படக்கவிதைப் போட்டி 36-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இந்தவாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருப்பவர் திரு. எல். சரவணன். இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமை தன் நன்றியை நவில்கின்றது.
தனதடி தொழும் அடியார்தம் இடர்களைவதில் இணையற்றவர் கணேசர்! ஐந்து கரமும், ஆனை முகமும், இந்தின் இளம்பிறை எயிறும், தொந்தி வயிறும் கொண்ட அவரைப் பணியப் பாவம் ஓடும்; ஞானம் கூடும் என்பது நம் மக்களின் நெடுநாளைய நம்பிக்கை!
கடலில் கரையும் கணபதி சிலைக்கு அருமையான கவிதைப் படையல் செய்துள்ளனர் ஆற்றல்மிகு நம் கவிஞர் பெருமக்கள்! அப்படையலை நாமும் சிறிது சுவைத்துவிட்டு வருவோம் புறப்படுங்கள்!
***
செய்த பாவம் போதாதென்று நம் மக்கள் கணபதி சிலையைக் காலால் உதைத்துக் கடலில் கரைக்கும் பாவத்தைவேறு செய்யத் தொடங்கிவிட்டனர்; அதனால்தான் கணேசனார் கரையாமல் கரையேறுகின்றாரோ? என்று வினவுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
முதல்வன் நீ
மண்ணில் பிறந்தவை
மண்ணிலேயே
மறையும் என்ற
தத்துவத்தை உணர்த்த
தண்ணீரில் கரைக்கிறோம்
பண்ணும் பாவங்கள்
போதாதென்று
உன்னை உதைத்தும்
தள்ளியும் விடுகின்றனர்
கடலிலுனுள்
கற்றூணை பூட்டியோர்
கடலிற்பாய்ச்சினும்
நற்றுணையாவது
நமசிவாயவே என நீ
கரையாமல் கரையேறி நிற்பது கூட
பாவங்களிருந்து
எங்களை கரையேற்றத்தானோ?
***
எளிமைவிரும்பியான கணேசனின் அருள்பெறப் பகட்டுவழிபாடு தேவையில்லை என எடுத்தியம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
மண்ணில் மாவில் மஞ்சளிலும்
மாட்டுச் சாணி எதிலெனிலும்,
எண்ணம் போல வடிவுபெறும்
எங்கள் யானை முகத்தவனே,
புண்ணியம் என்றே நினைத்துபல
பகட்டைச் சேர்த்தார் வழிபாட்டிலே,
தண்ணீர் நிலைகளில் கரைத்தாலும்
தாங்கியே அருள்வாய் விநாயகனே…!
***
விநாயக சதுர்த்தியின் வரலாற்றை எழிலாய் விளக்கியுள்ளார் தன் கவிதையில் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.
விரதம் முடிய, பார்வதியே
விரவல் செய்தார் கடலிலுன்னை.
பரதத்துவம் பாதத்தில் மிதிபடாமல்
சிரத்தையாயுன்னை நோன்பு இறுதியில்
பரவையில் போட கரைகிறாய்
பூமியில் அவதரித்த நாமிறுதியில்
பூமிக்கேயென்ற தத்துவம் கூறும்
பூதல உருவாய் நீயிங்கு!
பஞ்சமா பாதகங்களை மானுடம்
அஞ்சாது செய்வதை தொலைக்க
நெஞ்சத்தால் உணர்ந்து கரைக்க
தஞ்சம் நீயென அடையாளமாகிறாய்.
தளர்வற்ற மாசறு மனம்
அளவற்று நீள அருள்வாய்!
வளர்பிறைச் சதுர்த்தி ஆவணியில்
வரம் தா ஆனைமுகத்தோனே!
( விரவல் – கலத்தல்; பரதத்துவம் – பரம்பொருள்; பரவை – கடல்.)
***
நீரில் கரையும் விநாயகருக்கு நம் மனங்கரைகின்ற வகையில், கருத்துள்ள கவிதைகளைக் காணிக்கையாக்கியுள்ள கவிஞர்களே! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!
இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் என்றார் வான்புகழ் வள்ளுவர். ”மெய்யழுக்கை நீக்குதற்கு நம் மக்கள் தரும் முக்கியத்துவத்தைத் தம் மனஅழுக்கை நீக்குதற்கும் தரவேண்டும் என்பதை விநாயகப் பெருமானே விளக்கவேண்டும்” எனும் கருத்தமைந்த பாடல் என் சிந்தை கவர்ந்தது.
கையில் இருக்கின்றக் காசைக் கரைத்துமே
மெய்யில் இருக்கும் அழுக்கினைப் – பொய்யாய்
மறைக்கின்ற மாந்தர் மனத்தழுக்கை நீக்க
இறைவா கரைந்து விளக்கு.
தண்ணீர்க் கரையில் தனியாக நீகரைந்து
கண்ணீர் குளிக்கின்ற மக்கள் – மண்ணில்
எதிர்பார்த்து ஏங்கும் அமைதிக்கு நல்ல
பதிலொன்று தந்து விடு.
நம்பிக்கை இல்லா தவறை விடு உனை
நம்பிக் கரைப்போர் நலம்வாழத் – தும்பிக்கை
நாயகனே நீயும் துணைசெய்! வீண்வாதப்
பேயகற்றி விட்டு விடு.
மூடநம் பிக்கை எனஇகழும் வாய்களினை
மூடவிடு போதும் எதிலுமே தேடலின்றிக்
குற்றம் குறைகாணும் கோமாளிக் கூட்டம்தம்
குற்றம் உணர்த்துக் கரைந்து.
இறைவனிடம் நல்ல கோரிக்கைகளை முன்வைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.
***
”மனிதா! நீ செய்யும் தப்புக்களை மூடிமறைத்து ஒப்புக்கு எனக்கு விழா எடுப்பதனால் நானுனக்கு அருள்செய்துவிடுவேன் என்றா எண்ணுகின்றாய்? ஒருநாளும் இல்லை! உன் தவறுகள் உன் பரம்பரையையே அழிக்குமுன் திருந்திவிடு!”என்று இறைவன் கணேசனார் இதோபதேசம் செய்கின்றார் ஒரு கவிதையில்!
பாவத்தில் கரையாதே
எத்தனை கோடி இன்பம் வைத்தேன்
ஓ மனிதா!
அத்தனையையும் தொலைத்து
புத்தியின்றி நீ செய்யும்
காரியங்கள்தான் எத்தனை?
களவு பல செய்து
ஈட்டிய பொருளின் பகுதியை
எனக்கும் காணிக்கையாக்கி
கற்பூரமேற்றுகிறாய்!
உழைப்பவரை மிதித்துவிட்டு
நீ மட்டும் உயரப் பார்க்கிறாய்
உயரே நான் இருப்பதை
மறந்து போகிறாய்!
ஊழலில் திளைத்து
ஊரையே சீரழிக்கிறாய்
தேவாலயங்கள் கட்டி
அதையும்
வியாபாரம் ஆக்குகிறாய்
தினந்தோறும்
நீ என்முன்
படைக்கும் பாவம் கரைக்க
ஆண்டுக்கு ஒருமுறை
கடலில் கரைகிறேன்
நீ செய்யும் பாவங்களில்
உன் பரம்பரையே
கரைந்துவிடும் என்பதை மட்டும்
கவனத்தில் கொள்!
திரு. கொ.வை. அரங்கநாதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவுசெய்துள்ளேன்.
உற்சாகத்துடன் படக்கவிதைப் போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் என் நன்றி!
கவிதையைத் தேர்வு செய்த வல்லமைக்கு. நன்றி