(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 36

ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதர்

அவன் தொந்திவிளாகம் தெருவில் உள்ள தாத்தாவின் வீட்டிற்குச் செல்லும் பொழுதெல்லாம் அந்தத் தெருவின் ஆரம்பத்தில் வடக்கு வரிசையில் இரண்டு மூன்று வீடுகள் தள்ளி ஒரு வீட்டின் சிகப்பு நிறத் திண்ணையில் காலையில் கிழக்கு முகமாகவும், சந்தியாகாலத்தில் மேற்கு முகமாகவும் அமர்ந்து கொண்டு சந்தியாவந்தனமோ, வேத பாராயணமோ செய்து கொண்டிருக்கும் அந்தப் பெரியவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவன் அவரைக் கையெடுத்துக் கும்பிடுவான். அப்பொழுது அவர் புன்னகைத்தபடி, மென்மையாக, ” என்ன விஸ்வம்…தாத்தாவாத்துக்குப் போயிண்டிருக்கயா” என்று கேட்பார். அவர்தான் ப்ரும்மஸ்ரீ மகாதேவ தீக்ஷிதர். கேரளாவில் உள்ள பரவூரில் ஆறுமாதமும், கல்லிடைக்குறிச்சியில் ஆறு மாதமுமாக இருப்பார். வேத வித்து. அமைதியான தோற்றமே அவரது ஞானத்தைப் பறைசாற்றும். அவரது ஒரு புதல்வர் ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதர். தந்தையைப் போலவே வேத வித்து. மென்மையாகத்தான் பேசுவார். வைதீக தர்மத்தில் உள்ள ஒழுக்க நெறிகளைத் தவறாமல் கடைப்பிடித்தவர். பணத்திற்காக வேதத்தை விற்காத வெகு சிலரில் ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதரும் ஒருவர். அவர் பொறுப்பேற்று நடத்தி வைக்கும் வைதீக நிகழ்ச்சிகளில் சிறு தவறுகூட நிகழாமல், மிகவும் கவனமாக இருப்பார். அவரோடு இருக்கும் மற்றவர்களும் அப்படி இருக்கவேண்டும் என்று விரும்புவார்.

டுண்டிவினாயகர் கோவிலில் நடைபெறும் எந்த வைதீக நிகழ்ச்சியானாலும் ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதரின் வழிகாட்டுதலின் படிதான் நடக்கும். அந்தக் கோவிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி உற்சவத்தின் பொழுது ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமான ஹோமங்களை ஏற்பாடு செய்தது திறம்பட நடத்திக் கொடுப்பார். மிகப் பொறுமையாகச் செய்வார். அதைப் பார்ப்போருக்குத் தாங்களும் அப்படி நியமமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் உண்டாகிவிடும். அனேகமாக அந்த ஹோமங்களின் “பூர்ணாகுதி” நடைபெறும் பொழுது மதியம் இரண்டு அல்லது மூன்று மணி ஆகிவிடும். அதன் பிறகுதான் கிராம மக்களுக்கு அன்னதானம் நடைபெறும். எல்லோருக்கும் அவர் நடத்தும் அந்த பூஜைகளில்தான் கவனம் இருக்கும். அவனுக்கு அவரிடம் மிகுந்த மரியாதை உண்டு.

அந்த கிராமத்தில் உள்ள சிறுவர்களுக்கெல்லாம் ஸ்லோகங்களும், வேத மந்திரங்களும் கற்றுத்தந்தார். தன்னுடைய வீட்டின் முன்னறையில் வைத்து மாலை நேரத்தில் அந்த கிராமத்து இளைஞர்களுக்கு வேத மந்திரங்கள் கற்றுக் கொடுத்தார். முக்கியமாக ருத்ரம், சமகம், புருஷசுக்தம் மற்றும் உபநிடத மந்திரங்களைக் கற்றுத் தந்தார். அப்படி அவரிடம் கற்றவர்கள் இன்றும் சிறப்பாக இருக்கிறார்கள். அவனுக்கும் கற்றுத்தர அவர் அழைத்தார். ஏனோ அப்பொழுது அவனுக்கு அதில் நாட்டம் இருக்கவில்லை. என்றாலும் அவருக்கு அவனிடம் ஒரு தனி அன்பு இருக்கத்தான் செய்தது. அவனுக்குத் திருமணத்தின் பொழுது அவர் வந்து அவனை ஆசிர்வதித்தார். அவனுக்கு முதல் மகன் பிறந்த பொழுது அவரிடம் தகவல் சொன்னான். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன்,”கண்ணா …ஒன்னோடு கொழந்தைக்கு நான் ஜாதகம் குறித்துத் தருகிறேன்” என்று சொல்லி, அதன்படி குறித்தும் கொடுத்தார். அவருக்கு ஜோதிடமும் நன்கு தெரியும். ஆனால் காட்டிக் கொள்ள மாட்டார். அவனுக்கு அவரைக்கொண்டு “பகவதி பூஜை” செய்யச் சொல்ல வேண்டும் என்று ஆசை இருந்தது. அந்த ஆசையை அவர் 1984ம் வருடம் ஆடிமாதம் அவர்களுடைய கல்லிடைகுறிச்சி இல்லத்தில் மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். அதில் அவனுக்கு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் எங்கு “பகவத் சேவை” (பகவதி பூஜை) நடந்தாலும் அவன் அந்த தீக்ஷிதரை நினைத்துக் கொள்ளுவான்.

ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் சதாபிஷேகம் மிகச் சிறப்பாகச் சென்னையில் குளத்தூரில் அவரது மூத்த மகன் மகாதேவன் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அவரை நேரில் சென்று வணக்கும் வாய்ப்பும் அவனுக்குக் கிடைத்தது.

ஆயிரம் பிறை கண்ட சில மாதங்களில் அவர் இறைவன் திருவடியை அடைந்தார். இல்லை வேத ஒலியாகக் கலந்தார்.

நண்பன் V. சிவராமகிருஷ்ணன் என்ற இராஜாமணி

சிறுவயதில் ஒருநாள் அவன் தொந்திவிளாகம் தெருவில் உள்ள கன்னடியன் கால்வாய் மண்டபத்தில் நண்பர்களுடன் காலையில் விளையாடிக் கொண்டிருந்தான். அந்தக் நண்பர்களில் சிவராமகிருஷ்ணன் என்ற ராஜாமணியும் இருந்தான். தண்ணீரில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்துவிட்டு அவன் அவனுக்குத் தாத்தாவின் வீட்டிற்குச் சென்று உடையை மாற்றிக் கொண்டு பிள்ளையார் கோவில் வாசலுக்கு வந்தான். அப்பொழுது அங்கு இராஜாமணியின் தந்தைவழிப் பாட்டி “குஞ்சாமி அம்மாள்” அவனிடம்,”டேய்..விஸ்வம்…எங்காத்து ராஜாமணியப் பாத்தயா…” என்று கேட்டாள். அதற்கு அவன் நண்பர்களுடன் V விளையாடும் ஜோரில் “உங்காத்து ராஜாமணி வாய்க்காலோட தண்ணீல போய்ட்டான் ” என்று சொல்லி ஓடிவிட்டான். குஞ்சாமிப் பாட்டிக்கு மிகுந்த கவலை. நெடு நேரம் தேடிய பின்பு எங்கோ விளையாடிக் கொண்டிருந்துவிட்டு இராஜாமணி வீட்டிருக்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு நிம்மதி. அவனுக்கோ ஒரே பயம். குஞ்சாமிப் பாட்டி தெருவில் அவனைப் பார்த்தால் திட்டுவளே என்று. ஒரு நாள் அவனைப் பார்த்து,” ஒன்ன போலீசுல பிடிச்சுக் குடுக்கறேன் படவா” என்று தன் கைத்தடியைத் தூக்கிப் பிடித்துக் குஞ்சாமிப் பாட்டி சொன்னாள். அதெல்லாம் அன்பின் தெறிப்பு என்பது அவனுக்குத் தெரியாதா என்ன?

சந்திரவிலாஸ் A. விஸ்வநாதையரின் சித்தப்பா மகன்தான் வாஞ்ஜீஸ்வர ஐயர். அவரது ஒரே மகன் வா.சிவராமகிருஷ்ணன். அவனை இராஜாமணி என்றும் அழைப்பார்கள். கவிமாமணி தேவநாராயணனின் மாமா மகன் இராஜாமணி. அதனால் தேவநாராயனனுக்கு இராஜாமணி அம்மான் சேய். அம்மாஞ்சி முறை.

சிவராமகிருஷ்ணனுக்கு இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. வடமொழி, தமிழ், ஆங்கிலம் அறிந்தவன். அவனை சிவராமகிருஷ்ணன் சந்திக்கும் பொழுதெல்லாம் தமிழிலக்கியம் பற்றியும், ஆன்மிகம் பற்றியும் தன் கருத்தைப் பகிர்ந்து கொள்வான். சிவராமகிருஷ்ணனுக்கு உ.வே.சாமிநாதையரிடம் மிகுந்த பக்தி உண்டு. அவரது “என் சரித்திரம்” நூலைப் பற்றியும், உ.வே.சா.வின் குருநாதர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியும் அவனிடம் ரொம்பவும் குஷியாகப் பேசிக் கொண்டிருப்பான். “தெய்வத்தின் குரல்” ஏழு பாகமும் பாடம் என்றே சொல்லிவிடலாம். அத்தனை பக்தியோடு அந்த நூலில் உள்ள விஷயங்களை அவனோடு பகிர்ந்து கொள்வான். சிருங்கேரி ஆசார்யாளிடம் மிகுந்த பக்தி உண்டு. அதிலும் ஸ்ரீ சந்திர சேகர பாரதீ மகாசன்னிதானம் மீது அபார பக்தி இராஜாமணிக்கு உண்டு. “The Saints of Sringeri” என்ற புத்தகத்தைப் பற்றிச் சொல்லி அவனை படிக்கத் தூண்டியதே சிவராமகிருஷ்ணன்தான்.

சிவராமகிருஷ்ணனுக்கு வைதீக விஷயங்களில் ஈடுபாடு அதிகம். அதனால்தானோ என்னவோ அமைதியாகவே இருப்பான். தன் இளம் வயதிலேயே “டுண்டிவினாயகர் கோவிலுக்கு” அறங்காவலராக இருந்து மிக அழகாகவும், ஆசாரத்துடனும் கோவில் திருவிழாக்களைக் கொண்டாட அந்த கிராமத்தின் ஒரு முக்கியமான மனிதராகத் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறான். நேர்மையான மனிதன் என்ற பேரை வாங்குவது அத்தனை எளிதான காரியம் இல்லை. அதை மிகச் சுலபமாகப் பெற்றிருக்கிறான் நண்பன் சிவராமகிருஷ்ணணன். அந்த கிராமமே சிவராமகிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்படும் படியாக எதையுமே யோசித்துச் செய்யக்கூடியவன்.

ப்ரும்மஸ்ரீ இராமகிருஷ்ண தீக்ஷிதருக்கு சிவராமகிருஷ்ணன் மீது உயிர். சிவராமகிருஷ்ணனுக்கு வேதத்தின் மீதும், வேத வித்துக்களின் மீதும், மகான்களின் வார்தையிலும், தான் வணக்கும் “டுண்டிவினாயகர்” மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையே உயிர் மூச்சாக இருக்கிறது. சிவராமகிருஷ்ணனின் மனைவிக்கும் அப்படியே.

அவனுக்கு சிவராமகிருஷ்ணனைப் போன்ற நண்பர்கள் கிடைத்தது குருகிருபை தானே.

29.10.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *