– புலவர் இரா. இராமமூர்த்தி.

எல்லாவுயிர்களும் பிறந்தநாள் முதல் மனித உயிர் உடலின் புலன்கள் செலுத்திய வழியில் எதையும், கண்டு, கேட்டு, உண்டு, மோந்து, தொட்டு ஐம்புலன்களால் அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயல்படுகின்றது. ஐம்புலன்களாகிய அறிதற் கருவிகளால் தன்னைச் சூழ்ந்த உலகை மனிதன் அறிகிறான்; கண்ணால் கண்டறியத்தக்க காட்சிகளையும், காதால் கேட்டறிதற்கு உரிய கருத்துக்களையும் அறிந்து கொள்ளும் முறையைத் திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் தெளிவாக விளக்குகிறார்! அவை,

”எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!” (355)

”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!” (423)

என்பனவாகும்! இவை முறையே மெய்யுணர்தல், அறிவுடைமை ஆகிய இரண்டு அதிகாரங்களில் இடம் பெற்றுள்ளன! உலகில் கண்ணில் படும் பொருள்களின் ஊடே இறைவனின் இருப்பை நுட்பமாக அறிந்து கொண்டு, அதனை மதித்துப் போற்றுதல் மனித குலத்தின் கடமையாகும்! இதனையே ,’மெய்ப்பொருள் காண்பது’ என்கிறார் வள்ளுவர். அவ்வாறே யார் எதனைச் சொன்னாலும் அதன் அடிப்படைக் கருத்தை அறிந்து கொள்வதை ”மெய்ப்பொருள் காண்பது” என்கிறார்! ஒன்று கண்ணுக்குப் புலனாவது; மற்றொன்று செவிக்குப் புலனாவது! இவ்வகையில் திருவள்ளுவர் கூறிய கருத்துக்களின் மெய்ப்பொருளைக் கண்டவர்களுள் சிறந்தவர் பரிமேலழகர்! அவர் கண்ட பொருள் காலமாறுபாட்டுக்கு இசைந்தே இருந்தாலும், இக்காலத்துக்கேற்ற வகையில் புதிய பொருளைக் கண்டு மகிழலாமே என்ற எண்ணத்தின் விளைவாகவே இத்தொடர் அமைகிறது!

அவ்வகையில் புதிய விளக்கங்களுக்கு குறட்பாக்கள் இடங்கொடுத்து விளங்குவது கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி எனக்குள் பூக்கிறது! சில குறட்பாக்களுக்கு அந்தக்கால உரையாசிரியர்கள் எழுதிய உரைகளை செழுமைப் படுத்தவே இந்தப் புதிய பொருள் விளக்கம் வருகிறது!

இன்று நாம் காணவிருக்கும் திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை சற்று வேறுபாட்டுடன் இருப்பதை நாம் காணலாம்! அதனைப் பகுத்தறிவாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல் விமரிசனம் செய்கின்றார்கள்! அந்தக் குறட்பா யாது? அதுதான்,

”தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று ! ” (236)

என்ற பாடலாகும்! மக்களைப் பிறக்கின் ஒருவர், புகழோடு வாழ்வதற்குரிய குணங்களோடு பிறக்க! அத்தகைய குணங்களைப் பெறா விட்டால், மக்களாய்ப் பிறக்காமல் விலங்காய்ப் பிறத்தலே நன்று! என்பது பரிமேலழகர் உரை! இவ்வுரையைப் படித்தால், ஒருவர் தாம், இன்ன இடத்தில் இவ்வாறுதான் பிறக்க வேண்டும் என்று எண்ணிப் பின்எப்படிப் பிறப்பது? அவ்வாறு பிறக்கும் போதே புகழுக் குரிய குணத்தோடு எவ்வாறு பிறப்பது? இவ்வாறு பலவினாக்கள் நம் மனத்துள் எழும்! ஆகவே இவ்வுரைக்கு மேலும் விளக்கம் கிட்டினால்தான் இதனைப் புரிந்துகொள்ள முடியும்! அந்த உரையை, ‘நாம் பிறந்துவிட்டால், ஏன் பிறந்தோம் என்று அறிந்துகொண்டு, அதற்கேற்பப் புகழுக்குரிய நற்குணத்துடன் வாழ்ந்து, நற்செய்கைகளைப் புரிந்து உலகோர்முன் தோன்ற வேண்டும்! அவ்வாறு பிறப்பின் பயனை ஒருவன்முயன்று அடையாவிட்டால், அவன் விலங்காகத் தோன்றியிருந்தாலும் தவறில்லை’, என்று விளக்கம் கூறலாம்!

புகழ்பட வாழாதார் பற்றி அடுத்த குறட்பாவே கூறுகிறது! தன்னைப் பிறர் புகழ்ந்து போற்றுமாறு வாழ்வதற்கே ஒருவன் பிறக்க வேண்டும்! அவ்வாறின்றிப் பிறர் இகழுமாறு வாழ்பவன் தன்னையே நொந்து கொள்ள வேண்டும்! என்பது அக்குறளின் பொருள்! ஆகவே பிறந்தவன் தன் பிறப்பின் காரணத்தை விரைவில் புரிந்துகொண்டு புகழ்பட வாழவேண்டும். இவ்வாறு விளக்கம், கூறினால் ஒருவாறு அக்குறளின் பொருளைப் புரிந்து கொள்ளலாம்!

தோன்றின் என்ற சொல்லுக்கு, உலகினர் பார்வையின் முன்னே தோன்றின் என்றும், உலகோர் எதிர்பார்க்கும் காலத்தில் தோன்றின் என்றும் பொருள் கொள்ளலாம்! சங்க இலக்கியத்தில், ”உன் மகன் எங்கே?” என்று கேட்டபோது, ஓர் தாய் கூறு கிறாள் … ”ஈன்ற வயிறோ இதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே !” என்கிறாள்! அவன் வீரம், தேசத்தார் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் சிறந்து விளங்க, அவன் அங்கேதான் ”தோன்றுகிறான்” என்கிறாள் தாய்! சிலப்பதிகாரத்தில் கண்ணகியும்,கோவலனும் பிறந்த நாள், நேரம் குறிக்கப் பெற வில்லை! கதையின் ஆரம்பத்தில், அனைவரும் எதிர்பார்க்கும் காலத்தில் மணவறையில் அவர்கள் மக்கள் முன் ”தோன்றினர்”! அவ்வாறு தோன்றும் போதே ,

”போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள்” என்ற அறிமுகத்துடன் தோன்றுகிறாள்!

அடுத்துக் கோவலனும் மணமகனாகத்தான் ”தோன்றினான்”! அவன் தோன்றும் காட்சி,

”மண் தேய்த்த புகழினான்; மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கொண்டேத்தும் கிழமையானாகவே ”தோன்றினான்!

இவை இவர்களின் பிறப்பைக் குறிக்காமல் படிப்போர் எதிர்பார்க்கும் பொழுது, பொதுமன்றில் ”தோன்றி”யதைக் குறிக்கின்றன!

பிற்காலத்தில் அண்மையில் காஞ்சி மகா பெரியவர்களைப் பற்றி, நெமிலி எழில்மணி எழுதிய பாடலில் ,

கலவையில் ஒருநாள் பேரொளி பிறந்தது
காஞ்சிப் பெரியவராய் குருவெனச் சிறந்தது!”

என்று எழுதி விட்டாராம்! அது சீர்காழி கோவிந்தராஜனால் பாடப் பெற்று, ஹெச் எம் வி ஒலித் தகட்டில் வெளிவந்து பரவி விட்டது! அதன் பின் ஒருநாள் அக்கவிஞர் ”விழுப்புரத்தில் அவதரித்த சுவாமிகளைக் கலவையில் பிறந்தது , என்று தவறாக எழுதி விட்டேனே! ” என்று வருந்தினாராம்! உடனே காஞ்சிமடத்தைச் சேர்ந்த ஒருவர், ”சுவாமிகள் விழுப்புரத்தில் பிறந்தாலும், காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள கலவை என்ற ஊரில்தானே, சர்வக்ஞபீடம் ஏறி குருவாகத் ”தோன்றினார்?” அதனால் அவர் கலவையில் ”ஜோதிஸ்வரூப”மாகப் பிறந்தார் என்றது சரியே!” என்றாராம். ஆகவே காஞ்சி மகா பெரியவர்கள் விழுப்புரத்தில் பிறந்தாலும் ,காஞ்சியில்தான் தோன்றினார் என்பதைப் புரிந்து கொண்டேன்! அதனால் நான் எழுதிய ”திருக்குறளும் தெய்வத்தின் குரலும்” என்ற நூலில், பிறர் மிகவும் எதிர்பார்க்கும் பொழுதில், மக்கள் முன் பொதுவில் காட்சி தந்த நிகழ்ச்சியை, அவர் புகழோடு தோன்றினார் என்று குறிப்பிட்டு,

”தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று ”

என்ற திருக்குறளுக்குப் பொருத்தமான விளக்கம் கிட்டிவிட்டது” என்று எழுதியுள்ளேன்!

சிறந்த ஆசிரியர், சிறந்த அறிஞர் போன்றோர் தம் சாதனைகளால் புகழ் பெறும்போது, அவர்கள் பணிபுரிந்த இடங்களில் தான் அவர்களின் தோன்றியதாகக் கருதப் பெறுவர்! நம் மேனாள் குடியரசுத்தலைவர், டாக்டர். அப்துல் கலாம், ஏவுகணைப் பணியில் ஈடுபட்டு, அந்தத்துறையில் புகழ் மிக்கவராய்த் தோன்றிய போதுதான், குடியரசுத் தலைவர் பதவி கிட்டியது! பின்னர்தான் அவர் பிறந்த இடம், நாள் ஆகியவை மக்களின் கவனத்துக்கு வந்தன! பராசக்தி படத்திற்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதியும், அவர் எழுதிய வசனங்களை உணர்ச்சியுடன் பேசிய சிவாஜி கணேசனும் பிறந்து நெடுங்காலம் கழிந்த பின்னர், அந்தப் படம் வெளிவந்த காலத்தில் தானே மக்கள் முன் ”தோன்றினர்?”

‘ஒருவன் பிறந்தபின், என்றேனும் ஒருநாள் மக்கள் எதிர்பார்க்கும் வேளையில், அவர்கள்முன்னே ”தோன்றுதலை” மனக்கண்ணில் கண்டே , திருவள்ளுவர் ” தோன்றிற் புகழோடு தோன்றுக!” என்று பாடினாரோ’ என்ற புதிய விளக்கம் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது! ”மெய்ப்பொருள் காண்பதறிவு!”அல்லவா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *