இடருக்கும் இடையே நாம் அச்சத்தால் நடுங்கிப் பேய்கள் போல் ஊர்ந்து சென்றோம் ! ஆனால் இன்று புயல் மேவி இடி தோன்றும் மலைச் சிகரத்தை நோக்கிப் பூரிப்போடு நடந்து செல்கிறோம்.”
    கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
    ______________

    இயற்கை அழிக்கும் மனிதன்
    ______________

    கண்ணீர்க் கறை படிந்த
    பூக்களின்
    முகத்தைக் கண்டேன் !
    முணு முணுக்கும் துயரோசை
    காதில் விழக் கேட்டேன் :
    “கண்கவர் மலர்களே !
    நீவீர் நோவதின்
    காரணம் யாது ?”
    தலையை மெதுவாய்த் தூக்கி
    முணு முணுத்தது ஒரு மலர் :
    “மனிதன் வருவான் !
    மலர்களைப் பறிப்பான் !
    விலைக்கு விற்பான்
    அங்காடிக் கடைக்கு !
    அழுகின் றோம் அதற்கு.”
    அடுத்தோர் மலர் சொல்லும் :
    “மாலையில் வாடியதும்
    குப்பைக் குவியலில்
    தூக்கி எறிவான்
    பூக்களை எல்லாம் !
    இயற்கை யான
    எம்மிடத்தை விட்டுத்
    தலைகளைக் கொய்யும்
    மனிதனின்
    கொடூரக் கைகளுக்கு
    நடுக்கம் அடைகிறோம் !”
    ______________

    செத்த பிள்ளைக்குச்
    சிந்தை நொந்திடும்
    விதவை போல்
    நீரோடை ஒன்று அழுவதின்
    காரணம் கேட்டேன் :
    “நோவது ஏனோ தூய
    சிற்றாறே ?”
    நீரோடை கூறியது :
    “வற்புறுத்தி என்னை நகருக்கு
    விற்றார் !
    குடிபான நீராய்ப் பணத்துக்கு
    வடிவாக் கினார் !
    உடல் உறுப்பு கட்குக்
    கழுவு நீராய்ப்
    பயன் படுத்தினார் !
    மாசு படுத்துவர் எமது
    தூய்மையை !
    நாறிப் போகும் எனது
    நற்பெயர் !
    ______________

     

     

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி

     04. பிரமனுக்கேன் ஆலயமில்லை?

    (தரவு கொச்சகக் கலிப்பா)

    [காஞ்சி மகாபெரியவர் உரையிலிருந்து திரட்டிய செய்திகள்]

    நான்முகனாய் நாரணனின் நாபியிலே தோன்றியுமே
    நான்முகமும் எப்போதும் நான்மறையை ஓதியுமே
    வான்முதலாய் வைத்துலகும் மானிடரும் ஆக்கியுமே
    ஏனோநான் முகனுக்கே எங்கணுமே கோவிலிலை! … 1

    படைப்பின்றேல் காப்பில்லை பண்ணியதை அழிப்பதில்லை
    உடைத்தழிக்கும் பித்தனவன் உன்னதமாய் ஆலயத்தில்
    நடைமுறையைக் காத்தருளும் நாரணனும் ஆலயத்தில்
    படைப்புதரும் பிரமனுக்கோ பண்ணில்லை கோவிலிலை! … 2  brahma

    வீட்டினிலே வழிபாட்டில் விடையவனும் விட்டுணுவும்
    பாட்டினிலே புகழ்ந்தேத்தப் பலதெய்வம் படமாக
    நாட்டினிலே எல்லோரும் நாடுதெய்வ வழிபாட்டில்
    ஏட்டினிலே செய்கையிலே இடமில்லை பிரமனுக்கே! … 3

    மூன்றுதேவர் பத்தினியும் முறையாக வழிபாட்டில்
    ஊன்றிநிற்க உமையன்னை உள்ளத்தில் திருமகளாம்
    தோன்றுஞானம் தந்திடவே தொழுதிடுவோம் நாமகளை
    ஆன்றவனாம் அந்தணனாம் ஆரணனுக் கேதுமிலை! … 4

    பிரும்மமெனப் பரம்பொருளே பேர்பெற்றி ருந்தாலும்
    பிரும்மவித்தை பேரெனவே பிரும்மஞானம் ஆனாலும்
    பிரும்மானந் தம்நிலையாய் பிரும்மவித்தை யானாலும்
    பிரமனுக்கோ கோவிலிலை பேர்சொல்லிப் போற்றவிலை! … 5

    ஆரணத்தின் ஒலியாலே அனைத்துலகும் உருவாக்கும்
    ஆரணனாய்த் தந்தையென அனைத்துயிர்க்கும் வேராகிச்
    சீரணவும் பிரமனுக்கோ சிறப்புவழி பாடிலையே!
    காரணத்தைத் விளக்குவரே கருணைமிகு காஞ்சிமுனி. … 6

    [சீரணவும் = சீர் பொருந்திநிற்கும்]

    பிறவியிதைத் தருகின்ற பிரமனுக்கா வழிபாடு?
    பிறவியிதே ஈனமெனப் பேரின்ப நிலையிருக்க
    பிறவியிதன் போக்கினையே பிரம்மலிபி தலையெழுதப்
    பிறவியிதைத் தருகின்ற பிரமனெவண் வழிபடவே! … 7

    நம்பிறவிக் காரணமாய் நான்முகனெங் ஙனமாவான்?
    நம்பிறவி அமைவதெலாம் நம்வினைகள் துய்ப்பதற்கே
    நம்பிறவிப் போக்கொன்றே நம்தலையில் எழுதிவைக்கும்
    அம்பாவான் பிரமனவன் அம்பெய்த வர்நாமே! … 8

    பாலனத்தைச் செய்பவராய்ப் பரந்தாமன் ஆனாலும்
    சூலத்தாற் கொல்பவராய்ச் சொக்கனவர் ஆனாலும்
    ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமெனக்
    கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! … 9

    [பாலனம் = பாதுகாப்பு; ஏலுவரே = தகுதியாவரே; குரவன் = பிரமன்]

    பாலனத்தைச் செய்பவளாய்ப் பாற்கடலாள் ஆனாலும்
    சூலத்தாற் கொல்பவளாய்த் துர்க்கையவள் ஆனாலும்
    ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமெனக்
    கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! … 10

    பரம்பொருளால் ஆனாலும் பரம்பொருளாய்த் தோன்றாத
    பிரமனைமற் றிருவருடன் பேசுமுறை இல்லையென
    உருவமேதும் ஆலயத்தின் உள்ளறையில் வைக்காமல்
    கருவறைவி மானத்தில் காணவைத்த உருவெனவே! … 11

    மூவரிலே ஒருவரென முன்னிற்கும் பிரமன்பேர்
    ஆவதெவண் என்பதனை ஆன்றமுனி சொன்னசெய்தி:
    பூவுலகம் அண்டமெலாம் பொருந்திநிற்கும் பரம்பொருளே
    மேவிவரும் லீலையென வேதாவைச் செய்ததுவே. … 12

    [வேதா = பிரமன்]

    ஆடவர்பெண் சேர்க்கையிலே அவனியெலாம் செய்பிரம்மம்
    தோடணியான் நாமகளைச் சோதரராய்ச் செய்ததுடன்
    நீடுமாலும் அம்பாளும் நிலையினிலே சோதரராய்
    நாடுகின்ற போகநிலை ஞானநிலை தருவதற்கே. … 13

    [தோடணியான் = காதில் தோடணிந்த சிவன்; நீடுமால் = நிலைத்திருக்கும் திருமால்]

    உலகியலும் ஞானமுமே ஒன்றாகக் கலப்பதெனத்
    தலைப்பட்ட பிரம்மமது தம்பதியாய்ச் சோதரர்க்கு
    விலையொன்றைத் தருவதற்கே வேதாவை இலக்குமியை
    நிலைபேற்றில் சோதரராய் நிற்பதெனச் செய்ததுவே. … 14

    அரன்-உமையாள் அரி-கமலை அயன்-வாணி எனமூன்றாய்
    உருவான தம்பதியில் முதலிருவர் முழுமுதலாய்
    இருந்திடவே பின்னிருவர் எழுஞானம் ஒன்றுமட்டும்
    அருள்வதற்கே தெய்வமாக ஆலயத்தில் நின்றிலையே. … 15

    பிரமனவர் குருவாகப் பாற்கடலோன் பின்னின்றே
    பிரம்மவித்தை ஞானமெனும் பேற்றினையே அருளுவதால்
    உருவமென ஆலயத்தின் உள்ளில்லா பிரம்மதேவன்
    குருவாக நாம்போற்றிக் கூடுதரும் பிறப்பறுப்போம். … 16

    [குறிப்பு:
    மேல்விவரம்: தெய்வத்தின் குரல், பாகம் 5, பக். 187-230]

    *****

    Share
  • செல்ஃபி

    தமிழ்த்தேனீ

    நானும் கடவுளும் அடிக்கடி சந்திப்போம் ! என்ன நம்ப முடியவில்லையா ? நம்பவேண்டாம். நான் நம்புகிறேன் அவரும் நம்புகிறார் அதனால் நாங்கள் சந்திக்கிறோம்

    இது எப்படி நிகழ்ந்தது .. நான் ஒரு முறை மானசீகமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தேன் “ கடவுளே ஒரே ஒரு முறையாவது காட்சி கொடு ” நாத்திகரிடமும் ஆத்திகரிடமும் கூட நிரூபிக்க என்னால் முடியவில்லை என்று பல பெரும் மேதைகள் கூட கேட்கும் வரத்தை சரியாக யோசித்துக் கேட்கத் தவறியதால் அவதிப்பட்ட கதைகள் ஏராளம் அப்ப்டி இருக்க இந்த சிறியவனுக்கும் அதே தடுமாற்றம் வந்ததில் வியப்பில்லை

    ஆனால் நான் கேட்ட வரத்தை மிகச்சரியாக கொடுத்தது கடவுள் பாவம் சிறு பிள்ளை தவறாகக் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு ஒரு முறை மட்டுமல்ல பலமுறை எனக்கு காட்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

    அங்கேதான் சிக்கல் எனக்கு காட்சி கொடு என்று வேண்டினேன் எல்லோருக்கும் காட்சி கொடு என்று வேண்டவில்லையே அதனால் எனக்கு மட்டும் காட்சி கொடுக்கிறார் அதனால் இன்னமும் நான் யாரிடமும் நிரூபிக்க முடியாமல் தவிக்கிறேன்
    ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நான் ஏதேனும் சந்தேகம் கேட்பேன் ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை கடவுள் என்னிடம் ஒரு விருப்பத்தை தெரிவித்தார். நானும் உன்னைப் பார்த்துக் கொன்டேதான் இருக்கிறேன் எங்கே போனாலும் கையடக்க ஒளிப்பதிவுக் கருவியை வைத்துக்கொண்டு படம் எடுக்கிறாய். பத்து வருடங்களுக்கு முன்னாலிருந்தே சூழ்நிலையையும் சுற்றிலும் உள்ள மனிதர்களையும் அப்படியே உன்னையும் சேர்த்து படம் எடுத்துக் கொள்கிறாய் , அப்படி உன்னையும் சேர்த்து படம் எடுக்கும் முறை இப்போது மக்களிடையே செல்ஃபி என்று ப்ரபலமாகி உள்ளது. எனக்கும் பிடித்திருக்கிறது அது அதனால் நாம் இருவரும் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்வோம் . என்றார் கடவுள்.

    அப்பாடா என் ப்ரச்சனைக்கு ஒரு வழி பிறந்துவிட்டது என்று மனதில் நினைத்துக் கொண்டு நிச்சயமாக நானே எடுக்கிறேன் என் பக்கத்தில் சேர்ந்து நில்லுங்கள் என்றேன். கடவுளும் என்பக்கத்தில் வந்து நின்று கனகம்பீரமாக தோற்றம் காட்டினார் செல்ஃபி எடுத்துக் கொண்டோம் .

    என் கையிலிருந்து ஒளிப்பதிவுக் கருவியை பிடுங்கி அதில் எங்கள் செல்ஃபியை கண்டு மகிழ்ந்து மிக நன்றாக வந்திருக்கிறது என்றார் கடவுள் கடவுளே என்னிடம் ஏமாந்துவிட்டீரே இப்போது இந்த செல்ஃபியில் நான் அனைவருக்கும் உன்களைக் காட்டுவேனே என் ப்ரச்சனை தீர்ந்துவிட்டது என்று துள்ளிக் குதித்து கடவுளிடமிருந்து ஒளிப்பதிவுக் கருவியை பிடுங்கி அதில் எங்கள் செல்ஃபியைப் பார்த்தேன் அதில் கடவுளைக் காணவில்லை.

    நான் மட்டுமே தெரிந்தேன், ஏமாற்றத்துடன் கடவுளே என்னை ஏமாற்றிவிட்டீரே இந்த செல்ஃபியிலே உம்மைக் காணவில்லையே என்றேன் ஏன் பொய் சொல்கிறாய் நன்றாகப் பார் நான் இருக்கிறேன் என்றார் கடவுள் இல்லை நான் இருக்கிறேன் ஆனால் நீர் இல்லை என்றேன் திருவிளையாடல் தருமி பாணியில்.

    நான் இருப்பதால்தான் உனக்கு நான் தெரியவில்லை என்றார் கடவுள் இதோ பார் என்று ஒளிப்பதிவுக் கருவியைக் காட்டினார் கடவுள் அதிலே நான் மட்டும் தானே இருக்கிறேன் என்றேன் இல்லை அங்கே இருப்பது நான் .உன்னைத்தான் காணவில்லை என்றார் கடவுள்.

    ஆமாம் உனக்கு செல்ஃபி சரியாக எடுக்கத் தெரியவில்லை நான் இருக்கிறேன் ஆனால் நீ அங்கு இல்லை என்றார்.
    அதனால் நன்றாக போகஸ் செய்து எண்ணங்களை குவித்து மீண்டும் எடு அப்போதாவது உன்னையும் சேர்த்து எடுக்கிறாயா என்று பார்க்கிறேன் என்றார் .

    Share
  • நிலா

    -கவிஜி  

    நிலவைப் பிடித்தபெண்
    மெல்ல மேலே
    இழுக்கிறாள்…
    கைக்கெட்டும் தூரத்தில்
    சற்று உடல்வளைத்துப்
    பிடிக்கும் கணத்தில்
    ஆடிய வாளி, நிலவை
    மீண்டும் கிணற்றுக்குள்
    தவற விடுகிகிறது…
    தடுமாறி ஏந்திய
    உள்ளங்கையில் மெல்ல
    நிறமாறித் தடுமாறுகிறது
    நிலா…!

     

     

    Share
  • அவன்,அது,ஆத்மா (36)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 36

    ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதர்

    அவன் தொந்திவிளாகம் தெருவில் உள்ள தாத்தாவின் வீட்டிற்குச் செல்லும் பொழுதெல்லாம் அந்தத் தெருவின் ஆரம்பத்தில் வடக்கு வரிசையில் இரண்டு மூன்று வீடுகள் தள்ளி ஒரு வீட்டின் சிகப்பு நிறத் திண்ணையில் காலையில் கிழக்கு முகமாகவும், சந்தியாகாலத்தில் மேற்கு முகமாகவும் அமர்ந்து கொண்டு சந்தியாவந்தனமோ, வேத பாராயணமோ செய்து கொண்டிருக்கும் அந்தப் பெரியவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவன் அவரைக் கையெடுத்துக் கும்பிடுவான். அப்பொழுது அவர் புன்னகைத்தபடி, மென்மையாக, ” என்ன விஸ்வம்…தாத்தாவாத்துக்குப் போயிண்டிருக்கயா” என்று கேட்பார். அவர்தான் ப்ரும்மஸ்ரீ மகாதேவ தீக்ஷிதர். கேரளாவில் உள்ள பரவூரில் ஆறுமாதமும், கல்லிடைக்குறிச்சியில் ஆறு மாதமுமாக இருப்பார். வேத வித்து. அமைதியான தோற்றமே அவரது ஞானத்தைப் பறைசாற்றும். அவரது ஒரு புதல்வர் ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதர். தந்தையைப் போலவே வேத வித்து. மென்மையாகத்தான் பேசுவார். வைதீக தர்மத்தில் உள்ள ஒழுக்க நெறிகளைத் தவறாமல் கடைப்பிடித்தவர். பணத்திற்காக வேதத்தை விற்காத வெகு சிலரில் ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதரும் ஒருவர். அவர் பொறுப்பேற்று நடத்தி வைக்கும் வைதீக நிகழ்ச்சிகளில் சிறு தவறுகூட நிகழாமல், மிகவும் கவனமாக இருப்பார். அவரோடு இருக்கும் மற்றவர்களும் அப்படி இருக்கவேண்டும் என்று விரும்புவார்.

    டுண்டிவினாயகர் கோவிலில் நடைபெறும் எந்த வைதீக நிகழ்ச்சியானாலும் ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதரின் வழிகாட்டுதலின் படிதான் நடக்கும். அந்தக் கோவிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி உற்சவத்தின் பொழுது ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமான ஹோமங்களை ஏற்பாடு செய்தது திறம்பட நடத்திக் கொடுப்பார். மிகப் பொறுமையாகச் செய்வார். அதைப் பார்ப்போருக்குத் தாங்களும் அப்படி நியமமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் உண்டாகிவிடும். அனேகமாக அந்த ஹோமங்களின் “பூர்ணாகுதி” நடைபெறும் பொழுது மதியம் இரண்டு அல்லது மூன்று மணி ஆகிவிடும். அதன் பிறகுதான் கிராம மக்களுக்கு அன்னதானம் நடைபெறும். எல்லோருக்கும் அவர் நடத்தும் அந்த பூஜைகளில்தான் கவனம் இருக்கும். அவனுக்கு அவரிடம் மிகுந்த மரியாதை உண்டு.

    அந்த கிராமத்தில் உள்ள சிறுவர்களுக்கெல்லாம் ஸ்லோகங்களும், வேத மந்திரங்களும் கற்றுத்தந்தார். தன்னுடைய வீட்டின் முன்னறையில் வைத்து மாலை நேரத்தில் அந்த கிராமத்து இளைஞர்களுக்கு வேத மந்திரங்கள் கற்றுக் கொடுத்தார். முக்கியமாக ருத்ரம், சமகம், புருஷசுக்தம் மற்றும் உபநிடத மந்திரங்களைக் கற்றுத் தந்தார். அப்படி அவரிடம் கற்றவர்கள் இன்றும் சிறப்பாக இருக்கிறார்கள். அவனுக்கும் கற்றுத்தர அவர் அழைத்தார். ஏனோ அப்பொழுது அவனுக்கு அதில் நாட்டம் இருக்கவில்லை. என்றாலும் அவருக்கு அவனிடம் ஒரு தனி அன்பு இருக்கத்தான் செய்தது. அவனுக்குத் திருமணத்தின் பொழுது அவர் வந்து அவனை ஆசிர்வதித்தார். அவனுக்கு முதல் மகன் பிறந்த பொழுது அவரிடம் தகவல் சொன்னான். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன்,”கண்ணா …ஒன்னோடு கொழந்தைக்கு நான் ஜாதகம் குறித்துத் தருகிறேன்” என்று சொல்லி, அதன்படி குறித்தும் கொடுத்தார். அவருக்கு ஜோதிடமும் நன்கு தெரியும். ஆனால் காட்டிக் கொள்ள மாட்டார். அவனுக்கு அவரைக்கொண்டு “பகவதி பூஜை” செய்யச் சொல்ல வேண்டும் என்று ஆசை இருந்தது. அந்த ஆசையை அவர் 1984ம் வருடம் ஆடிமாதம் அவர்களுடைய கல்லிடைகுறிச்சி இல்லத்தில் மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். அதில் அவனுக்கு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் எங்கு “பகவத் சேவை” (பகவதி பூஜை) நடந்தாலும் அவன் அந்த தீக்ஷிதரை நினைத்துக் கொள்ளுவான்.

    ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் சதாபிஷேகம் மிகச் சிறப்பாகச் சென்னையில் குளத்தூரில் அவரது மூத்த மகன் மகாதேவன் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அவரை நேரில் சென்று வணக்கும் வாய்ப்பும் அவனுக்குக் கிடைத்தது.

    ஆயிரம் பிறை கண்ட சில மாதங்களில் அவர் இறைவன் திருவடியை அடைந்தார். இல்லை வேத ஒலியாகக் கலந்தார்.

    நண்பன் V. சிவராமகிருஷ்ணன் என்ற இராஜாமணி

    சிறுவயதில் ஒருநாள் அவன் தொந்திவிளாகம் தெருவில் உள்ள கன்னடியன் கால்வாய் மண்டபத்தில் நண்பர்களுடன் காலையில் விளையாடிக் கொண்டிருந்தான். அந்தக் நண்பர்களில் சிவராமகிருஷ்ணன் என்ற ராஜாமணியும் இருந்தான். தண்ணீரில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்துவிட்டு அவன் அவனுக்குத் தாத்தாவின் வீட்டிற்குச் சென்று உடையை மாற்றிக் கொண்டு பிள்ளையார் கோவில் வாசலுக்கு வந்தான். அப்பொழுது அங்கு இராஜாமணியின் தந்தைவழிப் பாட்டி “குஞ்சாமி அம்மாள்” அவனிடம்,”டேய்..விஸ்வம்…எங்காத்து ராஜாமணியப் பாத்தயா…” என்று கேட்டாள். அதற்கு அவன் நண்பர்களுடன் V விளையாடும் ஜோரில் “உங்காத்து ராஜாமணி வாய்க்காலோட தண்ணீல போய்ட்டான் ” என்று சொல்லி ஓடிவிட்டான். குஞ்சாமிப் பாட்டிக்கு மிகுந்த கவலை. நெடு நேரம் தேடிய பின்பு எங்கோ விளையாடிக் கொண்டிருந்துவிட்டு இராஜாமணி வீட்டிருக்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு நிம்மதி. அவனுக்கோ ஒரே பயம். குஞ்சாமிப் பாட்டி தெருவில் அவனைப் பார்த்தால் திட்டுவளே என்று. ஒரு நாள் அவனைப் பார்த்து,” ஒன்ன போலீசுல பிடிச்சுக் குடுக்கறேன் படவா” என்று தன் கைத்தடியைத் தூக்கிப் பிடித்துக் குஞ்சாமிப் பாட்டி சொன்னாள். அதெல்லாம் அன்பின் தெறிப்பு என்பது அவனுக்குத் தெரியாதா என்ன?

    சந்திரவிலாஸ் A. விஸ்வநாதையரின் சித்தப்பா மகன்தான் வாஞ்ஜீஸ்வர ஐயர். அவரது ஒரே மகன் வா.சிவராமகிருஷ்ணன். அவனை இராஜாமணி என்றும் அழைப்பார்கள். கவிமாமணி தேவநாராயணனின் மாமா மகன் இராஜாமணி. அதனால் தேவநாராயனனுக்கு இராஜாமணி அம்மான் சேய். அம்மாஞ்சி முறை.

    சிவராமகிருஷ்ணனுக்கு இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. வடமொழி, தமிழ், ஆங்கிலம் அறிந்தவன். அவனை சிவராமகிருஷ்ணன் சந்திக்கும் பொழுதெல்லாம் தமிழிலக்கியம் பற்றியும், ஆன்மிகம் பற்றியும் தன் கருத்தைப் பகிர்ந்து கொள்வான். சிவராமகிருஷ்ணனுக்கு உ.வே.சாமிநாதையரிடம் மிகுந்த பக்தி உண்டு. அவரது “என் சரித்திரம்” நூலைப் பற்றியும், உ.வே.சா.வின் குருநாதர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியும் அவனிடம் ரொம்பவும் குஷியாகப் பேசிக் கொண்டிருப்பான். “தெய்வத்தின் குரல்” ஏழு பாகமும் பாடம் என்றே சொல்லிவிடலாம். அத்தனை பக்தியோடு அந்த நூலில் உள்ள விஷயங்களை அவனோடு பகிர்ந்து கொள்வான். சிருங்கேரி ஆசார்யாளிடம் மிகுந்த பக்தி உண்டு. அதிலும் ஸ்ரீ சந்திர சேகர பாரதீ மகாசன்னிதானம் மீது அபார பக்தி இராஜாமணிக்கு உண்டு. “The Saints of Sringeri” என்ற புத்தகத்தைப் பற்றிச் சொல்லி அவனை படிக்கத் தூண்டியதே சிவராமகிருஷ்ணன்தான்.

    சிவராமகிருஷ்ணனுக்கு வைதீக விஷயங்களில் ஈடுபாடு அதிகம். அதனால்தானோ என்னவோ அமைதியாகவே இருப்பான். தன் இளம் வயதிலேயே “டுண்டிவினாயகர் கோவிலுக்கு” அறங்காவலராக இருந்து மிக அழகாகவும், ஆசாரத்துடனும் கோவில் திருவிழாக்களைக் கொண்டாட அந்த கிராமத்தின் ஒரு முக்கியமான மனிதராகத் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறான். நேர்மையான மனிதன் என்ற பேரை வாங்குவது அத்தனை எளிதான காரியம் இல்லை. அதை மிகச் சுலபமாகப் பெற்றிருக்கிறான் நண்பன் சிவராமகிருஷ்ணணன். அந்த கிராமமே சிவராமகிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்படும் படியாக எதையுமே யோசித்துச் செய்யக்கூடியவன்.

    ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதருக்கு சிவராமகிருஷ்ணன் மீது உயிர். சிவராமகிருஷ்ணனுக்கு வேதத்தின் மீதும், வேத வித்துக்களின் மீதும், மகான்களின் வார்தையிலும், தான் வணக்கும் “டுண்டிவினாயகர்” மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையே உயிர் மூச்சாக இருக்கிறது. சிவராமகிருஷ்ணனின் மனைவிக்கும் அப்படியே.

    அவனுக்கு சிவராமகிருஷ்ணனைப் போன்ற நண்பர்கள் கிடைத்தது குருகிருபை தானே.

    29.10.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share