எனது தேவி புஷ்டிமா (பாடல்)
இசைக்கவி ரமணன்
(ஜாகேஷ்வரில் மஹிஷாஸுர மர்த்தினியாய் வீற்றிருக்கும் அன்னை, புஷ்டி தேவி என்னும் பெயருடன் விளங்குகிறாள். தேசம் காக்க அவளைத் தேரிலேறி வரச்சொல்லும் கூட்டுப் பாடல்)
எனது தேவி புஷ்டிமா
எழுந்து வெளியில் வருக
தேசம் காவல் வேண்டுதம்மா
தேரில் ஏறி வருக
உனது காலில் தலைபதித்து
உயிரைத் தந்தோம் வருக
உலகம் போற்ற உனது நாட்டை
உயர்த்தி அருள வருக!
உனது இமையை உயர்த்தி எம்மை
ஒருமுறை நீ பார்க்க
உடலை மனதை உயிரையெல்லாம்
உன்னிடத்தில் சேர்க்க (எனது)
கலியின் பழைய கடிகாரம்
காளி முன்பு செல்லுமோ? நீ
காலைவைத்தால் உன்னைத் தடுக்க
எங்கும் எதுவும் எண்ணுமோ?
புலியில் ஏறி வருக! சிங்கப்
புரவி ஏறி வருக!
புயலைப் போலச் சீறிச் சினந்து
பொய்யைப் புடைக்க வருக!
புனிதம் நெஞ்சில் தருக! (எனது)
நீசர் கையில் வாடுதம்மா
நீ நடந்த தேசம்
நினைக்க நெஞ்சில் துணிவுமில்லை
நிழலும் கூட மோசம்
நேசம் வாழ வேண்டும், தர்ம
நீதி வாழ வேண்டும்
நீ வளர்த்த பிள்ளைகளாய்
நாங்கள் மாறவேண்டும், பழைய
நலங்கள் சேரவேண்டும்! (எனது)