Blog

  • விடாது வந்த வினையெலாம் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

    விடாது வந்த வினையெலாம்
    தொடாமல் எங்கு சென்றன?
    தொடாத அந்த உயர்வெலாம்
    விடாமல் என்னைத் தொடர்ந்தன
    படாமல் பட்ட பாடெலாம்
    அவன் கை பட்டு நின்றன (விடாது)

    மனத்தில் இன்று வரையிலும்
    இலாத மெளனம் வந்தது
    நினைப்பு நின்ற போதிலும்
    நில்லாமல் இன்பம் நீண்டது

    வனத்திலே சுனைக்குளே
    இனித்திடும் தனிமை வந்தது
    நினைப்பிலே நிஜத்திலே
    நிழலில்கூட இனிமை வந்தது
    எனக்குளே எனக்குளே எனக்குளே எல்லாம் நின்றது (விடாது)6

    நினைத்ததே நடந்ததால்
    நெஞ்சம் வேர்த்தது
    நிழல்களும் நிஜங்களும்
    கொஞ்சிப் பார்த்தது

    வனத்திலே தனித்தவோர்
    கணத்திலே யாவும் நேர்ந்தது
    தனித்தவோர் கணத்திலே
    வளைக்கரம் வழிமறித்தது

    கடலொடுங்கி மலையெழுந்து
    மரம்விளைந்து மலர்சிரித்தது
    (விடாது)

    Share
  • ஜாகேச்வரத்தில் நான்…

    இசைக்கவி ரமணன்

    BAJNATH

     

     

    ஆடா மரங்கள் அணிவகுத்து நின்றிருக்கும்
    மூடாத வானில் முகடு முளைத்துவரும்
    நாடா நலம்யாவும் நாடி நமையழைத்து
    வீடாய் விளங்கும் வியன்மிகுஜா கேச்வரத்தில்

    கோடானு கோடி கொடியவினை யால்பட்ட
    பாடாவும் தூளாகிப் பாட்டாகப் பல்கிவர
    ஈடேது மில்லாத இன்பத் தனிமையிலே
    ஓடெல்லாம் வானாய் உருகி இனிக்குதம்மா!

    காயாத பிஞ்சு கனியாவ தென்றென்றே
    வேயாத வானை வெறித்தபடிப் பார்த்தவன்தான்
    தாயத்தே தோற்றதெல்லாம் தான்மீண்டும் பெற்றதாய், ஓர்
    மாயத் தலைவி மடியில் விழுந்தெழுந்தேன்

    மாயத் திரைநீக்கி, மன்னவனாய் என்னையாக்கி
    நேயத் தறியினிலே நெய்ததெல்லாம் நெஞ்சாக்கி
    காயைக் கனியாக்கி, சாறாக்கி, கிண்ணத்தே
    தோய அதையூற்றித் தூக்கினாள் வான்சிலிர்க்க!
    வெட்ட வெளியெங்கும் விந்தை மிகுநீலம்
    கொட்டிக் கிடக்க, குளிர்மலையின் கூர்முடியைத்
    தொட்டுவந்த காற்று துளைக்கும் உயிர்மீது
    பட்ட கரத்தைப் பராசக்தி என்பேனா?

    கொட்ட மடிக்கின்ற கூத்தன்கை என்பேனா?
    பட்ட மறுந்த பரவசம் என்பேனா?
    நட்டநடு நெஞ்சில் நமச்சிவா யன்வந்து
    தொட்டுச் சிரிக்கின்ற தூயவுண்மை என்பேனா?

    நாள்முடிந்து, ஓடை கருத்த இரவினிலே
    தாள்பதித்து சம்போ நடமாடும் பூமியிது
    தோள்தொட்டுப் பின்னே முறுவலித்து, பேச்சுக்குச்
    சூள்கொட்டிச் சூலமுடன் கூடவரும் சாமியிது

    நிற்பனவெல் லாம்வெறும் நெட்டை மரங்களல்ல
    விற்பனர்கள்! வேத விழிதிறந்தோர்! சத்தியத்தைச்
    சொற்பட வைத்துச் சுருதி இசைத்தவர்கள்!
    முற்பட்ட மாமனிதர்! முன்னோர்கள்! மாமுனிவர்!

    பண்டை உமையரசி பாதச் சதங்கையெனத்
    தண்டை குலுங்கச் சடகங்கா செல்கிறது
    உண்மையினைக் கண்டுரைத்த ஒப்பற்ற சங்கரன்
    தண்டுவைத்த கோயிலைத் தான்தழுவி நீள்கிறது

    கண்ணெதிரே தேவியின் கன்னம் வியர்க்கிறது
    விண்குலவும் பாதத்தில் வெள்ளிநகம் பூக்கிறது
    மண்ணதிர மாதேவன் மத்தநடை கேட்கிறது
    பண்ணவொன்று மின்றிப் பரநிலை வாய்க்கிறது

    வேந்தரும் யோகியரும் வித்தகரும் தாமுவந்து
    சார்ந்த தவநிலையம்! சார்ந்தோர்க்கு முக்தியை
    ஏந்தி வழங்க எமதுசிவன் கால்நடந்து
    பூந்துகள் காற்றில் பொலியும்ஜா கேச்வரத்தில்

    ஏழையைப் பிள்ளையென ஏற்ற குருநாதன்
    வாழவைத்துத் தான்மகிழ வையத்தில் தானிறங்கிச்
    சூழ்ந்த வினைமலையைச் சுண்டுவிரல் தட்டியவன்
    ஆழ்ந்த தவம்கலையா தாசி மழைபொழிவோன்

    கூட்டிவந்தான்; தானாய்க் கொலுவிருக்கும் தேவனுடன்
    கூட்டிவைத்தான்; நான்முயன்று கூடாத இன்பத்தைக்
    கூட்டுக்குள் கொட்டிவைத்தான் கூடாமல் எட்டிநின்றான்
    கூட்டுக்குள் வீட்டைப்போய்க் குந்தி இருக்கவைத்தான்

    எந்தைத் திருவருளால் ஏகாந்த வாசத்தில்
    சிந்தை தெளிவாச்சு; சித்தம் ஒளியாச்சு;
    முந்தை வினையோ முற்றும் விழுந்தாச்சு
    மொந்தைக்கள் ளின்தயவில் மொத்தமும் நேராச்சு

    தேகம் வசப்பட்டு சிந்தை உருப்பட்டோர்
    யோகம் ஒருப்பட்டு ஞானம் வெளிப்பட்டு
    சோகச் சுவடுமின்றி, சொல்லாய் அமர்ந்துள்ளேன்
    ஜாகேச் வரத்தில் தனித்து.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    பாலாதிரிபுரசுந்தரி

    keshav

    பாப்பா நெமிலிவாழ் பாலா திரிபுரை,
    காப்பாள், அடியார் கரம்பிடித்துச், -சேர்ப்பாள்
    அதியற் புதமான ஆன்ம உலகில்:
    துதியவளை சாக்லேட்டைத் தந்து ….

    அமளி இலாத அமைதி லயத்தில்,
    ரமண மயமாய் ரமிப்பு, -நெமிலிவாழ்,
    பாண்டுரங்கன் சோதரி, பாலா திரிபுரையை
    வேண்டி யுறங்க வரம் ….

    காளி அரக்கர்க்கு, கற்பகம் பக்தர்க்கு,
    யாளி அமரும் எஜமானி, -தோளிரெண்டில்,
    வேலா யுதன்அண்ணன் வேழனைச் சுமந்திடும்,
    பாலா நவராத்ரிப் பெண் ….

    வெள்ளை அரவிந்தம் வீற்று நெமிலியில்
    கொள்ளை அழகாய் கொலுவிருக்கும், -பிள்ளையவள்,
    பாலா திரிபுரையைப் போற்றிப் பணிவோர்க்கு
    நாளாம் நவராத்ரி நாள் ….

    சுப்ரமண்ய அய்யரின் சொப்பனத்தில் வந்(து)ஆற்றில்,
    தெப்பமாய் நீந்திக்கண் தென்படுவேன், -அப்புறம்,
    ஆலயம் வேண்டாம், அகத்தில் குடிவைப்பீர்,
    வாலைபா லாஅருள் வாக்கு ….

    மூலாதா ரத்தினில் மூளும் கனலவள்,
    கோலா கலகோ குலன்தங்கை, -பாலா
    திரிபுரையைக் காண திருநெமிலி செல்வோம்
    ஹரிசோ தரியே அரண் .

    சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய்
    கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த,
    நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி
    பாலாம் பிகையவள் பேர்

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கணையிலும் கூரியவாம் கண்

    யாந்தீய செய்த மலைமறைத்த தென்றெண்ணித்
    தாந்தீயார் தந்தீமை தேற்றாரால் – ஆம்பல்
    மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
    கணையிலுங் கூரியவாம் கண்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘யாம் தீய செய்த மலை மறைத்தது’ என்று எண்ணி,
    தாம் தீயார் தம் தீமை தேற்றாரால்;-ஆம்பல்
    மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!-
    கணையிலும் கூரியவாம் கண்.

    பொருள் விளக்கம்:
    நாம் தீமைகள் செய்ததை மலை மறைத்தது விட்டது (போன்று அவை மறைவில் உள்ளது) என்று நினைக்கும் தீயவர், தங்கள் தீச்செயல் விளைவு பற்றிய தெளிவற்றவர். ஆம்பல் மலர்கள் மணவிழா இல்லங்களில் மணம் பரப்பிட, மிகுத்த அலைகளையுடைய நீர்வளம் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, அம்பையும் விடக் கூர்மையானவை கண்கள் (அவை குற்றத்தைக் கண்டுவிடும் என அறிக).

    பழமொழி சொல்லும் பாடம்:
    பிறர் மனதில் ஓடும் எண்ணங்களை அவரது முகத்தைக் கொண்டே கூரிய பார்வை கொண்டவர் உணர்ந்து விடுவார். குற்றங்களை அத்தகையவரிடம் இருந்து மறைக்க இயலாது. இக்கருத்தை வள்ளுவர்,

    நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
    கண்ணல்லது இல்லை பிற. (குறள்: 710)

    நுட்பமான அறிவுடையோர் எனப்படுபவர், பிறர் மனக்கருத்தை அளக்கப் பயன்படும் கருவி அவரது கண்களைப் போன்றல்லாது வேறொன்று இல்லை என்கிறார். மேலும்,

    குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
    என்ன பயத்தவோ கண். (குறள்: 705)

    ஒருவரது அகத்தில் உள்ளதை அவரது முகமே காட்டிக் கொடுத்துவிடும் என்கின்றபோது, அந்த முகக்குறிப்பை உணர்ந்து கொள்ள இயலாத கண்கள் இருந்தென்ன பயன் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

    Share
  • எனது தேவி புஷ்டிமா (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

     

    (ஜாகேஷ்வரில் மஹிஷாஸுர மர்த்தினியாய் வீற்றிருக்கும் அன்னை, புஷ்டி தேவி என்னும் பெயருடன் விளங்குகிறாள். தேசம் காக்க அவளைத் தேரிலேறி வரச்சொல்லும் கூட்டுப் பாடல்)

     

     

     

    எனது தேவி புஷ்டிமா
    எழுந்து வெளியில் வருக
    தேசம் காவல் வேண்டுதம்மா
    தேரில் ஏறி வருக
    உனது காலில் தலைபதித்து
    உயிரைத் தந்தோம் வருக
    உலகம் போற்ற உனது நாட்டை
    உயர்த்தி அருள வருக!

    உனது இமையை உயர்த்தி எம்மை
    ஒருமுறை நீ பார்க்க
    உடலை மனதை உயிரையெல்லாம்
    உன்னிடத்தில் சேர்க்க (எனது)

    கலியின் பழைய கடிகாரம்
    காளி முன்பு செல்லுமோ? நீ
    காலைவைத்தால் உன்னைத் தடுக்க
    எங்கும் எதுவும் எண்ணுமோ?
    புலியில் ஏறி வருக! சிங்கப்
    புரவி ஏறி வருக!
    புயலைப் போலச் சீறிச் சினந்து
    பொய்யைப் புடைக்க வருக!
    புனிதம் நெஞ்சில் தருக! (எனது)

    நீசர் கையில் வாடுதம்மா
    நீ நடந்த தேசம்
    நினைக்க நெஞ்சில் துணிவுமில்லை
    நிழலும் கூட மோசம்
    நேசம் வாழ வேண்டும், தர்ம
    நீதி வாழ வேண்டும்
    நீ வளர்த்த பிள்ளைகளாய்
    நாங்கள் மாறவேண்டும், பழைய
    நலங்கள் சேரவேண்டும்! (எனது)

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – மொழிபெயர்ப்பிற்கு உதவும் தளங்கள் மற்றும் இணைய அகராதிகள்

    –சிவானந்தம் கனகராஜ்.

    இணையத்தில் எத்தனையோ மொழிகளில், எத்தனையோ விதமான தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. நாம் தேடும் தகவல்கள், நாம் அறியாத வேறு மொழியில் இருந்தாலும், அதை இணையத்திலேயே மொழிபெயர்த்து அறிந்து கொள்ள இயலும். ஒரு வலைப்பக்கத்தை முழுமையாக, ஓர் மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யலாம். நமக்குத் தேவையான குறிப்பிட்ட சொற்களை மட்டும் மொழிபெயர்த்து, அவற்றின் பொருளை அறிந்துகொள்ள விரும்பினால், அவ்வாறு ஒரு சொல்லை மட்டும் மொழிபெயர்க்கவும் செய்யலாம். இதற்கு இணையத்தில் மொழிபெயர்ப்பு தளங்கள், ஒரு மொழியில் இருந்து மற்றோர் மொழிக்கு மொழிமாற்றம் செய்து, அதற்குண்டான பொருளையும் வழங்கும் மின்னகராதிகள் பலவும் இணையத்தில் கிடைக்கின்றன. அத்தகைய மொழிபெயர்ப்பு தளங்கள், மின்னகராதிகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

    1) கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவை (Google Translation):

    கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவையை பயன்படுத்தி ஆவணங்கள், வலைப்பக்கங்கள், சொற்கள், சொற்றொடர்கள், படக் கோப்புகளில் இருக்கும் சொற்கள், பத்திகள், நமது கையெழுத்து கொண்டே சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை, நமது குரல்வழி சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை என்று பல வழிகளில் நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை வசதியைப் பயன்படுத்தலாம்.

    கணினிகளில் இணைய வசதியினை பயன்படுத்தி, நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் கருவிகளில் பயன்படுத்த என்று கூகுள் மொழிபெயர்ப்பிற்கென்று தனி செயலி (apps) உண்டு. கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் தனிச் சொற்கள், சிறிய சொற்றொடர்கள் போன்றவற்றிற்கு மிகத் துல்லியமான மொழிபெயர்ப்பு கிடைக்கும். அதே சமயம், பெரிய பத்திகள், அல்லது ஓர் முழு வலைப்பக்கமோ, ஓர் ஆவணத்தையோ முழுமையாக மொழிபெயர்க்க வேண்டுமெனில், மிகத் துல்லியமான முடிவுகள் கிடைப்பதில்லை.

    இன்னபிற மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் இணையதளங்கள் பலவும் சொற்களை மட்டுமே மொழிபெயர்க்கும் வசதியைத் தரும் வேளையில் கூகுள் வழங்கும் வலைப்பக்க மொழிபெயர்ப்பு முயற்சி வரவேற்கத் தக்கது. தற்சமயம் கூகுள் வழங்கும் இந்த மொழிபெயர்ப்பு சேவை வசதி தொண்ணூறுக்கும் மேற்பட்ட மொழிகளுக்குக் கிடைக்கிறது. இதில், நமது இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, குஜராத்தி,உருது, பெங்காலி, கன்னடம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி ஆகியவையும் அடங்கும். இது, இம்மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல், அல்லது, ஆங்கிலத்திலிருந்து இம்மொழிகளுக்கு மொழிபெயர்த்தல், மற்றும் இம்மொழிகளிடையே மொழிபெயர்த்தலும் அடங்கும்.

    கூகுளின் மொழிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணையதளத்தில் பெறலாம்:
    https://translate.google.com/

    கூகுள் வழங்கும் ஒலிபெயர்ப்பு சேவை (Google Transliteration):
    இவ்வசதி மொழிபெயர்ப்பு செய்ய பயன்படாது. ஆனால், நாம் உள்ளிடும் சொற்களின் ஒலிக்கு ஏற்ப, நமக்கு வேண்டிய மொழியில் ஒலிபெயர்த்து கொடுக்கும். எடுத்துக்காட்டாக, நாம் தமிழில் “அம்மா” என்ற சொல்லை தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால், அது தமிழில் அம்மா என்று நமக்கு ஒலிபெயர்த்து கொடுக்கும். இவ்வசதி, கூகுள் வழங்கும் Google Transliteration சேவையின் மூலம் கிடைக்கிறது. இவ்வசதி தனி வலைப்பக்கத்திலும் கிடைக்கும். அது தவிர கூகுளின் இன்னபிற சேவைகளான கூகுள் மின்னஞ்சல் (Gmail), கூகுள் வழங்கும் வலைப்பூ சேவை (Blogger) ஆகியவற்றிலும் இந்த ஒலிபெயர்ப்பு சேவை கிடைக்கிறது.

    கூகுளின் ஒலிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பயன்படுத்தலாம்:
    http://www.google.com/inputtools/try/

    2) ஷப்த்கோஷ் :

    ஷப்த்கோஷ் இணையதளத்தில் தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி கிடைக்கிறது.

    கீழ்க்காணும் இணைய பக்கத்தில் இதனைப் பயன்படுத்தலாம்:
    http://shabdkosh.com

    இத்தளத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்த்துத் தரும் வசதி இருக்கிறது. நாம் மொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அச்சொல்லினை உச்சரிக்கும் விதம், சொல்லின் மொழிபெயர்ப்பு, அச்சொல்லின் இன்னபிற வடிவங்கள் ஒருமை/பன்மை (Singular/Plural), வினை வடிவங்கள் (Tense Forms), சொற்பொருள் விளக்கம் (Definitions & Meanings) ) போன்ற தகவல்களையும் நமக்கு வழங்குகின்றது.

    ஆண்ட்ராய்ட் (Android), ஆப்பிள் (Apple), மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows), விண்டோஸ் தொலைபேசி (Windows Phone) ஆகிய கருவிகளுக்கு (devices) ஷப்த்கோஷ் தனி செயலி (apps) கிடைக்கிறது.

    3) Tamil cube வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி:

    தமிழ் க்யூப் வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கவும் உதவுகிறது. இந்தத் தளத்தில் பலதுறை சார்ந்த கலைச்சொற்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.

    இந்த அகராதியைக் கீழ்க்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்:
    dictionary.tamilcube.com/

    மொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அந்தச் சொல்லிற்கான பொருள் அகராதியில் இருப்பின் பொருள் தருவதுடன், அச்சொல்லுக்குத் தொடர்புடைய சொற்கள் மற்றும் இணையான சொற்களை வழங்கி, பொருளும் வழங்குகிறது. இந்தத் தளத்தில், மொழிபெயர்ப்பு சேவை கிடைப்பதுடன், இணையத்தில் இருக்கும் இன்ன பிற மொழிபெயர்ப்பு தளங்கள், இணைய அகராதிகளுக்கு இணைப்புகள் கிடைக்கின்றன.

    4) kapruka.com வழங்கும் சிங்கள மற்றும் தமிழ் அகராதி:

    கப்ருகா (kapruka) இணையதளம் வழங்கும் இணையவழி அகராதி. ஆங்கிலத்தில் சொற்களை உள்ளிட்டால், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பொருள் வழங்குகிறது. இது தவிர, அச்சொல்லின் ஒலிப்பு முறை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வழங்கப்படுகிறது. நமக்குத் தேவையான சொற்கள் இந்த அகராதியில் காணக் கிடைக்கவில்லையெனில், நாம் நமக்குத் தேவையான சொற்கள் குறித்து வேண்டுகோள் வைத்தால், அந்தச் சொல்லிற்கான மொழிபெயர்ப்பு அகராதியில் சேர்க்கப்படும்.

    கீழ்க்காணும் இணையப் பக்கத்தில், இந்த அகராதியைப் பயன்படுத்தலாம்:
    http://www.kapruka.com/dictionary/EnglishToSinhala.jsp

    5) tamildict.com வழங்கும் தமிழ் – ஆங்கிலம் – ஜெர்மானிய அகராதி:

    tamildict.com இணையதளம் வழங்கும் இணையவழி அகராதியில், கிட்டத்தட்ட 45 வகை பிரிவுகளில் சொற்கள் வகை பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
    இந்த அகராதியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளரும், புதிதாக அகராதியில் சொற்களை சேர்க்கலாம். ஏற்கனவே இருக்கும் மொழிபெயர்ப்பினை மேம்படுத்த விரும்பினால், அங்ஙனமும் செய்யலாம். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டி, திருத்தம் செய்யலாம்.

    இது தவிர, எண்களை உள்ளிட்டால், அந்த எண்களைத் தமிழில் உச்சரிப்பது எப்படி என்ற விபரமும் கிடைக்கிறது. 999999999 (தொன்னூற்றியொன்பது கோடியே தொன்னூற்றியொன்பது இலட்சத்து தொன்னூற்றியொன்பது ஆயிரத்து தொளாயிரத்தி தொன்னூற்றியொன்பது) வரையிலான எண்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகளைத் தருகிறது.

    இந்த அகராதியைக் கீழ்க்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்:
    http://www.tamildict.com/english.php

    6) தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் ஆங்கில – தமிழ் அகராதிகள் :

    தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில், பல்வேறு அகராதிகளுக்கான இணைப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள், தமிழ் – ஆங்கில அகராதிகளும் அடங்கும்.
    அவை ,
    பால்ஸ் அகராதி
    சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் – தமிழ் அகராதி
    இன்னபிற அகராதிகளின் விபரம் குறித்து அறிய, கீழ்க்காணும் இணையதளத்தில் காணலாம்.

    தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் அகராதிகள் :
    http://www.tamilvu.org/library/dicIndex.htm

    குறிப்பு:
    இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் அனைத்தும், அவற்றின் இணையபக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

    Share
  • அம்பிளி இல்லம்

    –கவிஜி.

    “இது மாலை நேரத்து மயக்கம் …”- பாடல் கேட்டுக் கொண்டே மழை பார்த்துக் கொண்டிருந்தேன். சோவென மழை, இல்லை … பலத்த மழை, பழுத்த மழை.

    சனிக்கிழமை மாலை வேறு. கொஞ்சம் குடித்துக் கொண்டும் இருந்தேன். டாஸ்மாக் முன்னால் விழுந்து கிடப்பது போல் இல்லை எனது குடி. இது முன்னால் காதலியின் பிரிவு முத்தம் போல. அத்தனை மென்மையானது. மேன்மையானது. தானாக புன்னகைத்துக் கொண்டே ஏதேதோ யோசிக்கத் தோன்றியது. “ஜன்னல் தாண்டி வந்து முகம் தொட்ட சாரலில் கடவுளின் எச்சில்” என்று மொக்கையாக கவிதை கூட வாய்மொழியாக நினைத்த போது தான் எதிர் வீட்டு ஜன்னல் கதவுகள் முன்னும் பின்னும் வேக வேகமாக அடித்துக் கொண்டிருந்தன, அத்தனையும் காற்று. பெருங்காற்றில் பெரு மழை. பெருமழைக்குள் மாலை மூடுகிறது, கவ்விய மௌனமாக.

    இப்போது, “ஏதோ நினைவுகள், மனதிலே மலருதே…” பாடல்.

    எப்போதும் அடைத்தே கிடக்கும் ஜன்னல் எப்போதாவது எட்டாவது அதிசயமாய் திறக்கும். ஒன்பதாவது அதிசயமாக ஜன்னலில் ஒரு பெண்ணின் முகம் சோர்ந்து காணப்படும். அதுவும் பின்னிரவு நேரங்களில் மழை நாட்களில் அடர் வெயில் சமயங்களில் இப்படி எப்போதாவது தெரியும் முகத்தில் ஒரு வித தெளிவும் இல்லாத, குழப்பமும் இல்லாத வெற்றிட வட்டம் போல அந்த முகம் வெறித்திருக்கும். முன் அறையில் பெரியவர்கள் பேசுவதும், போவதும் வருவதுமாகவே இருப்பார்கள் அந்த வீட்டுத் தாத்தா கூட என்னுடன் எப்போதாவது வாக்கிங் வருவார்.

    “சார், அது உங்க பேத்திங்களா?” என்று கேட்கத் தோன்றும். பின், “ம்… சரி எதுக்கு வம்பு!” என்று வாய் சாத்திக் கொண்டு நடை சாற்றுவேன். பெரிதாகப் பழக்கம் இல்லை என்பதால் கடந்து போவது சுலபமாக இருக்கும். சரி, இன்று என்ன ஆனாலும் பரவாயில்லை கை காட்டி விட வேண்டும். ‘அம்பிளி இல்லம்’, என்று வாயில் ஸ்லாபில் பெயர் பதிந்து வைத்திருக்கிறார்கள் ஒரு வேலை அம்பிளிதான் பெயராக இருக்குமோ?

    வாய்க்குள் மழை வைத்தது போல மெல்லமாக, ஆனால் மன சத்தத்தில் அதிகமாக ‘அம்பிளி’ என்று கத்தினேன். எனக்கே கேட்டதாகத் தெரியவில்லை. “இந்த பொண்ணுங்கள நம்பவே முடியாது திடீர்னு போட்டு குடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க. அதான்…”யோசித்தேன். யோசிக்க யோசிக்க அவளின் தீர்க்கப் பார்வை கவிழ்ந்து கொண்டே இருந்தது. மிகப் பெரிய மேகத்தின் கரிய நடையைக் கொண்டிருத்த கூர் முகத்தில், வட்ட வட்டமாய் விழுந்த துளியின் நிறப் பிரிகையில் வானவில்லின் இரு நிறம் கூட அவள் முகம் தாங்கிப் போனது போல நீண்டு வளைந்து கிடந்தன என் பார்வையின் குறிப்புகள்.

    கையை ஆட்டிக் கொண்டே ஜன்னலுக்கு வெளியே உடலை சற்று தள்ளி முகத்தை நீட்டினேன். மழைப் பெண் நனைத்த முகத்தை கவிப் பெண் நனைக்கவில்லை, இன்னும் குனிந்தே இருந்தது முகம்.

    சற்று சத்தமாகவே ‘அம்பிளி’ என்று கத்தினேன். வெற்றிடம் நிரப்பிய மழைச் சாரல்கள் தாண்டி சத்தம் அவளை அடைய நொடிக்குள் நொடி ஆனது. மெல்லத் தலை தூக்கிப் பார்த்தவள், என் கண்களை ஆழமாக, தீர்க்கமாக, கூர்மையாகப் பார்த்தாள். ஒளி நிறைந்த அழகிய முகம். செதுக்கிய கண்களில் குதித்தது பார்வைகள்.

    ‘ம்ம்ம்ம்ம்….’ என்று யாரோ என் அருகே முனகுவது போல இருக்க, மெல்ல திரும்பிப் பார்த்தேன்.

    தலை இல்லாத பெண் உடல் ஒன்று எனக்குப் பின்னால் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தது.

    கண்கள் விரிய மூச்சடைத்து நடுங்கிக் கொண்டே, நா வறண்டு கத்திக் கொண்டே சட்டெனத் திரும்பி அம்பிளியைப் பார்த்தேன்.

    இப்போது என் ஜன்னல் விளிம்பில் அதே அம்பிளியின் தலை இருந்தது.

    ஆ…ஆஹ்…ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்…

    Share
  • மதுரை மீனாட்சி – நவராத்திரி நாயகியர்   (2)

    க. பாலசுப்பிரமணியன்

    images (1)

    விண்வெளியைக் கண்விழியில்

    வளைத்திட்ட மீன்விழியே !

    அங்கயர்க் கண்ணியுன் ஆட்சியிலே

    ஆதிரையான் அடைக்கலமே !

     

    மல்லிகை மணமுடையாள்

    மதுரையிலே காட்சி தந்தாள் !

    மலையத்துவசன் மகளங்கே

    மகாதேவன் கைப்பிடித்தாள் !

     

    சித்திரைப் பெண்ணழகி

    சிங்காரத் தமிழழகி ,

    ஆலவாய்ப்  பேரழகி

    அடியார்க்கு அருளழகி !

     

    கூடலிலே கொடி பறக்கும்

    கோயிலிலே அருள் சுரக்கும்

    குறைவில்லா மனம் கேட்டால்

    கோமகளே! உன் விழி படைக்கும் !

     

    நற்றமிழில்  போற்றுகையில்

    நாளெல்லாம் நவராத்திரி !

    நாட்டியத் தலைவனுக்கோ

    நீ என்றும் சிவராத்திரி!

     

    அருளுக்கு உன்னையன்றி

    ஆலவாயில் யாரைத்தேட?

    நாயகியே! அருள் புரிவாய்

    நானிலமும் வாழ்ந்திடவே!

     

     

     

     

     

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 21

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நமது பூமி

    நமது பூமி
    ____________________________

    “முடங்கிக் கிடக்கும் பேரளவு அறிவை விடப் பயன்படும் சிறிதளவு அறிவு பெருமளவு தகுதி உடையது.”
    “தூரத்தில் உள்ள ஒரு நண்பன் அருகில் இருக்கும் ஒருவனை விட மிக நெருங்கி இருக்கிறான். வெகு தொலைவில் காணப்படும் மலைச் சிகரம் அண்டைப் பள்ளத்தாக்கில் உள்ளதை விடத் தெளிவாகத் தெரிவதில்லையா ?”
    கலில் கிப்ரான்.
    ___________________

    நான் இல்லையேல் நீயில்லை புவியே
    ___________________

    பரிதி ஒளி பழுக்க வைத்த
    ஒரு கனியா நீ ?
    நித்தியத்தில்
    நீடித்த
    நிலைப் பாட்டில்
    கிளைகள் ஓங்கி உயர்ந்த
    தனித்துவ ஞானத்தில்
    முளைத்த மரமா நீ ?
    ___________

    அண்ட வெளித் தளத்தின்
    உள்ளங் கையில்
    காலக் கடவுள் வடித்த
    மேலான மணிக் கல்லா நீ ?
    ___________

    யார் நீ புவியே ?
    யார் நீயெனச் சொல் ?
    “நான்” என்னும் புவியே
    நீதான் !
    ____________

    என் கண்ணொளி நீ !
    என் தெளிவுத் தீர்மானம் நீ !
    என் கனவு நீ !
    என் அறிவு நீ !
    என் வயிற்றுப் பசி நீ !
    என் தாகம் நீ !
    என் சுகம், துக்கம் நீ !
    என் வெறுப்பில் லாமை நீ !
    என் விழிப்புணர்ச்சி நீ !
    என் கண்ணில் வசிக்கும் எழில் நீ !
    என் இதய வேட்கை நீ !
    என் ஆத்மாவில் நீடிக்கும்
    நித்திய வாழ்வு நீ !
    _____________

    “நான்” என்னும் புவியே
    நீதான் !
    என் வசிப்பு இல்லா தாயின்
    இங்கே தோன்றி யிருக்க
    மாட்டாய் நீ !
    _____________

    Share
  • நவராத்திரி நாயகி (2)

     

    இசைக்கவி ரமணன்

     

    nishkrodh-copy

    என் தேச நாயகி
    எனையாளும் உன்மணி
    என் நேச ராணி நீ
    எப்போதும் தேவை நீ

    என் நினைவும் என் கனவும்
    நின் விரலில் சோழி
    இடையில் நீ இளைப்பாறும்
    ஏகாந்த ரேழி
    உன் கண்கள் உன் கால்கள்
    போதாது நாழி
    உயிருக்குள் முத்தமிடும்
    ஒய்யாரத் தோழி
                                                                 (என் தேச)

    உற்றுற்றுப் பார்க்கின்ற
    ஒற்றை விழி ஒன்று
    ஒருபோதும் திறவாத
    மர்மவிழி ஒன்று
    பற்றுற்று நோகாமல்
    பாலிக்கும் நின்று
    பாதமே பாரென்று
    பணிக்கின்ற தின்று
    என்றைக்கும் என் வாழ்க்கை
    நீகொண்ட கொள்ளை
    எதுவந்து போனாலும்
    என்றுமுன் பிள்ளை
    சற்றைக்கும் அகலாமல்
    சந்நிதியில் வாழ்வேன்
    சங்கீத மணிகேட்டு
    மலர்ப்பாதம் வீழ்வேன்
                                                                     (என் தேச)

    Share
  • நூறாண்டுத் தனிமைகள்

    -கவிஜி

    நூறாண்டுத் தனிமைக்குள்
    குறையாத தேடலின்
    நயனங்களின் நீண்ட கனவாய்க்
    காற்றுப் புரவியொன்றின்
    பயணங்கள்…

    புதைந்து பதிந்த, விதைந்து
    குளிர்ந்த, பாதச் சுவடுகளின்
    வைகறைத் தோட்டங்கள்
    விளைவதாக, கற்பனை பூத்த
    மயானங்கள்…

    நள்ளிரவு தேசங்கள், நரை தாண்டிய
    கரை வேண்டிய, யதார்த்தங்களின்
    உடைதலின் கூட்டு முயற்சிகள்
    கொத்துக் கொத்தாய், சத்தமிட்ட புதைகுழிச்
    சயனங்கள்…

    நித்திரைத் தேரின், சித்திர வேரின்
    முத்திரை கரைய, முகத் திரை அறைய
    விரைந்தோடும், வழி தேடும்
    தேகச் சூட்டின் ஆற்றாமைக்குள்
    இன்னும் இன்னும் அதே
    நூறாண்டுத் தனிமைகள்…!

     

     

    Share
  • சிகரம் நோக்கி … 26

    சுரேஜமீ

    peak1

    ஆளுமை

    வாழ்க்கை ஒவ்வொரு நிலையிலும், நம்மை மெருகேற்றி, உரு மாற்றி, இன்னும் செல்லவேண்டும் தூரத்திற்குச் சற்றும் தோய்ந்து விடாது உற்சாகத்துடனும், உறுதியுடனும்,

    இதோ ஒரு கை பார்த்து விடலாம் என அழைத்துச் செல்லும் ஒரு பண்புக்குப் பெயர்தான் ‘ஆளுமை’ என்றால் மிகையாகாது.

    ஆளுமைப் பண்பு என்பது அடிதொட்டு வரலாம்; அறிவு கற்று வரலாம்;ஆனால் அவையெல்லாம் அனுபவம் என்ற ஆசானுக்கு இணையாகாது என்பதைக் கற்றவர்கள் கூட மறுக்க முடியாது!

    அத்தகைய ‘ஆளுமை’ எனும் பதத்தை அறியாமலேயே பாதையை வகுத்தவர்கள் நம் மரபில் ஏராளம். அவர்கள் தம் வாழ்வே மற்றவர்க்கு ஒரு உந்துதலாக இருந்தது என்பதே தற்காலத் தமிழர்களுக்கு இலக்கியங்கள் சொல்லும் ஆதாரம்!

    இன்றைய பதிவில் ‘ஆளுமையின்’ அடிப்படையை நம் இதயத்தின் ஆழத்தில் விதைக்க முயற்சிப்பதே நோக்கமாகும்!

    ஆளுமை என்றால் என்ன? ஆளுமையின் ஆற்றல் எங்கு தொடங்குகிறது? ஆளுமையின் வெளிப்பாடு எப்படி இருக்கும்? ஆளுமையை எப்படி ஒரு சமூக வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக்க முடியும்? எனச் சுருக்கமாகப் பார்ப்போமா?

    ஆளுமை என்றால் என்ன?

    மிக எளிதில் ‘ஆளுமை’ எனும் சொல்லைப் புரிய வைக்கக் கவியரசரின் வரிகள்தாம் நமக்குச் சட்டென நினைவுக்கு வருகிறது;

    மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
    உனக்கு மாலைகள் விழவேண்டும்;
    ஒரு மாத்துக் குறையாத மன்னன்
    இவனென்று போற்றிப் புகழ வேண்டும்!

    ஆளுமையை மிக அருமையாகச் சில வார்த்தைகளில் வர்ணித்து விட்டார் கண்ணதாசன்!

    ஆக, ஆளுமை என்பது ஒரு மனிதனை மிகச் சாதாரண நிலையில் இருந்து, சான்றோர்கள் நிறைந்த சபைக்கு அழைத்துச் செல்லும் உன்னத பண்பு மட்டுமல்ல;

    கிஞ்சித்தும் அவனைப் பற்றிய இகழ்ச்சிக்கு வழிவிடாமல், அவனுக்கு நிகர் அவனே எனும் ஒப்பற்ற நிலையில் வைத்துப் புகழக் கூடியது என்று சொன்னால் மிகையாகாது!

    ஒரு தனி மனிதப் பண்பு; ஒரு செயலில் அவனுக்கு இருக்கக் கூடிய வல்லமை; தன்னை இந்தச் சமூகத்திற்குக் காட்டக் கூடிய அடையாளம்; எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய தலைமைப் பண்பு என அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்ககும்

    ஒப்பற்ற அணிகலன்தான் ‘ஆளுமை’ !

    என்ன ‘ஆளுமையை’ அறிய எத்தனையோ புத்தகங்களைப் படித்தோமே என யோசிக்கிறீர்களா?

    வார்த்தையின் வலிமைகள் புத்தகத்தில் இருந்தாலும், வாழ்க்கையில் பயில்வதற்குத் தயாராக நமக்குப் புரியும் வகையிலும், நம் தாய்மொழியிலும் அறிந்தால் தானே முடியும்!

    இதையே சற்று இலக்கிய நடையில் சொல்ல வேண்டும் எனில், அய்யன் திருவள்ளுவர் சொல்வதைக் கவனியுங்கள்!

    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்டது அமைச்சு.

    ஒரு செயலைச் செய்வதற்கான காலத்தையும்; அதனைச் செயல்படுத்தத் தேவையான சாதனம் அல்லது காரணிகள்; அச்செயலைச் செவ்வனே நிறைவேற்றக் கூடிய ஆற்றல்,

    இவையெல்லாம் ஒருவனிடம் அமையப் பெற்றால்,

    அதுதான் ‘ஆளுமை’ எனும் பண்பு என்று சொல்லலாம்! இதை ஒரு அமைச்சருக்கான பண்பு எனச் சொன்னலும்,

    ஆளுமைக்கான இலக்கணம் எனக் கொள்வதில் இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை!

    ஆளுமையின் ஆற்றல் எங்கு தொடங்குகிறது?

    நம்முடைய முதல் பள்ளிக்கூடமே நம் பெற்றவர்கள்தான் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் தேவையில்லை. அத்தகைய பெற்றோர்களிடம்தான் ஆளுமைப் பண்பை முதன் முதலில் நாம் கற்று கொள்கிறோம்.

    எந்த ஒரு பண்பிற்கும் அடிப்படைத் தேவை பழக்கம் என்பதை நாம் அறிவோம். ஆளுமையும் அதற்கு விதி விலக்கல்ல; நம் தாயின் அன்பிலும்; தந்தையின் கண்ணியத்திலும் தான் நாம் கற்றுகொள்கிறோம் ஆளுமையின் ஆற்றலை!

    ஒவ்வொரு செயலையும் உற்று நோக்குவதிலும்; அதன் வடிவத்தைப் புரிந்து கொள்வதிலும்; முன் பின விளைவுகளை ஆராய்வதிலும், எத்தனை தடை வரினும்,

    எடுத்த காரியத்தை முடிப்பேன் என்ற மன உறுதியிலும்தான் ஆளுமையின் ஆற்றல் தொடங்குகிறது!

    மகாகவி பாரதியின் வரிகளில் சொன்னால்,

    மனதில் உறுதி வேண்டும்;
    வாக்கினிலே இனிமை வேண்டும்!
    நினைவு நல்லது வேண்டும்;
    நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!!

    ஆம்! எண்ணிய எண்ணியாங்கு எய்திடச் செய்யும் ஒப்பற்ற பண்புதான் ‘ஆளுமை’!

    ஆளுமையின் வெளிப்பாடு எப்படி இருக்கும்?

    மிகச் சுலபமாக ஆளுமையின் வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ளா இயலும்; எடுத்துக் காட்டாக, நம் பள்ளிக் கூடங்களிலே ‘வகுப்பின் தலைவர்’ என்று ஒரு மாணவனை நியமிப்பார்கள். அதை எவ்வாறு தீர்மானிக்கின்றனர்?

    எந்த ஒரு மாணவன் ஒழுக்கமாக இருக்கிறானோ; நன்றாகப் படிக்கிறானோ; பெற்றோர் மட்டும் பெரியவர்களிடத்தில் அன்பாக இருக்கிறானோ; ஒரு செயலில் சுயமாகச் சிந்தித்து அதை நேர்த்தியாகச் செய்வதோடு மட்டுமல்லாமல்

    சக மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறானோ

    அந்த மாணவனைத்தான் ‘வகுப்பின் தலைவர்’ எனும் பதவிக்கு நிர்ணயிக்கிறார்கள்!

    ஆகவே, ஆளுமையின் வெளிப்பாடு என்பது ஒரு மனிதனின் தனிப் பட்ட பண்பு நலன்களில் உள்ள முதிர்ச்சி மற்றும் செயல்களின் வெற்றியில் அடங்கி இருக்கிறது என்றால் மிகையாகாது.

    ஆளுமையை ஒரு சமூக வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும்?

    மண்ணில் புதையும் விதைகளெல்லாம் மீண்டு எழுவதில்லை; ஆனால், ஒரே ஒரு விதை மண்ணைப் பிளந்து வந்து ஒரு செடியாகி, வளர்ந்து மரமாகி, காயாகிப் பழமாகி எப்படி பல்லாயிரம் விதைகளுக்குக் காரணியாகிறதோ

    அதைப் போலத்தான் இம்மண்ணில் வாழ்ந்த மாமன்னன் இராஜராஜன் முதல் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த காமராஜர், ராஜாஜி, வல்லபாய் பட்டேல், அம்பேத்கார் , அறிஞர் அண்ணா உள்பட,

    அண்மையில் மறைந்த அப்துல் கலாம் வரை

    காலம் நமக்கு எத்தனையோ சான்றோர்களின் ஆளுமையை பாடமாக்கி இருக்கிறது!

    அவர்களின் வழியில் நம்மை பண்படுத்துவதில் தான் ஆளுமையின் வெற்றி அடங்கி இருக்கிறது; அடுத்த சமுதாயம் மலர்வதற்கு!!

    வளர்ப்போம் நம்முள் ஆளுமையை; அன்னவர்களின் அடி பற்றி!

    வெல்வோம் எண்ணிய செயல் யாவும்!

    தொடரும்……..

    Share
  • சரவணப் பொய்கையில் நீராடி …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    சரவணப் பொய்கையில் நீராடி …

    சரவணப்பொய்கைஇயற்கையெழில் கொஞ்சம் இதமான காலை வேளை!
    இதயத்தில் வந்துமோதும் இனிமையான பாடல்!

    சரவணப் பொய்கையில் நீராடி… பி.சுசீலாவின் குரலில் விளைந்த அற்புத நாதம்! விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து தந்த இன்னிசை வேதம்! ஆம், இது சத்தியம்!!

    திருமால் மருகன் – செந்தில் குமரன் – கந்தன் – முருகன் என்னும் கடவுளை எண்ணி வணங்கி எழுகின்ற பாடலிது! குளிர்த்தென்றல் தாலாட்டும் குதூகலம் பரவும் வண்ணம் சந்திரகாந்தா என்னும் நடிகையின் திருமுகம் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் நினைவிற்குள் வரும்!

    சரவணப்பொய்கை2கர்ணன் திரைப்படத்திற்காக பாடல்கள் எழுதிட, கவிஞருடன் மெல்லிசை மன்னர்கள் பெங்களுரில் முனைந்திருந்த நேரம். அடுத்த நாள் பாடல் பதிவுடன் துவக்கப்படவிருந்த சரவணா பிலிம்ஸாரின் ‘இது சத்தியம்’ திரைப்படத்திற்காக இயக்குநர் கே. சங்கர சார்பாக சென்னையிலிருந்து ஒருவர் விமான வாயிலாக சென்று கவிஞரை அணுகி, அதற்காகக் கவிஞரால் எழுதப்பெற்ற பாடலிது. சூழல் விளக்கப்பட்டதும் கவியரசர் நாவில் புறப்பட்டுவந்த இப்பாடலில்தான் எத்தனை சுகமான வரிகள்! இதிலும் ஒரு செய்தி கிடைத்தது!!

    சங்கரர்க்கும் ஆறுதலை சண்முகர்க்கும் ஆறுதலை
    ஐங்கரர்க்கும் மாறுதலையானதே – சங்கைப்
    பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா – நின் பாதம்
    படித்தோர்க்கும் ஆறுதலைப் பார் …

    காளமேகப் புலவரின் ‘ஆறுதலை’ எண்ணிக்கையோடு வேறுபொருள் தந்து நிற்பதைச் சுவைத்த கண்ணதாசன்,

    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்துவைத்தான் ஆறுதலை
    இவ்விடம் இவர்தந்த இன்பநிலை – கண்டு
    என்னிடம் நான் கண்டேன் மாறுதலை!

    இது காளமேகக் கடலில் மூழ்கிக்கிடைத்த முத்துக்களை வரிகளாக்கி முத்தையா தருகின்றார்! காலங்கள் கடந்தபோதும் காற்றில் கலந்து தவழ்ந்திருக்கும் கண்ணதாசன் பாடல் – இது சத்தியம் அல்லவா?

    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அன்னலே தந்து வைத்தான் ஆறுதலை
    இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
    கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
    ஓ. ஓ…ஓ. ஓ…ஓ. ஓ..
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்ல இடம் நான் தேடி வந்தேன்
    அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

    காணொளி: https://www.youtube.com/watch?v=GoNxhHAecVo

    Share
  • பொருளாதாரத்தின் சுயசார்பு நிலை

    பவள சங்கரி

    தலையங்கம்

    சமீபத்தில், நிதியமைச்சகத்தின் சார்பாக புதிய வரி விகிதங்கள் மாற்றியமைத்தல் தொடர்பாக, மக்களுடைய கருத்துகளையும் கேட்டுள்ளது வரவேற்பிற்குரியது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை, பொது மக்களிடமும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் மாநில அரசுகளிடமோ கருத்து கேட்பது பெரும்பாலும் அரிதாகவே உள்ளது. உண்மையிலேயே கருப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால் அனைத்துத் துறையினரும் நியாயமான முறையில் வரி செலுத்தும் வகையில் வரி விதிப்புகள் அமைக்கப்பட வேண்டியது அவசியம். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான திட்டங்களை நிறைவேற்றும் முன்பு, மேலும் அவை புதிதாக உருவாகாத வகையில் வரிவிதிப்பு முறைகளை செயல்படுத்த வேண்டியதும் அவசியம். எந்த ஒரு பொருளுக்கும் அதற்குரிய பரிவர்த்தனைகள் வங்கிகளின் வாயிலாகவே நடைபெற வேண்டும். தனி நபர்கள் மற்றும் நிர்வாகத்தினர் வங்கியிலிருந்து ஒரு நாளைக்கு எடுக்கக்கூடிய தொகைகளின் அளவு வரையறுக்கப்பட வேண்டும். சேமிப்புக் கணக்குகள் மற்றும் நடப்புக் கணக்குகளில் நாள் ஒன்றிற்கு குறைந்தபட்ச தொகைக்கு மேல் அனுமதிக்காமல் இருப்பதும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியிலிருந்து பெறுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். சில தனியார் வங்கிகளில் உள்ளது போன்று ‘ஹோம் பிராஞ்ச்’ என்று சொல்லக்கூடிய கணக்கு துவக்கப்பட்ட வங்கிகள் அல்லது மற்ற வங்கிகளிலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணத்தை செலுத்துவதற்கு கட்டணம் விதிக்கப்பட வேண்டும். எந்த நிலையிலும், எந்த வகையான பரிவர்த்தனைகளாக இருப்பினும் சேமிப்பு வங்கிக் கணக்கில் ரூ.1000 மற்றும் நடப்புக் கணக்கில் 10,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்வது தடை செய்யப்பட வேண்டும். அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பற்று அட்டை (டெபிட் கார்ட் ) அல்லது கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) அல்லது காசோலை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம். இப்படி செய்வதன் மூலம் எந்தவித வியாபாரத் துறையாக இருப்பினும் அதன் கணக்கு வழக்குகள் நிமிடத்திற்கு நிமிடம் அரசாங்கத்திற்கு வந்துசேர வழிவகுக்கும். மென்மேலும் நோட்டு அச்சடிப்பதையே பெருமளவில் குறைக்க வழிவகுக்கும். கருவூலங்களின் பணிகளும் பெருமளவில் குறைய வாய்ப்பாகும். இதுபோன்று பரிமாற்றங்கள் நடைபெறும்போது, அதனைத் துல்லியமாகக் கணக்கிட்டால், வருமான வரி, விற்பனை வரி, சேவை வரி போன்றவைகளும் அரசிற்கு முழுமையாக வந்து சேரும். கருப்புப் பணம் என்பதும் இல்லாமல் போகலாம். இவ்வாறு அனைத்து பரிவர்த்தனைகளும் முறைபடுத்தப்பட்டு, செயல்படுத்தும் விதத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட பன்மடங்கு அதிகமாக அரசுக்கு வருவாய் கிடைக்கவும் ஏதுவாகும்.

    ஒரு துறை சார்ந்த பொருட்களுக்கு ஒரே விதமான வரி விதிப்புகள் இருப்பதும் பயனளிக்கலாம். உதாரணமாக, நூல் விற்பனை என்பதை எடுத்துக் கொண்டால் தற்போது சிட்டா நூலுக்கும் , ஜவுளிகளுக்கும் வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. கோன் நூலுக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அனைத்து விதமான விற்பனைகளுக்கும் 2 % வரி விதித்தாலே தற்பொழுது நூல் விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயைவிட பன்மடங்கு வருமானம் கிடைப்பதோடு வரி ஏய்ப்பும் தடுத்து நிறுத்த ஏதுவாகும்.

    தங்க விற்பனையை எடுத்துக்கொண்டால் பல விதமான முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பதை காணமுடிகிறது. தற்போது 1 % மட்டும் வரி விதிக்கப்படுகிறது. தங்கத்தை வாங்கி அதை நகைகளாக மாற்றும்போது பொது மக்களிடமிருந்து நான்கு முதல் 25 % சதவிகிதம் வரை வசூலிக்கப்படுகிறது. மற்ற துறைகளில் இருப்பது போல இந்தத் துறையிலும் ‘வேல்யூ ஏடட் சர்வீஸ் டேக்ஸ்’ விதிக்கப்பட்டால் பயனுள்ளதாக அமையும். தங்க இறக்குமதியை தாராளமாக்குவதோடு, ஏற்றுமதியின் அளவையும் அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பும் அரசாங்கம் அளித்தால் நலம்.

    நம் இந்தியப் பொருளாதாரம் என்பது எப்பொழுதும் நம் நாட்டை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டுவது அவசியமாகிறது. மற்ற நாடுகளின் பிரச்சனைகள் நம் நாட்டை பாதிக்காமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். வலிமையான பொருளாதாரமே நம் இந்தியாவை வல்லரசாக்கும். இதற்கு ஏற்றுமதிகளை அதிகப்படுத்தியும் இறக்குமதிகள் அனைத்தும் ஏற்றுமதியைச் சார்ந்தும், ஏற்றுமதி இறக்குமதிக்குரிய விகிதாச்சாரங்களில் இறக்குமதி குறைந்தும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களை ஊக்குவித்தும், நம் மண்ணில் கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை உபயோகிக்க ஊக்குவித்தும் எல்.பி.ஜி எரிவாயு எளிதான நடைமுறை உபயோகத்திற்குக் கொண்டுவந்தும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை உடனடி அமுலுக்குக் கொண்டுவந்தும் இந்திய பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

    Share
  • அபிராமி அன்னை அந்தாதி

    கிரேசி மோகன்

     

    அன்னை அந்தாதி
    ———————-

    Keshav

    காப்பு
    ——–

    துலங்குவெண் நீறு துனிப்பிறை கோடு துணைக்கரங்கள்
    இலங்கரன் பாகம் இடப்புறம் ஏகும் இமையவளின்
    வளம்புகழ் வீரம் வணங்கியந் தாதி யினிலுரைக்க
    களம்புகுந் தானை முகத்தனைக் கொன்றோன் பதமரணே….(1)

     

    அரனும் அரியும் அயனும் அளிக்க இயன்றிடாத
    வரம்தரும் கற்பக வல்லியின் பாதம் வழுத்திடுவோர்
    நரனாய்ப் பிறந்து நடைபிண வாழ்வில் நலிந்திடாது
    பரணப் பரத்துப் பதவியால் வெல்வர் பிறப்பிறப்பே….(2)

     

    பிறவா வரம்தரும் மாறிப் பிறந்தால் எமன்கரத்தால்
    இறவா திருந்திடச் செய்யும் இதய குகைதனிலே
    மறவா தெழுந்தரு ளும்பார், மகனே எனவழைத்து
    உறவாம் அபிராமி மாதா உறவிந் துலகினிலே….(3)

     

    உலகவள் நெற்றி விழிவந்து காய்ந்த ஒளித்துகளே
    திலகமாய் அங்கு திகழும் பரிதியும் திங்களுமே
    உலவிடும் செவ்வாய் புதன்வ்யாழன் வெள்ளி கிரகமெலாம்
    கலகங்கள் செய்யா கதியென் றவள்பாதம் கொள்ளுமினே….(4)

     

    கொள்பவள் கற்பகம், வெல்பவள் காளி, கவிபுனையச்
    சொல்பவள் பாரதி, செல்வமகள் லஷ்மி, சேர்த்தணைத்து
    செல்கையில் தாயார், சினந்திட தோப்பனார், நேசமதை
    நல்கிட நண்பன் நலம்தரு தோழி எனஅவளே….(5)

     

    அவளை நினைத்து அவலை இடித்தால் அவளசையாள்
    அவளைத் துதித்தல் அவளை ஸ்மரித்தல் அவளருளே
    அவளே நமக்குள் அவளாய்த் திளைத்தால் அதுயிகமே
    அவளில் கலந்து அவளாய் முடிந்தால் அதுபரமே….(6)

     

    பரசிவ வெள்ளம் பராசக்தி உள்ளம் புரிந்துணர்தல்
    பெறுதவம் ஆகும் பிரபஞ்சம் வந்து பிறந்திறக்கும்
    உறுமவம் நீங்கும் உலகிதன் மாய உருவொழிந்து
    சருவமும் சக்தி உருவெனும் உண்மை வசப்படுமே….(7)

     

    வசமான சித்தி விஷமாம் அதனை விரும்பிடாதே
    நிசமான கூலி யசமானி அம்மா நிழல்துணையே
    அசலான தெய்வம் அவளுண்டு வேறே அணுக்கமெலாம்
    பசையாகக் கம்பளிப் போர்வையில் ஒட்டும் பிசுபிசுப்பே….(8)

     

    பிசுபிசுத் தோடும் பிறவிப் பிணிகள் கொசுக்கடியாய்
    தசகத் தலைகள் துணித்தவன் தங்கை திருவடிமுன்
    திசையெட்டு தீவளி அப்புமண் எங்கும் திகழ்பவளை
    வசனித்த பட்டர் அபிராமி அந்தாதி வாழ்த்துமினே….(9)

     

    வாழ்த்த வயதுண்டு வல்லாள் அவளென்றும் வாலையடா
    பாழ்தவம் பூணும் விரதங்கள், பக்தியே போதுமடா
    நாழ்பட நாழ்பட நம்பிக்கை சேர்த்திடும் நாயகிமுன்
    தாழ்வு உயர்வெலாம் தாயவள் கண்முன் தளசமமே….(10)

     

    சமமவள் நோக்கு சரியோ தவறோ சரணடைய
    இமையெனக் காத்து இருகரம் நீட்டி இகபரத்தை
    அமைவுறச் செய்வாள் அபிராமி அன்னை அவளிருக்க
    சமயமாய் வீணே சடங்குகள் செய்தல் சிரிசிரிப்பே….(11)

     

    சிரித்திட மாதுளை, சம்புமுன் கொவ்வை, சினமடைந்து
    முறைத்திட பாகல், முறுவலில் முல்லை, முனிகணங்கள்
    சிரத்தினில் காய்ந்து சிவப்பழம் ஆகிடும் செவ்விதழை
    தரித்திடும் தாய்முன் தலைவணங் கித்தாள் தொழல்தவமே….(12)

     

    தவமறியேன் தான தர்ம மறியேன் திருமுறைகள்
    விவரமாய் கூறும் வழிய றியேன்தாள் வணங்கிடுவோர்
    சிவமறியேன் சக்தி வழிபா டறியேன் சலித்திடும்
    அவமறிந்தேன் அம்மா அதனால் வந்தேன் அருள்பெறவே….(13)

     

    பெறவந்தேன் பேரின்பம் பிச்சி யுனைப்போற்றி பாசுரங்கள்
    அரவிந்த தாதுவை அள்ளும் அளிபோலே அம்பிகையே
    குறவன்தன் பெண்வள்ளி கொண்டவன் கையில்வேல் கொள்ளவன்று
    தரவந்த துள்ளலில் தந்தருள இங்கு வாவுமையே….(14)

     

    (உமையாளை ஈசன் சுமையாளை பக்தர் படுந்துயர்க்கு
    குமைவாளை கண்கள் இமையாளை கஷ்டம் களையபக்கம்
    அமைவாளை சொல்லில் சமையாளை இல்லா உவமையாளை)

    வாயுண்ட தாம்பூலம் சிந்த வரதன் வரகவியாம்
    வாயென்றும் பேசாத மூகனோ வாக்கிற்(கு) அதிபதியாம்
    வாயென்ற பட்டர்க்கு வானத்தில் வந்த வளர்பிறையே
    தாயென்ற போர்வையில் தந்தைக்(கு) இணையான தத்துவமே….(15)

     

    தத்துவக் கோலுக்குத் தேறா தருகற் பகமவளாம்
    சத்தியம் தர்மங்கள் சார்ந்தோர் சிந்தையிலும் சிக்கவொணா
    பத்தினி பக்தர்தம் பித்துக்(கு) அடிமையாம் பிச்சியவள்
    உத்தமி ஈசர்தம் உடலி டபாகம் உற்றவளே….(16)

     

    Share