-ரமணி

 04. பிரமனுக்கேன் ஆலயமில்லை?

(தரவு கொச்சகக் கலிப்பா)

[காஞ்சி மகாபெரியவர் உரையிலிருந்து திரட்டிய செய்திகள்]

நான்முகனாய் நாரணனின் நாபியிலே தோன்றியுமே
நான்முகமும் எப்போதும் நான்மறையை ஓதியுமே
வான்முதலாய் வைத்துலகும் மானிடரும் ஆக்கியுமே
ஏனோநான் முகனுக்கே எங்கணுமே கோவிலிலை! … 1

படைப்பின்றேல் காப்பில்லை பண்ணியதை அழிப்பதில்லை
உடைத்தழிக்கும் பித்தனவன் உன்னதமாய் ஆலயத்தில்
நடைமுறையைக் காத்தருளும் நாரணனும் ஆலயத்தில்
படைப்புதரும் பிரமனுக்கோ பண்ணில்லை கோவிலிலை! … 2  brahma

வீட்டினிலே வழிபாட்டில் விடையவனும் விட்டுணுவும்
பாட்டினிலே புகழ்ந்தேத்தப் பலதெய்வம் படமாக
நாட்டினிலே எல்லோரும் நாடுதெய்வ வழிபாட்டில்
ஏட்டினிலே செய்கையிலே இடமில்லை பிரமனுக்கே! … 3

மூன்றுதேவர் பத்தினியும் முறையாக வழிபாட்டில்
ஊன்றிநிற்க உமையன்னை உள்ளத்தில் திருமகளாம்
தோன்றுஞானம் தந்திடவே தொழுதிடுவோம் நாமகளை
ஆன்றவனாம் அந்தணனாம் ஆரணனுக் கேதுமிலை! … 4

பிரும்மமெனப் பரம்பொருளே பேர்பெற்றி ருந்தாலும்
பிரும்மவித்தை பேரெனவே பிரும்மஞானம் ஆனாலும்
பிரும்மானந் தம்நிலையாய் பிரும்மவித்தை யானாலும்
பிரமனுக்கோ கோவிலிலை பேர்சொல்லிப் போற்றவிலை! … 5

ஆரணத்தின் ஒலியாலே அனைத்துலகும் உருவாக்கும்
ஆரணனாய்த் தந்தையென அனைத்துயிர்க்கும் வேராகிச்
சீரணவும் பிரமனுக்கோ சிறப்புவழி பாடிலையே!
காரணத்தைத் விளக்குவரே கருணைமிகு காஞ்சிமுனி. … 6

[சீரணவும் = சீர் பொருந்திநிற்கும்]

பிறவியிதைத் தருகின்ற பிரமனுக்கா வழிபாடு?
பிறவியிதே ஈனமெனப் பேரின்ப நிலையிருக்க
பிறவியிதன் போக்கினையே பிரம்மலிபி தலையெழுதப்
பிறவியிதைத் தருகின்ற பிரமனெவண் வழிபடவே! … 7

நம்பிறவிக் காரணமாய் நான்முகனெங் ஙனமாவான்?
நம்பிறவி அமைவதெலாம் நம்வினைகள் துய்ப்பதற்கே
நம்பிறவிப் போக்கொன்றே நம்தலையில் எழுதிவைக்கும்
அம்பாவான் பிரமனவன் அம்பெய்த வர்நாமே! … 8

பாலனத்தைச் செய்பவராய்ப் பரந்தாமன் ஆனாலும்
சூலத்தாற் கொல்பவராய்ச் சொக்கனவர் ஆனாலும்
ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமெனக்
கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! … 9

[பாலனம் = பாதுகாப்பு; ஏலுவரே = தகுதியாவரே; குரவன் = பிரமன்]

பாலனத்தைச் செய்பவளாய்ப் பாற்கடலாள் ஆனாலும்
சூலத்தாற் கொல்பவளாய்த் துர்க்கையவள் ஆனாலும்
ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமெனக்
கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! … 10

பரம்பொருளால் ஆனாலும் பரம்பொருளாய்த் தோன்றாத
பிரமனைமற் றிருவருடன் பேசுமுறை இல்லையென
உருவமேதும் ஆலயத்தின் உள்ளறையில் வைக்காமல்
கருவறைவி மானத்தில் காணவைத்த உருவெனவே! … 11

மூவரிலே ஒருவரென முன்னிற்கும் பிரமன்பேர்
ஆவதெவண் என்பதனை ஆன்றமுனி சொன்னசெய்தி:
பூவுலகம் அண்டமெலாம் பொருந்திநிற்கும் பரம்பொருளே
மேவிவரும் லீலையென வேதாவைச் செய்ததுவே. … 12

[வேதா = பிரமன்]

ஆடவர்பெண் சேர்க்கையிலே அவனியெலாம் செய்பிரம்மம்
தோடணியான் நாமகளைச் சோதரராய்ச் செய்ததுடன்
நீடுமாலும் அம்பாளும் நிலையினிலே சோதரராய்
நாடுகின்ற போகநிலை ஞானநிலை தருவதற்கே. … 13

[தோடணியான் = காதில் தோடணிந்த சிவன்; நீடுமால் = நிலைத்திருக்கும் திருமால்]

உலகியலும் ஞானமுமே ஒன்றாகக் கலப்பதெனத்
தலைப்பட்ட பிரம்மமது தம்பதியாய்ச் சோதரர்க்கு
விலையொன்றைத் தருவதற்கே வேதாவை இலக்குமியை
நிலைபேற்றில் சோதரராய் நிற்பதெனச் செய்ததுவே. … 14

அரன்-உமையாள் அரி-கமலை அயன்-வாணி எனமூன்றாய்
உருவான தம்பதியில் முதலிருவர் முழுமுதலாய்
இருந்திடவே பின்னிருவர் எழுஞானம் ஒன்றுமட்டும்
அருள்வதற்கே தெய்வமாக ஆலயத்தில் நின்றிலையே. … 15

பிரமனவர் குருவாகப் பாற்கடலோன் பின்னின்றே
பிரம்மவித்தை ஞானமெனும் பேற்றினையே அருளுவதால்
உருவமென ஆலயத்தின் உள்ளில்லா பிரம்மதேவன்
குருவாக நாம்போற்றிக் கூடுதரும் பிறப்பறுப்போம். … 16

[குறிப்பு:
மேல்விவரம்: தெய்வத்தின் குரல், பாகம் 5, பக். 187-230]

*****

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *