பொருளாதாரத்தின் சுயசார்பு நிலை

0

பவள சங்கரி

தலையங்கம்

சமீபத்தில், நிதியமைச்சகத்தின் சார்பாக புதிய வரி விகிதங்கள் மாற்றியமைத்தல் தொடர்பாக, மக்களுடைய கருத்துகளையும் கேட்டுள்ளது வரவேற்பிற்குரியது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை, பொது மக்களிடமும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் மாநில அரசுகளிடமோ கருத்து கேட்பது பெரும்பாலும் அரிதாகவே உள்ளது. உண்மையிலேயே கருப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால் அனைத்துத் துறையினரும் நியாயமான முறையில் வரி செலுத்தும் வகையில் வரி விதிப்புகள் அமைக்கப்பட வேண்டியது அவசியம். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான திட்டங்களை நிறைவேற்றும் முன்பு, மேலும் அவை புதிதாக உருவாகாத வகையில் வரிவிதிப்பு முறைகளை செயல்படுத்த வேண்டியதும் அவசியம். எந்த ஒரு பொருளுக்கும் அதற்குரிய பரிவர்த்தனைகள் வங்கிகளின் வாயிலாகவே நடைபெற வேண்டும். தனி நபர்கள் மற்றும் நிர்வாகத்தினர் வங்கியிலிருந்து ஒரு நாளைக்கு எடுக்கக்கூடிய தொகைகளின் அளவு வரையறுக்கப்பட வேண்டும். சேமிப்புக் கணக்குகள் மற்றும் நடப்புக் கணக்குகளில் நாள் ஒன்றிற்கு குறைந்தபட்ச தொகைக்கு மேல் அனுமதிக்காமல் இருப்பதும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியிலிருந்து பெறுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். சில தனியார் வங்கிகளில் உள்ளது போன்று ‘ஹோம் பிராஞ்ச்’ என்று சொல்லக்கூடிய கணக்கு துவக்கப்பட்ட வங்கிகள் அல்லது மற்ற வங்கிகளிலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணத்தை செலுத்துவதற்கு கட்டணம் விதிக்கப்பட வேண்டும். எந்த நிலையிலும், எந்த வகையான பரிவர்த்தனைகளாக இருப்பினும் சேமிப்பு வங்கிக் கணக்கில் ரூ.1000 மற்றும் நடப்புக் கணக்கில் 10,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்வது தடை செய்யப்பட வேண்டும். அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பற்று அட்டை (டெபிட் கார்ட் ) அல்லது கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) அல்லது காசோலை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம். இப்படி செய்வதன் மூலம் எந்தவித வியாபாரத் துறையாக இருப்பினும் அதன் கணக்கு வழக்குகள் நிமிடத்திற்கு நிமிடம் அரசாங்கத்திற்கு வந்துசேர வழிவகுக்கும். மென்மேலும் நோட்டு அச்சடிப்பதையே பெருமளவில் குறைக்க வழிவகுக்கும். கருவூலங்களின் பணிகளும் பெருமளவில் குறைய வாய்ப்பாகும். இதுபோன்று பரிமாற்றங்கள் நடைபெறும்போது, அதனைத் துல்லியமாகக் கணக்கிட்டால், வருமான வரி, விற்பனை வரி, சேவை வரி போன்றவைகளும் அரசிற்கு முழுமையாக வந்து சேரும். கருப்புப் பணம் என்பதும் இல்லாமல் போகலாம். இவ்வாறு அனைத்து பரிவர்த்தனைகளும் முறைபடுத்தப்பட்டு, செயல்படுத்தும் விதத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட பன்மடங்கு அதிகமாக அரசுக்கு வருவாய் கிடைக்கவும் ஏதுவாகும்.

ஒரு துறை சார்ந்த பொருட்களுக்கு ஒரே விதமான வரி விதிப்புகள் இருப்பதும் பயனளிக்கலாம். உதாரணமாக, நூல் விற்பனை என்பதை எடுத்துக் கொண்டால் தற்போது சிட்டா நூலுக்கும் , ஜவுளிகளுக்கும் வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. கோன் நூலுக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அனைத்து விதமான விற்பனைகளுக்கும் 2 % வரி விதித்தாலே தற்பொழுது நூல் விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயைவிட பன்மடங்கு வருமானம் கிடைப்பதோடு வரி ஏய்ப்பும் தடுத்து நிறுத்த ஏதுவாகும்.

தங்க விற்பனையை எடுத்துக்கொண்டால் பல விதமான முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பதை காணமுடிகிறது. தற்போது 1 % மட்டும் வரி விதிக்கப்படுகிறது. தங்கத்தை வாங்கி அதை நகைகளாக மாற்றும்போது பொது மக்களிடமிருந்து நான்கு முதல் 25 % சதவிகிதம் வரை வசூலிக்கப்படுகிறது. மற்ற துறைகளில் இருப்பது போல இந்தத் துறையிலும் ‘வேல்யூ ஏடட் சர்வீஸ் டேக்ஸ்’ விதிக்கப்பட்டால் பயனுள்ளதாக அமையும். தங்க இறக்குமதியை தாராளமாக்குவதோடு, ஏற்றுமதியின் அளவையும் அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பும் அரசாங்கம் அளித்தால் நலம்.

நம் இந்தியப் பொருளாதாரம் என்பது எப்பொழுதும் நம் நாட்டை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டுவது அவசியமாகிறது. மற்ற நாடுகளின் பிரச்சனைகள் நம் நாட்டை பாதிக்காமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். வலிமையான பொருளாதாரமே நம் இந்தியாவை வல்லரசாக்கும். இதற்கு ஏற்றுமதிகளை அதிகப்படுத்தியும் இறக்குமதிகள் அனைத்தும் ஏற்றுமதியைச் சார்ந்தும், ஏற்றுமதி இறக்குமதிக்குரிய விகிதாச்சாரங்களில் இறக்குமதி குறைந்தும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களை ஊக்குவித்தும், நம் மண்ணில் கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை உபயோகிக்க ஊக்குவித்தும் எல்.பி.ஜி எரிவாயு எளிதான நடைமுறை உபயோகத்திற்குக் கொண்டுவந்தும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை உடனடி அமுலுக்குக் கொண்டுவந்தும் இந்திய பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *