மதுரை மீனாட்சி – நவராத்திரி நாயகியர் (2)
க. பாலசுப்பிரமணியன்
விண்வெளியைக் கண்விழியில்
வளைத்திட்ட மீன்விழியே !
அங்கயர்க் கண்ணியுன் ஆட்சியிலே
ஆதிரையான் அடைக்கலமே !
மல்லிகை மணமுடையாள்
மதுரையிலே காட்சி தந்தாள் !
மலையத்துவசன் மகளங்கே
மகாதேவன் கைப்பிடித்தாள் !
சித்திரைப் பெண்ணழகி
சிங்காரத் தமிழழகி ,
ஆலவாய்ப் பேரழகி
அடியார்க்கு அருளழகி !
கூடலிலே கொடி பறக்கும்
கோயிலிலே அருள் சுரக்கும்
குறைவில்லா மனம் கேட்டால்
கோமகளே! உன் விழி படைக்கும் !
நற்றமிழில் போற்றுகையில்
நாளெல்லாம் நவராத்திரி !
நாட்டியத் தலைவனுக்கோ
நீ என்றும் சிவராத்திரி!
அருளுக்கு உன்னையன்றி
ஆலவாயில் யாரைத்தேட?
நாயகியே! அருள் புரிவாய்
நானிலமும் வாழ்ந்திடவே!
எளிய வார்த்தையில் அழகிய கவிதை.
அன்பன்,
மீ.விசுவநாதன்